Monday, May 31, 2010

நானும் வடை பெறுகிறேன்




அத்வானி மன்மோகனை சந்தித்து வாழ்த்து சொகிறார்..நிதிஷ் லாலு சந்தித்து கொள்கிறார்கள்..ராகுல் அத்வானியிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்..அந்த மாதிரி முன்னாள்,இன்னாள் முதல்வர்களை சந்திக்க வைத்தால் என்ன ? என்று ஒரு முயற்சி


அண்ணா சமாதிக்கும்,எம்ஜிஅர் சமாதிக்கும் இடையில் மேடை அமைக்கப் பட்டு இருக்கிறது..கருணநிதி சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார்..அம்மாவை பற்றி சொல்ல வேண்டுமா?வழக்கம் போல் லேட்டாக வர..கருணா விரல்களால் முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கு வழியாக அம்மையாரை பார்க்கிறார்..

”என்ன என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க பயமா?

இல்லை அம்மணி “கிரகணத்தை அப்படித்தான் பார்க்கணும்..கேள்விபட்டதில்லையா?

வார்த்தை விளையாட்டு வேண்டாம்..மக்களுக்காக என்ன செஞ்சிருக்கிங்க..

எல்லாருக்கும் எல்லாம் செஞ்சாச்சு..இனி கனி மட்டும்தாம் மீதம்.அதையும் செஞ்சுட்டா என் தலைவலி ஒழியும்..

நான் தமிழக மக்களுக்கு என்ன செஞ்சிங்கன்னு கேட்டேன்..உங்க ஆட்சியில எத்தனை அதிகார மையங்கள்..ஆளாலுக்கு ஆடறாங்க..

அதிகாரம் பரவலாக்கபட வேண்டும் என்பதுதானே அண்ணனின் ஆசையும் கூட..

விலைவாசிய பாத்திங்களா?விலைன்னு எழுதி வாசிக்கத்தான் முடியுது...

அம்மையாரே..மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டது..அதை விட மக்களை வாங்கும் சக்தியும் அதிகமாகி விட்டது...இந்த தேர்தலில் தெரிந்து கொண்டோம்..

ரொம்ப பீத்திக்காதீங்க...அடுத்த ஆட்சி என்னுடையதே..அப்ப வச்சுக்கறேன்...


அம்மணி....இனி வெற்றி என்பது வாங்கபடவேண்டிய ஒன்று.. 2011 தேர்தலுக்கு நாங்க இப்பவே பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டோம்..எப்புடி??

வாக்கு சீட்டு முறை வந்துட்டா நீங்க ஜெயிக்கவே முடியாது..

அறியாமையில் அரற்றுகிறீர்கள்..அது இன்னும் சொர்க்கம்...உங்களுக்கு சுத்தம்..ஒன்னு காந்தி,இல்லன்னா கத்தி..எவனாச்சும் எதிர்ப்பான்?

இடையில் தண்டோரா குறுக்கிட்டு..நீங்க மக்கள் பிரச்சனையை பத்தி ஒன்னுமே பேசலையே..

சிறுதாவூர் சீமாட்டி . .. நம் பிரச்சனை அப்புறம் .முதல்லில் இவனை தீர்த்துவோமா?

ஆமாம் ...அதுதான் முக்கியம்....ஸ்டார்ட் ம்யூசீக்..

கடற்கரையில் பதிவர் சந்திப்பு முடிகிறது...

அக்னிப்பார்வை : அதோ, அங்க முனகல் கேக்குது..தண்டோராவா இருக்குமோ?
அடப்பாவி அவனேதான்..அப்பவே சொன்னென் ..ஆட்டோ வரும்னு..பார்த்தா புல் டோசர் ஏறினமாதிரி இருக்கு..


ரமேஷ் வைத்யா : ஏ அப்பா..யாராச்சும் அவனுக்கு சரக்கு வாங்கி கொடுங்கப்பா..எந்திரிச்சுருவான்..

லக்கிலுக் : உடலெங்கும் இருக்கும் நகக்குறிகளை பார்த்தால் புத்திக்கு புதிதாக ஏதோ படுகிறது...ஆனால் மனசு ஏற்க மறுக்கிறது...

அதிஷா “ஐயா லாலி..லாலி..ஜாலி..ஜாலி...தண்டோர காலி..காலி....

முரளிகண்ணன் : இப்படித்தான் 80களில் வந்த ஒரு திரைப்படத்தில் மோகன் ஹீரோ என்று நினைக்கிறேன்..

கேபிள் :பரங்கிமலை ஜோதி தியேட்டர் போஸ்டர் மாதிரியே இருக்கானே..ஒரு சேஞ்சுக்கு ஹாட் ஸ்பாட்ல போட்றுவமா?

பைத்தியக்காரன் : அதிகார வர்க்கத்தின் உரையாடலில் அற்பர்கள் மூக்கை நுழைத்தால் இப்படித்தான் கட்டுடைந்து போகும்..

ஜ்யோவ்ராம்...: இனியும் ஒவ்வொரு சனியும்

எண்ணெய் தேய்த்து குளியும்..

எழுதும் வாழ்நாள் முழுதும்,

அவர்தமை தொழுதும்

நர்சிம் : எதாவது செய்யணும் பாஸ்..

டோண்டு : என்ன செய்யறது..தொட்டாலே போயிடும்..சமீபத்துல ..இந்த வார்த்தைக்கு காங்கோ மொழில ஒரு கவிதை படிச்சேன்..

வால்பையன் “ “சே..வடை போச்சே..கடைக்கு தனியாத்தான் போகனுமா?

ஜாக்கி சேகர் போட்டோ எடுத்துக் கொண்டு அவசரமாக கிளம்புகிரார்...ஜாக்கி எங்க? பின்ன மீ த பர்ஸ்ட்..போய் சூடா பதிவு போடனுமில்லே. ..

Saturday, May 29, 2010

கழிவிறக்கம்



இவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கும் சாத்தியம் மிக குறைவு. தினம் காலையில் நீங்கள் கணினியை திறந்ததும், அல்லது வரி விளம்பரங்களிலோ ,அங்கு சிரிப்பது இவர் எழுத்துக்களே. என்னால் எழுதாமல் இருக்கவே முடியாது என்று சொல்லும் இவருக்கு எழுத ,படிக்க தெரியாது என்பதுதான் விசேஷம் . கெட்ட வார்த்தையகராதி ஒன்றும் வெளியிட்டுருக்கிறார் . அதை பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் “உள்” விளையாட்டரங்கில் நடை பெற இருக்கிறது. செம்மொழி மாநாட்டில் செருப்பு மாலையிட்டு சிறப்பிக்கப்பட இருக்கும் இவர் எழுதிய கதைதான் பீடி . பீடி உருவான விதம் பற்றி அவருடன் ஒரு நேர்காணல்


முதல்ல உங்க பேர் சொல்லுங்க ?



கோணவாயன்ங்கிற பேர்ல எழுதறேன்.


நல்ல நேரான பேராத்தான் இருக்கு . எப்ப முதல்ல எழுத ஆரம்பிச்சீங்க?


நான் பொறந்தவுடனே கக்கா போனேன் . அது “அ” மாதிரி இருந்துச்சாம் . அடுத்து வாட்டி போனேன் . அது “ஆ “ . இப்படியே இ, ஈ...


அப்ப அன்னிக்கு 12 வாட்டி போனிங்க அப்படித்தானே ?


இல்லை . 30 வாட்டி . க ,ங , சன்னு கழிஞ்சு கிட்டேயிருந்துச்சு


கொஞ்சம் வெற்றிலை காம்பை வச்சுப் பார்த்திருக்கலாம் . முதல்ல எழுதின கதையை பத்தி சொல்லுங்களேன்


இப்ப பீத்துணி . அது ஒரு பின்னநவீனத்துவ கதை . அடுத்து ஆய்க்கறைன்னு ஒன்னு எழுத உத்தேசம் .


சரி உங்க பீடி கதையை பத்தி சொல்லுங்க . பீடின்னு பேர் வச்சதுக்கு எதாவது காரனம் உண்டா ?


பீடி நமக்கு ரொம்ப விசுவாசமான பொருள். கொஞ்சம் பொஸசிஸ்வான வஸ்து . அடிக்கடி அணைஞ்சிடும் . புதுசா ,புதுசா தீக்குச்சி தேவைப்படறாதாலே , அதை வேற மாதிரி உருவகப்படுத்தறவங்களும் இருக்காங்க . சரி கதைக்கு வருவோம்.

ஆதி அந்தமா சொல்லனும்னா பீடி கதை மதுரை ஒத்தகடை நரசிம்மர் கோயில் வாசல்ல தொடங்குது . அங்க மஸ்கோத்து அல்வா கடை போட்டிருக்கிற தேவேந்திரனுக்கும் , மைக் செட் வாடகை கடை வச்சிருக்கிற சிங்கமுகத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சனை . இந்தியாவின் தேசிய பறவை பெயர் உங்களுக்கு தெரியுமா ?


அதுல பீடி எங்க வருது ?


நீங்க நினைக்கறாப்ல பீடிங்கிறது அந்த லாகிரி வஸ்து இல்லை. பீடிகைங்கிற பொருள்ல இது வருது . துண்டு பீடி, சுட்ட பழம், சுடாத பழம்ன்னு சில பல குறியீடுகளை உள்ளடக்கி அந்த கதை புனையப்பட்டிருக்கும் .


சரி . ஏன் சண்டை வந்துச்சு ?


அதை ஏன் சண்டைன்னு கொச்சைப்படுத்தறீங்க ? எளக்கிய சர்ச்சைன்னு சொல்லுங்க .


ஏதோ ஒரு இழவு . புலவர்களுக்குள் ஏன் சர்ச்சை ? இணைந்து தமிழ் தொண்டு ஆற்றலாமே ?

