Tuesday, July 27, 2010
இன்ன பிற
பத்ம வியூகத்தில் அபிமன்யூ
வைகுண்ட ஏகாதசிக்கு
இரண்டு படங்களாம்
பராசக்தியும் , பெண்சிங்கமும்
கூவாகத்தில் சிலை
பீஷ்மருக்கு
செருப்பு மாலையும்
விந்தாபிஷேகமும்
சர்ப்ரைஸ் ஷாக்
பீமனை சரவண பவனில்
சப்ளையராக பார்த்ததில்
கதை என்ன ? என்றேன்
செருப்பு மாறிப் போச்சு என்றான் .
அர்ஜீனனுக்கு மதுரையில் வேலையாம்
கூலிப் படைக்கு தலைவனான்
வச்ச குறி தப்பாது
சோழி உருட்டி ஜோசியம்
சகாதேவனுக்கு கிளி
சூப்பு ரொம்ப இஷ்டம்
லேசர் சிகிச்சைக்கு முன் பதிவு கியூ
திருதராஷ்டிரன் , குந்தி சகிதம்
நாங்க இருக்கோம் என்ற
இளைஞனை வெறிக்கிறாள் .
மூச்சில் உஷ்ணம் ஏறுகிறது
துரியோதனன் தொடையில்
டாட்டூஸ் குத்தப்படுகிறது
இலவச டிவி
கிருஷ்ணனுக்கும் ஒன்று கிடைத்தது
ஜெமினி சானலில் என்.டி.ஆரை
பார்த்த பிரமிப்பு அவனுக்கு
மனுநீதி சோழன் கதை
தருமனுக்கு சொன்னார்கள்
கோபாலபுரம் தரிசனம்
கோடி புண்ணியமாம்
மேல்சபையில் சீட்டு
அவனுக்கும் நிச்சயமாம்
நேரடி ஒளிபரப்பாம்
துச்சாதன துகிலுரிதல்
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்
போத்திஸின் சாமுத்திரிகா பட்டு
Friday, July 23, 2010
கிளியுடன் ஒரு இரவு
Tuesday, July 20, 2010
கால் எத்தும் கழுதை .. 2
Monday, July 19, 2010
காதலாகி வாடா
இந்த கதையில் சிக்கல் இருகிறதா என்று எனக்கு தெரியவில்லை . ஆனால் இதை எழுதுவதில் இருக்கும் சிக்கல் தெரிந்தேயிருக்கிறது. கொஞ்சம் அலுப்பாக இருந்தது எனக்கு . வழக்கமாக இந்த டைப் கதைகளை முதல் பாராவிலேயே யூகித்து விடலாம் . இதுவும் அந்த ரகம் தான் . ஒரு சிகரெட்டை பற்ற வைத்தேன் .
மூன்றாவது முறையாக முகத்துக்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்தேன் . வாசலில் சைக்கிள் பெல் கேட்டது . வந்துட்டா சண்டாளி..சக்களத்தி..புவனா..பிசாசு...ஆனால் மத்தவங்களுக்கு தேவதை....அழகிய அசுரன்களுக்கு தேவபானம்.
அரை மணி ஆச்சு புவனா..அந்த தேய் தேய்க்கிறா..என்ன தேய்ச்சாலும் காக்கா கறுப்பு உதிர்ந்துடுமா என்ன ? இந்த நியாயத்தை நீயே கேளுமா புவனா . நேத்து ராத்திரி படிக்காம உம்முனு உக்கார்ந்திருந்தா . என்னடி சாப்பிடறியான்னு கேட்டேன் .
ஏம்மா நீ சாப்பிடலை ?
அடிப்பாவி . இப்பதான் உன் கண்ணு முன்னாடி கொட்டிகிட்டேன் .
சனியனே . அதை கேக்கலை . நான் உன் வயித்துல இருந்தப்ப ஏண்டி குங்குமப்பூ சாப்பிடலைன்னு கேட்டா பாரு . என்னம்மா ஆச்சு ? யாராவது எதாவது அவ நிறத்தை கிண்டல் பண்ணாங்களா ?
பார்றா . ரெண்டு பேரும் கட்சி பிரசாரத்துக்கு போறாப்ல இருக்கு . கருப்பும் , சிவப்பும்... பெரிதாக சிரித்தார்கள் அந்தப் பையன்கள் .
எனக்கு அவர்கள் மேல் கோபம் வரவேயில்லை . இந்த சண்டாளி புவனா மீதுதான் வந்தது . சனியன் . என் கூட வராதடின்னு சொன்னா கேக்க மாட்டா . ஆனா நானும் அவளும் ஒன்னாவதுலேர்ந்து ஒன்னாத்தான் படிக்கிறோம் . எனக்கு ஒன்னுன்னா உசுரையே விட்ருவா தெரியுமா ?
பின்னால் யாரோ பெல் அடித்தார்கள் . யாரோ இல்லை .
அவன் தான்டி புவனா .
பேசாம வாடி .
சொன்னாலேயொழிய புவனாவின் முகத்தில் ஒரு மின்னல் வெட்டியது . ஏற்கனவே மினுமினுத்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டே , கடந்து போனவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் .
உனக்கு அவனை பிடிச்சிருக்காடி ?
சீ..சீ.. சும்மாத்தான் . இவன் மட்டுமா என்னை சைட் அடிக்கிறான் . பாலு , கணேசன் . அதுவும் கணேசன் விட்டா , கால்லயே விழுந்துடுவான் . இவன் பேர் தெரியுமாடி உனக்கு ?
எனக்கு அவன் பெயர் தெரியாது . ஆனால் அவனுக்கு நான் ஒருபெயர் வைத்திருக்கிறேன் . ராஜகுமாரன் . தேருக்கு பதில் சைக்கிள் . அதில் அவன் பின்னால் இல்லையில்லை முன்னால் உட்கார்ந்து போகிறேன் . ரெண்டு பக்கமும் வாய்க்கால் ததும்ப ஓடுகிறது . நடுவில் நாங்கள் .
