உலக்ஸ்சும் , நானும், ஒரு திங்கட்கிழமையும்


திங்கட்கிழமை என்றாலே சைக்கலாஜிக்கலாக மனம் சுறுசுறுப்பாகி விடுகிறது. வேலை இருக்கோ, இல்லையோ பரபரப்பாக கிளம்ப தோன்றுகிறது. வாரத்தின் முதல் நாள் என்ற செண்டிமெண்ட் காரணமா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன் சென்னையில் நிரந்தர வேலை எதுவும் இல்லை. கடன் தொல்லை வேறு. மனசு சரியில்லாமல் ஊருக்கு போய்விட்டேன். அங்கு எதாவது வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று. ஞாயிறு வழக்கம் போல் அங்கு சபாவில் கச்சேரியை (ஓசித்தண்ணிதான்) முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பும் போது உலக்ஸ் சொன்னான். “மாப்ள ! காலையில் 9 மணிக்கெல்லாம் வந்துடுவேன். ரெடியா இரு. அனாவசியமா வெயிட் பண்ண வைக்காதே.

எங்கடா போகணும்?

அது சஸ்பென்ஸ். காலையில் சொல்றேன். சிகரெட் வேணுமா? காசு இருக்கா?

இல்லைடா ! அரை பாக்கெட் வாங்கி கொடுத்துட்டு போ !

இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. எங்க கூட்டிட்டு போகப்போறான் இந்த பய. எதாவது வேலை விஷயமா இருக்குமோ? அவன் சித்தப்பா ஒரு பெயிண்ட் கம்பெனி வச்சிருக்கார் (சுந்தரம் பெயிண்ட்). அங்க வேலைக்கு சொல்லப் போறானா? ஆனா அவங்களுக்கும், இவனுக்கும் பேச்சு வார்த்தை கிடையாதே! உலக்ஸ் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்லையே! வடுவூர்ல அவன் சொந்தக்காரன் ஒருத்தன் பெட்ரோல் பங்க் வச்சிருக்காரு. சினிமா எடுக்கணும்னு அடிக்கடி சொல்லிகிட்டிருப்பாரு. ஒரு வேளை அங்க இருக்குமோ?

காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து இருந்ததில் நல்ல பேண்ட், சட்டையை அயர்ன் பண்ணி ரெடியாகி விட்டேன். உலக்ஸ்சிடம் பங்சுவாலிட்டி அதிகம். 8.55 க்கு டாண்ணு வந்துவிட்டான். அம்மாவை நோண்டி கொஞ்சம் காசு புடுங்கி கொண்டேன்.

“எங்கப்பா போற? எதாவது வேலை விஷயமா?

ஆமாம்மா ! உலக்ஸ் கூட!

ஏண்டா ..அவனுக்கே வேலை இல்லை. அவங்கப்பா எண்ணேய் வியாபாரத்தைதானே பாக்கிறான்.

அம்மாவிடம் ஆசி வாங்கி கொண்டு வந்தால் வாசலில் உலக்ஸ் டி.வி.எஸ் 50 ஐயை துடைத்துக் கொண்டிருந்தான்.

நீ வந்திருக்கேன்னுதான் மாப்ளை வண்டியை எடுத்தேன். இல்லைன்னா சைக்கிள்தான். உலக்ஸ் கையில் ஒரு பெரிய பிளாஸ்டி கவர் வைத்திருந்தான்.

என்னடா இது?

சொல்றேன். இங்க பிரிச்சு பாக்காதே. அம்மா கிட்ட மதிய சாப்பாட்டுக்கு வரலைன்னு சொல்லிடு. நம்ம வீட்டுலதான் சாப்பாடு.

சரி இப்ப எங்க போறோம்?

உலக்ஸ் பதில் சொல்லாமல் வண்டியை ஸ்டார்ட் பண்ணினான். முரண்டு பிடிக்கும் பொண்டாட்டி போல் இருந்தது அந்த வண்டி. பின்னால் உட்கார்ந்து கொண்டேன். வழி முழுவதும் எதிர்படுபவர்கள் உலக்ஸ்சிற்கு வணக்கம் சொல்லி கொண்டே இருந்தனர். பரவாயில்லை. நம்மாள் கொஞ்சம் பெரியாள்தான் என்ற நினைப்பு எனக்குள் ஓடியது. வண்டியின் இன் ஜீன் சத்தம்தான் ஈனஸ்வரத்தில் இருந்தது. சிவகங்கை பூங்கா வழியாக சீனிவாசபுரத்தில் நுழைந்தான். அட ! இங்க இவன் மாமா ஒருத்தர் டிரான்ஸ்போர்ட் கம்பெனி வைத்திருக்கிறார். மாப்ளை ! அங்கயடா என்றேன். நீ வேற ! அவனுங்க உறவையெல்லாம் அத்து ரொம்ப நாளாச்சு. நீ சும்மா வா.

வண்டி ரெட்டிப்பாளையம் ரோட்டில் திரும்பியது. அங்கு சாராயம் காய்ச்சுவார்கள். நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது அங்கு போனதுண்டு. அங்கு என் கல்லூரி நண்பன் ஒருவன் குடும்பமே சாராயம் காய்ச்சும்.

மாப்ளை ! ராஜதுரை வீட்டுக்கா?

இல்லை. அதுக்கு முன்னாடியே.

இந்த இடத்தில் எனக்கு என்ன வேலை இருக்கப்போகிறது. சரி . இதுக்கு மேல் கேட்டால் கடுப்பாகிவிடுவான். பேசாமல் வேடிக்கை பார்த்தபடி வந்தேன். வடவாறு கரையில் சுடுகாடு ஓரமாய் வண்டியை நிறுத்தினான். நான் ஒரு சாதா கோல்டுபிளேக்கை பற்ற வைத்துக் கொண்டேன்.

இங்கதாண்டா கால் முட்டிவரைக்கும் தண்ணி ஓடும். சரியான இடம் என்றான். சுற்றும் முற்றும் பார்த்தேன். நிறைய சின்னப்பசங்க விளையாடிக் கொண்டிருந்தார்கள். சற்று தள்ளி பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள்.

என்னடா பண்றே?

உலக்ஸ் அந்த பிளாஸ்டிக் கவரை பிரித்தான். உள்ளே வில் மாதிரி எதோ இருந்தது. கூடவே சில சைக்கிள் ஃபோக்ஸ் கம்பிகள். அதன் ஒரு முனை கூராக்கப்பட்டிருந்தது.

நைட்டு ஃபுல்லா உக்கார்ந்து தேய்ச்சேன் மாப்ளை என்றான் உலக்ஸ்.

