Showing posts with label சினிமா / அனுபவங்கள். Show all posts
Showing posts with label சினிமா / அனுபவங்கள். Show all posts

Saturday, March 6, 2010

அவள் பெயர் தமிழரசி.... ஒரு நேட்டிவிட்டி விமர்சனம்


ஏம்லே ! நம்ம ஊரை சுத்தி, சுத்தி புடிச்சாங்களே..அந்த சினிமா படம் தெங்காசியில ஆடுதாம். பொயித்து வருமாலே !

போலாம்தான். மருமவ வெய்வாலே. காட்டுக்கு காவல் போவச்சொன்னா, சுணங்கிபோய் சுருண்டுக்குவீங்க.. கிழவனுக்கு கொட்டாய் கேக்கா? ம்பளே..

காட்டுக்கு போறொம்ன்னு சொல்லித்து போயிடலாம்வே!

அவள் பெயர் தமிழரசி ! கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த திரைப்படம். பூர்த்தி செய்திருக்கிறதா என்றால் ஏமாற்றமே ! ஓவியர் வீர சந்தானமும், தியேட்டர் விமர்சகர் தியோடர் பாஸ்கரனும் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

பொக்கை வாயை மென்னுகிட்டு ரோதணையா இருக்குலே. முந்தா நா தோப்புல தேங்கா வெடி போட்டு திங்குதானுங்க. எச்சிதான் வடியுது. என்ன செய்ய. திருநெல்வேலி போய் பல்லு கட்டுனா என்ன? சொன்னதுக்கு பாவி மவன் பாஞ்சு வரான்.

வெளியே சொல்லாதீரு. என் பொழைப்பும் நாறித்தான்ம்ல கிடக்கு. இந்த மட்டும் கையும் ,காலும் கல்லுக்கணக்கா இருக்கப்போய்தான் கால் வயித்துக்கு கஞ்சியாவது மிஞ்சுது.

அவள் பெயர் தமிழரசி. சிறு பிராயம் முதல் தன்னுடன் உயிராய் பழகிய தமிழை காதலிக்கிறார் ஜெய். அவளோ நன்றாக படித்து வெளி மாநிலத்துக்கு
இன் ஜீனிரியங் படிக்க முயற்சிக்கிறாள். தன்னை விட்டு அவள் போக கூடாது என்பதற்காக அவளை பலவந்தமாக அடைந்து விடுகிறார் ஜெய். அவள் என்ன ஆகிறாள்? எப்படி அவளை மீண்டும் கண்டுபிடிக்கிறார் என்பதை மிகுந்த நாடக தன்மையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

தோல் பாவை கூத்துதான் கதைக்களம். அதற்காக இயக்குனருக்கு ஒரு சல்யூட். ஆனால் திரைக்கதை? தமிழரசியைப் போலவே அதுவும் திக்கு தெரியாமல் திண்டாடுகிறது.காமிரா பெச வேண்டிய இடங்களில் எல்லாம் வாய் ஓயாமல் பாத்திரங்கள் பேசிக்கொண்டேயிருக்கின்றனர். பிண்ணனி இசையில் சொல்ல வேண்டியதையும் வசனங்கள். நெல்லை ஸ்லாங்கை அலுக்க, அலுக்க திணித்திருக்கிறார்கள்.கு..கு..கூட்ஸ் வண்டி பாடலும், காட்சியமைப்பும் சுஅகம்

பள்ளி மாணவனாக ஜெய் கொஞ்சம் தேறுகிறார். மற்றபடி முகத்திலும், குரலிலும் ஜீவன் மிஸ்ஸிங். நாயகியும் அப்படித்தான். இயல்பான முகத்தோற்றம் இல்லாததால் கவர மறுக்கிறார். கிளைமாக்ஸில் மகாராஷ்டிராவில் அவர் தமிழில் தோல்பாவை கூத்து நடத்துவதாக சொல்லப்பட்டிருப்பது பால்தாக்கரேவிற்கு தெரியாதவரை நமக்கு நல்லது.

போலாம்லே.. கடசி வண்டியை புடிச்சு போயித்தா, படம் முடிஞ்சு விடிஞ்சு பொடி நடையாக்கூட வந்துர்லாமலே..

என்ன பெரிசுங்களா? எங்க ஆட்டிகிட்டு பொறப்டிங்க?

தெங்காசிக்கு சேக்காளி..பயாஸ்கோப் பாக்கத்தான்.

