Monday, June 28, 2010

சொங்கியார் நேரடி ரிப்போர்ட்


புலனாய்வு பத்திரிக்கைகளில் செய்தி சொல்ல ஒரு பறவையையோ , அல்லது எதாவது கேரக்டரையோ வைத்திருக்கிறார்கள் . கழுகார் , வம்பு சாமியார் , அலெக்ஸ் பாண்டியன் ..இத்யாதிகள் . சும்மா நானும் கொஞ்சம் பேசுகிறேன்.


சொன்ன நேரத்துக்கு சொங்கி நடை போட்டு தேவாங்கார் உள்ளே நுழைந்தார் . வாய் நிறைய குமபகோணம் வெற்றிலை
சீவல் . நல்ல நாளிலேயே நாயகம் நம்மாளூ . இன்னிக்கு என்னத்தை பேசி கிழிச்சு... வாருங்கள் சொங்கியாரே..வரவேற்பில் ஏனோ திருப்தியில்லை சொங்கியாருக்கு . குறிப்பறிந்து பாக்கு மட்டை தட்டில் பன்னீர் புகையிலையை வைத்து நீட்டினோம் . அதை போட்டு கொண்டே தாங்க்ஸ் என்றார் சொங்கியார் . நம் முகத்தில் குற்றால சாரல் . கோபிக்காதீர் . சீசன் நெருங்கி விட்டதை நினைவூட்டுகிறேன் என்றார் சொங்கி .

சரி விஷயத்துக்கு வாருங்கள் என்றோம் .

இதோ . கோயில்பட்டி கடலை மிட்டாய் இருக்கிறதா?


யோவ் சொங்கி . ஒரு ரெண்டு மேட்டராவது சொல்லுமய்யா . உமக்கு தீனி போட்டு மாளாது போலிருக்கிறது .


செம்மொழி மாநாட்டின் நிறைவு உரை கேட்டீரா ? அங்கிருந்து ஆரம்பிக்கிறேன் .


சீக்கிரம் தொலயும் .


முதலில் வரிசையாக மத்திய அமைச்சர்கள் பிரணாப் , சிதம்பரம் ,ராசா என்று பெயர்களை குறிப்பிட்ட முதல்வர்
அழகிரியை விட்டு விட்டார் . துணைமுதல்வர் ஸ்டாலின் பெயருக்கு பின்னால் அழகிரியை சொன்னதை அஞ்சாநெஞ்சன் ரசிக்க வில்லை. முகத்தில் புன்னகை மிஸ்ஸிங் . அது மட்டுமல்ல . ஸ்டாலின் பெயரை சொன்னபோது உடன்பிறப்புகளின் ஆரவாரமும் , விசிலும்... அண்ணன் அப்செட் . அவர் முகம் அநியாயத்துக்கு இறுகி போய் கிடந்தது .

அதெல்லாம் தலைவர் சமாளிச்சுடுவார் . நீங்க அடுத்த மேட்டருக்கு வாங்க என்றோம் .


அந்த பால் சர்பத் என்று சொங்கியார் இழுக்க ,

கொடுத்து தொலையறோம் . மேட்டருக்கு வாங்க .


ஆட்சிக்கு வாரிசு ரெடி . ஆனால் தன் தமிழுக்கு யார் வாரிசு என்பதையும் முதல்வர் இந்த மாநாட்டில் கண்டு கொண்டு
விட்டார் . கவிதாயினிதான் அது .

அங்கு ரெண்டு கவிதாயினிகள் இருக்கிறார்களே . யாரை சொல்கிறீர் என்றோம் குறும்பாக .


மாடு கழனி தண்ணீரை உறிஞ்சுவது போல் சத்தமாக சர்பத்தை உறிஞ்சி கொண்டே

“ இந்த விகட குறும்புதான் உம்மிடம்
பிடித்தது என்று நம் தலையில் செல்லமாக குட்டினார் .

சிஐடி நகர் வீட்டம்மாவுக்கும் ஏக திருப்தியாம் . அடுத்து மந்திரி பதவிதான் என்று மிதக்கிறார்களாம்.


அதை விடுங்கள் . செம்மொழி மாநாட்டிற்கு பிறகாவது தமிழனுக்கு விடிவுகாலம் வருமா ?


என்ன இப்படி கேட்கிறீர் ? செம்மொழி மாநாட்டு மேடையிலிருந்த அத்தனை தமிழனுக்கும் இனிதான் விடிய வேண்டுமா
என்ன ? வழக்கமாக சீவி , சிங்காரித்து அறுப்பார்கள் . இந்த முறை அறுத்தாயிறுற்று . சீவி, சிங்காரித்தார்கள் .

சரி , உணர்ச்சி வசப்படாதீர் சொங்கியாரே என்றவுடன்

அப்ப கொஞ்சம் பானகம் கிடைக்குமா என்றார் சொங்கி .


மாம்பழம் கதை எதாவது ?


மாழம்பழ சீசந்தான். ஆனால் மாம்பழ கட்சிதான் கார்பைடு போட்டு பழுக்க வச்ச மாதிரி வெளிறி போயிருக்கிறது . செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டாலும் தமிழ் குடிதாங்கியின் முகம் களையில்லாமல்தான் காணப்பட்டது . தான் ஆடா விட்டாலும் சதையாடாதா என்ன? புத்திரன் வேலையில்லாமல் வெட்டியாக இருப்பதை எந்த தகப்பன்தான் சகிக்க முடியும் ?


சரி அம்மா கதை ?


அம்மாவும் , கேப்டனும் சேர்வதற்கு எல்லா முயற்சிகளும் நடக்கின்றன . சீட்டு , ரேட்டு , அமவுண்டு , பதவி , தேர்தல் செலவுகள் எல்லாம் போட்டு காய்ச்சி கொண்டிருக்கிறார்கள் . கொதி வந்ததும் சியர்ஸ்தான் .


உம்ம குடி புத்தி போகாதே . வேலை நேரத்தில் குடிக்காதீர்கள் என்றோம்.


அப்படி இல்லை . சில சோர்ஸ்களிடம் செய்தி வாங்க குடித்துதான் ஆக வேண்டியிருக்கிறது . பதிவுலகம் மீண்டும் சலசலக்கும் என்கிறார்கள் .



அப்படியா ? இப்போதுதானே கொஞ்சம் அமைதியாக இருக்கிறது .


நான் அப்படித்தான் கேள்விப்பட்டேன் . இந்த முறை நீதிமன்ற காட்சிகளும் அரங்கேறலாம் .


விவரமாக சொல்லுங்களேன் .


ம்ம்..மூச்.. எனக்கு கீழ்ப்பாக்கத்தில் ஒரு சின்ன வேலை இருக்கிறது என்று சொங்கியார் விஷமமாக கண்ணடித்தபடி , நொண்டிக் கொண்டே வெளியேறினார் .

Saturday, June 26, 2010

உலக்ஸின் முதல் காதல் கதை



மாப்ளை .. அவ என்னை லவ் பண்றாடா .. என்றான் உலக்ஸ்

யாருடா ? என்றேன் .

இன்னும் பேர் தெரியலை . அந்த ஊதா கலர் ஜாக்கெட் .

அன்றுதான் பள்ளி திறந்திருந்தது . முதல் முதலாக அந்த பெண்ணும் அன்றுதான் வந்திருந்தாள் . அதற்குள் எப்படி ? கண்டவுடன் காதலா ?

