Saturday, June 26, 2010

உலக்ஸின் முதல் காதல் கதைமாப்ளை .. அவ என்னை லவ் பண்றாடா .. என்றான் உலக்ஸ்

யாருடா ? என்றேன் .

இன்னும் பேர் தெரியலை . அந்த ஊதா கலர் ஜாக்கெட் .

அன்றுதான் பள்ளி திறந்திருந்தது . முதல் முதலாக அந்த பெண்ணும் அன்றுதான் வந்திருந்தாள் . அதற்குள் எப்படி ? கண்டவுடன் காதலா ?

மாப்ளை .. நான் அவளை லவ் பண்றேன்னு சொன்னாலும் ஒரு அர்த்தம் இருக்கு . அதெப்படி பார்த்தவுடனே அவ உன்னையன்னு ? உளராதே என்றேன் .

இல்லைடா .. இதுவரைக்கும் என்னை பத்து வாட்டிக்கு மேல் பார்த்துட்டா. சிரிக்க வேற செஞ்சா . இதுக்கு வேற என்ன அர்த்தம் ? உலக்ஸ் தேன் குடித்த நரி போல் இருந்தான் . ஸ்டெப் கட்டிங் கிராப் . 40 இன்ச் பெல் பாட்டம் பேண்ட் . பொருத்தமில்லாமல் ஒரு கலர் சட்டையை இன் பண்ணியிருந்தான் . அவன் சொன்ன அந்தப் பெண் . மாநிறம் . அழகாகவே இருந்தாள் என்று தோன்றியது . சற்று நீளமான கைகள் . கூந்தலும் அப்படியே . இன்னும் பெயர் தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும் . உலக்ஸ் சொன்னது உண்மையாக இருந்தால் ? எனக்கு எங்கோ எரிவது மாதிரி இருந்தது . சக தோழர்களை பார்த்தேன் . இதுவரை கோ-எட்டில் படித்திராததால் கொஞ்சம் நெளிந்து கொண்டும் , நொடிக்கொரு முறை தங்கள் தோற்றத்தை பற்றிய கவலையுடனும் காணப்பட்டார்கள் . கொஞ்சம் நல்ல கலராய் இருந்த ரவியை கொஞ்சம் பொறாமை கலந்த பயத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் . ரவி ! நல்ல சுருள் முடி . நல்ல நிறம் . வகுப்பில் இருக்கும் அத்தனை ஃபிகர்களும் தனக்குத்தான் என்று அதீத நம்பிக்கை அவனிடம் தெரிந்தது .


வரிசையாக பெயர்களை கேட்க ஆரம்பித்தார்கள் . அவள் பெயர் என்னவென்று தெரிந்து கொள்ள உலக்சை விட நான் ஆர்வமாக இருந்தேன் . அமுதா, ஈஸ்வரி, ரகமதுன்னிசாபேகம் , திலகவதி, கீதா , சொர்ணலட்சுமி ... அவள் முறை வந்தது . உலக்ஸ் என் காதில் ஒரு பெயரை சொல்லி , இந்த பெயர்தான் அவளுக்கு பொருத்தமாக இருக்கும் . இல்லையென்றால் நான் கல்யாணத்துக்கு பிறகு மாற்றி விடுவேன் என்றான் . மச்சான் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா என்றேன் . பரவாயில்லை . இப்ப சொன்ன முறையை மறந்துடாதே என்றான் . எனக்கு பகிரென்றது .