அட ...முட்ட பெரிசுங்களா? உங்களுக்கு சோலியே தெரியாதா? என் கூட வாங்கவோய் !

சேக்காளி பெருசுகளை தன் கூட அவன் அறைக்கு அழைத்துச் சென்றான். வீட்டில் இருந்த டிவி பொட்டியை போட்டான். பெருசுங்களுக்கு எச்சில் ஒழுகத் தொடங்கியது.

ஒரு பெண் ஒருத்தனுக்கு கால் அமுக்கி விடுவதிலிருந்து காட்சி தொடங்குகிறது.

“அவள் பெயர் ரஞ்சிதா”

Thursday, February 11, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....3



சினிமா ! ஒரு வசீகரமான அரக்கன். சினிமா மோகம் ! வாலில் நெருப்பை கட்டிக் கொண்டு வெறியாட்டம் போடும் மாயக்குரங்கு. ஜெயித்தவர்களைப் பார்த்து வெறியை ஏற்றிக் கொள்ளுமே தவிர வீழ்ந்தவர்களை எண்ணி அது சுதாரித்துக் கொள்வதேயில்லை. என் கல்லூரி படிப்புக்கு இரண்டாம் ஆண்டுடன் ஜனகனமன பாட வைத்ததும் சினிமாதான். கொஞ்சம் அந்த அனுபவங்களை பேசலாம். கால் நடையாய் கடும் அலைச்சல்கள், ஏமாற்றங்கள், புறக்கணிப்புகள், அவமானங்கள் எல்லாம் கடந்து ஒரு சந்தர்ப்பம் கிட்டியது !

டைட்டில் என்ன வச்சிருக்கீங்க?

சார் வீர வணக்கம். அப்புறம் போர்க்குதிரைகள்!

போர்க்குதிரைகளா? ஹிஸ்டாரிக்கல் சப்ஜெக்டா?

இல்லை சார் . சோஷியல்தான். அதாவது இன்றைய இளைஞர்கள் பந்தைய குதிரைகளாக இருக்கிறார்கள். அவங்களை அரசியல்வாதிகள் அவங்க சுயநலத்துக்கு யூஸ் பண்ணிகிட்டு சுட்டு தள்ளிடறாஙக. என் ஹீரோ இளைஞர்களை போர்க்குதிரைகளா மாத்தாறான். சமூகத்துக்கு எதாவது செய்யனும்ன்னு....

இருய்யா ! மெசேஜ் கதையா?

இல்லை சார். ஆக்‌ஷன், லவ் எல்லாமே இருக்கு. ஹீரோயின் ஒரு டாக்டர். அவளை ஒரு கிராமத்துக்கு சேவை செய்யறதுக்கு கடத்தறாங்க.

இது எதோ தெலுங்கு படம் மாதிரி இருக்கே?

இல்லை சார். இது டோட்டலா நக்சலைட் மேட்டர்!

நக்சலைட்ன்னா யாரு ? தீவிரவாதிங்கதானே!

வெஸ்ட்பெங்கால்ல நக்சல்னு ஒரு ஊர் இருக்கு சார். அங்கதான் சச்சா .. அதாவது சாருமஜீம்தார் முதல்ல இந்த இயக்கத்தை ஆரம்பிச்சார்.

நான் முதலில் கதை சொல்லப்போனபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது. இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். நான் ஆரம்பித்த கதையில் அவருக்கு சுவாரசியம் வந்திருந்தது.

அப்புறம் அங்கயேயிருந்து பிரிஞ்சு வந்துதான் கொண்டபள்ளி சீதாராமையா “மக்கள் யுத்த குழு” வை ஆந்திராவில் ஆரம்பிச்சார்.

நீ கதையில் என்ன சொல்ல வர்றே?

ஹீரோ தீவிரவாத பாதையில் போய் கொண்டிருந்த சிலரை திருத்தறார். வன்முறை அப்பாவி மக்களை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது. அதானாலே ஒரு நம்ம ஒரு பேரலல் கவர்மெண்ட்டை நடத்தலாம்னு சொல்றாரு.

இது நடந்தது 1987. அப்போது நான் ஒரு நண்பருடன் ஆந்திராவில் குண்டப்பள்ளம் ங்கிற ஊருக்கு போயிருந்தேன். அங்கு பார்த்ததுதான் இந்த பேரலல் கவர்மெண்ட் மேட்டர். உதய்க்கு நான் சொன்ன விதம் பிடிச்சு போனது.

