
திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லி.அவருடன் இரண்டு படங்கள் வேலை பார்த்திருக்கிறேன்(துணை இயக்குநராக).சென்ற மாதம் கேணி கூட்டத்தில் சந்திக்க நேர்ந்தது.மிகவும் நல்ல மனிதர்.இன்றும் பேச்சில் தெற்கத்தி வாடை வீசும்.ஸ்ரீ அரவிந்த அன்னையின் தீவிர பக்தர்.அவரை பற்றி சில விஷயஙகள்
பிறந்த ஊர் விருதுநகர். பெற்றோர் ஆசிரியர்கள். கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரியில் பி.எஸ்ஸி., (வேதியியல்) பட்டம். மதுரை காமராஜர் பல்கலை.யில் எம்.ஏ. (வரலாறு) பட்டம். காரைக்குடி அழகப்பா பல்கலையில் எம்.ஃபில். ஆய்வு. தலைப்பு: ""தமிழ் திரைப்படத்தின் வளர்ச்சியில் (1937 முதல் 1967 வரை) நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு''.
1980-ல் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சகத்தில் இசை நாடகப் பிரிவில் இந்திய அரசு கலைஞராகப் பணி. வீதி நாடகங்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் நாடகங்கள் அரங்கேற்றம். 1982-ல் "பொய்க்கால் குதிரை' திரைப்படத்தில் இயக்குநர் சிகரம் பாலசந்தரால் நகைச்சுவை நடிகராக அறிமுகம்.
550 படங்களுக்கு மேல் நடிப்பு. ""நண்பா...நண்பா...'' திரைப்படத்தின் மூலம் உலக திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான போட்டியில் கலந்து கொள்ளத் தேர்வு.
"வெற்றிக்கொடி கட்டு', "நியாயத் தராசு' "பூவே உனக்காக', "காதலுக்கு மரியாதை' "அந்நியன்' போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக தேசிய விருதுக்குப் பரிந்துரை. தமிழக அரசின் கலை வித்தகர்களுக்கான "கலைவாணர்' விருது. தமிழக அரசின் "கலைமாமணி' விருது.
இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரர் மனோகர். இப்படி அவரது இயற்பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாது. அவர்தான் நடிகர் சார்லி.
நடிகர்களைப் பற்றிய பொதுமக்களின் பொதுவான அபிப்ராயத்தை நாம் திருவாய் அருளி சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அதிலிருந்து மாறுபட்டு கலை, இலக்கியம், மனித நேயம் மீது உண்மையான காதலுடன் வலம் வரும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்தான் தெரிகிறார் சார்லி.
அவருடைய நேர்காணலை படிக்க நேர்ந்தது.அது உங்களுடன் பகிர்ந்து கொள்ள.
நடிப்புக்கு இடையே "இளம் முனைவர்' (எம்.ஃபில்) ஆகியிருக்கிறீர்களே. இதெல்லாம் எப்படி?
எதில் மனதுக்கு ஈடுபாடு உள்ளதோ அதுவெல்லாம் முடிய கூடியதுதான். முடியாதது என்று எதுவுமே இல்லை. நான் சினிமாவில் இருந்தாலும் இதைச் செய்ய வேண்டும் என நினைத்தேன். மனமும் ஈடுபட்டது. அதனால் முடிந்தது.
அதென்ன 1937 முதல் 1967 வரையில் மட்டும் ஈடுபாடு?
ஒரு பொருள் குறித்து ஆய்வு செய்தால் அதற்கான காலவரையறை அவசியம். அதனால் அப்படி ஒரு வரையறை வைத்துக் கொண்டேன்.
அதுமட்டுமின்றி 1937 என்பது தமிழ் சினிமாவின் தொடக்கம். 1967 என்பது நவீன சினிமாவின் தொடக்கமாக கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு அதிகம். அந்தக் காலகட்டத்தில் எல்லா நகைச்சுவை நடிகர்களும் சினிமா தயாரித்திருக்கிறார்கள், இயக்கி இருக்கிறார்கள். ஆய்வுக்கான களம் பெரிது.
உங்களது ஆய்வில் என்ன பதிவு செய்துள்ளீர்கள்?
உலக சினிமாவை பிரதிபலிக்கும் ஒட்டுமொத்த நகைச்சுவை கலைஞர்களும் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். சினிமாவில் கூறிய கருத்துகளை சொந்த வாழ்விலும் கடைசிவரை பின்பற்றியும் வந்திருக்கிறார்கள்.
