Tuesday, March 31, 2009

'யாவரும் நலம் "


படத்தில் இருக்கும் தலைகளை எண்ணிப் பாருங்கள்...எவ்வளவு வருகிறது..பாராளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கையை பாருங்கள்...
"நல்ல தொரு குடும்பம்...பல்கலை "கழகம்"

Sunday, March 29, 2009

சீறும் சிலம்பெடுத்து


லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடித்த சிலம்பாட்டம் 100 வது நாள் என்று ஒரு போஸ்டர் பார்த்தேன்..வயிறு ப்ற்றி எரிந்தது.ஆபாசம்,இரட்டை அர்த்த வசனங்கள் என்று ஒரு குப்பைக்கு தமிழர்களின் பாரம்பரிய வீரத்தை எடுத்து சொல்லும் ஒரு அரிய கலையின் பெயரா..இதை படிப்பவர்கள் மானசீகமாக அவனை அரை நிர்வாணமாக ஒரு மைதானத்தில் ஓட விட்டு சிலம்பு கழியால் அடியுங்கள்..
சிலம்பம் தமிழர்களின் வீரத்தின் அடையாளம் சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. "சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு. எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட் டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது. சிலம்பம், தமிழர்களின் வீரவிளையாட்டு. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்கள் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடியில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கிறது. "இருவென்று அமிர்தாரசங் கொள்ளும் போது இன்பமுடன் சிலம்பிருக்கும் வகையைச் சொல்லி கருவென்ற பட்சியுட வீச்சுங் காட்டி கால்பிலமும், புஜப்பிலமும் கலந்து சொல்லி திருவென்ற மந்திரத்தின் தீர்க்கம் சொல்லி சிவகைலை பொதிகையில் போய் இரு என்றார்கள். குருருவென்ற பொதிகையில் இருந்து கொண்டு குருவொன குருவெடுத்து ஆடினேனே; ஆடினேன் அதன் பிறகு கோடி கோடி அளவற்ற வித்தையெல்லாம் ஆடிக்கண்டு நாடிநேன் சுழிமுனையில் நாட்டங்கொண்டு நாதாந்த மனோன் மணியைக் கண்டுத் தேறி; பாடினேன் வெகுகோடி சாத்திரங்கள் பக்தியுடன்' என சூத்திரம் பாடல் தெரிவிக்கிறது. அகத்தியர் தமிழகத்திற்குள் நுழைந்த காலம், ராமனின் வருகைக்கு முன்பாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். சுக்ரீவன் தென் பகுதியில் சீதையைத் தேட, வானரங்களை அனுப்பும் போது பொதிகை மலையில் இருக்கும் அகத்திய முனிவரை வணங்கிச் செல்லுமாறு கட்டளையிடுகிறான். எனவே, கி.மு., 2000க்கும் முன்பாக சிலம்பக் கலைக்கு, பொதிகை மலை அடிவாரத்தில் ஒரு பயிற்சிக்கூடம் இருந்து வந்துள்ளது என தெரிகிறது. ஆனால், சிலம்பக் கலை பற்றிய அகழாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. சிப்பி வளையல்கள், உலோகத் தொழிற்கலையில் வல்லவரும், ஜப்பானியத் தீவுகளை ஆய்வு செய்தவருமான பேராசிரியர் கௌலாண்ட், ""பெரும் எண்ணிக்கையிலான இரும்புப் படைக்கலங்கள், கருவிகள் மற்றும் இரும்பை உருக்கும் ஆழ்ந்த அறிவு ஆகியவை இருப்பதிலிருந்து இரும்பை உருக்குதல் என்ற எதிர்பாரா நிகழ்ச்சி, இரும்புத் தொழில் ஐரோப்பாவைக் காட்டிலும், பழைய இரும்புக் காலத்தில் இடம் பெற்றிருந்த இந்திய தீபகற்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார். சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்றவை அடங்கும். கராத்தே என்ற வீர விளையாட்டின் "கடா' என்ற போர்ப்பிரிவு, தன் பெயரைப் பெற்றதற்கு, கதம்ப வரிசையைக் காரணமாக ஏற்கலாம். இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றே. "கராத்தே' என்ற பெயரிலும் "கரம்' என்ற சொல் மூலமாக உள்ளது. கராத்தே வீரக் கலையின் தாய் குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர் மன், (போதி தர்மன்) புத்த துறவி களுக்கு கற்றுக் கொடுத்தார். சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன. சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., திரைப்படங்களின் வாயிலாக சிலம்பக்கலைக்குப் புத்துயிர் ஊட்டினார். சிலம்பத்தில் "வளரி' என்ற எறி ஆயுதம் மருதுபாண்டியர் காலத்தில் வழக்கில் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட மருது பண்டியர், வளரி வீசுவதில் வல்லவராய் விளங்கினார். சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட கர்னல் வெல்ஸ் என்பவர் எனது ராணுவ நினைவுகள் என்னும் நூலில், ""சின்ன மருது தான் எனக்கு ஈட்டி எறியவும், வளரி வீசவும் கற்றுக் கொடுத்தான். வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றலும், திறமையுமிக்க ஒருவரால் 300 அடி தூரம் குறி தவறாமல் வீச முடிகிறது'' என்று கூறியுள்ளார். இந்த ஆயுதம் தமிழருக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் பொதுவானது. தெற்காசியாவிலிருந்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய பழங்குடியினர், அங்கு குடிப்பெயர்ந்து சென்றதாகவும், அவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு உருவ அமைப்பு முழுவதும் தமிழரோடு ஒப்புமை உடையது எனவும் கூறியுள்ளனர். தமிழர்களின் வளரியைப் பற்றி அக்காலத்தில் புதுக்கோட்டை திவானாய் விளங்கியவர் தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பது, வளரியின் அமைப்பு பற்றியும் அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது. ""வளரி என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம். சில சமயங்களில் இரும்பினாலும் செய்யப்படுவதுண்டு. பிறை வடிவிலான அதன் ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக் கனமாய் இருக்கும். (அரிவாள் அல்லது கத்தியைப் போல் அல்லாமல்) இதன் வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும். இதை எறிவதில் பயிற்சி உள்ளவர்கள், இதன் லேசான முனையைக் கையில் பிடித்து, வேகம் கொடுப்பதற்காகச் சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசி எறிவார்கள். ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட விலங்கையோ, ஏன் மனிதரையோ கூட வீழ்த்தும் படி வளரியால் எறியும் வல்லமை படைத்தவர்கள் உண்டெனத் தெரிகிறது. ஆனால், தற்சமயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றே கூறும்படியான நிலை உள்ளது. ஆனாலும், தற்சமயம் முயல், குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத் தெரிகிறது. இருந்த போதிலும், வளரியின் வாழ்வு முடிந்து கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்'' எனக் கூறியுள்ளார். சிவகங்கை சரித்திரம் கும்மியும், அம்மானையும் என்ற நூல் சீரான வண்டியூர்த் தெப்பக் குளந்தாண்டிக் குளங்கீழ்க் கரையாலின் கொப்புகளைக் கத்தரித்து முழங்கி வளரி முனைகொண்டு வேகமுண்டு வித்தார மான வெளிகடந்து தான்வளரி முத்தீ சுபுரத்த மேட்டில் விழுந்திலையோ என்று விவரித்துள்ளது. பெரிய பாண்டியர், தெப்பக்குளத்தின் வடகரையில் இருந்து எறிந்த வளரி, அதன் மைய மண்டபத்தைத் தீண்டாமல் அதையும் தாண்டி எதிர்கரையில் உள்ள முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்; அதுவும் எதிர்கரையிலிருந்த ஆலமரக் கொப்புக்களைக் கத்தரித்து, அதைக் கடந்து வீழ்ந்ததாம். இது இக்கால ஒலிம்பிக் சாதனையை விட அதிக தூரமாகும் என ஆய்வாளர் மீ.மனோகரன் "மருதுபாண்டிய மன்னர்கள்' என்ற நூலில் வியப்புடன் கூறுகிறார். வீரபாண்டிக் கட்டபொம்மனும் ஆங்கிலேயரை விரட்ட சிலம்பத்தைப் பயன்படுத்தி வந்துள்ளதை கொட்டுக் கொட்டென்று மேல் பொட்டிப் பகடையும் கொல்வேன் என்றான் தடிக்கம்பாலே; சட்டுச் சட்டென்று சிலம்ப வரிசைகள் தட்டி விட்டான் அங்கே பாதர் வெள்ளை. என்ற கும்மிப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் பெரும் முயற்சியால் தமிழக அரசு சிலம்பாட்டத்தை பள்ளிகளில் விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. பூ.திருமாறன் அவர்களின் பெரும் முயற்சியால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாகவும் நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், நான் எழுதிய தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' நூலை வெளியிட்டுள்ளது. எனவே,சீரும் சிறப்புமிக்க சிலம்பக் கலையை அனைவரும் பயின்று தமிழகத்தை மீண்டும் வீரத்தின் விளைநிலமாக மாற்றுவோம். நன்றி திரு. கலை நன்மணி அ.அருணாசலம்.(தினமலர் கட்டுரை )

