Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, May 8, 2012

வழக்கு எண் 18/9



ஆர்த்தியை எப்போது அம்மணமாக காட்டுவார்கள் என்று அலைபாய்ந்த மனசுதான்,கிளைமாக்ஸில் இன்ஸ்பெக்டரின் மீது ஆசிட் அடிக்கும்போது எழுந்து நின்று கைத்தட்ட வைக்கிறது..

தினேஷின் கேரக்டர் திரையில் வரும்போது பின்னால் ஒருவன் இன்னொருவனிடம் மச்சான் ..அப்படியே நீதாண்டா என்றான்.. உண்மைக்கு வெகு அருகாமையில் படம் இருப்பதை  உறுதி செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.. இன்னும் நிறைய பேர்கள் அல்பாசையில் தங்கள் மொபைலின் ஃப்ளூ டூத்தை ஆன் செய்து வைத்திருப்பார்களோ என்றும் எண்ணினேன்..

வடநாட்டு முறுக்கு கம்பெனியில் ஆரம்பிக்கும் வன்முறை ..படம் முழுவதும் மெல்லிய குரூரத்துடன் அலைகிறது.. அடியும்,ரத்தமும் மட்டும்தானா வன்முறை? அந்த வன்முறை இல்லாவிட்டால் மக்கள் தூங்கியிருப்பார்கள்.. நேர்மையாக கதை சொல்கிறோம் என்கிற பாசாங்குதான் படத்தின் ஹைலைட் ..வயதுக்கு வந்த  பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் நிச்சயம் அவர்களின் மொபைலை நோண்டி பார்ப்பார்கள் என்றே நினைக்கிறேன்..அது எத்தனை உள்நாட்டு குழப்பங்களை உண்டாக்கப்போகிறதோ:-)

சம்பவங்களும் ,குறியீடுகளும் கற்பனையே என்று சொல்கிறார்கள்.. பிராத்தல் கேஸில் கைது செய்யப்பட்ட ஒருத்தி பள்ளிக்கூடம் நடத்துக்கிறாள்.. அவளும், மந்திரியும் ,இன்ஸ்சும் ஒரே சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுகிறது..தமிழ் சினிமாவில் அக்ரஹாரம், மேலவளைவு , முதுகுலத்தூர் தாண்டி எந்த சாதியையும் இழுக்க மாட்டார்கள்.. வழக்கு எண்ணில் குறியீடாக வரும் சாதி எந்த சாதியாக இருக்கும்? வேல்,கம்பு வகையாறாகத்தான் இருக்கும் என்பது என் அனுமானம்..

உண்மை குற்றவாளி கைது செய்யப்பட்டான் என்று போகிற போக்கில் சொல்லி விடுகிறார்கள்.. ஆனால் படம் முடிந்து நாம் வீட்டுக்கு போவதற்குள் அவன் வெளியில் வந்திருக்க கூடும்..ஆக  படம் பார்ப்பவரின் உணர்ச்சிகளை உசுப்பி விட்டு கல்லா கட்டுவதை தவிர வேறெந்த நேர்மையான நோக்கமும் வழக்கு என்ணில் இல்லை...கிளைமாக்சில் நம்பியாருக்கும், அசோகனுக்கும் என்ன நடக்குமோ அதுதான் இதிலும் நடக்கிறது..ஆனால் நிஜத்தில் அப்படியா என்ன? ஜோதியின் வாழ்க்கை அவ்வளவுதான்..வேலு சிறையில்தான் இருக்க வேண்டும்..ஆர்த்தி ஐ.ஐடி..ஐஐஎம்மோ சேர்ந்து கான்பூருக்கோ..பிலாய்க்கோ போய்விடுவாள்.. அப்படி முடித்திருந்தால் அதுநேர்மையான திரைப்படமாக இருந்திருக்கும்.. 

வழக்கு எண் 18/9

வழக்கமான படம் இல்லைதான்..ஆனால் வழக்கத்தை ஒன்றும் அப்படி மீறியும் விடவில்லை

Saturday, June 19, 2010

ராவணன்....


செனட் ராயல் விஸ்கியின் லேபிளை மாற்றி விட்டார்கள் . விலையும் கூடி விட்டது 100 ரூ குவார்ட்டர் .

ரஞ்சிதாவை பார்க்க கொஞ்சம் பாவமாக இருந்தது . ஜெய்ஹிந்த் படத்தில் எப்படி இருந்தார் ? . அவரால் சீரியசாகவே இருக்க முடியாது . ஒரு சின்ன ஸ்மைல் எப்போதும் . கொடுத்து வைத்தவன் பாவி நித்யா !!


