Thursday, January 27, 2011

ஜெயா அண்ட் கோ


போயஸ் கார்டன் . நேற்றைய , நாளைய ? நிரந்தர முதல்வரின் இல்லம் . தேர்தல் ஆலோசனை கூட்டம் தொடங்க இருக்கிறது . தலையில் முண்டாசு கட்டி ஓ.பி.எஸ் ப்ளக்ஸ் பேனர்களை கட்டிக்கொண்டிருக்கிறார் .

“மாடியிலிருந்து இறங்கும் மங்கா தங்கமே”

ஆலோசனை கூட்டத்துக்கு வருகை தர உள்ள அனலே..கனலே..தணலே..”


ம்ம் ..சீக்கிரம் ஆகட்டும்.. ராகுகாலம் போனவுடனே , அம்மா வந்துடுவாங்க.. மேளம் ,வாத்தியம் எல்லாம் ரெடியா ?

ஜெயபேரிகை ஒலிக்கிறது . அம்மா ச(சி)கல பரிவாரங்களுடன் இறங்கி வருகிறார் .

கார்ப்பரேஷன் மருந்து பட்ட கொசுக்கள் போல் எல்லோரும் கீழே விழுகின்றனர் ..

போதும் . எல்லாம் எந்திருங்க . பதவி ஏற்பை எங்க வச்சுக்கலாம் . காரப்பாக்கத்துல பந்தலுக்கு ஏற்பாடு பண்ணுங்க .

அம்மா ஆலோசனைக் கூட்டம் ஆரம்பிக்கலாமா ?

எல்லோரும் வந்தாச்சா ?

அவங்க எங்க போனாங்க .. இங்கதான் டேரா .. ஒருத்தர் அறிவாளோட தோட்டத்துல கைவேலையா இருக்காரு .. இன்னொருத்தர் நம்ம ஆஃபிஸ் பீரோவை சுத்தியலால நிமித்திகிட்டிருக்காரு ..


அவர் எங்க மேன் ?

உள்ளிருந்து குரல் கேட்கிறது . பென்சில்வேனியாவில் என்ன நடந்தது ? பாசிச வெறி பிடித்த...

என்ன மேன் ? எதாவது நாடக ஓத்திகை நடக்குதா ?

இல்லிங்க அம்மா . புரட்சி புயல் பேசிகிட்டிருக்காரு . சூறாவளி சுற்றுப்பயணம் தொடங்கணுமில்ல ..


வறுத்தகறி எங்கப்பா ?

அம்மா . அவர் விருதகிரி . ஏற்கனவே நீங்க சொன்னதுக்கு இவங்களா ஊத்தி கொடுத்தாங்கன்னு கேட்டாரு . இப்ப இதை கேட்டா ஆமாம் இவங்கதான் அறுத்து ஆக்கி போட்டாங்களான்னு கேப்பாரு ஹாங்..

முதல்ல அவரை வரசொல்லுங்க . இவர் யாரு ? புதுசா இருக்காரு .

அம்மா இவர்தான் இன்னிக்கு ஹைலைட் . பாசிச வெறி பிடித்தவர்கள் இவரை கொடுஞ்சிறையில் இட்டு..


மிஸ்டர் .. அதை நானும்தான் பண்ணுவேன் . அடங்கலைன்னா , அடக்க வேண்டியதுதானே . இந்த விஷயத்துல நானும் , மிஸ்டர் க..வும் ஒன்னுதான் .

வேற யாரு வந்திருக்கா ?

நாழ் வழ்ந்துருக்கேன்ம்மா என்றபடி கார்த்திக் எண்ட்ரி ..

நீங்க முதல்ல வெளிய போய் துப்பிட்டு வாங்க.. எச்சில் தெறிக்குது .. வரச்சொல்லுங்க அவரை .. போன் போடுங்க..

முரசு சப்தம் கேட்கிறது .

எல்லா நாற்காலிகளும் அகற்றப்படுகிறது . அம்மா மட்டும் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் . மற்றவர்கள் கை கட்டி நின்று கொண்டிருக்க ....

விருதகிரி உள்ளே நுழைகிறார் . பின்னால் அவர் மச்சான் கையில் சேருடன்

நான் வல்லரசு , விண்ணரசு , தென்னரசு , முடியரசு , குடியரசு


நீங்க சொன்னதுல ஒன்னுதான் உண்மை..கடைசியா சொன்னது . ஆலோசனையை ஆரம்பிக்கலாமா ? எப்படி பிரச்சாரம் பண்றது ?