Saturday, March 28, 2009

சொன்னதை செய்வோம்.. செய்வதைதான் சொல்வோம்...


சொன்னதை செய்வோம்.. செய்வதைதான் சொல்வோம்....திமுக வின் தாரக மந்திரம் இது.....2004 பாராளூமன்ற தேர்தலில் என்ன சொன்னார்கள்..எதையெல்லாம் செய்தார்கள்..கொஞ்சம் பார்க்கலாம்.. பெரியார் அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்... தென்னக நதிகளை இனைக்கும் திட்டம் உருவாக்கப்படும்.. மேற்கு நோக்கி பாய்ந்து கடலில் வீணாகும் நீரைகிழக்கே திருப்பி விட திட்டம் வரும்.. ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து ம்ற்றும் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த பறக்கும் கப்பல் திட்டம். திருவான்மீயுர் முதல் மாமல்லபுரம் வரை புதிய ரயில் பாதை..பின் பாண்டி வரை நீட்டிக்கபடும்.. மெட்ரோ ரயில் திட்டம் துரிதபடுத்தபட்டு செங்குன்றம் வரை விரிவு படுத்தபடும் திருச்சி,கோவை,மதுரை,விழுப்புரம் முதலிய ரயில் நிலையங்களில் இருந்து 2/3 பெட்டிகள் கொண்ட ரயில் பஸ்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு இயக்கப்படும். தேசிய உயிரியல் தொழில் நுட்ப நிறுவனம் தமிழகத்தில் நிறுவபடும்.. மண்டல தாவரவியல் வாரியம்,தேசிய அளவில் தாவரவியல் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும். நாங்குனேரியில் கழக ஆட்சியில் தொடங்கபட்ட பிரமாண்ட தொழில் நுட்ப பூங்கா உரிய நிலங்கள் கையகபடுத்தபட்ட பின்னும் கிடப்பில் போடப்பட்ட நிலையை மாற்றி தை செயல் படுத்த மத்திய அரசை வலியுறுத்தப்படும். மாநிலசுயாட்சி கொள்கை வெற்றி பெற தேவையான அரசியல் திருத்தம் நிறைவேற்றபடும். இட ஒதுக்கீடு பிரச்சனையில் அதிக பட்சம் 50% தான் இருக்க வேண்டும் என்பதை மாற்ற சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். மத்திய அரசு பணிகளுக்கு நடத்தபடும் தேர்வுகளுக்கு அந்தந்த மானில ஆட்சி மொழிகளை இணைத்து எழுத்து ம்ற்றும் நேர்மக தேர்வு நடத்த வலியுறுத்தபடும். இன்னும் எக்கச்சககமான வாக்குறுதிகள்........நிறைவேற்ற பட்டதா???? கிட்ட நெத்தியை கொண்டு வாருங்கள்...
www.dmk.in/e2004/emfesto.htm


Tuesday, March 24, 2009

எங்கே செல்லும் இந்த பாதை??

சமீபத்தில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு போக நேரிட்டது..மிக ஆடம்பரமான திருமணம்..அத்தனை லேட்டஸ்ட் மாடல் கார்களும் ஆஜர்.உறவினர் கூட்டத்தை விட நண்பர்கள் கூட்டம்தான் அதிகம் இருந்தது..திருமண வீட்டாருக்கு ஒரு வேலையும் இல்லை.அத்தனையும் காண்ட் ராக்ட்தான்.நெருங்கிய சொந்தங்கள் சிலர் காணும்..ஆஃபிஸ்,மீட்டிங்க்.ஆடிட்டிங்,அப்ராட்,நாள்(அந்த) என்று ஆயிரம் சாக்குகள்...வாண்டுகள் கூட்டம் கம்மி.வந்திருந்த சிலதும் அப்பாவின் மல்டிமீடியா செல்லை நோண்டி போட்டோ,கேம்ஸ் என்று பிஸி...கூட்டம் நிறைய..சத்தம் நிறைய....ஆனாலும் என்னவோ இல்லை..என்ன அது?

என் சொந்த ஊர் தஞ்சை...சிறு வயதில் உறவினர் வீட்டு கல்யாணம் எல்லாம் சென்னையில்தான்(மெட்.. ராஸ்)..கல்யாணம் என்றால் குஷிதான்..வாழை இலை,காய் எல்லாம் வாங்கி கொண்டு சாயந்திரம் 5 மணிக்கு கிளம்பும் செங்கோட்டா பாஸ் பாசஞ்சரில் ஏறினால் காலையில் எக்மோரில் இறங்கி நேராக சத்திரம்....அப்போதெல்லாம் கல்யாணம் 3 நாள் கூத்து..(இப்போ அதுவும் பாதியாகி விட்டது).நான்,3 தம்பிகள்,ஒரு அக்கா,அப்பா,அம்மா(குடும்பதோடு போகலன்னா கோவிச்சுகுவாங்கன்ணே)..சத்திரம் போய் இறங்கினால் அங்கு பெரிய படையே இருக்கும்.மாமா,சித்தி,பெரியப்பா,மற்றும் நம் உறவினர் வீட்டு வாண்டுகள் எல்லாம் சேர்த்து ஒரு 34/40 தேறும்..அப்ப ஆரம்பிக்கும் அமர்க்களம் இருக்கே..அடடா..வாழை பழம் முதல் வடை வரை சமையற்காரருக்கு தெரியாமல் (அவங்க பிசியா ரம்மி ஆடிட்டு இருப்பாங்க..) திருடி பங்கு பிரிப்பதில் சண்டை போட்டு..(சில ஆள்காட்டி எட்டப்பங்களும் செட்டில் உண்டு) வாரி விழுந்து முட்டி சிராய்ச்சு...அதற்கும் பக்கத்தில் எதாவது சைக்கிள் கடையை கண்டு பிடித்து வாடகை சைக்கிள்(ஹவர் சைக்கிள்)எடுத்து ஓட்டி,ஊரை சுத்தி..ஆளாலுக்கு ஒரு பக்கம் தேட வச்சு..அத்தனை அமர்க்களமும் நடக்கும்..(அத்தை/மாமா பெண்களிடம் பிலிம் காட்டும் சைடு ரீலும் உண்டு).இப்ப போல் ஆடம்பரமான சத்திரங்கள் அப்போ இல்லை..எல்லாம் பரிமுனை(parrys)யில் தெலுங்கு செட்டியார் மண்டபங்கள்தான்..அங்கு ஒரு மானேஜர் ..அவர் குடும்பமும் சத்திரத்தின் ஒரு அறையில் இருப்பார்கள்.அங்கும் ஒரு பெண்ணோ,பையனோ.சினேகிதமாகிவிடுவார்கள்..கல்யாணம் முடிந்து சத்திரம் காலி பண்ணும் போது அவர்களை பிரியும் போது ஒரு மெல்லிய துக்கம் வரும்..இதில் எல்லா அம்மாவும் சொல்ற பொதுவான விஷயம்..அப்பா இந்த சனியங்கள் படுத்தல் தாங்காது..ஒரு இடத்துக்கு அழைச்சுகிட்டு வர முடியுதா??மானம் போகுது...(இதில் யார் படுத்தல்,விஷமம் ஜாஸ்தி என்று பட்டி மன்றம் கூட நடக்கும்(கொஞ்சம் பெருமையோடு என்றும் சொல்லலாம்..)

