Thursday, November 19, 2009

சக்தி கொடு...


இரவு 11 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கும்.. சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் பாடியை பேக் பண்ணி கொடுத்து விடுவோம்.. இப்படித்தான் தகவல் வந்தது...இந்த விஞ்ஞான மருத்துவ யுகத்தில் இது சாத்தியமாகத்தான் இருக்கிறது.. நான் மருத்துவமனைக்கு போய் சேர்ந்தபோது மணி ஏழு.

தலையில் ஒரு வெள்ளைக்கட்டு. அதன் மேல் “NO BONE" என்று எழுதப்பட்டிருந்தது.. முகத்தில் நான்கு நாள் தாடி..ஒரு உறைந்திருந்த புன்னகை அல்லது ஒரு வித இகழ்ச்சி.. மற்றபடி உடம்பில் ஒரு கீறல் கூட இல்லை.. நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் சுவாசம் சீராக வந்து கொண்டிருந்தது... சாலை விபத்து.. மழை நீ ர் தேங்கியிருந்த பள்ளத்தில் பைக்கை விட்டு, தூக்கி வீசப்பட்டு செண்டர் மீடியனில் தலை மோதி, கடுமையான பாதிப்பு.. முளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை... மருத்துவர்கள் கை விரித்து விட்டார்கள்..நவீன மெஷின்கள், வண்ண ஒயர்கள்..இனம் புரியாத பீப் ஒலிகள்.. செயற்கை சுவசாம் ஓடி கொண்டிருந்தது...

கல்யாண வீட்டுக்கு முன் கூட்டியே வருவது போல், சாவிற்கும் வரமுடியுமா? வந்து காத்திருந்தது உறவினர் கூட்டம்.. அடிக்கடி உள்ளே சென்று காட்சிப் பொருளை போல் பார்த்து, விசும்பி விட்டு....

அவர் கோபி... என் தம்பியின் சகலை..38 வயது..ரயில்வேயில் எக்ஸ்பிரஸ் டிரைவர்..விபத்து நடந்த இடம் சோளீங்கநல்லூர் குளோபல் மருத்துவமனை அருகில்...ஹெல்மெட் அணியவில்லை. அணிந்திருந்தால் 70 % பிழைத்திருக்க வாய்ப்புண்டு என்று மருத்துவர் சொன்னார்.. அணிந்தவன் விபத்தில் சாவது இல்லையா? என்ற வரட்டு வாதத்தை கைவிட்டு நிச்சயம் ஹெல்மெட் அணியுங்கள் நண்பர்களே...

முந்தின நாள் 10 மணி நேரம் கெடு கொடுத்திருந்தார்கள்.. ஒவ்வொரு ஐந்து மணிக்கும் சிறப்பு மருத்துவர் குழு பரிசோதிப்பார்கள்.. 10 மணி நேர முடிவில் மூளைச் சாவு என்று டிக்ளேர் செய்வார்கள். அதன் பின் உடலில் இயங்கும் உறுப்புகளை தானம் செய்யலாம்..தானம் செய்ய சம்மதித்தால், பிளாஷ் செய்தி பரப்பப்படும்... பிரியாரிட்டியில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும்.. வர்த்தகம் கிடையாது.. மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை கட்டணம் கிடையாது.. முழுக்க மனிதாபிமான அடிப்படியில்தான்.. பெறுபவரை தவிர... பின் பிறவி அல்லவா?

கோபியின் தாய் 70 வயது.. புத்திரசோகம்... என்ன சொல்லி தேற்றுவது? 8 வயதில் ஒரு பையன்...5 வயது பெண்....இந்த மட்டிலும் பொட்டுன்னு போகாம நாலு பேருக்கு உயிர் கொடுத்துட்டு போறாரேன்னு ஒரு சின்ன ஆறுதல் அண்ணா...என்றாள் என்னிடம்... அவர் இறந்ததாக நான் நினைக்கவில்லை..அதனால் வீட்டில் யாரும் அழ வேண்டாமென்று அவள் சொன்னது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.. பெண்ணின் சக்தி அதுதான்

முதலில் லிவர்.. பின் கிட்னி.. அதன் பின் கண்...இறுதியில் இருதயம் என்று எடுத்துவிட்டு பாடியை பேக் செய்து மார்ச்சுவரிக்கு அனுப்பி விட்டார்கள்..
எப் ஐ ஆர் போட்டிருப்பதால் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டுமென்பது சட்டம்... ஏற்கனவே வெறும் பைதான் இருந்தது.. பின் ஆள், அம்பு, பணம் என்று போய் வேலை முடிந்தது..

அதிகாலை சுமார் ஐந்து மணி அளவில் இதயத்துடிப்பு நிறுத்தப்பட்டதாம்.. அந்த கடைசி துடிப்பு என்ன சொல்லியிருக்கும்?

இன்னொருவருக்கு பொருத்திய பின் அந்த இதயம் முதல் துடிப்பில் என்ன சொல்லும்?

எதாவது டிரான்ஸ்கிரிப்ட் முறையில் அந்த துடிப்பை பதிவிட்டு கோட் டிரான்ஸ்லேட் செய்யும் காலம் வந்தாலும் வரலாம்

இப்போதைக்கு அந்த குடும்பத்திற்கு இழப்பை தாங்குவதற்கு சக்தியையும், வாழ்வை எதிர்கொள்ள சக்தியையும் கொடு என்று இறைவனையோ,, இயற்கையையோ வேண்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும்?

26 comments:

DHANS said...

i dont know what to say but somewhere it touched my heart.

feel sorry for what had happened but let me pray for the two kids.

தராசு said...

