Showing posts with label அனுபவம்/பொது. Show all posts
Showing posts with label அனுபவம்/பொது. Show all posts

Thursday, September 9, 2010

சாரு , வாசு மற்றும் மதுரை



உயிர்மை மதுரை கூட்டத்திற்கு வருகிறாயா என்று பிரபல சிற்றிதழ் உரிமையாளர் திரு . அகநாழிகை பொன்.வாசுதேவன் கேட்டபோது , எனக்கு அம்மாவும் , அருளானாந்தாவும் நினைவுக்கு வந்தார்கள் . அவர்களுக்கும் இலக்கியத்திற்கும் ஸ்நானப்ராப்தி கிடையாது . அவை இரண்டும் மதுரையில் உள்ள பிரபல சாப்பாட்டு கடைகள் .(கேபிள் நோட் இட்) . அப்புறம் சோம மற்றும் சுராபானம் .விடு ஜீட் என்று ரயில் ஏறினோம் . ஏங்க நானும் வேலையை விட்டுட்டேன் . நீங்களும் இப்படி உருப்படாம போறீங்களே என்று தங்கமணி விசனப்பட்டது வேண்டாம் .

குளித்து..அட குளித்து முடித்து சுப்ரீம் ஹோட்டலுக்கு போனோம் . அங்குதான் எழுத்தாளர்”கள்” தங்கியிருந்தார் “கள்” . முதலில் தவறுதலாக பிரபஞ்சனின் அறைக்கதவை தட்டி விட்டு பின் சாருவின் அறைக்குள் நுழைந்தோம் . மனிதர் அடித்துக் கொண்டிருந்தார் . அட.தண்ணீயோ இல்லை அதுவோ இல்லை. டைப் அடித்துக் கொண்டிருந்தார் . சாருவுக்கும் தினம் எதுவாவது எழுதா விட்டால் “சாமி கண்ணை குத்தி விடுமோ என்று தோன்றியது . கேட்டேன் . யார் சொன்னது என்று பதிலுக்கு கேட்டார் . எல்லாம் உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார்களில் ஒருவர்தான் என்று அவர் பெயரை சொன்னேன் .சரி இப்ப என்ன பண்ணலாம் என்று கேட்டார் . எது நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ , அது நடக்கட்டுமே சாரு என்றேன் . நடந்தது .

பத்து மணிக்கு கோயில் வாசல் திறந்தது . நாங்கள் மூன்றாவது ஆள்தான் . அங்கு மீ த பர்ஸ்ட் போட முடியவில்லையே என்று சின்னதாக எனக்கு ஒரு வருத்தம் . வாசு ஒரு சோக ஸ்மைலி போட்டார் . சாரு வழக்கம் போல் ஃபைண்ட் த கேஃப் பிட்வீன் த பிளவுஸ் அண்ட்... பிஸியாக இருந்தார் . அறைக்கு திரும்பினோம் . கிட்ட தட்ட ஒரு மாதம் சந்திர மண்டலத்தில் தங்கி வசிக்க தேவையான பொருட்களுடன் . ஜெர்ரியிடமிருந்து கால் . அண்ணே ..ஆன் தி வே.. சரவணகுமாரும் அக்தே (ஆயுதஎழுத்து வரவில்லை)


முதல் சுற்று பேச்சின்றியும் , இரண்டாம் , மூன்றாம் சுற்றுகள் வாயை மூடாமலும் கழிந்தது . மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது . இதோ நான் இருக்கிறேன் எடியூரப்பா என்று ஜெர்ரீ வந்தார் . சென்றார் . வென்றோம் . அஞ்சு வருடமாக காய்ந்து கிடைக்கும் அதிமுக காரன் போல் இருந்தோம் . எவ்வளவு வந்தாலும் தீர்ந்து கொண்டே இருந்தது . பிரபஞ்சன் கையில் ஒரு கிளாஸ் பீருடன் வந்தார். அன்பிற்குறிய மனுஷ்யபுத்திரன் வந்தார் . விமர்சகர் ஷாஜி வந்தார் . பேச ஆரம்பித்தார்கள் . நான் ரசிக்க ஆரம்பித்தேன்