ஒரு கவிதை சொல்லவா ?
சொல்லேன்டா ராஜகுமாரா ..
சொல்வேன் . ஆனா உன் பேர் எனக்கு தெரியாதே .
சொல்லட்டுமா ?
வேண்டாம் . நானே உனக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறேன் .
பெல்லடித்தது . கிளாசில் என் பெயரை அழைக்கிறார்கள் . வருகை பதிவேடுக்கு .
ராஜகுமாரி என்கிறான் என் ராஜகுமாரன் . குப்பென்று வியர்த்தது எனக்கு . பாவியா நான் .
என்னை இறக்கி விடுடா என்கிறேன்
ஏண்டி பெஞ்சு மேலயா நிக்கறே . இறக்கி விடுதற்கு என்கிறாள் புவனா . ஒட்டு மொத்த கிளாசும் சிரித்தது . எனக்கு அவமானமாக இல்லை . ஆசையாக இருந்தது . ஒரே முறை.. அந்த சாலை.. அவனுடன் சைக்கிளில் ... அதை புவனா பார்க்க வேண்டும் . நான் செத்து போகிறேன்டா பாவி .
எனக்கு கொஞ்சம் சுவாரசியம் கதையில் வந்திருந்தது . கொஞ்சம் யூகிக்கவும் முடிந்தது . மீண்டும் ஒரு சிகரெட் . இந்த கதையை எழுதியவள் பெயரை குறிப்பிட்டுக்கவில்லை . ஒரு வேளை ராஜகுமாரியைத் தவிர வேறு பெயரை அவள் விரும்பாதிருக்கலாம் . ஆனால் நிச்சயம் அவள் பெயர் ராஜகுமாரியாய் இருக்க முடியாது . விலாசம் இருக்கிறதா என்று பார்த்தேன் . இல்லை .
என்னடி இன்னிக்கு அவனை காணும் என்றாள் புவனா .
வராட்டி என்ன இப்போ ? உனக்குத்தான் அவனை பிடிக்கலை இல்ல ..
அதுக்கில்லடி . தினம் வருவானே அதான் . அங்க பாரு கணேசன் தவமிருக்கறதை . புவனாவின் சிரிப்பு கொஞ்சம் அகங்காரமாய் இருந்தது . சனியனே கணேசனை நீ வச்சுக்கடி . ராஜகுமாரனை எனக்கு கொடுத்துடுடி . பதிலுக்கு வேணும்னா என் உயிரை கூட எடுத்துக்கடி சண்டாளி . தோலை பாரு ..வெண் குஷ்டம் வந்தாப்ல .
கருப்புதாண்டி அழகு . காந்தல்தாண்டி ருசின்னு பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது . அதெல்லாம் உப்புமாவுக்குதாண்டி கிழவி.. காதலுக்கு இல்லடி
என்னடி நீயே பேசிக்கறே ?
உன் வேலையை பாருடி . உனக்கு என்ன பெரிய ரதின்னு நினைப்பா ? இனிமே நமக்குள்ள ஃப்ரெண்ட்ஷிப் இல்லடி . போய் முதல்ல இந்த தோலுக்கு வைத்தியம் பாருடி . ஏ தோ பெரிய வியாதி மாதிரி இருக்கு ..
கண்ணை மூடி விஷத்தை கொட்டிக் கொண்டே இருந்தேன் . புவனா கண்கள் கலங்கி , அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள் . நான் கண்களை மூடிக்கொண்டேன் . ராஜகுமாரன் வருகிறான் . ஏறிக்கோ என்கிறான் . இருடா என்கிறேன் . புவனாவின் தோளை தொட்டு உலுக்கினேன் . மிரள விழிக்கிறாள் . வெறித்துப் பார்க்கிறாள் . இடது கையால் அணைத்து , இடையை வளைத்து என்னை ஏற்றிக் கொள்கிறான் ராஜகுமாரன்.. என் ராஜகுமாரன் ...
எனக்கு ஒரு அழைப்பு . ஒரு சிகரெடை பற்ற வைத்து மாடிக்கு வந்தேன் . அந்த கதை இன்னும் முடியவில்லை . அதாவது நான் இன்னும் முடிக்கவில்லை . ஏனோ எனக்கு அந்த பெண்ணை இல்லை.. அந்த ராஜகுமாரியை பார்க வேண்டும் போல் இருந்தது .
நான் செய்தது தப்பான்னு தெரியாது . ஆனா சரின்னுதான் நினைக்கிறேன் . என்ன பணினேன்னு கேளுங்க . சொன்னா எப்படியும் கரிச்சு கொட்டுவீங்க . பரவாயில்லை சார் . அந்த பாரத்தை இறக்கி வைக்கத்தானே இதை எழுதினேன் .
புவனா என்னுடன் பேசுவதில்லை . தனியாத்தான் போறா. நான் செஞ்சதுதான் தப்புன்னு உணர முடியுது . ஆனா விட்டு கொடுக்க தயாரில்லை . ஆனா கதை இப்படியாகும்னு எதிர்பார்க்கவேயில்லை .
என் கல்யாணத்துக்கு புவனாவை அழைத்தேன் . ஆனால் அவள் வரவில்லை . ராஜகுமாரனை ஏறிட்டு பார்த்தேன் . என்னவோ ஏமாற்றம் அவனிடம் . மறைக்க முடியவில்லை அவனால் . நான் முடிவெடுத்து விட்டேன்.. என் பிரிய ராஜகுமாரா .. என்னால் முடியலைடா ...
நான் அவ்வளவு அழகாடா பாவி !
