Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Friday, December 2, 2011

வெம்மை





அம்மா கொளுத்திக்கிச்சு மாமா என்றாள் சுமதி..

திடீரென்றது . என்னடி சொல்ற தங்கம்..விளையாடுறியா ?

இல்ல மாமா .. இப்பதான் ..அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை..அப்பாவை போட்டு அம்மா அடிச்சிச்சு .. சீமெண்ணெயை ஊத்திக்கிட்டு ...

 12 வயசு பெண் . குரலில் பிசிறில்லாமல் தெளிவாக சொல்கிறாள் .. அம்மாவை பெரியாஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்க.. அப்பாவை போலிஸ்காரங்க கூட்டிகிட்டு போயிட்டாங்க..தம்பி தூங்கிட்டு இருக்கான் . எனக்கு என்னமோ ஆயிடுச்சு..பாவாடையெல்லாம்..ஒரே ரத்தம்..


இன்னிக்குத்தான் பிரச்சாரம் கடைசி நாளு.. தலைவர் வந்துட்டு போற வரைக்கும் அங்க இங்க நகரமுடியாது .. அடுத்த வாட்டியும் நம்ம ஆட்சிதான் .. அப்புறம் இருக்கவே இருக்கு உள்ளாட்சித்தேர்தல் .. இந்த ட்ரிப்பு எப்படியும் கவுன்சிலர் சீட்டு நிச்சயம்.. சந்திரனின் செல் அடித்தது .செல்வி ..

முந்தாநாளே கேஸ் தீர்ந்து போச்சு .. கெரசினும் இல்லை.. எப்படி பொங்கி புள்ளைகளுக்கு சோறு போடறது . உனக்கென்ன .. ஓசியில குடிச்சிட்டு பிரியாணியை தின்னுட்டு ஆட்டோவில கத்திகிட்டே சுத்துவ.. நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனாள் செல்வி ..

ஏய் ...கொஞ்சம் நிப்பாட்டறியா.. புள்ளைகளுக்கு கடையில இட்லி வாங்கி கொடுத்தனுப்புறேன்..அப்படியே கெரசினும் ,மீனும் வரும்.. பொங்கி வை. தலைவர் வந்துட்டு போனதும் வந்துர்றேன் என்றபடி கட் பண்ணினான் சந்திரன் .

விட்டிற்குள் நுழையும்போதே எரிஞ்ச வாசனை அடிக்குது . சுமதி தம்பியை மடியில போட்டு கிட்டு திண்ணையில் இருந்தாள் .. பக்கத்து வீட்டு அம்மா கூட . புள்ளை உக்கார்ந்துட்டா .. துணி மாத்தி உக்கார வச்சிருக்கேன் . என்ன அழுத்தமா இருக்கா பொட்டச்சி.. அம்மாக்காரி உடம்பு பத்தி கிட்டு எரியுது .. அப்பன் அண்டாத்தண்ணியை கொண்டு வந்து ஊத்தினான் .. கழுத்துக்குகீழ முக்காவாசி வெந்திருக்கும் .. அதுக்குள்ள போலிஸ் வந்திருச்சு .. புருஷனை கையை காட்டிட்டா அவ . பக்கத்து ஊட்டுக்காரி சொல்லிக்கொண்டே போனாள்  .

இல்ல மாமா ..அப்பா மேல தப்பு இல்லை .. எங்களுக்கு இட்லியும்  ,புரோட்டாவும் செந்தில் அண்ணன் கிட்ட வாங்கி கொடுத்து விட்டாரு ..கெரசினும் கேன்ல வந்துச்சு .. இன்னிக்கு அவன் வரட்டும் .. ரெண்டுல ஒன்னு பார்த்துட்டுத்தான் அடுப்பை பத்த வைப்பேன்னு அம்மா சொல்லிடுச்சு .. நானும் தம்பியியும் சாப்பிட்டுட்டு டிவியை பார்த்துக்கிட்டிருந்தோம்.. தம்பி தூங்கிட்டான் .. அப்பா வந்துச்சு ..


உனக்கெல்லாம் எதுக்குய்யா பொண்டாட்டி ,புள்ளைங்க..அப்படியே உன்  கட்சி ஆஃபீசிலயே இருந்துக்க வேண்டியதுதானே.. விரால மீன் கவரை விசிறியடித்தாள் செல்வி ..

