
புத்தகக் காட்சி நடைபெறும் இடத்திற்கு எதிரில் பிளாட்பாரத்தில் நிறைய பழைய புத்தக கடைகள் முளைத்திருந்தன. சல்லிசான விலையில் அருமையான பொக்கிஷங்கள் கிடைத்ததாக ஜ்யோவ்ராம் எழுதியிருந்தார். புத்தகக் காட்சி அரங்கிலும் சில ஸ்டால்களில் குறிப்பாக சிற்றிதழ்களின் பழைய பிரதிகள் பாதி விலைக்கு கிடைத்தது. உன்னதம், பாடம் என்று சில இதழ்களை நானும் வாங்கினேன். விகடன் விருது பெற்ற உன்னதம் ஆசிரியர் தோழர் கெளதம சித்தார்த்தனுக்கு பதிவர்கள் சார்பாக பாராட்டும், வாழ்த்துக்களும்.
உள்ளே இன்னொரு பழைய பேப்பர் கடையும் இருந்தது. இதுவரை அவர்கள் வெளியிட்ட 16 இதழ்களின் விலை 40 ரூ மட்டுமே. அதன் கூட ஆச்சி மசாலாத்தூள் இலவசமாம். அரங்கில் திரும்பிய இடஙகளெல்லாம் அந்த பத்திரிக்கையின் விளம்பரம்தான். தொலைக்காட்சிகளிலும் தூள் பரத்தினார்கள் ஆரம்பத்தில். ஒன்றரை லட்சம் விற்றது போக எஞ்சியதை இப்படி கொடுத்துக் கொண்டிருந்தார்கள் போலும். பத்திரிக்கையின் பெயரை சரியாக சொல்லுபவர்களுக்கு பூச்சி மார்க் விளக்கெண்ணெய் அரை லிட்டர் இலவசம்.
அறிவித்திருந்தபடி பதிவர்கள் கிழக்கில் உதித்தனர். யூத் தலைமையில் அரட்டை கச்சேரி களை கட்டியது. சரமாரியாக பிளாஷ்கள் மின்னியது. பதிவர் சங்கர் விதம் விதமாய் கோணங்கள் வைத்துக் கொண்டிருந்தார். நான் பார்த்தவரை யாரும் மொக்கை பதிவராய் தெரியவில்லை. ஓவ்வொருவரும் தனித்தன்மையுடன் ஷார்ப்பாகத்தான் இருந்தனர். மொக்கை பதிவர்கள் என்று எழுதிய பிரகஸ்பதியுடன் யாரும் அவ்வளவாக கலக்கவில்லை. அவர் அதை விட மொக்கையாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நிறைய புத்தகங்கள் வாங்கினேன். பட்டியல் போடுவதாய் இல்லை. படித்து முடித்தவுடன் அதைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே!!
சாருவுடன் இரண்டு முறை சோமபானத்தை பகிர்ந்து கொள்ள நேர்ந்தது. சற்றே திட்டமிடப்பட்ட தற்செயலான நிகழ்வு. அதைப் பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். சிலரின் தனிப்பட்ட குணாதிசயங்களை பற்றி பேசினார். லத்தீன், தென் அமெரிக்கா இன்னும் பெயர் வராத எழுத்தாளர்களை பற்றி எழுதுகிறீர்களே ? நீங்கள் நிசமாவே படித்திருக்கிறீர்களா சாரு என்று கேட்டேன். முன்னால் இருந்த வெண்ணிலா மீது சத்தியம் செய்தார். வெண்ணிலா ஒரு வகை ஓட்கா..
ஒரு பிரகஸ்பதிக்கு கோபமா. ஆற்றாமையா.. இயலாமையா..என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. மொன்னைக் கத்திக்கு வெண்ணெய் மீது வரும் கோபம் போல் வருகிறது. ஏன் இப்படின்னு சில பதிவர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டால் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்படியெல்லாம் காரணம் இருக்குமா சகா என்று கேட்டால் ஒரு வேட்டைக்காரன் சிரிப்பு சிரித்தார். யூத்தை கேட்டேன். அவர் சொன்னதை இங்கு எழுத முடியாமைக்கு வருந்துகிறேன். என் கருத்து. ஏரி விழித்திருக்கிறதா என்று சுருட்டை நனைத்து சோதித்த மூடன் சீ..சீடனின் ஞாபகம் வருகிறது.
மக்குபாய்.. மன்னிக்க.. ஜக்குபாய் இணையத்தில் வந்ததை நீங்கள் அறிவீர்கள். அது ஒரு பிரெஞ்சு படத்தின் ஈயடிக்காத காப்பி என்று பில்லா(பழைய) பேத்தியதை..மீண்டும் மன்னிக்க.. பேசியதும் செய்தி. படம் ரிலீசானால் (ஒருவேளை) தியேட்டரில் ஈயடிக்கலாம்.
அதன் பொருட்டு நம் டம்மி நட்சத்திரங்கள் முதல்வரை சந்தித்து (கவர்ச்சியாய் நடிகை சோனா சகிதம்) திருட்டு விசிடியை ஒழிக்க மனு கொடுத்தார்கள். திருவாரூர் மனுநீதி சோழனும் மனம் உருகி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இது நடந்து மூன்று நாட்கள்தான் ஆகிறது. அட்லீஸ்ட் ஒரு ஆறு மாதமாவது காத்திருந்து பார்க்க வேண்டும். திருட்டு தடுக்கப்பட்டோ அல்லது ஒழிக்கப்பட்டோ விட்டதா என்று. ஆனால் அதற்குள் பாராட்டு விழா தேதி அறிவிக்கப் பட்டு விட்டது. எதற்கு ? பைரைசியை ஒழித்து திரையுலகத்தை ரட்சித்து விட்டாராம். வாழ்த்தவும் விரும்பவில்லை!! வணங்கவும் விரும்பவில்லை !!