சமத்துவம் பேசிய எம்.ஆர். ராதா, தனது மகனுக்கு "ரஷ்யா' என பெயரிட்டார். அதை சிலர் கேள்வி கேட்டனர். "திருப்பதி', "பழனி' என ஊரின் பெயரை வைக்கும்போது "ரஷ்யா' என நாட்டின் பெயரை வைத்தால் என்ன என எதிர்கேள்வி கேட்டுள்ளார்.
வி.கே. ராமசாமி, தான் கஷ்டபட்ட காலத்தில் கூட நகைச்சுவை உணர்வை விட்டுவிடவில்லை. அவர் பட்ட கடனுக்காக வீட்டை விற்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. "வீட்டை ஏன் விற்கிறீர்கள்' என நீதிபதி கேட்டார். "நீதிபதி அவர்களே எனக்கு இருக்கும் கடனுக்கு தெருவையே விற்கணும். அது முடியாததால் வீட்டை விற்கிறேன்' என கூறியுள்ளார்.
திருமண வீடு ஒன்றில் தனது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற சிறுமி பின்னர் குமரியான போது அவரையே தனது படத்தில் கதாநாயகி ஆக்கியவர் என்.எஸ். கிருஷ்ணன். அவர்தான் நடிகை பத்மினி. இப்படி நாகேஷ், டி.எஸ். பாலையா, ஏ. வீரப்பன் ஆகியோரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
அப்போது இருந்த நகைச்சுவை உலகத்துக்கும், இப்போதைய நகைச்சுவை உலகத்துக்கும் என்ன வேறுபாட்டை பார்க்கிறீர்கள்?
அப்போது இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை. கதை களம் வலுவாக இருந்தது. அதை சுற்றி நகைச்சுவை இழையோடும். இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது. கதையே நகைச்சுவையாக மாறிவிட்டது. நகைச்சுவை நீர்த்து போனதாக இருக்கிறது.
இதில் நகைச்சுவை நடிகராக உங்கள் பங்களிப்பு பற்றி என்ன உணர்கிறீர்கள்?
நான் நிறைய படங்களில் இருந்திருக்கிறேன். சில படங்களில்தான் நடித்திருக்கிறேன். நான் செய்யும் நகைச்சுவை பாத்திரங்கள் மனதைத் தொடுவதாக இல்லாமல் சிந்தனையை தூண்டுவதாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.
அந்தக் காலம் மாதிரி இப்போது இல்லை. நகைச்சுவை நடிகர்களுக்கு வேறு ஒருவர் எழுதி கொடுப்பதைத்தான் இப்போது சொல்கிறார்கள் என கூறப்படுகிறதே?
அந்தக் கால நடிகர்கள் கேமரா முன் நின்ற உடனே இயல்பாக பேசுவார்கள். எழுதி கொடுத்த வசனத்துக்கு இடையிலேயும் சொந்த நகைச்சுவையை எடுத்து விடுவார்கள். நாகேஷ், வி.கே.ஆர். எல்லாம் அப்படி செய்வார்கள்.
இப்போது வடிவேலு, மகா கெட்டிக்காரர். கேமராவுக்கு முன்னால் அவரைப் போல இயல்பாக நகைச்சுவை செய்ய முடியாது. அவர் ஒரு "சூப்பர் காமெடியன்'. எதுவாக இருந்தாலும் களத்தை உருவாக்கி கொடுப்பவர் இயக்குநர்தான்.
நகைச்சுவையின் போக்கு எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?
தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும். அதனுடன் சேர்ந்து நகைச்சுவையை சொல்ல வேண்டியது இருக்கும்.
நகைச்சுவை கதவை திறப்பது "காமிக்'. கதவை நகைச்சுவையாக திறப்பது காமெடியன் என்பார்கள். அதேபோல், நல்ல நகைச்சுவை நடிகர்கள் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருப்பார்கள்.
இப்போது சினிமா தவிர வேறு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
அகந்தை தலைதூக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான போராட்டம் தொடர்ந்து எனக்குள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த சேனல் தொடர்ந்து 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
நடிகர்களுக்கு இலக்கியம் அவசியம். அது தொழிலின் ஒரு பகுதி என்பதால் தொடர்ந்து படிக்கிறேன். அது எனது சிறப்பு தகுதி அல்ல..
நண்பர் சார்லி இன்னும் சாதனைகள் நிறைய செய்ய வேண்டும் என்று வாழ்த்துவோம்
டிஸ்கி: கேபிள் கவிதை, அரசியல் எழுத ஆரம்பித்து விட்டார்.. கவிஞர் வாசு சினிமா விமர்சனம் எழுதுகிறார்.. அதனால் நண்பர் முரளிக்கண்ணன் மன்னிக்கவும்.அவர் ஏரியாவில் அனுமதியின்றி நுழைந்ததற்கு...