Thursday, May 20, 2010

அன்புள்ள அம்மா ...


”கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் , நற்கதி அருள்வாய் அம்மா’

பற்பலரும் போற்றும் பதிமயிலாபுரியில்.சிற்பம் நிறைந்த உயர் சிங்கார சோலைதன்ன்னில்..

அம்மா லயித்து பாடிக்கொண்டிருந்தாள் . சற்று நேர் கோணல் வகிடெடுத்து திருத்தமாக வாரி பின்னியிருந்தாள் . கொஞ்சமாய் மல்லிகை கர்வப்பட்டுக் கொண்டிருந்தது . வாடாமல்லி நிறத்தில் குங்குமம் இட்டிருந்தாள் . இருக்கும் இடமே தெரியாமல் சின்னதாய் மின்னியது தோடு. சாதாரண மஞ்சள் கயிறுதான் கழுத்தில் . இருந்தாலும் மகாலட்சுமியாய் தேஜஸ் . அம்மா

அம்மாவுக்கு பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே மீது ரொம்ப பித்து . என்னை கேட்க வைத்து பாடுவதில் அவளுக்கு அலாதி இன்பம். நான் வாய் நிறைய பாராட்ட வேண்டும். கேட்டுக் கொண்டேயிருப்பாள். அவள் சின்ன வயதில் என் தாத்தா அவளை பாட சொல்லி கேட்டு முத்தமழை பொழிவாராம். நீ என் அப்பாடா செல்லம் என்பாள் அடிக்கடி. அம்மா நீ பாடறது எனக்கு புரியலை. ஆனா மனசை என்னவோ பண்ணுதும்மா என்பேன். அப்பாவும் அதற்கு ஒரு காரணம்.

அப்பாவும் நன்றாக பாடுவார் . உறவினர் வீட்டு கல்யாணங்களில் அப்பா பாட்டை ரசிக்க ஒரு கூட்டம் இருக்கும் . அப்படித்தான் ஒரு கல்யாணத்தில் அப்பா”கற்பகவல்லியை மெய்மறந்து இழைத்துக் கொண்டிருந்தார். பாதியில் ஏதோ தடங்கல் . தண்ணீர் குடித்து விட்டு தொடருவதற்குள் அம்மா பாட ஆரம்பித்தாள் . அத்தனை பேரும் கட்டுண்டு போனார்கள்.”உங்கள விட ரீதீகெளலவை என்னமா ஆலாபனை பண்றா ..என்று ஆச்சர்யகுறிகள் அப்பாவை நொக்கி எய்யப்பட்டன. தொடர்ந்து நேயர் விருப்பமாக பாட சொல்லிக் கொண்டேயிருந்தார்கள் . ஆனால் அப்பா முகம் சுருங்கி போயிற்று. அதற்கப்புறம் அம்மா வீட்டிலேயே முடக்கப்பட்டாள் .எந்த வேலை செய்தாலும் அம்மாவின் வாய் எதையாவது முணுமுணுத்து கொண்டேதான் இருக்கும். அப்பாவின் கை பேச ஆரம்பித்திருந்தது.

அம்மாவின் அந்த நெத்தி தழும்பு . அப்பா வீசியெறிந்த டம்ளர் . அம்மா அழவில்லை . அதற்குப்பிறகு பாடவில்லை. எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. ஒரு நாள் இரவு அப்பா குடித்திருக்க வேண்டும். சத்தம் கேட்டு நான் முழித்துக் கொண்டேன். ஆனால் கண்களை இறுக்கமாக மூடியிருந்தேன்.

இப்ப பாடுறியா , இல்லையா?

என்னால முடியாது . மன்னிச்சுக்கோங்க .

நான் சொல்றேன் . பாடுடி.

நிச்சயமா முடியாது. நீங்க என்ன கொன்னாலும் சரி . அம்மாவின் குரலில் அசாத்திய உறுதி. எனக்கு பயமாக இருந்தது. அப்பா ஏற்கனவே நல்ல சிவப்பு. இப்போது கோபத்தில் இன்னும் விகாரமாக தெரிந்தார்.

நாயே . நான் படுன்னா படுக்கணும். பாடுன்னா பாடணும். இல்லைன்னா வெளியில் போடி

நான் கண்களை திறந்து கொண்டேன் .