என்ன பண்ணப் போறடா?

வா சொல்றேன். பேண்டை ஏத்தி விட்டுக்கோ. அவன் வேட்டையை மடித்து கட்டிக்கொண்டான். மெல்ல நீருக்குள் இறங்கினோம்.

அங்க பாரு . எவ்வளவு மீனு. நீந்தாம அப்படியே மிதக்குது பாரு. இந்த மீனுக்கு பேரு ஆரா மீனு மாப்ளை. பாம்பு மாதிரித்தான் இருக்கும். ஆனா விராலோட டேஸ்டா இருக்கும். உலக்ஸ் சொல்லிக் கொண்டே வில்லில் ஒரு அம்பை பொருத்தி துரோணாச்சாரியாரின் நேரடி சிஷ்யன் ரேஞ்சுக்கு குறி பார்த்து எய்தான். அதுவரை இருந்த அத்தனை மீனும் நொடியில் மாயமாகின. உலக்ஸ் சளைக்கவில்லை. எனக்கு டிவியில் ராமாயணம் பார்ப்பது போல் இருந்தது. சரமாரியாக அம்பு விட்ட வண்ணம் இருந்தான். ஆனால் மீன் தான் விழவில்லை.

மணி ! நீ டிரை பண்ணு என்றான். நான் என்ன ஏகலைவனா? எனக்கும் மீன் பெப்பே என்றது. ஏண்டா ? இதுக்கா என்னைய கூட்டிட்டு வந்த?

இல்லை மாப்ளை. உனக்கு மீன்னா ரொம்ப பிரியம். அதான் என் கையால பிடிச்சு சமைச்சு போடலாம்னு பார்த்தேன். வக்காளி ! மாட்டுதா பாரேன். அன்னிக்கு அவன் கரெக்டா பொத்து பொத்துன்னு போட்டானே. வேற ஏதோ டிரிக் இருக்குடா மாப்ளை !

நான் இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு சுற்றிலும் பார்த்தேன். அங்கு ஒரு சின்னப்பையன் அம்பு விட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் பரவாயில்லை. ஆனால் நான் ? கல்யாணம் ஆகி ஒரு பிள்ளையும் பெத்தபிறகு ? உலக்ஸ் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. வா அங்க போவோம். இருவரும் அவன் அருகில் போனோம். சுமார் ஒரு 20 மீன்களை அடித்து விட்டான் அவன். இலை, கிளை எதுவும் தெரியவில்லை. இலக்கு மட்டுமே தெரிகிறது என்ற அர்ஜீனன் போல் ஒரு அம்பு அடி கூட வீணாகவில்லை. உலக்ஸ் அந்த பையனை நெருங்கி சூட்சுமத்தை கேட்டான். ஆனால் அவன் அதை மட்டும் சொல்ல மாட்டேன். வேணுமின்னா உங்களுக்கு மீன் அடிச்சு தரேன்னு சொல்லிவிட்டான்.

மாப்ளை நீதான் கில்லாடியாச்சே! அவன் அடிக்கிறதை கரெக்ட்டா நோட் பண்ணிக்கோ! ஆனால் அந்தப் பையன் அதற்கெல்லாம் சந்தர்ப்பமே கொடுக்கவில்லை. மின்னல் வேகம். கணிக்கவே முடியவில்லை.அவன் அடித்து கொடுத்த 25 ஆரா மீன்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றி கொண்டோம். சிறுவன் தட்சணையாக வில்லையும், அம்பையும் கேட்டான். உலக்ஸ் என்னை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தான். நான் அதை அந்த பையனிடம் கொடு என்றேன். ஒரு பத்து ரூபாயையும் (மீதி பத்து இருந்தது) கொடுத்தேன்.

பள்ளிக்கூடம் போகலியாப்பா ?

நான் படிப்பை நிறுத்திட்டேன் சார்!

ஏம்பா உங்கப்பா என்ன செய்றாரு?

சாராயம் காச்சிகிட்டிருந்தாரு. இப்பதான் ஜெயில்ல போட்டாங்க!

உலக்ஸ் வீடு வரும்வரை நான் எதுவும் பேசவில்லை. காலையில் அயர்ன்காரன் கொஞ்சம் லேட் பண்ணதுக்கு அவனை கண்டமேனிக்கு ஏறியது நியாபகம் வந்தது.

உலக்ஸின் மனைவிக்கு ஆச்சர்யம். (மிக வெள்ளந்தியான கிராமத்து பெண்).என்னங்க இவ்வளவு மீனு! நீங்களா அடிச்சிங்க என்றாள்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை. உலக்ஸ் சட்டென்று எங்கடி! நமக்கு கைவரவேயில்லை. மணிதான் சட்டு சட்டுன்னு போட்டு தாக்கிட்டான். நான் முன்னமே சொல்லியிருக்கேன் இல்லை. மணி மெட்ராசில் இருக்காண்டி. அவனுக்கு தெரியாததே இல்லை. அப்படி தெரியலைன்னாலும் டக்குன்னு கத்துக்குவான். “மாப்ளை நீ பெரியாள்டா” என்றான்..

சாப்பாட்டுக்கு முன்னால் லைட்டா கட்டிங் போடும்போது கேட்டேன். எதுக்குடா அனாவசியமா பொய் சொல்றே?

இல்லை. மாப்ளை. எனக்குத்தான் வரலை. உனக்கும் அடிக்க வரலைங்கிறதை என்னால ஏத்துக்கவே முடியலை.

என்னடா பைத்தியக்காரத்தனமா இருக்கு? எனக்கு எல்லாம் தெரியுமா என்ன?

பள்ளிக்கூடத்திலேர்ந்து உனக்கு தெரியாதது எதுவுமே இல்லைங்கிற நினைப்புத்தான் எனக்கு. அதான். என்ன ஒரு ரெண்டு நாள் போனா உனக்கு சூப்பரா அடிக்க வந்துடும். நாளைக்கு காலைலே கரெக்டா 9 மணிக்கெல்லாம் ரெடியா இரு.

எனக்கு சிரிப்பும் வந்தது. கூடவே அந்த சிறுவனின் முகமும்!!

மானிட்டர் பக்கங்கள்.........08/02/10


ஜனவரி முப்பதாம் தேதி தீண்டாமை ஒழிப்பு உறுதி எடுக்க நிறைய அமைச்சர்கள் ஆப்செண்ட். எல்லோரும் மதுரைக்கு அண்ணன் பிறந்த நாளுக்கு காவடி எடுக்க போய் விட்டார்கள். அவர்களை முதல்வர் கடுமையாக கண்டித்தாராம். மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி என்பது போல் போகலேன்னா அண்ணன் சாத்துவாரு!