ந்தாப்பாரு செல்வி.. எலெக்‌ஷன் நேரம் . அப்படித்தான் இருக்கும்.. தலைவரு காலைலேர்ந்து ஒன்னும் சாப்பிடலையாம் .. மீட்டீங்க்ல சொன்னாரு ..அப்படியே அழுதுட்டேன்.. போய் அடுப்பை பத்த வை..நல்லா மாங்கா போட்டு மீன் குழம்பு வை.. நாளைக்கு ஒரு நாள் பொறுத்துக்க ..கேஸ் வந்திரும் என்றான் சந்திரன் ..

முகம் கழுவி கைலி மாற்றி திரும்புவதற்குள் கெரசின் வாசம் சுர்ரென்று மூக்கில் ஏறியது .. தொப்பலாய் இருந்தாள் செல்வி.. இந்தாய்யா .. நீயே பத்த வை .. கொளுத்திட்டு என் மேலயே சோறாக்கிக்கோ என்றவள்..சடாரென்று தீக்குச்சியை உரசி..

முழுக்க வெந்திருச்சு .. உசிர் மட்டும்தான் இருக்கு .. முகம் அப்படியே இருக்கு.. பெரிய கண்ணு செல்விக்கு .. கண்ணாலயே கவுத்துடுவான்னு  ஆச்சி அடிக்கடி சொல்லும் .. கணுக்காலை கூட அடுத்தவன் ..அதுவும் பொம்பளைங்க கூட பார்க்கக்கூடதுன்னு இருப்பா .. தழைய , தழைய சீட்டிப்பாவாடை கட்டி கிட்டு கொலுசு சிணுங்க அவள் ஓடியது ஞாவகம் வருது .. என்னடி கண்ணுன்னு கன்னத்தை தொடப்போனாக்கூட , தட்டி விட்டுட்டு ஓடிருவா தங்கம்.. இன்னிக்கு. கிட்டதட்ட முக்கா அம்மணம்.. கண்கள் மூடியிருந்தது .. 

மெட்ராஸ் கொண்டு போலாமான்னு பார்த்தோம்.. ஆனா பிரயோசமில்லன்னு பெரிய டாக்டர் சொல்லிட்டாரு . போயிரும்னு சொல்றாரு .. புள்ளை வேற பெரியவளாயிட்டா .. அவ ஆத்தாக்காரி மூஞ்சியலயே முழிக்கமாட்டேன்னு சொல்லிட்டா.. புலம்பினாள் செல்வியின் ஆத்தாக்காரி.. எனக்கு அக்காமுறை.. என்ன சொல்றது ..செல்விக்கு ஏதோ தோணியிருக்க வேண்டும்.. ஒரு முறை உடம்பை கூனி குறுக்கிக்கொண்டாள்.. கண்ணை திறந்து என்னைப்பார்த்தாள். ஒரு நொடிதான் ..முகத்தில் ஒரு வேதனை..

என்னண்ணே... இன்னும் கொஞ்சம் பொறுத்து , இந்த சிறுக்கி செத்தப்புறம் வந்திருக்க கூடாதா? என் சுபாவம் தெரிஞ்சு எப்படிண்ணே ?

இதுதான் அவள் மனதில் ஓடியிருக்க வேண்டும்..

Sunday, October 30, 2011

மூன்றாவது பர்த் ...உமா சீரிஸ் -2


பாட்டு கேக்கறீங்களா ? எல்லாம் ராஜா கலெக்‌ஷன்ஸ் என்றான் அவன் . ஐ பாட்டை எடுத்து பா (மா) ட்டிகொண்டேன் . என்னை ரசிக்கிறான் என்று புரிந்தது .. ஆனந்தராகம் என்று பதிமன் வயதுக்குள் காதலை கடந்து விடும் பாடல் ஒலிக்க அவனை பார்த்தேன் .. ரமணாவின் நியாபகம் வந்தது .. கன்னியர் தம் கடைக்கண்ணை காட்டி விட்டால் காளையருக்கு மாமலையும் சிறு கடுகாம் “ என்று காலேஜ் கல்ச்சுரல்சில் ரமணா கம்பீரமாக ஆரம்பித்ததும் , சட்டென ஏதோ ஒன்று உடைந்து அவளுக்குள் இறங்கியதும் .... இவன் பெயர் என்னவாக இருக்கும் ... கொஞ்சம் ரமணா மாதிரியும் இல்லாமல் இருக்கிறான் .. ஆனந்தராகம் சரணத்துக்கு மாறியிருந்தது ..