அப்பா அம்மாவை ஒன்னும் சொல்லாதீங்கப்பா என்று அழ ஆரம்பித்தேன். அம்மா என்னை அணைத்து கொண்டாள். அப்பாவிடம் சொன்னாள் . நீங்க இருக்கவரைக்கும் நான் பாட மாட்டேன். குழந்தையை எதாவது பண்ணிங்க . நான் என்ன வேணுமின்னாலும் பண்ணுவேன். அப்பா கோபமாக வெளியில் போனார் . நான் அம்மாவின் கண்களை துடைத்தேன். அப்போதுதான் அம்மா சொன்னாள் . கண்ணா பெண் ஜென்மமே பாவப்பட்டதுடா . உங்கப்பா பாவத்துக்கு நீதாண்டா கண்ணா பரிகாரம் தேடணும்.

என்னம்மா பண்ணனும் என்றேன்

உனக்கு ஒருத்தி வருவா பாரு. நான் உன்னை எப்படி பாத்துக்கறேன். அந்த மாதிரி அவளை நீ பார்த்துக்கணும். அவளை நீ வாயாற பாராட்டணும்டா . நெகிழ்ந்து போயிடுவா அப்படியே . அவ பண்ற ஒவ்வொரு காரியத்தையும் ரசிச்சு பேசு. உசிரை கூட கொடுத்துடுவா உனக்காக . அவளை கைநீட்டாதே . பொம்பளைக்கு புருஷன் கிட்ட அடி வாங்கறைப் போல வேற அவமானமே இல்லைடா கண்ணா . தட்டுல மலத்தை அள்ளி போட்டுகிட்டு திங்கலாம் அதுக்கு. அம்மா அழ ஆரம்பித்தாள் .

ரெண்டு விஷயங்கள் . சமீபத்தில்தான் என் மனைவி ரெயிலில் அடிபட்டு என்னை விட்டு போனாள். அம்மா சொன்னபடியே அவளை நடத்தினேன். ஆனால் அவளை நான் திட்டினால் கூட அவளுக்கு கேட்டிருக்காது. என்னிடம் எதையும் அவளால் கேட்கவும் முடியாது . அம்மா கடைசி நாட்களில் எங்கு வேலைப்பார்த்து என்னை ஆளாக்கினாளோ, அந்த ஹோமிலிருந்துதான் நான் பார்வதியை கல்யாணம் செய்து கொண்டேன் . அம்மா உனக்கு சந்தோஷம்தானே . நீ யே அவளை கேட்டுப்பாரேன். அங்குதான் வந்திருக்கிறாள்.

அப்புறம் அப்பா , அம்மா இருக்கும்போதே போய்விட்டார். தகவல் தெரிந்து அம்மாவுடன் போனேன் கொள்ளி போட . திடீரென்று அம்மா பாட ஆரம்பித்தாள்


”காதல் சிறகை காற்றினில் விரித்து , வானவீதியில் பறக்கவா” அன்று இரவு அப்பா பாட சொல்லி ,அம்மா மறுத்த அதே பாடல்....

34 comments:

மணிஜி said...

இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் மனைவி மின்சார வண்டியில் அடிபட்டு இறந்து போய் விட்டார்.அவர் ரயிவேயில் பணிபுரிந்து வந்தார் . அவருக்கு பேசவும் முடியாது. காதும்...

மோனி said...

..//பொம்பளைக்கு புருஷன் கிட்ட அடி வாங்கறைப் போல வேற அவமானமே இல்லைடா கண்ணா . தட்டுல மலத்தை அள்ளி போட்டுகிட்டு திங்கலாம் அதுக்கு//..

மாதவராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா...

மோனி said...

..//”காதல் சிறகை காற்றினில் விரித்து , வானவீதியில் பறக்கவா” அன்று இரவு அப்பா பாட சொல்லி ,அம்மா மறுத்த அதே பாடல்//..

மனசு என்னமோ பண்ணுது “ஜீ”..

vasu balaji said...

ஜீ. சலாம். :((.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பொம்பளைக்கு புருஷன் கிட்ட அடி வாங்கறைப் போல வேற அவமானமே இல்லைடா கண்ணா//
ஒரு ஆணின் கையால் உருப்பெற்ற இந்த வரிகளில் பெருமிதம் தெரிகிறது. சத்தியமான வார்த்தைகள். தனது அடி அவள் உடலை விட மனதை மிகவும் பாதிக்கும் என்று உணர்ந்த ஆண் தான் அதிகம் அடிக்கிறான்.
கையாலாகாதவன் !

Vidhoosh said...

ராஜேஷ் வைத்யாவுக்கு கடவுள் துணை இருக்க வேண்டுகிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.

(எங்க க்ளிசே ஏதும் இருந்து, "நான்"னின் மனைவி "நான்"னை பளார்னு அறைஞ்சுடுவா-ன்னு நினைச்சு பயந்து கொண்டே படிச்சேன்.