மாப்ளை .. நான் அவளை லவ் பண்றேன்னு சொன்னாலும் ஒரு அர்த்தம் இருக்கு . அதெப்படி பார்த்தவுடனே அவ உன்னையன்னு ? உளராதே என்றேன் .

இல்லைடா .. இதுவரைக்கும் என்னை பத்து வாட்டிக்கு மேல் பார்த்துட்டா. சிரிக்க வேற செஞ்சா . இதுக்கு வேற என்ன அர்த்தம் ? உலக்ஸ் தேன் குடித்த நரி போல் இருந்தான் . ஸ்டெப் கட்டிங் கிராப் . 40 இன்ச் பெல் பாட்டம் பேண்ட் . பொருத்தமில்லாமல் ஒரு கலர் சட்டையை இன் பண்ணியிருந்தான் . அவன் சொன்ன அந்தப் பெண் . மாநிறம் . அழகாகவே இருந்தாள் என்று தோன்றியது . சற்று நீளமான கைகள் . கூந்தலும் அப்படியே . இன்னும் பெயர் தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும் . உலக்ஸ் சொன்னது உண்மையாக இருந்தால் ? எனக்கு எங்கோ எரிவது மாதிரி இருந்தது . சக தோழர்களை பார்த்தேன் . இதுவரை கோ-எட்டில் படித்திராததால் கொஞ்சம் நெளிந்து கொண்டும் , நொடிக்கொரு முறை தங்கள் தோற்றத்தை பற்றிய கவலையுடனும் காணப்பட்டார்கள் . கொஞ்சம் நல்ல கலராய் இருந்த ரவியை கொஞ்சம் பொறாமை கலந்த பயத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் . ரவி ! நல்ல சுருள் முடி . நல்ல நிறம் . வகுப்பில் இருக்கும் அத்தனை ஃபிகர்களும் தனக்குத்தான் என்று அதீத நம்பிக்கை அவனிடம் தெரிந்தது .


வரிசையாக பெயர்களை கேட்க ஆரம்பித்தார்கள் . அவள் பெயர் என்னவென்று தெரிந்து கொள்ள உலக்சை விட நான் ஆர்வமாக இருந்தேன் . அமுதா, ஈஸ்வரி, ரகமதுன்னிசாபேகம் , திலகவதி, கீதா , சொர்ணலட்சுமி ... அவள் முறை வந்தது . உலக்ஸ் என் காதில் ஒரு பெயரை சொல்லி , இந்த பெயர்தான் அவளுக்கு பொருத்தமாக இருக்கும் . இல்லையென்றால் நான் கல்யாணத்துக்கு பிறகு மாற்றி விடுவேன் என்றான் . மச்சான் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா என்றேன் . பரவாயில்லை . இப்ப சொன்ன முறையை மறந்துடாதே என்றான் . எனக்கு பகிரென்றது .

கீதப்ரியா சார் என்றது அந்த குயில் . மயிலும் , குயிலும் கலந்த கலவை. ஒட்டு மொத்த வகுப்பும் அவளையே மொய்த்தார்கள் . உலக்ஸ் சொன்ன பெயரில் பாதி உண்மை . அவன் ப்ரியா என்று சொல்லியிருந்தான் . தன் காதல் பாதி நிறைவேறிய பெருமை அவனுக்கு . பொதுவாக அழகாக இருக்கும் பெண்கள் ப்ரியா என்ற பெயருடன் இருப்பர்கள் என்று பிற்பாடு சொன்னான் . உலக்சின் முறை வந்தது . ஆனால் அவன் பெயர் கொஞ்சம் பட்டிக்காட்டு பெயராக இருப்பதால்(அவன் நினைப்பு அப்படி ) சொல்ல தயங்கினான் . தன் பெயருக்காக ப்ரியா தனை நிராகரித்து விடுவாளோ என்று கொஞ்சம் பயம் அவனிடம் தெரிந்தது . வாத்தியார் கிட்ட போய் , சார் உலகநாதன் என்றான் . வாத்தியார் சத்தமாக ஓ...உலகநாதனா ? நல்ல பேர்தானே . இதை அங்கிருந்தே சொல்ல வேண்டியதுதானே என்றார் . மீண்டும் ப்ரியா அவனை பார்த்து சிரித்தாள்.

மாப்ளை பேரை மாற்றி விட வேண்டியதுதான் என்றான்

ஏண்டா ? ப்ரியா நல்ல பெயர்தானே என்றேன் .

அவ பேரை இல்ல .. என் பேரை . அவன் அப்பாவிற்கும் கொஞ்சம் திட்டு விழுந்தது . எனக்கு சிரிப்பு வந்தது .

மறு நாளிலிருந்து உலக்சின் தோற்றம் மாறிப் போனது . கர்சீப்பில் பவுடர் . அடிக்கடி தலைசீவல் . ஸ்டுடண்ட் சுபாரியை ஸ்டைலாக மெல்லுதல் . ஆனால் ஒன்று மட்டும் வரவேயில்லை . அது படிப்பு. மாப்ளை காதலுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம் ? எங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமில்ல ? என்றான்

வழக்கம் போல் ப்ரியா அவனை பார்த்துக்கொண்டிருந்தாள் . ஆனால் ஒரு வார்த்தை கூட பேசினதேயில்லை. முதல்ல பார்வைகள் பேசும் . பின் வார்த்தைகள் என்றான் உலக்ஸ் . குடும்ப பத்திரிக்கையான ராணியின் தீவிர வாசகன் அவன் .

உலக்ஸ் இருக்கைக்கு பின்னால் இன்னொரு கிளாஸ் ரூம் இருந்தது . + 2 முதல் பிரிவின் , இரண்டாம் ஆண்டு வகுப்பு அது . ஒரு முறை உலக்ஸ் இல்லை . ப்ரியா திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள் . எனக்கு கூட , உலக்ஸை தான் தேடுகிறாளோ என்று தோன்றியது . அவன் இன்று வரமாட்டான் என்று ஜாடை காட்டினேன் . ஆனால் அவள் அதை கண்டு கொள்ளாமல் திரும்பி பார்த்தபடியே இருந்தாள் . ஒரு முறை சிரிக்கவும் செய்தாள் . நானும் அவள் பார்த்த திசையில் திரும்பி பார்த்தேன் . பின் கிளாஸ் ரூமிலிருந்து சுந்தர் ஏதோ ஜாடை காட்டினான் .
இவள் மீண்டும் சிரித்தாள் .

உலக்ஸ் நான் சொன்னதை நம்பவில்லை . எனக்கு வயித்தெரிச்சல் என்றான் . ஆனால் இருவரையும் வடவாறு ஆற்றங்கரையில் வைத்து பார்த்து விட்டோம் . அதற்கு பிறகு இரண்டு நாள் உலக்ஸை காணவில்லை. கிராமத்துக்கு போயிருப்பதாக வீட்டில் சொன்னார்கள் .

அன்று உலக்ஸை பார்த்தபோது , மிகவும் உற்சாகமாக இருந்தான் . என்னடா மாப்ளை ..சோகம் எல்லாம் போயிடுச்சா என்றேன்.

யாருக்கு சோகம் ? ப்ரியா எனக்குத்தான் . எதுக்கு ஊருக்கு போனேன்னு நினைக்கற ? ஒரு கறுப்பு கயிறை காட்டினான் . இந்த கயிறை மாட்டும் அவ பையில போட்டுட்டா போதும் . அவ மனசு மாறிடுவா என்றான் .