ஏன்யா தமிழ் என்ன டீயா ? இல்லை தமிழை வெள்ளாவில ஊற வச்சிருக்கீங்களா? அதை கொஞ்சம் வாழ விடுங்கய்யா . அடுத்த மாசம் தமிழ் மரணவாக்குமூலம் வேற கொடுக்கணும் . அட்லீஸ்ட் அதுவரைக்குமாவது .

பீத்துணி கதையோட கரு என்ன ?

பன்னி மேய்க்கிறவன் ஒருத்தனோட கோமணம் காணாம போகுது . அதை தேடி போகும் அவன் பயண அனுபவங்கள்தான் கதை .


எளக்கிய உலகத்துல நிறைய சர்ச்சையை கிளப்ப போகுதுன்னு சொல்லுங்க


நீங்க எழுதறதுக்கு வரவேற்பு எப்படியிருக்கு?


நல்லாத்தான் இருக்கு . என்ன சாணி நாத்தம்தான் தாங்கலை.


ஏங்க?


பின்ன கரெக்டா குறி பார்த்து மூஞ்சியில இல்ல அடிக்கிறானுங்க வவுத்தெரிச்சல் பிடிச்சவனுங்க


ஆய்க்கறை கதையை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா?



பீத்துணி கதையோட நீட்சியாத்தான் இந்த கதையும் . பீத்துணியோட படிமங்கள் இதிலும் இருக்கும் . இதுவும் ஒரு எடுபட்ட எழுத்தாளனோட பதிவுதான் .


அப்ப கிட்ட தட்ட சுயசரிதைன்னு சொல்லுங்க .


கிட்ட வந்து தட்டு . இல்ல எட்ட இருந்து தட்டு . தட்டறதுன்னு முடிவாயிடுச்சுல்ல.


ரொம்ப சலிப்பா பேசறீங்க . எளக்கிய உலகம் உங்களுக்குரிய மருவாதையை கொடுக்கலைங்கிற வருத்தம் தொனிக்குது .


ஒரு மனுஷன் கேள்வி கேட்டா , பதில் சொல்றது தப்பா ? சில பேரை பார்த்து பேர் என்னன்னு கூட கேக்க மாட்டேங்கிறாங்கன்னு பொச்சரிப்பு . இவனை என்ன பேர் கேக்கறது . இதான் இவன் பேரா இருக்குன்னு போயிடறாங்கன்னு வவுத்தெரிச்சல் .


உங்க வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க ?


கேள்வி கேக்கறவனை நம்பாதீங்க . பதில் சொல்றவனையும் நம்பாதீங்க . உங்களையும் நம்பாதீங்க . எவனையும் நம்பாதீங்க .


அப்ப உங்க வாசகர்கள் கதி ?


அரணாக்கயிறுல நாண்டுகிட்டு சாக வேண்டியதுதான்


Friday, May 28, 2010

மானிட்டர் பக்கங்கள்.........28/05/10




இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் அல்லது மிகப்பெரிய ஜோக் நம்ம தலைவரின் பேச்சுதான் . அதாவது அண்ணா மறைந்த பின் , அடுத்த முதல்வராக இவரைத்தான் எம்ஜிஆர் முதல் அணைவரும் பரிந்துரை செய்தார்களாம். அட . இதையாவது நம்பித்தொலைக்கலாம். அடுத்து போட்டார் பாருங்கள் ஒரு கோயபல்ஸ் குண்டு . அதுதான் டாப் . இவர் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் (எல்லாரையும் சேர்த்து ) அதற்கு சம்மதிக்கவில்லையாம். அதிலும் மக்கள் சேவைக்காகவே வாழ்ந்து மறைந்த திரு முரசொலி மாறன் முக்கியமாக சம்மதிக்க வில்லையாம் . தலைவருக்கு வயதாகி விட்டதால் அவர் உண்மையையே பேச வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த மாதிரி அண்டப்புளுகையையாவது கொஞ்சம் தவிர்க்கலாமே தலைவரே .. பேராசை .

அடுத்து எம்ஜிஆரின் உப்பை தின்று வளர்ந்த சத்யா மூவிஸ் முதலாளி வீரப்பன் . இவருக்கும் அந்த வீரப்பனுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசங்கள் இருந்து விடப்போவதில்லை. இவரும் மந்திரியாக இருந்தவர் . அதுவும் ஜெயலலிதாவிடம் . மு.க சொல்கிறார் . எம் ஜி ஆர் ஆட்சியில் வீரப்பன் மந்திரியாக இருந்தபோதே என்னுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தார் என்று. ஆஹா .. அருமை தலைவரே . குஷ்பு கட்சியில் சேர்ந்தவுடன் கள்வொழுக்கம் பற்றி தலைவருக்கு நினைவூட்டியிருப்பாரோ ?


மாஜி மகராணிக்கு கொஞ்சம் புத்தி வந்தாப்ல இருக்கு. யாருக்காவது மனவருத்தம் இருந்தால் தன்னிடம் மனம் விட்டு பேசலாம் என்று சொல்லியிருக்கிறார் . மனம் விட்டு பேசலாம்தான் . ஆனால் எத்தனை நாளைக்குத்தான் மானம் விட்டு பேசுவது என்கிறார்கள் அணி தாவ முடிவெடுத்தவர்கள் . கண் கெட்ட பின் (உதய) சூரிய நமஸ்காரம் .


30 ஆம் தேதியை எதிர் நோக்கியிருக்கிறார் தமிழ்குடிதாங்கி . அன்றுதான் திமுக செயற்குழு கூட்டம் . அன்புமணியின் கோட்டை கழற்றுவதா , வேண்டாமா என்று அன்றுதான் முடிவெடுக்கப் போகிறார்களாம். தலைவரே ..நீங்க என்ன செய்யலைனாலும் பரவாயில்லை . தயவு பண்ணி அந்த கோட்டையும் , சூட்டையும் உருவிடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகட்டும் .மரம் வெட்டினா பாவம்னு கருடபுராணத்தில சொல்லியிருக்கா?

இன்று திருச்சியில் ஒரு புதிய கட்சி உதயம் ஆகிறது . அதாவது போன மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாநாடாம். 20 லட்சம் பேர் கலந்து கொண்டு திருச்சியை நாறடிக்க இருக்கிறார்கள் என்று பாரிவேந்தர் சொல்லியிருக்கிறார். அவர்தான் நிறுவன தலைவர் . அதாவது எஸ் ஆர் எம் நிறுவனத்தின் தலைவர் . வழக்கம் போல் அரசியல் தூய்மை என்ற உளுத்துப் போன கோஷம்தான் . இந்த கட்சியில் சேர்வதற்கு முன் பாரி நற்பணி இயக்கத்தில் ஒரு வருடம் சமூகப்பணி ஆற்றியிருக்க வேண்டுமாம் . தொலைக்காட்சியிலும், வானொலியிலும் விளம்பரங்கள் தூள் பரத்துகிறார்கள் . சின்ன பிள்ளைகள் ரைம்ஸ் சொல்வது போல் கட்சியின் பெயரை கூவுகிறார்கள். நம்ம தலையெழுத்து. மீண்டும் ஒரு ஜாதிக்கட்சி . (உடையார்களாம் ) . ஏற்கனவே ஒரு கல்வி தந்தை ஏசிஎஸ் முதலியார்களுக்காக ஒரு கட்சி ஆரம்பித்தார் . அரை சீட்டுக்கு கையேந்தி , அரசியலை தூய்மை படுத்த போகிறார்களாம். கல்வி விற்ற காசு . அடிச்சு ஆடுங்கப்பு .

ஊருக்கு இளைச்சவ பிள்ளையார் கோயில் ஆண்டி . இதுக்கு என்ன அர்த்தமாம் ? 92.7 ல் கேட்டது . அதாவது எவ்வளவு குண்டான ஆண்டியும், பிள்ளையார் கோயிலை சுத்தினா இளைச்சிடுவாங்களாம்.

கவிதைப்போட்டி முடிவுகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஏற்கனவே அக்னி சுட்டெரிக்கிறது. இந்த நேரத்தில் எதற்கு அதை வேறு படித்து என்று நடுவர்கள் விட்டு விட்டார்களோ ? முடிவுகள் வேண்டாம் . அட்லீஸ்ட் நடுவர்கள் யாருன்னாவது அறிவீங்கப்பா . முன்பு பஞ்சாயத்து தேர்தலை ஒட்டி துணுக்குகள் வரும். இப்போது அந்த இடத்தை கவிதை போட்டி முடிவுகள் பிடித்துக்கொண்டு விட்டதோ ? இதை ஒரு இடத்தில் பின்னூட்டியபோது பிரசுரரிக்க வில்லை. அதனால் என்ன ?



நெல் திருட வந்த
சுண்டெலி
உரலுக்கும்
உலக்கைக்கும் இடையில்

வாலில் சுற்றப்பட்ட
பட்டாசு வெடித்து
சரஸ்வதி அம்மணமாய்
கால் நகத்தை தரையில் பிராண்டி
ஆத்திசூடி எழுதியது நாய்

வானவில்லில் ஏழு வர்ணங்கள்
எட்டாவது வர்ணம்
தலைவர் உபயம்
வர்ணாசிரமம்




Thursday, May 27, 2010

முகம் தெரியாத என் காதலா...


கண் கொத்தி பாம்பைப் போல் கவனித்துக் கொண்டே இருந்தாள் மனைவி. அதற்கெல்லாம் அசரும் ஆளா நான் . ஒரு சந்து கேப்பில் சிந்து பாடி விட்டேன். பெரிசா ஒன்னுமில்ல . திருச்சியில் வைகையை பிடிக்க வேண்டும். அங்கு காவிரிதானே என்று கடிக்க வேண்டாம் . ட்ரெயின் வர இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. எதாவது புக்ஸ் வாங்கிட்டு வரேன்னு , விளம்பி விட்டு அவசரமாக வெளியில் வந்தேன் .