கொஞ்சம் பெரியவனான பின்(நான் வளர்கிறேனே மம்மி??)கல்யாணம் சைட் அடிக்கும் உற்சவமானது..இன்னும் கொஞ்ச நாளானது...மப்பு.... மங்காத்தா..ரம்மி.. என்று ஆரோக்கியமான ?? வளர்சி அடைந்தது...இப்ப நம்ம குடும்பஸ்தனாயிட்டோம்...கொசு வத்தி முடிய போவுது..

இந்த திருமணத்தில் வாண்டுகளையே காணும்..இருக்கும் சிலரும் பேசினால் அதில் ஒரு சின்ன தற்பெருமையே இருந்தது.(பாட்டு..,கராத்தே..கீ போர்டு..நீச்சல்..(ஒரு தாய் குலம் சொல்கிறார்..விக்கிக்கு யார் கூடவும் விளையாடவும் சரி பேசவும் பிடிக்காது..ஸ்கூல்,கிளாஸ்..கம்ப்யூட்டர்..அதான் அவன் உலகம்)..நான் யோசித்தேன் அவர்கள் எதை இழந்திருக்கிறார்கள்..அல்லது எனக்கு அப்போ எது கிடைக்கவில்லை...(இந்த போலியான பொழுது போக்கும் ஆடம்பரமும்)ஏன் இப்படி பிள்ளைகள் தனித் தனி தீவாய் இருக்கிறார்கள்...
காரணம் ஒன்றுதானாக இருக்கமுடியும்..சமூக,பொருளாதார விழிப்புணர்ச்சி அல்லது நன்கு முன் எச்சரிக்கையுடன் வாழ்வை திட்டமிடுதல்...

"நாம் இருவர்..நமக்கு இருவர்..என்று தொடங்கி..பின் அது "நாம் இருவர்..நமக்கு ஒருவர்" என்று ஆனது..இனி என்ன ஆகும் நாமே இருவர்..நமக்கு எதற்கு இன்னொருவர்.." என்று ஆகிவிடுமோ??

""மாமன் தங்கை மகளனான மங்கை உனக்காக?? தாய் மாமன் சீர் கொண்டு வாராண்டி.அவன் தங்க கொலுசு....இந்த பாட்டுக்கு எல்லாம் வருங்கால சந்ததிக்கு பொழிப்புரை எழுதித்தான் புரிய வைக்க வேண்டுமோ?
எங்கே செல்லும் இந்த பாதை??

Sunday, March 22, 2009

தெரியுமா ? பெண்களை பற்றி ....

ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு விமர்சனம் செய்வதை போல் இந்த செய்தியை படித்தவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது...(நன்றி : தினத்தந்தி குடும்பமலர்)

ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியின் பெரும்பாலான பகுதிகளில் பனி உறைந்திருந்தது.அப்போது ஏற்பட்ட கடுங்குளிர் காரணமாக தாவரங்கள் மூலம் கிடைத்த காய்,கனி,கிழங்குகள் கிடைக்கவில்லை.தாவர உணவுகளையே நம்பி வாழ்ந்த மனிதன் அசைவ உணவுக்கு அப்போதுதான் தாவினான்.மாமிசத்தில் உள்ள புரதமும்,கொழுப்பும் குளிரை சகித்துக் கொள்ள உதவியதுடன் வெகு தூரம் சென்று வேட்டையாட சக்தியையும் கொடுத்தது.

இன்று ஆண்களும்,பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள்,ஆதிகாலத்தில் உணவை சேகரிக்க ஜோடியாகப் போனார்கள்.காலப் போக்கில் வேட்டையாடுவதில் ஆபத்துக்கள் பெருகின.பெண் உயிரோடு இருந்தால்தான் மனித இனம் பெருகும் என்பதால் பெண்கள் வேட்டைக்கு வருவதை குறைத்துக் கொண்டார்கள்.இப்படித்தான் பெண்களை ஒரிடத்தில் நிலையாக தங்க வைக்கும் பழக்கம் தொடங்கியது.

பெண்களைப் போல் தாங்களும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஆதிகால ஆண்களுக்கும் இருந்ததை பாரம்பரிய கலை வடிவங்கள் நிரூபிக்கின்றன.தன் தொடையிலிருந்து மகன் டயோனிஸசை பிரசவிக்கும் கிரேக்க கடவுள் சீயஸ்,தன் விலா எலும்பிலிருந்து ஏவாளை உருவாக்கிய ஆதாம் ஆகியோரை உதாரணமாக கூறலாம்.

மாடு மாதிரி உழைக்கிறாள்" என்று அதிகமாக உழைக்கும் பெண்களை பற்றி சொல்கிறார்கள். உண்மையில் ஆணைக்காட்டிலும் பெண்ணிடம்தான் அதிக சக்தி இருக்கிறது.ஆணின் உடலில் தசை அதிகம்.கொழுப்பு குறைவு.அதாவது 40% தசை.15%கொழுப்பு கொண்டது அவன் உடல்.பெண்ணோ நேர்மாறாக தசை 30%.கொழுப்பு 27%.தசைகள் இயங்க நிறைய எரிபொருள் தேவை.கொழுப்புதான் எரிபொருளை சேகரித்து வைத்திருக்கும்.பெண்கள் உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் ஆண்களை விட கடினமாக உழைக்க முடிகிறது.

ஆண் உடலில் டெஸ்ட்ரோஜன் அவனை உயரமாக,புஷ்டியாக,வழுக்கையாக,வீரம் உள்ளவனாக,உடல் தோலில் அதிக ரோமங்கள் கொண்டவனாக மாற்றுகிறது.ஈஸ்ட் ரோஜன் பெண்னை கொழுக் மொழுக்காக,மார்பு பெரிதாக,இடை சிறிதாக இடுப்பு அகலமாக மாற்றுகிறது.இந்த தோற்றத்தில் பெண்ணை பார்க்கும் ஆண் ஈர்க்கப்படுகிறான்மேலும் இதே ஈஸ்ட் ரோஜன் பெண்களின் நோய் எதிர்ப்பு கேடயமாகவும் விளங்குகிறது.


