Tuesday, March 30, 2010

அவள் பெயர் ராஜேஸ்வரி............


ஜீ ரொம்ப நாளா கேக்கணும்னு நினைச்சேன் .அது என்ன தழும்பு நெத்தியில்?

கேட்டவன் திலக். மராட்டிக்காரன். ஆனா நல்லா தமிழ் பேசுவான். சென்னையில் கொஞ்ச நாள் என்னுடன் வேலைப்பார்த்தவன். இப்போ நானும் அவனும் மும்பையில். ஒரே இடத்தில் வேலையும், ஜாகையும். நான்காவது ரவுண்டில் இருந்தோம். திலக் எட்டு ரவுண்டுகள் வரை போவான். நான் ஆறு. அதற்கே ஆடி , அடங்கி, வாந்தி .

ராஜேஸ்வரி என்றேன்.

காதலா ? முதல் காதலா?

ஆமாம் . ஆனா எனக்கு இல்லை. அவளுக்கு என் மேல்.

நீ காதலிக்கலையா?

இல்லை. நான் வேறு ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தேன்.

அந்த பெண் என்றான் ஒரு கேள்விக்குறியுடன்.

அவள் வேறு ஒருவனை காதலித்துக் கொண்டிருந்தாள் என்று சிரித்தேன். ஒரு பழமொழி உண்டு திலக் . நீ காதலிக்கும் பெண்ணை விட்டு விடு . உன்னை காதலிக்கிற பெண்ணை காதலி என்று.

ஜீ எனக்கு இதில் வேறு கருத்து . நீங்க காதலிக்கிற பெண் உங்களை காதலித்தால் ?

நீங்கள் தீபாவளி லட்சுமி வெடியை பார்த்திருப்பீர்கள். அதில் இருக்கும் லட்சுமியைப் போல் இருப்பாள் ராஜேஸ்வரி. ஆனால் கொஞ்சம் கறுப்பாக. அப்போதே என்னை விட உயரமாக இருப்பாள். ரிங் பால் டீமின் ஸ்கூல் கேப்டன். நன்றாக ஓவியம் வரைவாள். நன்றாக சமைப்பாள்.(திருடி சுவைபார்த்தது). இதை விட ஒரு பெண்ணிடம் என்ன வேண்டும் ? ஏன் அவளை காதலிக்க வில்லை என்கிறீர்களா? வாஸ்தவம்தான். நான் தான் வேறு ஒருத்தியை காதலித்து தொலைத்து விட்டேனே !

இண்ட்ரஸ்டிங் . நான் கூட நிறைய பேரை காதலித்தேன். மொழி வாரியாக. உன் ஊரில் கூட. என்ன ? ஒரு முறை பார்த்து விட்டால் அலுத்து விடுகிறது என்றான் திலக்.

இடியட். நான் அப்படியில்லை. என் காதலியின் நினைவில்தான் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.

ஜீ இன்னிக்கு நீங்களும் என்கூட வர்றீங்க .

எங்கடா ?

காமாத்திபுரா !

நான் கபடி(யும்) நன்றாக விளையாடுவேன் . ஒரு முறை டோர்னமெண்ட்டுக்காக பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தோம். அருகில் ராஜி ரிங் பால் ஆடிக்கொண்டிருந்தாள். ஒரு லாவகமான கேட்சிலிருந்து எகிறி பல்டி அடித்தேன். கீழே இருந்த கல் நெற்றியை பதம் பார்த்தது. ரத்தம் கொட்ட சரிந்தேன். மயக்கம் வருவது போல் இருந்தது.அரை மயக்கம் . மின்னலிருந்து வரும் தேவதை போல் தெரிந்தாள் ராஜி. தாவணியை கிழித்து கட்டினாள். அரை மணி நேரம் கழித்துதான் கண்விழித்தேன். மற்ற பெண்கள் மலங்க மலங்க விழித்து கொண்டிருந்தார்கள்.

என்னடா சொல்றே ? நீ பாத்தியா?

ஆமாம்டா ! அப்படியே அச்சு அசல் நீதான். ஒரு ஹார்ட்டீன். அதுக்குள்ள உன் கறுப்பு மூஞ்சி . என் காதல் நாயகன் . உதடுகள் .

நான் பார்க்கணும்டா என்றேன்.

9 மணிக்கெல்லாம் கல்லூரிக்கு வந்துவிடுவாள் அவள். ராஜேஸ்வரியின் நோட்டை எப்படியோ எடுத்துக் கொண்டு வந்தான் நண்பன். அவன் சொன்னது உண்மைதான் . கூடவே ஒரு கவிதை (மாதிரியும்) ஏதேதோ எழுதி வைத்திருந்தாள்.

கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் ஜீ. பாதி ஸ்ட்ரெஸ் போயிடும் .என்னத்துக்கு அதைப்போய் பூதம் மாதிரி காவல் காக்கணும் ? யாருக்காக ?

சபலம் தட்டியதா ? இல்லை ஒரு வித கழிவிரக்க மனநிலையா என்றெல்லாம் தெரியவில்லை. திலக்குடன் பைக்கில் ஏறிக் கொண்டேன். காமாத்திபுரா .

திலக் பிராபளம் ஒன்னும் வராதுல்லே!

உள்ளேயே வச்சிருந்தாதான் பிராபளம். மலச்சிக்கலுக்கு கூட இது ஒரு காரணம்னு சொல்றாங்க .

உளறாதே. அது மனச்சிக்கலாயிருக்கும் .