ஆட்டோ . இங்க பக்கத்தில் எங்க இருக்கு என்றேன்.

முச பிடிக்கிற நாயை மூஞ்சிய பார்த்தாலே தெரியும் என்பது போல , ஒயின் ஷாப்தானே சார் . உக்காருங்க என்றான் ஆட்டோ

கொடுமை . அங்கு பார் இல்லை . பக்கத்தில் ஒரு வண்டியில் சாக்கு படுதா மறைவில்தான் குடிமக்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள் . ஒரு 15 வயது பையன் வாயில் சிகரெட்டுடன் நெருப்பு வேணுமா என்பது போல் பார்த்தான். நான் எப்போது சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன் என்ற ஆராய்ச்சி இன்னொரு நாள். ஆனால் இந்த தருணத்தில் ஒரு சத்தியம் செய்ய ஆசைப்படுகிறேன். அதாவது அந்த கருமத்தை விரைவில் தொலைத்து விடுகிறேன். பேக் டூ டாஸ்மாக் . 25 பைசா மதிப்புள்ள பிளாஸ்டிக் டம்பளரை 3 ரூபா கொடுத்து வாங்கினேன் .(ரேஷனில் 3 கிலோ அரிசி வாங்கலாம் . தலிவரின் வெற்றி ரகசியம்) . மூடியை திறக்கும்போது ஒரு டாணாக்காரன் வந்துவிட்டான். லத்தியை சுழற்றியபடியே . இங்க நிக்காதீங்க போங்க என்றான் . மாமூல் உயர்வுக்கு அடி போடுகிறான் போல. எனக்கு நேரமில்லை. இங்கு என் மனைவியைப்பற்றி சொல்ல வேண்டும். ரயில் வரும்போது நான் இல்லையென்றால் அவள் கவலைப்படமாட்டாள் . அவள் பாட்டுக்கு ஏறி போய் விடுவாள் . டிக்கெட்டும் அவளிடம்தான் இருந்தது. ஒரு ஸ்பிரைட் பெட் பாட்டில் வாங்கி , சரக்கை அதில் மாற்றி மறைத்துக் கொண்டேன் . ஸ்டேஷன் உள்ளே நான் நுழையும்போது, வைகை பெருமூச்சோடு வந்து கொண்டிருந்தது.

எங்க போய் தொலஞ்சீங்கன்னு பார்வையால் கேட்டாள் மனைவி. அப்போதுதான் நியாபகம் வந்தது . பேருக்கு கூட ஒரு புத்தகம் வாங்கவில்லையென்பது. வழக்கமான அசடை வழிந்தேன். பூனைக்குட்டியை மடியில் கட்டிக் கொண்டது போல் இருந்தது .ஸ்ரீரங்கம் தாண்டினவுடன் பாத்ரூமுக்கு போய் விட வேண்டியதுதான். கோபுரத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள் அவள். என்னையும் அவ்வாறே . உள்ளே இருக்கும் சரக்கை நினைத்தபடியே நானும் . “கடவுளே .. நிம்மதியா குடிக்க வழி பண்ணு”

டாய்லெட்டில் நுழைந்து கதவை தாளிட்டேன் . உள்ளிருந்து வாளை உருவி (அட..பாட்டிலுங்க) வாயில் சரித்துக் கொண்டேன். மீதியை பத்திரப்படுத்தினேன். கதவை திறந்தால் அவள் நின்றிருந்தாள் .

எக்ஸ்யூஸ்மீ சுத்தமா இருக்கா என்றாள் . நான் பதில் சொல்லாமல் நகர்ந்தேன். வாசனை வருமே என்ற நாகரீகம்தான் . மனைவி கேட்டதற்க்கெல்லாம் தவில் வித்வான் மாதிரி தலையை மட்டும் ஆட்டினேன். அந்தப் பெண் எங்கள் எதிரில் வந்து அமர்ந்தாள் . மனைவியை விட அழகாக இருந்தாள் என்று சொல்லலாம் . ஆனால் மனைவி காதில் விழக்கூடாது. அவ்வளவுதான். மீண்டும் மூளையில் மரங்கொத்தி . மீண்டும் பாத்ரூம். அப்போதுதான் அதைப்பார்த்தேன் .

“முகம் தெரியாத என் காதலா... முடிந்தால் என்னை கண்டுபிடிடா “ என்று அழகாக எழுதியிருந்தார்கள் . சற்று முன் இது நிச்சயமாக இல்லை . ஒரு வேளை அந்தப்பெண் எழுதியிருப்பாளோ ? போதையில் சற்று புத்தி தடுமாற , அதன் கீழ் என் அலைபேசி எண்ணை எழுதி விட்டு வெளியில் வந்து விட்டேன். இப்போது அந்த எதிர் இருக்கைகாரியின் பார்வை எனக்கு வேறாக இருந்தது. அவள் பார்வையில் காதல் அல்லது ஏதோ ஒரு தேடல் இருப்பதாக பட்டது. அவள் மீண்டும் பாத்ரூமுக்கு போனாள் . திரும்பி வருகிறாள் . என்னைப்பார்த்து புன்னகைக்கிறாள் . தன் மொபைலை எடுத்தாள். சர்வ நிச்சயமாக என் நம்பரை சேவ் செய்கிறாள் என்று நினைத்தேன்.

அவள் தாம்பரத்தில் இறங்கினாள் . என் மனைவியிடம் வார்த்தையாலும், என்னிடம் பார்வையாலும் விடை பெற்றாள் . அசட்டு துணிச்சலுடன் போன் பேசுவது போன்ற செய்கையை காட்டினேன் .

இரண்டு நாள் போனது. ஒரு அழைப்பு வந்தது . ஹாய் ஹனி என்றது தேன் குரல் . டச் விட்டுப்போனதால் கொஞ்சம் தயங்கி ஹாய் என்றேன்.

முகம் தெரியாத என் காதலா .. முகத்தை காட்டேன்டா என்றது மறு முனை .

அதன் பின் பேசிக்கொண்டது எல்லாம் வேண்டாம். சந்திப்புக்கான இடத்தை குறித்துக் கொண்டோம் .

என்ன சீக்கிரம் வந்துட்டிங்க என்றாள் மனைவி.

ஒரு கிளையண்டோட ரிசப்ஷன் . என் ஜீன்ஸ் அயர்ன் பண்ணியிருக்குல்ல என்றபடி மார்னிங்குளோரியை பீச்சிக் கொண்டேன்.

யார் அது கிளையண்ட் ? உங்களப்பார்த்தான் மாப்பிள்ளை மாதிரி இருக்கு . ஜிப்பா போட்டு கிட்டு போங்களேன் என்றாள்.

எனக்கு சட்டென்று அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. அடிப்பாவி .. சக்களத்தியை பார்க்கப்போறேண்டி..

காரை நிறுத்தி விட்டு காத்திருந்தேன். ஒரு சிகரெட்டை பற்ற வைத்தேன். முகம் தெரியாத காதலிக்கு சிகரெட் வாசனை பிடிக்குமா என்று ஒரு எண்ணம் ஓடியது. மொபைல் அடித்தது. அவள்தான் . வந்துட்டீங்களா ?

வெயிட்டிங் டார்லிங் என்றேன் உற்சாகமாய்

அவள் வந்தாள் . ஆனால் வைகையில் பார்த்த எதிர் சீட்காரி இல்லை. பளிச்சென்று இருந்தாள் . மசெவின் ஓவியம் நீ என்று அவளை வர்ணிக்க வேண்டும். இப்போது இல்லை . இன்னும் இரண்டு ,மூன்று சந்திப்புக்களுக்கு பிறகு.

சாரி நான் கொஞ்சம் லேட் என்று கொஞ்சியவள் மொபைல் அடிக்க ..

ம்ம்.. வந்துட்டாரு . வாங்க என்றாள் .

எனக்கு அடி வயிற்றில் ஐஸ் கத்தியை சொருகியது போல் இருந்தது . யாரை வரச் சொல்கிறாள் ? தர்ம அடியா ? ஈவ் டீசிங்கா ? மகளிர் காவல் நிலையம் .. பான் பராக் போட்ட பெண் இன்ஸ்பெக்டர் ... ஐயோ.. ஒரு நிமிஷம் தலை சுற்றுவது போல் இருந்தது ..ஹலோ என்று இன்னொரு பெண் குரல் கேட்டது. மிகவும் பரிச்சயமான குரல் .. என் மனைவியின் குரல்தான் அது..

Wednesday, May 26, 2010

திருப்பள்ளியெழுச்சி ஜெயலலிதா




தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்று சொல்லப்பட்ட செல்வி ஜெயலலிதா என்ன நினைக்கிறார் எனபதை கண்டு பிடிக்க ஒரு சாஃப்ட்வேர் தயாராகி கொண்டிருக்கிறதாம். அம்மா கட்சியிலிருந்து ஒவ்வொருவராக கழண்டு கொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் இருந்தால் தமிழ்நாடு. இல்லை கொடநாடு . இதுதான் மாஜி மகாராணியின் மந்திரமாக இருக்கிறது . லேட்டஸ்ட்டாக முத்துசாமியும் இன்று திமுகவில் இணைகிறாராம். எம்.ஜி.ஆர் காலத்து விசுவாசி அவர். அம்மையாரின் பாராமுகம் அவரையும் துரத்தி விட்டது. இப்படியே போனால் மேடமும், உடன்பிறவா உபத்திரமும் , அவர் சொந்த வகையறாக்களும் மட்டுமே இரட்டை இலையில் இருப்பார்கள். முன்பு அனிதா ராதாகிருஷ்ணன் , கோமாளி சேகர் (நகைச்சுவை கலைஞன் என்பதை கோமாளி என்று சொல்கிறேன்) இவர்களை பிள்ளை பிடிக்கிறவன் பிடித்து போன போது எழுதிய இடுகை . மீள் பிரசுரம்


கொடநாடு எஸ்டேட்...அடிமைகள் போல் எல்லோரும் பம்மி கிடக்கின்றனர்.ஒபிஎஸ்,ஜெயக்குமார்,வளர்மதி,செங்கோட்டையன்,செம்மலை என முன்னாள் மந்தி(ரி)கள் மற்றும் கட்சிக்காரர்கள்.

