
என்னன்னு தெரியலை . ரெண்டு நாளா அஞ்சலை நினைப்பாவே இருக்கு . மவராசி என்னைய ஒத்தையில விட்டுட்டு போய் சேர்ந்துட்டா. ஆச்சு . ஒரு நாலு வருஷம் . அவ கருமாதியன்னிக்கு தின்னேனே கறி சோறு . அதுக்கப்புறம் கண்ல கூட பாக்கல . விரலை கடிச்சுகிட்டு குடிங்க கஞ்சியைன்னுட்டாங்க மருமவளுக. உடம்பு முடியலை . ஆனா நாக்கு இந்த கேக்கு கேக்குது . கறி தின்னாம உசுர் போயிட்டா கட்டை வேகாதோ .
முதல்ல இளையவன் கால் மாட்ல வந்து உக்காந்தான் . பின்னாடியே மூத்தவன் தலைமாட்டுல . மருமவ ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையா நிக்கறாங்க. மூஞ்சியில கரிசனம் தெரியுது . இன்னிக்கு கறி சோத்துக்கு வேளை வந்திருச்சோ ? நல்ல குறும்பாட்டு கறியா பிடிச்சிட்டு வாடா மக்கா . நம்ம தோட்டத்து மாங்கா போட்டு , எலும்புல எண்ணெய் ஊற குழம்பு வைங்க அய்யனுக்கு . எனக்கு வாய் ஊறல் கொஞ்சம் அடங்கினாப்ல இருந்துச்சு . ஏனோ எங்கப்பன் நினைப்பு ஓடுது . அவனுக்கு இந்த மாதிரிதான் கறி சோறாக்கினோம் . அன்னிக்கு அவன் கண்ணுல தெரிஞ்ச ஒரு சித்தம் . இன்னிக்கு என் கண்ணுல தெரியறாப்ல ஒரு ஒரு பிரமை .
குழம்பு கொதிக்கிற வாசம் வருது . சின்ன வயசுல கறி வாசம் , எலும்பு வாசம்னு பிரிச்சு மேய்வேன் . ஒத்தை ஆளு ஒன்றரை கிலோ கறியை அஞ்சு கவளத்துல அமுக்குவேன் . இன்னிக்கு ஏன் இப்படி ஆகுதுன்னு தெரியலை . ரெண்டாமவதான் தட்டுல சோத்தை போட்டு குழம்பை ஊத்தி , மலையா எலும்பை குமிச்சு எடுத்தாறா . பின்னாடியே மவனும் . மூத்தவனை காணும் .அவன் எங்கடான்னு கேக்கேன் . தோட்டத்துக்கு போயிருக்கானாம் . அவன் பொண்சாதி சாடையில சொல்றா .
நல்லி எலும்பை கடிக்கும்போது அஞ்சலை நினைப்பு திருப்பி வருது . கூடவே எங்கப்பன் நினைப்பும் . கறி என்னவோ இளசாத்தான் இருக்கு . எதுவோ என்னைய மெல்ல வுடாம செய்யுது . நல்லா கேட்டு போடுறி கெழவனுக்கு . பெரியவ சின்னவளுக்கு சொல்லுறா . கொஞ்சம் கேலியா பட்டுச்சு எனக்கு . மூத்தவன் உள்ளே வந்தான் . கையில கொத்து ,கொத்தா ..அம்மாடி . மறுபடியும் எங்கப்பன் வரான் . மவனேன்னு தலையில கையை வைக்கறான் . இன்னும் கொஞ்சம் கறியை வைங்கடி அப்பனுக்கு . அய்யா நல்லா தின்னு . என்னா ? மவனே வேண்டாமுடா . வார்த்தை வரலை. தொண்டை முட்டுச்சு . இனி பிரயோசனமில்லை. முடிவு பண்ணிட்டானுங்க. அதோ மூத்தவ தூக்கை எடுத்து கிட்டு வராளே . சின்னவனும் வந்துட்டான். நல்லா சூடு பறக்க தேய்க்கணும்டா என்கிறான் பெரியவன் . ரெண்டு பேத்துக்கு ஆகாம இருந்துச்சு . காரியத்துக்காக ஒன்னு , மன்னா இருக்கானுங்க போல .
சின்னவன் நல்லெண்ணெயை தலையில கொட்டி தேய்க்க ஆரம்பிச்சான் . எனக்கு பொறி கலங்குச்சு . பெரியவன் இளநியை சீவ ஆரம்பிக்கிறான் . ரெண்டு மருமவளும் கிணத்தடியில நிக்கறாளுக . ஒரு படி எண்ணெய் என் தலையில . உடம்பு லேசா நடுங்கறாப்ல இருக்கு . மறுபடியும் எங்கப்பன் மூஞ்சி தெரியுது . கூடவே அஞ்சலை மூஞ்சியும் . வாரி இறைக்கறாளுவ . ஒரு 50 தவலை தண்ணி. ஒரு அரை மணி . கை அலுப்புக்கு கொஞ்சம் நிப்பாட்டறாளுவ . பெரிய சொம்புல இளநியை எடுத்துட்டு வரான் சின்னவன் .
டேய் வேண்டாமுடா . வாயில வச்சு குடிங்கப்புங்கிறான் . எனக்கு தெரிஞ்சு போச்சு . அன்னிக்கு எங்கப்பனும் இப்படித்தான் இருந்தான் . அஞ்சலையும் . இன்னும் ஒத்தை காது கிழவி , நொண்டி சித்தப்பு எல்லாரும் .
கீத்து வந்து இறங்கியது . பந்தல் போட ஆரம்பித்தார்கள் . ஒப்பாரி சத்தம் கேட்க தொடங்கியது . ரெண்டு மருமவளும்தான் மூக்கை சிந்திக் கொண்டே இருக்கிறார்கள் . வந்திருந்த ஊர் சனத்துக்கு தெரிந்தே இருந்தது . என்ன நடந்திருக்கும் என்று . ஆனாலும் ஆறுதல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் . பிள்ளைகளுக்கு . குப்பை மெட்டில் கொட்டப்பட்டிருந்த எலும்புகளை நாய்க்கூட்டம் ஒன்று சீறலோடு சுவைத்துக் கொண்டிருக்கின்றன