
இரவு 11 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கும்.. சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் பாடியை பேக் பண்ணி கொடுத்து விடுவோம்.. இப்படித்தான் தகவல் வந்தது...இந்த விஞ்ஞான மருத்துவ யுகத்தில் இது சாத்தியமாகத்தான் இருக்கிறது.. நான் மருத்துவமனைக்கு போய் சேர்ந்தபோது மணி ஏழு.
தலையில் ஒரு வெள்ளைக்கட்டு. அதன் மேல் “NO BONE" என்று எழுதப்பட்டிருந்தது.. முகத்தில் நான்கு நாள் தாடி..ஒரு உறைந்திருந்த புன்னகை அல்லது ஒரு வித இகழ்ச்சி.. மற்றபடி உடம்பில் ஒரு கீறல் கூட இல்லை.. நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் சுவாசம் சீராக வந்து கொண்டிருந்தது... சாலை விபத்து.. மழை நீ ர் தேங்கியிருந்த பள்ளத்தில் பைக்கை விட்டு, தூக்கி வீசப்பட்டு செண்டர் மீடியனில் தலை மோதி, கடுமையான பாதிப்பு.. முளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை... மருத்துவர்கள் கை விரித்து விட்டார்கள்..நவீன மெஷின்கள், வண்ண ஒயர்கள்..இனம் புரியாத பீப் ஒலிகள்.. செயற்கை சுவசாம் ஓடி கொண்டிருந்தது...
கல்யாண வீட்டுக்கு முன் கூட்டியே வருவது போல், சாவிற்கும் வரமுடியுமா? வந்து காத்திருந்தது உறவினர் கூட்டம்.. அடிக்கடி உள்ளே சென்று காட்சிப் பொருளை போல் பார்த்து, விசும்பி விட்டு....
அவர் கோபி... என் தம்பியின் சகலை..38 வயது..ரயில்வேயில் எக்ஸ்பிரஸ் டிரைவர்..விபத்து நடந்த இடம் சோளீங்கநல்லூர் குளோபல் மருத்துவமனை அருகில்...ஹெல்மெட் அணியவில்லை. அணிந்திருந்தால் 70 % பிழைத்திருக்க வாய்ப்புண்டு என்று மருத்துவர் சொன்னார்.. அணிந்தவன் விபத்தில் சாவது இல்லையா? என்ற வரட்டு வாதத்தை கைவிட்டு நிச்சயம் ஹெல்மெட் அணியுங்கள் நண்பர்களே...
முந்தின நாள் 10 மணி நேரம் கெடு கொடுத்திருந்தார்கள்.. ஒவ்வொரு ஐந்து மணிக்கும் சிறப்பு மருத்துவர் குழு பரிசோதிப்பார்கள்.. 10 மணி நேர முடிவில் மூளைச் சாவு என்று டிக்ளேர் செய்வார்கள். அதன் பின் உடலில் இயங்கும் உறுப்புகளை தானம் செய்யலாம்..தானம் செய்ய சம்மதித்தால், பிளாஷ் செய்தி பரப்பப்படும்... பிரியாரிட்டியில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும்.. வர்த்தகம் கிடையாது.. மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை கட்டணம் கிடையாது.. முழுக்க மனிதாபிமான அடிப்படியில்தான்.. பெறுபவரை தவிர... பின் பிறவி அல்லவா?
கோபியின் தாய் 70 வயது.. புத்திரசோகம்... என்ன சொல்லி தேற்றுவது? 8 வயதில் ஒரு பையன்...5 வயது பெண்....இந்த மட்டிலும் பொட்டுன்னு போகாம நாலு பேருக்கு உயிர் கொடுத்துட்டு போறாரேன்னு ஒரு சின்ன ஆறுதல் அண்ணா...என்றாள் என்னிடம்... அவர் இறந்ததாக நான் நினைக்கவில்லை..அதனால் வீட்டில் யாரும் அழ வேண்டாமென்று அவள் சொன்னது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.. பெண்ணின் சக்தி அதுதான்
முதலில் லிவர்.. பின் கிட்னி.. அதன் பின் கண்...இறுதியில் இருதயம் என்று எடுத்துவிட்டு பாடியை பேக் செய்து மார்ச்சுவரிக்கு அனுப்பி விட்டார்கள்..
எப் ஐ ஆர் போட்டிருப்பதால் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டுமென்பது சட்டம்... ஏற்கனவே வெறும் பைதான் இருந்தது.. பின் ஆள், அம்பு, பணம் என்று போய் வேலை முடிந்தது..
அதிகாலை சுமார் ஐந்து மணி அளவில் இதயத்துடிப்பு நிறுத்தப்பட்டதாம்.. அந்த கடைசி துடிப்பு என்ன சொல்லியிருக்கும்?
இன்னொருவருக்கு பொருத்திய பின் அந்த இதயம் முதல் துடிப்பில் என்ன சொல்லும்?
எதாவது டிரான்ஸ்கிரிப்ட் முறையில் அந்த துடிப்பை பதிவிட்டு கோட் டிரான்ஸ்லேட் செய்யும் காலம் வந்தாலும் வரலாம்
இப்போதைக்கு அந்த குடும்பத்திற்கு இழப்பை தாங்குவதற்கு சக்தியையும், வாழ்வை எதிர்கொள்ள சக்தியையும் கொடு என்று இறைவனையோ,, இயற்கையையோ வேண்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும்?