Monday, March 8, 2010

மோகன் தாஸ் என்கிற கவிஜீவன்...


கருக்கல் இருட்டில்
கசியும் விளக்கில்
தெரியும் உடல் மொழியில்
அத்தனை வேதனை..

இதுக்கப்புறம் எப்படி சொல்றதுன்னு யோசிக்கிறேன் டா ! என்றான் மோகன் தாஸ். இல்லையில்லை. கவிஜீவன்.

எதுக்குடா எழுதற?

நம்ப ராமசாமியை பாத்தேன். தொகுப்பு போட்ருலாமே ன்னாரு. ஏற்கனவே எழுதினது நிறைய இருக்கு. இன்னும் கொஞ்சம் எழுதிட்டு பெரிய தொகுப்பா போடலாம்னு ஐடியா.

நான் மோகன் தாஸை உற்றுப்பார்த்தேன். இருவரும் +2 வரை ஒன்றாக படித்தோம். அதற்கு மேல் அவன் படிப்பை நிறுத்தி விட்டான். திடீரென்று வருவான். ஒரு டிராமா மணி. ராமனாதன் செட்டியார் ஹாலில். ஸ்கிரிப்ட் நான் தான். நீயும் கொஞ்சம் நல்லா எழுதுவே இல்ல. பாரேன் என்பான். நான் காதல் கதைகளாக எழுதி குவிக்க ஆரம்பித்திருந்தேன். எல்லாம் சினிமாவுக்காக. மோகன் கொடுத்த கதையை பார்த்தேன். மனோகரா திரைப்படம் போல் இருந்தது.

மனோகராதான் ! சரித்திரம்ங்கிறதை சமூகம்னு மாத்தியிருக்கேன். வசனம் எல்லாம் என்னுதுதான். நானும் ஒரு ரோல் பண்றேன்.

அதன் பின் தஞ்சையில் நாடகத்தின் வளர்ச்சிக்காக மோகன் நிறைய நாடகங்கள் போட்டான். தான் நாடகம் போடுவதை நிறுத்தினாலே அது வளர்ந்துவிடும் என்று மோகனுக்கு புரிவதற்குள் கைகாசு கரைந்ததுதான் மிச்சம். அவன் அப்பா இருந்த சொத்தை பாகம் பிரித்ததில் இவனுக்கு ஒரு கடையும், வீடும் கிடைத்தது போல. பரம்பரைத்தொழிலான ஆசாரி பட்டறை போட்டான். அப்போது எனக்கு இலக்கிய பரிச்சயம் என்பது சுத்தமாக கிடையாது.( இப்ப மட்டும் என்று புருவத்தை உயர்த்தாதீர்கள் ப்ளீஸ்). தஞ்சை பிரகாஷ் என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறேன். மோகன் நிறைய சிறு பத்திரிக்கைகள் படிப்பான். என்னையும் படிக்க சொல்வான். இதெல்லாம் நவீன இலக்கியம் என்பான். நான் வசந்தம், சுகந்தம், மகரந்தம் என்பதை விட்டு வெளியில் வரமுடியவில்லை என்று சொன்னேன். தஞ்சை பிரகாஷ் சந்திக்க ஒரு முறை பெசண்ட் லாட்ஜ்க்கு அழைத்துக்கொண்டு போனான் மோகன். தாடியும், தீட்சண்யமான பார்வையும் வசீகரமாக இருந்தார் பிரகாஷ். மோகன் அவரிடம் உரிமையுடன் நிறைய கேள்விகள் கேட்டான். அவரும் பொறுமையாக சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். எனக்கு ஒரு நல்ல அனுபவமாக பட்டது. அதன் பின் மோகன் போக்கில் நிறைய மாறுதல்கள். தினம் ஒரு ஊர். ஒரு எழுத்தாளர். இலக்கிய கூட்டங்கள் என்று சுற்ற ஆரம்பித்தான்.

மோகன் கடையில் இருந்தான். வீடும் கடையும் ஒன்றாக இருந்தது.

எங்கடா ஆளையே காணும் ?

மெட்ராஸ் போகப்போறேன்டா! சினிமாவில முயற்சி பண்ணலாம்னு இருக்கேன்.

சூப்பர்டா மாப்ளை. உனக்கு நிச்சயம் ஒர்க் அவுட் ஆயிடும். மாப்ளை ! பாட்டெழுத எனக்கு வாய்ப்பு கொடுடா என்றான் மோகன்.

உனக்கில்லாததா? ஆறு பாட்டு. அத்தனையும் நீதான்.

மீண்டும் சில வெட்டி நாட்கள் போனது. மெட்ராசிலிருந்து ஊருக்கு போனபோது மோகனை பார்க்க போனேன். அவன் மனைவிதான் இருந்தாள். வாயில் வரக்கூடாத வார்த்தைகளில் வசவு. பாலீஷ் போடவும் ,பற்ற வைக்கவும் கொடுக்கப்பட்டிருந்த 6 ஜோடி கொலுசுகள் காணும். கூடவே மோகனும். உள்ளூர் எழுத்தாளர்கள் வீடுகளில் தேடி ஆள் கிடைக்க வில்லை. எத்தனை தலைமுறையா சோறு போட்ட தொழிலை, இவர் தலைமுறையில அழிச்சுட்டாரு அண்ணே . வீடு முழுக்க குப்பையும், கூளமும்தான். அதையும் கடைக்கு போடக்கூடதுன்னு அழிச்சாட்டியம். அவளுக்கு கோபம் தலைக்கேறியது. உள்ளே சென்று எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு வந்தாள். தெருவில் குவித்து கொளுத்தினாள். கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. தூரத்தில் மோகன் தாஸ் வந்து கொண்டிருந்தான்.