பெரிய யாககுண்டங்கள் தயாராக இருக்கிறது.

இன்னிக்கு 09/09/09..அம்மா இன்னிக்குத்தானே முழிக்கறதா சொலியிருக்காங்க சின்னம்மா?பவ்யமாக கேட்கிறார் ஒபிஎஸ்

ஆமாம் ..9 மணிக்கெல்லாம் எழுந்துடுவாங்க

மணி 9 ஆச்சு..அசையறாப்ல தெரியலயேம்மா ..செங்க்ஸ்

தாயே..ஆதிபராசக்தி..டான்சி ராணியே..தெய்வமே

துதிகோஷம் காதைப்பிளக்கிறது.

ஹீஹிம்..அம்மா ..சலனத்தையே காணும்

சசிகலா..அம்முவுக்கு டிரைஜின்ல இளநீர்,லைம்கார்டியல் மிக்ஸ் பண்ணி,அதுல துளசியை போட்டா வர ஸ்மெல் ரொம்ப பிடிக்கும்

அதுக்கு எழுந்திருவாங்க..

அம்மா அசருவதாக இல்லை..

அனைவரும் கூடி ஆலோசிக்கின்றனர்.

அதிமுகவில் புதுசாக ஊடுருவியிருக்கும் புல்லுருவி டாக்டர் வெங்கடேஷ் ஒரு ஐடியா கொடுக்கிறார்

அதன்படி ஒரு சிடியை ஒலிக்க விடுகின்றனர்..

இன்னும் சத்தமா வைங்க

சிடி அலறுகிறது

“ஐயோ கொல்றாங்களே

“ஐயோ கொல்றாங்களே

தலைவரின் குரல் ஒலிக்க

ஜெ விருட்டென்று எழுந்து வருகிறார்.

மகாவிஷ்ணுவை பார்த்த தேவர் கூட்டம் போல் ஒட்டுமொத்தமாக அனைவரும் காலில் விழுகிறார்

இது பழசுதானா?என்ன பண்ணிகிட்டிருக்கீங்க எல்லாம்?ஆட்சி என்னாச்சு?

அம்மா ..துரையை தூக்கிட்டாங்க..அனிதாவை புள்ளை புடிக்கிறவன் புடிச்சுட்டு போயிட்டாங்க..

அந்த கோமாளி சேகர்?

அந்தாளு காதுல பூவை சொருகிட்டு,அல்வா கொடுத்துட்டு போயிட்டாருங்க..

இடைத்தேர்தல் என்னாச்சு?

அதுல ஸ்ரேயா ஜெயிச்சிட்டாங்க

என்ன உளர்றீங்க?

குமுதம் அரசு கேள்வி பதில்ல திரிஷா,அசின்.ஸ்ரேயா மூணு பேருக்கும் “இடைத்தேர்தல்வச்சாங்க..அதுலதான்

மாகாதேவன்..இங்க வந்து இந்தாள் மேல விழுங்க

புல்டோசர் விழுந்த எபெக்ட்டில் திண்டுக்கல் சீனிவாசன் நசுங்கிபோகிறார்.

அம்மா..விஜயகாந்த் நிறைய ஓட்டு வாங்கறாரு.அவரு கிட்ட கூட்டணி வச்சா?

ஆமா..அவருக்கும் சேர்த்து நா ஊத்தி கொடுக்கணுமா?ஏன் எல்லாரும் முகமூடி போட்டிருக்கீங்க? அது போடாமயேத்தானே கொள்ளையடிச்சோம்.

பன்றிக்காய்ச்சல் நாட்டை மிரட்டுது தாயே..ஒரு போராட்டம் அறிவிச்சா ..செல்வாக்கை பெருக்கிடலாம்.

மண்ணாங்கட்டி..மக்கள்தான் எல்லா ஓசியையும் வாங்கிட்டு நன்றிக்காய்ச்சல் வந்து அலையறாங்களே

அப்போது பின் பக்க சுவர் ஏறி குதிச்சு வைகோவும்,ராமதாசும் ஓடி வருகிறார்கள்..

யார் மேன் நீங்க?

அம்மா என்னைத்தெரியலையா?நான் தான் வைகோ

இங்க வர்றவங்க எல்லாம் பொட்டியை வச்சுட்டு கோதான்..நீ யாருய்யா?

ராமதாஸ் வைகோவிடம் ‘சீக்கிரம் அழுதுகாட்டுங்கஅம்மா மறந்துட்டாங்க போல

வைகோ தரையில் படுத்து புரண்டு ஓ வென கதறுகிறார்.

அந்த அழுவாச்சியா?சரி என்ன வேணும்?

தேம்பி,தேம்பி அழுகிறார்.

சசி..இந்தாளுக்கு ஜவ்வு முட்டாய் வாங்கி கொடுத்து துரத்து.நான்சென்ஸ்..நீங்க யாரு?எஸ்டேட்ல மரம் வெட்டற ஆளா?

அன்பு சகோதரி..என்னை தெரியலையா?நான் தான் தமிழ்குடிதாங்கி.அன்புமணிக்கு ராஜ்யசபா..

போங்கய்யா ..தரித்திர சுமைதாங்கி.உங்ககூட சேர்ந்துதான் குடியே மூழ்கி போச்சு..சனிப்பொணம் தனிப்போகாதுன்னு என்னையும் சேர்த்து இழுத்துட்டு போயிட்டீங்க..

அப்படி சொல்லாதீர்கள் அன்புசகோதரி..அன்புமணி அத்தை,அத்தை என்று உங்கள் நினைவாகவே இருக்கிறார்

சசி...இவரை தோட்டத்துத்து அனுப்பு..கைல கோடாரியை கொடுத்து மரம் வெட்டினாத்தான் கஞ்சி..உப்பு போடாம..

செக்யூரிட்டி யாரையோ இழுத்து கொண்டு வருகிறான்..

“அம்மா யாருண்ணு தெரியலை..ஒரு தகர டப்பாவை வச்சுகிட்டு குலுக்கிட்டிருந்தாரு..பூம் பூம் மாட்டுக்காரன் மாதிரி தெரியுது..ஆனா மாடு இல்லை

மாடு எங்கய்யா?

அதை வித்துதான் இடைத்தேர்தலில் நின்னோம்

ஜெ கண்டுபிடித்து விடுகிரார்.

தா.பாண்டியனா?

ஆமாம்மா...

சசி..இவர் கைல சுத்தியும்,அரிவாளும் கொடு..ஒழுங்கா வேலை செய்யனும்..என்ன?

எல்லாரும் நா சொல்றதை கேளுங்க..நீண்ட நாள் ஓய்வில இருந்ததால எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு..அதனால் நா திரும்ப ஓய்வு எடுக்கப்போறேன்..இந்த மைனாரிட்டி ஆட்சி ஒழியனும்..இருள் விலகணும்,..அதனால வீட்டுக்கு ஒருத்தர் தீக்குளிங்க....

சசி எல்லாருக்கும் சோறு போட்டு அனுப்பு..

விஜயகாந்த் மட்டன் பிரியாணி போடராரும்மா..நீங்களும்..

ஆட்சி வரட்டும்.ஊரையே அடிச்சு உலை வச்சிடலாம்.சசி..ஆளுக்கு 20ரூபா கொடுத்தனுப்பு.சைதாபேட்டையில தண்டோரா ஆபிசுக்கு பக்கத்தில ஒரு வண்டியில மீன்குழம்பு சாப்பாடு நல்லாயிருக்கும்.வாங்கி கொட்டிக்கங்க.

அம்மா திரும்ப எப்ப உங்களை எழுப்பறது?

ம்ம்ம்..10/10/10 லதான்

Tuesday, May 25, 2010

வருகை




சுவற்றில் விழுகிறது சுமதியின் நிழல் . பாலா ஓடி வருகிறான். அம்மா அப்படியே இருங்க. அசையாதீங்க . ஒரு பென்சீலை அவசரமாக சீவி நிழலில் மேடிட்டிருக்கும் வயிறை சுற்றி ஒரு அரை வட்ட்ம் வரைகிறான் .

இதுக்குள்ளதான் பாப்பா இருக்கும்மா

சுமதிக்கு சிலிர்த்து போகிறது. கண்ணீரை வெளிக்காட்டாமல் அவனை வாரியணைத்துக் கொள்கிறாள் . ராம் இன்னும் வரவில்லை. எங்கு என்ன போராட்டமோ இன்று. வந்தால்தான் உண்டு. இல்லை எதாவ்து போலிஸ் ஸ்டேஷனில்தான் போய் பார்க்க வேண்டும். காலையில் அந்தம்மா வீட்டில் இருந்து நிறைய பழங்கள் கொடுத்தனுப்பியிருந்தார்கள் . கண்ணா கொஞ்சம் பழம் சாப்பிடுறா என்றாள் பாலாவை

எனக்கு வேண்டாம்மா. நீ சாப்பிடு . அப்பதான் பாப்பா நல்ல பலசாலியா இருக்கும். அந்த மாமி சொன்னாங்களே ..என்னை மாதிரி இல்லாம .சொல்லும்போதே அவனுக்கு அழுகை வருகிறது.

