Sunday, February 13, 2011

காதலின் தீபம் ஒன்று ..




திருவையாறு என்றால் தியாகராஜர் நினைவுக்கு வரலாம் . எங்களுக்கு .. ஆண்டவர் ஸ்வீட் ஸ்டால் அசோகாதான் முதலில் . மாதம் ஒரு முறையாவது நானும் , ரவியும் அங்கு போய் விடுவோம் . சூடாக இலையில் அசோகா . சொர்க்கம் . எங்களுக்கு தியாகராஜர் உற்சவம் சங்கீத திருவிழா இல்லை . அது சங்கீதம் அரசல் புரசலாகவாவது அறிந்தவர்களுக்கு .. எங்களுக்கு அது தாவணித்திருவிழா .. சைட்டோற்சவம் . அங்குதான் அவளை பார்த்தேன் . ஒரு தியாகராஜ ஆராதனையின் போது .

ரவி இவதாண்டா .. இவதான் என் கூட வரப்போறவ .

மாப்ளை அப்ப ராஜி என்றான் ரவிகண்களில் கேள்விக்குறியுடன் . அவனும் ராஜியை லவ்விக்கொண்டிருந்தான் . இந்த இடத்தில் ஒரு விஷயத்தையும் சொல்ல வேண்டும் . ராஜிக்கு இதெல்லாம் தெரியாது . எங்கள் இருவரையும் கூட

உண்மையில் அவள் ஆண்டவர் ஸ்வீட் ஸ்டால் அசோகா போலத்தான் இருந்தாள் . ஏனோ அந்த உவமையை தாண்டி வரமுடியவில்லை . ஷாம்பெயின் யெல்லோ என்று ஒரு கலர் உண்டு . தெரியுமா ? கிராமத்து பையனுக்கு அந்த கலர்லாம் எப்படி தெரியும் என்று யோசிக்க வேண்டாம் . அந்த கலரில் தாவணி அணிந்திருந்தாள் என்னவள் . அவ்வளவுதான் . மற்றபடி அவள் வர்ணனைகளை கடந்தவள் . நான் மனதுக்குள் வர்ணித்தவைகளை விவரிக்க முடியாது . அது எனக்கேயான ரகசியங்கள் .

நான் இவளை பார்த்திருக்கேண்டா .. ராஜா ஸ்கூல் . + 2 . மூலை அனுமார் கோயில் பின்னாடி வீடுன்னு நினைக்கிறேன் .

ரவி இதிலெல்லாம் ஜித்தன் . ஃபிகர்கள் வசிக்கும் தெரு வஸ்தாதுகளை நண்பனாக்குவது உட்பட .

குழந்தை என்னமா பாடறா ? பாகேஸ்ரீ என்ன சரளம் . எனக்கு அப்போது தெரிஞ்சதெல்லாம் ஒருதலைராகம்தான் . பக்கத்துல பேசிக்கொண்டிருந்தவரைப் பார்த்தேன்

ஆத்துக்கு போனவுடனே திருஷ்டி சுத்தி போடுறி என்றவர் என் வருங்கால மாமனார் . அவளுக்கு அதாவது ரஞ்சனி .குரல் அற்புதமாக இருந்தது . என் மாமனார் பார்க்கும்போது ரஞ்சு பாடியதை அபரிதமாக ரசித்தேன். யாரோ நீட்டிய குங்குமம் என் நெற்றியில் பாந்தமாக இருந்தது . ரஞ்சனிக்கு அன்று ஒரு எஸ்கார்ட் கிடைத்தான் . நாலு வீதியிலும் இருக்கும் நண்பர்களுக்கு சொல்லி வைக்கப்பட்டது . இன்னார், இன்னாருடைய என்று . நிறைய பேருக்கு பொறாமை . போங்கடான்னு சொல்லிட்டேன் . லுங்கி கட்டுவதே இல்லை . வேஷ்டிதான் . வெறும் நெற்றி இல்லவே இல்லை. அம்மாவுக்கு ஆச்சர்யம்தான் . என்னடா இது மாயம் என்றாள் .

எல்லாம் உன் மருமகள் பண்ண மாயம் தான் என்றேன் லேசான சீட்டியுடன் . அவளுக்கு பயம் வந்துவிட்டது .

வியாழக்கிழமை பாத்தியா ஓதிகிட்டு வரலாமாடா என்றாள் .

ஆனால் எனக்கு வியாழக்கிழமை வேறு வேலையிருந்தது . முதல் முறையாக ரஞ்சனியை தனியாக சந்திக்கப்போகிறேன் . பெரிய கோயிலில் .