பின் குறிப்பு : திருவாரூரில் ஒரு எழுத்தாள நண்பர் காலமாகி விட்டாராம். பெயர் மணிப்புறா . சவம் மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்திருக்கிறது. தகவல் அறிந்து இவன் தான் சென்று இறுதி காரியங்களுக்கு உதவி விட்டு திரும்பியிருக்கிறான்.

பின் குறிப்பு : 2 : ஞாபக சக்தி குறைந்து விட்டதால் எரிந்து போன இலக்கியங்கள் நிறையவற்றை திரும்ப எழுத முடியவில்லை என்று வருத்தப்பட்டான். பாதி எழுதிய கவிதை ஒன்று எரியாமல் கிடைத்தது என்றும் சந்தோஷமாக சொன்னான்.

கருக்கல் இருட்டில்
கசியும் சிறு வெளிச்சம்
படரும் நிழலில்
தெரியும் உடல்மொழியில்தான்
எத்தனை வலிகள் !
17 comments:

vasu balaji said...

ஓஓஓ. மணிஜி.வார்த்தையே வேணாம்.

தராசு said...

கவிதை கலக்கல் தலைவரே.

Unknown said...

நல்லா இருக்கு..

iniyavan said...

தலைவரே,

ஏறக்குறைய இதே போல ஒரு சிறுகதை இந்திரா பார்த்தசாரதி எழுதியது என்று நினைக்கிறேன். ஆவியில் வந்தது. மனதை பாதித்த பதிவுகளில் இதுவும் ஒன்று.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

இருபது வருடங்களுக்கு முன்பு தஞ்சை ப்ரகாஷ் நடத்திவந்த "கதைச்சொல்லிகள்" கூட்டங்களில் "கவிஜீவனை" சந்தித்திருக்கிறேன். அந்த நாட்களும் உங்களது பதிவும் இணைந்து மனதை ஏதோ செய்கிறது.

Ashok D said...

ஆம் எத்தனை வலிகள்...


போங்கய்யா இந்த இலக்கியமே வேண்டாம்... ஏற்கனவே வலியா..தான் இருக்கு வாழ்க்கை.. இதுல இலக்கியமாவது வெங்காயமாவது....

நாஞ்சில் நாடன் கதை ஒன்று பிரமாதமாக இருக்கிறது என்று நேற்று பதிவர்களின் சந்திப்பில் பேசிக்கொண்டார்கள். ஆவியில் வந்துயிருக்கிறது.

அகநாழிகை said...

கவிஜீவன் என்கிற மோகன்தாஸை சந்தித்த போது எனக்கும் தோன்றியது அதுதான், நாமெல்லாம் எதைத்தேடி இப்படியான வாழ்க்கையை நமக்கு பிடித்தமானதாக வரித்துக் கொள்கிறோம் என்ற பதிலில்லாத கேள்வி.

சைவகொத்துப்பரோட்டா said...

நல்லா இருக்கு அண்ணே.

பெசொவி said...

என்னைப் பொறுத்தவரை மோகனின் மனைவி செய்தது சரிதான். மனைவி மக்களின் பசியைப் போக்காதவன் சமூக அவலங்களைச் சித்தரிக்கும் கவிஞனாக மாறுவது பச்சைத் துரோகம்.

Unknown said...

இடுகை மொத்தமும் வந்தான் சொன்னான் போனான்னு ஒரே னான் மயமா இருக்கே! கவிஜீவன் “இப்போ” எங்கே எப்படி இருக்கார்?

திவ்யாஹரி said...

நல்லா இருக்கு நண்பா..

எம்.எம்.அப்துல்லா said...

:(

க ரா said...

ரொம்ப நல்லா இருக்கு.

மணிஜி said...

உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே!

கே.வி.ஆர். கவிஜீவன் இன்றும் தஞ்சையில்தான் இருக்கிறார். சில நாட்களுக்கு முன் திருச்சியில் சந்தித்தேன். அகநாழிகை வாசுவும் உடனிருந்தார். இன்னும் மாறவில்லை. அதே ஆர்வம். விரைவில் அகநாழிகையில் அவரது படைப்புகள் வரும். என் தளத்திலும் அவரது கவிதைகள் வரும். நன்றி..

PPattian said...

//என்னைப் பொறுத்தவரை மோகனின் மனைவி செய்தது சரிதான். மனைவி மக்களின் பசியைப் போக்காதவன் சமூக அவலங்களைச் சித்தரிக்கும் கவிஞனாக மாறுவது பச்சைத் துரோகம்.//

RRRRepeatteeyyy...

Cable சங்கர் said...

இதுவும் சூப்பர்.

பா.ராஜாராம் said...

இப்ப full time எழுத்தாளர் வேலையாமே? :-)