பேனா நல்லாத்தான் எழுதும் போலருக்கு :)

Vidhoosh said...

அம்மாவின் deaf & dumb சேவை கொஞ்சம் டீப்பான டீடைல்... லேசா ஒளிஞ்சு கொண்டு எட்டிப்பார்க்கும் குட்டிக் குழந்தை போல ரொம்ப அழகா இருக்குங்க.

உண்மைத்தமிழன் said...

[[[மணிஜீ...... said...
இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் மனைவி மின்சார வண்டியில் அடிபட்டு இறந்து போய் விட்டார்.அவர் ரயிவேயில் பணிபுரிந்து வந்தார் . அவருக்கு பேசவும் முடியாது. காதும்...]]]

உண்மைதான்..

ராஜேஷ்வைத்யாவின் தற்போது வரையிலான வாழ்க்கைக் கதையும் சோகமயமானதுதான்..!

Santhappanசாந்தப்பன் said...

அசத்தல்!

நெகிழவும் வைக்கிறது!!

Mahi_Granny said...

கதையல்ல நிஜம் என்னும் போது ரொம்பவே மனதை பாதிக்கிறது. அருமையாக எழுதி உள்ளீர்கள்

எல் கே said...

:(

அமுதா கிருஷ்ணா said...

கடவுள் உள்ளாரா என்ன?

க.பாலாசி said...

மனசுல அப்டியே ஒரு அழுத்தத்ததை உண்டாக்கின இடுகை...

காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா....

முடித்தயிடமும் டச்சிங்....

Cable சங்கர் said...

jump cut முறை மிக அழகாய்..

அகநாழிகை said...

அருமை மணிஜி.

ரவி said...

ரமேஷ் வைத்யா இப்போது கஷ்டப்படுவதாக கேள்விப்பட்டேன். அவருக்கு எவ்வகையிலாவது நான் உதவி செய்யமுடியுமா மணிஜி

க ரா said...

நெகிழ்வு.

Jackiesekar said...

ரொம்ப நல்ல அம்மா...

சிநேகிதன் அக்பர் said...

மனதை பாதித்து விட்டது மணிஜீ

மணிஜி said...

முதலில் ஒரு விஷயம் . இது ராஜேஷ் வைத்யாவின் கதை இல்லை. அவர் வாழ்க்கையில் நடந்த அந்த சோகமான நிகழ்வு எனக்கு நினைவில் இருந்தது. அதுதான் புனைவானது.

செந்தழல் ரவி ரமேஷ் வைத்யா நன்றாக இருக்கிறார். நீங்கள் ராஜேஷ் வைத்யாவை சொல்லவில்லையே.

விதூஷ் உண்மையில் ”அந்த” அருமையாக எழுதுகிறது. நீங்கள் பயந்த அந்த கிளிஷேவை தவிர்த்தேன். நன்றி

நன்றி மோனி..

பாலா சார்..நன்றி

நன்றி நாய்க்குட்டி

உண்மைத்தமிழன் அண்ணே..கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிகழ்ச்சியில் ராஜேஷை சந்திருக்கிறேன்

நன்றி பிள்ளையாண்டான்

நன்றி மஹி..இது கதைதான்

நன்றி எல்கே

நன்றி அமுதா...எனக்கு அந்த சந்தேகம் உண்டு

வாங்க பாலாசி

கேபிள்..திரைக்கதை ஃஃபார்மட்டா?

நன்றி வாசு

நன்றி இராமசாமி

நன்றி ஜாக்கி (நெட் சரியாயிடுச்சு போல)

நன்றி அக்பர்

பாலா அறம்வளர்த்தான் said...

ராஜேஷ் வைத்யாவின் சொந்த வாழ்கை பற்றி அவ்வளவாக தெரியாது. அவருடைய சகோதரர் வாழ்வும் நெகிழ்ச்சியானது என படித்த ஞாபகம்.

கதை நன்றாக வந்திருக்கிறது மணிஜி!!!

ஒரு சின்ன சந்தேகம்: "கற்பகவல்லி நின்" பாடல் ஆனந்த பைரவியில் ஆரம்பித்து பல ராகங்களை உள்ளடக்கிய ராக மாலிகா - ஆனால் அதில் ரீதி கெளளை இல்லையே?

மணிஜி said...

பாலா ராகம் விசாரித்துத்தான் எழுதினேன்..நிச்சயமாக தவறென்றால் சொல்லவும். திருத்துகிறேன்.. நன்றி .

Paleo God said...

தொண்டை அடைத்தது அன்று செய்தியாய் படித்தபோதும், இன்றும்..!

:(

நிலாமதி said...