சென்ற வாரம் டில்லியில் முதலமைச்சர்கள் மாநாடு நடைப்பெற்றது. விலைவாசி உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை ஆலோசிப்பதற்காக பிரதமர் தலைமையில் நடந்த முக்கியமான கூட்டம். தமிழக துனை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் கலந்து கொண்டார். நல்ல விஷயம்தான். அவர்தான் எதிர்காலம் என்றான பின் அவருக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.(என் ஓட்டு ஸ்டாலினுக்குத்தான்). ஆனால் ஏன் தலைவர் போகவில்லை.?மருத்துவ காரணங்களும் சொல்லப்பட்டாலும், முக்கிய காரணம் திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாதான்.எத்தனை ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம். புகழ்மாலைகள். நடன நிகழச்சிகள்.(மானாட...மார்பாட..) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புரசைவாக்கத்தில் ஒரு வீட்டில் அழகிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பணம் வாங்கி கொண்டு அவுத்து போட்டு விட்டு ஆடினார்கள். போலிஸ் ரெய்டு. அதில் ஒரு பெண் குமுறலுடன் சொன்னது. “இதையேத்தான் நேரு ஸ்டேடியத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முன் பெரிய நடிகைகள் செய்கிறார்கள். அங்கு இல்லாத ஆபாசம் இங்க மட்டும் எப்படி வந்தது?( குமுதம் ரிப்போர்ட்டர்). நியாயமான கேள்விதான். ஆனால் யார் கேட்பது ? இன்னும் ரம்பாவின் திருமணம் இருக்கிறது. ஷகிலாவின் திருமணம் தே.மு.தி.க. பிரமுகருடன் என்பதால் அங்கு போக வாய்ப்பில்லை. அநேகமாக ஒரு ஆயிரம் பாராட்டு விழாக்களில் தலைவர் கலந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். இதற்கே ஒரு பாராட்டு விழா எடுக்கலாம். ஜெகத்ரட்சகன் ஏன் இருக்கிறார்?


சன் பிக்சர்ஸ், கிளவுட் நைன், ரெட் ஜெயண்ட் இவர்களை தொடர்ந்து இன்னுமொரு கழக கம்பெனியும் கலை சேவைக்கு தயாராகி விட்டது. முதல்வரின் மற்றொரு மகன் மு.க. தமிழரசும் களத்தில் குதித்து விட்டார். அவர் எடுக்கும் சொந்த படத்தில் அவர் மகன் நாயகனால அறிமுகம் ஆகிறார். பெயர் ஏதோ ஒரு நிதி!! ஆமாம் ! நிதி என்று பெயர் இல்லையென்றால் திருவாரூர் புவனேஸ்வரி (இது சாமிங்க..) அம்மன் கண்ணை குத்திடுமோ ?


அண்மையில் காஞ்சிபுரம் போயிருந்தேன். பச்சையப்பா சில்க்ஸ்க்கு புது விளம்பரம் படம் எடுக்கிறேன். அது பற்றி விவாதிக்க. அக்கவுண்ட் செக்‌ஷனலில்தான் முதலாளிகள் இருப்பார்கள். மிக பரபரப்பாக இருக்கும். புது நபர் உள்ளே வந்தால் யார் முதலாளி, தொழிலாளி என்று சட்டென்று வித்தியாசம் தெரியாது. தரையில் உட்கார்ந்து வேலைப் பார்ப்பார்கள். நான் அங்கு ஒரு மூன்று மணி நேரம் இருந்தேன். பார்கோடு பிரிண்ட் செய்தபடி ஒரு பெண் அழுது கொண்டே இருந்தாள். கண்களில் தாரையாய் கண்ணீர். அவளை யாரும் சட்டை செய்யவில்லை. அவ்வப்போது ஒரு முதலாளி மட்டும் “சும்மா இருக்க மாட்டியா நீ! இப்ப அழுகையை நிப்பாட்டறியா ,இல்லையா ? என்று அதட்டி கொண்டேயிருந்தார். எனக்கு வித்தியாசமாக தெரியவே “என்ன சார் விஷயம் “ என்று கேட்டேன். ஒன்னுமில்லை. இதுக்கு கல்யாணம். இன்னியோட வேலையை விட்டு போகுது. அதான்! அழுகாச்சி என்றார். பின் அவளிடம் திரும்பி “எங்க போற நீ! தோ இருக்கு வந்தவாசி. எப்ப வேணா இங்க வரலாம். இல்லை நானும் அண்ணியும் அங்க வரோம். கண்ணை துடை முதல்ல! அவர் மனைவியும் சேர்ந்து தேற்றி பட்டுப்புடவை, நகை, பணம் என்று கொடுத்து அனுப்பும்போது அந்த பெண் தாய் வீட்டிலிருந்து பிரிந்து போவது போல் கதறினாள். எவ்வளவு பெரிய கோடிஸ்வரர்கள் ! ஆனால் அவர்களின் தன்மைக்கு மதிப்பேயில்லை !

”35 ஆண்டுகளாக குடித்துக் கொண்டிருப்பவன் என்ற தகுதி எனக்கு உண்டு. ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அரிசி மதுவான சாக்கே குடித்ததுண்டு. சீனாவின் மவுத்தாய் பருகியதுண்டு. தர்மபுரி மாவட்டம் மூக்கனூர்பட்டியில் பனையில் இறக்கிய ஒரு மரத்து கள்ளை குடித்திருக்கிறேன். உடுமலையிலிருந்து மூணாறு போகும் வழியில் பதமான தென்னங்கள் அருந்தியிருக்கிறேன். மத்திய பிரதேச மாநில கிராமமொன்றில் ஒரு வகை ஈச்சங்கள் கிடைத்திருக்கிறது. மராட்டியத்தில் சந்த்ரி, மொசாம்பி ஆகிய வகைகளையும் சுவைத்திருக்கிறேன். கோவாவில் முந்திரியில் தயாரிக்கும் பென்னி என்கிற ஒருவகை சாராயம் குடித்திருக்கிறேன். ஸ்மர்னாஃப் வோட்காவும் ,பகார்டி ஒயிட் ரம்மும் தெரியும். உலகில் தயராகும் 60 க்கும் மேற்பட்ட பீர் வகைகளீல் பெரும்பாலானவற்றை அருந்தியிருக்கிறேன்.