பாவி உமா ! அவனையா என்றாள் ராஜி ... 

ஏன் ? அவன் என்ன உச்சாணிக்கொம்பா என்றேன் ..கொஞ்சம் கர்வத்துடன்.. என் அழகின் மீது எனக்கு கொஞ்சம் கர்வமிருந்தது .. அருணின் அந்த வர்ணனைக்கு பிறகு .. உயிரை குழைத்து இதை எழுதியிருக்கிறேன் என்ற அருணின் ஆரம்ப வரிகள்.. அதன் பின் ராஜபார்வையில் மாதவியை கமல் வர்ணிப்பதையெல்லாம் தாண்டி ... கடிதத்தை அப்படியே கிழித்து விட்டு கண்ணாடிக்கு ஓடினேன் .. என் தனியறை ..ஆளுயர கண்ணாடி .. அரைமணி நேரம்.. எனக்குள் படர்ந்திருந்த கர்வம் ..கொழுந்து விட்டு எரிய தொடங்கியிருந்தது .. 

“காந்த சிலையழகன் .. கற்கண்டு சொல்லழகன் என்றேன்...ஜன்னி வந்தது போல்.. 

முதல்ல அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கான்னு பாரு என்றாள் ராஜி ..கொஞ்சம் காந்தல் வாசம் வந்தது .. ஒரு கேள்விக்குறியுடன் அவளை பார்த்தேன் ..

எனக்கும் அவனை பிடிச்சிருக்குடி உமா ..புரொஃபோஸ் பண்ணப்போறேன் என்றாள் .. பண்ணிக்கோ என்றேன் ...நீ என்னை விட ஒரு மாற்று கம்மிதானடி தங்கமே என்பதையும் சேர்த்து.. 

ஓகே...பசங்கதான் பண்ணனுமா என்ன? நாம ரெண்டு பேரும் அவனை புரெஃபோஸ் பண்ணலாம்... அவன் யாரை லவ் பண்றான்னு பார்க்கலாம் என்றேன்..மவளே...உன் மேல மட்டுமில்ல ..அவன் மேலேயும் ஆசிட் ஊத்திடுவேன் என்று மனதுக்குள் கர்விக்கொண்டே..

அதன் பின் நிறைய சந்தர்ப்பங்கள் .. காலேஜில், இண்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ் போன இடத்தில் , ஒரு சமயம் கோயிலில் என்று பொங்கி வழிந்திருக்கிறேன் காதலாய்.. ஆமோதிக்கிறானா...நிராகரிக்கிறானா என்றே புரியாத ஒரு மர்ம புன்னகைதான் அவனிடம் .. அன்று லேபிற்குள் ரமணன் போவதை பார்த்து விட்டு ,கொஞ்சம் தயங்கி பின்னால் போகிறேன்.. அவனை காணவில்லை .. கால்கள் நகர மறுக்க ,கண்களால் துழாவுகிறேன் .. ரமணன் வருகிறான் ..அதே மர்ம புன்னகை.. இதழ்களில் ஏதோ விஷமம்.. என்ன செய்கிறேன் என்று தெரியாமல் இரு கைகளை வாரி அணைப்பது போல் அவனை பார்த்து நீட்டுகிறேன்.. கண்களை மூடிக்கொள்கிறேன்.. காற்றில் அவன் என்னை நோக்கி வரும் வாசம் வீசுகிறது.. உதடுகளை ஈரப்படுத்திக்கொள்கிறேன்..

எக்ஸ்யூ மீ உமா ..என்ன கேட்டீங்க...

மெல்ல கண்களை திறக்கிறேன்.. அவன் தான்..ம்ம்.. என்று சுதாரிக்க முயற்சிக்கிறேன்..

என்ன கேட்டீங்க.. ரமணாவைத் தெரியுமா என்றுதானே.. நீங்க கேட்டிருப்பீங்களே... முதல் பாட்டு ..ஆனந்தராகம்... உமா ரமணன்.. பெரிய விசிறி நான் என்கிறான் அவன்... ஏதோ ஸ்டேஷனில் வண்டி நிற்கிறது ..துணி உலர்த்தும் கம்பியில் வரிசையாக நிலம் பார்க்கும் ஈரத்துளிகள் ... யாரோ சட்டென உதறி விட வெறுமையாக இருக்குமே..அதைப்போன்ற ஒரு மனநிலை.. மீண்டும் கண்களைமூடிக்கொள்கிறேன்.

