
ராஜஸ்தான்ல ரிக்ஷா ஓட்டுற ஒரு ஆளு சவாரி முடிச்சு சப்பாத்தி சாப்பிடறச்சே யோசிக்கிறான். என்ன பொழைப்புடா இது...நாமளூம் எப்ப முதலாளி ஆகறதுன்னு ! ஒரு முடிவுக்கு வந்து வந்த விலைக்கு ரிக்ஷா மற்றும் தட்டு முட்டு சாமானையெல்லாம் வித்துட்டு கோதுமை கலர்ல முக்காடு போட்டுகிட்டு இருக்கிற பொஞ்சாதியையும் கூட்டி கிட்டு சென்னை சென்ட்ரல்ல வந்து இறங்கி நேரா செளகார்பேட்டைக்கு போறான்.
அங்க அவங்களுக்கு ஒரு சங்கம் இருக்கு.அவிங்க சொன்னதை கேட்டு சென்னை புறநகர் பகுதில ஒரு வீடு வாடகைக்கு பிடிச்சு வீட்டு வாசல்ல”மாணிக்சந்த் கட்டாரியா”பான்புரோக்கர் னு ஒரு போர்டு மாட்டறான். தங்கத்துக்கு 3 வட்டி,வெள்ளி,பித்தளைக்கு 10 காசு வட்டி.சைடுல 1 கிராம் கவரிங் நகை. சிறு சேமிப்பு நகை சீட்டுனு விரிவு படுத்தறான்.சுற்று வட்டார ஜனங்களின் காது ,கழுத்து,மூக்கு எல்லாம் இந்தி படிக்க ஆரம்பிக்குது.அப்படியே சின்னதா ஒரு நகைகடையும் ஆரம்பிக்கிறான்..வாசல் மட்டும் சின்னதா இருக்கும்.உள்ளே பக்காவா டைல்ஸ் வச்சு வீடு பிரமாண்டமா இருக்கும். ரேஷன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் வாங்கிடறான் . அப்புறம் என்ன ராஜஸ்தான்ல ரிக்ஷா ஓட்டுன ஆசாமி இப்ப “சேட்டு”ஆயிட்டான். அவன் கொடுக்குற அடகு சீட்டுக்கு பத்து ரூபா ஸ்ஸ்டேசனரி” பீஸ் வேற.
நானும் என் அவசிய மற்றும் அனாவசிய தேவைகளுக்கு படியேறியதுண்டு. அதுல பாதி வட்டி கட்டாம் மூழ்கியும் போனதுண்டு. ஆனா இப்பல்லாம் நான் என் தங்கங்களை இந்தி படிக்க அனுப்பறதில்ல. வங்கில வச்சு வணிகவியல் கத்து கொடுக்கிறேன்.
என்ன மச்சான்..கன்னமெல்லாம் டொக்கு விழுந்தாப்ல இருக்கு..இப்படி இருந்தா அட்டு பிகர் கூட மடியாது.
அதுக்கு என்னடா பண்றது?
டெய்லி ஒரு 5000 போட்டு தாக்கு.சும்மா தக தகன்னு ஆயிடுவே..
சரி இப்பவே ஸ்டார்ட் பண்ணுவோம்..
மச்சான் கவிதா ஒர்க் அவுட் ஆயிட்டா.
அப்ப பார்ட்டி?
வெறும் பீர் கிக்கே இல்ல மச்சான்.ஒரு குவார்ட்டர் வாங்கி மிக்ஸ் பண்ணலாம்.
என்ன மச்சான்..வேலைக்கு போகல?
இல்லடா..நேத்து ரவி கல்யாணத்துல மப்பு ஜாஸ்தியாயிடுச்சு. தலைவலி.
முள்ளை முள்ளாலதான் எடுக்கணும். வா ஒரு கட்டிங் போடுவோம்..
இப்படியாகவும் இளைய தலைமுறையினரிடம் ஆரம்பிக்கும் மது பழக்கம்.மெல்ல மெல்ல அக்டோபஸ் போல் தன் பிடியை இறுக்க தொடங்குகிறது. அந்தி சாய்ந்து இருள ஆரம்பித்தால் போதும்! மண்டைக்குள் மரங்கொத்தி போல் ஆல்கஹால் அரிப்பெடுக்க ஆரம்பிக்கிறது.பணத்துக்காக,குடிக்காக எதையும் செய்ய துணியும் நிலைக்கு குடிகாரன் தள்ளப்படுகிறான்.சமீபகாலமாய் அதிகரித்து வரும் வாகன திருட்டு மற்றும் செயின் பறிப்பு குற்றங்களில் பிடிபடும் நபர்களின் வயது 18/20 ஆகவே இருக்கிறது.உணர்வு ரீதியான பாலியல் பிரச்சனைகளுக்கும்,விவாக ரத்து மற்றும் கள்ள தொடர்பு,கொலை போன்றவைகளூக்கும் மதுவே அடிப்படையாகிறது.டாஸ்மாக் கடைகளில் கூடும் இளைய தலைமுறை கவலை அளிப்பதாகவே இருக்கிறது. தொழிலையும்,குடியையும் சரியாக அவர்களால் நிர்வகிக்க முடியாது என்பது இன்னும் கவலையை கூட்டுகிறது.நிச்சயம் அவர்களில் கணிசமானோர் எதிர்கால குற்றவாளிகளே
குடி கவுஜை :
ஏன் இப்படி குடிக்கிற?
என் பொண்டாட்டி என்னைய விட்டுட்டு போயிட்டா.
ஏன் போயிட்டா?
நா குடிக்கிறது அவளுக்கு பிடிக்கல !