இவற்றை எல்லாம் சட்டையில் கோர்த்துக் கொள்ளும் பதக்கங்களாக கருதி சொல்லவில்லை.எதிர் வரும் காலத்தில் குடியை விட்டொழிக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. ஒரு படைப்பாளி நேர்மையுடன் தன்னை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்”

இது நான் சொன்னது இல்லிங்கோ! எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் சொன்னது. தமிழினி வெளியிட்டிருக்கும் “குடிபோதை : புனைவுகள் தெளிவுகள்” என்கிற புத்தகத்தை முழுமையாக குடித்து.. சாரி படித்து முடித்தேன். மிக அருமையான தொகுப்பு.சங்ககாலம் முதல் எப்படி குடி பேச,போற்ற, தூற்றப்பட்டு வருகிறது என்பதை அருமையாக தொகுத்திருக்கிறார்கள். அதை நியாயபடுத்தவும் இல்லை. தூக்கி வீசவும் இல்லை.



டிஸ்கி கவுஜை :


திடீர் பெருமழையில்
நனையத்தான் ஆசை!
தும்மலும், காய்ச்சலும்
பொருட்டேயில்லை.
அந்த சுதந்திரத்தையும்
பறித்துக் கொண்டது
பாக்கெட்டில் இருந்த
புது அலைபேசி!

அர்த்தமில்லாத கதைகள்....4


இந்த வருசம் அய்யாவுக்கு 87 முடியுது. சிறப்பா கொண்டாடிடணும்.

செஞ்சிடலாம். ஆனா அதுக்கப்புறம் அவரை வீட்டோட இருக்க சொல்லுங்க. இந்த நிலம், நீச்சு, தோட்டம் , தொறவு எல்லாத்தையும் என் கிட்ட ஒப்படைக்க சொல்லிடுங்க.

அதைத்தானே அவரும் சொல்லி கிட்டிருக்காரு. பாவம். போதும் இத்தனை காலம் ஓடா ஒழைச்சு குடும்பங்களை ஏதோ கரையேத்திட்டாரு. இனிமேலாவது அக்கடான்னு கோயில் குளம்னு இருக்கட்டும்.

சரி. பெரியவர் என்ன சொல்றாரு?

அவர் என்ன சொல்றது! சரின்னுதான் சொல்வாரு.

இல்லம்மா . எனக்கென்னவோ அண்ணன் இதுக்கு ஒத்துக்குவாருன்னு தோணலை. நீங்க வேணா பாருங்க!

எலேய் ! கிடா வெட்டியாச்சா? மாலை எங்க? அண்ணன் ரெடியாயிடுவாரு.

அண்ணே ! எங்களுக்கு எல்லாமே நீங்கதான். உங்களை நம்பித்தான் இருக்கோம்.

என்ன தம்பி? ஊர் பூரா ஒரே பேச்சா இருக்கு.

என்ன பேசிக்கிறாங்க?

என்ன அண்ணே! தெரியாத மாதிரி கேக்கறீங்க? பெரியவர் காசி, ராமேஸ்வரம்னு கிளம்பறாராம். தம்பி கிட்ட எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டு.

எல்லோருக்கும் சொல்றேன் கேட்டுக்கங்க. டேய்! நம்ம தலையாரியை கூப்பிட்டு ஊருக்கு தண்டோரா போட சொல்லு. பெரியவர் எங்கயும் போகலை. அடுத்த வருஷமும் அவர்தான் ஊர் நாட்டாமை.

என்னங்க இது? அண்ணன் இப்படி சொல்லிட்டாரு?

பாவம்! ஐயா பாடுதான் திண்டாட்டம். என்ன செய்யப்போறாரு?

அவருக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? எத்தனை சமாளிச்சிருக்காரு! பாரேன். ஊதி தள்ளிடுவாரு!


ஏம்மா! அப்பா சொத்துல பொம்பளை பிள்ளைகளுக்கும் சம பங்கு உண்டுன்னு ஐயா முன்ன நாட்டாமையா இருக்கிறப்ப சொன்னாருல்ல?

ஆமாம்! அதுக்கு என்ன இப்போ?

எனக்கு என்ன கிடைக்கும்னு தெரியலையே?

மதிய சாப்பாட்டுக்கு இங்கதான் வருவாரு . நீயே கேளு!

-------------------------------------------------------------------------------------------------

அக்கா! சீமைக்கு போனிங்களே? பெரியக்காவை பாத்தீங்களா? உங்களை கண்டுகிட்டாங்களா?

இல்லை தங்கச்சி. திரும்பி கூட பார்க்கலையே!தலையால தண்ணி குடிச்சு பார்த்தேனே. ம்ஹீம்.. அசரலை.

பின்ன ! அசலூராயிருந்தாலும் உப்பு போட்டுத்தானே ரொட்டி சாப்பிடுது. பத்தாததுக்கு பெரியவரோட ஆளுங்க மூட்டி விட்டு கிட்டே இருக்காங்க!!

அன்னிக்கு விழுப்புரம் காது குத்து திருவிழாவில வச்சு நீங்க அவங்களை ஏசாம இருந்தா, இந்நேரம் ராணி மாதிரி இருந்திருக்கலாம். அப்புறமாவது விட்டீங்களா? பட்டப்பேரை வச்சு கிண்டலடிச்சீங்க. மறந்துடுவாங்களா என்ன?

ஆமாம். அப்பல்லாம் நீயும் கூடத்தானே இருந்த. எடுத்து சொல்ல வேண்டியதுதானே.

எங்கக்கா உங்களுக்கு யார் சொல்றது? அதான் நீங்க ஒருக்கா முடிவு பண்ணிட்டா, உங்க பேச்சை நீங்களே கேக்க மாட்டீங்களே!

சரி. பார்ப்போம். எதுக்கும் இந்த விருதாசலத்து பங்காளி மேல ஒரு கண்ணு இருக்கட்டும்.

ஆமாம். அந்தாள் வலிய வந்தப்ப அவரையும்தான் ஏசி விட்டீங்க. கள்ளு குடிக்கிறான், உளறான்னு !

அடியேய் ! இப்ப அந்தாளுக்கும் வேற போக்கிடம் இல்லை. இங்கனத்தான் வரணும். வருவாரு பாரு. வண்டியை பூட்ட சொல்லு. கிளம்புவோம்.

எங்கக்கா?

தோப்புக்குத்தான். போய் ஒரு ஆறு மாசம் தூக்கத்தை போட்டுட்டு வருவோம்.

எது எப்படியோ? எங்க காட்டுல மழை பெய்யதை யாரும் தடுக்க முடியாதுல்ல!!




மனோஜ்......



இவ்வளவு தூரம் வந்தாச்சு. பழைய நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க நினைத்தேன். கிட்ட தட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. யார் யார் எங்கெங்கோ? பைக்கை திருப்பினேன்.