உங்கள் உறவினரின் மரணத்திற்கு எனது அனுதாபங்கள்.
நிறைய விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து பெற்றுக் கொள்ள முடிந்தது.
தலைக்கவசம் அவசியம், உடல் உறுப்பு தானம் எவ்வளவு உன்னதமானது, பெண்ணின் உறுதி.

குழந்தைகளின் எதிர்காலம் வளமுள்ளதாய் இருக்க பிரார்த்திக்கிறேன்.

தேவன் மாயம் said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை. மரணம் கொடிது.

பிரபாகர் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை அண்ணா... அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...

பிரபாகர்.

Ashok D said...

என்ன இது தொடர்ந்து இடிமாதிரியான விஷயங்கள்.

என்னால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை..ஜி.. நடந்த நிகழ்ச்சியை சிறந்த சிறுகதைபோல வார்த்தை படுத்தியிருக்குறீர்கள். கேபிளின் ’காக்கை’யும் கிட்டத்தட்ட அப்படியான உண்ர்வை கொடுத்தது.

மனதை ஆழமாய் பாதித்து வெளிவரும் வார்த்தைகளுக்கு தனி அந்தஸ்து வந்து விடுகிறது.

க.பாலாசி said...

மனதை கணப்படுத்தும் நிகழ்வுதான். ஆயினும் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் நிறைய.

இராகவன் நைஜிரியா said...

மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சுங்க..

என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை...

ஹெல்மெட் போட வேண்டிய அவசியத்தை இப்போதாவது நம் மக்கள் உணர்ந்தால் சரிதான்..

vasu balaji said...

வருத்தமாய் இருக்கிறது. ஹெல்மட் அணிபவர்கள் கூட செல்ஃபோன் சொருக முடியவில்லை என்று சரியாக அணியாமலமோ, அல்லது போலீசுக்கு தப்ப பெட்ரோல் டேங்க் மீதோ வைத்துக் கொண்டுதான் போகிறார்கள்.

பா.ராஜாராம் said...

சில நேரங்களில் உலுக்கி விடுகிறீர்கள் மணிஜி.என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவியுங்கள்.

:-(

கலகலப்ரியா said...

no words..!

கே.என்.சிவராமன் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்...

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ஆழ்ந்த அனுதாபங்கள் . நானும் பரணிலிருக்கும் தலைக்கவசத்தை துடைத்துவைக்க மனையாளிடம் சொல்லிட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை

anujanya said...

மிக வருத்தமான நிகழ்வு. சில மாதங்கள் முன்பு 'என்றென்றும் அன்புடன்' பாலாவின் nephew கூட பைக் விபத்தில் இறந்து போனதைப் படிக்க நேர்ந்தது. தலைக்கவசம் நிச்சயம் அவசியம். புரிகிறது. என்னையும் சேர்த்து யாரும் நடைமுறையில் எல்லாத் தருணங்களிலும் செய்ய முடிவதில்லை.

அந்தப் பெண்மணிக்கு அனுதாபங்களுடன் வணக்கங்களும். உறுப்பு தானம் எவ்வளவு உன்னதம்!

அனுஜன்யா

ஜெயந்தி said...

படிக்கும்போது சிறுகதை என்றே தோன்றியது. கடைசியில் இது சிறுகதையாக இருக்கக்கூடாதா என்று தோன்றியது.

உண்மைத்தமிழன் said...

ஒரே சோக நியூஸா வருது..! மனசு ரொம்பக் கஷ்டமா இருக்கு ஜி..!

நர்சிம் said...

ப்ச்..வருத்தங்கள்

ராஜவம்சம் said...

பதிவை படித்துவிட்டு ஒன்றும்சொல்லாமல் போகமனம் இல்லை

சொல்வதர்க்கு மனதில் தெம்பு இல்லை.

பித்தன் said...

அந்தப் பெண்மணிக்கு அனுதாபங்களுடன் வணக்கங்களும். உறுப்பு தானம் எவ்வளவு உன்னதம்!

Vidhoosh said...

ரொம்ப வேதனையான விஷயம்.
அவங்க பெரிய மனுஷிங்க. இவ்வளோ தெம்பு மனசில் இருக்க பார்க்க அலாதியாக இருக்கு. சகோதரிக்கு இனியும் எந்த துன்பம் ஏதும் ஏற்படாம கடவுள் துணை நிற்கட்டும்.
குழந்தைகளுக்கு என்ன சொல்ல??
:((

--வித்யா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

எனது அனுதாபங்கள்.:-(

ஹேமா said...

வாழ்வின் பாடங்கள் அனுபவங்களாக இருந்தாலும் மனசை பிய்த்துப் பிசைகிறது.தாங்கும் இதயம்தான் வேணும்.

ஈரோடு கதிர் said...

அவருடைய குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கை கிடைக்கட்டும்

iniyavan said...

தலைவரே,

என்ன திடீருனு இந்த மாதிரி பதிவு போட்டு மனச பாரமாக்கிட்டீங்க.

என்ன சொல்றதுனு தெரியலை.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே.. நீண்ட நாள் கழித்து ஒரு பதிவு வலுக்கட்டாயமாக எழுதி இருக்கிரேன்.. படித்து கருத்து சொல்லவும்!!

Thamira said...

தராசு said...
உங்கள் உறவினரின் மரணத்திற்கு எனது அனுதாபங்கள்.
நிறைய விஷயங்களை உங்கள் பதிவிலிருந்து பெற்றுக் கொள்ள முடிந்தது.
தலைக்கவசம் அவசியம், உடல் உறுப்பு தானம் எவ்வளவு உன்னதமானது, பெண்ணின் உறுதி.

குழந்தைகளின் எதிர்காலம் வளமுள்ளதாய் இருக்க பிரார்த்திக்கிறேன்.//

வழிமொழிகிறேன். மனம் கனக்கச்செய்யும் பதிவு.