ஒரு சுதந்திர போராட்ட தியாகி தமிழர். வயது 85. பென்ஷன் கேட்டு நடையாய் நடந்திருக்கிறார். சுமார் 25 வருடங்களாக. நீங்கள் தியாகி என்பதற்கு சமர்ப்பிக்கப் பட்ட ஆதாரங்கள் போதுமானவையல்ல என்று அரசு தரப்பில் மறுக்கப் பட்டிருக்கிறது. அவர் நீதிமன்ற படியேறினார். அரசு வக்கீலும் சளைக்கவில்லை. எதிராக வாதாடினார்கள். இறுதியில் நீதிமன்றம் பென்ஷன் கொடுக்க சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. பாவம் அவர். ஒரு திரைப்படத்தில் சின்னதாய் ஒரு வேஷம் போட்டிருந்தால் அவருக்கு எல்லா சலூகைகளும் கிடைத்திருக்கும். ரம்பாவையெல்லாம் நினைத்துப் பாருங்கள். கேட்டவுடன் அப்பாயின்மெண்ட். காயங்களுக்கு உடனே ஆயின்மெண்ட்!!
மழை நீர் தேக்கி வைக்க வக்கில்லாமல் கடலில் கலப்பதை பார்த்தால் கண்ணில் நீர் வரும். வீணாகிறதே செல்வம் என்று. அதே உணர்வு எனக்கு ரமேஷ் வைத்யாவிடம் ஏற்படுகிறது. என்னதான் அன்பையும், கரிசனத்தையும் அவரிடம் யார் காட்டினாலும் அவர் இரண்டாய் இருக்கும்போது மட்டுமே அதை ஏற்று கொள்கிறார். திரும்ப இரட்டிப்பாய் நமக்கு திருப்பி அளிக்கிறார். மிக விநோதமான மனநிலை. போன முறை சந்தித்தபோது சேது படத்தில் வரும் பாண்டிமடம் மாதிரியான இடத்தில் என்னை அடைத்து விட்டார்கள் என்று வெதும்பினார். விதி ! மீண்டும் அவர் அங்கேதான்.
லீனாவின் கவிதை நிறைய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அது போல் நாமும் ஒன்று எழுதினால் எப்படியிருக்கும் என்று சில நண்பர்களிடம் கருத்து கேட்டேன். எழுதிப் பாரேன் என்றார்கள்.முதல் வரியை மட்டும் இன்று எழுதுகிறேன். வரவேற்ப்பை பொறுத்து நீட்டலாம். சீ .. தொடலாம். மறுபடியும் சீ... தொடரலாம்..
தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு
திரிந்து கொண்டிருந்தேன்....
மேற் சொன்ன வரிகளுக்கு நல்ல அர்த்தங்களூம் உண்டு. தப்பிதமாக கற்பித்து கொள்பவர்கள் இலக்கிய உலகத்திற்கு துரோகம் செய்பவர்களாகிறார்கள்.
டிஸ்கி : நண்பர் வெள்ளிநிலா சர்புதீன் கொடுத்த இதழை வாசித்தேன். எனக்கு நிறைய முரண்பாடுகள். சற்று கோபமும் வந்தது. பொது இடங்களில் கொடுக்கப் படும் இன்னொரு மதம் தொடர்பான நோட்டீஸ்களுக்கும் ,அதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. உங்கள் பத்திரிக்கையில் நான் எழுதும் பட்சத்தில் அதிலிருந்து ஒரு வரி கூட பிரசுரிக்கப்படாது என்பது நிச்சயம். நண்பர்களாகவே இருந்து விடுவோம் சர்புதீன்..
டிஸ்கி : 2
தொட்டியிருக்கையில்
குப்பையை ஏன்
பக்கத்தில் போடுகிறார்கள்!?
டிஸ்கி :3 தோழர் மாதவராஜுக்கும், வம்சி பதிப்பகம் பவா.செல்லத்துரைக்கும் வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் தொகுத்திருக்கும் அத்தனையும் மகா மொக்கைகள். அதை நான் சொல்லவில்லை. ஒரு நாமக்கல் வஸ்துவின் வாக்குமூலம். ஒரு சந்தேகம் தோழர்? பமாரு, டமாரு,டங்குவாரு என்றெல்லாம் பதியப்பட்ட அதாவது சுமார் ஏழேமுக்கால் லட்சம் தடவைகள் வாசிக்கப்பட்ட இலக்கியங்களை ஏன் நீங்கள்கன்சிடர் பண்ணவில்லை. ஒரு அதிமேதாவியின் புலம்பல்கள் உங்களுக்கு கேட்க வில்லையா? ரோஜா பாக்கு மெல்வது எப்படி என்ற அடுத்த எளக்கியம் தயாராகி கொண்டிருக்கிறது. அதை வெறும் வாயில் மெல்லாமல் வெற்றிலையுடன் மென்று குப்பைத் தொட்டியில் துப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.