சரவணக்குமார். செ வந்தார் . ஜோதியில் அவரும் ஐக்கியமாக சாப்பாடுக்கான முஸ்தீபுகள் ஆரம்பம் . ஜெர்ரீ நான் தான் சாப்பாடு ஏற்பாடு பண்ணுவேன் என்று அடம் பிடிக்க , நானும் அவரும் ஆட்டோ பிடித்தோம் அருளானந்தா மெஸ்சுக்கு. ஒரு டிஸ்கவரி சேனலை அள்ளிக் கொண்டு , அப்படியே மீண்டும் அரசுக்கு வருமானம். ஒரு முழு... அறைக்கு வந்தோம்.. அதகளம் மீண்டும் ஆரம்பமானது..

டிஸ்கி : அருளானாந்தா மெஸ்காரர் ஜெர்ரிக்கு உறவு என்று சொன்னதாக நியாபகம். ஆனால் அவர் அங்கு இன்னொன்றும் சொன்னார்

சென்னையிலிருந்து எழுத்தாள நண்பர்கள் வந்திருக்கிறார்கள் .

“கூட்டு ,பொறியல் எல்லாம் நிறைய கட்டிக் கொடுங்க “


டிஸ்கி : 2

நர்சிம் சொன்னது போல் இல்லை . அந்த ஓட்டல் அங்குதான் இருக்கிறது .
வெயிலான் , முரளிகுமார் , கா.பா . ஸ்ரீ தருமி ஐயா ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி ..

Tuesday, May 11, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்................9


(என்ன சொன்னேன் ? இந்த பொண்ணு இவ்வளவு ஃபீல் பண்ணுது!)



ஞாநி வீட்டில் கேணி சந்திப்பு. இந்த முறை எழுத்தாளர் ”கருக்கு” பாமா பகிர்தலுக்கு வந்திருந்தார். எழுத தொடங்கிய சூழல், தங்கள் மக்கள் அதை எதிர்கொண்ட விதம், தலீத் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்று அழகாக பகிர்ந்தார். வாசகர்களின் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்தார். முன்னதாக பாமாவின் “சாமியாட்டம்” சிறுகதை ஓரங்க நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது. அதுதான் நிகழ்வின் ஹைலைட். கூத்துப்பட்டறையில் பயின்ற வினோதினி அசுர அவதாரம் எடுத்தார். மெல்ல பக்கத்து வீட்டுக்காரியைப் பற்றி பேசும் அவர், மெல்ல அவள் வீட்டு பிரச்சனைக்குக்குள் நுழைகிறார். குடகூலி வாங்கும் பருத்த உடம்புக்காரியை கொஞ்சம் பகடியும் செய்கிறார். இதற்கு நடுவில் தன் வீட்டு வேலைகளும் கை ஓயாமல் செய்து கொண்டிருக்கிறார். அன்னலட்சுமிதான் கதைநாயகி. அவள் புருஷன் குடிகாரன். பெயர் வேங்கபுலி. பெரிய வீரன்லாம் இல்லை. உதார் பார்ட்டி. . ரெண்டு பொட்டை புள்ளைங்க. இந்த கதையை வினோதினி நேட்டிவிட்டி கொஞ்சமும் குறையாமல், உடல் மொழியின் இயல்பு மாறாமல் செய்து காட்டினார். நடித்து என்ற வார்த்தையை நான் உபயோகிக்க விரும்பவில்லை. கடைசியில் அன்னலட்சுமி ஓங்காரமாக உச்சபட்ச ஒலி எழுப்பி சாமியாடும் காட்சியை அவர் கண்முன் நிறுத்தியபோது. கூட்டத்தினர் 10 நிமிடங்களுக்கு விடாமல் கைதட்டினார்கள். ஞாநி சார் . இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துங்கள்.