15 வயதிலிருந்து தனி அறைக்குள் அடைக்கப்பட்டு , பாலும் , பழமும் கொடுத்து வளர்க்கப் பட்ட வாலிபம் . கட்டவிழ்த்து விடும் போது வெளிப்படும் உன்மத்த காமம் . அப்படியொரு மோகம் எனக்கிருந்தது. ராவணன் திரைப்படத்தின் மீது . சனியன் துரித ஸ்கலிதம்தான் மிச்சம் .


ஐஸ்வர்யா அழகாக இருப்பதாக 50 வயது ஆசாமிகள் சொல்கிறார்கள் .(நான் இல்லப்பா..இன்னும் 5 வருடங்கள் மீதமிருக்கிறது).


விக்ரமுக்கு இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தால் , நான் குடிப்பதை நிறுத்தி விட உத்தேசித்திருக்கிறேன் .

அக்னி நட்சத்திர ஹீரோக்கள் இதில் காமெடி செய்திருக்கிறார்கள் . ஆனால் சிரிப்பு வாயால் வரவில்லை .

சில ஷாட்கள் தமிழுக்கு புதிது . எல்லோரும் கேமரா அற்புதம் என்கிறார்கள் . கொஞ்சம் சிரமப்பட்டுதான் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது .ஆனால் லோகேஷன்கள் சான்ஸேயில்லை . சுரேஷ் கண்ணன் எழுதியதை போல் , கான்கீரிட் பொந்துகளில் வாழும் நமக்கு பொறாமையாக இருக்கிறது .


வசனம் சுஹாசினி . அவர் பெயர்தான் டைட்டிலில் . அவ்வளவுதான் . சொல்ற மாதிரி எதுவும் இல்லை .


எதையும் எதிர்பார்க்காதே . கிடைப்பதை அப்படியே ஏற்றுக்கொள் . ராமாயண நீதி.

Friday, April 2, 2010

பையா.............ஒரு பார்வை


கண்ணைக்கட்டி அழைத்து போகாத குறைதான். பெரிய கேட்டில் நுழைந்து,சில படிகள் ஏறி, பின் சில படிகள் இறங்கி, சிறிய கண்ணாடி கதவை திறந்து , உள்ளே சென்று உட்கார்ந்தால் அரேபியா டம்ளரில் தண்ணீர் வைத்தார்கள். கிராமத்து விருந்தாம். சாம்பார் சாதத்தில் சில கறித்துண்டுகள். பிரியாணியாம். கிரேவி இல்லியாம். முன்னூத்தி சொச்சம் பழுத்தது. வாட் வரி 12%. பகல் கொள்ளை . தயவு செய்து போய்விடாதீர்கள். எக்மோர் ரயில் நிலையம் எதிரில் இருக்கும் அய்யனார் ஓட்டல். ஆல்பட் தியேட்டரில் இடைவேளையில் பார்த்த விளம்பரத்தை பார்த்து விட்டு போய் நானும், கேபிளும் சிக்கிய கதை இது.

அந்த சிறிதளவு கதை கூட பையாவில் இல்லை. வழக்கம் போல் தடித்தடியாய் வில்லன்கள். முழுக்கோழியை சாப்பிடுகிறார்கள். ஒன்றும் தெரியாத அப்பாவிகளை துவம்சம் செய்கிறார்கள். ஒவ்வொருத்தனும் ஆறரை அடி இருக்கிறான். ஐந்தேமுக்காலடி ஹீரோ கார்த்தியிடம் வஞ்சனையில்லாமல் உதை வாங்குகிறார்கள். அத்தனை பேரிடமும் பிளம்பர்கள் போல் ஒரு பெரிய பைப் கையில் இருந்து கொண்டேயிருக்கிறது.

முதல் பாதி தங்க நாற்கர சாலையில் சொகுசு காரில் போவதைப் போல் படம் பயணிக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் ஸ்பீடு பிரேக்கர்கள் இருந்தாலும். இடைவேளைக்கு பின் வண்டி பிரேக் டவுன் ஆகிவிடுகிறது. ஓரெண்டு ரெண்டு, ஈரெண்டு நாலு என்பதைப்போல் திரைக்கதை. எக்மோர் சில்ட்ரன் ஆஸ்பத்திரியில் இன்று பிறந்த குழந்தை கூட அடுத்த காட்சியை சொல்லிவிடும்.