விருதகிரி ஆரம்பிக்கிறார் .. இந்த ரம் பிரச்சனை ..

உங்களுக்கு அதே நினைப்பா ? முழுசா சொல்லித்தொலைங்க ஸ்பெக்ட்ரம்னு . கருணாநிதி ஆளுங்க பூத் கேப்சர் பண்ணா என்ன பண்றது ?

விஜி : அதுக்குதான் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்

ஜெ : சொல்லித்தொலைங்க

விஜி : ம்ம்ம் ..நான் சொல்ல மாட்டேன் . நீங்க காப்பியடிச்சிடுவீங்க

கஷ்டகாலம் . இப்ப நம்ம எல்லாம் ஒரே செட் .

விஜி : சூப்பர் ஐடியா . எப்படி ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்னு சொன்னேனோ , அதேப்போல் ஓட்டு மிஷினை வீடு தேடி எடுத்து கிட்டு போய் ஓட்டு போட வைக்கணும் .

ஜெ : முதல் இவருக்கு சோடா தெளிங்க . உருப்படியா எதாவ்து சொல்லுங்க .

ஓபிஎஸ் கையில் விபூதியுடன் வருகிறார் . அம்மா ! கோயிலுக்கு போயிட்டு வந்தேன் .. உங்க பேர்ல ஒரு அர்ச்சனை ..

இதய தெய்வம்னு என்னை சொல்லிட்டு எந்த கோயிலுக்கு போனிங்க .. நமது எம்ஜிஆர் ல கட்டம் கட்டவா..


அம்மா வெளியில இன்னும் ஒரு 10 கட்சி ஆளுங்க இருக்காங்க . உங்க அப்பாயிண்ட்மெண்ட் வேணுமாம் ..

அவங்களுக்கு டிஸ் அப்பாயிண்மெண்ட்தான் . பத்திரிக்கைகாரங்களை கூப்பிடுங்க.


தொகுதி உடன்பாடு முடிந்தது ..குறிச்சுக்கங்க..

அதிமுக - 230

வைகோ -1

விஜயகாந்து - 1

வலது -1
இடது -1


Monday, January 24, 2011

மானிட்டர் பக்கங்கள் ...... 24/01/11




1997 ஆம் வருடம் . கோவை ஷீலா நர்சிங்ஹோம் . நண்பரின் மனைவி பிரசவத்துக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறார் . தலைப்பிரசவம் . டென்ஷன் . குழந்தை பிறந்தாயிற்று . அங்கிருந்த செவிலியர்கள் சொன்னது . “ சார் .. எடுத்துகிட்டு போறீங்களா....வேண்டாம் . உங்களால் வளர்க்க முடியாது . mere vegetable.. இங்க நாங்க பார்த்துக்கறோம்.. நண்பரும் , அவர் மனைவியும் உறவினர்கள்.. இரத்த சம்பந்தங்களுக்குள் திருமணம் என்றால் இந்த ரிஸ்க் உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள் . நண்பரும் , அவர் மனைவியும் உறுதியாக இருந்தார்கள் . நமக்கு கிடைக்க கொடுத்து வைத்தது இது . மனமுவந்து ஏற்றுக்கொள்வோம் என்றார்கள் .