ஆமாம் நீதான் அழகு .. நீ என் தேவதை .. என் ராஜகுமாரி என்றான் அவன் . எனக்குள் நிகழ்ந்ததை சொல்ல தெரியவில்லை .
அப்போ நீ புவனாவுக்காக சுத்தி வரலையா ?
சே.. அவளும் அவ கலரும் ..திமிர் பிடிச்சவன்னு எழுதி ஒட்டியிருக்கு . ஆனா நீ ..எவ்வளவு அமைதி .. பார்த்துக் கிடே இருக்கணும் போல இருக்கும் எனக்கு தெரியுமா ? எத்தனை நாள் ஒளிஞ்சிருந்து உன் முகத்தை மட்டும் பார்த்திருக்கேன் தெரியுமா ? நீ எதாவது சொல்லச்சே .உன் கண்ணு அதுக்கு முன்னாடி பேசுமே அழகு.. அப்புறம் அந்த சின்ன , குட்டி வாய் ..எக்ளேர்ஸ் சாக்லெட் மாதிரி...வேட்கையுடன் அவன் நாக்கு நீள்கிறது . என் நெற்றியில் ஈரமாய் ... மெல்ல நாசியில் இறங்கி , உதடுகளுக்குள் நுழைந்து ...என் நாக்குடன் சேர்ந்து ..காளிங்கன் நர்த்தனமாய்
எனக்குள் ஒரு பனிக்குடம் உடைகிறது . என் நகங்கள் நீள்கின்றன . புவனாவின் தாமரை முகத்தில் ரத்த கோடுகளால் ஒரு ஓவியம் ....அழ ஆரம்பிக்கிறேன்
இது நடக்காதுடா பாவி .. வெட்டிப் போட்ருவாங்க உன்னை . உன்னை பலி கொடுக்கவா நான் ? இந்த காதலுக்கு அல்ப ஆயுசுதாண்டா ... ஆனா ஒரு நாள் நான் உன் கூட வாழ்வேன் நிச்சயமா...
காத்திருக்கிறேன்னு சொல்லி பிரிகிறான் என் ராஜகுமாரன்
ஆனால் நான் அவனுடன் ஒரு நாள் வாழ்ந்தேன் . என் கல்யாணத்தன்று . எனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையை நான் அவனாகத்தான் பார்த்தேன் . என்னால் அப்படிதான் பார்க்க முடிந்தது . அன்று இரவும்... வெறும் உடம்பில் என்ன இருக்கிறது . அது ஒரு சதைப்பிண்டம் . அவ்வளவுதானே . ஆனால் மனசு .. அது முழுதும் அவன் தானே ஊறியிருக்கிறான் .
இந்த கதையை எப்படி எடுத்து கொள்வதென்று எனக்கு தெரியவில்லை . ஆனால் அந்த ஊருக்கு போக வேண்டும். ரெண்டு பக்கமும் ததும்ப ஓடும் நீர் . நடுவில் அந்த பாதை . எங்காவது அவள் வாசம் இருக்கும்..இருக்க வேண்டும் .
Saturday, July 17, 2010
மானிட்டர் பக்கங்கள் 17/07/10
சன் டிவியில் (கலைஞரிலும்) முதல்வரின் கடிதத்திற்கு பிரதமர் பதில் எழுதியிருப்பதாக சொன்னார்கள் . அதாவது ஜீலை 3 ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் அது. கிட்ட தட்ட 15 நாட்களில் பதில் வந்து விட்டது. இலங்கையில் தமிழர்கள் கவுரமாக வாழ எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது . சந்தோஷம் நடந்தால் . சரி இந்த கடிதம் அடிக்கடி எழுதுகிறாரே . அதன் நடை முறை என்ன என்று தெரிந்து கொள்ள ஆசை . நம்மைப்போல் தபாலாபீசுக்கு போய் கார்டு , கவர் வாங்கி வந்து எழுதுவாரோ ? ஆனால் ஆ.ராசா துறை மந்திரி எதற்கு இருக்கிறார் ? அண்ணனுக்கு அடுத்த வினை 2 ஜீ அலைவரிசையில் சமீபத்தில் ஆரம்பமாகியிருக்கிறதாம் . இந்த முறை நிச்சயம் கீரிடம் கிட்ட தட்ட கழலும் நிலையில்தான் இருக்கிறதாம் .(டைம்ஸ் ஆஃப் இந்தியா - 17/07/10)
அரசு உயர் அதிகாரியாக இருக்கும் நண்பர் சொன்ன நடைமுறை . முதல்வரின் கடிதம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டு . அவரால் தமிழில் கையெழுத்திடப்பட்டு , ஒரு ஸ்பெஷல் மெசஞ்சர் மூலம் டெல்லிக்கு கொடுத்தனுப்பப்படுமாம் . அந்த கடிதத்தை தமிழிலேயே எழுதி செம்மொழியை இன்னும் கொஞ்சம் வளர்க்கலாம். எப்படியிருந்தாலும் சிங் ஒன்றும் செய்யப்போவதில்லை . ஒரு சம்பிரதாய பதிலை தவிர . பின் அந்த மெசஞ்சர் டெல்லியில் பிரதமரின் அலுவலகத்தில் கனையாழியை காட்டி , கடிதத்தை சேர்த்து விட்டு பதிலுக்கு காத்திருப்பார் . சவுத் பிளாக்கில் குரங்குகள் தொல்லை அதிகம் . அதற்கு ஒருவர் சொன்ன காரணம் . ராமர் பாலத்தை இடிக்க முயற்சித்ததுதானாம் . பின் அரசு செலவில் (வெட்டி) தலைநகரில் உண்டு , உறங்கி பதிலை பெற்றுக் கொண்டு கண்டேன் சீதையை ரேஞ்சுக்கு திரும்புவாராம். அவர் திரும்பி வருவதற்குள் இவர் இன்னொரு கடிதம் தயாராக வைத்திருப்பார் என்பது வேறு விஷயம் .