நெஞ்சை நெகிழ வைத்த கதை

செ.சரவணக்குமார் said...

சல்யூட் மணிஜீ. மனதைப் பிசையும் எழுத்து. ரொம்ப ஷார்ப்பா எடிட் பண்ண குறும்படம்போல.

நேசமித்ரன் said...

ஆனந்த பைரவி-கல்யாணி-பாகேஸ்ரீ-ரஞ்சனி இந்த ப்ளெண்டுன்னுதான் நினைக்கிறேன் அண்ணே கற்பக வள்ளி

ரீதி கௌளையில வரிசைப் படுத்த முடிகிற பாடல்கள் ராமன் கதை கேளுங்கள் -சிப்பிக்குள் முத்து,சின்ன கண்ணன் அழைக்கிறான்---கவிக்குயில்,தலையை குனியும் தாமரையே-ஒரு ஓடை நதியாகிறது

அப்புறம் புதுப் பாட்டு ஒண்ணு கண்களிரண்டால்-- சுப்ரமணிய புரம்
பெல்லிராஜ் பாடினதுன்னு நினைக்குறேன்

:)

seethag said...

"நினைச்ச நேரத்தில் வெளீயே போகணும் ந்ற சுதந்திரம் இல்லைங்றத்உதானே உங்க சொம்ளியிண்ட்?"

பல வருடஙளுக்கு முன் என் கல்லூரி வாக்கையில் எனக்கு கேக்கப்பட்ட கேள்வி.
ஈப்போதும் பெண்கள் நிலைமை இதுதான் என்று நினைக்கும்போது மனசு ரொமப் கலங்குகிர்அது.உங்கள் கதை மனசை துவத்து போட்டது போலவே ,மனைவியை அவளுடய திறமயையை appreciate செய்வது எவ்வளவு அழ்கான செயல் எனபதையும் காட்டுகிறது.எத்தனை அம்மாக்கள் , மனைவிகள் ஏங்குகிறார்கள்?

புலவன் புலிகேசி said...

ம்....நல்லா இருக்கு ஜீ

விஜய் said...

ரீதி கௌளை

அழகான ராட்சசியே-முதல்வன்

ராமலக்ஷ்மி said...

மிக அருமை. மனதை நெகிழ வைத்து விட்டது.

பாலா அறம்வளர்த்தான் said...

மணிஜி - நேசன் சொன்ன ராகங்கள் மட்டுமே அந்த பாடலில் உள்ளது. ரீதி கெளளை என்ற இடத்தில் ஆனந்த பைரவி என்று மாற்றிக் கொண்டால் சரியாக வரும் என நினைக்கிறேன்.

இதெல்லாம் ஒன்றும் இல்லை பாஸ். "அம்மா நீ பாடறது எனக்கு புரியலை. ஆனா மனசை என்னவோ பண்ணுதும்மா" என்று நானும் சொல்லி இருக்கிறேன். சின்ன வயதில் என் அம்மா பாடி நான் கண் கலங்கிய (ஒரு காரணமும் இல்லாமல்) பல பாடல்களில் ஒன்று "வர வேண்டும் வர வேண்டும் தாயே" . இப்படி எங்கேயோ இருக்கிற ஒருவன் தன்னுடைய நினைவுப் பொதியிலிருந்து ஒரு இழையை இழுக்க வைக்கிறீர்களே - தொப்பியை கழட்டுகிறேன் (நன்றி கார்க்கி!!).

ப்ரியமுடன்,
--பாலா

மணிஜி said...

நேசா.. கற்பகவல்லிக்கும், கண்கள் இரண்டாலுக்கும் ஒரு சிமிலாரிட்டி இருக்குன்னு நினைகிறேன். நன்ரி

நன்றி பாலா.

நன்றி ஷங்கர்

நன்றி சரவணா

நன்றி நிலாமதி

நன்றி சீதா

நன்றி புலவன்

நன்றி விஜய்

நன்றி ராமலக்‌ஷ்மி

கலகலப்ரியா said...

அருமையோ அருமை மணிஜி.. வழக்கம் போல அசத்தல்...

anujanya said...

மணிஜி, கதை நல்லா வந்திருக்கு.

நேசமித்ரன் மற்றும் பாலா சொல்வது சரி. ஆனந்த பைரவியில் ரீதி கௌள சாயல் இருக்கும். ஆனால் வேறு வேறு ராகங்கள். நேரம் கிடைத்தால் GNB யின் 'பரிபா லயமாம்' மற்றும் 'ஜனனி நினுவினா' கேட்டுப் பாருங்கள். Divine.

அனுஜன்யா