Friday, July 16, 2010

ஒரு பின்னூட்டம்


ராகவன் கவிதைகளை பற்றி சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது . சாணித்தாளில் கொட்டிய மை போல் மனசில் வியாபித்து அறுத்துக்கொண்டேயிருக்கும் மாய எழுத்து அவருடையது .என் பழைய கவிதை ஒன்றுக்கு அவர் இட்ட பின்னூட்டத்தை தற்போதுதான் பார்க்க நேர்ந்தது . அதை நீங்களும் படிக்க வேண்டியே இந்த பதிவு . ராகவன் வார்த்தைகளை தேடுகிறேன் .

அந்த கவிதை மீண்டும்.....
ஒட்டு போடப்பட்டிருக்கிறது
இளவரசியின் பட்டுப்பாவாடை

இடையில் துருத்திக் கொண்டிருக்கும்
அட்டைக்கத்தின் உட்புறம் குழந்தை வரம்
கேட்டு யாரோ எழுதிப்போட்ட திருவுளசீட்டு

பட்டத்து மகிஷியின் பதவிசு
பார்க்கிறவர்களுக்கு பொறாமை
இருபது முழம் சேலையும் அழுக்கு பஞ்சு கச்சையும்
கால்கிலோ கவரிங் தோடும்
அரை மணி நேரமாக அவஸ்தை அவளுக்கு
மாசத்தொல்லை மயிரு நாறுது

காது வரை சிரிக்கிறான் விதூஷூகன்
வற்றிய வயிறுக்கு ஏழையின் சிரிப்பு
அறிமுகம் இருக்குமா? உள்ளுக்குள் அறுக்கிறது
ஆத்தாவின் இருமல்

நேற்றிரவின் காரித்துப்பல்களை
அரிதாரம் பூசி மறைத்திருகிறான் ராஜாதிராஜ...
ஆணவமாய் அரியணையில்
துப்பியவன் முன் வரிசையில்

கனவு காணத் தெரியாத புரவி பாவம்
கொள்ளை மறந்தே விட்டது
காலாட்படையினருக்கும் யுத்த மறக்கடிப்பு
அரசு வைத்தியம் இலவசம்
எஞ்சியிருக்கும் துருவேறிய ஆயுதங்களின்
எடைக்கு எடை காலி பாட்டில்கள் டாஸ்மாக்கில்

முடை நாற்ற திரைசீலைகள்
கரப்பான் முட்டைகளும் ,பல்லி மூத்திரங்களும்
சக பரிவாரங்களாய் வீற்றிருக்கும் அவை
திரை விலகுகிறது
ஆர்ப்பரிக்கும் விருந்தினர்கள்
கந்தலும் கிழிசலும் காஞ்சிபுரமாகின்றன
குடிகள் கோமானாகிறார்கள்
ஒருவன் மன்னனாகிறான்
இன்னொருத்தி அல்லியாகிறாள்
அவள் புருஷனுக்கு தர்பாரில்
கால் நகத்தில் அழுக்கெடுக்கும் பணிக்கு உத்தரவு

பழம்பெருமையை பட்டாக்கி உடுத்தி வருகிறது
பட்டத்து யானை
நல்ல வேளை பிள்ளையார்
கொழுக்கட்டையை முன்னரே
சாப்பிட்டு விட்டது மூஞ்சூரு
எட்டுத்திக்கும் ஏவப்பட்டிருக்கிறார்கள் பாகன்கள்
சோளப்பொறி சேகரித்து வர உத்தரவு

சூம்பிய மார்பும் ,செத்த இடையுமாக அரசு நர்த்தகி
அரை இஞ்சுக்கு அரிதாரம் பூசி
அஞ்சனம் தீட்டப்பட்டிருந்த விழிகளில்
ஒன்றில் பூ
இளித்த கால் கொலுசுகளின்
களி நடனம்
மேடை கோணல் என்ற பதம் இன்னும் புழக்கத்தில்

சகுனியும், விதுரனும் சரிபாதி கலந்த
சாணக்கியன்
எச்சில் ஊறுகாய்க்கு சாராயக்கடையில்
சண்டையிட்டதில் காயம்
தண்டத்தால் ஒத்தடம்

காசென்றால் கதவை அடைக்கும் கூட்டம்
ஓசுக்கு ஊர் திரண்டு வந்திருக்கிறது
கூத்து முடியட்டும்
கூட்டி பார்க்கலாம்
வருவதை பிரித்துக் கொள்வோம் இல்லை
பிரித்துக் கொள்ள நம்மிடம் எவ்வளவோ....
எதற்கும் துண்டையும்
நனைத்து வையுங்கள்
யாரங்கே?


ராகவனின் சண்டமாருத கவிதை(யான பின்னூட்டம்)

மணிஜி! உங்கள் கவிதை படித்துவிட்டு எழுத ஆரம்பித்து முடிக்க முடியாமல் போய் விட்டது, நேரமில்லாத காரணத்தால் முடிக்க முடியவில்லை...

