Monday, July 19, 2010

காதலாகி வாடா






இந்த கதையில் சிக்கல் இருகிறதா என்று எனக்கு தெரியவில்லை . ஆனால் இதை எழுதுவதில் இருக்கும் சிக்கல் தெரிந்தேயிருக்கிறது.
கொஞ்சம் அலுப்பாக இருந்தது எனக்கு . வழக்கமாக இந்த டைப் கதைகளை முதல் பாராவிலேயே யூகித்து விடலாம் . இதுவும் அந்த ரகம் தான் . ஒரு சிகரெட்டை பற்ற வைத்தேன் .

மூன்றாவது முறையாக முகத்துக்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்தேன் . வாசலில் சைக்கிள் பெல் கேட்டது . வந்துட்டா சண்டாளி..சக்களத்தி..புவனா..பிசாசு...ஆனால் மத்தவங்களுக்கு தேவதை....அழகிய அசுரன்களுக்கு தேவபானம்.

அரை மணி ஆச்சு புவனா..அந்த தேய் தேய்க்கிறா..என்ன தேய்ச்சாலும் காக்கா கறுப்பு உதிர்ந்துடுமா என்ன ? இந்த நியாயத்தை நீயே கேளுமா புவனா . நேத்து ராத்திரி படிக்காம உம்முனு உக்கார்ந்திருந்தா . என்னடி சாப்பிடறியான்னு கேட்டேன் .

ஏம்மா நீ சாப்பிடலை ?

அடிப்பாவி . இப்பதான் உன் கண்ணு முன்னாடி கொட்டிகிட்டேன் .

சனியனே . அதை கேக்கலை . நான் உன் வயித்துல இருந்தப்ப ஏண்டி குங்குமப்பூ சாப்பிடலைன்னு கேட்டா பாரு . என்னம்மா ஆச்சு ? யாராவது எதாவது அவ நிறத்தை கிண்டல் பண்ணாங்களா ?

பார்றா . ரெண்டு பேரும் கட்சி பிரசாரத்துக்கு போறாப்ல இருக்கு . கருப்பும் , சிவப்பும்... பெரிதாக சிரித்தார்கள் அந்தப் பையன்கள் .

எனக்கு அவர்கள் மேல் கோபம் வரவேயில்லை . இந்த சண்டாளி புவனா மீதுதான் வந்தது . சனியன் . என் கூட வராதடின்னு சொன்னா கேக்க மாட்டா . ஆனா நானும் அவளும் ஒன்னாவதுலேர்ந்து ஒன்னாத்தான் படிக்கிறோம் . எனக்கு ஒன்னுன்னா உசுரையே விட்ருவா தெரியுமா ?

பின்னால் யாரோ பெல் அடித்தார்கள் . யாரோ இல்லை .

அவன் தான்டி புவனா .

பேசாம வாடி .

சொன்னாலேயொழிய புவனாவின் முகத்தில் ஒரு மின்னல் வெட்டியது . ஏற்கனவே மினுமினுத்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டே , கடந்து போனவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் .

உனக்கு அவனை பிடிச்சிருக்காடி ?

சீ..சீ.. சும்மாத்தான் . இவன் மட்டுமா என்னை சைட் அடிக்கிறான் . பாலு , கணேசன் . அதுவும் கணேசன் விட்டா , கால்லயே விழுந்துடுவான் . இவன் பேர் தெரியுமாடி உனக்கு ?

எனக்கு அவன் பெயர் தெரியாது . ஆனால் அவனுக்கு நான் ஒருபெயர் வைத்திருக்கிறேன் . ராஜகுமாரன் . தேருக்கு பதில் சைக்கிள் . அதில் அவன் பின்னால் இல்லையில்லை முன்னால் உட்கார்ந்து போகிறேன் . ரெண்டு பக்கமும் வாய்க்கால் ததும்ப ஓடுகிறது . நடுவில் நாங்கள் .

ஒரு கவிதை சொல்லவா ?

சொல்லேன்டா ராஜகுமாரா ..

சொல்வேன் . ஆனா உன் பேர் எனக்கு தெரியாதே .

சொல்லட்டுமா ?

வேண்டாம் . நானே உனக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறேன் .

பெல்லடித்தது . கிளாசில் என் பெயரை அழைக்கிறார்கள் . வருகை பதிவேடுக்கு .

ராஜகுமாரி என்கிறான் என் ராஜகுமாரன் . குப்பென்று வியர்த்தது எனக்கு . பாவியா நான் .