“நீ தானே என் பொன் வசந்தம்” 

பாலுவின் குரல் இழைய ஆரம்பிக்கிறது...



Saturday, November 7, 2009

ஆட்டம்............... .சிறுகதை....


மணி பார்த்தேன். மாலை 5. இப்போதே இருட்டதொடங்கிவிட்டது.
8 மணிக்கு அவனை சந்திக்க வேண்டும். 10 வருடத்திற்கு முன்பே நாள் குறிக்கப்பட்ட சந்திப்பு.ஆனால் இன்றைய சூழல். சிரிப்பு வந்தது எனக்கு.என் தலைக்கு விலை வைத்திருக்கிறார்கள். லட்சங்களில். அது முக்கியமல்ல.யார் என்னை தேடி வேட்டைநாயாய் சுற்றிக் கொண்டிருக்கிறானோ, அவனைத்தான் சந்திக்கப்போகிறேன். துப்பாக்கி இல்லாமல். வேண்டாம். அந்த சனியன்.என்னையும் அறியாமல் அதை பயன்படுத்திவிட்டால். ஆனால்.. அவன் எப்படி வருவான்? நிராயுதபாணியாகவா.. தெரியவில்லை. ஆனால் இந்த சந்திப்பில் அவன் துப்பாக்கி பேசாது என்பது எனக்கு சர்வநிச்சயமாக தெரியும்.என் நண்பனை பற்றி எனக்கு தெரியாதா? கிளம்ப முடிவெடுத்தேன்..


யூனிபார்மை கழட்டினேன். சூடாக டீ தயாரித்தேன். மாலை செய்திதாளை மேய்ந்தேன்.. காலையில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி இஷ்டத்திற்கு எழுதியிருந்தார்கள்..எனக்கு தெரியும். இது அவன் வேலைதான். அவன் என்றால் என் முன்னாள் நண்பன்.. யாரை இன்று சந்திக்க வேண்டுமோ,அவனேதான்.. ஒரு தலைமறைவு இயக்கத்தின் கமாண்டர். ஆச்சர்யம்.. ஒரு அப்பாவி உயிர் கூட சாகவில்லை.அந்த அரசியல் தலைவரின் பண்ணை வீட்டில் குண்டு வெடித்திருந்தது.. ஏகப்பட்ட பொருள் நாசம்..அவரின் அடியாட்கள் சிலர் உடல் சிதறி போனார்கள்..உண்மையில் என்கவுண்டரில் கொல்லப்பட வேண்டியவர்கள்தான்.ஆனால் என்னால் அதை செய்ய முடியாது.அரசியல்.. ஆயாசமாக உணர்ந்தேன்.. எப்படிப்பட்ட மூளைக்காரன் என் நண்பன்.. ஒரு புரட்சிக்காரனை, கொள்ளைக்காரனாய் சித்தரிக்கும் அரசில் நான் அடியாளாய் கூலி வாங்குவதை நினைத்தால் வெட்கமாகத்தான் இருந்தது. ரிவால்வரை எடுத்து சேம்பரை கழட்டினேன். ஒரு தோட்டாவை மட்டும் விட்டு வைத்தேன்.. அவன் எப்படி வருவான்.. துப்பாக்கி கொண்டு வருவானா? மாட்டான்..கொண்டு வந்தாலும் எனக்கெதிராய் பயன்படுத்துவானா? மேசை டிராயரிலிருந்து சார்மினார் சிகரெட்டை எடுத்து பத்திரப்படுத்து கொண்டேன்.. எத்தனை நாளாயிற்று? நானும், அவனும் ஒரே சிகரெட்டை பகிர்ந்து கொண்டு..