ஆதம்பாக்கத்தில் என் பாட்டி வீடு இருந்தது. அரை மற்றும் முழு வருட விடுமுறைக்கு நான் தவறாமல் ஆஜர். காலையில் டிபனை சாப்பிட்டு விட்டு கிளம்பினால் வெயில் முழுவதும் என் தலையில்தான். தாத்தாதான் பாவம். குடையை பிடித்துக் கொண்டு தேடி வந்து விடுவார். போய் மீண்டும் சாப்பிட்டு விட்டு வந்தால் இருட்டும் வரை கும்மாளம்தான்.

அநேகமாக எல்லா இடங்களிலும் இப்போது காங்கிரீட் முளைத்திருந்தது. காலி இடமே இல்லை. பசங்கதான் பாவம். காம்பவுண்டுக்குள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தனர். காவ்ரி ( சிவா), பேடி (சங்கர்) இவர்களை மட்டும் டி.நகரில் ஒரு முறை பார்த்தேன். அவர்கள் வீடு இருக்கும் இடத்தை இப்போது கண்டு பிடிக்க முடியவில்லை. எனக்கு சட்டென்று மனோஜ் நியாபகம் வந்தது. அவன் வீட்டை நிச்சயம் கண்டு பிடித்து விடலாம். அப்பவே பங்களா டைப்பில் கட்டப்பட்டது. நினைவில் வீட்டு அடையாளத்தை கொண்டுவர முயற்சித்தேன்.

காலையில் முதல் செஷன் அநேகமாக கில்லி தாண்டில் ஆரம்பிக்கும். மனோஜ் அதில் கில்லாடி. டபுள்ஸ் மன்னன் என்று பேர் வாங்கியவன். நான் இதற்காகவே வெறித்தனமாக பிராக்டிஸ் செய்தேன். தேர்ந்த வித்தைக்காரனைப் போல் கில்லியின் முனையை தட்டி, அந்தரத்தில் துள்ள விட்டு தாண்டால் மூன்று முறை தட்டி பின் அதை தூக்கி அடிப்பதில் நிபுணனாகி விட்டேன். டிரிபிள்ஸ். சில சமயம் போர்பிள்ஸ் கூட. மனோஜும் சில சமயம் டிரிபிள்ஸ் அடிப்பான். ஆனால் அன்று நான் விளையாட போயிருக்க மாட்டேன். எனக்கு எதிராக போர்பிள்ஸ் அல்லது அதற்கும் மேல் அடிக்க வேண்டும் என்பதே அவன் லட்சியமாக இருந்தது.

இன்று மனோஜ் வீட்டை கண்டுபிடிக்க எனக்கு நினைவில் இருந்த ஒரே அடையாளம் புற்றுக்கோயில். நிச்சயம் அதை இடித்திருக்க மாட்டார்கள். சொல்லப் போனால் இன்னும் கொஞ்சம் பெரிசாக்கி இருக்கலாம். ஒரு கடையில் வண்டியை நிறுத்தி சிகரெட் வாங்கினேன். அவரிடம் புற்றுக் கோயிலை விசாரித்தேன். இன்னும் அது இருக்கிறது.

மாலைநேர செஷன் கிரிக்கெட். பைத்தியம் பிடித்தாற் போல் விளையாடி தீர்ப்போம். அதில் மனோஜ் ரொம்ப ஸ்டிராங். அணி பிரித்த பின் அவன் தான் டாஸ் போடுவான். கொடுமை என்னவென்றால், என்ன விழுந்தது என்பதையும் அவன் தான் சொல்வான். நாங்க பேட்டிங் என்பான். யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. அதற்கு ஒரு காரணம் இருந்தது.அவனிடம் மட்டுமே வில்ஸ் ஆயில் பேட்டும், பேடும் இருந்தது. ஒரு ஜோடி கார்க் பாலும் வைத்திருந்தான். அவன் தான் முதலில் ஆடுவான். மிடில் ஸ்டம்ப்புக்கு நேராகவே அவன் காலில் வாங்கினாலும் எல்.பி.டபிள்யூ கிடையாது. தப்பி தவறி கேட்ச் பிடித்து விட்டால் அம்பயர் (பேட்டிங் சைடு ஆசாமிதான்) நோ பால் சிக்னல் காட்டி விடுவார். இத்தனையையும் சகித்துக் கொண்டுதான் ஆடியாக வேண்டும் . இல்லையென்றால் மனோஜ் பேட்டை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு போய் விடுவான். எங்களிடம் ஆசாரி எதோ ஒரு பலகையில் செய்த பேட்தான் இருந்தது. அது ரன்னருக்கு மட்டும்தான் உபயோகப்படும். ஓங்கி அடித்தால் கையில் ஷாக் அடிக்கும். இன்னொரு விஷயம். மனோஜ் ஆடும் போது பிளேன் போனால் ஆட்டத்தை நிறுத்தி விடுவான். அதையே மறையும்வரை பார்த்துக் கொண்டிருப்பான். கில்லியில் என் எதிரில் போர்பிள்ஸ் அடிக்கும் லட்சியத்துக்கு அடுத்தது பைலட் ஆவதுதான் அவன் லட்சியம்.

மனோஜ் வீட்டை கண்டு பிடித்து விட்டேன். சற்று நவீனமாக புதுப்பிக்கப் பட்டிருந்தது. மற்றபடி பெரிய மாற்றங்களில்லை. கேட்டில் காலிங்பெல் இருந்தது. அடித்தேன். ஒரு பெண் வந்தாள்.

மனோஜ் ?

இந்த வீடுதான். நீங்க?

நான் மணி. அவரோட பழைய பிரெண்டு.

நான் பார்த்ததில்லை. சாரி. இப்பதான் வெளியில் போனார். ஒன் அவர்ல வந்துவார். எதாவது சொல்லனுமா?

இல்லை. சும்மா இந்த பக்கம் வந்தேன். என் கார்டை கொடுங்க. போன் பண்ண சொல்லுங்க!

எனக்கு எனோ ஏமாற்றமாயிருந்தது. ஒயின் ஷாப்பை கண்டுபிடித்து சில்லென்று ஒரு பியர் ஆர்டர் செய்து விட்டு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். போன் அடித்தது.

திஸ் ஈஸ் மனோஜ்? விச் மணி?

மனோஜ் ! நியாபகம் இல்லையா? டிரிபிள்ஸ் மன்னன். கில்லியில். மறந்துட்டியா?

சாரி. ஐ டோண்ட் ரிமெம்பர். வேர் ஆர் யூ நவ்?