நானும் , காமராஜிம் ஒன்றுதான் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார் . இனிமே காமராஜ் ஆட்சின்னு யாரும் பேசாதீங்கப்பா கதர் கிழிசல்களே . இல்லா விட்டாலும் தலைக்கு மேல் சபை தொங்குகிறதே . மூச்...
இந்த வாரம் ஆனந்த விகடன் கொஞ்சம் சூடும் , சுவையுமாக இருந்தது என்று சொல்லலாம் . சாருவின் மனங்கொத்தி பறவை அட்டகாசம் . ஆனந்தவிகடனுக்கு சன் சார்பு அதிகமோ என்று தோன்றுகிறது . துணை முதல்வரின் தேநீர் விருந்து அமர்க்களம் . ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் பற்றிய ஸ்கேனிங் . ஆங்காங்கே முதல்வருக்கு சில பச்சை மிளகாய்கள் . செழியனின் மார்க் கதையும் மனதை தொட்டது . எனக்கும் அந்த மாதிரி நண்பர்கள் இருந்தார்கள் . தியாகராஜன் என்றொரு இயக்குனர் நண்பர் . இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை . சினிமா ..
மைக்ரோ சாஃப்ட் துணைத் தலைவரின் பர்சையே அடித்த கில்லாடிகள் திருச்சி ராம்ஜிநகர் திருடர்கள் . கும்பலாக கிளம்ப வேண்டியது . அண்டை மாநிலங்களில் ஆட்டையை போட வேண்டியது . திரும்ப இங்கு வந்து ஆட்டம் போட வேண்டியது . இவர்கள் குறவர் என்ற பிரிவு என்றும் ,சேர்வை என்ற பிரிவை சேர்ந்த மக்கள் என்றும் சொல்கிறார்கள். இவர்களுக்கு சிறையில் வைத்து கவுன்சிலிங் கொடுக்கப் பட்டிருக்கிறது . சுய உதவி குழுக்கள் மூலம் மாற்று தொழில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது . 50 க்கும் மேற்ப்பட்டோர் மனம் மாறியிருக்கிறார்களாம் . நம்மூர் மந்திரிகளுக்கும் ராம்ஜீ நகர் வாசிகளை வைத்து கவுன்சிலிங் கொடுத்தால் என்ன ? ஆனால் ஒன்று .இந்த மாதிரியெல்லாம் எழுதிடலாம். நாளை நமக்கு மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தால் ? இதைத்தான் அல்லது இதை விட மேல் செய்வோமோ என்றும் தோன்றுகிறது
பாலகுமாரனின் முன் கதை சுருக்கம் பற்றி லக்கிலுக் எழுதியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது . அனாயசமான நடையில் ஆங்காங்கே நகைச்சுவை தூறல்களும் . அப்படியே கொஞ்சம் பால்யமும் , பாலகுமார விமர்சனமும் .....
செம்மொழி மாநாட்டில் முதல்வர் அதிகம் புகழப்பட்டது அவருக்கு இருந்த ஒரே வீட்டையும் தானமாக ஈன்றதற்கு .உண்மைதான் .
இல்லம் தானம்
உடல் தானம்
சுய பெருமிதம்
நாட்டையே நாம்
தானமாய் தந்ததை
கண்டு கொள்வாரில்லை
யாரும்.....
Friday, July 16, 2010
ஒரு பின்னூட்டம்
Wednesday, July 14, 2010
ஒரு கதை
அஞ்சு மணிக்கெல்லாம் எக்மோர் போய் லைன்ல வண்டியை போடணும் . இன்னிக்கு கொஞ்சம் நிறைய சவாரி போகும்னு நினைக்கறேன் . உமாவை நாளைக்கு செக்கப்புக்கு வேற கூட்டி கிட்டு போகணும் என்று நினைத்தபடி எழுந்தேன். உமா லேசாக சிணுங்கி “மணி என்னங்க என்றாள் . 4 மணி உமா . நான் குளிச்சிட்டு கிளம்பறேன் . நீ மெதுவா எழுந்திரு போதும். வயிறு வலி இப்ப எப்படியிருக்கு ?
பரவாயில்லைங்க . அதான் நைட்டு ஃபுல்லா விளக்கெண்ணெய் தேய்ச்சி விட்டீங்களே .
அம்மா சொல்வாங்க . நியாபகம் வந்துச்சு .
சும்மா கதை . உங்க புள்ளையை ஆசையா தடவி கொடுத்தீங்க . அப்படித்தானே என்றாள் உமா .
குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு சரி அப்படியும் வச்சுக்கலாம் . கதவை சாத்திக்க என்றபடி வெளியில் வந்தேன் .
இருங்க . கொஞ்சம் வாசல்ல தண்ணியை ஊத்திட்டு கிளம்புங்க
நேற்று முழுவதும் ஆட்டோ மக்கர் பண்ணி கொண்டிருந்தது . உமாவை நினைத்துக்கொண்டே ஸ்டார்ட் பண்ணினேன் . ஒரே ஸ்டார்ட் ..இன்னும் பனி மூட்டம் விலகவில்லை . ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது . கடையில் வண்டியை நிறுத்தினேன் . தினத்தந்தியை பிரித்தேன் .சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படத்தின் இயக்குநரின் பேட்டி வந்திருந்தது .
நான் சிகரெட்னு கேட்க கூட வேணாம் . குறிப்பறிஞ்சு பாக்கெட் வந்துடும் உமா .
அப்படியா ? அப்புறம்..
அதை பத்த வைக்க ஒரு போட்டி நடக்கும் பாரு .
ஹீரோயின் கூடவா ?