விதம் , விதமான வியாதிகளின் பெயர்கள் . 8 சர்ஜரிகள் . முகசீரமைப்பு நிபுணர் டாக்டர் பாலாஜி .. “ஷீ ஈஸ் மை சைல்ட்” என்றார். இடுப்பிலிருந்து ஒரு எலும்பை எடுத்து , முகவாய் கட்டையில் பொருத்தி கொஞ்சம் சீர் செய்தார் . கண்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைக்க ஒரு சர்ஜரி . குழந்தையின் உடம்பில் போதுமான சக்தி இல்லை . இடைவெளி விட்டு ஆபரேஷன்கள் . சளைக்காமல் போராடினார்கள் இருவரும் . பணப் பற்றாக்குறை வேறு . இதற்கிடையில் குழந்தைக்கு எந்த காம்ப்ளெக்சும் ஏற்படகூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள் . ஏன் மற்றவர்கள் போல் நான் இல்லை என்று அவள் நினைப்பதற்கு பதில் . ஏன் மற்றவர்கள் என்னைப்போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தாள் அவள் . இதற்கிடையில் இரண்டாவது குழந்தையும் . அது இவளுக்கு நேர் எதிர் . கொள்ளை அழகு . பயங்கர சேட்டை . எங்கே , எப்படி , யாரால் வாழ்க்கையின் கணக்குகள் வகுக்கப்படுகின்றன என்பதில்தான் எவ்வளவு ரகசிய சுவாரசியங்கள்.. முதல் குழந்தையின் பெயர் பவித்ரா .. யூரின் பிளாடரில் பிரச்ச்னை..ஒரு நாளைக்கு நான்கு ஜட்டிகளை நணைத்து விடுவாள் ஸ்கூலில் .. அதற்கு ஒரு அக்குபஞ்சர் ட்ரீட்மெண்ட்..அந்த மருத்துவர் 60 நாள் அவகாசம் கேட்டார் .. நண்பர் அரவிந்த அன்னையின் பக்தர் .. அர்ப்பணம் பன்ணி விட்டேன் அவளை மணி என்றார் . டாக்டர்கள் நம்பவில்லை . அவள் ஸ்கூலுக்கு எடுத்து செல்லும் ஸ்பேர் ஜட்டிகள் அப்படியே திரும்ப கொண்டு வருகிறாள் . 45 நாள் ட்ரீட்மெண்ட்டில் .. ஹார்மோன் குறைபாடு நிறைய.. எதாவது மிராக்கிள் நடந்தால் மட்டுமே என்றார்கள் ஸ்பெஷலிஸ்ட்கள்..

நண்பர் ஒரு விளம்பர ஏஜன்சியின் உரிமையாளர் . நான் அவருக்கு கிரியேடிவ் டைரக்டர் . ஈரோடு கிளையண்ட் மீட்டிங் முடித்து விட்டு கோவை செல்ல ஆயத்தமானோம் .. நண்பருக்கு அழைப்பு வந்தது .. குழந்தை பெரியவளாகி விட்டாள் . கைனகாலஜிஸ்ட்டும் உறுதி செய்து விட்டார்கள் .. ஆனால் அவர்களால்நம்பவே முடியவில்லையாம் .. எங்கிருக்கிறது சூத்திர கயிறு ? சுண்டுவது யார் ? நண்பருக்குள் இருந்த வியாபாரி மறைந்தான் .. தகப்பன் விழித்துக் கொண்டான் “மணி..இப்பயே அவளை பார்க்கணும்யா என்றார்.. அதான் இப்ப முதல்ல..என்றேன்.. சென்னை...


ஹெப்சிகா ஏசுதாசனின் “அநாதை” நாவலைப்பற்றி ரமேஷ் வைத்யா மிகவும் சிலாகித்தார் .. ஆனால் கிடைக்கவில்லை.. புத்தம் வீடு கிடைத்தது..இரண்டாவது முறையாக வாசித்துக்கொண்டிருக்கிறேன்.. 1964 ல் எழுதப்பட்ட நாவல்.. ஆனால் இன்னும் ஃப்ரெஷாக இருக்கிறது .. திரைப்படமாக உகந்த கதை.. நமக்கு அதிர்ஷடமிருக்கிறதா ..பார்ப்போம்...


அவர் என்னையே உற்றுப் பார்த்தார்.. நெற்றியை சுருக்கியபடி “நீங்க....அவர்தானே..என்றார் .. ஆமாம் என்றேன்..அவர் கரங்கள் நடுங்கின.. உதடுகள் துடித்தன.. கண்களில் நதிப்பிரவாகம்.. ஆனந்தமா..அழுகையா தெரியவில்லை..நாக்கில் அதை ருசித்துப் பார்த்திருந்தால் சொல்லியிருப்பேன்.. ஆனந்த கண்ணீர் கொஞ்சம் இஞ்சி மரப்பா சுவையில் இருக்குமாம்.. ஒரு எதிர்பாரா தருணத்தில் காதலியை இழுத்து , உதடு கவ்விப் பாருங்கள்.. அப்போது அவள் கண்ளில் வரும் நீர் இஞ்சி முரப்பாவின் ருசியை ஒத்திருக்கும்.. புன்னகைப்பூ என்ற திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி உண்டு. நந்தாவும் ,காவிரியும்..நல்ல படம்.. சரி மேட்டருக்கு வருவோம்.. என் கைகளை கண்ணில் ஒற்றிக்கொண்டார் .. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. என்ன சார் என்றேன்..குழந்தையாய் தேம்பியபடி.” இன்னிக்கு நான் இஸ்ரோவில் பெரிய விஞ்ஞானியாக இருக்கிறேன் என்றால் , அதற்கு நீங்களும் , உங்கள் பிளாக்கும்தான் காரணம் என்றார்..