பைக்கை எடுத்து கொண்டு மனோஜ் வீட்டை அடைந்தேன். மீண்டும் காலிங்பெல். மனோஜ் வந்தான். லேசாக முன் வழுக்கை! கொஞ்சம் தொப்பை.

யேய்! ஐ ஹேவ் சீன் யூ மேன்! என்றபடி அருகில் வந்து “ மணிகண்டன் தானே”

அப்பா ! நல்லவேளை. விரட்டி விட்டுடுவியோன்னு நினைச்சேன்.

கம் இன் மணி என்று உள்ளே அழைத்து சென்று மனைவியிடம் அறிமுகம் எல்லாம் முடிந்து மாடிக்கு போனோம். பைலட் ஆபிசராக இருக்கிறானாம். குழந்தை இல்லை. மனைவி எல்லா கோயில்களுக்கும் போயிட்டு வரலாம்னு சொன்னதால் லீவில் இருக்கிறானாம். குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை என்னிடம் சாமர்த்தியமாக மறைக்க முயற்சித்தான்.

மனோஜ் ! தஞ்சாவூர் பக்கத்தில் திருகருக்காவூர்ல ஒரு கோயில் இருக்கு. ரொம்ப சக்தின்னு சொல்றாங்க. ஒரு டிரிப் அடியேன்.

பார்க்கலாம். ஹவ் அபவுட் எ டிரிங்க்? பதிலுக்கு காத்திராமல் இரண்டு கிளாசில் ஊற்றிக் கொண்டு வந்தான்.(நம்மளும் வேணாம்னு சொல்லப்போறதிலையே)

சிப்பிக் கொண்டு எல்லோரையும் பற்றி விசாரித்தேன்.

மணியாகுது. நான் கிளம்பறேன் மனோஜ் என்றேன்.

கீழிறங்கி வந்தோம். வெயிட் மணி! என்று உள்ளே போனவன் ஒரு பேட்டையும்,பாலையும் கொண்டு வந்தான்.

கில்லி தாண்டெல்லாம் எங்க இருக்குன்னு தெரியலை. வா! கொஞ்சம் நேரம் ஆடலாம் என்றான்.

பளிரென்று நிலா வெளிச்சம் இருந்தது. போர்ட்டிகோ விளைக்கையெல்லாம் போட்டு விட்டான்.

சரி! டாஸ் என்றேன்.

அந்த கதையெல்லாம் கிடையாது. வழக்கம் போல்தான். நான் தான் பேட்டிங். ஒரு ரெண்டு ஓவர் போடு. ஓசி காஜ் அடிச்சு ரொம்ப நாளாச்சு!

எனக்கு சந்தோஷமாக இருந்தது. மனோஜ் மாறவேயில்லை !

நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....2



இணையத்தில் எழுத தீவிர வாசிப்பு தேவையா? நிச்சயம் தேவைதான். அப்போதுதான் எழுத்தை உள்வாங்கி எழுத முடியும் என்பது சிலர் கருத்து. உலகின் முதல் சிறுகதையையோ அல்லது நாவலையோ எழுதியவன் எந்த வாசிப்பின் பின் புலத்தில் அதை எழுதியிருக்கலாம். நிச்சயம் அனுபவம் சார்ந்துதான் இருக்க வேண்டும்.

எல்லோர் வாழ்க்கையிலும் நிகழ்வுகள் உண்டு. சோகமோ, சந்தோஷமோ! அதை வெளிப்படுத்துகிறவன் எழுத்தில் இருக்கும் வார்த்தைகளின் வலிமை அளவிட முடியாதது. உதாரணம் இந்த வார நட்சத்திரம் சிவராமனின் இந்தபதிவு. வாசித்து முடித்தவுடன் பத்து நிமிடங்கள் செயலற்று போய் உட்கார்ந்து விட்டேன். பின்பு அவரை அலைபேசியில் அழைத்து பேசியதும்தான் சற்று ஆறுதலாயிருந்தது. காலம் மாறும் சிவராமன். கவலை வேண்டாம். காத்திருப்போம்!

உரையாடல் அமைப்பின் சிறுகதை போட்டிக்கு நான் ஒரு சிறுகதைஎழுதியிருந்தேன். அது என் பெரியப்பாவின் வாழ்க்கையை ஒட்டி எழுதப்பட்டது. பெரியப்பா மகா கோபக்காரர். முரடன். மனைவியை மதிக்காதவர். உணவு பறிமாறும்போது கரண்டி சத்தம் பாத்திரத்தில் கேட்டாலே தட்டை முகத்தில் வீசி விட்டு எழுந்து போய் விடுவார். பெரியம்மா பெயர் தங்கம். பெயர் மட்டுமல்ல ! குணமும்தான். சற்றும் முகம் சுளிக்காமல் இருப்பார். பிறந்த வீட்டிற்கு தன் கஷ்டத்தை அவர் சொன்னதேயில்லை.

ஒரு தீபாவளிக்கு முதல் நாள். பெரியப்பா சீக்கிரம் வீடு திரும்பினார். மனைவியை புடவை மாற்று. இன்னிக்கு வெளியில் போகலாம் என்றார். பெரியம்மாவால் நம்பவேமுடியவில்லை. தான் வணங்கிய தெய்வங்கள் தன்னை கைவிடவில்லை என்றே அவர் நினைத்திருக்க கூடும். அவர்களுக்கு குழந்தையில்லை. என் மீது பாசம் அதிகம். ஆனால் அவர்கள் அப்போது பங்களூரிலிருந்தார்கள். நான் தஞ்சாவூரில்.

முதலில் துணிக்கடை. நல்ல பட்டுப்புடவை. அப்புறம் ஒரு தங்கசங்கிலி. இறுதியில் எம்.டி.ஆரில் இரவு உணவு. நேரமாகி விட்டதாலும், விடிந்தால் தீபாவளி என்பதாலும் சினிமாவிற்கு போகவில்லையாம்.

மறுநாள் பொழுது விடிந்தது. பெரியம்மா எழுந்திருக்கவேயில்லை. முகத்தில் சிரிப்பும், திருப்தியும் உறைந்திருக்க, உயிரை விட்டிருந்தாள்.

அதன் பின் கிட்டதட்ட 20 ஆண்டுகள் பெரியப்பா நாய் படாத பாடு பட்டார். யாரையும் நம்பமாட்டார். தனியே வாழ்ந்தார். அவர் பிணத்தை எடுக்க கூட அவர் சேர்த்து வைத்திருந்த பணம் உதவவில்லை. இன்னும் சுந்தரம் பைனான்சில் கிடக்கிறது.