ம்ம்.. ஆனா அவளும் ஒன்னு பத்த வச்சுக்குவா .
நீங்க அவ கூட நிறைய பேசக்கூடாது .
அப்புறம் அவளுக்கு எப்படி சீன் சொல்றது ?
உங்க அஸிஸ்டெண்ட் சொல்லட்டும் . நாளைக்கு பேப்பர்ல எதாவது அரசல் ,புரசலா வந்துச்சு . பலி போட்ருவேன் .
என்னையா ?
ம்ம் . உன்னை பலிபோடவா உன் கூட வந்தேன் . அந்த சிறுக்கியை என்றாள் உமா பல்லை கடித்தபடி .
மொதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும் . அப்புறம் பார்க்கலாம் . இன்னிக்கு சேலம் புரொடியூசர் வராரு . அநேகமா கிளிக்காயிடும்னு நினைக்கிறேன் .
ஒரு ரூபா காயின் கொடுங்களேன்
எதுக்கு உமா ?
சமயபுரம் மாரியம்மனுக்கு முடிஞ்சி வைக்கிறேன் . நிச்சயம் நடக்கும் .
தம்பி டீ ஆறுதே . அப்படி என்ன பேப்பர்ல படிக்கிறீங்க ?
ஆட்டோவை கிளப்பினேன் . ராக்ஃபோர்ட் வந்திருக்கும் . வரிசை எப்படியிருக்கும்னு தெரியலை . தலைவர் கிட்ட சொல்லியிருக்கேன் . பார்க்கலாம் . ஸ்டேஷனை அடைந்தேன்.கூட்டம் வெளியில் வர ஆரம்பித்திருந்தது . தயங்கியபடி அருகில் வந்தான் அந்த இளைஞன் .
எங்க போகணும் சார் ?
முதல்ல ஒரு லாட்ஜ்க்கு போகணும் . அப்புறம் இந்த அட்ரஸ் என்றபடி ஒரு கார்டை காட்டினான் .
லேசாக குடித்திருந்தேன் . சேலம் பார்ட்டியை சந்திக்கவே முடியவில்லை .சேம்பருக்கு போயிட்டு வந்துடறேன் . லஞ்சுக்கு அப்புறம் சந்திக்கலாம் என்றார் . நடேசன் பார்க்கில் கொஞ்சம் பொழுதை ஓட்டிவிட்டு ரூமுக்கு போனால் , சார் தூங்கறார் . எழுப்பினா பயங்கர கோபம் வரும் என்றான் ஒரு அல்லக்கை . காலையில் பார்த்த போது தென்படாத ஒரு லேடிஸ் செருப்பு கண்ணில் பட்டது . டிஸ்கஷன் நடக்கிறது என்று நினைத்துக் கொண்டேன் .
ஈவினிங் வரட்டுமா சார் ? சார் கண்டிப்பா சந்திக்கலாம்னு சொலியிருந்தார் என்றேன் பலகீனமான குரலில்
உன் கிட்ட மட்டுமா சொல்றாரு . பத்து பேர் கிட்ட அப்படித்தான் சொல்லியிருக்காரு . அதுல ஒருத்தன் புத்திசாலி . பாரு என்று அந்த செருப்பை காட்டினான் அல்லக்கை . சே என்ன பிழைப்பு இது . திறமைக்கு இங்க மரியாதையே கிடையாதா ? என்று நொந்து கொண்டேன் . கிடையாது என்று தெரிந்திருந்தும் . அதிர்ஷ்டம் வேண்டும் . இல்லை எவனுக்காவது வாரிசாக இருக்க வேண்டும் .வெளியில் வந்தேன் . யாரோ பேர் சொல்லி அழைத்தார்கள் . கிருஷ்ணா !
ஒரு பழைய ஜீன்ஸும் , டி ஷர்ட்டும் அணிந்து கொண்டு வெளியில் வந்தான் அந்த இளைஞன் . ஆட்டோவில் ஏறிக்கொண்டான் .
எங்க போகணும் சார் ?
முதல்ல வீனஸ் காலணி
எந்த தெரு சார் ?
மணிரத்னம் வீடுப்பா என்றான் . ஹம்மா..ஹம்மா என்று முணுமுணுத்தபடி
மணிரத்னம் வீடு . சற்று தள்ளி வண்டியை நிறுத்தினேன் .போன சுருக்கில் திரும்பி வந்தான் . டிநகர் போங்க என்றான்
டிநகர்ல எங்க சார்?
டைரக்டர் ஷங்கர் வீடு . தெரியுமா?
தலையை அசைத்தபடி வண்டியை கிளப்பினேன் .கிருஷணா!
வேண்டாம் கிருஷ்ணா . உமா திட்டுவா . இப்பல்லாம் குடிக்கறதில்லடா என்றேன் நப்பாசையுடன்
வா என்று அவன் பைக்கில் ஏற்றி கொண்டான் . அரை பாட்டில் ஆர்டர் பண்ணினான் . சிக்கன் சாப்பிடறியாடா?
உமாவுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும் . இந்த நேரத்தில் அவளுக்கு பிடிச்சதை வாங்கி கொடுக்க வேண்டும் .
கிருஷ்ணா ஒரு பார்சல் கிடைக்குமா? என்றேன்.
வீட்டுக்குத்தானே . போகும்போது வாங்கிக்கலாம் .
