
பார்வதி அம்மாள் திருப்பியனுப்பபட்ட விஷயத்தில் எவ்வளவு அரசியல் இருக்கிறது என்பது ஓரளவுக்கு யூகிக்க முடிந்ததே. பத்திரிக்கைகளும் எழுதியிருக்கிறார்கள். வழக்கம் போல் ஜீனியர் விகடன் வைகோவின் பேட்டியை போட்டு கொஞ்சம் அரிப்பை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பதிவுலகம் அதற்கு மேல் பற்றி எரிகிறது. டோண்டு போட்ட ஒரு இடுகை அவருக்கு தமிழ்மண வரலாற்றில் ஒரு நிரந்தர இடத்தை வாங்கி கொடுத்திருக்கிறது. பாம்பையும், சாம்பையும் பார்த்தால் முதல்ல சாம்பை அடி என்பது போல் பின்னூட்டங்களும், எதிர் பதிவுகளும்..
டோண்டு என்ன அத்தாரிட்டியா? அவர் கருத்தை அவர் சொன்னார். ஆனால் சொன்ன தொனியில் தப்பு இருந்ததே தவிர, அதன் உள்ளடக்கம் இங்கு நடக்க கூடியதுதான். இதற்கு முன் கூட நிறைய முறை இதை நாம் அனுபவித்திருக்கிறோம். என்னவோ அந்தாள்தான் திருப்பி அனுப்பியது போல் இங்கு சீன் நடந்தது. மனிதாபிமான அடிப்படை என்று வாய்க்கு வாய் சொல்கிறார்கள். அப்புறம் ஏன்யா ரகசியமாய் வரவேண்டும்? இங்கு தலை யார்? வைகோவா, திருமாவா, நெடுமாறனா? மாநில, மத்திய அரசின் ஒத்துழைப்பு வேண்டுமென்றால் நீங்கள் யாரையா அணுக வேண்டும்? கருணாநிதியை.. அம்மாள் வருவது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் பார்வதியை அம்மையாரின் உடல்நிலையை இவர்கள் அரசியலாக்க நினைத்தார்கள். அது நடந்து விட்டது. ஆம் நண்பர்களே . அவரை அனுமதித்திருந்தால் இவர்களுக்கு என்ன பெயர் கிட்டியிருக்கும்? அந்த கிரெடிட் தமிழினத்தலைவருக்கு அல்லவா போயிருக்கும்? இப்போது பாருங்கள். வைகோ தியாகியாகி விட்டார். முக துரோகியாகி விட்டார். அவர்கள் எதிர்பார்த்தது அதுதான்.
இங்கு டோண்டுவும் அப்படித்தான். சோவின் தலையங்கத்தை ஒரு வாரம் முன்னாடியே இவர் போட்டு விட்டார். கிளம்பின ராக்கெட்டுகள். டோண்டுவின் பிறப்பு , வளர்ப்பு, நல்ல சாவா இல்லையா ஆராய்ச்சிகள். ஒருத்தருக்காவது கருணாநிதியையோ, சோனியாவையோ இது போல் சாடும் தைரியம் இருக்குமா என்று தெரியவில்லை.
முத்துகுமார் மரணத்துக்கு பின் யாரும் எழுதுவதை நிறுத்தவில்லை. அதை பற்றி எழுதி விருது வாங்கினவர் உட்பட. இலங்கை பிரச்சனை பற்றி திவீரமாக எழுதும் அதே விரல்கள் தான் இன்ன பிறவும் எழுதுகின்றன. யாரும் உங்கள் தமிழ் பற்றை தவறாக நினைக்க மாட்டார்கள் நண்பர்களே. நீங்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்து எழுதுங்கள். ஒரு நண்பர் எழுதுகிறார் . டோண்டு சிங்கள விருந்தாளிக்கு பிறந்திருப்பாரோ என்று. நன்று நண்பரே.. சிங்கையிலோ, சவுதியிலோ இருந்து எழுதுவதில் வீரம் இல்லை. சென்னைக்கு வாருங்கள். உங்கள் வீரத்தை அதிகாரத்திடம் காண்பியுங்களேன்.
ஒரு விஷயம். நான் மு.கவையோ, ஜெவையோ திட்டி போடும் இடுகைகளில் சிலர் பின்னூட்டம் கூட போட மாட்டார்கள். மாறாக என்னிடம் அலைபேசியில் அதை சொல்வார்கள். அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் எல்லோரும் ஒரே மாதிரி குற்ற உணர்ச்சியில் யோசிப்பதுதான். உங்களால் என்ன தியாகம் இயலும் ? சொல்லுங்கள்.. அதற்கேற்ப நாம் ஒரு போராட்டம் அறிவிக்கலாம்.