இல்லடா கண்ணா . உனக்கு ஒன்னுமில்லை. டாக்டர் அங்கிள் சொன்னாருல்ல .. நீ போய் விளையாடு போ..

என்னை யாரும் விளையாட சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க .. நம்ம வீட்டூக்கு பாப்பா வரட்டும் . நான் அது கூடத்தான் விளையாடுவேன்.

சுவற்றில் இப்போது நிறைய அரை வட்ட்ங்கள் உருவாகி விட்டது .பாலா தன் பழைய விளையாட்டு பொருட்களையெல்லாம் பத்திரப்படுத்தியிருந்தான். சக்கரம் உடைந்து போன சைக்கிளை அப்பாவை நச்சரித்து சரி பண்ணியிருந்தான். ஏண்டா கண்ணா ! பாப்பா பொறந்தவுடனேவா சைக்கிள் ஓட்டப்போகுது என்றான் ராம் . நான் கத்துக்கொடுத்துவேம்பா என்றான் பாலா . அதை சொல்லும்போது அவனுக்கு அப்படியொரு பெருமிதம்.

நானும் ஆஸ்பத்திரிக்கு வரும்வேன் . என் கிட்டதான் முதல்ல பாப்பாவை காட்டணும் .

இல்லடா செல்லம். நீ ஸ்கூலுக்கு போகணும் இல்ல . சாயங்காலம் நான் கூட்டிகிட்டு போறேன் என்கிறான் ராம்.

அரை மயக்கத்தில் இருந்தாள் சுமதி. நிழலாய் காட்சிகள் தெரிகிறது. தொப்புள் கொடியை துண்டிக்கிறார்கள் . வேதனை மறைந்து அந்த ரோஜாவின் முகத்தை காணும் ஆவல் நிறைகிறது.

ஸ்கூல் வளாகத்தில் இருக்கும் கோயிலில் முழங்காலிட்டு வேண்டிக்கொண்டிருக்கிறான் பாலா .. அப்பாவிற்க்காக காத்துக் கொண்டிருக்கிறான் . ஏன் அப்பா இன்னும் வரவில்லை.

இங்க பாருங்க மிஸ்டர் ராம் . இது கொஞ்சம் எமோஷனல் விஷயம்தாம் . ஆனால் இதுதான் கண்டிஷன் .

சுமதிக்கு குழந்தையை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது . ஆனால் அவளிடம் காட்டவேயில்லை. அப்படியா சொன்னார்கள் ? கடவுளே .. அடி வயிற்றை பிசைகிறது. ப்ளீஸ் யாராவது ஒரு முறை அந்த முகத்தை.

மிஸ்டர் ராம் நீங்க எல்லாவற்றுக்கு சம்மதித்துதான் கையெழுத்து போட்டிருக்கிறீர்கள் . உங்க அக்கவுண்டில் மீதி தொகை கிரெடிட் ஆகிவிடும்..

பாலாவுக்கு குழப்பம் . நிறைய சாக்லெட் வாங்கி வைத்திருக்கிறான். எல்லோருக்கு கொடுக்க வேண்டும் முதல்ல இந்த சாமிக்கு.. அப்புறம் டீச்சருக்கு, பாபுக்கு, வேணிக்கு.. இது போதுமா .. அப்பா வந்தவுடனே இன்னும் நிறைய வாங்கணும்.. ஆனா அப்பா ஏன் இன்னும் வரலை ?

குழந்தை ஹெல்தியா இருக்கு ராம் . வி ஆர் ரியலி சாரி. இதுதான் டேர்ம்ஸ். நாங்க ஒன்னும் செய்யமுடியாது. கொஞ்ச நாள்ல சரியாகிடும். இந்த மாத்திரைகளை உங்க மனைவிக்கு கொடுங்க.

என்ன மாத்திரை டாக்டர்?

பால் சுரந்து உயிர் வலித்தது சுமதிக்கு.. பாலாவுக்கு என்ன சொல்லப்போகிறேன் . குழந்தை எப்படி இதை தாங்கப்போகிறான்..

மிஸ்டர் ராம் . பாலவுக்கு ஆபரேஷனுக்கு நாள் குறிச்சிடலாம். அவங்க கண்ட்ராக்ட் அமவுண்ட்டுக்கு மேல ஒரு லட்சம் த்ர்றாங்களாம். குழந்தை நல்ல கலர் . நிறைய முடி . அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம் .

ஒரு உயிரை காப்பாத்த , இன்னொரு உயிரை சுமந்திருக்கேன் . பத்து நிமிஷம் ஒரு குழந்தை கையில வச்சுகிட்டு கொஞ்சினாலே , கொடுக்க மனசு வராதே. பத்து மாசம் ... முகத்தை கூட காட்டலையேங்க.. பாலாவுக்கு என்ன சொல்லப் போறோம்..

ஏம்பா சாமி ஏமாத்திட்டாருன்னு சொல்றீங்கப்பா ? பாப்பா எங்க ?

சுவற்றில் அரை வட்டங்கள் . அதனடியில் விளையாட்டு சாமான்கள். பித்து பிடித்தாற் போல் அழுகிறாள் சுமதி. அவள் கையில் இருக்கும் ஸ்கேன் படத்தில் , அந்த முகம் காட்டாத மழலை மெல்ல நெளிந்து கொண்டிருக்கிறது.

Monday, May 24, 2010

மசால்வடையும் , ஒரு காதல் கதையும்






முரளி என்னுடன் படித்தான். அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. இந்த பெயர் காரணம் ரொம்ப நாள் எனக்கு தெரியவில்லை. நீங்கள் தஞ்சை ஞானம் தியேட்டரில் சினிமா பார்த்திருக்கிறீர்களா ? அது கொஞ்சம் வித்தியாசமான தியேட்டர். கவுண்டரில் ஆங்காங்கே கம்பம் மறைக்கும் என்ற போர்டு இருக்கும். உண்மைதான் . முன்னால் இருப்பவர் தலை மறைத்தால் கொஞ்சம் குனிந்து உட்காருங்கள் என்று கேட்கலாம் கம்பத்திடம் எப்படி கேட்பது. ஆனால் கம்பம் கூட நம் வேண்டுகோளை ஏற்க வாய்ப்பிருக்கிறது . நம்மாளுங்க. ஹீம். சரி அதை விடுங்கள். அந்த தியேட்டரின் இன்னொரு ஸ்பெஷல் மசால்வடை . டிக்கெட் வாங்குவதற்கு அலைமோதுவதை விட , வடை வாங்க கூட்டம் அலையும். அந்த வடைக்கு அப்படியொரு மவுசு . சும்மா சொல்லக்கூடாது . பாதி தோல் உரிக்கப்பட்ட வெங்காயம், பச்சைமிளகாய் துருத்திக் கொண்டு, கையலகத்திற்கு புடைப்பாக சூப்பராக இருக்கும் .

ஒரு இடைவேளையில் எங்கள் மசால்வடை வாங்கும் முயற்சி தோல்வியடைந்தபோது , என்னை யாரோ பேர் சொல்லி அழைத்தார்கள் . நம்ம முரளிடா என்றான் உலக்ஸ். எங்களுக்கு ஸ்பெஷலாக வடை கொடுத்ததை நிறைய கொள்ளிக் கண்கள் கவனித்தன . எனக்கு பெறர்கரிய நட்பு வாய்த்தாற் போல் உணர்ந்தேன்.

டேய் நீங்களும் என்னை மசால்வடைன்னு கூப்பிடாதீங்கடா என்றான் மசால்வடை. அதான் அவன் இன்னொரு பெயர்.

சே..நீ என்னிக்குமே எனக்கு முரளிதாண்டா என்றேன் வாஞ்சையுடன் (வாசணையுடன்)

முரளி இங்கிலீஷில் கொஞ்சம் வீக் . நான் அவனை விட கொஞ்சமே ஸ்டிராங் . எனக்கு கொஞ்சம் என்று இழுத்தான்.

அவ்வளவுதானே . நான் சொல்லித்தரேன் என்றென்.

அதில்லைடா . உன் பேப்பரை மட்டும் கொஞ்சம் காட்டு போதும் என்றான்.

முரளியுடன் நட்பு வலுப்பட்டதற்கு அதுமட்டுமில்லாமல் இன்னொரு காரணமும் இருந்தது . சுகுணா . அவன் தங்கை . பெரிய வெங்காயத்தை சுருள், சுருளாய் அரிந்தாற்ப்போன்ற கேசம் . நல்ல இளந்தளிர் கொத்தமல்லி நிறம் . என்ன அவள் மீது மசாலா வாசனை அடிக்கவில்லை . கோகுல் சாண்டலில் குளிப்பாள் போல .எங்கள் ஸ்கூலில்தான் படித்தாள் . ஆனால் கவனித்ததில்லை. முரளி வீட்டிற்கு போனபோதுதான் இரட்டைப் பின்னலில் பார்த்தேன் . ஒரு ரோஜாவை இடது பக்கம் சொருகியிருந்தாள். முரளிஎன்னடி இது மசால்வடையா என்றான் . அதற்குப்பிறகு முரளி மீது எனக்கு அக்கறையும் , பாசமும் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. உலக்சுக்கு கூட கொஞ்சம் வருத்தம் . என்னடா மாப்ள என்றான்.

நான் சுகுணாவை காதலிக்கிறன்டா என்றேன்.