ஒரு பெண்ணுக்கு முதன் முதலாக மாதாந்திர உதிரப் போக்கு ஏற்படும்போது அவள் பருவம் அடைந்து விட்டதாக கருதப்படுகிறாள்.ஆனால் ஆண்களுக்கு அது போல் இல்லை.அவன் அரும்பு மீசை,உடலில் வளரும் ரோமங்கள் அதற்கு அறிகுறியாகின்றது.ஆதிகால ஆண்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது.ஆணும் வயதுக்கு வந்து விட்டான் என்பதை உணர்த்த அவன் உடலில் கீறி ரத்தத்தை வெளியேற செய்வார்கள்.அந்த வடு அவனை வயதுக்கு வந்தவனாக அடையாளம் காட்டும் இன்றும் ஆப்பிரிக்க பழங்குடியினர் நம்புகின்றனர்.
மனித நாகரீக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்ணை ஆண்களுக்கு பிடிக்கவில்லை.இதனால் அவளை ஒதுக்கினார்கள்.இதைப் புரிந்து கொண்ட பெண்கள் ஆண்கள் எதிரில் அப்பாவி போல் நடிக்கத் தொடங்கினாள்.சீனப் பெண்கள் ஆண்கள் புரிந்து கொள்ளா வண்ணம் உருவாக்கிய எழுத்து வடிவம் "நூஷூ".அப்படியென்றால் "பெண்ணின் எழுத்து"என்ற அர்த்தமாம்.

உலகிலேயே அதிக குழந்தைகள் பெற்றவர் ரஷ்யாவின் "வஸீலியே" 69.எதில் 12 பேர் இரட்டையர்.21 பேர் மூன்று முன்றாக பிறந்தவர்(7 தடவை)16 பேர் நான்கு நான் காய் பிறந்தவர்..(4 தடவை).மீதி 20 பேர் தனியாய் பிறந்தவர்கள்.உலகில் அதிக குழந்தைகளுக்கு அப்பா என்ற பெருமையை தட்டி செல்பவர் மொராக்கோ நாட்டின் மகாராஜா மவுலே இஸ்மாயில்..பல மனைவிகள்(ஹீம் ...) மூலம் 888 பிள்ளைகள்.(சே ..சே )

நன்றி : தினத்தந்தி குடும்ப மலர்.

Thursday, March 19, 2009

ரெயின் ரெயின் கோஅவே

வறுமையோடு வாய்சண்டை போட்டுக் கொண்டிருந்த காலம் அது.ஒரு சிறிய வீட்டில் குடி இருந்தோம்.நான்,என் மனைவி,என் 6 வயது மகள்.. 150 சதுர அடி ஹால் ..அதில் சமைலறையாக ஒரு சிறிய தடுப்பு.அவ்வளவுதான்...வாசல் முன் புறம் சிமெண்ட் பூசப்படாமல் மண் தரையாகவே இருந்தது.மழைக் காலங்களில் மிக அவஸ்தையாக இருக்கும்..வெளியில் இருந்து உள்ளே வந்தால் ஹால் பூராவும் சேறாகி விடும்..வீட்டு உரிமையாளரிடம் சொல்லி சொல்லி அலுத்து போயிற்று..பொறுமை மீறி ஒரு நாள் இரவு கேட்கப் போய் பெரிய சண்டை.(ஓல்டு மங்க் -ஓவர் டங்க்)


மறு நாள் விடிந்தது..எழுந்திருக்கும் போதே குற்ற உணர்ச்சியில் கூனிப் போனேன்.அவ்வளவு அவரை திட்டியிருக்கிறேன்..

சரி வேற வீடுதான் பார்க்கணும்னு வெளியில் வந்தால் ஹவுஸ் ஓனர் நின்று கொண்டிருந்தார்....இரண்டு ஆட்கள் மண்ணை கொத்திக் கொண்டிருந்தனர்..அவர் முகத்தை நான் தவிர்த்து திரும்பும் போது மணி என்று கூப்பிட்டு மன்னிச்சுக்கப்பா..என் தப்புதான் ..நா சொன்ன மாதிரி இதை முன்னயே செஞ்சு கொடுத்திருக்கணும்..இன்னைக்கு முடிச்சிருவாங்க. சொல்லி விட்டு போயே விட்டார்....என்னை அவமானமும் குற்ற உணர்வும் அரித்தது..சே...நாம் அவருக்கு முன்னாடி ஒரு சின்ன சாரி சொல்லியிருக்கலாம்...மனைவி சொன்னாள்..இனிமேலாவது குடிச்சிங்கின்னா..வாயை மூடிகிட்டு கவுந்தடிச்சு பேசாம படுத்து கிடங்க.....

பின் குறிப்பு.... 1.. அன்று இரவு நானும் அவரும் சேர்ந்து குடித்தோம்..

பின் குறிப்பு.....2... மற்றொரு மழை நாள்..வாசலில் கையில் அதே oldmonk.பக்கத்தில் மனைவியும் மகளும்..ஆனந்தமாக இருந்தது..ஆனால் என் மகள் மட்டும் எதையோ பறி கொடுத்தது போல் இருக்க..காரணம் கேட்டேன்..எல்லாம் உன்னாலதான்பா..முன்னே எல்லாம் மழை பேஞ்சா ஜாலியா இருக்கும். சேத்துல தொப்புனு குதிச்சு விளையாடுவேன்..நம்ம வீட்டு வாசல்ல தோ இங்க உக்கார்ந்து கிட்டே கப்பல் விடுவேன்..இப்ப பாரு தண்ணி நிக்காம ஓடியேப் போயிடுது..நீ அன்னைக்கு சண்டை போடாம இருந்திருக்கலாம்....

Monday, March 16, 2009

நன்றி ..தமிழ் ஸ்டுடியோ.காம்


கலை மீது தீராத தாகம் கொண்ட பலர் அந்த தாகம் தீராமலேயே தங்கள் இறுதி நாளை கழித்து விடுகின்றனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தங்கள் குடும்பத்தையும் மேம்படுத்தி தங்களின் கலை தாகத்தையும் தீர்த்துக் கொள்கின்றனர். அந்த வகையில் திரு. மணிகண்டன் அவர்கள் ஆரம்பக் காலகட்டத்தில் உதவி இயக்குனராக இருந்துவிட்டு, பின்னர் ஒரு விளம்பர நிறுவனத்தை தொடங்கி, இன்று குறும்படங்கள் மூலம் தனது கலை தாகத்தை தீர்த்துக் கொள்ளும் இவர் சற்றே வித்தியாசமான மனிதர். "சீயர்ஸ்" என்கிற தனது குறும்படம் மூலம் நமது கவனத்தை ஈர்க்கும் மணிகண்டன் அவர்கள், குடிப்பழக்கத்தின் விளைவை எந்த வித பிரச்சார நெடியும் இன்றி மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார்.

மூன்று நிமிட காலத்திற்குள் இது போன்ற ஒரு செய்தியை பார்வையாளர்கள் மனதில் பதிய வைப்பது அவ்வளவு எளிதல்ல. அந்தப் பணியை மிக செம்மையாக செய்து முடித்திருக்கிறார் மணிகண்டன். இவர் போன்றவர்கள் குறும்படத் துறையில் நுழைந்து நல்ல பல படைப்புகளை கொடுத்து இத்துறை வளர தங்கள் பங்களிப்பை செய்தால் போதும். குறும்படத் துறை நாளடைவில் நல்ல வளர்ச்சி பெரும்.

இந்தத் துறையை ஒரு மாற்று ஊடகமாக வார்த்தெடுக்கும் முயற்சியில் இது போன்ற நல்ல நண்பர்கள் இணைந்துக் கொள்வார்களேயானால் அந்த முயற்சி எளிதில் வெற்றி பெரும். மேலும் தனது சீயர்ஸ் படம் மூலம் பல பரிசுகளை பெற்றுள்ள அவர் "குறும்பட தயாரிப்பு செலவை ஈடுகட்ட போட்டிகள் மட்டுமே நிகழ்காலத்தில் நமக்கு கைகொடுக்கும்" என்று நமக்கு உணர்த்துகிறார்.