ஒன்றும் நடக்க வில்லை. கயிறை பையில் போட்டும் . வழக்கம் போல் சாயந்திரம் அரண்மனையில் திருட்டு தம் அடிக்கும் போது உலக்ஸ் சொன்னான் .

மாப்ளை .. நம்ம சக்தி ஸ்டோர்ஸ் வீட்டு பொண்ணு தெரியுமில்ல .

ஆமாம் .. பாஸ்கரோட தங்கச்சி .

அவளேதான் . ப்ரியாவோட அழகுடா அவ . இன்னிக்கு காமாட்சியம்மன் கோயில்ல வச்சு பார்த்தேன் . என்னைய லவ் பண்றான்னு நினைக்கிறேன் .

எப்படிறா சொல்றெ என்றேன்


சும்மா அடிச்சு பார்த்தாடா .. ப்ரியா வருத்தப்படப்போறா பாரு . அந்த சுந்தரை பத்தி விசாரிச்சுட்டேன் . அவன் ஒன்னும் நல்லவன் இல்லை என்றான் உலக்ஸ் ...


Wednesday, June 23, 2010

இவன் அதுக்கு சரிப்பட மாட்டான்




மாய மான்களுக்கு
இன்னும் ஏமாந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்
கலியுக பிராட்டிகள்


ராமர்களுக்கு விறகொடிக்க
போக விருப்பமில்லை
சீதை தனியாக இருந்தாலும்
பரவாயில்லை
லட்சுமணர்களும் உடன்


கைகேயிக்கு புண்ணியவதி
பட்டம் கொடுத்தான் தசரதன்
திருமதி.செல்வத்துக்கும்
தங்கத்துக்கும் அவளது
நன்றிகள் உரித்தாகிறது



பாதுகையை விட
காலை கொடுத்திருந்தால்
இன்னும் சிறப்புதானே
சாராயக்கடையில் புலம்பகள்
பரதர்கள் மட்டையாகிறார்கள்


தேன் தடவி வறுக்கப்பட்ட
மீனுக்குள் குகனின்
மேல்சபை கோரிக்கைகள்
தவமிருக்கின்றன


வடை போன வருத்தம்
அனுமனுக்கு
வெயிலுக்கு கொஞ்சம்
வெண்ணெய் வேண்டியவனுக்கு
வாலில் நெருப்பு

கும்பகர்ணன் உண்பது போன்ற
கனவில் , சூர்ப்பனகை
அழகு நிலையத்தில்
விபீஷ்ணர்கள் மதில்
மேல் பூனையாய்

இமாமியின் புதிய சலுகை
ஒன்று வாங்கினால்
ஒன்பது மென் தோ ப்ளஸ்
இலவசமாம்

விடிய , விடிய
கேட்டுக் கொண்டேதான்
இருக்கிறோம்
விளங்கிய பாடில்லை
இன்று போய்
நாளையும் வருவோம்

Saturday, June 19, 2010

ராவணன்....


செனட் ராயல் விஸ்கியின் லேபிளை மாற்றி விட்டார்கள் . விலையும் கூடி விட்டது 100 ரூ குவார்ட்டர் .

ரஞ்சிதாவை பார்க்க கொஞ்சம் பாவமாக இருந்தது . ஜெய்ஹிந்த் படத்தில் எப்படி இருந்தார் ? . அவரால் சீரியசாகவே இருக்க முடியாது . ஒரு சின்ன ஸ்மைல் எப்போதும் . கொடுத்து வைத்தவன் பாவி நித்யா !!


15 வயதிலிருந்து தனி அறைக்குள் அடைக்கப்பட்டு , பாலும் , பழமும் கொடுத்து வளர்க்கப் பட்ட வாலிபம் . கட்டவிழ்த்து விடும் போது வெளிப்படும் உன்மத்த காமம் . அப்படியொரு மோகம் எனக்கிருந்தது. ராவணன் திரைப்படத்தின் மீது . சனியன் துரித ஸ்கலிதம்தான் மிச்சம் .


ஐஸ்வர்யா அழகாக இருப்பதாக 50 வயது ஆசாமிகள் சொல்கிறார்கள் .(நான் இல்லப்பா..இன்னும் 5 வருடங்கள் மீதமிருக்கிறது).


விக்ரமுக்கு இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தால் , நான் குடிப்பதை நிறுத்தி விட உத்தேசித்திருக்கிறேன் .

அக்னி நட்சத்திர ஹீரோக்கள் இதில் காமெடி செய்திருக்கிறார்கள் . ஆனால் சிரிப்பு வாயால் வரவில்லை .

சில ஷாட்கள் தமிழுக்கு புதிது . எல்லோரும் கேமரா அற்புதம் என்கிறார்கள் . கொஞ்சம் சிரமப்பட்டுதான் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது .ஆனால் லோகேஷன்கள் சான்ஸேயில்லை . சுரேஷ் கண்ணன் எழுதியதை போல் , கான்கீரிட் பொந்துகளில் வாழும் நமக்கு பொறாமையாக இருக்கிறது .


வசனம் சுஹாசினி . அவர் பெயர்தான் டைட்டிலில் . அவ்வளவுதான் . சொல்ற மாதிரி எதுவும் இல்லை .


எதையும் எதிர்பார்க்காதே . கிடைப்பதை அப்படியே ஏற்றுக்கொள் . ராமாயண நீதி.

Wednesday, June 16, 2010

சும்மா ஒரு காதல் கதை


”மழையாகி வர வேண்டும் நீ”
மனம் தந்த விதையாகவும்
மகரந்த மொழி பேசும் மலராக்கி...


என்ன பண்றீங்க காலையில? இந்த கத்து கத்தறேன் . செவிடா நீங்க ?

சார் இந்த சில்க் லோகோல டெக்ஸர் எப்பயிருக்கலாம் ?

ரவி..கடையோட பேர்..ஒரு வீவிங் ஸ்டைல்ல வரணும் . அப்படியே அலையாய் ஃபார்மேஷன் இருந்தா பெட்டரா இருக்கும் .

தானே குளிக்கிறேன்னு அடம் . பாத்ரூமை துவம்சம் பண்ணிகிட்டிருக்கா . என்ன பண்ணிகிட்டிருக்கீங்க ? அவளை போய் ரெண்டு சாத்து , சாத்தி கிளப்புங்க . வேன் வந்துடும் .


யெஸ் டார்லிங்...

என்ன ஐயா பிஸியா ? இத்தனை ரிங் போகுது . எடுக்க மாட்டிங்களா? யாராவது மாடல் கூட கடலையா ?

சொல்லுடா ..

நாளைக்கு என்ன நாள் தெரியுமா /

வியாழக்கிழமை . இன்னிக்கு புதன் .கரெக்டா ?

மொக்கை . அதில்லை . டேட் என்ன நாளைக்கு

செப்டம்பர் 11. அட ..ஆமாம் ட்வின் டவர் அட்டாக்கான நாள் . அமெரிக்காவுக்கு ஒரு அஞ்சலியை செலுத்திடுவோம் . வாழ்க பின்லேடன்.

மண்ணாங்கட்டி . நடிக்கிறீங்களா ? நாளைக்கு நம்ம..


இரு . திரும்ப கூப்பிடறேன் .

இங்க நான் ஒருத்தி காலையிலேர்ந்து இந்த பாழாப்போன ஸ்டவ்வோட போராடிகிட்டிருக்கேன் . என்னத்தை நோண்டி கிட்டிருக்கீங்க ?

