
படத்தில் இருக்கும் தலைகளை எண்ணிப் பாருங்கள்...எவ்வளவு வருகிறது..பாராளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கையை பாருங்கள்...
"நல்ல தொரு குடும்பம்...பல்கலை "கழகம்"
கலை மீது தீராத தாகம் கொண்ட பலர் அந்த தாகம் தீராமலேயே தங்கள் இறுதி நாளை கழித்து விடுகின்றனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தங்கள் குடும்பத்தையும் மேம்படுத்தி தங்களின் கலை தாகத்தையும் தீர்த்துக் கொள்கின்றனர். அந்த வகையில் திரு. மணிகண்டன் அவர்கள் ஆரம்பக் காலகட்டத்தில் உதவி இயக்குனராக இருந்துவிட்டு, பின்னர் ஒரு விளம்பர நிறுவனத்தை தொடங்கி, இன்று குறும்படங்கள் மூலம் தனது கலை தாகத்தை தீர்த்துக் கொள்ளும் இவர் சற்றே வித்தியாசமான மனிதர். "சீயர்ஸ்" என்கிற தனது குறும்படம் மூலம் நமது கவனத்தை ஈர்க்கும் மணிகண்டன் அவர்கள், குடிப்பழக்கத்தின் விளைவை எந்த வித பிரச்சார நெடியும் இன்றி மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார்.
மூன்று நிமிட காலத்திற்குள் இது போன்ற ஒரு செய்தியை பார்வையாளர்கள் மனதில் பதிய வைப்பது அவ்வளவு எளிதல்ல. அந்தப் பணியை மிக செம்மையாக செய்து முடித்திருக்கிறார் மணிகண்டன். இவர் போன்றவர்கள் குறும்படத் துறையில் நுழைந்து நல்ல பல படைப்புகளை கொடுத்து இத்துறை வளர தங்கள் பங்களிப்பை செய்தால் போதும். குறும்படத் துறை நாளடைவில் நல்ல வளர்ச்சி பெரும்.
இந்தத் துறையை ஒரு மாற்று ஊடகமாக வார்த்தெடுக்கும் முயற்சியில் இது போன்ற நல்ல நண்பர்கள் இணைந்துக் கொள்வார்களேயானால் அந்த முயற்சி எளிதில் வெற்றி பெரும். மேலும் தனது சீயர்ஸ் படம் மூலம் பல பரிசுகளை பெற்றுள்ள அவர் "குறும்பட தயாரிப்பு செலவை ஈடுகட்ட போட்டிகள் மட்டுமே நிகழ்காலத்தில் நமக்கு கைகொடுக்கும்" என்று நமக்கு உணர்த்துகிறார்.
இனி இயக்குனர் திரு. மணிகண்டன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:
1. முதலில் உங்களைப் பற்றிய சில அடையாளங்கள்?
எல்லோரையும் போல் கலை தாகத்தில் தஞ்சையிலிருந்து சென்னை வந்த ஒரு சாதாரணன். நீண்ட போராட்டத்திற்கு பின் ஒரே ஒரு படம் துணை இயக்குனராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது... ஆனால் ஒரு வேலையும் தரப்படவில்லை. நிறைய அலைந்து.. பின் பாதை மாறி விளம்பரத் துறைக்கு வந்து விட்டேன்.
2. தற்போது விளம்பரத் துறையில் இருந்து குறும்படங்கள் எடுக்க வரும் ஆர்வலர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.. இதற்கு என்னார் காரணம்?
என்னை பொறுத்தவரை..ஆத்ம திருப்தி..நாமளும் நாலு பேரால் கவனிக்கப்பட வேண்டும் என்ற விழைவு..
3. நீங்கள் இதுவரை எடுத்துள்ள குறும்படங்கள் பற்றி?
நான் எடுத்த முதல் குறும் படம் "தொலைந்து போகும் கடிதங்கள்" நாம் இருவர்..நமக்கு இருவர்" பின் நமக்கு ஒருவர் என்ற சிவப்பு முக்கோண திட்டத்தினால், வரும் தலை முறையினர் உறவுகளே இல்லாமல் தனித் தீவாய் போகும் அபாயத்தை 5 நிமிட குறும்படமாய் எடுத்தேன்..ஆனால் அதன் உருவாக்கம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.எனவே அதை எங்கும் திரையிட வில்லை..மீண்டும் எடுக்க இருக்கிறேன்...பின் சியர்ஸ். ஸ்மைல் இது ஊனமுற்ற ஒரு சிறுமியை பற்றிய ஒரு நிமிடப் படம்...
4. உங்கள் "சீயர்ஸ்" குறும்படம் குடிப் பழக்கத்தின் விளைவுகளை அழகாக மூன்று நிமிடத்திற்குள் சொல்லிவிடுகிறது. ஆனால் நீங்கள் சொல்லிய விதம் சாதாரண பொது மக்களை சென்று சேர்ந்ததாக நினைக்கிறீர்களா?