கார்த்தி. இதில் பேண்ட் போட்ட பருத்திவீரன். அவ்வளவுதான். அதே மானரிசம். அவர் பெயர் போடும்போது தியேட்டரில் கைத்தட்டல். விசில். அதை தக்க வைத்துக் கொள்ள இன்னும் மெனக்கெட வேண்டும் கார்த்தி.அவர் அப்பா சிவக்குமார் நடித்த “என் கண்மணி , என்காதலி” என்ற சிட்டுக்குருவி பாடல் வரும்போது கொஞ்சம் சுவாரசியமாய் செய்கிறார். மற்றபடி .....

கொடியில் காய்த்து தொங்கும் பிஞ்சு வெள்ளரிக்காய் போல் தமன்னா ! ஆனால் குளோசப் காட்சிகளில் வெள்ளரி முற்றல். 70 லட்சம் சம்பளமாம். வயித்தெரிச்சல்.

மதியின் ஒளிப்பதிவு எக்ஸ்லண்ட். படம் முழுக்க காமிராவின் டிராவல் கிளாஸ். ஆண்டனி எடிட்டிங்கும் சாணை பிடித்த புது கத்தி(ரி) என் காதல் சொல்ல நேரமில்லை பாடல் ஓகே. பிண்ணனி இசையிலும் யுவன் ஸ்கோர் பண்ணுகிறார்.
ஆல்பட் தியேட்டர் சீட்டிங் கொஞ்சம் சுமார்தான். இல்லாவிட்டால் தூக்கம் வந்திருக்கும். லிங்குசாமி பழசை மறக்காமல் இருப்பது நல்லதுதான். அதற்காக அவரின் முந்தின படங்களை இன்னும் ஞாபகப் “படுத்த” வேண்டாம். இடைவேளையில் இன்னொரு கொடுமை. மாஞ்சா வேலு என்ற படத்தின் டிரெய்லர் . திருந்தவே மாட்டீங்களாடா?


Friday, March 26, 2010

அங்காடித் தெரு...............


ஷாப்பிங் உலகின் சூப்பர் ஸ்டோர் என்று அழைக்கப்படும் ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோஸின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள்.பெயரை சொல்லாவிட்டாலும், அந்தக் கடையின் பிராண்ட் ஐகான் சிநேகாவைத்தான் குறியீடாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாம்பலம் காவல் ஆய்வாளர் சொல்கிறார். “அண்ணாச்சி ! ஏற்கனவே ஏகப்பட்ட கேஸ் பெண்டிங்கில் இருக்கிறது” என்று.

ரங்கநாதன் தெரு ஒரு மாயவீதி. சேஃப்டி பின் முதல் சமோசா வரை சல்லிசாக விற்கப்படும் இடம். அண்ணா மற்றும் எம்ஜிஆர் சமாதிகளுக்குப் பிறகு சென்னை வருபவர்கள் தவறாமல் செல்லும் இடமாகி விட்டது. தமிழ் சினிமாவுக்கு புதிய கதைக்களமாக அதை அமைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். பாராட்ட வேண்டிய முயற்சி. வாழ்த்துக்கள் பாலன்.

“செப்பல்லாம் மேல : சுடிதார்லாம் கீழ” என்ற குரலை நீங்கள் அங்கு கேட்டிருக்கலாம். சுருதி குறையாமலும்,சமயங்களில் குரல் உடைந்தும் திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பாள் தென் தமிழத்தின் பெண் ஒருத்தி. பளிச்சென்று ஏழ்மையை பிரதிபலிக்கும் தோற்றம் . படிக்க வசதியில்லாமல் குடும்பத்தை காப்பாற்ற வந்து ரங்கநாதன் தெரு வாசிகளாகி போன ஜீவன்களை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் . கொஞ்சம் வலியுடன் . காலை முதல் நின்று கொண்டே இருக்க வேண்டும் . முகத்தில் வேதனையை காட்டக் கூடாது. அடையாள அட்டையைப் போல் புன்னகையையும் அணிந்து கொணடேயிருக்க வேண்டும். முதலாளிகளின் பாலியல் வக்ரங்களையும் விழுங்க வேண்டும். “பெற்றுக் கொண்டேன் “ என்று கையொப்பமிடப்பட்ட மணி ஆர்டர் ரசீதுகளுக்காக!