கீதப்ரியா சார் என்றது அந்த குயில் . மயிலும் , குயிலும் கலந்த கலவை. ஒட்டு மொத்த வகுப்பும் அவளையே மொய்த்தார்கள் . உலக்ஸ் சொன்ன பெயரில் பாதி உண்மை . அவன் ப்ரியா என்று சொல்லியிருந்தான் . தன் காதல் பாதி நிறைவேறிய பெருமை அவனுக்கு . பொதுவாக அழகாக இருக்கும் பெண்கள் ப்ரியா என்ற பெயருடன் இருப்பர்கள் என்று பிற்பாடு சொன்னான் . உலக்சின் முறை வந்தது . ஆனால் அவன் பெயர் கொஞ்சம் பட்டிக்காட்டு பெயராக இருப்பதால்(அவன் நினைப்பு அப்படி ) சொல்ல தயங்கினான் . தன் பெயருக்காக ப்ரியா தனை நிராகரித்து விடுவாளோ என்று கொஞ்சம் பயம் அவனிடம் தெரிந்தது . வாத்தியார் கிட்ட போய் , சார் உலகநாதன் என்றான் . வாத்தியார் சத்தமாக ஓ...உலகநாதனா ? நல்ல பேர்தானே . இதை அங்கிருந்தே சொல்ல வேண்டியதுதானே என்றார் . மீண்டும் ப்ரியா அவனை பார்த்து சிரித்தாள்.

மாப்ளை பேரை மாற்றி விட வேண்டியதுதான் என்றான்

ஏண்டா ? ப்ரியா நல்ல பெயர்தானே என்றேன் .

அவ பேரை இல்ல .. என் பேரை . அவன் அப்பாவிற்கும் கொஞ்சம் திட்டு விழுந்தது . எனக்கு சிரிப்பு வந்தது .

மறு நாளிலிருந்து உலக்சின் தோற்றம் மாறிப் போனது . கர்சீப்பில் பவுடர் . அடிக்கடி தலைசீவல் . ஸ்டுடண்ட் சுபாரியை ஸ்டைலாக மெல்லுதல் . ஆனால் ஒன்று மட்டும் வரவேயில்லை . அது படிப்பு. மாப்ளை காதலுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம் ? எங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமில்ல ? என்றான்

வழக்கம் போல் ப்ரியா அவனை பார்த்துக்கொண்டிருந்தாள் . ஆனால் ஒரு வார்த்தை கூட பேசினதேயில்லை. முதல்ல பார்வைகள் பேசும் . பின் வார்த்தைகள் என்றான் உலக்ஸ் . குடும்ப பத்திரிக்கையான ராணியின் தீவிர வாசகன் அவன் .

உலக்ஸ் இருக்கைக்கு பின்னால் இன்னொரு கிளாஸ் ரூம் இருந்தது . + 2 முதல் பிரிவின் , இரண்டாம் ஆண்டு வகுப்பு அது . ஒரு முறை உலக்ஸ் இல்லை . ப்ரியா திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள் . எனக்கு கூட , உலக்ஸை தான் தேடுகிறாளோ என்று தோன்றியது . அவன் இன்று வரமாட்டான் என்று ஜாடை காட்டினேன் . ஆனால் அவள் அதை கண்டு கொள்ளாமல் திரும்பி பார்த்தபடியே இருந்தாள் . ஒரு முறை சிரிக்கவும் செய்தாள் . நானும் அவள் பார்த்த திசையில் திரும்பி பார்த்தேன் . பின் கிளாஸ் ரூமிலிருந்து சுந்தர் ஏதோ ஜாடை காட்டினான் .
இவள் மீண்டும் சிரித்தாள் .

உலக்ஸ் நான் சொன்னதை நம்பவில்லை . எனக்கு வயித்தெரிச்சல் என்றான் . ஆனால் இருவரையும் வடவாறு ஆற்றங்கரையில் வைத்து பார்த்து விட்டோம் . அதற்கு பிறகு இரண்டு நாள் உலக்ஸை காணவில்லை. கிராமத்துக்கு போயிருப்பதாக வீட்டில் சொன்னார்கள் .

அன்று உலக்ஸை பார்த்தபோது , மிகவும் உற்சாகமாக இருந்தான் . என்னடா மாப்ளை ..சோகம் எல்லாம் போயிடுச்சா என்றேன்.

யாருக்கு சோகம் ? ப்ரியா எனக்குத்தான் . எதுக்கு ஊருக்கு போனேன்னு நினைக்கற ? ஒரு கறுப்பு கயிறை காட்டினான் . இந்த கயிறை மாட்டும் அவ பையில போட்டுட்டா போதும் . அவ மனசு மாறிடுவா என்றான் .