நொடிக்கொரு முறை சுறா விளம்பரம். படம் பப்படம் ஆகிவிட்டாலும், கழக வாரிசின் படம் இல்லையா? வெட்கம் கெட்டத்தனமாய் இருகிறது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் “பெருமையுடன் வழங்கும் “ என்று வேறு போட்டுக் கொள்கிறார்கள். ஒரு குப்பையை பெருமையுடன் வழங்க இவர்களால் மட்டுமே முடியும். நிற்க. விஜய்க்கு பேசின சம்பளத்தில் கணிசமாக வெட்டு விழுந்து விட்டது. பெப்பே காட்டி விட்டார்களாம். அடுத்து சிங்கம், தில்லாலங்கடி என்று வரிசையாக சன் பிக்சர்ஸ் படங்கள் வரவிருக்கிறது. கழகத்தின் வாரிசுகள் சினிமாவை சுத்தமாக அழிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த குடும்பத்தை தவிர வேறு யாரும் சினிமாவே எடுக்க முடியாத நிலை வந்தே விட்டது. வாழ்க... வளர்க..

கலைஞர் டிவியிலும் பெண்சிங்கத்தின் தொல்லை தாங்க முடியவில்லை. இவர்களை வன்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ளினால் என்ன ? சென்ற வாரம் வள்ளுவர் கோட்டத்தை சுற்றி போலிஸ் மயம். தலைவர் மீண்டும் (எத்தனைவாது முறை ?) பெண்சிங்கம் படம் பார்க்க வந்திருக்கிறார். இந்த வருடம் தமிழக அரசின் சிறந்த படம் அதுதான் போலிருக்கிறது. சமீபத்தில் டெல்லிக்கு பெரியார் மையத்தை தலைவர் திறந்து வைத்தார். 5 மணிக்கு விழா . இவர் ஆறு மணிக்குத்தான் வந்திருக்கிறார். காரணம் 4.30 -6.00 ராகுகாலமாம். பகுத்தறிவு சூரியன். வெங்காயம்...

மரம் தாவும் வேலையில் மீண்டும் மரம்வெட்டித்தலைவர். புத்திரனுக்கு பதவி நீட்டிப்பு வேண்டுமே. உப்பே சேர்த்துக்க மாட்டாங்க போலிருக்கு. ஒரு கோமாளி முகமூடியும், குல்லாவும் வாங்கி மாட்டிக்கங்கப்பா.

என்ன ஒரு ஹஸ்கி வாய்ஸ் ! கொஞ்சம் ஆண்மை கலந்த பெண் குரல். ஹலோ எஃப்ம்மில் தீபா வெங்கட். காலை 10 -12 “சும்மா” என்றொரு நிகழ்ச்சி. வித்தியாசமான கான்செப்ட்களில் கலக்குகிறார் தீபா. மனதிற்கு நெருக்கமாக உரையாடுகிறார். எனக்கு ஒரு முறை வாய்ப்பு கிடைத்தது. சொல்லாமல் விட்டு விட்டேன். எதை என்று கேட்காதீர்கள். நல்ல டான்சரும், பாடகியும் கூட. தீபாவின் பரம ரசிகனாகி விட்டேன். ஒரு முறை நேரில் பார்த்து ஆட்டோகிராப் வாங்கணும். அடுத்த விளம்பரத்துக்கு மாடலாக்கி விட்டால், கொஞ்சம் நேரிலும் ஜொள்ளலாம்..