நான் இப்படி சொன்னால் நீங்கள் அடிக்க வருவீர்கள்.. ஆனால் ஒரு நண்பர் கேட்டார்..ஏன் தண்டோராங்கிற பேரை மாத்திகிட்டீங்க ?

பதிவுலக நண்பர் ஒருவர் ..அவர் வீட்டிலும் எல்லோரையும் எனக்கு தெரியும்..மனைவி, மாமியார் வகையாறக்கள்.. ஆனால் தண்டோராவாக.. அவர்களழைப்பதும் அப்படியே.. நண்பரின் வீடு எங்கள் பகுதியில்தான்.. ஒரு நாள் மகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தேன்.. ஒரு குரல் ..சத்தமாக “தண்டோரா சார் “ ஒட்டு மொத்த கூட்டமும் வேடிக்கை பார்க்க, நான் வண்டியை நிறுத்தினேன்.. என் மகள் தலையில் அடித்துக்கொண்டாள்.. நண்பரின் மாமியார்தான் அழைத்தது.. நான் அருகில் சென்று என் பெயர் மணிகண்டன்.. மணின்னு கூப்பிடுங்க என்றேன்..

சரிங்க தண்டோரா சார் என்றார் அவர்..



எல்லாம் கொடுத்தாயிற்று.. அடுத்த ஆட்சியில் தூக்கு சட்டியில் சோறே வீட்டிற்கு வந்துவிடும்..அதான் கழக, கலைஞரின் ஆட்சி என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஒரு அமைச்சர் பெருமான்.... அரை இஞ்சுக்கு அரிதாரம் பூசி , கறுப்பு சாயம் தடவி உலா வரும் பொதுப்பணி பிடுங்கப்பட்ட அமைச்சர் அவர் .. சோற்றால் அடித்த பிண்டங்களே.. ஓசி வாங்கி தின்னுபுட்டு , சந்ததிகளை பெருக்கி கொண்டு வீட்டோடு இருங்கள்.. நாங்கள் ஊரை அடிக்கிறோம்... ஒரு ரூபாய்க்கு உங்கள் உலைக்கு அரிசி கொடுக்கிறோம்..அப்படியே எங்கள் சந்ததிகளுக்கு பெருக்கி கொள்கிறோம் என்கிறார்கள் .. பார்க்கலாம்..பந்து எந்தப் பக்கம் என்று ...



கடவுள் வருவார் காத்திரு
எனக்குள் ஏதோ சொல்லியது
கையில் கிடைத்த காகிதத்தில்
கடவுள் போல்தான் தெரிந்தது
புருவமும் , கோடான நாசியும்
சிலுவையைப்போல்.

இன்னொரு கோணத்தில்
பள்ளி கொண்ட பெருமாளாகவும்..

உனக்கான கோதுமையில்
உன் பெயர் எழுதப்பட்டிருக்கும்
என்ற குரான் வாசகமும் மங்கலாய்

குரலில் சலிப்பும்
கன்னக்கதுப்பில் கவலையுமாக
சார் நேரமாகிறது ..காசு கொடுங்கள்
என்றான் சுண்டல்கார சிறுவன்..
கடைசித்தாளை எடுத்து நீட்டும்போது
இருவரும் ஒருங்கே கண்டோம்
கடவுளை...






Sunday, January 23, 2011

கால்...




தேவையான இடங்களில் போடுவதே இல்லை.. வேண்டாத இடங்களில் ஒன்றுக்கு இரண்டாக . நாற்காலிகளையையோ , விளக்குகளையோ சொல்லவில்லை . காலை சொல்கிறேன் . கால் மேல் எனக்கு அவ்வளவு பிரியம் .


