Friday, December 2, 2011

வெம்மை





அம்மா கொளுத்திக்கிச்சு மாமா என்றாள் சுமதி..

திடீரென்றது . என்னடி சொல்ற தங்கம்..விளையாடுறியா ?

இல்ல மாமா .. இப்பதான் ..அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை..அப்பாவை போட்டு அம்மா அடிச்சிச்சு .. சீமெண்ணெயை ஊத்திக்கிட்டு ...

 12 வயசு பெண் . குரலில் பிசிறில்லாமல் தெளிவாக சொல்கிறாள் .. அம்மாவை பெரியாஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்க.. அப்பாவை போலிஸ்காரங்க கூட்டிகிட்டு போயிட்டாங்க..தம்பி தூங்கிட்டு இருக்கான் . எனக்கு என்னமோ ஆயிடுச்சு..பாவாடையெல்லாம்..ஒரே ரத்தம்..


இன்னிக்குத்தான் பிரச்சாரம் கடைசி நாளு.. தலைவர் வந்துட்டு போற வரைக்கும் அங்க இங்க நகரமுடியாது .. அடுத்த வாட்டியும் நம்ம ஆட்சிதான் .. அப்புறம் இருக்கவே இருக்கு உள்ளாட்சித்தேர்தல் .. இந்த ட்ரிப்பு எப்படியும் கவுன்சிலர் சீட்டு நிச்சயம்.. சந்திரனின் செல் அடித்தது .செல்வி ..

முந்தாநாளே கேஸ் தீர்ந்து போச்சு .. கெரசினும் இல்லை.. எப்படி பொங்கி புள்ளைகளுக்கு சோறு போடறது . உனக்கென்ன .. ஓசியில குடிச்சிட்டு பிரியாணியை தின்னுட்டு ஆட்டோவில கத்திகிட்டே சுத்துவ.. நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனாள் செல்வி ..

ஏய் ...கொஞ்சம் நிப்பாட்டறியா.. புள்ளைகளுக்கு கடையில இட்லி வாங்கி கொடுத்தனுப்புறேன்..அப்படியே கெரசினும் ,மீனும் வரும்.. பொங்கி வை. தலைவர் வந்துட்டு போனதும் வந்துர்றேன் என்றபடி கட் பண்ணினான் சந்திரன் .

விட்டிற்குள் நுழையும்போதே எரிஞ்ச வாசனை அடிக்குது . சுமதி தம்பியை மடியில போட்டு கிட்டு திண்ணையில் இருந்தாள் .. பக்கத்து வீட்டு அம்மா கூட . புள்ளை உக்கார்ந்துட்டா .. துணி மாத்தி உக்கார வச்சிருக்கேன் . என்ன அழுத்தமா இருக்கா பொட்டச்சி.. அம்மாக்காரி உடம்பு பத்தி கிட்டு எரியுது .. அப்பன் அண்டாத்தண்ணியை கொண்டு வந்து ஊத்தினான் .. கழுத்துக்குகீழ முக்காவாசி வெந்திருக்கும் .. அதுக்குள்ள போலிஸ் வந்திருச்சு .. புருஷனை கையை காட்டிட்டா அவ . பக்கத்து ஊட்டுக்காரி சொல்லிக்கொண்டே போனாள்  .

இல்ல மாமா ..அப்பா மேல தப்பு இல்லை .. எங்களுக்கு இட்லியும்  ,புரோட்டாவும் செந்தில் அண்ணன் கிட்ட வாங்கி கொடுத்து விட்டாரு ..கெரசினும் கேன்ல வந்துச்சு .. இன்னிக்கு அவன் வரட்டும் .. ரெண்டுல ஒன்னு பார்த்துட்டுத்தான் அடுப்பை பத்த வைப்பேன்னு அம்மா சொல்லிடுச்சு .. நானும் தம்பியியும் சாப்பிட்டுட்டு டிவியை பார்த்துக்கிட்டிருந்தோம்.. தம்பி தூங்கிட்டான் .. அப்பா வந்துச்சு ..


உனக்கெல்லாம் எதுக்குய்யா பொண்டாட்டி ,புள்ளைங்க..அப்படியே உன்  கட்சி ஆஃபீசிலயே இருந்துக்க வேண்டியதுதானே.. விரால மீன் கவரை விசிறியடித்தாள் செல்வி ..

ந்தாப்பாரு செல்வி.. எலெக்‌ஷன் நேரம் . அப்படித்தான் இருக்கும்.. தலைவரு காலைலேர்ந்து ஒன்னும் சாப்பிடலையாம் .. மீட்டீங்க்ல சொன்னாரு ..அப்படியே அழுதுட்டேன்.. போய் அடுப்பை பத்த வை..நல்லா மாங்கா போட்டு மீன் குழம்பு வை.. நாளைக்கு ஒரு நாள் பொறுத்துக்க ..கேஸ் வந்திரும் என்றான் சந்திரன் ..

முகம் கழுவி கைலி மாற்றி திரும்புவதற்குள் கெரசின் வாசம் சுர்ரென்று மூக்கில் ஏறியது .. தொப்பலாய் இருந்தாள் செல்வி.. இந்தாய்யா .. நீயே பத்த வை .. கொளுத்திட்டு என் மேலயே சோறாக்கிக்கோ என்றவள்..சடாரென்று தீக்குச்சியை உரசி..