எல்லாக் காதலிகளும் சொல்லும் அதே வசனங்கள் . எனக்கு பயமாக இருக்கிறது . எங்க ஆத்துல தெரிஞ்சா கொன்னு போட்ருவா. நல்ல சங்கீதம் தெரிஞ்சவனுக்குத்தான் கொடுப்பேன்னு எங்கப்பா சொல்லியிருக்கார் . உனக்கு படிப்பே சரியா வரலையே .

அப்புறம் அந்த காட்பரீஸ் என்றவன் சட்டென்று நாக்கை கடித்துக்கொண்டேன் .

என்ன காட்பரீஸ் சொல்லுங்க

நான் ஒரு சிகரெட் பிடிக்கலாமா என்றேன்

ஓ யெஸ் .

கன்னியர்தம் கடைக்கண்ணை காட்டிவிட்டால் ,
காளையருக்கு மாமலையும் சிறு கடுகாம்...

என்று கணீரென்று ஆரம்பித்தான் அவன் .

இண்டர்காலேஜ் கல்ட்சுரல்ஸ் .. நல்ல உயரம் . வாலிபால் ப்ளேயராக இருக்க வேண்டும் . சிகரெட் பழக்கம் இல்லை என்று நினைக்கிறேன் . ரோஸ் நிற உதடுகள் . பாரதியை போல் தீர்க்கமான நாசியும் , பார்வையும் . முதன் முறையாக அவனை சந்தித்தேன் .

உங்க அளவுக்கு டிடெய்லா இல்லாவிட்டாலும் , ஞாபகத்தில் உள்ளதை சொல்கிறேன் என்றாள் அவள் .

இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டேன் . எங்கள் முதல் இரவு விடிந்து கொண்டிருந்தது

Monday, February 7, 2011

உலக்ஸும் , நானும் , ஒரு திங்கட்கிழமையும்


திங்கட்கிழமை என்றாலே சைக்கலாஜிக்கலாக மனம் சுறுசுறுப்பாகி விடுகிறது. வேலை இருக்கோ, இல்லையோ பரபரப்பாக கிளம்ப தோன்றுகிறது. வாரத்தின் முதல் நாள் என்ற செண்டிமெண்ட் காரணமா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன் சென்னையில் நிரந்தர வேலை எதுவும் இல்லை. கடன் தொல்லை வேறு. மனசு சரியில்லாமல் ஊருக்கு போய்விட்டேன். அங்கு எதாவது வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று. ஞாயிறு வழக்கம் போல் அங்கு சபாவில் கச்சேரியை (ஓசித்தண்ணிதான்) முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பும் போது உலக்ஸ் சொன்னான். “மாப்ள ! காலையில் 9 மணிக்கெல்லாம் வந்துடுவேன். ரெடியா இரு. அனாவசியமா வெயிட் பண்ண வைக்காதே.

எங்கடா போகணும்?

அது சஸ்பென்ஸ். காலையில் சொல்றேன். சிகரெட் வேணுமா? காசு இருக்கா?

இல்லைடா ! அரை பாக்கெட் வாங்கி கொடுத்துட்டு போ !

இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. எங்க கூட்டிட்டு போகப்போறான் இந்த பய. எதாவது வேலை விஷயமா இருக்குமோ? அவன் சித்தப்பா ஒரு பெயிண்ட் கம்பெனி வச்சிருக்கார் (சுந்தரம் பெயிண்ட்). அங்க வேலைக்கு சொல்லப் போறானா? ஆனா அவங்களுக்கும், இவனுக்கும் பேச்சு வார்த்தை கிடையாதே! உலக்ஸ் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்லையே! வடுவூர்ல அவன் சொந்தக்காரன் ஒருத்தன் பெட்ரோல் பங்க் வச்சிருக்காரு. சினிமா எடுக்கணும்னு அடிக்கடி சொல்லிகிட்டிருப்பாரு. ஒரு வேளை அங்க இருக்குமோ?

காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து இருந்ததில் நல்ல பேண்ட், சட்டையை அயர்ன் பண்ணி ரெடியாகி விட்டேன். உலக்ஸ்சிடம் பங்சுவாலிட்டி அதிகம். 8.55 க்கு டாண்ணு வந்துவிட்டான். அம்மாவை நோண்டி கொஞ்சம் காசு புடுங்கி கொண்டேன்.

“எங்கப்பா போற? எதாவது வேலை விஷயமா?

ஆமாம்மா ! உலக்ஸ் கூட!

ஏண்டா ..அவனுக்கே வேலை இல்லை. அவங்கப்பா எண்ணேய் வியாபாரத்தைதானே பாக்கிறான்.

அம்மாவிடம் ஆசி வாங்கி கொண்டு வந்தால் வாசலில் உலக்ஸ் டி.வி.எஸ் 50 ஐயை துடைத்துக் கொண்டிருந்தான்.