சுஜாதா விருதுகளில் சாருவின் பேச்சு கொஞ்சம் ஓவர்தான். அநியாயத்துக்கு மனுஷ்யபுத்திரனுக்கு சொம்படிக்கிறார் சாரு. என்னமோ உயிர்மைதான் சுஜாதாவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது என்கிற ரேஞ்சில் இருந்தது அவரது பேச்சு. படித்ததை அப்படியே இணையத்திலேற்றும் ஒருவருக்கு சிறந்த இணையத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. அப்படி ஒன்றும் செம்மையான விமர்சனமும் அதில் இல்லை என்று எனக்கு பட்டது. மாற்று கருத்து இருக்கலாம்.
பேராசிரியர் ஞானசம்பந்தனின் பேச்சில் கண்ணில் நீரே வந்து விட்டது . சிரித்து, சிரித்து. ஒரிஜினல் சுஜாதாவின் பேச்சு எளிமையாக இருந்தது. நெகிழ்ச்சியாக வும் கூட. சுஜாதா என்கிற மந்திரம் எவ்வளவு வலிமை என்பதற்கு வந்திருந்த கூட்டமே சாட்சி. அன்று இரவு அவர் நிச்சயம் உறங்கியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். கொஞ்சம் ஜால்ரா சத்தங்களை தவிர, நல்லதொரு நிகழ்வு.ஆனால் அங்கு போனதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. வேண்டாம் . சில ரசனைகள் ரகசியமானவை.

அட்சயத்ருதியை அன்று தங்கம் வாங்கினால்தான் குடும்பமே விளங்கும் என்ற ரேஞ்சுக்கு விளம்பரங்கள் தூள் பறத்துகின்றன. சமீபத்தில் நான் எடுத்த ஒரு விளம்பரமும் உள்ளடக்கி(படத்தை காண்க. ) நகை கடைகாரர்கள்தான் விளங்குவார்கள். கேதான் தேசாய் வீட்டில் டன் கணக்கில் தங்கம் பிடிபட்டதே. எந்த அட்சய த்ருதியையன்று தங்கம் வாங்க ஆரம்பித்திருப்பார் ? திகாரில் மனு போட்டுத்தான் கேட்க வேண்டும்.

எனக்கு பிடித்த ஊர் பாண்டிச்சேரிதான் என்று ஒரு நண்பர் சொன்னார். அட.. காரைக்”காலும்” பிடிக்கும் சார்..ஆனால் உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் தஞ்சாவூர்தான். வேண்டுமென்றால் பாண்டியை மிகவும் குடித்த ஊர் என்று வைத்துக் கொள்ளலாம்..


டிஸ்கி கவுஜை :

சில கேள்விகளுக்கான
பதில்களில் ஒளிந்திருக்கும்
கேள்விகளுக்கு ஏனோ
பதிலே கிடைப்பதில்லை





Thursday, April 29, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்..........8


எவ்வளவு நாளாம்மா உங்கப்பா குடிக்கறாரு?

பொறந்ததலேர்ந்தே !

என்ன சொல்றீங்க?

மகள் சொன்னாள்.. நான் பொறந்ததலேர்ந்தே .

அப்படின்னா 20 வருஷமாவா?

சீ..சீ.. எனக்கு பதினெட்டு வயசுதான்

கையில் நரம்பை தேடிக்கொண்டே அந்த நர்ஸ் சொன்னாள். (செவிலிகள் சீருடையில் அவ்வளவு அழகாயிருக்கிறார்கள். காதலாகி, கசிந்துருக வேண்டும் போல் இருக்கிறது)

பார்த்தால் ரொம்ப நல்லவராயிருக்கீங்க?(அடிப்பாவி ! நல்லவேளை !) எவ்வளவு கஷ்டம் பாருங்க.. உங்களுக்கு, உங்க வீட்டுக்கு . அப்படி ஏன் நம்ம குடிக்கணும்? சொல்லுங்க.

சிஸ்டர் நீங்களும் குடிப்பிங்களா?

விளையாடாதீங்க சார். பாருங்க. இப்ப உங்க பிள்ளைக்கு கல்யாணம் செய்யணும் . எவ்வளவு ரூபா ஆகும் . நீங்க குடிச்ச காசு இருந்தா?

