
காலம் கடந்து நிற்கும்
புதினமொன்றை வாசிக்க
ஆரம்பித்திருந்தேன்
கடைசி வரியிலிருந்து
குருதிப்புனலில் தொடங்கும்
சரித்திரம் அது
பின் வாசிப்பில்
இரத்தக்கறைகள் சற்றே
உலரத்தொடங்கியிருந்தன
கையகல சதைத்துண்டும்
சுருண்டிருக்கும் கற்றை முடியும்
அதன் கால் பாவி நிற்கும்
கைப்பிடி மண்ணும்தான்
இக்கோரத்தின் பிரதான பாத்திரங்கள்
அளவிலா ஆசைகளும், ஆணவமும்
இந்த அக்கினியில் நெய்யாக !
விழிப்பில் இருந்து மீண்டும்
உறக்கமும் அதற்குறிய கனவும் என்று
முன்னிரவு நோக்கிய பயணம் போல்
உணர்ந்தேன் அவ்வாசிப்பை
சிரசுகள் ஒட்டிக்கொண்டன
உடைந்த வாள்களும், ஈட்டிகளும்
கரங்களில் சதிராட்டம்
நறுமணத்தை நுகர ஆரம்பித்தேன்
கூடவே வந்த இன்னிசையையும்
என் உடல் பின்னோக்கி
இயங்க முடிந்தது
மெல்ல தலை திரும்ப தொடங்கியிருந்தது
முதல் அத்தியாயத்தின் முதல்
வரிக்கு வந்திருக்கிறேன்
ஆனால் தலைப்புதான் பொருத்தமில்லாமல்
முற்றும் என்று