என்னை இறக்கி விடுடா என்கிறேன்


ஏண்டி பெஞ்சு மேலயா நிக்கறே . இறக்கி விடுதற்கு என்கிறாள் புவனா . ஒட்டு மொத்த கிளாசும் சிரித்தது . எனக்கு அவமானமாக இல்லை . ஆசையாக இருந்தது . ஒரே முறை.. அந்த சாலை.. அவனுடன் சைக்கிளில் ... அதை புவனா பார்க்க வேண்டும் . நான் செத்து போகிறேன்டா பாவி .


எனக்கு கொஞ்சம் சுவாரசியம் கதையில் வந்திருந்தது . கொஞ்சம் யூகிக்கவும் முடிந்தது . மீண்டும் ஒரு சிகரெட் . இந்த கதையை எழுதியவள் பெயரை குறிப்பிட்டுக்கவில்லை . ஒரு வேளை ராஜகுமாரியைத் தவிர வேறு பெயரை அவள் விரும்பாதிருக்கலாம் . ஆனால் நிச்சயம் அவள் பெயர் ராஜகுமாரியாய் இருக்க முடியாது . விலாசம் இருக்கிறதா என்று பார்த்தேன் . இல்லை .

என்னடி இன்னிக்கு அவனை காணும் என்றாள் புவனா .

வராட்டி என்ன இப்போ ? உனக்குத்தான் அவனை பிடிக்கலை இல்ல ..

அதுக்கில்லடி . தினம் வருவானே அதான் . அங்க பாரு கணேசன் தவமிருக்கறதை . புவனாவின் சிரிப்பு கொஞ்சம் அகங்காரமாய் இருந்தது . சனியனே கணேசனை நீ வச்சுக்கடி . ராஜகுமாரனை எனக்கு கொடுத்துடுடி . பதிலுக்கு வேணும்னா என் உயிரை கூட எடுத்துக்கடி சண்டாளி . தோலை பாரு ..வெண் குஷ்டம் வந்தாப்ல .

கருப்புதாண்டி அழகு . காந்தல்தாண்டி ருசின்னு பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது . அதெல்லாம் உப்புமாவுக்குதாண்டி கிழவி.. காதலுக்கு இல்லடி

என்னடி நீயே பேசிக்கறே ?

உன் வேலையை பாருடி . உனக்கு என்ன பெரிய ரதின்னு நினைப்பா ? இனிமே நமக்குள்ள ஃப்ரெண்ட்ஷிப் இல்லடி . போய் முதல்ல இந்த தோலுக்கு வைத்தியம் பாருடி . ஏ தோ பெரிய வியாதி மாதிரி இருக்கு ..

கண்ணை மூடி விஷத்தை கொட்டிக் கொண்டே இருந்தேன் . புவனா கண்கள் கலங்கி , அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள் . நான் கண்களை மூடிக்கொண்டேன் . ராஜகுமாரன் வருகிறான் . ஏறிக்கோ என்கிறான் . இருடா என்கிறேன் . புவனாவின் தோளை தொட்டு உலுக்கினேன் . மிரள விழிக்கிறாள் . வெறித்துப் பார்க்கிறாள் . இடது கையால் அணைத்து , இடையை வளைத்து என்னை ஏற்றிக் கொள்கிறான் ராஜகுமாரன்.. என் ராஜகுமாரன் ...


எனக்கு ஒரு அழைப்பு . ஒரு சிகரெடை பற்ற வைத்து மாடிக்கு வந்தேன் . அந்த கதை இன்னும் முடியவில்லை . அதாவது நான் இன்னும் முடிக்கவில்லை . ஏனோ எனக்கு அந்த பெண்ணை இல்லை.. அந்த ராஜகுமாரியை பார்க வேண்டும் போல் இருந்தது .


நான் செய்தது தப்பான்னு தெரியாது . ஆனா சரின்னுதான் நினைக்கிறேன் . என்ன பணினேன்னு கேளுங்க . சொன்னா எப்படியும் கரிச்சு கொட்டுவீங்க . பரவாயில்லை சார் . அந்த பாரத்தை இறக்கி வைக்கத்தானே இதை எழுதினேன் .


புவனா என்னுடன் பேசுவதில்லை . தனியாத்தான் போறா. நான் செஞ்சதுதான் தப்புன்னு உணர முடியுது . ஆனா விட்டு கொடுக்க தயாரில்லை . ஆனா கதை இப்படியாகும்னு எதிர்பார்க்கவேயில்லை .


என் கல்யாணத்துக்கு புவனாவை அழைத்தேன் . ஆனால் அவள் வரவில்லை . ராஜகுமாரனை ஏறிட்டு பார்த்தேன் . என்னவோ ஏமாற்றம் அவனிடம் . மறைக்க முடியவில்லை அவனால் . நான் முடிவெடுத்து விட்டேன்.. என் பிரிய ராஜகுமாரா .. என்னால் முடியலைடா ...


நான் அவ்வளவு அழகாடா பாவி !