இப்ப போய் கேட்டால் திருப்பி கொடுப்பாங்களா?

சிஸ்டர் என்று என்னால் வெறும் வார்த்தைக்கு அழைக்கப்பட்டவளுக்கு எஸ். ஜானகியின் குரல். அவள் குரலில் மழலையும் கொஞ்சியது. அவளுக்காகவே இனி குடிக்க கூடாது என்ற முடிவுக்கு வரும் நிலையில் இருந்தேன்.

இனிமே நல்ல பிள்ளையா இருக்கணும். சரியா? நான் போன் பண்ணி கேப்பேன்.

இன்னிக்கு நிச்சயமா குடிக்க மாட்டேன் சிஸ்.. சாரி உங்க பேர் என்ன?


-------------------------------------------------------------------------------------------------

நண்பரின் தாயாருக்கு ஹியரிங் எய்டு வாங்க போயிருந்தோம்.. தாயாரின் செவித்திறனை பரிசோதிக்க சில கேள்விகள் கேட்டார்கள்.

எங்கயிருந்து வர்றீங்கம்மா?

என் மவன் வீட்டுலேர்ந்து.

எந்த ஊர்?

நானு, என் மவன் எல்லாரும் காரைகுடிதான்

எப்ப ஊருக்கு போவீங்க?

ஏன் ?என் மவன் வீட்டுல எத்தனை நாள் வேணா இருப்பேன் . என்னை யாரும் ஒன்னும் சொல்ல முடியாது( மருமகளை பார்த்துக் கொண்டே)

உங்களுக்கு எத்தனை புள்ளைங்க?

இதோ இவன் மட்டும்தான். ஒரே மவன். அதுக்கப்புறம்தான் அவளுக்கு புருஷன் .

நண்பரின் மனைவி குறுக்கிட்டார். அத்தை உங்களுக்கு காது நல்லாத்தானே இருக்கு. இப்ப எதுக்கு வெட்டி செலவு?

-------------------------------------------------------------------------------------------------

சைதாபேட்டை பேருந்து நிலையத்தில் கண்ட ஒரு காட்சி.ஒரு இளம் தம்பதி..அருகில் அவன் தாய்..அவன் சூழலை மறந்து மனைவியை கொஞ்சி கொண்டிருந்தான்..மற்றவர்கள் பார்ப்பதை அவர்கள் சட்டையே செய்ய வில்லை..அவன் தாய் முகத்தில் ஒரு இனம் புரியாத கவலை இருப்பதாக எனக்கு பட்டது. அவள் மகன் கவனத்தை திசை (மனைவியிடமிருந்து) திருப்பும் வண்ணம் செயல் பட ,அவனுக்கு வந்ததே கோபம். தாயை திட்டி தீர்க்க இளம் மனைவி கண்கள் கலங்க. ஒரு மினி சீரியல் பார்ப்பது போல் இருந்தது. சற்று நேரம் ஆயிற்று. அவர்கள் பஸ் வரவில்லை.இளம் மனைவி ஆட்டோவில் போகலாம் என்றாள். தாய் வெட்டி செலவு என்று மறுக்க மீண்டும் மனைவியின் கண்ணீர். இளமை வென்றது. ஆட்டோ வந்தது. மனைவி முதலில் ஏறினாள். மகன் ஏற முற்படுகையில் தாய் அவனிடம் ஆட்டோவின் பின்னால் எழுத பட்ட வாசகத்தை காட்டினாள்.நானும் அதை படித்தேன்..நீங்களூம் படித்திருப்பீர்கள். "சீறும் பாம்பை நம்பு..சிரிக்கும் பெண்ணை நம்பாதே.." அவர்கள் போய் விட்டர்கள்.