பார்த்தவர்கள் பாராட்டினார்கள்... பரவலாக போய் சேர்ந்தால் விழிப்புணர்ச்சி ஏற்படலாம்..
5. குறும்படத் துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டில் எப்படி உள்ளது? இதற்கான விழிப்புணர்வு மக்களிடையே காணப்படுகிறதா?
கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறிப்பிடதக்க அளவில் குறும்படத்துறை முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன் நிறைய பேருக்கு படம் பண்ண ஆவல் இருக்கிறது..ஆனால் அது திரைப்படத்தை நோக்கிய முயற்சியாகத்தான் இருக்கிறது..இது ஆரோக்கியமான அறிகுறியாக தெரியவில்லை..
6. ஜனரஞ்சக திரைப்படங்களில் இருந்து குறும்படங்கள் எவ்விதத்தில் வேறுபடுகிறது?
சினிமா மிகப் பெரிய வியாபாரம்..லாபம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். ஆனால் குறும்படம் மக்கள் பிரச்சினைகளை பேசும்..ஆவணப் படங்கள் நம் கலை, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் நெறி முறைகளை எதிர்கால தலைமுறையினருக்கு பதிவு செய்து பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாகும்.
7. ஆனால் தற்போது வெளிவரும் குறும்படங்கள் ஜனரஞ்சக திரைப்படங்களில் வேறுபட்டதாக தோன்றவில்லையே? இவர்கள் பணம் ஈட்டவும், திரைப்படத் துறையில் நுழைய ஒருத் துருப்பு சீட்டாகவும் மட்டுமே குறும்படத் துறையை பயன்படுத்துவாகத் தோன்றுகிறதே?
உண்மைதான்..இதற்கு அடிப்படை காரணம்.. திரைப்படம் தரும் புகழ் போதையும், ஆடம்பரமும்... இளைஞர்கள் இதற்கு அடிமையாகும் சாத்தியக் கூறு அதிகம். திரு. அருண்மொழி மாதிரி சிலர் விதிவிலக்காக இருக்கலாம்
8. குறும்படத் துறையை மாற்று ஊடகமாக கொண்டு செல்ல இன்னும் என்ன என்ன பணிகள் முன்னெடுத்து செல்லப்பட வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
அரசாங்கம் கலைமாமணி விருதுக்கு வெட்டியாக செலவு செய்யும் பணத்தை மாற்று ஊடக வளர்ச்சிக்கு திருப்பலாம்..சென்னை சங்கமம் என்று சுய அரிப்பை சொறிந்து கொள்ளும் நிகழ்சிகளில் குறும்படம், ஆவணப் படம் போன்றவற்றை சிறிய அளவேனும் ஊக்குவிக்கலாம். பெண் சிசு கொலை ஒழித்தல், போலியோ மருந்து போடுதல், குடிப்பழக்கம் நிறுத்துதல் முகாம் போன்ற விழிப்புணர்ச்சி நிகழ்வுகளில் குறுமபட இயக்குனர்களை பயன்படுத்தலாம்....தமிழில் எடுக்கப் படும் ஆங்கில படங்களுக்கு வரி விலக்கு கொடுக்கும் அரசு இதையெல்லாம் செய்யுமா?மானாட, மார்பாட என்று மக்களின் மலிவான ரசனையில் பாலுணர்வை தூண்டவே இருக்கும் சேனல்கள் ஒரு பரிகாரமாகவேணும் இதை செய்தால் நன்று.
9. உங்கள் எதிர்கால திட்டங்கள் பற்றியும், உங்களுடன் தொடர்ந்து பணியாற்றும் இதரக் கலைஞர்கள் பற்றியும் ஒரு சில வரிகள்...
வாழ்வை பிரதிபலிக்கும் செய்திகளை பதிவு செய்ய வேண்டும்..என்னுடன் பணியற்றும் ஒளிப்பாதிவாளர் திரு பிரவீன், இசை அமைப்பாளர் திரு. அனில் இவர்களின் பங்களிப்போடு இது சாத்தியமாகும் என்று ந்ம்புகிறேன்.
10. குறும்படத் துறை வளர நீங்கள் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்கும் உதவி.. அல்லது இந்தத் துறையில் புதிதாக நுழைய விரும்புபவர்களுக்கு உங்களால் செய்ய முடிந்த உதவிகள் குறித்து...
சொல்கிற கதையில் ஒரு நேர்மை இருந்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்...திரைப் படத்தில் நுழைய நேர்ந்தாலும் அவ்வப்போது சில நேர்மையான படைப்புகளை தருவது ஒரு சமூக கடமையாகும் என்பது என் எண்ணம்..
தமிழ் படைப்புலகத்திற்க்கு உங்கள் பணியும் நிச்சயம் மிகப் பெரிய பங்களிப்பாகும்..தமிழ் ஸ்டுடியோ.காமிற்க்கும் ஏனைய படைப்பாளிகளுக்கும் என் நன்றியும் வணக்கமும் உரித்தாகுக....
நன்றி...