இல்லை ஜீ . கான்ஸ்டிபேஷனைத்தான் சொல்கிறேன் .

ராஜேஸ்வரியின் நோட்டை எடுத்த இடத்தில் வைக்க சொன்னேன். அன்று முழுவதும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் ஓரிருமுறை பார்த்தவள் பின் திரும்பவேயில்லை. ஒரு விஷயம் அவள் இரண்டாம் ஆண்டுடன் படிப்பையும் நிறுத்தி விட்டாள். டிபிஎஸ் நகரில் அவள் வீடு என்று நினைவு . சைக்கிளில் சுற்றினோம். கண்டு பிடிக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவளை மறந்தே போனேன் .

தவம் கலைந்தது போல் உணர்ந்தேன். முகம் அறியாத பெண்ணின் நினைவு ஆக்ரமித்திருக்க உஷ்ணம் ஏறத் தொடங்கியது.

ஜீ ! என்ன ஆச்சு ? சீக்கிரம் வந்துட்டீங்க ? ஒன்னும் நடக்கலையா?


முத்தம் மட்டும் கொடுத்தேன்டா . திலக் என்னை குழப்பமாக பார்த்தான் .


இத்தனை வருடங்கள் கழித்து இன்று ராஜேஸ்வரியை சந்திக்க வேண்டும் என்று இருக்கிறது. அதுவும் இந்த இடத்தில் . திரைப்படமாக இருந்தால் நம்ப முடியாமல் இருக்கும். ஆனால் இது வாழ்க்கையின் நிதர்சனம் .சரளமாக மராட்டியும் இந்தியும் பேசுகிறாள் . கொஞ்சம் கலராயிருந்தாள் . மேக்கப் மாதிரியும் தெரியவில்லை. என் நெற்றி தழும்பை வருடியபடி கண்களை மூடிக்கொண்டிருந்தாள் . கிரவுண்டில் இருக்கிறாள் என்று உணரமுடிந்தது . மெதுவாக கையை விலக்கினேன் . நான் அவளை கேட்க நினைத்த கேள்விகள் அவளுக்கு புரிந்தது . அவள் பதில் எனக்கும் அப்படியே ! பின் தவம் இருந்தா இந்த வாழ்க்கையை தேடிக்கொண்டிருப்பாள் !

திலக் . பக்கத்துல எதாவது பாருக்கு போ .

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை என்றாள் ராஜி

ஆனால் நான் என்ன சொன்னேன்னு நியாபகம் இருக்கு ராஜி . மெளனமாக எழுந்து வெளியில் வந்தேன் .


பின் குறிப்பு : உன்னை என்னை சகோதரியாகத்தான் நினைக்கிறேன் ராஜி. மன்னித்து விடு. அன்று ராஜியின் நோட்டில் நான் எழுதியது . இன்று அவளை நெற்றியில் முத்தமிடும்போது கூட அதே உணர்வில்தான்.............



22 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லாயிருக்கு தலைவரே.. எதிர்பார்த்த முடிவு என்பதைத் தவிர.. இன்னும் கொஞ்சம் பைன் ட்யூன் பண்ணி இருக்கலாம்..:-)))

Romeoboy said...

எதிர் பார்க்காத ட்விஸ்ட் தலைவரே .. நல்லா இருக்கு :)

Paleo God said...

என் நெற்றி தழும்பை வருடியபடி கண்களை மூடிக்கொண்டிருந்தாள் . கிரவுண்டில் இருக்கிறாள் என்று உணரமுடிந்தது .//

கொன்னுட்டீங்க..

செ.சரவணக்குமார் said...

சூப்பர் மணிஜீ.

தராசு said...

பாதியிலயே முடிவு தெரியுது தலைவரே.

Cable சங்கர் said...

மணிஜி.. க்ளாஸ்

Vidhoosh said...

:)

அருமை என்றாலும் டெம்ப்ளேட் பின்னூட்டமாகிப் போகுதுங்க.. வேறென்னன்னு சொல்ல??

மோனி said...

மோனி ...
உடனே நீ பக்கத்துல எதவாது பாருக்கு போ.

vasu balaji said...

என்னடா மணிஜீ போய் இப்படி கொண்டு போவாரான்னு படிச்சிட்டே வந்தேன். கடைசியில நிக்கிறீங்க;)

Romeoboy said...

அந்த லோகோ எனக்கு மெயில் பண்ணுங்க தல.. romeoboy.81@gmail.com

செல்ல நாய்க்குட்டி மனசு said...

முடிவு சுபெர்ப்

Unknown said...

பின்குறிப்புல ஒரு சூப்பர் யூ டர்ன் போட்டுட்டிங்க :-). நல்லா இருக்கு

VISA said...

Not satisfied.......

யுவகிருஷ்ணா said...

நேருஜி, நேதாஜி மாதிரி மணிஜீயா?

கதை அல்லது ப்ளாஷ்பேக் நல்லாருக்கு!

உண்மைத்தமிழன் said...

எதிர்பாராத கிளைமாக்ஸ்..!

Rajeswari said...

nice

"உழவன்" "Uzhavan" said...

ஒரு இயக்குநர் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறீகள் :-)

பத்மா said...

மாறாமல் மறக்காமல் இருப்பதுதான் தழும்பு

க ரா said...

நலலா இருக்கு கதை.

மங்குனி அமைச்சர் said...

தல , தலதான்

மணிஜி said...

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே..

யுவா நல்லவேளை காந்திஜியை விட்டீர்கள்!

butterfly Surya said...

no comments.