எனக்கு கூட அவ மேல ஒரு ஆசைதான் . ஆனா எங்கப்பன் தொலைச்சிடுவான் . எங்க வகையறாவில ஏகப்பட்ட அதிரசங்கள் இருக்குல்ல. எவ வீட்டு தூக்கு சட்டியில தொங்கப்போறேனோ என்றான். ஆனா நீ டிரை பண்றா . நான் ஹெல்ப பண்றேன்.

சரி எப்படிரா அவ கிட்ட சொல்றது ?

ஆனால் சுகுணா அதற்கு சந்தர்ப்பம் கொடுத்தாள் . முரளி எதிரில் என்னை பேர் சொல்லி அழைத்தற்கு அவனுக்கு கோபம் வந்தது . அண்ணான்னு கூப்பிடுறின்னான் . நான் பொறியில் அகப்பட்ட எலியாய் உணர்ந்தேன். ஆனால் சுகுணா ஒன்றும் சொல்லாமல் உள்ளே போனாள் .

சாரிடா இவளுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி என்றான் முரளி.

விடுறா மச்சான் நம்ம சுகுதானே என்றேன்.

அதன்பின் நிறைய சந்தர்ப்பங்களில் காதலை சொல்லவில்லை . படிப்பு முடியட்டும் என்றேன் உலக்ஸிடம் . ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டில் நானே மசால்வடை செய்ததை அம்மா ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா நீ மட்டும் அவளை பார்த்தால் என்று நான் உளறியதை கவலையுடன் அப்பாவிடம் சொன்னாள் .

சுகுணா வீட்டில் (கவனிக்க முரளி வீடு இல்லை) அப்பளமும் இட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள் . ஒரு முறை அவள் வீட்டிற்கு போனேன் . அதற்கு முன் ஒரு சந்தில் ஒளிந்து கொண்டு காத்திருந்தேன் . முரளி வெளியில் போவதற்காக . முரளியின் சைக்கிள் மறைந்ததும் உள்ளே போனேன். சுகுணா அப்பளம் இட்டுக் கொண்டிருந்தாள் . என்னை பார்த்ததும் மலர்ந்தாள் . அல்லது இருந்தது . வேறு யாருமே வீட்டில் இல்லை .

சுகு யாரும் இல்லையா ?

தெரிஞ்சுதானே வந்த ..

இல்லை . முரளி கொஞ்சம் கிராமர் பார்க்கலாம்ன்னு சொன்னான் . அதான்

சரி அப்ப போயிட்டு வா என்றபடி உள்ளே போனாள் .

அவள் திரும்பி வரும்போது நான் அங்குதான் இருந்தேன் . ஒரு பொட்டலத்தை நீட்டினாள் .

என்ன என்றேன் காதல் ஜீரத்தில்

வீட்ல போய் பாரு . யாருக்கும் தெரியாமல்.

அவ்வளவு வேகமாய் நான் சைக்கிள் ஓட்டினதே இல்லை . வீட்டில் யாரும் இல்லை. கொல்லையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வேகமாய் கதவை திறந்து அதை பிரித்தேன் . அப்பளம் . அழ வேண்டும் போல் இருந்தது . அம்மா உள்ளே வந்தாள் . பசிக்குதாடா . தொட்டுக்க ஒன்னுமில்ல. பக்கோடா வாங்கிண்டு வர்றியா என்றாள் . எனக்கு சுகுணாவை முழுங்க வேண்டும் போல் இருந்தது . இந்த அப்பளத்தை பொறி என்றேன்.

தட்டில் கோலம் பொட்டுக் கொண்டிருந்தேன். மனசு முழுக்க அவளை சுற்றியே இருந்தது. என்னை தின்னிப்பண்டாரம்னு நினைச்சுட்டாளா? அவ மசால்வடை விக்கற புத்தி எங்க போகும் ? என் காதலை புரிஞ்சுக்கலையே அவ . அம்மா எதிரில் அழுதால் அசிங்கமாக இருக்கும். பசி வேறு . சாப்பிட்டு விட்டு உலக்ஸோடு அரண்மனை கிரவுண்டிற்கு போகலாம். அரை பாக்கெட் சிகரெட் பிடிக்கணும். அழணும். கேன்சர் வரணும் . என்னைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு சுகுணா வரணும் . உனக்காகத்தான் சுகுணா.. அவள் அழ வேண்டும் .

ஞானம் தியேட்ட்டர் இப்போது பாராக மாறியிருந்தது. உலக்ஸ் சரக்கு ஆர்டர் செய்துவிட்டு, சைட்டிஷ்டா மாப்ளை என்றான்.

மசால் வடை கிடைக்குமா?

ம்ம்..கிடைக்கும். சுகுணாவே சுட்டுத்தருவா ?

சரி . அப்படியே ரெண்டு அப்பளமும் என்றேன்

ஒரு பெரிய அப்பளத்தை அம்மா பொறித்துக் கொண்டு வந்தாள் . யார்டா கொடுத்தது இதை . பாருடா என்றாள் ..

அப்பளத்தின் நடுவில் அழகாக “ஐ லவ் யூடா என்று “ இருந்தது




Saturday, May 22, 2010

மெழுகு நதி


சலனமற்று கிடக்கின்றன
நம் பிடிவாதங்கள்
ஆவி அடங்கி கொண்டிருக்கிறது
கோப்பைக்குள்
மரங்களின் மெளன அஞ்சலி
காற்றின் மரணத்திற்கு

Friday, May 21, 2010

பேசிக் கொண்டிருக்கிறார்கள்


அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
உரக்க ஒலிக்கும் மெளனமே சாட்சியாக
உறங்கி கொண்டிருக்கும்
சில வார்த்தைகளும் அதை
ஆமோதிக்கின்றன

அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
வெறுமையிலிருந்து வெறுமை நோக்கி
செல்லும் வழியில் இடைப்பட்ட இடத்தில்
விரவியிருக்கும்
பிரியங்களின் மேல் நின்று கொண்டு

அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
முதலில் யார் கழட்டுவது முகமூடியை
என்ற யோசனையின் ஊடே

கொஞ்சல்கள் ஒளிந்திருக்கின்றன
இருவரின் நக இடுக்குகளின் உள்ளும்
நீதான் இல்லை நான் தான் இல்லை
நாம்தான் என்பது அவர்களுக்கு
தெரிந்தேயிருக்கிறது
ஏதோ ஒன்று உடைய காத்திருக்கிறார்கள்
அதுவரை பேசிக்கொண்டே இருக்கட்டும்

Thursday, May 20, 2010

அன்புள்ள அம்மா ...


”கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் , நற்கதி அருள்வாய் அம்மா’

பற்பலரும் போற்றும் பதிமயிலாபுரியில்.சிற்பம் நிறைந்த உயர் சிங்கார சோலைதன்ன்னில்..

அம்மா லயித்து பாடிக்கொண்டிருந்தாள் . சற்று நேர் கோணல் வகிடெடுத்து திருத்தமாக வாரி பின்னியிருந்தாள் . கொஞ்சமாய் மல்லிகை கர்வப்பட்டுக் கொண்டிருந்தது . வாடாமல்லி நிறத்தில் குங்குமம் இட்டிருந்தாள் . இருக்கும் இடமே தெரியாமல் சின்னதாய் மின்னியது தோடு. சாதாரண மஞ்சள் கயிறுதான் கழுத்தில் . இருந்தாலும் மகாலட்சுமியாய் தேஜஸ் . அம்மா

அம்மாவுக்கு பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே மீது ரொம்ப பித்து . என்னை கேட்க வைத்து பாடுவதில் அவளுக்கு அலாதி இன்பம். நான் வாய் நிறைய பாராட்ட வேண்டும். கேட்டுக் கொண்டேயிருப்பாள். அவள் சின்ன வயதில் என் தாத்தா அவளை பாட சொல்லி கேட்டு முத்தமழை பொழிவாராம். நீ என் அப்பாடா செல்லம் என்பாள் அடிக்கடி. அம்மா நீ பாடறது எனக்கு புரியலை. ஆனா மனசை என்னவோ பண்ணுதும்மா என்பேன். அப்பாவும் அதற்கு ஒரு காரணம்.

அப்பாவும் நன்றாக பாடுவார் . உறவினர் வீட்டு கல்யாணங்களில் அப்பா பாட்டை ரசிக்க ஒரு கூட்டம் இருக்கும் . அப்படித்தான் ஒரு கல்யாணத்தில் அப்பா”கற்பகவல்லியை மெய்மறந்து இழைத்துக் கொண்டிருந்தார். பாதியில் ஏதோ தடங்கல் . தண்ணீர் குடித்து விட்டு தொடருவதற்குள் அம்மா பாட ஆரம்பித்தாள் . அத்தனை பேரும் கட்டுண்டு போனார்கள்.”உங்கள விட ரீதீகெளலவை என்னமா ஆலாபனை பண்றா ..என்று ஆச்சர்யகுறிகள் அப்பாவை நொக்கி எய்யப்பட்டன. தொடர்ந்து நேயர் விருப்பமாக பாட சொல்லிக் கொண்டேயிருந்தார்கள் . ஆனால் அப்பா முகம் சுருங்கி போயிற்று. அதற்கப்புறம் அம்மா வீட்டிலேயே முடக்கப்பட்டாள் .எந்த வேலை செய்தாலும் அம்மாவின் வாய் எதையாவது முணுமுணுத்து கொண்டேதான் இருக்கும். அப்பாவின் கை பேச ஆரம்பித்திருந்தது.

அம்மாவின் அந்த நெத்தி தழும்பு . அப்பா வீசியெறிந்த டம்ளர் . அம்மா அழவில்லை . அதற்குப்பிறகு பாடவில்லை. எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. ஒரு நாள் இரவு அப்பா குடித்திருக்க வேண்டும். சத்தம் கேட்டு நான் முழித்துக் கொண்டேன். ஆனால் கண்களை இறுக்கமாக மூடியிருந்தேன்.

