Thursday, July 8, 2010

தலை கோதுதல்


என்னன்னு தெரியலை . ரெண்டு நாளா அஞ்சலை நினைப்பாவே இருக்கு . மவராசி என்னைய ஒத்தையில விட்டுட்டு போய் சேர்ந்துட்டா. ஆச்சு . ஒரு நாலு வருஷம் . அவ கருமாதியன்னிக்கு தின்னேனே கறி சோறு . அதுக்கப்புறம் கண்ல கூட பாக்கல . விரலை கடிச்சுகிட்டு குடிங்க கஞ்சியைன்னுட்டாங்க மருமவளுக. உடம்பு முடியலை . ஆனா நாக்கு இந்த கேக்கு கேக்குது . கறி தின்னாம உசுர் போயிட்டா கட்டை வேகாதோ .


முதல்ல இளையவன் கால் மாட்ல வந்து உக்காந்தான் . பின்னாடியே மூத்தவன் தலைமாட்டுல . மருமவ ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையா நிக்கறாங்க. மூஞ்சியில கரிசனம் தெரியுது . இன்னிக்கு கறி சோத்துக்கு வேளை வந்திருச்சோ ?
நல்ல குறும்பாட்டு கறியா பிடிச்சிட்டு வாடா மக்கா . நம்ம தோட்டத்து மாங்கா போட்டு , எலும்புல எண்ணெய் ஊற குழம்பு வைங்க அய்யனுக்கு . எனக்கு வாய் ஊறல் கொஞ்சம் அடங்கினாப்ல இருந்துச்சு . ஏனோ எங்கப்பன் நினைப்பு ஓடுது . அவனுக்கு இந்த மாதிரிதான் கறி சோறாக்கினோம் . அன்னிக்கு அவன் கண்ணுல தெரிஞ்ச ஒரு சித்தம் . இன்னிக்கு என் கண்ணுல தெரியறாப்ல ஒரு ஒரு பிரமை .


குழம்பு கொதிக்கிற வாசம் வருது . சின்ன வயசுல கறி வாசம் , எலும்பு வாசம்னு பிரிச்சு மேய்வேன் . ஒத்தை ஆளு ஒன்றரை கிலோ கறியை அஞ்சு கவளத்துல அமுக்குவேன் . இன்னிக்கு ஏன் இப்படி ஆகுதுன்னு தெரியலை .
ரெண்டாமவதான் தட்டுல சோத்தை போட்டு குழம்பை ஊத்தி , மலையா எலும்பை குமிச்சு எடுத்தாறா . பின்னாடியே மவனும் . மூத்தவனை காணும் .அவன் எங்கடான்னு கேக்கேன் . தோட்டத்துக்கு போயிருக்கானாம் . அவன் பொண்சாதி சாடையில சொல்றா .


நல்லி எலும்பை கடிக்கும்போது அஞ்சலை நினைப்பு திருப்பி வருது . கூடவே எங்கப்பன் நினைப்பும் . கறி என்னவோ இளசாத்தான் இருக்கு . எதுவோ என்னைய மெல்ல வுடாம செய்யுது . நல்லா கேட்டு போடுறி கெழவனுக்கு . பெரியவ சின்னவளுக்கு சொல்லுறா . கொஞ்சம் கேலியா பட்டுச்சு எனக்கு . மூத்தவன் உள்ளே வந்தான் . கையில கொத்து ,கொத்தா ..அம்மாடி . மறுபடியும் எங்கப்பன் வரான் . மவனேன்னு தலையில கையை வைக்கறான் . இன்னும் கொஞ்சம் கறியை வைங்கடி அப்பனுக்கு . அய்யா நல்லா தின்னு . என்னா ? மவனே வேண்டாமுடா . வார்த்தை வரலை. தொண்டை முட்டுச்சு . இனி பிரயோசனமில்லை. முடிவு பண்ணிட்டானுங்க. அதோ மூத்தவ தூக்கை எடுத்து கிட்டு வராளே . சின்னவனும் வந்துட்டான். நல்லா சூடு பறக்க தேய்க்கணும்டா என்கிறான் பெரியவன் . ரெண்டு பேத்துக்கு ஆகாம இருந்துச்சு . காரியத்துக்காக ஒன்னு , மன்னா இருக்கானுங்க போல .