புறநகர் பகுதிகளில் இருக்கும் மளிகை கடைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. அத்தனை பேரையும் விலை பேசி தூக்கி கொண்டு வந்து விடுகிறார்கள். கோடிக்கணக்கில் விளம்பரத்திற்கும், நட்சத்திரங்களுக்கும் வாரி இறைக்கும் ஜவுளிகடை முதலாளிகள் இவர்களை நடத்துவதைப் பார்த்தால் கனமாகி போகிறது மனசு. அப்பட்டமாக தோலுரித்திருக்கும் இயக்குனருக்கு ஒரு சல்யூட் .

இயல்பான நடிப்பு . அளவான ,ஆழமான வசனங்கள் .”சனியனே ! வூட்டுக்குத்தான் வந்துகிட்டிருக்கேன் “ இதுதான் முதல் வசனம் . தொடர்ந்து “உரையாடல் ஜெயமோகன்” என்று கார்டு வருகிறது. நேட்டிவிட்டி ஸ்லாங் என்று கொல்லாமல் மண்ணின் இயல்போடு எழுதியிருக்கிறார் ஜெமோ. ரிச்சர்டின் உறுத்தாத ஒளிப்பதிவு கதையை விட்டு நம்மை திசை திருப்பாமல் இருக்கிறது. மேனஜராக வரும் இயக்குனர் வெங்கடேஷின் பாத்திரப்படைப்பும் , அவர் அதை வெளிப்படுத்திய விதமும் நன்றாக இருக்கிறது. அண்ணாச்சியாக செருப்பில்லாமல் வெறுங்காலுடன் வரும் பழ்.கருப்பையா, ஒரே ஒரு காட்சியில் வரும் கவிஞர் விக்ரமாதித்யன் ,ரங்கநாதன் தெரு நடைபாதை வியாபாரிகளாக சில பெயர் தெரியாதவர்களும் யதார்த்தத்தை காட்டுகிறார்கள். கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த பாண்டி, ஸ்டோர் ஊழியர்களாக வருபவர்களின் இயல்பான நடிப்புக்கும் கிரெடிட் வசந்தபாலனுக்கே .

நாயகன் மகேஷ் . அறிமுகம் . கூத்துப்பட்டறையில் பயிற்சி கொடுக்கப்பட்டதாம். பள்ளி இறுதியில் முதல் மாணவன் . தந்தையின் அகால மரணம். குடும்பச்சுமை . வேலைக்கு வந்த இடத்தில் காதல் . முதலாளியோடு மோதல் என்று ஒரு டாட் பால் விடாமல் அடித்து ஆடியிருகிறார். காதல் பரத்தை போல இருக்கிறார். சிறந்த அறிமுகம் வசந்த் .

முதலில் ஜி.வி பிரகாஷ் . பின் விஜய் ஆண்டனி என்று இரண்டு இசையமைப்பாளர்கள் . பிண்ணனி இசை சிங்க் ஆகாமல் திரிகிறது. “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை “ பாடல் . பாடல் வரிகளும் , காட்சிப்படுத்தலும் “வில்ஸ் ஃபில்டர்” சிகரெட்டைப் போல் "filter and tobacco" perfectly matched.

அங்காடித் தெருவின் அல்டிமேட் அஞ்சலிதான் . பொன்னிறமாய் வறுத்த புகையிலைப் போல் இருக்கிறார். வெடுக்,வெடுக்கென்று அவர் பேசும் வேகத்திற்கு , புருவவெட்டும், மூக்கு சுருக்குதலும் , கண்ணசைப்புகளும் எக்ஸ்லண்ட் . (மன்னித்து விடு ரீமா !) சொந்தக்குரல் என்று நினைக்கிறேன் . மாடுலேஷனும் பின்னல். காமத்தை வெளிப்படுத்தாத அவர் உடல்மொழி அற்புதம் . அவரை பெற்றவர்களுக்கும் , கண்டுபிடித்த இயக்குனர் கற்றது தமிழ் ராமிற்கும் ராயல் சல்யூட்.

எதிர் வினை போல் யதார்த்த மீறல்களும் இருக்கிறது. கொஞ்சம் நீளமோ என்று தோன்றுகிறது . இருந்தாலும் பரவாயில்லை. இதுவரை நாம் கண்டிராத கதைக்களம் . மிகையில்லாத நடிப்பு. போலித்தனமில்லாத இயக்கம். எல்லாவற்றுக்கும் மேல் அஞ்சலியின் "outstanding perfomence "

”அங்காடித்தெரு “ ஒரு அனுபவம்......