“காதலாகி வர வேண்டும் கண்ணே !
கனிந்த என் இதயத்தில் விளக்காகவும்
காதலன்புக்கு ஏங்கும் எனை காத்து
உன் மனம் தர வேண்டும் நீ “

இந்த கவிதையை நியாபகம் இருக்கா ? எதையோ தேடினா , இது கிடைச்சது . இது ஒரு பொக்கிஷம்னு அடிக்கடி சொல்வியே . இப்படி குப்பையில கிடக்கு .

ம்க்கும் . இது ஒன்னுதான் இப்ப குறைச்சல் . லேட்டா போனா சம்பளம் கட் . உங்களுக்கு என்ன ? வீட்ல ஜாலியா இருக்கீங்க . நான் இல்ல பஸ்ல கூட்டத்துல அவதி...

சொல்லு டார்லிங் . நாளைக்கு நம்ம கல்யாண நாள் .நியாபகம் வந்துடுச்சு .

கோவிலுக்கு போலாங்க ..

சாரிடா ..நாளைக்கு டெஸ்ட் ஷூட் இருக்கு. நாளைக்கு விட்டா , அந்த பாம்பே மாடல் பறந்துடுவா?

அவளையே கட்டி கிட்டு அழுங்க .

சனியனே .. ஸ்கூல் வேன் வந்துடும்னு தெரியாது . அப்படியே அப்பன் மாதிரி , பொறுப்பில்லாம...

ஏங்க நான் தான் . உங்களுக்கு நான் எழுதின முதல் கடிதம் ஞாபகமிருக்கா ?சின்னதா கவிதை மாதிரி..

ஷிட் .. அது கவிதையா ? எங்கயோ காப்பியடிச்சு எழுதினது .

இதை விட காவியத்தை யாரும் எழுத முடியாதுன்னு சொன்னீங்களே ..பொய்யா அது ?

காதலே பொய் ..சும்மா ஒரு மயக்கம் .. அதுல என்ன எழுதினாலும் காவியமாயிடுமா ?


நான் ஆஃபிஸ் கிளம்பறேங்க .. மழை வர மாதிரி இருக்கு . துணியை எடுத்து வச்சிடுங்க ..என் தலை மறைஞ்சப்புரம் லைப்ரரிக்கு போயிடாதீங்க . இன்னிக்கு ரேஷன்ல கெரசின் போடுவான் . சாமி மாடத்துல காசு இருக்கு ..வாங்கி வைங்க .. அந்த கர்மத்தை குடிக்க போயிடாதீங்க..


சிங்க பெருமாள் கோவில் . ஆளுக்கொரு புளியோதரையும் , சர்க்கரை பொங்கலும் வாங்கி கொண்டோம் .

நமக்கு கல்யாணம் ஆகி எத்தைனை வருஷம் ஆயிடுச்சு பாத்தீங்களா ?

எத்தனை வருஷம் ஆனா என்ன டார்லிங் . அன்னிக்கு பார்த்தாப்லயேதான் இருக்கே ..

பொய்தானே என்றாள் அழகான சிரிப்புடன்


Tuesday, June 15, 2010

மானிட்டர் பக்கங்கள்.........15/06/10


முத்துசாமி , சின்னசாமி என்று அதிமுகவில் ஆமாஞ்சாமியாக இருந்த அடிமைகள் , இன்று அய்யா குட்டையில் மட்டையாகிவிட்டார்கள் . அவர்கள் சொல்லும் காரணம்தான் வேடிக்கையாக இருகிறது . இத்தனை வருடங்களாக அங்கு அடிமைகளாக இருந்தார்களாம். இப்போதுதான் ஞானோதயம் வந்திருக்கிறது . முத்துசாமி சொல்கிறார் . அம்மா ஒரு முறை கழற்றி போட்ட செருப்பை பத்திரமாக வைத்திருக்கிறாராம் . அதிமுக ஆட்சியில் இருந்தால் , அதால் அடித்தால் கூட பெருமையாக வாங்கி கொண்டிருப்பார் . மக்கள் சேவைக்காக அணி மாறியதாக அவர் பேட்டியை படிக்கும்போது , அந்த செருப்பாலேயே ரெண்டு சாத்தினால் என்ன என்று தோன்றியது . சின்னசாமி சமயம் பார்த்து தாவியிருக்கிறார் . அமைச்சராக , கரூர் எம்பியாக இருந்தவர் . திமுகவின் மாவட்டசெயலாளர் திருமதி வாசுகி முருகேசனின் அகால மரணம் , அந்த இடத்தை தான் பிடித்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார் இந்த முன்னாள் அடிமை . பார்க்கலாம். இந்த அடிமைகள் புது குட்டையில் விழுந்த நாள் , சென்னை திக்குமுக்காடியது . டிராஃபிக் நெரிசல் .


நீலகிரியில் இருப்பவர்கள் எல்லாம் ஓய்வெடுக்கிறார்கள் என்று அர்த்தமா ? என்று ஒரு விநோத அறிக்கை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் நிரந்தர முதல்வர் புரட்சித்தலைவி . அதுமட்டுமல்ல . அறிவாலயத்தில் அனைவரும், முக உட்பட சீட்டாடுகிறார்கள் . கேளிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்றும் விளாசி தள்ளியிருக்கிறார் . தலைவரின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் . ஆனாலும் டான்சி ராணிக்கு இப்படி புத்தி பேதலித்து போக வேண்டாம் . பதில் லாவணி விரைவில் வரும் . அதில் என்னென்ன கூத்து இருக்கிறதோ . எனக்கு 62 வயதாகி விட்டது . இன்னும் எல்லோரிடமும் நானே நின்று மனுக்களை வாங்க முடியுமா என்றும் செல்வி கேட்கிறார் . வாய்க்கு வாய் ஐயாவை காச்சறீங்களே ! அவரை பார்த்தாவது தெரிஞ்சுக்கலாமே . 87 வயசுல என்ன சுறுசுறுப்பு . சும்மா நின்னு விளையாடறாரு .


தைலாபுரத்தாருக்கு எதை தின்றால் பித்தம் தெளியும்னு ஆயிடுச்சு போல . அன்புமணிக்கு தச்சு வச்ச கோட்டு , சூட்டையெல்லாம் பழைய பாத்திரக்காரனுக்குத்தான் போடனும் . தலைவர் வச்சது சூப்பர் ஆப்பு . அப்படியே அம்மாவும் கண்டுக்காம விட்டால் , மறுபடியும் கோடாரிதான் .


ராவணன் படம் நிறைய எதிர்பார்ப்புகளை கிளறி விட்டிருக்கிறது . மலையாளத்தில் வெளியாகவிருக்கும் ராமராவணன் என்ற படமும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஈழத்தமிழரின் போராட்டத்தை கொச்சைபடுத்தி காட்சிகள் உள்ளனவாம். சிங்களவர்கள் அன்பானவர்கள் , புத்தரின் வழி வந்த தியாகசீலர்கள் என்பதாக சித்தரிப்புகள் . மேலும் இலங்கை அவர்கள் சொந்த மண் இல்லை. இங்கிருந்து பஞ்சம் பிழைக்க போனவர்கள் என்று வரலாறும் திரிக்கப்பட்டிருக்கிறதாம் .சிங்கள் அரசு நிதியுதவியுடன் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் . மலையாள சினிமாவில் தமிழனை இழிவு படுத்துவது ஒன்றும் புதிதல்ல . அதைப் பற்றி நிறைய இடுகைகளும் வந்திருக்கிறது . செம்மொழி மாநாட்டு பாடலை படமாக்கியவர் ஒரு மலையாளி . அதில் வரும் நிறைய முகங்களும் வேற்று முகங்களே . தமிழனின் பெருந்தன்மைக்கு அளவே இல்லையப்பா . வந்தோரை வாழ வைத்து ..இருப்போரை ...

கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது , காதலியில் காலில் ஒரு முள் தைத்து விடுகிறது . காதலுக்கு வந்ததே கோபம் . முள்ளை பிடுங்கி சனியன் பிடித்த முள்ளே என்று வைது , தூக்கி வீசுகிறான் காதலன் . இருவருக்கும் திருமணமாகிறது . சில வருடங்களுக்கு பிறகு அதே கோவில் . அதே முள் . கணவன் சொல்கிறான் . சனியனே ..கண் அவிஞ்சா போச்சு . பார்த்து வர வேண்டியதுதானே . எப்படியிருக்கு சனிப்பெயர்ச்சி ? சுகி சிவம் சொன்னது .


ஒரு மீள் கவிதை :


உலக்கையை போட்டு
உள்ளறையில் ஏன்
உட்கார்ந்திருக்கிறாய் அம்மா?

விலக்குடா மகனே

விளங்கவில்லை
யார் வந்து சொன்னார்கள்?

காகம் வந்து
கல்லெடுத்து போடும்
தெரிந்து கொள்வேன்

காகத்துக்கு எப்படி தெரியும்?
யார் சொல்வார்கள்?

அதோ....அந்த
மரக்கிளை

மரக்கிளைக்கு?

அதோ ஓடுதே
அணில் அது சொல்லும்

யார் சொல்வார்
அந்த அணிலுக்கு?

சாமிதான் ராசா
சொல்லும்

அப்ப சாமிக்கு?

அம்மா சற்று யோசித்து
சொன்னாள்..
சாமிக்கு நான் தான்
சொல்வேன்..

தலையை ஆட்டிக்கொண்டேன்
விளங்கினதுக்கு அடையாளமாய்.

Monday, June 14, 2010

போடுங்கம்மா ஓட்டு



என்னய்யா இது அநியாய ம் ? கேக்க நாதியில்லையா?

குடித்தனம் நடத்துற இடத்துல , இப்படின்னா ?

பொம்பளைங்க நடமாடவே முடியலை . வேட்டி அவுந்தது தெரியாம உருள்ரானுங்க

அத விடுங்க . பக்கத்துல பள்ளிக்கூடம் இருக்கு . எப்படி பர்மிஷன் கொடுத்தாங்க சாராயகடைக்கு

நம்ம கவுன்சிலர்தான் சால்னா கடை போட்டிருக்காரு . 10 மணிக்குத்தான் கடை திறக்கணும் . ஆனா இவங்கதான் மூடறதேயிலையே . போலிஸ்காரனுக்கு மாமூல் போயிடுது .

புள்ளைங்க படிப்பு போயிடும்யா . அஞ்சாம் கிளாசிலயே குடிக்க கத்துக்கிடுவாங்க . தெருவில இறங்கி போராடனும் .

நாளைக்கு போய் அதிகாரிங்களை பார்த்து சொல்லலாம் . கேக்கைலைன்னா மறியல், ஆர்பாட்டாம்தான் .

மறுநாள் அதிகாரியை பார்க்க போனது கூட்டம்

ஐயா .புள்ளைங்க படிக்கிற இடத்துல குடிகாரனுங்க அட்டூழியம் பண்றாங்க . சட்டப்படியே இது தப்பு இல்லையா ?

அந்த இடத்துல ஸ்கூல் இருக்கா என்ன?

ஐயா 500 புள்ளைங்க படிக்கிறாங்க . பாதி பொட்ட புள்ளங்க . வயிற்றில நெருப்பை கட்டி கிட்டு இருக்கோம். கேட்டா எங்க கவுன்சிலர் ஆள் வச்சு அடிப்பேன்னு மிரட்றாரு . போலிசும் புண்ணியமில்லை.

அப்படியா ? எங்களுக்கு கொடுத்த மேப்ல , அங்க 100 மீட்டர் தூரத்துக்குள்ள கோயில், ஸ்கூல் எதுவும் இல்லைன்னு இருக்கு. எங்க ஆட்களும் பாத்து கிளியரன்ஸ் கொடுத்திருக்காங்களே . நான் மறுபடியும் விசாரிக்க சொல்றேன் .

உங்க ஆளுங்க காசை வாங்கிட்டு கதை கட்டியிருப்பாங்க . நீங்களே பாருங்க . இல்லை நாங்க போராட்டம் பண்ணலாம்னு இருக்கோம் .

அதெல்லாம் வேண்டாம் . அமைதியா இருங்க . நான் உங்க கவுன்சிலர் கிடயும் பேசறேன் . நீங்க சொன்னது உண்மைன்னு , நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன் .

என்னய்யா சொல்றீங்க ? கடையை மாத்த முடியாது . இங்கதான் கூட்டம் வரும் . சாராயக்கடை நடத்தினாத்தான் ஓசியில எல்லாம் கொடுக்க முடியும் . ஜனங்க அப்படித்தான் . ஓசியில கழுவி வுடறோம்னா...ண்டியை கூட காமிக்கிறாங்க இல்ல . இதெல்லாம் பொறுத்துக்க வேண்டிடதுதான் . கவுன்சிலருக்கு கோபம் தலைக்கேறியது

கூட்டம் கலைந்தது . அதிகாரி ஆய்வு செய்து பொதுமக்கள் சொன்னது உண்மையென்று கண்டு பிடித்து , அரசுக்கு அறிக்கை அனுப்பினார் . கவுன்சிலருக்கு கடுப்பாயிற்று . என்னத்தை படிச்சு அவரு அதிகாரி ஆனாரு ? பாத்துக்கறேன்னு கருவினார் . மக்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை .

அப்படியா ? மகராசன் நல்லாயிருக்கனும் . இந்த மாதிரி ரெண்டு பேர் இருந்தா போதும் . நாடு உருப்பட்றும் . உண்மையிலயே மாத்திட்டாங்களா ?

ஆமாம் . ஆனா சாராயக்கடையை இல்லை . ஸ்கூலை . இங்கிருந்து அஞ்சு கிலோ மீட்டர் தள்ளி..

Thursday, June 10, 2010

சாவுகிராக்கி


செத்து..செத்து..விளையாடலாம் ..வர்றீங்களா....

இருக்கும் வரை வரப் போவதில்லை..வந்தபின் நாம் இருக்கப் போவதில்லை...மரணம்....நிச்சயம் என்று தெரிந்தாலும் நிணைத்து பார்க்க மனம் விரும்புவதில்லை.அடுத்த நொடியில் கூட சம்பவிக்கலாம்....சதம் கூட அடிக்கலாம்..அதற்குள் வாழ்க்கையை முழுசாய் வாழ்ந்து விட முடியுமா? அடுத்த வீட்டில் நிகழ்ந்தால் செய்தி..நம் வீட்டில் நடந்தால் துக்கம்...