சின்னவன் நல்லெண்ணெயை தலையில கொட்டி தேய்க்க ஆரம்பிச்சான் . எனக்கு பொறி கலங்குச்சு . பெரியவன் இளநியை சீவ ஆரம்பிக்கிறான் .
ரெண்டு மருமவளும் கிணத்தடியில நிக்கறாளுக . ஒரு படி எண்ணெய் என் தலையில . உடம்பு லேசா நடுங்கறாப்ல இருக்கு . மறுபடியும் எங்கப்பன் மூஞ்சி தெரியுது . கூடவே அஞ்சலை மூஞ்சியும் . வாரி இறைக்கறாளுவ . ஒரு 50 தவலை தண்ணி. ஒரு அரை மணி . கை அலுப்புக்கு கொஞ்சம் நிப்பாட்டறாளுவ . பெரிய சொம்புல இளநியை எடுத்துட்டு வரான் சின்னவன் .


டேய் வேண்டாமுடா . வாயில வச்சு குடிங்கப்புங்கிறான் . எனக்கு தெரிஞ்சு போச்சு . அன்னிக்கு எங்கப்பனும் இப்படித்தான் இருந்தான் . அஞ்சலையும் . இன்னும் ஒத்தை காது கிழவி , நொண்டி சித்தப்பு எல்லாரும் .கீத்து வந்து இறங்கியது . பந்தல் போட ஆரம்பித்தார்கள் . ஒப்பாரி சத்தம் கேட்க தொடங்கியது . ரெண்டு மருமவளும்தான் மூக்கை சிந்திக் கொண்டே இருக்கிறார்கள் . வந்திருந்த ஊர் சனத்துக்கு தெரிந்தே இருந்தது . என்ன நடந்திருக்கும் என்று . ஆனாலும் ஆறுதல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் . பிள்ளைகளுக்கு . குப்பை மெட்டில் கொட்டப்பட்டிருந்த எலும்புகளை நாய்க்கூட்டம் ஒன்று சீறலோடு சுவைத்துக் கொண்டிருக்கின்றன

26 comments:

மணிஜி said...

முதியோர்களை இந்த முறையில் மேலோகம் அனுப்புகிறார்களாம் . தென் மாவட்டங்களில் சில கிராமங்களில் . அதற்கு தலைகோதுதல் என்று பெயராம்.

Cable சங்கர் said...

குளிர்ந்து போயிற்று..

விஸ்வாமித்திரன் said...

மணிஜி
இன்னதென சொல்ல முடியா சோகம் நெஞ்சில் படர்ந்தது. ( நமக்கும் வயசானது தான் காரணமோ?)

vasu balaji said...

இப்போதான் ஒரு வேளை சோறு போடலைன்னு போய் நின்னா போலீசு நொங்கெடுக்கறாங்களே.ஆனாலும், ரொம்ப மோசம் மணிஜீ. அந்தக் கிழவனின் தவிப்பும் துடிப்பும் எழுத்து வழியாக உள்ளே போய் ஜன்னி காண வைக்குது:(

ஆரூரன் விசுவநாதன் said...

நெஞ்சு கணக்கிறது....ம்ம்ம் என்னத்தச் சொல்லோ......

KarthigaVasudevan said...

தலைக்கு ஊத்தறதுனு கூட சொல்வாங்க ஊர்பக்கம் ;

நல்லெண்ணெய் தேய்ச்சு தலைக்கு ஊத்தினா இன்னைக்கு நாளைக்குன்னு இழுத்துட்டு இருக்கற உயிர் ரெண்டொரு நாள்ல போயிடுமாம்.படிக்கும் போது துக்கமா இருந்தாலும் இதெல்லாம் இன்னைக்கும் கிராமங்களில் சகஜமான விசயமா தான் பேசப்படுது, நடைமுறைப் படுத்தப் பட்டுக் கொண்டும் தான் இருக்கிறது...

ஜெயா டி.வி காலை மலர் மிஸ் ஆயிடுச்சுங்க ,மறு ஒளிபரப்பு ஏதும் பண்ணுவாங்களா? உங்க ப்ரோக்ராம் பார்க்க நினைச்சேன்,விட்டுப் போச்சு .

சு.சிவக்குமார். said...

மணிஜீ..இன்று உங்களுடைய ஜெயா டி.வி. காலை மலர் பேட்டியைப் பார்த்தேன். நன்றாகயிருந்தது.

தொடர்ந்து பேட்டி முழுவதும் உங்களுடைய குரல் பேஸ்(bass)சப்த்திலேயே இருந்தது. ஆனால் கேள்வி கேட்பவர்களின் குரல் அவ்வப்போது ஸ்டீரியோ சப்தத்தில் இருந்தது.