நான் என் சிறுகதையில் பெரியப்பாவை சாகடித்தேன். பெரியம்மா பழியை தீர்த்து கொண்டதாக முடித்தேன். ஆனால் ஒரு நல்ல சிறந்த எழுத்தாளன் (சிவராமன், ரமேஷ்வைத்யா, பா.ராஜாராம், ஜியோவ்ராம்சுந்தர்,நர்சிம், கேபிள்சங்கர், வாசு போன்றவர்கள்) அந்த கருவை இன்னும் செம்மையாக எழுதியிருப்பார்கள். இந்த இடத்தில்தான் தீவிர இலக்கிய பரிச்சயம் கை கொடுக்கும். ரவிஷங்கர் சார் அந்த கதைக்கு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். கொஞ்சம் ட்யூன் பண்ணியிருந்தால் தி.ஜாவின் டச் கிடைத்திருக்கும் என்று. அந்த மட்டில் திருப்தி.

நண்பர் முரளிக்கண்ணனனுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலில் ஒரு தகவல் சொன்னார். அது அவர் வீட்டு பாரம்பரிய நகை ஒன்றை அடமானம் வைக்க போனபோது நடந்த கதை. நல்ல ஜீவனுள்ள மேட்டர். முரளியிடம் சொன்னேன். இதை கதையாக எழுதுங்கள் என்று. ஆனால் அப்போது நிலைமை கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது. முரளி! இப்போது எழுதலாமே! உங்கள் நடையில் அது ஆகச்சிறந்த சிறுகதையாக நிச்சயம் வரும்.

சமீபத்தில் பா.ராஜாராமுடன் அலைபேசி கொண்டிருந்தபோது ஒரு சம்பவத்தை விவரித்தேன்(மப்பில்தான்). மணிஜி! இதை நீங்க எழுதுங்க.இல்லை. நான் எழுதிடுவேன் என்றார். நீங்களே எழுதுங்க மக்கா! உங்கள் எழுத்தில் அதை வாசிக்க எனக்கு ஆசை!!

புத்தக கண்காட்சியில் வாங்கிய “நெற்குஞ்சம்” என்கிற புத்தகத்தை மெதுவாக படித்து முடித்து விட்டேன். சில வரிகளை அல்லது பத்திகளை இரண்டு முறை வாசித்தேன். புனைவா? அனுபவமா? என்று திகைக்க வைக்கும் வகையில் எழுதியிருந்தார் கவிஞர் தேன்மொழி. அவரின் முதல் சிறுகதை தொகுப்பு நெற்குஞ்சம். உரையாடல் கூட கவிதை நடையில்தான். தானே சொல்வதை போல் எழுதப்பட்டிருந்த விஷயங்களின் கனம் இன்னும் அழுத்திக் கொண்டிருக்கிறது. தஞ்சையில் அரசுப் பணியில் இருப்பதாக அகநாழிகை வாசு சொன்னார். ஊருக்கு போகும்போது நிச்சயம் ஒரு சல்யூட்டை போட்டு விட்டு வரவேண்டும். தலித் இலக்கிய வகையில் எழுதப்பட்டிருந்தாலும் மண்ணின் மணம் இன்னும் கமழ்ந்து கொண்டிருக்கிறது. எளிமையும், கடுமையும் சரிவிகிதத்தில் கலந்த வார்த்தைகள்.

அதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்(சில)

“என் மீதான் உன் பிரியங்கள் பொய் என்பதை எந்த நிலையிலும் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. மீண்டும், மீண்டும் அக்காக் குருவி போல, உன் பிரியம் நிஜம் எனும் குரல் எனக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. என்னை ஏன் பிரிந்தாய் என என்னால் கேட்க முடியாது. நாம் பிரிந்ததாக நான் உணர்ந்ததேயில்லை. ஏன் நீ திரும்ப வரவில்லை என்று மட்டுமே எனக்குள் கேட்டுக் கொண்டேன். “

டிஸ்கி : லத்தீன், தென் அமெரிக்கா, பிரேசில் மற்றும் பொலிவிய எழுத்தாளர்களை வாசிக்கலாம் என்று முடிவெடுத்தாகி விட்டது. ஆனால் முதலில் அந்த எழுத்தாளர்களின் பெயரை மட்டும் வாசிக்க கற்றுக் கொள்ள முயற்சி!! ஒரு எழவும் வாயில் நுழையவில்லை. சாரு இந்த விஷயத்தில் கில்லாடி. மனுஷனுக்கு எல்லோர் பெயரும் அத்துப்படி.

டிஸ்கி:2- மார்க்கெட்டிங்கில் 3 c formula என்று ஒன்று உண்டு. அதாவது convince or confuse or confess . எழுத்துக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னும் ஒரு”c" யும் சேர்ந்து. "creativity"

சைகாலஜி


சூர்யா அம்மா இப்பல்லாம் என் கிட்ட முகம் கொடுத்து பேசறதேயில்லை.

ஏன் ? நீ எதாவது சண்டை போட்டியா?

இல்லைங்க. திடீர்னு மூஞ்சி காட்டறாங்க. போடி சரிதான்னு விட்டுட்டேன். நன்றி கெட்டவங்க. எவ்வளவு செஞ்சிருக்கேன்!!

எதாவது காரணம் இருக்கும். நாமெல்லாம் சூழ்நிலைக்கு ஏத்தா மாதிரிதான் ரியாக்ட் பண்றோம். எத்தனை நாளா இந்த பிரச்சனை?

கரெக்டா சொல்லனும்னா, நம்ம வீட்டுக்கு வாஷிங்மெஷின் என்னிக்கு வந்துச்சு? அன்னிலேர்ந்துதான்.

அப்படியே இன்னொரு மேட்டர்.

என்ன?

உங்க அண்ணன் பொண்டாட்டி வந்தாங்க. ரொம்பத்தான் திமிரு ஏறிப் போச்சு. எல்லாம் உங்களாலத்தான். நீங்க என்னை விட்டு கொடுக்காம பேசினா இப்படியெல்லாம் நடக்குமா?

என்ன சொன்னாங்க அண்ணி? அதை மட்டும் சொல்லு!

புதுசா வைரத்தோடு வாங்கினாங்களாம். அதை காட்டி என்னை வெறுப்பேத்திட்டு போகத்தான் வந்தாங்க. ஆனால் கேட்டா உன் கிட்ட காட்டி எப்படியிருக்குன்னு கேக்கத்தான் வந்தேன்னு புளுகு!


சாலையில் பெருங்கூட்டம்!
வகுந்து முன்னேறினேன்.
பைக்கிலிருந்து கீழே
விழுந்து கிடந்தான் அவன்.
யாரோ தண்ணீர்
கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
“நல்லவேளை”
பெரிசா ஒன்னும் இல்லை!
வெளியில் வந்த எனக்குத்தான்
ஏனோ ஏமாற்றமாயிருந்தது!!

