Sunday, October 30, 2011

மூன்றாவது பர்த் ...உமா சீரிஸ் -2


பாட்டு கேக்கறீங்களா ? எல்லாம் ராஜா கலெக்‌ஷன்ஸ் என்றான் அவன் . ஐ பாட்டை எடுத்து பா (மா) ட்டிகொண்டேன் . என்னை ரசிக்கிறான் என்று புரிந்தது .. ஆனந்தராகம் என்று பதிமன் வயதுக்குள் காதலை கடந்து விடும் பாடல் ஒலிக்க அவனை பார்த்தேன் .. ரமணாவின் நியாபகம் வந்தது .. கன்னியர் தம் கடைக்கண்ணை காட்டி விட்டால் காளையருக்கு மாமலையும் சிறு கடுகாம் “ என்று காலேஜ் கல்ச்சுரல்சில் ரமணா கம்பீரமாக ஆரம்பித்ததும் , சட்டென ஏதோ ஒன்று உடைந்து அவளுக்குள் இறங்கியதும் .... இவன் பெயர் என்னவாக இருக்கும் ... கொஞ்சம் ரமணா மாதிரியும் இல்லாமல் இருக்கிறான் .. ஆனந்தராகம் சரணத்துக்கு மாறியிருந்தது ..

பாவி உமா ! அவனையா என்றாள் ராஜி ... 

ஏன் ? அவன் என்ன உச்சாணிக்கொம்பா என்றேன் ..கொஞ்சம் கர்வத்துடன்.. என் அழகின் மீது எனக்கு கொஞ்சம் கர்வமிருந்தது .. அருணின் அந்த வர்ணனைக்கு பிறகு .. உயிரை குழைத்து இதை எழுதியிருக்கிறேன் என்ற அருணின் ஆரம்ப வரிகள்.. அதன் பின் ராஜபார்வையில் மாதவியை கமல் வர்ணிப்பதையெல்லாம் தாண்டி ... கடிதத்தை அப்படியே கிழித்து விட்டு கண்ணாடிக்கு ஓடினேன் .. என் தனியறை ..ஆளுயர கண்ணாடி .. அரைமணி நேரம்.. எனக்குள் படர்ந்திருந்த கர்வம் ..கொழுந்து விட்டு எரிய தொடங்கியிருந்தது .. 

“காந்த சிலையழகன் .. கற்கண்டு சொல்லழகன் என்றேன்...ஜன்னி வந்தது போல்.. 

முதல்ல அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கான்னு பாரு என்றாள் ராஜி ..கொஞ்சம் காந்தல் வாசம் வந்தது .. ஒரு கேள்விக்குறியுடன் அவளை பார்த்தேன் ..

எனக்கும் அவனை பிடிச்சிருக்குடி உமா ..புரொஃபோஸ் பண்ணப்போறேன் என்றாள் .. பண்ணிக்கோ என்றேன் ...நீ என்னை விட ஒரு மாற்று கம்மிதானடி தங்கமே என்பதையும் சேர்த்து.. 

ஓகே...பசங்கதான் பண்ணனுமா என்ன? நாம ரெண்டு பேரும் அவனை புரெஃபோஸ் பண்ணலாம்... அவன் யாரை லவ் பண்றான்னு பார்க்கலாம் என்றேன்..மவளே...உன் மேல மட்டுமில்ல ..அவன் மேலேயும் ஆசிட் ஊத்திடுவேன் என்று மனதுக்குள் கர்விக்கொண்டே..

அதன் பின் நிறைய சந்தர்ப்பங்கள் .. காலேஜில், இண்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ் போன இடத்தில் , ஒரு சமயம் கோயிலில் என்று பொங்கி வழிந்திருக்கிறேன் காதலாய்.. ஆமோதிக்கிறானா...நிராகரிக்கிறானா என்றே புரியாத ஒரு மர்ம புன்னகைதான் அவனிடம் .. அன்று லேபிற்குள் ரமணன் போவதை பார்த்து விட்டு ,கொஞ்சம் தயங்கி பின்னால் போகிறேன்.. அவனை காணவில்லை .. கால்கள் நகர மறுக்க ,கண்களால் துழாவுகிறேன் .. ரமணன் வருகிறான் ..அதே மர்ம புன்னகை.. இதழ்களில் ஏதோ விஷமம்.. என்ன செய்கிறேன் என்று தெரியாமல் இரு கைகளை வாரி அணைப்பது போல் அவனை பார்த்து நீட்டுகிறேன்.. கண்களை மூடிக்கொள்கிறேன்.. காற்றில் அவன் என்னை நோக்கி வரும் வாசம் வீசுகிறது.. உதடுகளை ஈரப்படுத்திக்கொள்கிறேன்..

எக்ஸ்யூ மீ உமா ..என்ன கேட்டீங்க...

மெல்ல கண்களை திறக்கிறேன்.. அவன் தான்..ம்ம்.. என்று சுதாரிக்க முயற்சிக்கிறேன்..

என்ன கேட்டீங்க.. ரமணாவைத் தெரியுமா என்றுதானே.. நீங்க கேட்டிருப்பீங்களே... முதல் பாட்டு ..ஆனந்தராகம்... உமா ரமணன்.. பெரிய விசிறி நான் என்கிறான் அவன்... ஏதோ ஸ்டேஷனில் வண்டி நிற்கிறது ..துணி உலர்த்தும் கம்பியில் வரிசையாக நிலம் பார்க்கும் ஈரத்துளிகள் ... யாரோ சட்டென உதறி விட வெறுமையாக இருக்குமே..அதைப்போன்ற ஒரு மனநிலை.. மீண்டும் கண்களைமூடிக்கொள்கிறேன்.

“நீ தானே என் பொன் வசந்தம்” 

பாலுவின் குரல் இழைய ஆரம்பிக்கிறது...