நீ வந்திருக்கேன்னுதான் மாப்ளை வண்டியை எடுத்தேன். இல்லைன்னா சைக்கிள்தான். உலக்ஸ் கையில் ஒரு பெரிய பிளாஸ்டி கவர் வைத்திருந்தான்.

என்னடா இது?

சொல்றேன். இங்க பிரிச்சு பாக்காதே. அம்மா கிட்ட மதிய சாப்பாட்டுக்கு வரலைன்னு சொல்லிடு. நம்ம வீட்டுலதான் சாப்பாடு.

சரி இப்ப எங்க போறோம்?

உலக்ஸ் பதில் சொல்லாமல் வண்டியை ஸ்டார்ட் பண்ணினான். முரண்டு பிடிக்கும் பொண்டாட்டி போல் இருந்தது அந்த வண்டி. பின்னால் உட்கார்ந்து கொண்டேன். வழி முழுவதும் எதிர்படுபவர்கள் உலக்ஸ்சிற்கு வணக்கம் சொல்லி கொண்டே இருந்தனர். பரவாயில்லை. நம்மாள் கொஞ்சம் பெரியாள்தான் என்ற நினைப்பு எனக்குள் ஓடியது. வண்டியின் இன் ஜீன் சத்தம்தான் ஈனஸ்வரத்தில் இருந்தது. சிவகங்கை பூங்கா வழியாக சீனிவாசபுரத்தில் நுழைந்தான். அட ! இங்க இவன் மாமா ஒருத்தர் டிரான்ஸ்போர்ட் கம்பெனி வைத்திருக்கிறார். மாப்ளை ! அங்கயடா என்றேன். நீ வேற ! அவனுங்க உறவையெல்லாம் அத்து ரொம்ப நாளாச்சு. நீ சும்மா வா.

வண்டி ரெட்டிப்பாளையம் ரோட்டில் திரும்பியது. அங்கு சாராயம் காய்ச்சுவார்கள். நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது அங்கு போனதுண்டு. அங்கு என் கல்லூரி நண்பன் ஒருவன் குடும்பமே சாராயம் காய்ச்சும்.

மாப்ளை ! ராஜதுரை வீட்டுக்கா?

இல்லை. அதுக்கு முன்னாடியே.

இந்த இடத்தில் எனக்கு என்ன வேலை இருக்கப்போகிறது. சரி . இதுக்கு மேல் கேட்டால் கடுப்பாகிவிடுவான். பேசாமல் வேடிக்கை பார்த்தபடி வந்தேன். வடவாறு கரையில் சுடுகாடு ஓரமாய் வண்டியை நிறுத்தினான். நான் ஒரு சாதா கோல்டுபிளேக்கை பற்ற வைத்துக் கொண்டேன்.

இங்கதாண்டா கால் முட்டிவரைக்கும் தண்ணி ஓடும். சரியான இடம் என்றான். சுற்றும் முற்றும் பார்த்தேன். நிறைய சின்னப்பசங்க விளையாடிக் கொண்டிருந்தார்கள். சற்று தள்ளி பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள்.

என்னடா பண்றே?

உலக்ஸ் அந்த பிளாஸ்டிக் கவரை பிரித்தான். உள்ளே வில் மாதிரி எதோ இருந்தது. கூடவே சில சைக்கிள் ஃபோக்ஸ் கம்பிகள். அதன் ஒரு முனை கூராக்கப்பட்டிருந்தது.

நைட்டு ஃபுல்லா உக்கார்ந்து தேய்ச்சேன் மாப்ளை என்றான் உலக்ஸ்.

என்ன பண்ணப் போறடா?

வா சொல்றேன். பேண்டை ஏத்தி விட்டுக்கோ. அவன் வேட்டையை மடித்து கட்டிக்கொண்டான். மெல்ல நீருக்குள் இறங்கினோம்.

அங்க பாரு . எவ்வளவு மீனு. நீந்தாம அப்படியே மிதக்குது பாரு. இந்த மீனுக்கு பேரு ஆரா மீனு மாப்ளை. பாம்பு மாதிரித்தான் இருக்கும். ஆனா விராலோட டேஸ்டா இருக்கும். உலக்ஸ் சொல்லிக் கொண்டே வில்லில் ஒரு அம்பை பொருத்தி துரோணாச்சாரியாரின் நேரடி சிஷ்யன் ரேஞ்சுக்கு குறி பார்த்து எய்தான். அதுவரை இருந்த அத்தனை மீனும் நொடியில் மாயமாகின. உலக்ஸ் சளைக்கவில்லை. எனக்கு டிவியில் ராமாயணம் பார்ப்பது போல் இருந்தது. சரமாரியாக அம்பு விட்ட வண்ணம் இருந்தான். ஆனால் மீன் தான் விழவில்லை.

மணி ... நீ டிரை பண்ணு என்றான். நான் என்ன ஏகலைவனா? எனக்கும் மீன் பெப்பே என்றது. ஏண்டா இதுக்கா என்னைய கூட்டிட்டு வந்த?