முதலில் நான் பார்த்தது அம்மாவின் காலாகத்தான் இருக்க வேண்டும் . அப்படித்தான் நினைவு . அப்புறம் அப்பாவின் கால் . “தென்னை மரத்துல ஏறியா ..தேங்காயை பறிக்கிறாயா என்ற அந்த பாட்டும் கூட . சில சமயம் அப்பா , அம்மா இருவரின் கால்களும் கொஞ்சம் குழப்பமாய் தெரிந்ததும் உண்டு அரை தூக்கத்தில்.. அதற்கு பிறகு கொஞ்சம் நாளில் பூரணி குட்டி . தங்கச்சி முகத்தை பாருடா என்று அம்மா சொல்வாள் . நான் பூரணியின் பிஞ்சு கால்களையே வருடிக்கொண்டிருப்பேன் . சில சமயம் கன்னத்தில் வைத்து உரசிக்கொள்வேன் .

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எனக்கும் , சிவகுருவுக்கும்தான் போட்டியாக இருக்கும் . ஆன் யுவர் மார்க் என்றதும் இருவரும் ஏரொடைனமிக் போஸில் இருப்போம் . நான் சிவகுருவின் கால்களை பார்ப்பேன் . நானும் அதே மாதிரிதான் இருப்பதாக குரு சொல்வான் . பந்தயம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் அம்மா சுடுதண்ணியில் கல் உப்பை கரைத்து வாளியில் கொடுப்பாள். காலை உள்ளே விட்டு இருக்கும் சுகமே தனிதான் . ஆதுரத்துடன் பாதங்களை வருடிக்கொண்டே , அதனுடன் மானசீகமாக பேசிக்கொண்டிருப்பேன் . பாதம் பதில் சொல்வதை என் உள்ளங்கையால் உணரமுடியும் தெரியுமா ? அதன் பின் கால்கள் மேலான என் காதல் கன்னா பின்னாவாயிற்று .

உஷா டீச்சரின் கால் விரல்களில் திடீரென்று முளைத்த அந்த வளையங்களின் மீது கோபம் வந்தது . “டீச்சர் “ இதை கழட்டிடுங்க என்று சொல்லி டீச்சரிடம் அடி வாங்கினேன் .ஆனால் கொஞ்ச நாளில் உஷா டீச்சர் கால் விரல்களில் அதை காணவில்லை . டீச்சர் முகத்தில் பழைய களையும் இல்லை . பாவம்டா என்று அம்மா சொன்னாள் .

அப்புறம் புவனா . அவள் பச்சை பாவாடை. லேசாக மஞ்சள் பூசிய பாதங்கள். அதில் சிரிக்கும் கொலுசுகள் . நான் உட்கார்ந்திருக்கும் டெஸ்கிலிருந்து இடது புறம் சற்று அரை கீழாக பார்த்தால்கண்ணை பறிக்கும் .சட்டென்று திரும்புவாள் . சிரிப்பாள் .


“இச்சா ..”இனியா “ .காயா..” பழமா “ பச்சை பாவாடையை இரு கைகளாலும் சற்றே மேலேற்றி கேட்டுக்கொண்டிருந்தாள் புவனா. அப்படியே பென்சிலில் வரைந்து எல்லாம் தானடி என்றேன் . எல்லோர் எதிரிலும் அறைவது போல் பாவனை காட்டியவள் , ரகசியமாக அந்த கொலுசுக்கு கொஞ்சம் தங்க கலர் பண்ணி கொடுறா என்று கேட்டாள் . வைத்திருக்கிறாளோ..இல்லை புருஷனுக்கு பயந்து கிழித்து விட்டாளோ ..


அப்புறம் ஒரு ஸ்கூட்டர்காரனின் கால் மட்டும் தனியே கிடப்பதை பார்த்தேன் . ஸ்கூட்டரின் ஒரு சக்கரமும் தனிநீங்கள் யூகிக்கும்படி எழுதியிருக்கிறேன் என்று நீங்கள் நம்புகிறீர்கள் .