இந்த இடத்தை அவன் தான் தேர்வு செய்தான்..அப்போது இந்த இடம் ஒரு கால்பந்து மைதானமாக இருந்தது. போலிஸ்.. இல்லை ராணுவம்..இதுதான் அவன் லட்சியமாக இருந்தது.. நீ போலிஸ்ல சேருடா..நான் மிலிட்டரி.. ரெண்டு பேரும் சேர்ந்து தேசத்துக்கு சேவை செய்யலாம்..அவன் இன்று பெரிய போலிஸ் அதிகாரி... அரசாங்க நாய்...நான் அரசிடமிருந்து மக்களை காப்பாற்றும் புரட்சியாளன்..தனியாக வருவானா... கூட படையுடன் வந்து வீழ்த்தி விட்டால்? நிச்சயம் அதை அவன் செய்ய மாட்டான்.. அப்படி வீழ்ந்தாலும் எனக்கு பிறகு என் தளபதிகள் இருக்கிறார்கள்..இருந்தாலும் ஒரு அவநம்பிக்கை மெலிதாக அறுத்து கொண்டிருக்கிறது... கடமைதான் முக்கியம் என்று அவன் நினைத்து விட்டால்? இருக்கட்டுமே... இருக்கிற இடத்திற்கு விசுவாசமானவன் என் நண்பன் என்பதும் எனக்கு பெருமையைத்தான் தரும்...


நீண்ட மழைக்கோட்டுடன் நடக்க சற்று சிரமமாக இருந்தது.எப்படித்தான் அவன் இந்த காட்டில் சுற்றுகிறானோ? அவனுடன் கால்பந்து விளையாடிய நாட்கள் நினைவுக்கு வந்தது.. அவன் அடித்த பந்தை தடுக்கவே முடியாது..எத்தனை முறை தோற்றிருப்பேன். அவனிடம் தோற்பதில் எனக்கு சின்ன சந்தோஷம்.. நான் தோற்பதில் அவனுக்கு கொஞ்சம் வருத்தமே ஏற்படும்.. அப்படிப்பட்ட நட்பு.. இன்று.. காலம் போடும் கணக்கில் நாம் எதை குற்றம் சொல்வது?


வந்து நேரமாச்சா?

இல்லை இப்போதுதான் வந்தேன்.. மணி பார்.. சரியாக 8..என்ன சொல்கிறார்கள் உன் அரசாங்க ஓநாய்கள்?

நீ சரணடைவதை பற்றி எதாவது முடிவெடுத்தாயா?

நான் எப்போது சொன்னேன் சரணடைகிறேன் என்று?

இல்லை.. கேட்கிறேன்.. எத்தனை நாள் இப்படி? அரசு ஒரு பெரிய ராட்ஸசன்.. அதை எதிர்த்து என்ன செய்ய முடியும்? சின்ன, சின்ன சேதங்களை ஏற்படுத்துவதை விட..

நாம் இங்கு அதற்காக இங்கு சந்திக்க வில்லை.. இன்னும் ஐந்து நிமிடம் நான் கிளம்ப வேண்டும்...குழந்தை எப்படியிருக்கிறாள்?

அவளை பார்க்க வேண்டுமா? உன் பெயரைத்தான் வைத்திருக்கிறேன்..

தெரியும்

எப்படி?

எனக்கு குழந்தை இருந்தால், உன் பெயரைத்தான் வைத்திருப்பேன்.. உன் துப்பாக்கியில் ஒரு புல்லட் இருக்கிறதல்லவா?

ஆமாம்..நீ துப்பாக்கி கொண்டு வரவில்லையா?

எனக்கு ஆபத்து என்றால் அதை ஏற்படுத்துபவனும் நீதான்..அதே சமயம் இந்த பொழுதில் ஆபத்தென்றால் ரட்சகனும் நீதான்...


சற்று நேரம் கொடிய மெளனம் நிலவியது...

நான் என் துப்பாக்கியை எடுத்தேன்..உள்ளிருந்த அந்த ஒரு குண்டை உருவி... தூர வீசியெறிந்தேன்..


என் தூக்கி போட்டாய்...?

உன்னிடம் என் நம்பிக்கையை கெடுத்துக்கொள்ள மனமில்லை..

நன்றி.. நான் கிளம்புகிறேன்... அடுத்த முறை அநேகமாக என் பிணத்தின் மேல் நீ விழிக்க வேண்டியிருக்கலாம்.... நம் ஆட்டம் மீண்டும் தொடங்குகிறது..

ஒரு நிமிடம்.... இந்தா... சார்மினார் சிகரெட் பாக்கெட்டை நீட்டினேன்..