நான் இந்த மாதிரி சப்ஜெக்ட் பண்ணறதில்லை. லவ், செண்டிமெண்ட் இதான்னு ஒரு ஃபார்முலா வச்சிருக்கேன். நீங்க கதை விவாதத்தில் கலந்துக்கங்க !

எனக்கு தலை கால் புரியவில்லை. நிறைய பேரை சந்திக்கவே வாய்ப்பு கிட்டவில்லை. செய்யாறு ரவி மூலம்தான் இந்த வாய்ப்பு கிட்டியது. அவருக்கு நன்றி சொன்னேன். இதென்ன பெரிய விஷயம்? நான் படம் பண்ணும்போது நீதான் கதை என்றான்(ர்).

அவர் முதல் படம் பூஜை போட்டபின் அவரை பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சினிமா!

உதவி இயக்குனராக எனக்கு இடப்பட்ட முதல் பணி என்ன தெரியுமா? அப்போதுதான் உதய்க்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. அவர் அக்கா வீட்டில்தான் தங்கி இருந்தார். அவருக்கு வாடகைக்கு வீடும் வேலைதான் முதலில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னொரு பரிதாப உதவியாளனும் நானும் என் ஓட்டை லேப்பரெட்டா ஸ்கூட்டரில் சொந்த காசில் பெட்ரோல் போட்டுக் கொண்டு சுற்றினோம். சினிமா !!

மெளனராகம் பார்த்து பித்து பிடித்தாற்போல் திரிந்தேன். மணிசாரின் விலாசத்தை கண்டுபிடித்து காலிங்பெல்லை அழுத்தினேன். ஒரு நான்கு முழம் வேட்டி, பனியன் அணிந்தவர் கதைவை திறந்தார். சாட்சாத் மணிரத்னமேதான். (பின்னாளில் ஒரு கவிதை எழுதி அவருக்கு அனுப்பி வைத்தேன். முழுவதும் நினைவில் இல்லை.ஆனால் இப்படி முடியும் “பெயரில் மட்டுமல்ல! படைப்பிலும் கண்டேன் மணியையும், ரத்தினத்தையும்”)

சார் ! உங்க கிட்ட அசிஸ்டெண்டா சேரனும்!

ஆறு பேர் இருக்காங்களே! நீங்க கோவிந்த் கிட்ட காண்டெக்ட்ல இருங்க! கேஃப் வரும்போது பார்க்கலாம். கோவிந்த் தேனிக்காரர் . சினிமாவில் தண்ணி குடித்து மணியிடம் அசோசியேட்டாக இருந்தார். எல்டாம்ஸ் ரோடில் அவரது அறை இருந்தது. நான் படம் பண்ணும் போது நீங்க கண்டிப்பா கூட இருக்கிங்க என்றார். அதன் பின் அவர் ரூமே தஞ்சம். கடன் வாங்கியாவது அவருக்கு ஜானெக்‌ஷா பிராண்டி. கவுண்டமணி மார்க்கெட் டல்லாயிருந்த சமயம் அது. கோவிந்த் ரூமிற்குத்தான் தண்ணியடிக்க வருவார். கவுண்டர் கிளாஸ் என்று தனியே ஒரு கிளாஸ் அங்கு உண்டு. ஃபுல்லா ஏத்துவார். கீழே போய் அவர் வீட்டுக்கு போன் பண்ணால் டிரைவர் காரை எடுத்து வருவான். போய் விடுவார். சமயங்களில் எனக்கும் வாங்கி கொடுத்திருக்கிறார். “மரியாதையா ஊருக்கு ஓடிடு. சினிமாவெல்லாம் வேஸ்டு மகனே” என்பார். உண்மைதான் ! மணிரத்னம் சார் சொன்ன அந்த கேஃப் வந்தபோதுநான் இங்கு இல்லை. ஊருக்கு போய் விட்டேன். லோக்சந்தர் என்பவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். அவர் சில தெலுங்கு படங்கள் பண்ணினார். நம்ம சுழி அது !(அப்போது!)

ஆனால் ஒன்று சொல்லவேண்டும். நாயகன் படபிடிப்பு சென்னையில் நடக்கும் போதெல்லாம் நான் தான் செட்டுக்கு முதலில் போவேன். கோவிந்த் உபயத்தில். மணிசார் பார்ப்பார். ஒரு சல்யூட்டை போடுவேன். சிரித்துக் கொண்டே தலையாட்டி விட்டு போய் விடுவார். ஒரு ஏகலைவன் போல் கொஞ்சம் அங்கு கற்றுக் கொண்டேன் என்றும் சொல்வேன்!

