
அழகு என்பதற்கு சரியான இலக்கணம் எது? அது நம் பார்வையை பொறுத்த விஷயம்.. எனக்கு நிரோஷா மிகவும் பிடிக்கும்.. என் நண்பன்.. மூஞ்சியா அது ? ஓட்டு மாங்காயை குறுக்கே வெட்டினாற் போல் என்பான்.. சற்றே இடது புறம் வகிடெடுத்திருப்பாள் அவள்..(உரிமைதான்) அதுதான் ஒரு வித்தியாசமான அப்பீலை அவளுக்கு (தோ..பார்டா) கொடுத்திருக்கும்) ஏழைஜாதி என்ற படத்தின் விஜய்காந்தை பார்த்தால் கேவலமாக இருப்பார்.. ஆனால் ஷத்திரியனில் ? மேன்லி & மெஜஸ்டிக்...ஏன்? இந்தியனில் சந்துரு பாத்திரம் எனக்கு அகோரமாய் இருந்தது.ஆனால் சேனாபதி.. அது அழகு..
சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில்“ சிறந்த இயக்குனர்”விருது பெற்ற பாண்டிராஜின் புகைப்படம் பார்த்தேன். மிக எளிமையான கிராமத்து இளைஞன் முகம். வலிகள் தாண்டி கிடைத்தவெற்றியின் தாக்கம் அவர் முகத்தில் ஜொலித்தது. அப்படியொரு களை ..அந்த தன்னடக்கமான ,பெருமிதம் கலந்த மெல்லிய புன்னகையில் பேரழகாய் தெரிந்தார்.
அழகான விஷயங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தேன்.. உதயம், அஸ்தமனம்,வயல் வரப்பு, நீர் நிலைகள்,பெண்கள்,கொலுசுக்கால்,பால் மழலை இன்னும் இத்யாதிகள்.. ஆனால் திருப்தியே வரவில்லை. நண்பர் ஒருவர் சொன்னார். பக்கத்து ஊரில் ஒரு மூதாட்டி இருக்கிறாள். அவள் வீட்டில் ஒரு நாள் கழித்து விட்டு வா..
மூதாட்டியின் எளிமையான வீடு.. நாலைந்து ஆட்டு குட்டிகள், கோழிகள், ஒரு நாய். வேறு மனிதர்கள் இல்லை.. அவளுக்கு எழுபது வயதிருக்கலாம். தோலெல்லாம் சுருங்கி, காதில் பெரிய ஓட்டை. கறையேறிய பற்கள்.. குழறும் பேச்சு என விகாரமாக இருந்தாள்.. இவளிடம் என்ன அழகியலை காண்பது என்று அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்..
மறுநாள் பொழுது விடிந்தது.. ஊருக்கு கிளம்பினேன்.. அந்த காலையில் கிராமம் அழகாய்த்தான் இருந்தது... மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் கூட அழகாய் ஈர்த்தன.. ஒரு மரத்தடி. அந்த கிழவியை பார்த்தேன்.. அவளா இவள்? என்னால் நம்பமுடியவில்லை.. குவிந்திருந்த களி மண்ணை ஒற்றை ஆளாய் மிதித்து கொண்டிருந்தாள்.. ராகத்துடன் ஏதோ ஒரு நாட்டுப்புற பாடல்.. செவிக்கினிமை... அவள் தலைக்கு பின்னால் கதிரவன்.. என் கோணத்தில் ஒரு நிழல் ஓவியம் போல் இருந்தாள்..
மண்ணை குமித்து, பதமாக பிணைந்து, சுழலும் அச்சின் மீது வைத்து, குழந்தைக்கு முதல் முலைப்பாலை ஊட்டும் தாயை போல் அவள் கைகள் ஆதுரத்துடன் நர்த்தனம் புரிய எனக்குள் விவரிக்க இயலாத பிரமிப்பு தோன்றியது.. உலகில் இதை விட பேரழகியலை காண முடியாது என்றே தோன்றியது.. அவளை ஓவியமாக தீட்ட ஆரம்பித்தேன்.. அப்போது நீங்கள் என்னை பார்த்திருக்க வேண்டும்!! என்னை விட அழகானவன் யாரும் இருக்க முடியாது என்ற முடிவிற்கு நீங்கள் வந்திருப்பீர்கள்..(ஏதோ ஒரு கூட்டத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் சொல்ல கேட்ட ஒரு அயல் தேசத்து கவிதை..நினைவிலிருந்து கொஞ்சம் கற்பனை சேர்த்திருக்கிறேன்...
அழகு என்பது என்ன?உங்கள் பார்வையிலிருந்து எழுதுங்கள்..விதிமுறைகள் இல்லை... நான் அழைப்பது..
ஈரோடு கதிர்
ரம்யா
அப்துல்லா
ராமலட்சுமி
டிஸ்கி : முன்பு எழுதிய ஒரு கவிதை :
அழகாய் இருக்கிறாய்!!
பயமாய் இருக்கிறது...
அதே வரிகள்தான்..ஆனால்
இந்த முறை
மகளை பார்த்து!!
டிஸ்கி : 2
இந்த இடுகையை நீங்கள் படிக்கும் போதும், பின்னூட்டம் இடும் போதும், வாக்களிக்கும் போதும்....ஆஹா....எவ்வளவு அழகு!!