நான் தீப்பெட்டியை எடுத்தேன்..என் வாயில் ஒரு சிகரெட்டை பொருத்தினான்... இருவரும் பற்ற வைத்துக் கொண்டோம்...

ஒரு பெருமூச்சுடன் புகையை வெளியேற்றியவாறு அவரவர் பாதையில் பிரிந்தோம்.....




Tuesday, October 27, 2009

சில காரணங்களும்,காரியங்களும்


முன் குறிப்பு: உயிரோடை சிறுகதை போட்டிக்காக எழுதிய கதை.புதிய விமர்சனங்களுக்காக(புதிய வாசகர்களுக்காக)மீண்டும்


பொத்தி,பொத்தி வளர்த்தாங்க...


ம்ம்ம்..அப்புறம்..

அப்புறம் என்ன..பொத்தலாயிடுச்சு..

உரத்த குரலில் சிரித்தாள்..கண்ணில் நீர் வரும்வரை..

அழறியா என்ன?

ம்ஹீம்..ஆனந்த கண்ணீர்...உனக்கு தெரியுமா? ஒரு நாள் எங்கப்பா புது கொலுசு வாங்கி கொடுத்தார்..கால்ல மாட்டி, ரெண்டு பக்கமும் பாவாடையை விரிச்சு முழங்கால் வரைக்கும் தூக்கிட்டு வீட்டை சுத்தி நாலு ரவுண்டு அடிச்சேன்...

அது எல்லாரும் பண்றதுதானே..

ஆனா எங்கம்மா அதுக்கே கால்ல சூடு வச்சா..அப்ப வீட்டுல வெளியாளுக ஏதோ வேலையாக இருந்தாங்க..இப்ப பத்தியா..காலை தூக்கி காட்றதே பொழப்பாயிடுச்சு..

இங்க வந்து எப்படி மாட்டி கிட்ட..?

என் புருஷன் வித்துட்டு போயிட்டான்...

அவனுக்கு சட்டென்று அவன் மனைவியின் நினைவு வந்தது....தேடி,தேடி சலிச்சு அவளை பார்த்தவுடன் பிடிச்சு போக ..கல்யாணம்..ஒரே வாரம்.. முழுசாய் பார்க்க கூட அனுமதிக்க வில்லை..ஏதாவது காரணம் சொல்லி திரும்பி படுத்துக் கொள்வாள்..எட்டாவது நாள்......ஓடிப் போனாள்..ஒரு துண்டு சீட்டு...நாலு வரி..”உங்களை பிடிக்க வில்லை..ஏற்கனவே பிடித்து போனவருடன் போகிறேன்....மன்னிக்கவும்...

என்னய்யா யோசிக்கிற..

உன்னை உன் புருஷன் வித்துட்டு போயிட்டான்..என் பொண்டாட்டி என்னை விட்டுட்டு போயிட்டா?....உன் கதைய கொஞ்சம் சொல்லேன்..

நீ பைத்தியமா? இல்ல... பத்திரிக்கைகாரனா?...பொண்டாட்டி வேற இல்ல...இங்க எதுக்கு வந்த..வா ..என்னை தொழில பார்க்க வுடு..அவள் ஆடைய களைய ஆரம்பிக்க..

இரு..இப்ப வேண்டாம்...நீ அந்த கதையை சொல்லு..

கதையா...நிஜம்யா..தாங்குவியா நீ.. காதல்னு ஒருத்தன் கிட்ட ஏமாந்தேன்...கொஞ்ச நாள் குடும்பம் நடத்தினான்..வயித்துல மூணு மாசம்..ஒரு நாள் நைட்டு புல்லா குடிச்சுட்டு வந்தான்..கூட நாலு பேர்...தேவிடியா மகனுங்க..சின்னா பின்ன மாக்கிட்டானுங்க...சீரழிஞ்சு இங்க வந்து சிக்கிட்டேன்.குழந்தைக்கு பேர் கூட வச்சிருந்தேன்..நல்ல வேளை..கலைஞ்சிருச்சு..இல்ல..அப்பன் யார்னு தெரியாம வளர்ந்து மாமா பையனாயிருக்கும்..இங்க அதை விட கொடுமையான கதையெல்லாம் இருக்கு..இப்ப அவுக்கவா?

ம்ம்ம் சரி அவு..