நீஙகள் பொதுவாகவே அப்படித்தானா..ஏனெனில் ’பேஸ்’ சப்தம் பொதுவாக அமைதியான, நிதானமான,உள்ளுற மகிழ்ச்சியிருந்தாலும் அதை வெளியே
காட்டிக்கொள்ளாதவர்களின் குரலாக இருக்கும்.நீங்கள் எப்படி.

உங்களுடைய குரல் மற்றும் பேச்சுத்தோரனை என்னை மிகவும் கவர்ந்தது.

மஞ்சள் சட்டை பொருத்தமாக இருந்தது.

ஒருசில தோரணைகளில் பேச்சில் யுவன் சந்திரசேகரை காணுவது போலவேயிருந்தது என்க்கு.

உங்களுடைய பதில்கள் வெளிப்பட்டவிதம் பேட்டியை மிகுந்த சுவராசியத்திற்குள்ளாக்கியது.

Paleo God said...

நரைப்பதைப் பார்த்தாலே நொரைக்குது தல!!

Rajan said...

தும் ததா!

பெசொவி said...

//மஞ்சள் சட்டை பொருத்தமாக இருந்தது. //

அது எனக்கு பச்சை சட்டை போலத் தான் இருந்தது. சொல்லுங்க, மணிஜீ பச்சை சட்டையா, மஞ்சளா?

பெசொவி said...

இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாதது தான். உங்கள் பெட்டி ஜெயா டிவியில் பார்த்தேன். நன்கு ரசிக்கும்படி இருந்தது.

"நீங்களும் ஏன் மும்பை, பெங்களுர் இங்கேயிருந்து மாடல் கொண்டு வர்றீங்க, தமிழ் நாட்டு மாடலை நடிக்க வைக்க மாட்டீங்களா?" - இது கேள்வி மாதிரி தெரியல, சான்ஸ் கேட்ட மாதிரி தெரிஞ்சுது.

"மெட்ராஸ் பொண்ணுங்களே தமிழ் சுமாராதான் பேசறாங்க"ன்னு சொன்னீங்களே, மெட்ராஸ் பொண்ணுங்க தமிழ் பேசறதே ஆச்சரியம்தான?

School of Energy Sciences, MKU said...

இதயம் வலிக்கிறது. இந்த கொடுமைகளையெல்லாம் நானும் விவரமறியா வயதில் வேடிக்கை பார்த்திருக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

போட்டுச் சாத்திட்டீங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

நானும் காலை மலரை மிஸ் பண்ணிட்டேன்..!

கோச்சுக்காம யூ டியூப்பை பதிவுல ஏத்துங்களேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சு.சிவக்குமார். said...

மணிஜீ இன்று உங்களுடைய ஜெயா டி.வி. காலை மலர் பேட்டியைப் பார்த்தேன். நன்றாகயிருந்தது.

தொடர்ந்து பேட்டி முழுவதும் உங்களுடைய குரல் பேஸ்(bass)சப்த்திலேயே இருந்தது. ஆனால் கேள்வி கேட்பவர்களின் குரல் அவ்வப்போது ஸ்டீரியோ சப்தத்தில் இருந்தது.

நீஙகள் பொதுவாகவே அப்படித்தானா? ஏனெனில் ’பேஸ்’ சப்தம் பொதுவாக அமைதியான, நிதானமான, உள்ளுற மகிழ்ச்சியிருந்தாலும் அதை வெளியே
காட்டிக் கொள்ளாதவர்களின் குரலாக இருக்கும். நீங்கள் எப்படி]]]

அண்ணன் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களே..!

அண்ணே, டாஸ்மாக்குக்கு மட்டும் போயிட்டு அதுக்கப்பால ஜெயா டிவிக்குள்ள நுழைஞ்சிருந்தா தெரியும் சேதி..!

உங்க வீடு டிவி டமார் ஆயிருக்கும்..!

CS. Mohan Kumar said...

பேட்டி அருமை. பார்த்து மகிழ்ந்தேன். உங்கள் சில பதிவை வாசிக்கும் போது இருக்கும் புன்னகை பேட்டி பார்க்கும் போதும் இருந்தது.

Jana said...

தங்கள் நிகழ்ச்சி நன்றாக இருந்தது. நேரம் ஒதுக்கிப்பார்த்தேன். தாங்கள் சொன்னதுபோல மரீனாவில் மட்டும் அல்ல அதன் பின்னரும் பல தடவைகள் சந்தித்திருக்கின்றோமே. தாங்கள் வாகனம் ஓட உயிரை கையில் பிடித்துக்கொண்டு அந்த வாகனத்தில்க்கூட பயணம் செயதிருக்கின்றேன்...

