Showing posts with label குறும்படம்/ஸ்கிரிப்ட். Show all posts
Showing posts with label குறும்படம்/ஸ்கிரிப்ட். Show all posts

Tuesday, May 25, 2010

வருகை




சுவற்றில் விழுகிறது சுமதியின் நிழல் . பாலா ஓடி வருகிறான். அம்மா அப்படியே இருங்க. அசையாதீங்க . ஒரு பென்சீலை அவசரமாக சீவி நிழலில் மேடிட்டிருக்கும் வயிறை சுற்றி ஒரு அரை வட்ட்ம் வரைகிறான் .

இதுக்குள்ளதான் பாப்பா இருக்கும்மா

சுமதிக்கு சிலிர்த்து போகிறது. கண்ணீரை வெளிக்காட்டாமல் அவனை வாரியணைத்துக் கொள்கிறாள் . ராம் இன்னும் வரவில்லை. எங்கு என்ன போராட்டமோ இன்று. வந்தால்தான் உண்டு. இல்லை எதாவ்து போலிஸ் ஸ்டேஷனில்தான் போய் பார்க்க வேண்டும். காலையில் அந்தம்மா வீட்டில் இருந்து நிறைய பழங்கள் கொடுத்தனுப்பியிருந்தார்கள் . கண்ணா கொஞ்சம் பழம் சாப்பிடுறா என்றாள் பாலாவை

எனக்கு வேண்டாம்மா. நீ சாப்பிடு . அப்பதான் பாப்பா நல்ல பலசாலியா இருக்கும். அந்த மாமி சொன்னாங்களே ..என்னை மாதிரி இல்லாம .சொல்லும்போதே அவனுக்கு அழுகை வருகிறது.

இல்லடா கண்ணா . உனக்கு ஒன்னுமில்லை. டாக்டர் அங்கிள் சொன்னாருல்ல .. நீ போய் விளையாடு போ..

என்னை யாரும் விளையாட சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க .. நம்ம வீட்டூக்கு பாப்பா வரட்டும் . நான் அது கூடத்தான் விளையாடுவேன்.

சுவற்றில் இப்போது நிறைய அரை வட்ட்ங்கள் உருவாகி விட்டது .பாலா தன் பழைய விளையாட்டு பொருட்களையெல்லாம் பத்திரப்படுத்தியிருந்தான். சக்கரம் உடைந்து போன சைக்கிளை அப்பாவை நச்சரித்து சரி பண்ணியிருந்தான். ஏண்டா கண்ணா ! பாப்பா பொறந்தவுடனேவா சைக்கிள் ஓட்டப்போகுது என்றான் ராம் . நான் கத்துக்கொடுத்துவேம்பா என்றான் பாலா . அதை சொல்லும்போது அவனுக்கு அப்படியொரு பெருமிதம்.

நானும் ஆஸ்பத்திரிக்கு வரும்வேன் . என் கிட்டதான் முதல்ல பாப்பாவை காட்டணும் .

இல்லடா செல்லம். நீ ஸ்கூலுக்கு போகணும் இல்ல . சாயங்காலம் நான் கூட்டிகிட்டு போறேன் என்கிறான் ராம்.

அரை மயக்கத்தில் இருந்தாள் சுமதி. நிழலாய் காட்சிகள் தெரிகிறது. தொப்புள் கொடியை துண்டிக்கிறார்கள் . வேதனை மறைந்து அந்த ரோஜாவின் முகத்தை காணும் ஆவல் நிறைகிறது.

ஸ்கூல் வளாகத்தில் இருக்கும் கோயிலில் முழங்காலிட்டு வேண்டிக்கொண்டிருக்கிறான் பாலா .. அப்பாவிற்க்காக காத்துக் கொண்டிருக்கிறான் . ஏன் அப்பா இன்னும் வரவில்லை.

இங்க பாருங்க மிஸ்டர் ராம் . இது கொஞ்சம் எமோஷனல் விஷயம்தாம் . ஆனால் இதுதான் கண்டிஷன் .

சுமதிக்கு குழந்தையை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது . ஆனால் அவளிடம் காட்டவேயில்லை. அப்படியா சொன்னார்கள் ? கடவுளே .. அடி வயிற்றை பிசைகிறது. ப்ளீஸ் யாராவது ஒரு முறை அந்த முகத்தை.

மிஸ்டர் ராம் நீங்க எல்லாவற்றுக்கு சம்மதித்துதான் கையெழுத்து போட்டிருக்கிறீர்கள் . உங்க அக்கவுண்டில் மீதி தொகை கிரெடிட் ஆகிவிடும்..

பாலாவுக்கு குழப்பம் . நிறைய சாக்லெட் வாங்கி வைத்திருக்கிறான். எல்லோருக்கு கொடுக்க வேண்டும் முதல்ல இந்த சாமிக்கு.. அப்புறம் டீச்சருக்கு, பாபுக்கு, வேணிக்கு.. இது போதுமா .. அப்பா வந்தவுடனே இன்னும் நிறைய வாங்கணும்.. ஆனா அப்பா ஏன் இன்னும் வரலை ?

குழந்தை ஹெல்தியா இருக்கு ராம் . வி ஆர் ரியலி சாரி. இதுதான் டேர்ம்ஸ். நாங்க ஒன்னும் செய்யமுடியாது. கொஞ்ச நாள்ல சரியாகிடும். இந்த மாத்திரைகளை உங்க மனைவிக்கு கொடுங்க.

என்ன மாத்திரை டாக்டர்?

பால் சுரந்து உயிர் வலித்தது சுமதிக்கு.. பாலாவுக்கு என்ன சொல்லப்போகிறேன் . குழந்தை எப்படி இதை தாங்கப்போகிறான்..

மிஸ்டர் ராம் . பாலவுக்கு ஆபரேஷனுக்கு நாள் குறிச்சிடலாம். அவங்க கண்ட்ராக்ட் அமவுண்ட்டுக்கு மேல ஒரு லட்சம் த்ர்றாங்களாம். குழந்தை நல்ல கலர் . நிறைய முடி . அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம் .

ஒரு உயிரை காப்பாத்த , இன்னொரு உயிரை சுமந்திருக்கேன் . பத்து நிமிஷம் ஒரு குழந்தை கையில வச்சுகிட்டு கொஞ்சினாலே , கொடுக்க மனசு வராதே. பத்து மாசம் ... முகத்தை கூட காட்டலையேங்க.. பாலாவுக்கு என்ன சொல்லப் போறோம்..

ஏம்பா சாமி ஏமாத்திட்டாருன்னு சொல்றீங்கப்பா ? பாப்பா எங்க ?

சுவற்றில் அரை வட்டங்கள் . அதனடியில் விளையாட்டு சாமான்கள். பித்து பிடித்தாற் போல் அழுகிறாள் சுமதி. அவள் கையில் இருக்கும் ஸ்கேன் படத்தில் , அந்த முகம் காட்டாத மழலை மெல்ல நெளிந்து கொண்டிருக்கிறது.