நாம் இறந்த பின்னர் எத்தனை பேர் உண்மையில் அழுவார்..எத்தனை பேர் கூலிக்கு மாரடிப்பார்..காடு வரை பிள்ளை... கடைசி வரை யாரோ.. கவியரசர் நிதர்சனமாய் எழுதி விட்டுத்தான் போயிருக்கிறார்...எல்லோருடைய வாழ்க்கையிலும் யாரோ ஒருவரின் மரணம் எதாவது ஒரு செய்தியை விட்டு விட்டுத்தான் போகிறது..நண்பன்...நெருங்கிய உறவினர்..ஆனாலும் அதையே நாம் நினைத்து கொண்டிருப்பதில்லை.. கால ஓட்டத்தில் இறந்த தேதி கூட மறந்து போகிறது....சரி..நாம் இறக்கும் நாள் தெரிந்தால் எப்படியிருக்கும்....

அருப்புக்கோட்டை பேருந்து பணிமனை அருகில் ஒரு கடையில் மட்டன் சுக்கா மிக நன்றாக இருக்கும். ஒரு முறை சாப்பிட்ட உடன் இதற்காகவே சென்னையிலிருந்து மீண்டும் வர வேண்டும் என்று நினைத்தேனே. அதை சாப்பிட தோன்றுமோ? இறுதி வரை அவளுக்கு அஞ்சல் செய்யப் படாத அந்த கடிதத்தை நேரிலேயே போய் கொடுத்து விட்டு வந்து விட தோன்றுமோ?... கவிதைப் போட்டி முடிவுகளை பார்த்து விட்டு போக முடியுமா? சோகத்தில் பெரிது"புத்திர சோகம்"என்பார்களே... பெற்றவர் இருக்க நாம் முன் போனால் அந்த அக்னியின் வீச்சு அடி வயிற்றில் எப்படி இருக்கும் ?

நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்பதை ஒரு வலைத் தளம் சொல்கிறதாம்..அது மட்டுமல்ல.. நாம் இறக்கும் போது அல்லது இறந்த பின் சிலருக்கு சில விஷயங்களை சொல்லி விட வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் அந்த வலைத் தளம் உதவுகிறது. உதாரணமாக சொத்து விவரங்கள்(எனக்கு அடியில் கண்ட சொத்துக்கள்தான் ???)


பிள்ளைகளுக்கான அறிவுரைகள் (ம்ம்ம்..இருக்கும் போதே கிழிஞ்சது..செத்த பின்னாடி கேட்டுட்டுதான் மறு வேலை..)

யாரை நம்புவது.. அம்மாவை யார் பார்த்துக் கொள்வது . இதையெல்லாம் அந்த தளத்தில் நீங்கள் பதிவு செய்து வைத்து விடலாமாம். அந்த தளத்தில் ஒரு அம்சம் நம் ஆயூள் எத்தனை நாள் என்று கணக்கு போட்டு அது சொல்வதுதான். பெயர்,வயது,பால் (செத்த பின் ஊத்தறது இல்லிங்க..)எடை,உயரம்,மது,புகை உண்டா? என்று கேட்டு பின் குத்து மதிப்பாக ஒரு கணக்கு காட்டுகிறது. (நிமிடம்,நொடி உட்பட)

தளத்தில் பதிவு செய்தவுடன் நம் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் வரும்.அதில் நமக்கு ஒதுக்கப்பட்ட பக்கத்தில் நம் எண்ணங்களை பதிந்து வைக்கலாம். நாம் இறந்த பின்னர் அவை வெளியிடப்படும்..அது மட்டுமல்ல ..நமக்கு பிடித்த பாடல்களையும் பதியலாம்(ஆறு மனமே ஆறு/ சட்டி சுட்டதடா/ போனால் போகட்டும் போடா/ கனவு காணும் வாழ்க்கை யாவும்/ வாழ்வே மாயம்..)

சரி..நாம் இறந்தது எப்படி அந்த தளத்திற்கு தெரியும்? நாம் நமக்கு நம்பிக்கையான??நாலு நபர்களின் (நாலு பேருக்கு நன்றி..) தகவல்களை பதிய வேண்டுமாம். அவர்கள் இன்பார்மர்கள் என்று அழைக்கப் படுவார்கள். அவர்களுக்கு நம் லிங்கும் பாஸ்வேர்டும் தெரிய வேண்டும். நாம் இறந்த பின் அவர்கள் தளத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். 12 வகையான சோதனைகளை மேற்கொண்டு இறப்பு உறுதி செய்ய பட்ட உடன் 18 ம் நாள் (அதாவது கருமாதி முடிந்த பின்னாடி) நம் தகவல்கள் உலகிற்கு காட்டப்படுமாம். அப்பா ..கண்ணை கட்டிடுச்சுப்பா..(அப்பா உண்மைத் தமிழா..எப்படிதான் வளைச்சு வளைச்சு)


நம்ம எல்லாம் தமிழ் இல்லியா? சாவை பத்தி தெரிய..info@mellogam.out/admin@emaa.in க்கு ஒரு எ(எருமை) மெயில் அனுப்புங்க.. இல்ல http://www.farawayfish.com/Main.php?do=Welcome

ஆயூஷ்மான் பவ...... நீடூடி வாழ்க...

பின் குறிப்பு: யாரையாவது திட்டி ஒரு பதிவு கூட போடலாம்.. இறப்புக்குப் பின் வெளியிட சொல்லலாம்...கரப்பான் பூச்சி,எலி பாஷாணம் சாப்பிட்டு இறக்க விரும்புபவர்கள் கவனிக்கவும்..

Tuesday, June 8, 2010

கொக்கு..பற..பற..


வானவில்லில் ஏழு வண்ணங்கள் தெரியும். ஆங்கிலத்தில் இதனை VIBGYOR என்று குறிப்பிடுவார்கள். வயலட், கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு என்பதே இந்த வண்ணங்கள். வானவில் மழைத் துளிகளின்னூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழுத்தெறிப்பு நடைபெறுவதனால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்கள்(VIBGYOR) வானத்தில் தெரிகின்றன. நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது வானவில் தோன்றுகிறது. பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் வானவில் தோன்றுகிறது. வானவில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது வானவில் வட்ட வடிவில் தெரியும்.சரிதான் . அந்த 60,000 கோடியும் அதில் பிரதிபலிக்குமா? இதுல எதுவும் ஜாதியை பற்றி நான் சொல்ல வில்லை . ஏனெனில் இது ஒரு தலித் இலக்கியம்...


மீரா ஜாஸ்மீனை அந்த காலணி விளம்பரத்தில் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும் . காதலனாய் இருக்க நிச்சயம் கொடுத்து வைக்கவில்லை. அட்லீஸ்ட் காலணியாய் இருக்க ஆசைதான் .சமீப நாட்களாய் துப்பாக்கியை நெஞ்சுக்கு நேராக நீட்டியதை பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. நண்பர் ஒருவர் அரேஞ்ச் பண்ணவா என்று கேட்டார் . ஏ..அப்பா..பெரிய இடமாயிற்றே ..முடியுமா ? என்று கேட்டேன் . தலைவா ! இது சும்மா ..அடுத்து ஐஸ்ர்வர்யாவோட என்றார். அப்பீட் என்றேன் . இருந்தாலும் அவர்கள் இடத்திற்கு செல்ல மனமில்லை. இங்க வந்து என்று இழுத்தேன் . ஆனாலும் டவுட் . ரொம்ப செலவாகுமா என்றும் . இல்லை மச்சான் ..(பாவி நீ எனக்கு மாமாவா?) என்ன ஒரு 100 ரூபா .. கடைசியில் கொண்டு வந்து விட்டான் . மச்சான் சுமாராத்தான் இருக்கு . அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா? என்னடா விளையடறியா ? நீ கேட்ட காசை கொடுத்தேன் இல்ல.. பதில் சொல்லாமல் போயே விட்டான் . வேறு வழி . மீரா வேறு கண்ணடித்தாள் . விளைக்கை அணைத்தேன் . பரவாயில்லை . அந்த பேச்சுதான் தாங்கவில்லை. டைட்டிலில் போட்டார்கள் .