ஒன்றும் நடக்க வில்லை. கயிறை பையில் போட்டும் . வழக்கம் போல் சாயந்திரம் அரண்மனையில் திருட்டு தம் அடிக்கும் போது உலக்ஸ் சொன்னான் .

மாப்ளை .. நம்ம சக்தி ஸ்டோர்ஸ் வீட்டு பொண்ணு தெரியுமில்ல .

ஆமாம் .. பாஸ்கரோட தங்கச்சி .

அவளேதான் . ப்ரியாவோட அழகுடா அவ . இன்னிக்கு காமாட்சியம்மன் கோயில்ல வச்சு பார்த்தேன் . என்னைய லவ் பண்றான்னு நினைக்கிறேன் .

எப்படிறா சொல்றெ என்றேன்


சும்மா அடிச்சு பார்த்தாடா .. ப்ரியா வருத்தப்படப்போறா பாரு . அந்த சுந்தரை பத்தி விசாரிச்சுட்டேன் . அவன் ஒன்னும் நல்லவன் இல்லை என்றான் உலக்ஸ் ...


20 comments:

Romeoboy said...

முதல் சரி இன்னும் அவர் எத்தனை பேரை லவ் பண்ணிட்டு இருக்காரு???

கலகலப்ரியா said...

=))))).. இதுதான் காதல் என்பதா... ஒன்னும் சொல்லாம நிகழ்வைச் சொன்னது அருமை மணிஜி.. அந்தக் கரும்கயிற்றை நம்பியிருக்கும் காதல்கள் எத்தனை...

க.பாலாசி said...

உலக்ஸ்.... நம்ம ஜாதிய்யா நீயி....

vasu balaji said...

//க.பாலாசி said...
உலக்ஸ்.... நம்ம ஜாதிய்யா நீயி....//

இவன் அடங்க மாட்டானே. ப்ரொஃபைல் படம் வேற எஃபெக்டுக்கு:))

vasu balaji said...

BG ல இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கைன்னு டி.எம்.எஸ். குரல் கேக்குது மணிஜி:))

உண்மைத்தமிழன் said...

எல்லாம் நம்ம கதைதானா..?

Vidhoosh said...

இப்படியே காலம் கடந்து போயிடும்...

அந்த குறும்படம் என்னாச்சு...

செ.சரவணக்குமார் said...

அண்ணே எப்பிடியிருக்கீங்க? பேசி ரொம்ப நாளாச்சு.

அடுத்த தடவை வரும்போது உலக்ஸ் அண்ணன அறிமுகப்படுத்திவைங்க.

மணிஜி said...

வித்யா..மூன்று விளம்பரங்களில் கமிட் ஆகியிருக்கேன். அது இல்லாமல் ஒரு டாக்குமென்டரி ஃபிலிம்.. விரைவில் வருகை..நன்றி

நேசமித்ரன் said...

மயிலிறகு -ஸ்பரிசமும் கனமும்

பெசொவி said...

பதின்ம வயதில் வரும் காதலை (மன்னிக்கவும்: காதல் என்று நம்பும் ஒரு போதையை ) அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
சூப்பர், மணி ஜீ!

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு மணிஜி! :-))

க ரா said...

நல்லாருக்கு மணிஜீ.

அத்திரி said...

மலரும் நினைவுகளோ......??????????????????

Swengnr said...

பாவம் உலக்ஸ்! கதை நல்லா இருக்கு!பகிர்வுக்கு நன்றி!

Cable சங்கர் said...

ithu ulaksukku theriyuma?

சிநேகிதன் அக்பர் said...

உலக்ஸை பார்க்கனும் போல இருக்கு.

நல்லாயிருக்கு மணிஜீ.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு :)))

அகநாழிகை said...

மணி மாமா,
ஓ.கே.
குட்நைட்.

மணிஜி said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே