
எவ்வளவு நாளாம்மா உங்கப்பா குடிக்கறாரு?
பொறந்ததலேர்ந்தே !
என்ன சொல்றீங்க?
மகள் சொன்னாள்.. நான் பொறந்ததலேர்ந்தே .
அப்படின்னா 20 வருஷமாவா?
சீ..சீ.. எனக்கு பதினெட்டு வயசுதான்
கையில் நரம்பை தேடிக்கொண்டே அந்த நர்ஸ் சொன்னாள். (செவிலிகள் சீருடையில் அவ்வளவு அழகாயிருக்கிறார்கள். காதலாகி, கசிந்துருக வேண்டும் போல் இருக்கிறது)
பார்த்தால் ரொம்ப நல்லவராயிருக்கீங்க?(அடிப்பாவி ! நல்லவேளை !) எவ்வளவு கஷ்டம் பாருங்க.. உங்களுக்கு, உங்க வீட்டுக்கு . அப்படி ஏன் நம்ம குடிக்கணும்? சொல்லுங்க.
சிஸ்டர் நீங்களும் குடிப்பிங்களா?
விளையாடாதீங்க சார். பாருங்க. இப்ப உங்க பிள்ளைக்கு கல்யாணம் செய்யணும் . எவ்வளவு ரூபா ஆகும் . நீங்க குடிச்ச காசு இருந்தா?
இப்ப போய் கேட்டால் திருப்பி கொடுப்பாங்களா?
சிஸ்டர் என்று என்னால் வெறும் வார்த்தைக்கு அழைக்கப்பட்டவளுக்கு எஸ். ஜானகியின் குரல். அவள் குரலில் மழலையும் கொஞ்சியது. அவளுக்காகவே இனி குடிக்க கூடாது என்ற முடிவுக்கு வரும் நிலையில் இருந்தேன்.
இனிமே நல்ல பிள்ளையா இருக்கணும். சரியா? நான் போன் பண்ணி கேப்பேன்.
இன்னிக்கு நிச்சயமா குடிக்க மாட்டேன் சிஸ்.. சாரி உங்க பேர் என்ன?
-------------------------------------------------------------------------------------------------
நண்பரின் தாயாருக்கு ஹியரிங் எய்டு வாங்க போயிருந்தோம்.. தாயாரின் செவித்திறனை பரிசோதிக்க சில கேள்விகள் கேட்டார்கள்.
எங்கயிருந்து வர்றீங்கம்மா?
என் மவன் வீட்டுலேர்ந்து.
எந்த ஊர்?
நானு, என் மவன் எல்லாரும் காரைகுடிதான்
எப்ப ஊருக்கு போவீங்க?
ஏன் ?என் மவன் வீட்டுல எத்தனை நாள் வேணா இருப்பேன் . என்னை யாரும் ஒன்னும் சொல்ல முடியாது( மருமகளை பார்த்துக் கொண்டே)
உங்களுக்கு எத்தனை புள்ளைங்க?
இதோ இவன் மட்டும்தான். ஒரே மவன். அதுக்கப்புறம்தான் அவளுக்கு புருஷன் .
நண்பரின் மனைவி குறுக்கிட்டார். அத்தை உங்களுக்கு காது நல்லாத்தானே இருக்கு. இப்ப எதுக்கு வெட்டி செலவு?
-------------------------------------------------------------------------------------------------
சைதாபேட்டை பேருந்து நிலையத்தில் கண்ட ஒரு காட்சி.ஒரு இளம் தம்பதி..அருகில் அவன் தாய்..அவன் சூழலை மறந்து மனைவியை கொஞ்சி கொண்டிருந்தான்..மற்றவர்கள் பார்ப்பதை அவர்கள் சட்டையே செய்ய வில்லை..அவன் தாய் முகத்தில் ஒரு இனம் புரியாத கவலை இருப்பதாக எனக்கு பட்டது. அவள் மகன் கவனத்தை திசை (மனைவியிடமிருந்து) திருப்பும் வண்ணம் செயல் பட ,அவனுக்கு வந்ததே கோபம். தாயை திட்டி தீர்க்க இளம் மனைவி கண்கள் கலங்க. ஒரு மினி சீரியல் பார்ப்பது போல் இருந்தது. சற்று நேரம் ஆயிற்று. அவர்கள் பஸ் வரவில்லை.இளம் மனைவி ஆட்டோவில் போகலாம் என்றாள். தாய் வெட்டி செலவு என்று மறுக்க மீண்டும் மனைவியின் கண்ணீர். இளமை வென்றது. ஆட்டோ வந்தது. மனைவி முதலில் ஏறினாள். மகன் ஏற முற்படுகையில் தாய் அவனிடம் ஆட்டோவின் பின்னால் எழுத பட்ட வாசகத்தை காட்டினாள்.நானும் அதை படித்தேன்..நீங்களூம் படித்திருப்பீர்கள். "சீறும் பாம்பை நம்பு..சிரிக்கும் பெண்ணை நம்பாதே.." அவர்கள் போய் விட்டர்கள்.
நான் யோசிக்க ஆரம்பித்தேன். ஏன் அந்த தாய் அப்படி நடந்து கொண்டாள். ஒரு வித insecurity யா? கணவனை இழந்த அந்த விதவை தாய்க்கு மருமகள் மகனை தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ? என்ற பயம் காரணமா?எப்படி அவர்கள் ஒத்து குடும்பம் நடத்த போகிறார்கள். காலம் காலமாய் இந்த பிரச்சனை இருந்துதான் வருகிறது.
அமரர் சுஜாதா ஒரு முறை வினோதமாக ஒரு விளக்கம் எழுதி இருந்தார். "தாய் தன் மகன் உருவில், ஜாடையில் தன் புருஷனை பார்ப்பது போல் உணர்கிறாள்.ஆனால் அவன் இன்னொரு பெண்ணுடன் (மனைவியுடன்) வரும் போது அவளை தன் சக்களத்தியாக பார்க்க தொடங்குகிறாள்.
பெண் குழந்தைகள் இல்லாத வீட்டிற்கு மருமகளாக வருபவர்கள் மகளாக நடத்த படுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆனால் கணவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. பெண்களோடு வளராததால் அவர்கள் அருமை தெரியாமல் துச்சமாக பெண்டாட்டியை மதிக்கிறார்களாம்.
---------------------------------------------------------------------------------------
எவ்வளவு அழகு அவள்
என்றேன்
ஆமாம் அவன் அழகுக்கு
யாரும் ஈடு இல்லை
என்றாள் மனைவி