எல்லா ஆம்பளையும் அப்படித்தான்யா..அவுக்க சொல்லிட்ட பார்த்தியா?ஆமாம் பின்ன ..நீ அதுக்குத்தான வந்திருக்க...ஆனா ஒன்னு..இன்னிக்கு எனக்கே மூடு வந்திருச்சு..விளையாடுயா..

பிறந்த மேனியாக இருந்தாள்..அவன் கண்களை மூடிக்கொண்டு கையில் கொண்டு வந்திருந்த பையை நீட்டி...இந்த புடவையை கட்டி கிட்டு நகையெல்லாம் போட்டு,கிட்டு வா..

அவள் புரியாமல் பார்த்தாள். ...பின் மெளனமாக வாங்கி கொண்டு பாத்ரூமுக்கு போனாள்..

தலையை குனிந்து அழுது கொண்டிருந்தவன்...காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்தான்...
அவன் மனைவியின் நெற்றி சுட்டி,மூக்குத்தி,கம்மல்,தாலி சங்கிலி..பார்வை கழுத்துக்கு கீழே போக திடுக் என்றது..

இது..

அவள் சொன்னாள்..இது என் ஆசைய்யா? நீ ஒன்னும் சொல்ல மாட்டேன்ற நம்பிக்கைலதான்..அவள் குரல் கம்மியிருந்தது..

அவன் முகத்தில் இனம் புரியாத உணர்ச்சி...நா காதை வச்சு கேட்கவா?

அவள் தலையாட்டினாள்..

அவன் எழுந்து அருகில் சென்றான்..அவள் நெற்றியில் முத்தமிட்டு அப்படியே குனிந்து சின்ன தலையணை வைத்து பெரிதாகப்பட்டு இருந்த அவள் வயிற்றில் காதை வைத்து “பேர் வச்சுட்டியா” என்றான்.

Saturday, October 10, 2009

மாயமான்.................சிறுகதை




ம்ம்...சொல்லுங்க..எத்தனை நாளா இப்படி ஒரு எண்ணம்?

“கொஞ்ச நாளா.. டாக்டர்..” அனு கம்மிய குரலுடன் இடை மறித்தாள்..

இவர் கம்பெனில நிறைய பேரை வேலையை விட்டு அனுப்பிச்சுட்டாங்க...இவருக்கு சம்பளம் பாதிக்கு மேல கட் பண்ணியாச்சு...வீட்டு கடன், கிரெடிட் கார்டு இன்னும் நிறைய பொருள் கடன்ல வாங்கினதுதான்...எல்லாத்தையும் எப்படி அடைக்கப் போறொம் தெரியலன்னு புலம்பிகிட்டே இருந்தாரு..இப்ப திடீர்னு நா செத்துட்டா இன்ஷூரன்ஸ் அது இதுன்னு நிறைய பணம் வரும். கடனை அடைச்சுட்டு நீயும் குழந்தையும் சந்தோஷமா இருங்கன்னு அடிக்கடி.....

எனக்கு பயமா இருக்கு டாக்டர் .எதாவது பண்ணிப்பாரோன்னு பயத்துலயே.. அனு குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

ரவி அமைதியாக தலையை தொங்கபோட்டிருந்தான்..

இது ஒரு வித டிப்ரெஷன்.. காம்ப்ளெக்ஸ்.. வரப் போகும் பிரச்சனைகளை நம்மால சமாளிக்க முடியுமான்னு குழப்பம்..

மிஸ்டர் ரவி நீங்க மனசை அனாவசியமா குழப்பிக்காதீங்க...நல்ல தூங்குங்க..உங்க குழந்தையோட நேரத்தை செலவழியுங்க.. மறுபடியும் மூணு நாள் கழிச்சு வாங்க. மிஸஸ் ரவி. இந்த டேப்ளேட்ஸ் ரெகுலரா கொடுங்க...டென்ஷன் குறையும்...

அடுத்த இரண்டு நாள் ரவி கொஞ்சம் பெட்டரா இருந்தது அனுவுக்கு ஆறுதலாயிருந்தது.”

நம்ம குல தெய்வ கோயிலுக்கு போயிட்டு வந்திடலாங்க..காசு முடிஞ்சு வச்சிருக்கேன்.. நீங்க வேணும்னா பாருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். ஆனால் அந்த கிரெடிட் கார்டு வசூலுக்கு வந்தவன் பூதத்தை கிளப்பி விட்டு விட்டான். அக்கம் பக்கம் வேடிக்கை பார்க்க அவன் கத்தின கத்து அனுவிற்கும் சே .செத்துடலாம்னு தோன்றியது.