நான் மெல்ல என் வீல் சேரினை உருட்டிக் கொண்டு போனேன் . அல்லது போலியோ பாதித்த என் கால்களை பிரத்யோக காலணிக்குள் நுழைத்து , . ஊன்று கோல்களை ஏந்தி ..டக்..டக்.. என்ற கொஞ்சம் , கொஞ்சமாக காற்றில் கரைந்தது . ..அதெல்லாம் இல்லை . ப்ளீஸ் ஸ்டாப்... நான் நன்றாக இருக்கிறேன் . தினம் காலை , மாலை 10 கி.மீட்டர் ஓடுவேன் . உங்களுக்கு தெரியுமா ? நான் 100 மீட்டரில் ஸ்டேட் சாம்பியன் ...

Thursday, January 13, 2011

வாய்யா..வெங்காயம்




என்னய்யா... ரொம்ப நாள் ஆளையே காணும் ?

எங்க வர்றது ? ஒன்னும் சரக்கு தேறலை . வெறுங்கையோடு வந்து உங்க கிட்ட பாட்டு வாங்கறதா ?

ஆமாம்..இல்லன்னா மட்டும் கிழிச்சிடுவ .. என்னவோ முன்ன வந்தப்ப எல்லாம் முத்தை அள்ளி கொட்டிட்டு போயிட்டன்னு நினைப்பா உனக்கு . எல்லாம் புழுதி , புண்ணாக்கு , கால் பழுது , அரை பழுது .. ஏதோ எங்க தலையெழுத்து .. மூஞ்சியை பார்க்கனுமேன்னு வாங்கி தொலைச்சோம் .

ஆமாம்.. உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது . வைரமே வாங்கி படைச்சா கூட , வறட்டின்னு சொல்வீங்க..


சரி . அதை விடு . ஊர் கதை எதாச்சும் இருக்கா ? ஒன்னுமில்லன்னாலும் வம்பாச்சும் வளர்ப்பேயில்லை . ஆமாம் . இந்த வாட்டி சந்தையில நீ வெங்காய கடை போடலையா ?

ஆமாம் . அது ஒன்னுதான் குறைச்சல் . நான் வாத்து முட்டை கடைதான் போட்டேன் . வெங்காயத்துல் என்ன இருக்கு ? உரிக்க , உரிக்க கடைசியில பல்லைத்தான் இளிக்குது . வாத்து முட்டை வாயுவுக்கு நல்லது தெரியுமில்ல..

இந்த . வக்கணைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை . உன்னை சீந்தறதுக்கு ஆள் இல்லைன்னு சொல்லு ? எப்படி இருக்காம் வெங்காய வியாபாரம் ?

அதுக்கென்ன .. பிச்சுகிட்டு போகுதாம் . உள்ளார போயிட்டு வாராவன் எல்லாம் 1 அடி கூட வளர்ந்தாப்லயே வாரான் . அவ்வளவு விருத்தியாம் .

அப்புறம் வேற எதாவது ?


வேற என்ன ? அங்க இங்க கேட்டதைத்தான் சொல்லனும் . மூத்ததுக்கும் , மூணாவதுக்கும் போட்டிதான் . அடுத்த மாசம் 3 ஆம் தேதி தெரியும் ..


ஒன்னும் புரியலை . எதோ ராஜபரிபாலம்னு தெரியுது ?

ராஜாதான் இருக்காரு . பரிபாலம் எங்க இருக்கு . அது எங்காச்சும் ரிக்கார்டு டான்ஸ் ஆடற மேடையில கூத்துல இருக்கும் .

யோவ் ..பார்த்துயா .. டின் கட்டிற போறாங்க.. ஆட்டோ வந்துட போகுது .

அட..நாமல்லாம் அந்த அளவுக்கு ஒர்த் இல்லப்பா.. வேணுமின்னா டி. நகர்லேர்ந்து பொடிநடையா வந்து ரெண்டு தட்டு தட்டிட்டு போகலாம் . அவ்வளவுதான் ..


உன் கிட்ட வாயை கொடுத்தது தப்புதான் . இதுக்கு நீ வராமயே இருந்திருக்கலாம் . நீ கிளம்பு . அப்புறம் எவனாச்சும் எனக்காக பாவம் ரெண்டு ரூபாயை வேஸ்ட் பண்ணுவானுங்க ..

புரியலையே..

புரியலை .. வாலி சொன்னாருல்ல..

என்ன சொன்னாரு ?

தாத்தா ரெண்டு ரூபாய்க்கு கொடுத்தாரு ஒரு கிலோ..

பேரன் கொடுத்தது ஒரு ரூபாய்க்கு ஒரு ஹலோ..