ஆமாம் நீதான் அழகு .. நீ என் தேவதை .. என் ராஜகுமாரி என்றான் அவன் . எனக்குள் நிகழ்ந்ததை சொல்ல தெரியவில்லை .

அப்போ நீ புவனாவுக்காக சுத்தி வரலையா ?

சே.. அவளும் அவ கலரும் ..திமிர் பிடிச்சவன்னு எழுதி ஒட்டியிருக்கு . ஆனா நீ ..எவ்வளவு அமைதி .. பார்த்துக் கிடே இருக்கணும் போல இருக்கும் எனக்கு தெரியுமா ? எத்தனை நாள் ஒளிஞ்சிருந்து உன் முகத்தை மட்டும் பார்த்திருக்கேன் தெரியுமா ? நீ எதாவது சொல்லச்சே .உன் கண்ணு அதுக்கு முன்னாடி பேசுமே அழகு.. அப்புறம் அந்த சின்ன , குட்டி வாய் ..எக்ளேர்ஸ் சாக்லெட் மாதிரி...வேட்கையுடன் அவன் நாக்கு நீள்கிறது . என் நெற்றியில் ஈரமாய் ... மெல்ல நாசியில் இறங்கி , உதடுகளுக்குள் நுழைந்து ...என் நாக்குடன் சேர்ந்து ..காளிங்கன் நர்த்தனமாய்


எனக்குள் ஒரு பனிக்குடம் உடைகிறது . என் நகங்கள் நீள்கின்றன . புவனாவின் தாமரை முகத்தில் ரத்த கோடுகளால் ஒரு ஓவியம் ....அழ ஆரம்பிக்கிறேன்


இது நடக்காதுடா பாவி .. வெட்டிப் போட்ருவாங்க உன்னை . உன்னை பலி கொடுக்கவா நான் ? இந்த காதலுக்கு அல்ப ஆயுசுதாண்டா ... ஆனா ஒரு நாள் நான் உன் கூட வாழ்வேன் நிச்சயமா...


காத்திருக்கிறேன்னு சொல்லி பிரிகிறான் என் ராஜகுமாரன்

ஆனால் நான் அவனுடன் ஒரு நாள் வாழ்ந்தேன் . என் கல்யாணத்தன்று . எனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையை நான் அவனாகத்தான் பார்த்தேன் . என்னால் அப்படிதான் பார்க்க முடிந்தது . அன்று இரவும்... வெறும் உடம்பில் என்ன இருக்கிறது . அது ஒரு சதைப்பிண்டம் . அவ்வளவுதானே . ஆனால் மனசு .. அது முழுதும் அவன் தானே ஊறியிருக்கிறான் .


இந்த கதையை எப்படி எடுத்து கொள்வதென்று எனக்கு தெரியவில்லை . ஆனால் அந்த ஊருக்கு போக வேண்டும். ரெண்டு பக்கமும் ததும்ப ஓடும் நீர் . நடுவில் அந்த பாதை . எங்காவது அவள் வாசம் இருக்கும்..இருக்க வேண்டும் .



13 comments:

எறும்பு said...

1st

எறும்பு said...

நல்லாதான் எழுதுறீங்க..

நல்லா நல்லா எழுதுறீங்க

vasu balaji said...

ம்ம். நடத்துங்க ராசா. அபாரம்.

Romeoboy said...

என்ன தான் சொல்லவரிங்க ??? பாதி புரியுது பாதி புரியல :(

பத்மா said...

அருமை ..கலங்கடித்துவிடீர்கள்

ரமேஷ் வைத்யா said...

arumai!

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு மணிஜி!

கலகலப்ரியா said...

(கதையில் சிக்கல் இருக்கிறதான்னு எனக்கும் தெரியல...)

அருமையான எழுத்து...

Unknown said...

எழுத்தெங்கும் வீசுகிறது புவனாவின் வாசம்.

செ.சரவணக்குமார் said...

கொல்றீங்க மணிஜீ..

நானும் போய் ஒரு சிகரெட் பிடிக்கவேண்டும். அப்படி ஒரு தாக்கம்.

பனித்துளி சங்கர் said...

நண்பரே மொத்தக் கதைக்கான வலி நீங்கள் இறுதியில் சொல்லி இருக்கும் சிறு விளக்கத்தில் கசிகிறது . அருமை . பகிர்வுக்கு நன்றி

butterfly Surya said...

கலக்கல்.

“அழகிய ராட்சசா” இதுதானா..? பெயர் மாற்றமா..?

ஈஸ்வரி said...

(அந்த ராஜகுமாரியை பார்க்க வேண்டும் போல் இருந்தது.)
அந்த ராஜகுமாரியை............எனக்கு தெரியும்.