பால்கனியில் சிகரெட் பிடித்து விட்டு ரவி உள்ளே வந்தான். அனு பால் வைத்திருந்தாள்.

அனு உனக்கு?

ரெண்டு கிளாஸ் இருக்கு பாருங்க.. ப்ரியா குடிச்சாச்சு.. ரவி அனுவின் கிளாசில் பொடி பண்ணி வைத்திருந்த தூக்க மாத்திரையை கொட்டி கலக்கினான்.

மணி 12. ரவி மெல்ல எழுந்து அனுவை பார்க்க மெல்லிய குறட்டையுடன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தாள். ஆபிஸ் பேக்கை திறந்து ஒரு பேப்பரை எடுத்தான். டைப் செய்யபட்டிருந்த ஒரு கடிதம் அது.அதை டேபிள் மேல் வைத்தான். மீண்டும் படுக்கை அருகில் வந்தவன் ப்ரியாவை அனைத்து நெற்றியில் ஒரு முத்தம்.. அனுவையே உற்று பார்த்தான்.அனு தைரியசாலி. நிச்சயம் இதை அவள் தாங்கி கொள்வாள். போன வருஷம் ரவியின் அம்மா இறந்தபோது அவள்தான் அவனை தேற்றினாள். ”ரவி,எது நடந்தாலும் life has to go.சரியா...

காலை மணி ஐந்து. ரவி ஹாலில் தலை குனிந்து உட்கார்ந்திருக்க, அனு அழுகையினுடே பேசி கொண்டிருந்தாள்.பக்கத்தில் மோகன். ரவியின் உற்ற நண்பன்.
“என்ன பைத்தியகாரத்தனமா லெட்டர் எழுதி வச்சுட்டு போயிருக்கார் பாருங்க.

மோகன் கடிதத்தை படித்தான்.

அனு

இந்த முடிவை நல்லா யோசிச்சுத்தான் எடுத்திருக்கேன்.எனக்கு அப்புறம் இன்ஷுரன்ஸ் அது இதுன்னு கிட்டதட்ட நாற்பது லட்சம் வரும்.கடனையெல்லாம் அடைச்சுடு..உயிரோடிருந்து உன்னையும் ,ப்ரியாவையும் கஷ்டபடுத்த நா விரும்பல.அது மட்டுமில்ல நாளைக்கு எல்லா கடன்காரனும் வீட்டு வாசல்ல கத்தி மானம் போறதை நிணைச்சு பார்க்க முடியல.யார் வந்து கேட்டாலும் அவர் போயிட்டார்.. ஆபிஸேலேர்ந்து பணம் வரும்.கடனை அடைச்சுடறேன்னு சொல்லி..


ரவி.இது என்ன?முட்டாள்தனம்.செத்தா பிரச்சனை தீர்ந்துடுமா?

ரவி ஒன்றும் பேசாமல் எழுந்து படுக்கையறைக்குள் சென்றான்.
வெளியே மோகன் “அனு இதை அப்படியே விட்டுடு. இந்த மட்டும் மனசு மாறி வந்தானே..வீ ஆர் லக்கி”

பீச் ஹோவென்று இருந்தது.குமாருக்கு அவமானமாயிருந்தது.. சே.சின்னப் பையன் .அவன் கிட்ட இருந்து செயினை புடுங்க முடியல.. ம்ம் குடி கொஞ்சம் ஓவர். இல்லன்னா?சரி.. கசுமாலம் சாவறதுக்குத்தானே வந்தான். பேசாம சாகுடான்னு வுட்டிருக்கணும்.. அப்புறம் செயினை கழட்டியிருக்கலாம்...நம்ம கத்தியை காட்டி செயினை கழட்டுடான்னு சொல்ல..வெறி புடிச்சா மாறி இல்ல கத்தியை புடுங்க பார்த்தான். குத்த சொல்ல ஓடிட்டானே..

சாவையே ஜெயிச்சுட்டீங்க..வாழ்க்கையை ஜெயிக்க முடியாதா என்ன?இப்பவாவது புரிஞ்சுதா...ரவியின் கையில் வழிந்த ரத்தத்தை துடைத்து கொண்டே அனு சொன்னாள்..