இனி இயக்குனர் திரு. மணிகண்டன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

1. முதலில் உங்களைப் பற்றிய சில அடையாளங்கள்?

எல்லோரையும் போல் கலை தாகத்தில் தஞ்சையிலிருந்து சென்னை வந்த ஒரு சாதாரணன். நீண்ட போராட்டத்திற்கு பின் ஒரே ஒரு படம் துணை இயக்குனராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது... ஆனால் ஒரு வேலையும் தரப்படவில்லை. நிறைய அலைந்து.. பின் பாதை மாறி விளம்பரத் துறைக்கு வந்து விட்டேன்.

2. தற்போது விளம்பரத் துறையில் இருந்து குறும்படங்கள் எடுக்க வரும் ஆர்வலர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.. இதற்கு என்னார் காரணம்?

என்னை பொறுத்தவரை..ஆத்ம திருப்தி..நாமளும் நாலு பேரால் கவனிக்கப்பட வேண்டும் என்ற விழைவு..

3. நீங்கள் இதுவரை எடுத்துள்ள குறும்படங்கள் பற்றி?

நான் எடுத்த முதல் குறும் படம் "தொலைந்து போகும் கடிதங்கள்" நாம் இருவர்..நமக்கு இருவர்" பின் நமக்கு ஒருவர் என்ற சிவப்பு முக்கோண திட்டத்தினால், வரும் தலை முறையினர் உறவுகளே இல்லாமல் தனித் தீவாய் போகும் அபாயத்தை 5 நிமிட குறும்படமாய் எடுத்தேன்..ஆனால் அதன் உருவாக்கம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.எனவே அதை எங்கும் திரையிட வில்லை..மீண்டும் எடுக்க இருக்கிறேன்...பின் சியர்ஸ். ஸ்மைல் இது ஊனமுற்ற ஒரு சிறுமியை பற்றிய ஒரு நிமிடப் படம்...

4. உங்கள் "சீயர்ஸ்" குறும்படம் குடிப் பழக்கத்தின் விளைவுகளை அழகாக மூன்று நிமிடத்திற்குள் சொல்லிவிடுகிறது. ஆனால் நீங்கள் சொல்லிய விதம் சாதாரண பொது மக்களை சென்று சேர்ந்ததாக நினைக்கிறீர்களா?

பார்த்தவர்கள் பாராட்டினார்கள்... பரவலாக போய் சேர்ந்தால் விழிப்புணர்ச்சி ஏற்படலாம்..

5. குறும்படத் துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டில் எப்படி உள்ளது? இதற்கான விழிப்புணர்வு மக்களிடையே காணப்படுகிறதா?


கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறிப்பிடதக்க அளவில் குறும்படத்துறை முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன் நிறைய பேருக்கு படம் பண்ண ஆவல் இருக்கிறது..ஆனால் அது திரைப்படத்தை நோக்கிய முயற்சியாகத்தான் இருக்கிறது..இது ஆரோக்கியமான அறிகுறியாக தெரியவில்லை..

6. ஜனரஞ்சக திரைப்படங்களில் இருந்து குறும்படங்கள் எவ்விதத்தில் வேறுபடுகிறது?

சினிமா மிகப் பெரிய வியாபாரம்..லாபம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். ஆனால் குறும்படம் மக்கள் பிரச்சினைகளை பேசும்..ஆவணப் படங்கள் நம் கலை, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் நெறி முறைகளை எதிர்கால தலைமுறையினருக்கு பதிவு செய்து பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாகும்.

7. ஆனால் தற்போது வெளிவரும் குறும்படங்கள் ஜனரஞ்சக திரைப்படங்களில் வேறுபட்டதாக தோன்றவில்லையே? இவர்கள் பணம் ஈட்டவும், திரைப்படத் துறையில் நுழைய ஒருத் துருப்பு சீட்டாகவும் மட்டுமே குறும்படத் துறையை பயன்படுத்துவாகத் தோன்றுகிறதே?


உண்மைதான்..இதற்கு அடிப்படை காரணம்.. திரைப்படம் தரும் புகழ் போதையும், ஆடம்பரமும்... இளைஞர்கள் இதற்கு அடிமையாகும் சாத்தியக் கூறு அதிகம். திரு. அருண்மொழி மாதிரி சிலர் விதிவிலக்காக இருக்கலாம்

8. குறும்படத் துறையை மாற்று ஊடகமாக கொண்டு செல்ல இன்னும் என்ன என்ன பணிகள் முன்னெடுத்து செல்லப்பட வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

அரசாங்கம் கலைமாமணி விருதுக்கு வெட்டியாக செலவு செய்யும் பணத்தை மாற்று ஊடக வளர்ச்சிக்கு திருப்பலாம்..சென்னை சங்கமம் என்று சுய அரிப்பை சொறிந்து கொள்ளும் நிகழ்சிகளில் குறும்படம், ஆவணப் படம் போன்றவற்றை சிறிய அளவேனும் ஊக்குவிக்கலாம். பெண் சிசு கொலை ஒழித்தல், போலியோ மருந்து போடுதல், குடிப்பழக்கம் நிறுத்துதல் முகாம் போன்ற விழிப்புணர்ச்சி நிகழ்வுகளில் குறுமபட இயக்குனர்களை பயன்படுத்தலாம்....தமிழில் எடுக்கப் படும் ஆங்கில படங்களுக்கு வரி விலக்கு கொடுக்கும் அரசு இதையெல்லாம் செய்யுமா?மானாட, மார்பாட என்று மக்களின் மலிவான ரசனையில் பாலுணர்வை தூண்டவே இருக்கும் சேனல்கள் ஒரு பரிகாரமாகவேணும் இதை செய்தால் நன்று.

9. உங்கள் எதிர்கால திட்டங்கள் பற்றியும், உங்களுடன் தொடர்ந்து பணியாற்றும் இதரக் கலைஞர்கள் பற்றியும் ஒரு சில வரிகள்...

வாழ்வை பிரதிபலிக்கும் செய்திகளை பதிவு செய்ய வேண்டும்..என்னுடன் பணியற்றும் ஒளிப்பாதிவாளர் திரு பிரவீன், இசை அமைப்பாளர் திரு. அனில் இவர்களின் பங்களிப்போடு இது சாத்தியமாகும் என்று ந்ம்புகிறேன்.

10. குறும்படத் துறை வளர நீங்கள் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்கும் உதவி.. அல்லது இந்தத் துறையில் புதிதாக நுழைய விரும்புபவர்களுக்கு உங்களால் செய்ய முடிந்த உதவிகள் குறித்து...

சொல்கிற கதையில் ஒரு நேர்மை இருந்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்...திரைப் படத்தில் நுழைய நேர்ந்தாலும் அவ்வப்போது சில நேர்மையான படைப்புகளை தருவது ஒரு சமூக கடமையாகும் என்பது என் எண்ணம்..

தமிழ் படைப்புலகத்திற்க்கு உங்கள் பணியும் நிச்சயம் மிகப் பெரிய பங்களிப்பாகும்..தமிழ் ஸ்டுடியோ.காமிற்க்கும் ஏனைய படைப்பாளிகளுக்கும் என் நன்றியும் வணக்கமும் உரித்தாகுக....
நன்றி...