பா.ராஜாராம் said...

உண்மையா மணிஜி? அரண்டு போயிட்டேன். :-( பக்கா கிராமத்தான் நான். இதை இப்பவே கேள்விப் படுகிறேன்...(உலகம் தெரியாமல் வளர்த்துப்டாங்களோ?) கொடுமைஜி!

அப்படியே, கிராமத்து ஸ்லாங் பாஸ்.

பேட்டியை தளத்தில் போடவும். பச்சை/மஞ்சப் பட்டுல கள்ளழகரை பார்த்து கன்னத்துல போட்டுக் கொள்ளலாம்.. :-)

Vidhoosh said...

குலை நடுங்குதுங்க..

தஞ்சையில் கூட நடந்திருக்குங்க.. கொஞ்சம் வேற வெர்ஷனில்.. மறந்தே போயிருந்தேன்.. :(

மாதவராஜ் said...

நெஞ்சையறுக்கும் இந்தக் காட்சிகள், இன்னும் பல கிராமங்களில் இருக்கத்தான் செய்கின்றன. தேர்ந்த மொழியில் சொல்லியிருக்கிறீர்கள் மணிஜீ! எழுத்தாளர் லட்சுமணப்பெருமாளின் சிறுகதை ஒன்றில் இந்த விஷயம் மிகுந்த கனத்தோடு சொல்லப்பட்டிருக்கும்.

விக்னேஷ்வரி said...

:( ரொம்பப் பயமா இருக்கு மனுஷங்களைப் பார்த்து.

கலகலப்ரியா said...

அப்புறம் வந்து படிச்சுக்கறேன்..

Kumky said...

முதன் முதலாக கேள்விப்படுகிறேன்...

அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அதற்கான நியாய தர்மங்களும் இருக்குமோ என்பதாக தோன்றுகிறது..வறிய சூழலில் தமது பிழைப்பே பெரிதென்று இருப்பவர்களுக்கு இழுத்துக்கொண்டிருக்கும் காரியங்களை முடிக்க எவ்வளவு நாசூக்கான வழி முறைகளை கண்டு வைத்திருக்கிறார்கள்...கருணைக்கொலை போல..

வழக்கம்போலவே எழுத்து நடை...
அருமை.

நானும் ஜெயா டி வி ப்ரொக்ராம் பார்க்க தவறிவிட்டேன்..
யூ ட்யூப் லிங்க்கில் போட்டால்.,

பா.ரா போல கன்னத்தில் போட வசதியாக இருக்கும்..
:))

செ.சரவணக்குமார் said...

நேரில் கண்ட நிகழ்வைப் போல உயிரோட்டமாக அந்தக் கொடுமையை எழுத்தில் வடித்துள்ளீர்கள். படித்ததும் மனம் கனத்துப்போனது.

நான்கைந்து நாட்கள் வரை உயிரின் கடைசி மூச்சைப் பிடித்து துயரப்பட்டுக் கொண்டிருக்கும் தருவாயில் உள்ள பெரியவர்களை குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி கொடுமைப்படுத்திக் கொல்லும் கலாச்சாரம் இன்னும் பல கிராமங்களில் இருக்கத்தான் செய்கிறது.

இந்தப் பதிவிற்கு வந்தனம் மணிஜீ.

வாழைப்பூ வாசனையைப் போலவே இந்த சிறுகைதையையும் குறும்படமாக்கலாம் அண்ணா.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஜெயா டிவி நிகழ்ச்சி நானும் பார்த்தேன். சிவக்குமார் அவர்கள் நான் சொல்ல வந்ததையே சொல்லி இருக்கிறார். உங்கள் குரல் எனக்கு பிடித்து இருந்தது. சொல்ல வந்ததை தெளிவாக, அழுத்தமாக சொன்னீர்கள். அதற்கு குரல் பக்க பலமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் காஷுவல் ஆக இருந்திருக்கலாம். அவர்கள் இருவர் இருந்த பக்கம் இருந்து பார்வை நகரவில்லை. இடையே முடிக்கும் நேரங்களில் ஒரு நேர்பார்வை பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்னு எனக்கு தோணியது.
மிகச் சிறப்பான பல விஷயங்களை உள்ளடக்கிய பேட்டி, வாழ்த்துக்கள்.

Unknown said...

நெஜமாவே உலுக்கிடுச்சுங்கண்ணோவ்.