“கதை , திரைக்கதை, வசனம் “
.................................................. பெண்சிங்கம்........... இப்போது பாருங்கள் வெல்லுங்கள் நாற்பது லட்சம்..


குஷ்புவை மேல் சபைக்கு கொண்டு வரப்போவதாக சொல்கிறார்கள் . மிகவும் நன்றி . குஷ்பு சார்பில் . திமுகவிற்கு எப்போதுமே ஒரு வரம் அல்லது சாபம் உண்டு . இவர்களே ஒரு பிம்பத்தை உருவாக்குவார்கள் . அதை வலிமையாக்குவார்கள் . பின் அதனுடன் ஒரு நிழல் யுத்தம் நடத்துவார்கள் . இந்த முறையும் அப்படியா ? த..த..பா... செம்மொழி வாழ்க..மற்ற மொழிகளுக்கு சினம் வராமல் இருக்கட்டும் . உண்ணாவிரதத்திற்கு நாள் நெருங்கி விட்டதோ ?



சென்ற மே 18 என்ன நடந்தது நமக்கு தெரியும் . இந்த மே 18 . நாம் என்ன செய்து கொண்டிருந்தோம்.. அபிராமி மெகாமாலில் ஒரு ஏழு நட்சத்திர திரையரங்கம் துவக்கப்பட்டிருக்கிறது . சென்ற வருட உண்ணாவிரத நாயகன் தான் பொத்தானை அமுக்கினார் . வீட்டிற்கே கார் அனுப்புகிறார்களாம் . காலை .கவனிக்க ..காலை நீட்டி அமர்ந்து படம் பார்க்கலாம் .


நீங்கள் அந்த பதிவரை படித்திருக்கலாம் . ஆனால் எழுதப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் . சந்தோஷம்தான் . கடவுள் மறுப்புக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இவர் என்று பெரியாரை பற்றி எழுதுகிறார் . யார் இவர் என்று கண்டு பிடிப்பவருக்கு அரை கிரவுண்டு நிலம் இலவசம்...அய்யனார் கம்மா ஓரம்...


வேண்டும் என்பதற்கும்

வேண்டாம் என்பதற்கும்

ஒரே ஒரு வித்தியாசம்
நீயும்
நானும்
இடம் மாறி இருப்பதுதான்

Wednesday, June 2, 2010

சாரு நிவேதிதா மன்னிப்பு கேட்கிறார்



மே 30-ஆம் தேதி நடந்த விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்கும் புரிகிறாற்போல் இதை எழுதி விடுகிறேன்.

இன்றைய நவீன காலகட்டத்தில் குருமார்கள் தேவையா இல்லையா என்பது விவாதத் தலைப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் தெரியாது. இத்தலைப்பின் உள்குத்து என்னவென்றால், நித்யானந்தாவைப் பற்றி ஒரு டாக் ஷோ செய்ய வேண்டும் என்பதுதான். அதோடு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்திருக்கிறார் நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளரான ஆண்டனி. இதை அந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு ஆகிக் கொண்டிருந்த சமயத்தில்தான் என்னால் உணர முடிந்தது. இரண்டாவது மாங்காய், ஆண்டனிக்கு என் மீது இருந்த பகையை இந்த நிகழ்ச்சி மூலம் தீர்த்துக் கொள்வது.

கொஞ்சம் ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு நீயா நானா நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட எனக்கு சன்மானம் எதுவும் கொடுக்கவில்லை. இது பற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதற்குப் பழி வாங்கும் நோக்கத்துடனேயே மே 30-ஆம் தேதி நடந்த நீயா நானாவில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. நானோ ஆண்டனி & கோபிநாத் பிரதர்ஸின் இத்திட்டம் பற்றி எதுவும் அறியாதவனாக அங்கே அமர்ந்திருந்தேன். என்னை மடக்க வேண்டுமென்று அவர்கள் முன்கூட்டியே திட்டமிருந்ததால் என்னால் அக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை.

என்னுடைய பலவீனம் அது. உடனடியாக எதற்கும் எதிர்வினை செய்ய முடியாது. அதைப் பற்றி நின்று நிதானமாக யோசிக்க வேண்டும். அதனாலேயே நண்பர்கள் என்னை ட்யூப் லைட் என்பார்கள்.

நீயா நானா பற்றி இன்னொரு ரகசியம், நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் கோபிநாத் தானே யோசித்து கேள்விகளைக் கேட்பதில்லை. நீங்கள் உற்று கவனித்தால் தெரியும். கோபிநாத்தின் காதுகளில் ஒரு சிறிய ஒலிவாங்கி செருகப்பட்டிருக்கும். அதில்தான் நிகழ்ச்சிக்கு வெளியே அமர்ந்திருக்கும் ஆண்டனியின் கேள்விக் கணைகள் சாரை சாரையாக வந்து விழும். அதைத்தான் கோபிநாத் கேட்பார்; பார்வையாளர்களிடம் பேசுவார். ஆகவே, கோபிநாத் ஒரு பொம்மைதான். அதை இயக்குபவர் ஆண்டனி.

அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் நான் சற்றும் எதிர்பாராத விதமாக கெரில்லாத் தாக்குதலைப் போல் கோபிநாத்திடமிருந்து அந்தக் கேள்வி வந்து விழுந்தது. “சாரு, நீங்கள் நித்யானந்தாவை ஆதரித்தீர்கள்; அவரைக் கடவுள் என்றீர்கள். அதனால் உங்களுடைய வாசகர்கள் எல்லோரும் நித்யானந்தாவின் பின்னால் போனார்கள்; இப்படி உங்கள் வாசகர்களைத் திசை திருப்பியதற்காக வருத்தப்படுகிறீர்களா?” கொஞ்சம் திகைத்துப் போன நான் ”ஆமாம்” என்றேன். விடாமல் தொடர்ந்து ”அதற்காக உங்கள் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வீர்களா?” என்றார் கோபிநாத்; அதாவது, ஆண்டனி. எனக்கு அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

ஒரே குழப்பமாக இருந்தது. நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? நானா நடிகையுடன் படுக்கையில் புரண்டேன்? அப்படியே புரண்டிருந்தாலும் அதற்காக நான் என் மனைவியிடம் அல்லவா மன்னிப்புக் கேட்க வேண்டும்? வாசகர்களிடம் ஏன் கேட்க வேண்டும்? மேலும், நான் என்றைக்குமே பிரம்மச்சரியத்தை போதித்தவன் அல்லவே? நித்யானந்தாவைக் கூட விமர்சிப்பது ஏன் என்றால், மற்றவர்களுக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்த அவர், தான் மட்டும் அதற்கு எதிராக நடந்து கொண்டார் என்ற காரணத்தினால்தானே? மேலும், நான் என்ன நித்தியின் பார்ட்னரா? எனக்கும் அவருக்கும் ஆறு மாதத் தொடர்புதானே இருந்தது?