நான் இயக்கிய குறும் படமான "சியர்ஸ்" தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய குறும்பட வட்டத்தில் திரையிடப் பட்டது.தொடர்ந்து ஒரு சிறிய நேர் காணலையும் வெளியிட்டு எனக்கும் ஒரு சிறிய அங்கீகாரத்தை தந்த தமிழ் ஸ்டுடியோ விற்கு எனது மனமார்ந்த நன்றி..குறும்பட ஆர்வலர்களும்,இயக்குனர்களும் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு விழைகிறேன்.
www.thamizhstudio.comFriday, March 13, 2009

வலைப் பதிவர் நல வாரியம்

மதுரை மன்னரின் அன்பு மகள் கவிதாயினி கயல்விழி அண்மையில் ஒரு புதிய கண்டுபிடிப்பை திருவாய் அருளியிருக்கீறார்.அது "பராசக்தி முதல் உளியின் ஓசை" வரை மு.க அவர்கள் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக எழுதி வந்திருக்கிறார்.திமுக வின் இலக்கிய அணி செயலாளர் அல்லவா?முகவின் இரண்டாவது மனைவியின் முதல் மகனின் புத்திரி..தன் தாத்தாவின் குடும்ப வாழ்க்கையை செளகர்யமாக மறந்து போயிருக்கீறார்.அதாவது சி.எஸ். ஜெயராமனின் தங்கையை முதல் மணம் முடித்து ஒரு குழந்தையும் பிறக்கிறது.(நம்ம டாஸ்மாக் பார்ட்டி).முதல் மனைவி இறந்ததும் இரண்டாவதாக தயாளு அம்மாவை கட்டி நான்கு பிள்ளைகளை பெற்று கொள்கிறார்....அடுத்து தன்னுடன் "வேலைக்காரி.ஒர் இரவு "முதலிய நாடகங்களில் ஜோடியாக நடித்த ராஜாத்தியை இணைத்து கொண்டு கனி மொழி என்ற மற்றொரு கவிதாயினியை பெற்று தமிழ் தொண்டாற்றுகிறார்.ஒரு வேளை அந்த பெண்கள் பிறருக்கு அடிமையாகமல் தடுத்து விட்டாரோ?ராஜாத்தி அம்மா வீட்டில் இவர் தங்கும் போது தயாளு அம்மா என்ன நினைத்திருப்பார்...என்ன வேதனை அவர் பட்டிருக்க கூடும்? அதனால்தானோ என்னவோ என்றும் அவர் முகத்தில் ஒரு மெல்லிய சோகம் இழையோடிக் கொண்டேயிருக்கிறது.கொடுமை என்னவென்றால் பேரன்,கொள்ளுப் பேரன் எல்லோருக்கும் ஒரே வயது என்பதுதான்..


ஹாட் டூப்ஸ்(உண்மையானாலும் ஆகலாம்)

முது வலியை வென்றமுத்தமிழுக்கு நேரு விளையாட்டரங்கில் மாபெரும் பாராட்டு விழா நடை பெற்றது.முதுகு வலிக்கு காரணம்
"ஜெகத்ரட்சகனா இல்லை கீ.வீரமணியா என்ற தலைப்பில் பட்டி மன்றமும் நடை பெற்றது.இந்த விழாவிற்கு ஆம்புலன்சில் வந்த முதல்வர் தமிழை கௌரவிக்கவே தான் கடுமையான வலியிலும் நிகழ்சிக்கு வந்ததாக கண்ணிர் மல்க கூறினார்.அவர் மேலும் பேசுகையில்" புலவர்களுக்குள் சச்சரவு வரலாம்..சண்டை இருக்கக் கூடாது..எனவே இருவருக்கும் அந்த பெருமை சேரும் என்று கூறுகையில் ஜெகத்தும் வீரமணியும் ஓவென்று கதறி அழுதனர்...

முதன் முறையாக சென்னை எழும்பூர் மீயூசியத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மெழுகு சிலை அமைக்கப்படுகிறது.அகில இந்திய மெழுகுவர்த்தி தயாரிப்பாளர் சங்கம் இதை அமைக்கின்றனர்.வரும் அம்மாவாசையன்று இரவு இந்த சிலையை பிரபல பீரோ புல்லிங் கொள்ளையன் திரு. கறுப்பசாமி திறந்து வைக்கிறார்.

சென்னை காவல் துறை தலைவர் ராதாகிருஷ்ணன் அந்த பதவியிலிருந்து தூக்கப் பட்டு "புல் பிடுங்குவோர்" நல வாரியத்தின் தலவராக நியமிக்க பட்டுள்ளார்.வழக்கறிஞர் சங்கத் தலைவராக இருந்த திரு .பிராபகரன் புதிய காவல் துறை தலைவராக பணி அமர்த்தப் பட்டுள்ளார்.கறுப்பு கால் சட்டையும் காக்கி மேல் சட்டையும் அவருக்கு சீருடையாக இருக்கும் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளராக ஸ்டாலின் பேரன் திரு இன்பநிதி அறிவிக்கப்பட்டுள்ளார்.கழகத்திற்காக அவர் சிறை சென்றுள்ளதாக திமுக தலைவர் பெருமையுடன் கூறினார்.(அது ஒண்ணுமில்லீங்க மு.க ஜெயிலில் இருக்கும்போது அவரை பார்க்க போயிட்டு வந்தாராம்)

வலைப் பதிவர் நல வாரியம் அமைக்கப் படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Thursday, March 12, 2009

வசந்தம்,சுகந்தம்,முகில்,துகில்,தனிமை,இனிமை,நீ,நான்,நிலா,சோகம்,ராகம்

வசந்தம்,சுகந்தம்,முகில்,துகில்,தனிமை,இனிமை,நீ,நான்,நிலா,சோகம்,ராகம் என்று அடுக்கு மொழியில் கவிதை என்று நானே சொல்லிக் கொண்டு கிறுக்கி தள்ளிய பருவம் அது.கூடவே காதலும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்.பேப்பருக்கு வந்த கேடு காலம்.வெள்ளையாய் எதை பார்த்தாலும் கவி மழைதான்.அதிலும் அந்த முதல் காதல் தோல்வி அடைந்தவுடன் கவிதை என்னிடம் பட்ட பாடு(அப்பன் காசில் சார்ம்ஸ் சிகரெட்,அரைத் தாடி,நண்பர்களின் அனுதாபம் வலுகட்டாயமாக வரவழைத்து கொண்ட மெல்லிய சோகம்..சும்மா சொல்லக் கூடாது..அது ஒரு சுகம்தான்..நண்பா முதல் காதல் எப்பவும் தோல்வி தான் அடையனும்..அப்பதான் அடுத்தடுத்து நிறைய ட்ரை பண்ணலாம்..ஒரு உயிர் நண்பன்)...வைரமுத்துவின் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" ஹிட்டான் சமயம்..சினிமா ஆசை வந்து தொலைத்தது...கல்லுரி படிப்பு? பாதியில் புட்டுகிச்சு..
ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 100 பேர் சினிமா ஆசையில் சென்னைக்கு வருவதாக சொல்லப் படுகிறது.நானும் வந்தேன்(அப்போ மதராஸ்)...என் கவி திறமைக்கு இளையராஜாவே எக்மோருக்கு வந்து என்னை வரவேற்பார் என்று நான் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தேன்...(ஒன்றும் பெரிய ஆசையெல்லாம் இல்லை..ஒரு பாட்டெழுதி விட்டால் ராஜியை மடக்கி விடலாம் என்ற அல்ப ஆசைதான்)
ஏவிஎம் ஸ்டுடியோ முதல் கேட்டில் யார் வேண்டுமானாலும் போகலாம்.இரண்டவது கேட்டில் தான் பிரச்சனை.நான் அங்கேதான் மாட்டிக் கொண்டேன்..யாரை பார்க்கணும்.....ராஜா சாரை...அவர் பிரசாத்ல இல்ல இருப்பாரு போ போஎன்று செக்யூரிட்டி விரட்ட அன்று தொடங்கியது என் சினிமா யாத்திரை.இன்னும்.....வரும்

"புன்னகை மன்னன்"ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்.....