இல்லை மாப்ளை. உனக்கு மீன்னா ரொம்ப பிரியம். அதான் என் கையால பிடிச்சு சமைச்சு போடலாம்னு பார்த்தேன். வக்காளி.. மாட்டுதா பாரேன். அன்னிக்கு அவன் கரெக்டா பொத்து பொத்துன்னு போட்டானே. வேற ஏதோ டிரிக் இருக்குடா மாப்ளை ...

நான் இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு சுற்றிலும் பார்த்தேன். அங்கு ஒரு சின்னப்பையன் அம்பு விட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் பரவாயில்லை. ஆனால் நான் ? கல்யாணம் ஆகி ஒரு பிள்ளையும் பெத்தபிறகு ? உலக்ஸ் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. வா அங்க போவோம். இருவரும் அவன் அருகில் போனோம். சுமார் ஒரு 20 மீன்களை அடித்து விட்டான் அவன். இலை, கிளை எதுவும் தெரியவில்லை. இலக்கு மட்டுமே தெரிகிறது என்ற அர்ஜீனன் போல் ஒரு அம்பு அடி கூட வீணாகவில்லை. உலக்ஸ் அந்த பையனை நெருங்கி சூட்சுமத்தை கேட்டான். ஆனால் அவன் அதை மட்டும் சொல்ல மாட்டேன். வேணுமின்னா உங்களுக்கு மீன் அடிச்சு தரேன்னு சொல்லிவிட்டான்.

மாப்ளை நீதான் கில்லாடியாச்சே! அவன் அடிக்கிறதை கரெக்ட்டா நோட் பண்ணிக்கோ.. ஆனால் அந்தப் பையன் அதற்கெல்லாம் சந்தர்ப்பமே கொடுக்கவில்லை. மின்னல் வேகம். கணிக்கவே முடியவில்லை.அவன் அடித்து கொடுத்த 25 ஆரா மீன்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றி கொண்டோம். சிறுவன் தட்சணையாக வில்லையும், அம்பையும் கேட்டான். உலக்ஸ் என்னை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தான். நான் அதை அந்த பையனிடம் கொடு என்றேன். ஒரு பத்து ரூபாயையும் (மீதி பத்து இருந்தது) கொடுத்தேன்.

பள்ளிக்கூடம் போகலியாப்பா ?

நான் படிப்பை நிறுத்திட்டேன் சார்...

ஏம்பா உங்கப்பா என்ன செய்றாரு?

சாராயம் காச்சிகிட்டிருந்தாரு. இப்பதான் ஜெயில்ல போட்டாங்க..

உலக்ஸ் வீடு வரும்வரை நான் எதுவும் பேசவில்லை. காலையில் அயர்ன்காரன் கொஞ்சம் லேட் பண்ணதுக்கு அவனை கண்டமேனிக்கு ஏறியது நியாபகம் வந்தது.

உலக்ஸின் மனைவிக்கு ஆச்சர்யம். (மிக வெள்ளந்தியான கிராமத்து பெண்).என்னங்க இவ்வளவு மீனு! நீங்களா அடிச்சிங்க என்றாள்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை. உலக்ஸ் சட்டென்று எங்கடி... நமக்கு கைவரவேயில்லை. மணிதான் சட்டு சட்டுன்னு போட்டு தாக்கிட்டான். நான் முன்னமே சொல்லியிருக்கேன் இல்லை. மணி மெட்ராசில் இருக்காண்டி. அவனுக்கு தெரியாததே இல்லை. அப்படி தெரியலைன்னாலும் டக்குன்னு கத்துக்குவான்.

“மாப்ளை நீ பெரியாள்டா” என்றான்..

சாப்பாட்டுக்கு முன்னால் லைட்டா கட்டிங் போடும்போது கேட்டேன். எதுக்குடா அனாவசியமா பொய் சொல்றே?

இல்லை. மாப்ளை. எனக்குத்தான் வரலை. உனக்கும் அடிக்க வரலைங்கிறதை என்னால ஏத்துக்கவே முடியலை.

என்னடா பைத்தியக்காரத்தனமா இருக்கு? எனக்கு எல்லாம் தெரியுமா என்ன?

பள்ளிக்கூடத்திலேர்ந்து உனக்கு தெரியாதது எதுவுமே இல்லைங்கிற நினைப்புத்தான் எனக்கு. அதான். என்ன ஒரு ரெண்டு நாள் போனா உனக்கு சூப்பரா அடிக்க வந்துடும். நாளைக்கு காலைலே கரெக்டா 9 மணிக்கெல்லாம் ரெடியா இரு.

எனக்கு சிரிப்பும் வந்தது. கூடவே அந்த சிறுவனின் முகமும்