முழுக்க வெந்திருச்சு .. உசிர் மட்டும்தான் இருக்கு .. முகம் அப்படியே இருக்கு.. பெரிய கண்ணு செல்விக்கு .. கண்ணாலயே கவுத்துடுவான்னு  ஆச்சி அடிக்கடி சொல்லும் .. கணுக்காலை கூட அடுத்தவன் ..அதுவும் பொம்பளைங்க கூட பார்க்கக்கூடதுன்னு இருப்பா .. தழைய , தழைய சீட்டிப்பாவாடை கட்டி கிட்டு கொலுசு சிணுங்க அவள் ஓடியது ஞாவகம் வருது .. என்னடி கண்ணுன்னு கன்னத்தை தொடப்போனாக்கூட , தட்டி விட்டுட்டு ஓடிருவா தங்கம்.. இன்னிக்கு. கிட்டதட்ட முக்கா அம்மணம்.. கண்கள் மூடியிருந்தது .. 

மெட்ராஸ் கொண்டு போலாமான்னு பார்த்தோம்.. ஆனா பிரயோசமில்லன்னு பெரிய டாக்டர் சொல்லிட்டாரு . போயிரும்னு சொல்றாரு .. புள்ளை வேற பெரியவளாயிட்டா .. அவ ஆத்தாக்காரி மூஞ்சியலயே முழிக்கமாட்டேன்னு சொல்லிட்டா.. புலம்பினாள் செல்வியின் ஆத்தாக்காரி.. எனக்கு அக்காமுறை.. என்ன சொல்றது ..செல்விக்கு ஏதோ தோணியிருக்க வேண்டும்.. ஒரு முறை உடம்பை கூனி குறுக்கிக்கொண்டாள்.. கண்ணை திறந்து என்னைப்பார்த்தாள். ஒரு நொடிதான் ..முகத்தில் ஒரு வேதனை..

என்னண்ணே... இன்னும் கொஞ்சம் பொறுத்து , இந்த சிறுக்கி செத்தப்புறம் வந்திருக்க கூடாதா? என் சுபாவம் தெரிஞ்சு எப்படிண்ணே ?

இதுதான் அவள் மனதில் ஓடியிருக்க வேண்டும்..

28 comments:

MANO நாஞ்சில் மனோ said...

படிச்சதும் மனசு துடிக்குதுய்யா...!!!

Kousalya Raj said...

என்ன வார்த்தை சொல்லனு தெரியல... கண் கலங்க வைத்துவிட்டது...!!

செ.சரவணக்குமார் said...

என்னா எழுத்துடா சாமி..

க்ளாஸ் மணிஜி அண்ணே. ப்ளீஸ் தொடர்ந்து எழுதுங்க.

muthukumaran said...

மனசு கணமாயிடுச்சு :-(

க ரா said...

Class Manijii.. Well written...

க ரா said...

அடிக்கடி எழுதலாம்ல மணி ஜி.

vasu balaji said...

எப்பவாதுதான் ஆணிமுத்து பிறக்கும் இல்லையா மணிஜி. One of your best

Cable சங்கர் said...

ஷார்ப்.

அபி அப்பா said...

ஒ... மணிஜி:-(((((((((((((( என்னால முடியாம அழுது கிட்டே இந்த பின்னூட்டம்:-( நம் நண்பர் டாக்டர் புரூனோ கிட்டே கேட்ட போது மிகுந்த உதவி செய்தார். அவர் "இல்லை 40 பர்செண்ட் ஆகிடுச்சாம். நான் கேட்டுட்டேன். ரெண்டு நாள் அதிகம். இளனீர் கொடுப்பாங்க. வீட்டுக்கு எடுத்து போகலாம்" என சொன்ன போதே நொறுங்கி போனேன். மணிஜி இதை இப்படி ஒரு ஆவணப்படுத்தக்கூட முடியுமா என நினைத்தேன் உங்க கதை படிச்சு! :-((((

Ahamed irshad said...

one of your best...great

சி.பி.செந்தில்குமார் said...

சரக்கே இல்லாத நானே டெயிலி பதிவு போடறப்ப இவ்வளவு நல்ல திறமை இருக்கற நீங்க ஏன் வாரம் ஒரு பதிவாவது போடக்கூடாது. குட் ட்ரை..

rajasundararajan said...

சில படைப்புத் தருணங்களை நேரிடுகையில் எழுத்தாளரின் திறமையை எங்கே பாராட்ட? இப்படி, சுயவன்முறை நிறைந்ததாய் இருக்கிறதே இந்த உலகம் என்று நொந்துகொள்ளத்தான் முடிகிறது!

க.பாலாசி said...

அருமையென்பதைக் கடந்து அழவைக்கிறீங்க மணிஜி...

Jackiesekar said...

கனுக்காலை கூட் காட்டாதவ அப்படித்தான் நினைச்சி இருக்கனும் சான்சே இல்லை..மணிஜி.

kathir said...

கலங்கடிக்குது :(

Unknown said...

sir enna solradhunnu theriyala oru second kannu kalangidudhu

Athisha said...

புத்தகம் போடுங்க சார்

கடல்புறா said...
This comment has been removed by the author.
கடல்புறா said...
This comment has been removed by the author.
Anonymous said...

"வெம்மை"

ராமலக்ஷ்மி said...

வெம்மை!

முரளிகண்ணன் said...

அசத்தல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

கண் கலங்க வைத்துவிட்டது...!!

ஓலை said...

Oru unmai kathai maathiriyirukku maniji. kalakkuthu vayaththai.

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

அன்புடன் நான் said...

வணக்கம்,
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

கலங்க வைத்து விட்டீர்கள்.

பால கணேஷ் said...

மணிஜி! நீண்ட நாட்களுக்குப் பின் மனதைப் பாதித்த அருமையான சிறுகதையைப் படிக்கும் அனுபவத்தை வழங்கினீர்கள். அருமை! நிறைய எழுதுங்கள்! (பி.ராஜகோபாலனின் ‘மூன்றாவது கண்’ என் வீட்டில் இருக்கிறது ஐயா!)