ரெண்டு ரவுண்டு போன பிறகு எல்லாம் மறந்து போச்சு . அவனிடம் கொஞ்சம் பணம் கேட்டு வாங்க வேண்டும் என்று நினைத்தேன் . மறந்து போச்சு . குடி வாங்கி கொடுத்தவனிடம் பணம் கேட்கும் கொடுமை இருக்கிறதே ..வீட்டுக்கு வரும்போது கொஞ்சம் இறங்கியிருந்தது . சேலம் பார்ட்டி என்ன ஆச்சு என்று உமா கேட்பாள் . அவளிடம் உண்மையை சொல்லக்கூடாது . ரெண்டு நாள் கழித்து வர சொல்லியிருக்கிறார் என்று சொல்லி விடலாம் . கிருஷ்ணா ஒரு பொள்ளாச்சி பார்ட்டியை சொல்லியிருக்கிறான் . பார்க்கலாம் .
கதவை தட்டினேன் . பதிலில்லை . தள்ளினால் கதவு திறந்திருந்தது . லைட் கூட போடாமல் என்ன பண்ணுகிறாள் இவள் ? உமா என்று மெல்லிய குரலில் அழைத்தேன் . ஒரு வேளை தூங்கலாம் . ஆனால் உமா முனகி கொண்டிருந்தாள் .
இப்ப எங்க சார் போகணும் ?
லாட்ஜ்க்கு போயிடுங்க . டைரக்டர் வெளியில் போயிருக்காராம் . சாயந்திரம் மறுபடியும் போகணும் என்றபடி அவன் பணத்தை எண்ண ஆரம்பித்தான் .
லாட்ஜில் அவனை இறக்கி விட்டு
சார் ஒரு நிமிஷம் என்றேன் .
கேள்விக்குறியுடன் பார்த்தான் . சினிமா சான்ஸ்தானே தேடறீங்க என்றேன்
ஆமாம் . முதல்ல உதவி இயக்குநர் ஆகணும் . அப்புறம் நடிக்கணும்
வேற எதாவது தொழில் தெரியுமா ?
டிகிரி முடிச்சிருக்கேன் என்றான் கொஞ்சம் பெருமையுடன் .
ஆட்டோ ஒட்ட கத்துக்கங்க . நிச்சயம் உதவும் என்று சொல்லி விட்டு வண்டியை கிளப்பினவனை புரியாமல் பார்த்தான் அவன்
முதலில் ஒன்றும் புரியவில்லை . குளமாய் ரத்தம் அவளை சுற்றி . நைட்டி நனைந்திருந்தது . என்னவாயிற்று ? அரை மயக்கத்திலிருந்தாள் உமா .
Friday, July 9, 2010
கால் எத்தும் கழுதை
தலைப்பை கேட்டவுடன் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது . தலைப்பை மாற்றலாமா என்று ஆசிரியரை கேட்டதறகு , ஸ்டிராங்காக மறுத்தார் . சரி என்று நித்தியானந்தாவை மனசுக்குள் வேண்டிக்கொண்டு தொடரலாம். சரி அந்த ஆளிடம் என்ன வேண்டிக் கொண்டிருப்பேன் என்ற சரியாக யூகிப்பவர்களை தாந்தேவின் சிறுத்தையை விட்டு கடிக்கலாம் என்று உத்தேசம் . ஜெய்ஹிந்த்...
என்னைப்போன்ற ஒரு எழுத்தாளனுக்கு இந்த சமூகத்தில் என்ன மதிப்பிருக்கிறது என்று பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது . சற்றே ஆயாசமாகவும் இருக்கிறது . மொசாம்பிக்கில் ... மொசாம்பிக் தெரியுமா உங்களுக்கு ? நிச்சயம் நிறைய நபர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . அங்கு எழுத்தாளனின் பேனாவில் இங்க்..அதாவது மை தீர்ந்து விட்டால் போட்டி போடுவார்கள் நிரப்ப . இங்கு நிலைமை தலைகீழ் . பேனாவை புடுங்கி கிடாச ஒரு கூட்டமே அலைகிறது . கேவலம் ஒரு பேருந்தில் கைவரிசையை காட்ட கூட முடியவில்லை . விவரமாக சொல்கிறேன் .
பக்கிரியை உங்களுக்கு தெரியுமா ? மூலக்கொத்தளம் சுடுகாட்டில்தான் அவ(ரை)னை முதலில் சந்தித்தேன் . ஒரு எடுபட்ட அல்லது எடுபடாத எழுத்தாளனின் சாவுக்கு அஞ்சலி செலுத்த போயிருந்தேன் . ரொம்ப நாள் முன்னாடியே போக வேண்டியவன் அவன் . நாலைந்து முறை தற்கொலைக்கு முயற்சித்து நடக்கவில்லை . நல்லவேளை இந்த முறை நிறைவேறியது . எப்படி செத்து போனான் என்று கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள் . கொஞ்ச நாளாக நெஞ்சுவலி இருந்திருக்கிறது . சம்பவ தினத்தன்று (இந்த சம்பவம் , சம்பவம்ங்கிறாங்களே . இன்னா சார் அது கேக்காதீங்க..)யாரோ போனில் அழைத்திருக்கிறார்கள். நம்பர் ஏதோ புதுசாக இருந்திருக்கிறது . லைன் கட்டாகிவிட்டது . மீண்டும் அழைப்பு . மறுமுனையில் பேசியவர் உங்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது என்று சொன்னாராம். என்னதான் சூடு,சொரனை இல்லாமல் வாழ்க்கை போயிருந்தாலும் , மனசாட்சி என்று உண்டு இல்லியா? அப்போது பார்த்து காலாவதி மருந்துகளை எவனோ மொள்ளமாறி மெடிக்கல் ஷாப் காரன் கொட்டி வைத்திருந்தானாம் . அதை பாக்கெட் சாராயத்தில் கலந்து குடித்திருக்கிறான் எடுபட்டவன் . அப்பிட் .
சரி அவன் கதை எதுக்கு ? பக்கிரிக்கு வரலாம் . சர்வோதய சங்கத்தலைவர் இறுதி அஞ்சலிக்கு வர்றாராம் . அதுக்கு வெயிட்டிங் என்றான் பக்கிரி . எனக்கு அதிர்ச்சி . எழுத்தாளர் சங்கத்தலைவர் வந்தாலும் ஒரு அர்த்தம் இருக்கு. அவருக்கும் , இவனுக்கும் என்னய்யா சம்பந்தம்னு கேட்டால் , பக்கிரி ஒரு பிச்சுவா சிரிப்பு சிரிச்சான் . அது ஒரு காமெடி தலைவரே . அந்தாளுக்கு நம்மாளு எதோ கதை எழுதி தாரேன்னு துட்டு வாங்கியிருக்கான் . அதை சர்வோதயம் அவர் பேர்ல போட்டுப்பாராம் . மேலிடத்துல சொல்லி அவார்டு வாங்கிப்பாராம் . இப்ப கூட கோயம்புத்தூர்ல சுடர்விழி கூட்டம் நடந்துச்சாமே . அதுல கூட அவருக்கு பரிசு கொடுக்கறேன்னு சொல்லியிருந்தாங்களாம் . இதை சொல்லிட்டு பக்கிரி என்னை ஒரு மாதிரி பார்த்தான் . பக்கிரி அது செம்மொழி மாநாடுப்பா .சரி மேட்டருக்கு வா என்றேன் . நம்மாளுங்க அங்க போயிருந்தாங்க சாரே . செம்ம கலெக்ஷனாம் நான் தான் போக முடியலை . பெட்டி கேசுக்கு ஆளு வோணும்னு புளியந்தோப்பு ஸ்டேஷன்ல இட்டுகினு போயிட்டாங்க. சும்மா சொல்ல கூடாது அஞ்சாயிரம் ரூபா கொடுத்தாங்க அதுக்கு . பக்கிரி என்று முறைத்தேன் . இருந்தாலும் எனக்கும் மனசு அடிச்சுக்குது . பெட்டி கேசுக்கு அஞ்சாயிரமா ? நாமளும் போலாமான்னு தோணிச்சு . காட்டிக்கொள்ளாமல் பக்கிரி விஷயத்துக்கு வா என்றேன்
அடப்போ சாரே ! நீ எவ்வளவு அடிச்சாலும் தாங்குவே என்றானே பார்க்கலாம்.
(தொடரும்(லாமா)
Thursday, July 8, 2010
தலை கோதுதல்
என்னன்னு தெரியலை . ரெண்டு நாளா அஞ்சலை நினைப்பாவே இருக்கு . மவராசி என்னைய ஒத்தையில விட்டுட்டு போய் சேர்ந்துட்டா. ஆச்சு . ஒரு நாலு வருஷம் . அவ கருமாதியன்னிக்கு தின்னேனே கறி சோறு . அதுக்கப்புறம் கண்ல கூட பாக்கல . விரலை கடிச்சுகிட்டு குடிங்க கஞ்சியைன்னுட்டாங்க மருமவளுக. உடம்பு முடியலை . ஆனா நாக்கு இந்த கேக்கு கேக்குது . கறி தின்னாம உசுர் போயிட்டா கட்டை வேகாதோ .
முதல்ல இளையவன் கால் மாட்ல வந்து உக்காந்தான் . பின்னாடியே மூத்தவன் தலைமாட்டுல . மருமவ ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையா நிக்கறாங்க. மூஞ்சியில கரிசனம் தெரியுது . இன்னிக்கு கறி சோத்துக்கு வேளை வந்திருச்சோ ? நல்ல குறும்பாட்டு கறியா பிடிச்சிட்டு வாடா மக்கா . நம்ம தோட்டத்து மாங்கா போட்டு , எலும்புல எண்ணெய் ஊற குழம்பு வைங்க அய்யனுக்கு . எனக்கு வாய் ஊறல் கொஞ்சம் அடங்கினாப்ல இருந்துச்சு . ஏனோ எங்கப்பன் நினைப்பு ஓடுது . அவனுக்கு இந்த மாதிரிதான் கறி சோறாக்கினோம் . அன்னிக்கு அவன் கண்ணுல தெரிஞ்ச ஒரு சித்தம் . இன்னிக்கு என் கண்ணுல தெரியறாப்ல ஒரு ஒரு பிரமை .
குழம்பு கொதிக்கிற வாசம் வருது . சின்ன வயசுல கறி வாசம் , எலும்பு வாசம்னு பிரிச்சு மேய்வேன் . ஒத்தை ஆளு ஒன்றரை கிலோ கறியை அஞ்சு கவளத்துல அமுக்குவேன் . இன்னிக்கு ஏன் இப்படி ஆகுதுன்னு தெரியலை . ரெண்டாமவதான் தட்டுல சோத்தை போட்டு குழம்பை ஊத்தி , மலையா எலும்பை குமிச்சு எடுத்தாறா . பின்னாடியே மவனும் . மூத்தவனை காணும் .அவன் எங்கடான்னு கேக்கேன் . தோட்டத்துக்கு போயிருக்கானாம் . அவன் பொண்சாதி சாடையில சொல்றா .
நல்லி எலும்பை கடிக்கும்போது அஞ்சலை நினைப்பு திருப்பி வருது . கூடவே எங்கப்பன் நினைப்பும் . கறி என்னவோ இளசாத்தான் இருக்கு . எதுவோ என்னைய மெல்ல வுடாம செய்யுது . நல்லா கேட்டு போடுறி கெழவனுக்கு . பெரியவ சின்னவளுக்கு சொல்லுறா . கொஞ்சம் கேலியா பட்டுச்சு எனக்கு . மூத்தவன் உள்ளே வந்தான் . கையில கொத்து ,கொத்தா ..அம்மாடி . மறுபடியும் எங்கப்பன் வரான் . மவனேன்னு தலையில கையை வைக்கறான் . இன்னும் கொஞ்சம் கறியை வைங்கடி அப்பனுக்கு . அய்யா நல்லா தின்னு . என்னா ? மவனே வேண்டாமுடா . வார்த்தை வரலை. தொண்டை முட்டுச்சு . இனி பிரயோசனமில்லை. முடிவு பண்ணிட்டானுங்க. அதோ மூத்தவ தூக்கை எடுத்து கிட்டு வராளே . சின்னவனும் வந்துட்டான். நல்லா சூடு பறக்க தேய்க்கணும்டா என்கிறான் பெரியவன் . ரெண்டு பேத்துக்கு ஆகாம இருந்துச்சு . காரியத்துக்காக ஒன்னு , மன்னா இருக்கானுங்க போல .
