
தண்ணீர் , நீல்லூ , வெள்ளம் , பானி, h2o.. உடலிலும், இவ்வுலகிலும் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் திரவம் !!
முரட்டு கித்தான் பை. அழுக்கேறி இன்னும் கனமாயிருந்தது. பை அழுக்கில் என்ன இருக்கிறது? இருக்கும் இரண்டு ஜதை ஆடைகளும், மனமும் கூடத்தான் ..
போறதுன்னு முடிவு பண்ணியாச்சா? அப்படின்னா எங்கே ?
ஆமாம். ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை. வாழ்வதில் அவ்வளவாக விருப்பமில்லை. அதற்காக சாகவும் ஆசையில்லை. கால் போகும் போக்கில் போய் எங்கேயாவது கரைந்திட உத்தேசம்.
எதிரில் யாருமில்லை. என்னுடன் பேச யார் இருக்கிறார் ? நானே என்னுடன் ! தோல்விகள்..
ரயில் நிலையம் . வழக்கத்துக்கு மாறாக இருந்தது. அமைதிதான் அமானுஷ்யமா என்ன? இந்த பெருங்கூட்டமும் அதே உணர்வைத்தான் தருகிறது.
இப்போது வரவிருக்கும் ரயில் எந்த ஊருக்கு செல்கிறது ?
நீங்கள் எங்கே செல்ல வேண்டும் ?
இந்த வண்டி நிற்கும் கடைசி நிறுத்தத்திற்கு !
வினோதமாக பார்க்கப்பட்டேன். எல்லோருமே இப்படித்தான் பார்க்கிறார்கள் . நான் நடந்து கொள்ளும் விதம் காரணமாக இருக்கலாம். ஒரு காக்கி வில்ஸை பற்ற வைத்துக்கொண்டேன். பீடி ! அவளுக்கு இந்த நாற்றம் பிடிக்கும். ஆனால் பற்ற வைக்காத பீடியில் மணம் நன்றாக இருக்கிறது என்று சொல்வாள். நாளை கடிதம் அவள் கையில் கிடைக்கும். என்ன நினைப்பாள் ? கோழையென்றா?
பெரும் சம்சாரியைப்போல் ரயில் பிளாட்பாரத்தில் நுழைந்தது. கோஷம் காதைப்பிளக்கிறது. இரண்டே அன்ரிசர்வ்டு பெட்டிகள்தான். கடைசி பெட்டிக்கு ஓடுகிறேன். கூடவே பெருங்கூட்டமும் . எல்லாப் பெட்டிகளிலும் மனிதர்கள் காய்த்து தொங்குகிறார்கள் . யாரோ சிலர் என்னையும் உள்ளே தள்ளிவிட்டனர். சாமான்களுக்கு மாத்திரம் என்று எழுதப்பட்டிருந்த பலகையில் இருபது நபர்கள் . நானும் ஒருவனாய். ரயில் புறப்படுகிறது. மீண்டும் துதி கோஷங்கள் . காதைப் பொத்திக்கொள்கிறேன். அருகிலிருப்பவன் வினோதமாய் பார்க்கிறான். ஏதோ கேட்கிறான். புரியாத மொழி ! கீழே ஒரு தம்பதியினர். அவள் மடியில் ஒரு குழந்தை. என்னைப்பார்த்து சிரிக்கிறது. நான் முகத்தை திருப்பிக் கொள்கிறேன் . ஏமாற்றம் அதற்கு புரியுமா ?
நான் எதிர்பார்த்தது நடந்தது ஒரேமுறைதான். அவள் ! . ஆனாலும் உபயோகமில்லை. யதார்த்தை புரிந்து எதிர்பார்க்க வேண்டும் என்று நான் புரிந்து கொள்வதற்குள் காலம் கடந்து விட்டது. நீரை அள்ளி தெறித்தாளே ! அந்த படித்துறைக்கு பயணிக்கிறேன்.
கிடைக்கிற வேலைக்கு போங்க . என்னை கூட்டிக்கங்க . அதுக்கப்புறம் உங்களுக்காக பட்டினி என்ன ? சாகக் கூட தயார் . உங்க லட்சியம் நிறைவேறணும். என்ன ?
ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நிற்கிறது. இருட்டு. கடைசி பெட்டி பிளாட்பாரத்தை விட்டு வெளியே நிற்கிறது. பசிக்கிறது. காபி, டீ, சமோசா ஒன்றும் வரவில்லை. கால் துண்டு பிஸ்கெட்டை அந்த குழந்தை சப்பிக் கொண்டிருந்தது. அதன் தாய் என்னமோ சொல்லி கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். குழந்தைக்கு விக்கல் எடுக்கிறது . தண்ணீர் புகட்டுகிறாள் .
மீண்டும் கோஷங்கள் . பஜனைப்பாடல்கள். ரயில் போய்க் கொண்டே இருக்கிறது. 72 நபர்கள் பயணம் செய்ய வேண்டிய பெட்டியில் 200 பேர்கள் . எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீராவது குடித்தால் போதும் . அந்த தாய் பாட்டிலை நீட்டுகிறாள் . வாங்கி குடிக்கிறேன். மீண்டும் குழந்தைக்கு விக்கல். இப்போது லேசாக அழ ஆரம்பிக்கிறது.
அடுத்த ஸ்டேஷனில் தண்ணீர் பிடித்து தருகிறேன் என் று சொல்கிறேன். குழந்தை அழுகை குறைந்து என்னைப் பார்த்து லேசாக சிரிக்கிறது. கூட்டம் தொண்டை வறண்டு தண்ணீரை வெறித்தனமாக குடிக்கிறது. எந்த ஸ்டேஷனிலும் வண்டி நிற்கவில்லை. நின்றாலும் இந்த கூட்டத்திலிருந்து வெளியில் போய் விட்டு வருவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
சுற்றிலும் பார்க்கிறேன். வெறி கொண்ட முகங்கள் . கையில் ஏதோ ஆயுதங்கள் . என்ன செய்யப் போகிறார்கள் ? எங்கே போகிறார்கள் ? அரைகுறை பாஷையில் கேட்கிறேன் . பெருஞ்சிரிப்பு .
ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு... ஜெய்...
குழந்தையிடம் மீண்டும் சிணுங்கல் . விக்கல் எடுக்கிறது. துணியை விலக்கி அதன் முகத்தோடு சேர்த்து பொத்திக் கொள்கிறாள் . நான் இறங்கினேன் . தோள்களில் நடந்து கழிவறைக்கு போகிறேன்.
பானி நைய் பாய்..
தண்ணி வரலைப்பா...
பகிரென்றது. ஒரு நான்கு சொட்டு இருந்தால் போதுமே .
இப்ப ஒரு ஸ்டேஷன் வரும் . அங்க பிடிக்கலாம்பா . எல்லாருமே நாக்கு வறண்டுதான் கிடக்கிறோம்.
என்னிடத்துக்கு திரும்புகிறேன். குழந்தை லேசான உறக்கத்தில் சிரிக்கிறது.
குழந்தை தூங்கறப்போ சுவாமி விளையாட்டு காட்டுவார்டா. பாட்டி சொன்னது நினைவிற்கு வருகிறது .
பாரதமாதாகீ ஜேய்..ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு ஜெய்..
அவள் அலறுகிறாள் . அந்த தந்தை உலுக்குகிறான். ராமச்சந்திரமூர்த்தி தண்ணீர் கொண்டு வரவில்லை. குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் . விக்கல் இல்லை. விளையாட்டை ரசித்துக் கொண்டே சிரிப்பு உறைந்திருக்க....