இந்தியாவின் இன்ஷியல் என்ன? G.ஏன். காந்தி தானே "FATHER OF OUR NATION" ஸ்கூல் படிக்கும் போது கேள்விப் பட்ட புதிர் இது.நிறைய பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் மகாத்மாவை பற்றி எழுதி பரிசுகள் வாங்கி இருக்கிறேன்.
"புன்னகை மன்னன்" என்று வாலி அவருக்கு சூட்டிய பெயர் எவ்வளவு பொருத்தம்.மித வாதி என்று பெயர் வாங்கியிருந்தாலும் என்னை பொறுத்தவரை அவர் ஒரு ஆத்ம தீவிரவாதி.ஆயுதம் ஏந்த அசட்டு துணிச்சல் கூட போதும்.எத்தனை துயரிலும் புன்னகையை தொலைக்காத,அகிம்சையை கை விடாத பாங்கு..இதற்கு தேவையான வைராக்கியம்...இந்த மனிதரை வெல்ல முடியுமோ?

காந்தி எங்காவது கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்காமல் இருந்திருப்பாரோ?பின் ஏன் காந்தி கணக்கு என்ற வார்த்தை புழக்கத்தில் இருக்கிறது ?

ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்.....காந்தியின் கொள்கைகளை நாம் எப்பவோ ஏலம் விட்டு விட்டோம்...ஆனால் இப்ப விடப் பட்டது.. அவர் பயன் படுத்திய பொருட்களாம்...

வாழ் நாளெல்லாம் காந்தி யாரை எதிர்த்தாரோ அவன் தான் காந்தியை பற்றி படம் எடுத்தான்.காந்தி கடுமையாக எதிர்த்த இன்னொன்று மது...ஆனால் விதி பாருங்கள்..சாராய சக்கரவர்த்தி விஜய் மல்லையா தான் அவர் பொருட்களை ஏலம் எடுத்ததவர்..அதை இந்திய அரசுக்கு அன்பளிப்பாக கொடுக்கப் போகிறாராம்...ஹே...ராம்..

பின் குறிப்பு:அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி..டாஸ்மாக் லீவு..முத நாளே சரக்கு வாங்கி வைக்காட்டி..பிளாக்ல வாங்க வேண்டியிருக்கும்.

Wednesday, March 11, 2009

சிவன்,சைக்கிள்,வண்டி

சிவன்,சைக்கிள்,வண்டி,டம்,பொட்டலம்,தூள் எனப் பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது.பெரிய மேதைகள் கூட இதற்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது.காரணம்..மனதை ஒரு நிலை படுத்தும் சக்தி இதற்கு உண்டென்று சொல்லப்படுகிறது.ஜெயகாந்தன் இதன் பரம ரசிகராம்..சமீபத்தில் வெளி வந்த "நான் கடவுள்" திரைப் படத்தில் இதுவும் ஒரு முக்கிய கதாபாத்திரம்.

அது "கஞ்சா" என்று அழைக்கப் படும் போதைப் பொருள். சாராயம்,மது வகைகள் போல் ஆளை சாய்த்து விடாமல் ஒரு வித மோன நிலையில் மனிதனை வைத்திருக்கும்.வாசனை வராது..அதனாலேயே நிறைய பெரிய படைப்பாளிகள் இதை நாடுகிறார்கள்.நான் கல்லூரியில் படிக்கும் போது இந்த ராஜ போதையை அனுபவித்தது உண்டு.கஞ்சா அடித்து விட்டு சிரிக்கவோ, அழவோ தொடங்கினால் நாம் அதையே செய்து கொண்டிருப்போம் என்பது இதன் தனிச்சிறப்பு.கண்கள் சொருகி நடை லேசாக தவறி நம்மை நாமே அனுபவிக்கும் ஒரு வித போதை....இன்றும் சைதாப் பேட்டையில் என் அலுவலகத்தின் வாயிலில் கூட விற்கிறார்கள்..நான் இப்போது டாஸ்மாக் தான்...

கஞ்சா வை வைத்து ஒரு அரசியல் புரட்சியே செய்தது அம்மாதான்...முதலில் திடீர் வளர்ப்பு மகன் மீது..பின் எம்.ஜி.ஆர்.. நினைவு இல்ல பொறுப்பாளர் முத்து..அதன் பின் காஞ்சி சங்கர மட விஸ்வநாதன் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டது.இதன் உச்ச கட்டம் மதுரை ஷெரினாதான்..சசிகலா விற்கு சக்களத்தியாகி விடுவார் என்ற நிலையில் அவர் மீ தும் கஞ்சா வழக்கு...இதற்காக மதுரை செக்காயுரனி போலிசார் கோர்ட்டில் காண்பிக்க கஞ்சாவை தேடி அலைந்தது தனிக் கதை.தமிழ் நாட்டில் தேனி மற்றும் அதை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் அதிகம் விளைகிறது..அங்கிருந்து தான் சென்னைக்கு தினம் ஆம்னி பஸ்ஸில் வருகிறது என்று ஒரு வியாபாரி ? கூறினார்.இன்று ஜீவியில் இதை பற்றி எழுதி இருக்கீறார்கள்.உடலுக்கு கெடுதல் தான்....ஆனால் களவும் கற்று மற என்பதை போல் ஒரு முறை அடித்து பார்க்கலாம்.

Tuesday, March 10, 2009

நன்றி நிலவுப் பாட்டு

சும்மா ...சும்மானன்காட்டியும்

பந்தலிலே பாகற்க்காய்...

பந்தலிலே பாகற்க்காய்...
தொங்குதடி பாத்தியா??
போகும் போது பறிச்சுக்கலாம்..அடியே....

இது தென் தமிழ் நாட்டின் ஒரு ஒப்பாரி பாடல்...எழவு வீட்டிற்க்கு ஒப்பாரி வைக்க வந்த இருவர் ஊடே அந்த வீட்டில் இருக்கும் பாகற்காய் கொடியை கண் வைத்து பாடுகிறார்கள்.ஓப்பாரி...உண்மையில் அழிந்து கொண்டு வரும் ஒரு அற்புதமான கலை...துக்க வீட்டில் ராகம் போட்டு பெருங்குரலெடுத்து பாடும் போது ....துக்கம் கரைந்து..அழுகை வெளிப்பட்டு மனம் லேசாகிறது.தமிழ் நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஒப்பாரி பாடப்பட்டு வருகிறது..மதுரை,ராமனாதபுரம்,தேனி,திண்டுக்கல்,தூத்துக்குடி,சேலம் என அந்தந்த வட்டார வழக்கில் ஏராளனமான பாடல்கள் .இதை பற்றி ஒரு ஆவனப் படம் செய்ய வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.விரைவில் தொடங்குவேன் என்று நினைக்கிறேன்..

இன்று செய்தித் தாளில் முதல்வரின் முழு பக்க அறிக்கை வெளியாகி உள்ளது..என்ன அது?ஸ்பெக்ட்ரம் பற்றி விளக்கமா?
பூங்கோதைக்கு அமைச்சர் பதவி மீண்டும் தந்தது பற்றி தன்னிலை விவரமா?இல்லை..இன்று பற்றி எரிந்து கொண்டிருக்கும் நீதி துறை,காவல் துறை பிரச்சனையை எப்படி தீர்க்கலாம் என்பதை பற்றியா....அதெல்லாம் ஒரு அதி முக்கியமான விழயமா என்ன?

