Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Thursday, February 18, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....4



கவிஞர் தேன்மொழியின் “ நெற்குஞ்சம்” மீண்டும் ஒரு முறை படித்தேன். பத்து சிறுகதைகளை கொண்ட அற்புதமான நூல். அதில் “தாழி” என்றொரு சிறுகதை. அனுபவம் என்றும் சொல்லலாம். சுனாமிக்கு பின் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக எழுதப்பட்டது.

சுனாமியில் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் ஒரு அரசு அலுவலகம். அதில் பணிபுரியும் ஒருவரது பார்வையில் கதை சொல்லப்படுகிறது. நிவாரணம் வாங்க கூட்டம் அலைமோதுகிறது. நாகப்பட்டினம், கோடியக்கரை, வேதாரண்யம், பூம்புகார் இங்கெல்லாம் மாண்டவர்களின் புகைப்படங்கள் கணினியிலும், ஆல்பமாகவும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. வருபவர்கள் அதை பார்த்து இறந்தவர்களை அடையாளம் காணவேண்டும். பின் உறுதி செய்யப்பட்ட பின் அரசுக்கு நிவாரணத்துக்கு பரிந்துரை செய்யப்படும். இதில் அரசின் உதவியை வாங்க வேண்டும் என்பதற்காக வரும் போலிகளும் உண்டு. அதனால் உண்மையில் பறிகொடுத்தவர்களை கூட சந்தேக கண் கொண்டு பார்த்து அவர்களை புண்படுத்தும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் போவதை ஆசிரியர் சொல்கிறார்.

கதையின் மையமாக ஒரு முதியவர் வருகிறார். கையில் நைந்து போன ஒரு பாலீதீன் கவரில் இரு இளம் பெண்ணின் புகைப்படம். ஒரு பொக்கிஷத்தை போல் அதை பாதுகாத்து வருகிறார். அலுவலரிடம் அந்த படத்தை காட்டுகையில் அவர் கண் கலங்குகிறது. ஆனாலும் அவள் இறந்திருக்க மாட்டாள் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார். அலுவலர் ஆல்பத்தை கொடுத்து தேடிப்பார்க்க சொல்கிறார்.

“முகங்களும் உடல்களும் புரளகின்றன. மூச்சடைத்து இறந்தவர்களின் முகங்களில் காற்றுக்கான தேடல் இருந்தது. அளவுக்கு அதிகமாக நீரை குடித்து இறந்தவர்களின் முகங்களில் வாந்தி எடுக்கும் உணர்வு படிந்திருந்தது. குழந்தையின் பசித்த வாய், தாயின் மார்பிற்காக உதடுகளை குவித்தபடி ஒரு புறம் கிடக்க, தாயின் ஒற்றை மார்பகம் குழந்தைக்கான பாலை ஏந்தியபடி இன்னொரு புறம் திறந்து கிடந்தது. முள்காடுகளில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட உடல்கள் துணிகளோடு கிழிந்து கிடந்தது. வாழ்வின் அழகியலை அர்த்தமற்றதாக்கி எல்லாவற்றின் கீழும் இருக்கும் அசிங்கங்களை திறந்து காட்டிக்கொண்டிருந்தன அந்த புகைப்படங்கள். இயற்கையை போல் மேடு பள்ளங்களை சமப்படுத்தும் தொழிலாளி வேறு யார் இருக்க முடியும்? எல்லைக்கோடுகளை அழித்து, பேதங்களை கரைத்து , சாவின் மீது சிரிக்கும் பலவான் இயற்கை.”

பெரியவர் “இதுல என் பொண்ணு படம் இல்லை” என்று ஆனந்த குரல் எழுப்பும்போது , அவரிடம் இன்னொரு ஆல்பம் தரப்படுகிறது. நிச்சயம் இதுலையும் இருக்க மாட்டா மகராசி என்றபடி பெரியவர் ஆல்பத்தை புரட்டுகிறார்.

“என் புள்ள இருக்கா என்று முதியவர் அலறுகிறார். முகத்தில் அறைந்து கொண்டு அழுகிறார். அங்கு இருக்கும் பணியாளர்கள் மரத்து போனவர்களாக இருக்கிறார்கள். பெரியவரே ! உங்களுக்கு அரசு நிவாரணம் உண்டு என்று சொல்லும்போது

“பெரியவர் தோளில் கிடந்த துண்டு இப்போது ஆல்பத்தின் மீது கிடந்தது.கண்ணுக்குள்ள பொத்தி வச்சு வளர்த்த புள்ளைய இப்படி அம்மணமா போட்டு வச்சிருக்கீங்களே! குற்றசாட்டாக பாய்ந்து கொண்டிருந்தது அவரது குரல்.

“அள்ளிட்டு போன கடலுக்கும் மனசில்ல, என்னைய விட்டுட்டு போன இவளுக்கும் மனசில்ல: கிழ உசுரு போயிடும் தாயி”

ஆல்பத்தின் மேல் கிடந்த துண்டின் மீது முட்டிமுட்டி கதறுகிறார் கிழவர்.

தேன்மொழி இந்த வரிகளுடன் கதையை முடிக்கிறார்.

“சுனாமிக்கு முன் நிகழ்ந்ததுபோல் மீண்டும் புவிப்பாளம் நழுவத்தொடங்கியது.கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன”

வாசகனை கதையின் பாத்திரமாக்குகிறார் தேன்மொழி. நம் கண் முன் சம்பவங்கள் நடக்கின்ற உணர்வை கொடுக்கிறார்.

படித்து முடித்தவுடன் என் கண்கள் கலங்கியது. அந்த முதியவரின் வேதனை நம்மையும் தொற்றிக்கொள்கிறது எனலாம் !


தேன்மொழியின் கவிதை ஒன்று

பல மரக்கிளைகளில்
அமர்ந்த பறவை
சலித்துப் போய்
சரணடைகிறது
என் ஜன்னல் கம்பிகளில்
சிறுகாற்று வரலாம்
ஜன்னல் கதவுகளை
மீட்டிப் போகலாம்
என் அசைவுகள்
அதன் அமைதியில்
கல்லெறியலாம்
ஆகவே அமர்ந்திருக்கிறேன்
அதன் காட்சிப்புலத்தில்
தவமாய்
தியானமாய்
இல்லை, சிலையாய்!