கோவிந்த் கஷ்டப்பட்டு ஒரு படம் பண்ணார். வினோத் என்ற பெயரில். “ராதிகா, நிரோஷா நடித்த “கை வீசம்மா ! கை வீசு” நல்ல படம். ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. மாய அரக்கன் வினோத்தை கடைவாய் பல்லில் அரைத்து வீசி விட்டான். இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.


ஒரு தனியார் சினிமா கல்லூரியில் நான் திரைக்கதை வகுப்பெடுத்தேன். முதலில் அங்கு நான் மாணவனாக சேர்ந்தேன். டிஜிட்டல் தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்ள. ஆனால் பகுதி நேர ஆசிரியராகி விட்டேன். அங்கு ஷைலஜா என்று ஒரு பெண் படித்தாள். மகளிர் கிறித்துவ கல்லூரியில் விஸ்காம் மூன்றாம் ஆண்டு மாணவி. ஒரு வாரம் கிளாஸ் முடிந்தவுடன் ஒரு சின்ன டெஸ்ட் வைத்தேன். 15 நிமிடத்திற்குள் ஒரு மூன்று சீன்கள் எழுத சொன்னேன். முன்னறிவிப்பில்லாமல் திடீரென்று சொன்னேன். ஷைலஜா எழுதிய சீன்கள். ஒரு சின்ன கதை வடிவத்தில் கொடுக்கிறேன்.

வேற வழியில்லையா?

நோ சான்ஸ் ! இவங்க நம்பளை நிச்சயமா நிம்மதியா வாழ விடமாட்டாங்க ! இதான் ஒரே வழி.

எனக்கு பயமா இருக்குடா!

நம்ம சாவில மட்டும்தான் ஒன்னு சேர முடியும்மா . ப்ளீஸ். புரிஞ்சுக்கோ !

இரவு மணி 8.30. ஷைலு ரெடியா?

ம்ம்ம்ம்!

சொன்னது நியாபகம் இருக்கா? 10 மாத்திரை. பால்ல நல்லா கலக்கிடு.

பயமா இருக்குடா !

வேற வழியில்லைம்மா ! உனக்கு நான் வேணுமா?

நீயில்லாம எப்படிரா?

அப்ப இதான் வழி !

இருவரும் போனை கட் பண்ணி விட்டு தூக்க மாத்திரைகளை கண்ணீரோடு கலக்குகிறார்கள். அப்படியே டம்பளரை...

“தத்தம் அப்பாக்களிடம் கொடுக்கிறார்கள்”


நான் விளம்பரத்துறைக்கு வந்த பின் அமீர் போன்ற இயக்குனர்களிடம் உதவியாளனாக சேர்ந்திருக்க்க முடியும். ஆனால் எனக்கு இருந்த கமிட்மெண்ட் தடுத்து விட்டது. தனியாக ஒரு படம் செய்யும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் இன்னும் என்னை நான் அப்டேட் பண்ணிக் கொள்ள விரும்பினேன். இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், நடிப்பு இவை எல்லாம் தனித்தனி “ art" .இவற்றை முழுமையாக ஒருங்கிணைப்பதுதான் சினிமா . நல்ல சினிமா! அதனால்தான் சினிமாவை “craft" என்று சொல்கிறார்கள். இப்போது ஒரு முன்னணி ஒளிப்பதிவாளர் முதன் முறையாக இயக்கும் படத்திற்கு வசனம் எழுத சொல்லியிருக்கிறார். எப்போது என்று தெரியவில்லை. நடக்காமலும் போகலாம். அதுதான் சினிமா !

டிஸ்கி : சில நாட்களுக்கு முன் கண்ணம்மா பேட்டை அருகில் நண்பர்களுடன் டீ சாப்பிட்டு கொண்டிருந்தேன். எங்கோ பார்த்தது போல் இருந்தார் அவர். உற்று பார்த்தேன். என்னை அடையாளம் கண்டு கொண்டார். சிகரெட் கேட்டார். வாங்கி கொடுத்தேன். எப்படி சார் இருக்கீங்க என்று கேட்க தோன்றவில்லை. பார்த்தாலே தெரிந்தது. சினிமா ! அவர் ? ஏ.வி.எம். தயாரிப்பில் கேப்டன் நடித்த ஒரு வெற்றிப்படத்தை இயக்கியவர். பெயர் வேண்டாமே. அதுதான் சினிமா !!