

சீமை நெருங்கி கொண்டிருந்தது . அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது . ராமேஸ்வரம் விரைவு வண்டி . அதிகாலை அவஸ்தை . அந்த சங்கிலியை இன்னும் கொஞ்சம் நீளமாகத்தான் வைத்தால் என்ன ? பர்ஸை திறந்து சில்லறையாக ரூ 200 இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன் . இருந்தது. சிகரெட் பற்ற வைத்துக்கொண்டேன் . வெளியில் கருவேல மரங்கள் பின்னோக்கி மறைந்து கொண்டிருக்க , நான் நிழலை நெருங்கி கொண்டிருந்தேன் . பா .ரா என்னும் நிழலை . ம(ஹா) களின் திருமணம் .
சிவகங்கை சீமையில் கால் வைத்தோம் . நான் , பொன் .வாசுதேவன் , ராஜசுந்தர்ராஜன் ஐயா . மலர்ந்த முகத்தோடு சரவணன் , கும்க்கி , தோளோடு தோளாய் முத்துராமலிங்கம் ..அப்புறம் பா .ரா . எளிமையான சிரிப்போடு அணைத்துக்கொண்டார் மக்கா .
சின்ன சின்ன நலம் விசாரிப்புகள் . ஹோட்டல் அறைக்கு போனோம் . அதிரசம் , முறுக்கு எல்லாம் அரேஞ்ச் பண்ணும் வேலை மட்டுமே பாக்கியிருக்கிறது மக்கா என்றார் பா .ரா . கிட்ட தட்ட முக்கால் கிணறை தாண்டி விட்ட அவனை பார்த்து எனக்கு கொஞ்சம் பொறாமையே வந்தது .
நீங்க வேலையை பாருங்க மக்கா .ஒரு வண்டி மட்டும் ஏற்பாடு பண்ணி கொடுங்க போதும் என்றோம். இதே சிவகங்கையில்தான் நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தேன் . ஒரு விஜயதசமி நாளில் மேளம் முழங்க மாலையுடன் என்னை அப்பா மன்னர் பள்ளிக்கு அழைத்து சென்றது நினைவுக்கு வந்தது . உடன் அப்பாவுக்கு (தஞ்சை ) போன் போட்டேன் . 45 வயதில் 81 வயது அப்பாவிற்கு அதை நினைவுபடுத்தினேன் . அது இன்னும் ஒரு சந்தோஷம் . அதற்காக பா.ராவிற்கும் , மகாவிற்கும் மீண்டும் ஒரு முறை நன்றி
செட்டிநாடு வீடுகள் , கம்பர் சமாதி , காளையார் கோயில் எல்லாம் சுற்றி விட்டு பா .ரா வீட்டிற்கு போனோம் . இந்த தெருவில் எந்த இடத்தில் அந்த வறட்டியை தட்டியபடி முன் முடியை புறங்கையால் ஒதுக்கியபடி அந்த அம்மணி பேசியிருப்பார் என்று தேடிப்பார்த்துக் கொண்டேன். கொஞ்சம் மாசாவை ருசித்து விட்டு அடுத்த கட்டத்துக்கு தயாரானோம் . மக்கா ..சுக்கா என்று முன்பு எழுதியதை நினைவில் வைத்திருந்தான் தோழன் முத்துராமலிங்கம் . வள்ளாலாருக்கு ஒரு முன் மன்னிப்பு கடுதாசி எழுதி கொடுத்தேன் ...நீங்க முன்னாடி போங்க மக்கா..நான் பின்னாடியே வரேன் என்றார் பா.ரா . வந்தவுடன் கையில் வைத்திருந்தார் போனபார்ட்டை (நெப்போலியன்) ... தொடர்ந்து ஜீவகாருண்ய சங்க தலைவர் பழனியும் வந்தார் ... அம்மாவை தத்தம் மொழியில் அழைத்து உயிரை விட்டிருந்த ஜீவராசிகள் ஆவி பறக்க அடைப்பட்டிருந்தன...
இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது ? சரக்கு உள்ளே போனது . அறை முழுவதும் பிரியங்களினால் நிரம்பி வழிந்தது . உண்டு , உறங்கி , விழித்து மீண்டும்.....
முகூர்த்தம் . குறித்த நேரத்திற்கு வண்டி வந்தது . முதல் நாள் இரவே வந்து அல்வா கொடுத்த அக்பரை விட்டு விடவில்லை என்பதை அவரிடம் சொல்லுங்கள். கா.பா . ஸ்ரீ , மதுரை சரவணன் , பாலா இவர்களிடமும் . மாதவ்ராஜ் சொன்னது போல் மண்டப திருமணங்கள் போல் இல்லாமல் வீட்டோடு நடந்த விசேஷம் .
எல்லாத் திசைகளிலிருந்தும் ஆசி வழங்குவதைப் போல் நண்பர்கள் அழைத்துக் கொண்டேயிருந்தனர் . ஒரு நண்பரிடம் நான் சரியாக பேச முடியாமல் நேர்ந்ததற்கு மன்னிக்கவும் . பாழாய் போன ...
மாது , கா மு இன்னும் வெற்றி, சிவாஜீ , ஜெர்ரீ மற்றும் நண்பர்களுடன் நடத்திய கச்சேரியை மீண்டும் என் மகளின் திருமணத்தில் , அதன் பின் மாதுவின் மகள் திருமணத்தில் , இன்னொரு நண்பரின் மகள் திருமணத்தில் , அதன் பின் வாசுவின் மகள் திருமணத்தில் மீண்டும் ரிவைண்ட் செய்து பார்க்க ஆசை..
மக்கா... தீபாவளி நெருங்குகிறது . மஹாவுக்கு தலை தீபாவளி வாழ்த்துக்கள் . பால்யத்தில் தீபாவளி முடிந்தவுடன் கூட அந்த கடந்து போன திருவிழா ஏக்கம் இருந்துக் கொண்டேயிருக்கும் . இப்போதும் அப்படித்தான் உணர்கிறேன் ..சொன்னது போல் அடுத்த மாதம் ....ஏழுகடை...பாற்கடல் ... கொண்டாட்டம்.. அதுவரை .....