
பார்த்தவுடன் கண்டுபிடித்து விட்டேன்.எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன?கண்டுபிடிப்பது மனசுதானே.அப்படியேதான் இருந்தாள்.என்ன..கொஞ்சம் வயசாயிருந்தது.அந்த கம்பீரம் அப்படியே இருப்பதாய் பட்டது.ஆனால் ஒரு மெலிதான சோகம் முகத்தில்.அவள்?பெயர் தெரியாது.தெரிஞ்சுக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
நான் சென்னையில் இருந்தபோது 8.50 மின்சார ரயிலை பிடிப்பேன்.அப்போதுதான் அவளை பார்த்தேன்.லேடிஸ் பெட்டியில் ஜன்னலோர மலராய் பூத்திருந்தாள்...அடுத்த நாள் அந்த ரயிலை பிடிக்க நான் பரபரத்தபோதுதான் என்னை இழந்துவிட்டதை உணர்ந்தேன்.அன்றிலிருந்து அந்த ரயிலை தவறவிடுவதில்லை.ஜன்னல் தரிசனம் ஆனப்பிறகு அடுத்த ரயிலை பிடிப்பதே வழக்கமானது.தொடர்ந்து அவளை பார்ப்பது,கவனத்தை ஈர்ப்பது..பின் பேசலாம் என்று திட்டம்...ஆனால் திடீரென்று ஒரு வாரம் அவளை காணமுடியவில்லை..
கிட்டதட்ட பைத்தியம் பிடித்தது.ஒருதலைதான்.இருந்தாலும் அந்த வேதனை...அதை அனுபவித்தேன் என்றே சொல்லவேண்டும்.அவளூம் என்னை தீவிரமாக விரும்பி,சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக எங்கோ சென்றாள் என நினைத்து,அவள் வருகைக்காக காத்திருப்பின் சுகத்தை ரசிக்க தொடங்கியிருந்தேன்.
அவள்வந்துவிட்டாள்..தனியாகஇல்லை...கூடஒருவன்....
திருமணமாகியிருந்தது...பாக்கியவான்...என்ன வரம் வாங்கி வந்திருக்கிறான்...அதே 8.50 ரயிலதான்...ஆனால் இருவரும் சேர்ந்து பொதுபெட்டியில்.நான் அவர்கள் எதிரில் தேர்டு பர்சன் சிங்குலரில்(இருவர் அமரும் சீட்டில்”கொஞ்சம் அவர்கள் பெரிய மனதுடன் ஒதுக்கி தரும் அந்த இடம்).அவள் எதோ பேசிக்கொண்டே வருவாள்.மெல்லிய குரல்.அவனுக்கு மட்டுமே கேட்கும்.அவன் வாங்கிய வரத்தை அனுபவிப்பது போல் இருப்பான்.அவன் பேசி நான் பார்த்ததில்லை.தேவி உபாசகன் போல் இருக்கை நுனியில் பவ்யமாக உட்கார்ந்திருப்பான்.மணியன் செல்வத்தின் ஓவியம் என்று நான் அவளை வர்ணிப்பேன்.
இப்பவும் அப்படித்தான் இருந்தாள்.காதோரம் கொஞ்சம் நரை.கூட அவன்.கணவனா?எப்படி இன்னும் இளமையாக?ம்ம்ம்..அவன் இல்லை.அவர்கள் மகன் என்று நினைக்கிறேன்.கல்லூரியில் படிக்கவேண்டும்....அப்படியே அப்பா மாதிரி..ஆனால் அந்த மூக்கு அவள்தான்.மீண்டும் அவளை பார்த்தேன்.அந்த உச்சிப்பொட்டு இல்லை.காலில் மெட்டி இல்லை.அப்ப அவன் ...அடப்பாவி.நீ அபாக்கியவானா?இல்லை அவள் அபாக்கியவாதியா?அவள் மகன் அப்பாவை போலவே அமர்ந்திருந்தான்.அவள் பேசிக்கொண்டே வந்தாள்.அறிவுரையாக இருக்கலாம்.
எக்மோரில் நான் இறங்க வேண்டும்.அவர்களூம் எக்மோரில் இறங்கினார்கள்.ஆனால் நான் மீண்டும் ரயிலில் ஏறினேன்.அவர்கள் இருக்கைக்கு சென்றேன்.முதலில் அவள் அமர்ந்த இருக்கையில் அமர நினைத்தேன்.ஆனால்..என்னமோ தெரியவில்லை மகனின் இருக்கையில்அமர்ந்தேன்...உபாசகன் போலவே.
இப்போது அவள் முகம் எனக்கு பேரன்போடு பிரகாசமாய் தெரிகிறது.ஒரு காற்றில் அலைபாயும் சிறகாய்,திரிந்து வந்தாயா?பரிவு காட்டுகிறாள்...கவலை வேண்டாமடா மகனே என்று உருகுகிறாள்....எனக்கு கேட்கிறது.ஆனந்தமாய் அழ ஆரம்பிக்கிறேன்....