பின் என்ன? அதுவும் ஒரு வகை ஒப்பாரிதான்..தனக்கு முதுகு வலி..தண்டில் (முதுகு) வீக்கம்..ஊசி போட்டார்கள்..தாங்க முடியாத வேதனை...அழகிரி ஆசி வாங்கினார்...பிரனாப் இலங்கைக்கு விடை பெற்றார்...இதை விட கொடுமை..ஜெயலலிதாவும் வைகோவும் தன்னை வார்த்தையால் குத்தி துன்புறுத்தினார்கள்....முடியலே,,விட்டுரு..அழுதுடுவேன்..வலிக்குது...ஒப்பாரி ஒன்றும் மு.க வ்ற்கு புதிதல்ல..
எம்.ஜி.ஆர்..இருக்கும் போதும் புலமபல்தான்..13 வருடம் வனவாசம் போதாதா?அவர் வந்தால் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன்....சுய இரக்கம்.சுய பச்சாதாபம்,அழுகை,புலம்பல்,கெஞ்சல்,..இதெல்லாம் எழவு வீடாக இருந்தாலும் தான் தான பிணமாக இருக்க வேண்டும் என்ற முதல்வரின் மன நிலையை த் தான் காட்டுகிறது..

பல்லாவரத்தில் நடை பெற்ற பா.மா.க மாநாட்டில் ராமதாசும் அவர் பங்குக்கு ஒரு பாட்டம் அழுது தீர்த்தார்...அன்புமணி யை பாராட்ட யாருக்குமே மனமில்லை..என்று புலம்பி தீர்த்தார்...மத்திய சுகாதார த் துறை அமைச்சர் கலந்துக் கொண்ட இம் மாநாட்டினால் ஏற்பட்ட போக்குவத்து நெரிசலில் நான்கு ஆம்புலன்ஸ் வண்டிகள் பல மணி நேரம் சிக்கி தவித்தது.அந்த வண்டிகளின் சைரன் ஒலி உள்ளே இருந்த உயிரின் ஓலமாகவே இருந்தது.பல்லாவரம் மற்றும் அதை சுற்றியுள்ள அத்தனை டாஸ்மாக் கடைகளிலும் சரக்குகள் காலியானது.(மாநாட்டில் மது ஒழிப்பு உறுதி எடுக்கபட்டது)

மரம் வெட்டினா பாவம்னு யார்யா சொன்னது?

நம்ம பொழைப்பு இப்படியானு ஒப்பாரி வைக்க வேண்டியதுதான்..ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

Wednesday, March 4, 2009

நாடாளுமன்ற தேர்தல்...திருமாவளவன் என்ன செய்யபோகிறார்??

நாடாளுமன்ற தேர்தல்...திருமாவளவன் என்ன செய்யபோகிறார்??
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவிட்டது.கூட்டணியும் கிட்ட தட்ட முடிவு செய்யப்பட்டுவிட்டது.காங்கிரசும், திமுகவும் மீண்டும் ஒரு அணியாக நிற்கப் போகிறார்கள்.தான் திமுக கூட்டணியில் இருப்பதாக திருமா சொல்லிக் கொண்டிருக்கிறார்..ஒரு தொகுதி அவருக்கு ஒதுக்கப்படும்(சிதம்பரம்)என்று தெரிகிறது.ஆனால் இதை திருமா எப்படி எடுத்துகொள்ளப் போகிறார்.காங்கிரசை நாட்டிலிருந்து ஒழிக்கும்வரை தான் ஓயப் போவதிலை என்று மேடைகளில் முழங்கி விட்டு இப்போது அந்த கூட்டணியில் போட்டியிடுவது....பதவிக்காக போடும் பச்சோந்தி வேடமாகவே இருக்கும்.மீண்டும் ஆட்சியமைத்தால் இலங்கை பிரச்சனையை காங்கிரஸ் தீர்த்து விடும்..அதற்க்கு திமுக குரல் கொடுக்கும் என்று பிரச்சாரம் செய்ய முடியுமா?...சொந்த பலத்தில் சிதம்பரத்தில் ஜெயித்து விட்டு பின் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கலாம் என்று நினைக்கிறாரா?அப்படி என்றால் காங்கிரஸ் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் சிறுத்தைகளின் நிலைப்பாடு என்னாவாக இருக்கும்?அங்கு யாருக்கு ஓட்டு கேட்பார்?
இன்று ஈழத் தமிழருக்காக உண்மை உணர்வுடன் குரல் கொடுக்கும் ஒரு சில சிலரில் திருமாவும்(எந்த அளவு உண்மை??) ஒருவர் என்று அவர் பின்னால் இருக்கும் இளைஞர் கூட்டம் நம்புகிறது.முத்துகுமாரின் மரணம் தந்த எழுச்சியை திருமா அறுவடை செய்யலாம் என்று நினைத்தால்....அது நியாயமாகுமா?
பின் என்ன செய்யாலாம்? தேர்தலை புறக்கணிக்கலாமா??அதனால் என்ன பயன்?
எந்த காலத்திலும் திமுக ஈழப் பிரச்சனையில் காங்கிரசின் கருத்துக்கு மாறு பட போவதில்லை..அவர்கள் இப்போது முழுக்க நம்புவது இலங்கை ராணுவத்தையும், அதற்கு இந்தியா செய்யும் ஆயுத உதவியையுமே...தீர்மானம்,மனிதச்சங்கிலி,ராஜினாமா,உண்ணாவிரதம் போன்ற போலி நாடகங்ககளின் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்..அதற்குள் விடுதலைப் புலிகளை ஒடுக்கி விட்டால் ..பின் புனரமைப்பு.சீரமைப்பு என்று காலத்தை ஓட்டி விடலாம் என்றுதான் திமுக நினைக்கும்.
ஆனால் மத்தியில் காங்கிரஸ் நிச்சயம் மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நிலை கேள்விக்குறியாகாதானே இருக்கிறது
இந்த தேர்தல் திருமாவுக்கு ஒன்றும் வாழ்வா? சாவா?? இல்லையே..ஈழப் பிரச்சனையில் மாறுபட்ட கட்சிகளை விட்டு விட்டு..அரசியல் சார்பற்ற அமைப்புகளின் ஆதரவோடு திருமா களம் கண்டால் என்ன? இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இருக்கும் ம.தி.மு.க,பா.மா.க மற்றும் கம்யூனிஸ்ட்டுக்கள் கூட்டணி பலத்தில் கொஞ்சம் ஜெயிக்கட்டும்...நிச்சயம் பின்னால் அமைய இருக்கும் எந்த அரசுக்கும் உங்கள் ஆதரவு நிச்சயம் தேவைப் படும்...அப்போது நம் கோரிக்கைக்கு கட்டாயம் மதிப்பிருக்கும்..
மதவாதம்.மின்சாரம்,விலைவாசி என்று எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு ஈழப் போரட்டத்தை மட்டுமே முன்னிறுத்துங்கள். உங்களின் வெற்றி அடுத்து அமையும் மத்திய அரசால் உற்று கவனிக்கப் பட வேண்டும்.ஆனால் கூட்டணியில் நின்று நீங்கள் வென்றால் ..அந்த வெற்றி நிச்சயம் ஈழப் போராட்டத்திற்கான அங்கீகாரமாக இருக்காது.
எங்கள் ஆட்சியின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று திமுகவும் ,காங்கிரசும் அறிக்கை விட்டு விடுவார்கள்.பின் கருத்து வேறுபாடு,கூட்டணியிலிருந்து வெளியேற்றம்,ராஜினாமா என்பதில் அர்த்தமில்லை...
ஒரு புள்ளியில் தொடங்குங்கள் திருமா...உங்களின் வெற்றி ......தமிழக மக்கள் ஈழத் தமிழர் துயருக்கு இட்ட சிறு மருந்தாகட்டும்.....
திருமாவளவனா ..... இல்லை திருமா"வளமானவனா" காலம் சொல்லட்டும்....