பகட்டுகள் ஆரம்பமாகும், பல வண்ண வெளிச்ச பந்தங்களில், முகம் மினுக்கும் இளவரசியின் பருக்கள் அப்பிய அரிதாரத்தின் அடியில் பதுங்கும், வளை எலிகளென. சேர்த்து வைத்துக் கொள்ள முடியாத கனவுகளின் பிரதியில் முகவடிவு தேய்ந்து வளரும், வளர்ந்து தேயும் நிலவென. நிரந்தரமற்ற எதுவும் சொற்ப நேர சந்தோசத்தின் உச்சமென, வாள்முனையின் கூரென ரத்தம் ஏங்கும், நிஜம் தங்கி போகும் சத்திரத்தில் சாசுவத சொகுசுக்காய், சுவர் முழுக்க இரத்தக்கீறல்கள் உராய்ந்து சென்றவனின் சுகம் விட்டு செல்லும் அமில குமிழ்கள் உடலெங்கும் பூத்து கிடக்கும். கண்கள் செருகி கிடந்தவனின் சுயமைதுன கிறக்கங்கள், பொழுது விடிந்ததும் பொசுக்கென்று வடியும், சுகம் ஒரு சருகின் அடியில் காய்ந்த நரம்புகளை போல சுண்டி போன ரத்தம் இழந்து கை பிடிக்க நொறுங்கும். கணக்க சுமந்த தொப்பி இறகுகள் அழுத்தி கொல்லும், பளுக்குண்டுகள் இணைத்த அவயங்களின் அசைவு அவஸ்தையாகும்.

அரவம் தீண்டிய துளைகள், உறிஞ்சி குடித்த உடைந்த மதுக்கோப்பைகள், பிடுங்கி நட்ட மயிர்க்கால்கள், எச்சிலில் மிதக்கும் பூத உடல், மீண்டு காற்று நிரப்பிய பைகளென ஊதி பெருக்கும். ஆடைகள், அணிகலன்கள், அப்பிய அரிதாரம் கொஞ்சம் புன்னகை வெந்தனழ் சுழலில் பற்றி எரியும் கச்சையும், விடாய் துணியும். எல்லாம் எரித்து சாம்பலில் புலரும் சவக்காட்டு ஞாயிறு. இச்சையில் குளிர்ந்து இரப்பையில் அடங்கும், பிசின் வியர்வை, உயிர் துளைக்கும் வண்டாய் நெடி, இறைக்கும் மூச்சு, சொற்க்கடி தடங்கள் எல்லாம் ஆளை புதைத்து தோலை சேர்க்கும்.

கொலை பழகும் கலைகள் மறந்த பொழுதுகளின் ஓரத்தில் குத்தவைத்திருக்கும் துருப்பிடித்த வேல்கம்புகளும், குத்தீட்டிகளும் வாசல் வந்து குருதி துளியும் புள்ளிகளின் மேல் வரைந்த கோலங்களின் சிக்கல்களில் நெளியும் சர்ப்பங்கள் பிளந்த நாக்கின் சாபங்களில் கருகித் தொலைகிறது யவ்வன சொப்பனங்கள்.

அருமையான கவிதை...

அன்புடன்
ராகவன்

12 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஜெமோ, சாரு ரேஞ்செல்லாம் தாண்டிடுவீங்க போல :))

மணிஜீ...... said...

ஸ்நேப் ஷாட் எடுத்து வச்சுக்கங்க..தூக்கினாலும் தூக்கிடுவேன். (நம்ம வாங்கற் அஞ்சு ,பத்துக்கு இந்த பிழைப்பு தேவையா?

மணிஜீ...... said...

ஏம்பா அந்த பச்சை மண்ணை இந்த பாடு படுத்தறீங்க?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஜெமோ, சாரு ரேஞ்செல்லாம் தாண்டிடுவீங்க போல :)) ///

Repeateyy

தராசு said...

ஓடுங்க, எல்லாரும் ஓடுங்க, அது நம்மள நோக்கி வந்துட்டே இருக்கு

மணிஜீ...... said...

பதிவின் உள்நோக்கத்தை சரியாக கணிப்பவர்களுக்கு ஒரு பரிசு உண்டு .

Vidhoosh(விதூஷ்) said...

//பதிவின் உள்நோக்கத்தை சரியாக கணிப்பவர்களுக்கு ஒரு பரிசு உண்டு //

இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை.. ஹுக்கும்...

இப்டீல்லாம் செஞ்சு பதிவ முழுசா படிக்க வைக்கணுமா?

ஷங்கர் ஏன் பின்னூட்ட புயலா மாறிட்டார்... பதிவு எழுதறதே இல்லை?

பா.ராஜாராம் said...

அருமையான கவிதை. அற்புதமான பின்னூட்டம்.

மீள் பதிவை மார்க்கட்டிங் பண்ணுவதில் உம்மை அடிச்சுக்க முடியாது ஓய்! :-))

வானம்பாடிகள் said...

பரிசு பா.ரா.க்குதானே:))

பத்மா said...

எழுத நேரம் இல்ல ..என்னவோ போட்டு ஒப்பேத்தனும் ..இல்ல யாராவது ஸ்பெஷலா மீள் பதிவு கேட்டாங்களா? கொஞ்சம் பா ரா சார் கிட்ட சொல்லி வைக்கணும்

jokes apart


ராகவனின் பின்னூட்ட அழகிற்கு மறுப்பே இல்லை..
அதை வாங்கி தந்த கவிதையும் நல்லாத்தான் இருக்குங்க ஐயா
ரெண்டாவது முறையா சொல்றேன் ..

செ.சரவணக்குமார் said...

ராகவனின் பின்னூட்டம் அழகு.

//பதிவின் உள்நோக்கத்தை சரியாக கணிப்பவர்களுக்கு ஒரு பரிசு உண்டு .//

என்ன பரிசுண்ணே.. அப்சலூட் வோட்காவா?

வவ்வால் said...

Ellarum "vaasagar" kaditham pottanganu film kaattum pothu ,nan mattum "sombaiyanu" oru "vaasaga pinnutta " bitta poduringa, ithane pathivin nokkam! :)
(inime evanavathu "vaasagar kaditham pottupangala)