இப்ப பாடுறியா , இல்லையா?

என்னால முடியாது . மன்னிச்சுக்கோங்க .

நான் சொல்றேன் . பாடுடி.

நிச்சயமா முடியாது. நீங்க என்ன கொன்னாலும் சரி . அம்மாவின் குரலில் அசாத்திய உறுதி. எனக்கு பயமாக இருந்தது. அப்பா ஏற்கனவே நல்ல சிவப்பு. இப்போது கோபத்தில் இன்னும் விகாரமாக தெரிந்தார்.

நாயே . நான் படுன்னா படுக்கணும். பாடுன்னா பாடணும். இல்லைன்னா வெளியில் போடி

நான் கண்களை திறந்து கொண்டேன் .

அப்பா அம்மாவை ஒன்னும் சொல்லாதீங்கப்பா என்று அழ ஆரம்பித்தேன். அம்மா என்னை அணைத்து கொண்டாள். அப்பாவிடம் சொன்னாள் . நீங்க இருக்கவரைக்கும் நான் பாட மாட்டேன். குழந்தையை எதாவது பண்ணிங்க . நான் என்ன வேணுமின்னாலும் பண்ணுவேன். அப்பா கோபமாக வெளியில் போனார் . நான் அம்மாவின் கண்களை துடைத்தேன். அப்போதுதான் அம்மா சொன்னாள் . கண்ணா பெண் ஜென்மமே பாவப்பட்டதுடா . உங்கப்பா பாவத்துக்கு நீதாண்டா கண்ணா பரிகாரம் தேடணும்.

என்னம்மா பண்ணனும் என்றேன்

உனக்கு ஒருத்தி வருவா பாரு. நான் உன்னை எப்படி பாத்துக்கறேன். அந்த மாதிரி அவளை நீ பார்த்துக்கணும். அவளை நீ வாயாற பாராட்டணும்டா . நெகிழ்ந்து போயிடுவா அப்படியே . அவ பண்ற ஒவ்வொரு காரியத்தையும் ரசிச்சு பேசு. உசிரை கூட கொடுத்துடுவா உனக்காக . அவளை கைநீட்டாதே . பொம்பளைக்கு புருஷன் கிட்ட அடி வாங்கறைப் போல வேற அவமானமே இல்லைடா கண்ணா . தட்டுல மலத்தை அள்ளி போட்டுகிட்டு திங்கலாம் அதுக்கு. அம்மா அழ ஆரம்பித்தாள் .

ரெண்டு விஷயங்கள் . சமீபத்தில்தான் என் மனைவி ரெயிலில் அடிபட்டு என்னை விட்டு போனாள். அம்மா சொன்னபடியே அவளை நடத்தினேன். ஆனால் அவளை நான் திட்டினால் கூட அவளுக்கு கேட்டிருக்காது. என்னிடம் எதையும் அவளால் கேட்கவும் முடியாது . அம்மா கடைசி நாட்களில் எங்கு வேலைப்பார்த்து என்னை ஆளாக்கினாளோ, அந்த ஹோமிலிருந்துதான் நான் பார்வதியை கல்யாணம் செய்து கொண்டேன் . அம்மா உனக்கு சந்தோஷம்தானே . நீ யே அவளை கேட்டுப்பாரேன். அங்குதான் வந்திருக்கிறாள்.

அப்புறம் அப்பா , அம்மா இருக்கும்போதே போய்விட்டார். தகவல் தெரிந்து அம்மாவுடன் போனேன் கொள்ளி போட . திடீரென்று அம்மா பாட ஆரம்பித்தாள்


”காதல் சிறகை காற்றினில் விரித்து , வானவீதியில் பறக்கவா” அன்று இரவு அப்பா பாட சொல்லி ,அம்மா மறுத்த அதே பாடல்....

Monday, May 17, 2010

கவிதைப்போட்டி முடிவுகள்



கவிதைப்போட்டி முடிவுகள் எப்போது வரும் என்று எல்லோரையும் போல்தான் நானும் காத்திருக்கிறேன். அண்ணன் உண்மைத்தமிழன் போட்டியில் கலந்து கொண்டாரா என்று தெரியவில்லை. பழைய கெமிஸ்ட்ரி புக்கையெல்லாம் படித்து கவிதை எழுதும் நேசமித்ரன் நகத்தை கடித்து கொண்டிருகிறார். பா.ராஜாராமை பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. அவரும் விநாயகமுருகனும் விகடனின் ஆஸ்தான கவிஞர்களாய் விட்டார்கள். செந்தழல் ரவியின் சுன்னவினத்துவ கவிதைக்குத்தான் சிறப்பு பரிசு என்று ஒரு பேச்சும் இருக்கிறது. ஜ்யோவ்ராம் சுந்தருக்கு இன்னொரு கவலை. எல்லாருமே சூப்பராய் எழுதி தொலைத்திருக்கிறார்கள் . என்ன செய்வது என்று . அநேகமாக அவரும் பைத்தியக்காரன் என்று பெயரை மாற்றிக் கொள்ள வேண்டி வரலாம். இந்த முறை தேர்ந்தெடுக்க பட்டால் நான் தான் அடுத்த பாப்லோ நெருடா என்று கேபிள் சங்கர் சாட்டில் அநேகமாக எல்லோரிடமும் சொல்கிறார். கார்ப்பரேட் கம்பர் இதில் கலந்து கொள்ள வில்லை . நேராக புக்கர்தான் என்கிறார் அவர். கோவை கவிஞர்களில் சஞ்சய்க்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக காழியூர் நாரயணன் கணித்திருக்கிறார். கோவையின் அடுத்த கலாப்ரியா அவராகவும் இருக்கலாம். அப்படியிருக்கும் பட்சத்தில் சுறா படத்தின் டிக்கெட்டை பத்திரப்படுத்துங்கள். லாவண்யாவின் கவிதையை படிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே டெல்லியில் எல்லோரும் செம்மொழி மாநாட்டுக்கு வரவிருக்கிறார்களாம். கார்த்திகை பாண்டியனுக்கு அழகிரியின் கரங்களால் பொற்கிழி வழங்கப்பட இருக்கும் அபாயத்தை நாம் மறந்து விடக்கூடாது. இவ்வளவுக்கும் மத்தியில் சாரு வேறு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார். அது இன்னொரு டிசம்பர் 26 ஆம்.


ஹைக்கூ கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு பட்டறை நடத்தப்பட்டது.அது பற்றிய ஒரு மொக்கை பார்வை..

உங்க எல்லாரையும் பஸ்சுல வரசொன்னதுக்கு காரணம் தெரியுமா?

(கோரசாக) தெரியாது சார்

நீங்க பஸ்சுல வாங்கின டிக்கெட் பின்னாடித்தான் பட்டறை முடிஞ்சவுடனே ஹைக்கூ கவிதை எழுதணும்

தண்டோரா : சார் ,நான் வித்தவுட்ல வந்தேனே.

ஆரம்பத்துலயே கிளப்பாதய்யா..நம்ம ஊர்சுற்றிகிட்ட நேத்து டிக்கெட் இருக்கும்.அதை வாங்கிக்க.இப்ப பொத்திகிட்டு உக்காரு.

அனுஜன்யா..என் பஸ் டிக்கெட் ரொம்ப பெரிசா இருக்கே..அதுவுமில்லாம அதுல ஏற்கனவே யாரோ எழுதியிருக்காங்க.

அப்படியா?நீங்க எந்த பஸ்சுல வந்தீங்க?

ஏர்பஸ்சுல

உக்காருங்க யூத்து.எப்படியும் நீங்க எழுதறது யாருக்கும் புரியபோறதில்லை

சாரி..கொஞ்சம் அக..சாரி நாழிகை ஆயிடுச்சு..வர்ற வழியில வண்டலூர்ல ஒருத்தர் கட்டுரை தரேன்னாரு..அதான்.நான் கவிதை படிச்சுட்டு கிளம்பவா?
ஜி.எச் ல ஒரு கவிஞர் மரணவாக்குமூலம் தரேன்னாரு..இதழ் ரெடியாகிட்டு இருக்குல்ல...

சரி வாசுங்க..சீ..சீ வாசீங்க

சிறைபட்ட காற்றை
உள்வாங்கி
வெளியிட்டது
வால்குழவை

மூச்சின் வெப்பம்
தணித்தது
உள்ளாடை
வியர்வையை

மேல்பாதியில்
வந்தமர்ந்த
யட்சிணி
கீழ்பாதியை
கேட்டாள்
நடுநிசி
கனவில்
நாயூறும்
போர்வையானேன்..

வாசு..இதுக்கு அர்த்தம் அடுத்த அகநாழிகை இதழில் வருமா?

அதற்குள் உண்மைத்தமிழன் யார் கிட்டயாவது ஏ-3 சைஸ் பேப்பர் இருக்கா?

எதுக்கு?

இல்லை.பஸ் டிக்கெட்டை அதுல ஒட்டி பெரிசாக்கத்தான்..

பேப்பர் அடியில ஒட்டி அதுல உங்க பேரையும்,நம்பரையும் எழுதுங்க.உக்காருங்க..

ஹைக்கூ எழுதறது எப்படின்னு இப்ப ஜ்யோவ்ராம் சொல்லுவார்.

எல்லாருக்கும்..ம்ம் எதுக்கு எல்லாருக்கும்..அந்த வார்த்தை தேவையே இல்லை..
வணக்கம்..ம்ம்ம் வணக்கம்ன்னு சொல்லி வேஸ்ட் பண்ணாம கூட இருக்கலாம்
கையை கூப்புகிறார்.

கேபிள்..குரு ஒரு சந்தேகம்...அந்த நல்ல மீன்கள் காமெடி டிராக் நீங்க எழுதினதா?