சின்னவன் நல்லெண்ணெயை தலையில கொட்டி தேய்க்க ஆரம்பிச்சான் . எனக்கு பொறி கலங்குச்சு . பெரியவன் இளநியை சீவ ஆரம்பிக்கிறான் . ரெண்டு மருமவளும் கிணத்தடியில நிக்கறாளுக . ஒரு படி எண்ணெய் என் தலையில . உடம்பு லேசா நடுங்கறாப்ல இருக்கு . மறுபடியும் எங்கப்பன் மூஞ்சி தெரியுது . கூடவே அஞ்சலை மூஞ்சியும் . வாரி இறைக்கறாளுவ . ஒரு 50 தவலை தண்ணி. ஒரு அரை மணி . கை அலுப்புக்கு கொஞ்சம் நிப்பாட்டறாளுவ . பெரிய சொம்புல இளநியை எடுத்துட்டு வரான் சின்னவன் .
டேய் வேண்டாமுடா . வாயில வச்சு குடிங்கப்புங்கிறான் . எனக்கு தெரிஞ்சு போச்சு . அன்னிக்கு எங்கப்பனும் இப்படித்தான் இருந்தான் . அஞ்சலையும் . இன்னும் ஒத்தை காது கிழவி , நொண்டி சித்தப்பு எல்லாரும் .
கீத்து வந்து இறங்கியது . பந்தல் போட ஆரம்பித்தார்கள் . ஒப்பாரி சத்தம் கேட்க தொடங்கியது . ரெண்டு மருமவளும்தான் மூக்கை சிந்திக் கொண்டே இருக்கிறார்கள் . வந்திருந்த ஊர் சனத்துக்கு தெரிந்தே இருந்தது . என்ன நடந்திருக்கும் என்று . ஆனாலும் ஆறுதல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் . பிள்ளைகளுக்கு . குப்பை மெட்டில் கொட்டப்பட்டிருந்த எலும்புகளை நாய்க்கூட்டம் ஒன்று சீறலோடு சுவைத்துக் கொண்டிருக்கின்றன
Wednesday, July 7, 2010
ஜெயா தொலைகாட்சி காலைமலரில் நான்
ஜெயா தொலைகாட்சி அலுவலகம் . அம்மாவின் ராசி நிறம் . பார்க்கும் இடங்களிலெல்லாம் பச்சை வண்ணம்தான் . நல்லவேளை ! பச்சை , பச்சையாக பேசவில்லை . காலை மலர் நிகழ்ச்சியில் விளம்பரத்துறை பற்றிய நிகழ்ச்சிக்கு , விருந்தினராக அழைத்திருந்தார்கள் . நான் அவ்வளவு ஒர்த் இல்லையப்பா என்று சொன்னேன் . அட ...ரொம்பத்தான் ஃபீல் பண்ணாதீங்க என்று உட்கார வைத்து விட்டார்கள் .
“எப்படி இந்த துறைக்கு வந்தீங்க ?
ஜஸ்ட் பிடிச்சுது . வந்துட்டேன் என்றேன்
சார் இந்த மாதிரி ஒன் வேர்டு ஆன்சர் சொன்னால், எப்படி நாங்க அரை மணி நேரத்தை கடத்தறது ? இந்த ஒரு கேள்விக்கே ஒரு மணி நேரம் பேசணும் என்றார் சரவணன் . நிகழ்ச்சி தயாரிப்பாளர் . வாழ்க கலைஞர் என்று சத்தமாக கோஷம் போட்டால் அங்கிருப்பவர்கள் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று ஒரு நினைப்பு ஓடியது . உள்ளேயே சமாதி கட்டி , அதற்கும் பச்சை பெயிண்ட் அடித்து விடுவார்கள் . என் பிளாக் ஐடி கேட்டார்கள் . சொன்னேன். ஜெயலலிதாவிடம் நான் கேட்ட 32 கேள்விகளை படித்தால் கன்ஃபார்ம் சமாதி
கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் பேச வேண்டியிருந்தது . பத்து மணிக்கு மேல் என்றால் பிரச்சனையேயில்லை . ஏன் என்றால் நான் பேசப் போவதில்லை. உள்ளம் பேசுமே...moreeeeeeeeee... (இந்த பொன்னான தருணத்தில் பத்து மணிக்கு மேல் என் மொக்கைகளை சகித்துக் கொண்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றியையும் ,அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறேன் .)
பேட்டி நாளை வியாழன் காலை மலர் நிகழ்ச்சியில் (08/07/2010) ஒளிபரப்பாகும் . நேரம் காலை 8.00 மணியளவில்
...........................................................................................................................................................................
Saturday, July 3, 2010
சொங்கியார் பராக்...பராக்..
சொன்ன நேரத்துக்கு சொங்கியார் வரவில்லை. வானம் மப்பும் , மந்தாரமுமாக இருந்தது . போச்சுடா ..என்று நொந்து கொண்டோம் . செல்லடித்தால் எடுக்க வில்லை . இனி அவர் வர மாட்டார் . நாம் தான் தேடி போக வேண்டும் . பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.