ஒரு நொடியில் இப்படியெல்லாம் யோசித்த நான் ”நித்யானந்தாவை நம்பி ஏமாந்த கதையைத்தானே குமுதம் ரிப்போர்ட்டரில் விளக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்?” என்று கோபிநாத்திடம் சொன்னேன். ஆனால் கோபிநாத் மூலம், கேட்ட கேள்வியையே விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டு என்னை முட்டுச் சந்தின் பக்கமாக நகர்த்திக் கொண்டிருந்தார் ஆண்டனி. கிட்டத்தட்ட ஒரு கொலைவெறியுடன் அவர்கள் அன்றைய தினம் என்னைத் தாக்கினார்கள். சேடிஸ்ட்டுகளைப் போல் நடந்து கொண்டார்கள். இது சம்பந்தமாக என் வாசகர்களிடமிருந்து எனக்கு நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

பல் பிடுங்குவதைப் போல் என் வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தையைப் பிடுங்கினார்கள் ஆண்டனியும் கோபிநாத்தும். பிறகு நிகழ்ச்சியின் மற்றொரு விருந்தினரான பவா செல்லத்துரையை விட்டும் என்னை அடித்தார்கள். பவா ஒரு கம்யூனிஸ்ட். அவரும் நீயா நானா கோஷ்டியோடு சேர்ந்து கொண்டு நான் வாசகர்களை ஏமாற்றியது (!) தவறு என்றார்.

ஏன் ஐயா, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடுமா? ஒரு பெண் ஒருவனை நம்பிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறாள். பிறகுதான் தெரிகிறது, அவன் ஏற்கனவே ஏழு கல்யாணம் செய்து கொண்டவன் என்று. தாலியை அறுத்துப் போட்டு விட்டு வந்து விடுகிறாள். என்னுடைய நிலைமையும் அதுதான். நித்தி தன்னை சாமி என்றார். எனக்கு ஆசாமியையும் பிடிக்கும்; சாமியையும் பிடிக்கும். மேலும், மிக வெகுளியான ஒரு ஆள் நான். நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவேன். ஏனென்றால், நீங்கள் ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். ஒருவர் சொல்வதை நான் ஏன் பொய் என்று நினைக்க வேண்டும்? அப்படி நினைப்பது என்னைப் பொறுத்தவரை அராஜகமாகத் தோன்றும். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் அதை உண்மை என்றுதான் நம்புவேன். அதுவும் ஒருவர் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வது எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? ஒருவர் கடவுளிடம் போய் ஜேப்படித் திருட்டு செய்ய முடியுமா? அதனால்தான் நித்தியை நம்பினேன்.

இதில் நான் என் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? எங்கள் எல்லோரையும் ஏமாற்றிய நித்தி அல்லவா எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?

உதாரணமாக, நான் நித்தியை நம்புவதற்கு முன்னதாக மார்க்சீயத்தை நம்பினேன். ஸ்டாலினையும் மாவோவையும் நம்பினேன். இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்தை உருவாக்கிய சாரு மஜூம்தாரின் முதல் பாதியைத்தான் என் பெயராக ஆக்கிக் கொண்டேன். நான் மட்டும் அல்ல; 30 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் எத்தனையோ பேர் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டார்கள். அதில் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகம்.

பிறகு நடந்த கதை நம் எல்லோருக்கும் தெரியும். கம்யூனிஸ்ட் ரஷ்யா வீழ்ந்த பிறகு உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் பெயரால் நடந்த கொலைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. ஹிட்லர் கொன்றது 90 லட்சம் பேர் என்கிறது புள்ளிவிபரம். ஆனால், மக்கள் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கம்யூனிசத்தால் ஸ்டாலினின் ரஷ்யாவில் கொல்லப்பட்டது 60 லட்சம் பேர்; மாவோவின் சீனாவிலும் 60 லட்சம். கம்ப்யூச்சியாவில் இரண்டே ஆண்டுகளில் இரண்டு லட்சம் பேர் படுகொலை. இதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிசத்தின் பெயரால் பல லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.

இந்த நிலையில், தான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தோம் என்பதற்காக யாராவது மன்னிப்புக் கேட்டார்களா? பவா செல்லத்துரை கேட்டாரா? போலிச் சாமியார்கள் ஒன்றும் இந்த அளவுக்குச் செய்யவில்லையே? தங்கள் சுயநலத்துக்காக மக்களை ஏமாற்றினார்களே தவிர ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்று சக மனிதர்களைக் கொல்லவில்லையே?

தான் ஒரு தத்துவத்தை நம்பியதற்காக யாரும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு தத்துவத்தை அல்லது நபரை நாம் நம்புகிறோம். பிறகு அந்த நம்பிக்கை வீழ்ச்சி அடையும்போது அதை நாம் ஒரு அனுபவமாகக் கொள்கிறோம். அப்படி நம்பியதற்காக யாரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், நித்யானந்தாவை பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த ஊடகங்கள் குமுதமும் விஜய் டி.வி.யும்தானே தவிர நான் அல்ல; குமுதத்தில் நித்தியின் தொடர் ஐந்தாறு ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தது. நித்தியை குமுதம் சாமியார் என்றே பொதுமக்கள் அழைத்து வந்தனர். மேலும், நித்தியின் பிரசங்கம் விஜய் டி.வி.யில் வாரம் இரண்டு முறை வந்து கொண்டிருந்தது. ஆக, நித்தியை பிரபலப்படுத்திய குமுதமும், விஜய் டி.வி.யும் இப்போது மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆண்டனியும், கோபிநாத்தும் சொல்வார்களா? சொன்னால் அவர்களின் சீட்டே கிழிந்து போகும். சீட்டு கிழிந்தால் இந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் இருவருக்கும் கிடைக்கும் மிகப் பெரிய தொகை கிடைக்காமல் போகும். அதனால் அது பற்றி நம் நீயா நானா நாயகர்கள் வாய் திறக்க மாட்டார்கள். எவனாவது ஒரு எழுத்தாளன் மாட்டினால்தான் தமது கோரைப் பற்களைக் காட்டுவார்கள்.

மேலும், நித்யானந்தாவை நம்பி அவருடைய எழுத்தையும், பேச்சையும் பிரபலப்படுத்திய குமுதமும் விஜய் டி.வி.யும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் மூடன் அல்ல. வாழ்க்கையே நம்பிக்கையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு தத்துவத்தையோ ஒரு நபரையோ நாம் நம்புகிறோம். பிறகு அந்தத் தத்துவம் அல்லது நபர் நமக்கு அளித்த தோற்றம் பொய் என்று தெரிந்து அதை விட்டு விலகி விடுகிறோம். அதைத்தான் குமுதமும், விஜய் டி.வி.யும், நானும் செய்தோம். இதில் மன்னிப்புக் கேட்பதற்கெல்லாம் ஒன்றுமே இல்லை.

ஆனால் எனக்கும் இதன் மூலம் ஒரு படிப்பினை கிடைத்தது. டி.வி.யில் முகம் தெரிய வேண்டும் என்ற அற்பத்தனத்துக்கு எனக்குக் கிடைத்த அடியே இது என்று இந்தக் கசப்பான நிகழ்ச்சியின் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.

(இந்தக் கட்டுரையை லக்கிலுக், நர்சிம், தண்டோரா மணி, அதிஷா, கேபிள் ஷங்கர் போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப் பரவலாக வாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விஜய் டி.வி.யின் பார்வையாளர் தளம் மிக விரிந்தது. கோடிக்கணக்கான பேர் பார்க்கக் கூடியது. அதனால் என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்)