மானிட்டர் பக்கங்கள் ------ 01/02/2010


ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சனை உக்கிரம் அடைந்திருக்கிறது. பிரி என்றும், பிரிக்காதே என்றும் குழப்பமான போராட்டங்கள் மத்திய அரசை உலுக்கி கொண்டிருக்கிறது. கொஞ்சம் தமிழ்நாட்டு வரலாற்றை நினைவு கூர்வோம். 60 களில் மொழிப் போராட்டம் ஆரம்பித்தது. இந்திக்கு எதிராக மாணவர்களை இன்றும் உள்ள அரசியல் தலைவர்கள் தூண்டியதன் பலன். இரண்டு தலைமுறைக்கே கேடாக அமைந்தது. எத்தனை தீக்குளிப்புகள், அனாவசிய உயிரிழப்புகள். அன்று இந்தியை தடுத்ததன் பலனை இன்று தலைவர் பிள்ளை வாயிலாக அனுபவிக்கிறார். ஆனால் மருமகன் புத்திசாலி. அவர் பிள்ளைகளும் புத்திசாலிகள். அப்படியே அண்ணன் இந்தி கற்றுக் கொள்ள நினைத்தாலும், அந்த இந்தி வாத்தியாரின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். எனக்கு “ஏக் காவ்மே! ஏக் கிசான்! ரஹதாதா” நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

80 களில் மருத்துவர் ராமதாஸ் தங்கள் ஜாதிக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தினார். பின்னாளில் பசுமைத்தாயகம் அமைப்பை ஏற்படுத்தியவர்கள்தான் அன்று சாலையில் மரங்களை வெட்டி காட்டுமிராண்டித்தனம் செய்தார்கள். அதிலும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாக்கப்பட்டன. அவர்களுக்கு மிஞ்சியதெல்லாம் ஒரு நிணைவுத்தூண் மட்டுமே. அவர்கள் குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து இன்று நடுத்தெருவில். ஆனால் தமிழ்குடிதாங்கியின் குடும்பம் மாடமாளிகையில். நானோ, என் குடும்பத்தினரோ எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. எல்லாம் பாட்டாளி சொந்தங்களுக்காகவே செய்கிறோம் என்று வீரவசனம் பேசியவரை சவுக்கால் யார் அடிப்பது? சைக்கிள் ரிக்‌ஷாவில் கிளினிக் போனவரிடம் இன்று எத்தனை வாகனங்கள்? ஏமாந்தது? ஜாதி உணர்வால் தூண்டப்பட்ட அப்பாவி மக்கள்தான். அநேகமாக பெண்ணாகரத்தில் கடைசி ஆப்பு இருக்கலாம்.


இந்த நிலைமைதான் இன்று தெலுங்கானாவிற்கு ஆதரவாக போராடும் மாணவர்களுக்கும். விஜயசாந்தியும், சந்திரசேகர்ராவும் அரசியல் உச்சத்தை அடைவதற்கு மாணவர்களையும், அப்பாவி பொதுமக்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தெலுங்கானா வருகிறதோ, இல்லையோ? இன்று இழந்த உயிர்களுக்கு என்ன விலை கிடைக்கும்? ராமதாஸ் அமைத்தது போல் ஒரு நிணைவுசின்னம் அல்லது ஒரு ஸ்தூபி. வருடந்தோறும் அஞ்சலிக் கூட்டங்கள். செப்பு பட்டயம்.

அய்யாவும், அம்மாவும் இரண்டு துருவங்கள் என்பது ஊரறிந்த சங்கதிதான். அம்மா ஆட்சியில் அவர் சபைக்கு வரமாட்டார். அம்மாவும் அதே கதைதான். இவர்கள் ஆற்றும் ஜனநாயக கடமைக்கு ஊதியத்தை மட்டும் தவறாமல் வாங்கி கொள்கிறார்கள். ஒரு பத்திரிக்கையில் வந்த புள்ளி விவரம்.

முதலில் இந்நாள் முதல்வர் அன்று வாங்கியது :ஐந்தாண்டு காலத்தில் ஒட்டு மொத்த சம்பளம். 9 லட்சத்து 42 ஆயிரத்து 778 ரூபாய். ரயில் பயணப்படி 69 ஆயிரத்து 180 ரூபாயாம். இத்தனைக்கும் சென்னைக்குள்தான் இவர் தொகுதி. ரயிலில் எங்கு போனாரோ?

முன்னாள் முதல்வர் இன்று வாங்குவது. மாதம் 8000 ரூ சம்பளம். எதிர்பாரா செலவுகள் 3500 ரூ. ஈட்டுப்படி 10 ஆயிரமாம். டெலிபோனுக்கு 10 ஆயிரம். ஆக மொத்தம் கூட்டி ,கழித்து சொன்னால் கிட்ட தட்ட 11 லட்சம். இதில் ஆயிரதெட்டு லொட்டு. லொசுக்கு. அவர் எனக்கு வணக்கம் சொல்லவில்லை. பின்னால் யாரோ கிள்ளி விட்டார்கள். மேலே இங்க் தெளித்தார்கள். வடிவேலு சொல்றாப்ல சின்ன புள்ளத்தனமா இருக்குல்ல!!


ஒரு வழியாக ரம்பாவின் திருமணம் நிச்சயமாகிவிட்டது. ஒன்றரை கோடி கார், 3 கோடிக்கு வைரமோதிரம் என்றெல்லாம் பரிசுகள் அளித்தாராம் மாப்பு. பெயர் பொருத்தம் பாருங்கள். மாப்பின் பெயர் இந்திரனாம். மேனகையை தேடி போகாமல் இருந்தால் சரிதான். அவர் கம்பெனி பெயர் மேஜிக்வுட்ஸ். ரம்பா கூட மந்திரக்கட்டைதான்.

டிஸ்கி :1 ஒரு சின்ன சந்தேகம் ? 30 ரூ அரிசியை 1 ரூபாய்க்கு கொடுக்க முடியுது. ஆனால் 30 பைசா தண்ணி பாக்கெட் ஏன்யா 3 ரூபா?

டிஸ்கி கவுஜை:

சிவப்பு விளக்கு
நீலப்படம்
பச்சை வார்த்தை
மஞ்சள் எழுத்து
கறுப்பு பணம்
வாழ்க்கை வண்ணமயத்தாம்ல
இருக்கு!!

நன்றி...

கடைசி வரை வந்ததுக்கு...