ஜ்யோவ் கையை குறுக்கால் வீசி வாயை பொத்துகிறார்.

ஆதி...குறுக்கால பேசாதீங்கன்னு சொல்றீங்க..சரியா?

ஜ்யோவ் தலை ஆட்டி விட்டு அமர்ந்து விடுகிறார்..

மைக்கை பிடிக்கும் பைத்தியக்காரன்..இதுவரை ஹைக்கூ கவிதை எழுதுவது எப்படின்னு சுந்தர் அருமையாக வகுப்பு எடுத்தார்..அடுத்து அண்ணன் உண்மைத்தமிழன் வகுப்பு எடுப்பார்..

அண்ணே நானா?

ஆமாம் ..நீங்கதான்..ஆனா ஒரு சின்ன திருத்தம் .நீங்க எப்படி எழுதக்கூடாதுன்னு எடுக்கப்போறீங்க..

அண்ணே மன்னிச்சுடுங்க..இப்ப நான் பிஸியா ஒரு கவிதை எழுதிகிட்டிருக்கேன்..அதானால நர்சிம்..

பாஸ் எப்பவும்
நான் கடைசிகேஸ்
இப்ப முதலில்
ரேஸ்..

பரவாயில்லை நர்சிம்..பேசுங்க

பேசறதா?அதுதாங்க நான் எழுதின ஹைக்கூ

கிளிஞ்சது..அடுத்தது யாருப்பா?

கேபிள் வருகிறார்...

வாராவாரம்
சினிமா வியாபாரம்
சிக்சருக்கு சித்து
குத்துக்கு
கொத்து..

ஜ்யோவ்ராம்...உங்க யாருக்கும் கவிதை இலக்கணமே தெரியலை..பா.ராஜாராம் நீங்க வாங்க

சுந்தரா..அன்பு மக்கா..சிவகங்கையில சாப்பிட்டமே மட்டன் சுக்கா..

அது சரி நீங்க எழுதுங்க

கன்ன சுருக்கிலிருந்து
காசு கொடுத்தாள்
கூன் கிழவி

முக்கு கடையில்
வாங்கின முறுக்கு
வாசம் அவள்
இடுப்பு சுருக்கு
பையில்..

அடுத்து மும்பையிலிருந்து நையாண்டி நைனா.

தியேட்டருக்கு
கேபிள்
குவார்ட்டருக்கு
லேபிள்
அவ்வ்வ்வ்வ்..அவ்வள்வுதாங்க..யாராவது எழுதுங்க..நா ஊருக்கு போய் எதிர் கவுஜ போடறேன்..எந்தந்த வகையிலன்னா

அனுஜன்யா பற்றியும்,பற்றாமலும்

எதுங்க?

காலையில டிபன் பத்தலை.அதை சொன்னேன்

நிகழ்வொன்று
நிகழும்போது
நிகழ்ந்தது
நிகழாதென்று
சொன்னது
நிகழ்ந்தது...

ஜ்யோவ்ராம்.. சுத்தம்.இதுக்கு நீங்க என்னை...எனக்கே புரியலை..ஒருவேளை நேசமித்ரனுக்கு புரியலாம்..ஆனா நல்லவேளை .அவர் இங்க வரலை

ஜ்யோவ் உங்க கவிதையையும் படிச்சிட்டீங்கன்னா,நாங்க இருக்கிற ரெண்டு சிண்டையும் பிச்சுகிட்டு..

இந்த கவிதை இப்ப எழுதினது இல்லை.இப்பன்னா ஒரு மூணு நிமிழத்துக்கு முன்னாடின்னு வச்சுக்கலாம்.

அய்யோ..அய்யோ

பாதி படித்த எமிலி டிக்கின்ஸ்
மீதமிருந்த எல்கான்ஸா ரம்
படித்த போதையும்
மீதிக்கு குடித்த களைப்பும்
மட்டையாகிவிட்டேன்
காலையில் பார்த்த
எமிலி டிக்கின்ஸின்
நான்கு பக்கங்களில்
பச்சை நிறத்தில் பற்குறிகள்
வெளியில் சென்று
அரை போத்தல் எல்கான்ஸாவுடன்
வீடு திரும்பினேன்
என் புத்தக அலமாரியை
பீராஞ்சு கொண்டிருந்தது
அதே திருட்டுப் பூணை

இறுதியாக அண்ணன் உண்மைத்தமிழன் வருகிறார்.

அன்புள்ள
என் இனிய வலையுலக
தமிழ் பெருங்குடி மக்களே.
நான் எழுதிய இந்த ஹைக்கூ...
சாரி ஹைட்கூ
உங்களுக்கு பிடிக்கும்...

தண்டோரா..அண்ணே சூப்பர்..ஷார்ட்டா முடிச்சுட்டீங்க

இருங்கப்பா..இப்பத்தான் முன்னுரையே ஆரம்பிச்சிருக்கேன்.அதுக்குள்ளார..ஊடால,ஊடால பேசினீங்க..முருகன் வேல்கம்பை வாங்கி கண்ணை குத்திடுவேன்

சிவராமன்..அண்ணனுக்கு மூடு கிளம்பிடுச்சு.தொடருங்க அண்ணே

ஏனிந்த
ஏணிக்கு
இப்படி
ஆசை

எத்தனை
படிகள்
தனக்கென
எண்ணி
பார்க்க

இறங்கியவனை
கேட்டதாம்
ஏறிப்பார்த்து
சொல்கிறேன்
என்றானாம்

இறங்கும்போது
கேட்டதாம்
ஏறிப்பார்த்து
சொல்கிறென்
என்றானாம்

கோணிக்கு வந்த
கோணல் ஆசை
தோனிக்கு ஒரு
மசால் தோசை

குனிந்த தலையை நிமிராமல் படித்துகொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தால்

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
--
-

-
-
-
-
-
-
-

-
-
-
-
-

-
-
-
-
-

-
-
-
-
-
-
--
-
-
-
--
-
-
-

-

Saturday, May 15, 2010

கதை சொல்லிகள்




முன்பு தஞ்சையில் தஞ்சை ப்ரகாஷ் கதை சொல்லிகள் என்றொரு நிகழ்வை நடத்தி வந்தார். நிறைய முறை அதில் கலந்து கொண்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன். சில நாட்கள் முன்பு கூட ஒரு இடுகையில் கவிஜீவனைப் பற்றி எழுதியதில் நண்பர் ஜெயமார்த்தாண்டன் அதைப் பற்றி பின்னூட்டம் இட்டிருந்தார்.

தமிழ் ஸ்டூடியோ நண்பர் அருண் குறும்பட தளத்தில் செம்மையாக இயங்கி வருவது நமக்கு தெரியும். அவரின் இன்னொரு முயற்சியாக ஒரு புதிய தளம் கதை சொல்லி.


கதை சொல்லி.. இலக்கிய உலகில் இந்த வார்த்தை மிகவும் பிரசித்திப் பெற்றதுப் போலவே திரையுலகிலும், அதன் தன்மை மாறாமல் அதே முக்கியத்துவத்துடன் இருப்பது கவனத்திற்குரியது.

நம்முடைய எல்லா வயதிலும் நமக்கு கதை சொல்லி தேவைப்படுகிறார். பாட்டி, அம்மா, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள் என எல்லா நிலைகளிலும் கதை சொல்லியாக இருப்பவர்கள் நமது மனதில் நீங்கா இடத்தைப் பெற்று விடுகின்றனர். நமது மனம் எப்போதும் ஏதோ விதத்தில், ஏதோ உருவத்தில் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறது. கதைகள் நம்முடைய வாழ்வோடு கலந்தவை. நமது வாழ்க்கையை சில நேரங்களில் வழி நடத்துவதும் கதைகளே.

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தொழில்நுட்பம் நமக்கு கொடுத்திருக்கும் வசதிகளையும் பயன்படுத்தி கூடு இணைய வாசகர்களுக்காக புதிதாக கொண்டுவரப்பட்டதே இந்தக் கதை சொல்லிப் பகுதி. இந்த கதை சொல்லிப் பகுதியில் நமக்கு பிடித்த எழுத்தாளர்கள், கிராமங்களில் வாழும் உண்மையான கதைசொல்லிகள், பல தலைமுறைகள் கடந்து வாழும் பாட்டிகள், திரைப்படக் கலைஞர்கள், குழந்தைகள் என் எல்லோரும் கதை சொல்லியாக உங்களை சந்திக்க அல்லது உங்களுடன் உரையாட வருகிறார்கள்.

இந்தக் கதை சொல்லிப் பகுதி முழுக்க முழுக்க ஒலி வடிவத்தில் மட்டுமே கிடைக்கும். இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து (Download) அலைபேசி, இசைக் குறுந்தகடுகள், ஐ பாட், போன்றவற்றில் இணைத்து உங்கள் பயணங்களில், உங்கள் ஓய்வு நேரங்களில் அவைகளை கேட்டு மகிழலாம். உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் உங்களோடு பேசிக் கொண்டே வருவது போன்ற ஒரு அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கப் போவதே இந்தக் கதை சொல்லிப் பகுதி. உங்கள் தனிமையை நீங்கள் நேசிக்கும் கதைசொல்லி, எழுத்தாளர், திரைக் கலைஞர்களோடு பகிந்துக் கொள்ளுங்கள். உங்கள் பயணங்கள், ஓய்வு நேரங்கள் சுகமாக....... கேளுங்கள்.. கேளுங்கள்.. இது கூடு இணையதளத்தின் கதை சொல்லிப் பகுதி. கேளுங்கள் ..உங்கள் பால்யத்தை மீட்டெடுங்கள். நண்பர்களிடமும் பகிருங்கள்..