நான் யோசிக்க ஆரம்பித்தேன். ஏன் அந்த தாய் அப்படி நடந்து கொண்டாள். ஒரு வித insecurity யா? கணவனை இழந்த அந்த விதவை தாய்க்கு மருமகள் மகனை தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ? என்ற பயம் காரணமா?எப்படி அவர்கள் ஒத்து குடும்பம் நடத்த போகிறார்கள். காலம் காலமாய் இந்த பிரச்சனை இருந்துதான் வருகிறது.

அமரர் சுஜாதா ஒரு முறை வினோதமாக ஒரு விளக்கம் எழுதி இருந்தார்.
"தாய் தன் மகன் உருவில், ஜாடையில் தன் புருஷனை பார்ப்பது போல் உணர்கிறாள்.ஆனால் அவன் இன்னொரு பெண்ணுடன் (மனைவியுடன்) வரும் போது அவளை தன் சக்களத்தியாக பார்க்க தொடங்குகிறாள்.

பெண் குழந்தைகள் இல்லாத வீட்டிற்கு மருமகளாக வருபவர்கள் மகளாக நடத்த படுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆனால் கணவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. பெண்களோடு வளராததால் அவர்கள் அருமை தெரியாமல் துச்சமாக பெண்டாட்டியை மதிக்கிறார்களாம்.


---------------------------------------------------------------------------------------

எவ்வளவு அழகு அவள்
என்றேன்
ஆமாம் அவன் அழகுக்கு
யாரும் ஈடு இல்லை
என்றாள் மனைவி

Thursday, March 25, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்........ 7



என் சில அனுபவங்களை கதையாக எழுதுகையில் அதில் உலக்ஸ் என்ற பாத்திரம் வரும். அவனுக்கு ஒரு வருத்தம் . ஏன் மாப்ளை என் போட்டோவையே போட மாட்டேங்கிறன்னு கேட்டான். போட்டேன்டா மாப்ளை . கேபிள் சங்கர் , ரமேஷ் வைத்யா, அகநாழிகை வாசு ஆகியோருக்கு உலக்ஸுடன் பரிச்சயம் உண்டு. மிக எளிமையான, வெகுளியான நண்பன் அவன்.


மெத்த படித்த மேதாவி நண்பர் அவர் . படித்த என்றால் ஆங்கில எழுத்துக்களை அடுக்கி போட்டுக் கொள்வது இல்லை. இலக்கியம் வகையறாக்களை . நாம் படித்திராத ஒரு எழுத்தாளனைப் பற்றியோ அல்லது எதாவது கவிதையைப் பற்றியோ நம்மிடம் சந்தேகம் கேட்பார் . நடுநிசியில் கூட . (நீங்க வெறும் தாஸா , இல்லை லார்டு லபக்தாஸா என்ற ரீதியில் ) . சும்மா ஈகோவை உரசிப்பார்ப்பதில் ஒரு ஆனந்தம். அவருடன் ஒரு சிறிய உரையாடல் .

தலைவரே . என்னை விட அறிவாளி யாரும் இருக்க முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் ஒரு பிரச்சனைக்கு செகண்டு ஒப்பினீயன் உங்க கிட்ட கேக்கணும் - அவர்.

இருங்க. முதலில் நீங்க அறிவாளியாங்கிறதுக்கே செகண்டு ஒப்பினீயன் தேவைப்படும் போல இருக்கே . (பழி !)

அறிவாளி ,புத்திசாலி, படிப்பாளி,படைப்பாளி என்ன வித்தியாசம் சொல்லலாம் ?


மதுரை அண்ணன் உடைத்து சொல்லிவிட்டார் .”கலைஞரைத் தவிர யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது” என்று. சிக்கல் தீர்ந்தது தலைவருக்கு. பட்டாபிஷேகம் நடக்கும்போது அண்ணனை மூலவராக்கி விட்டு, தளபதியை உற்சவராக்கினால் போதும். அவர் பாட்டுக்கு எழுத்துப் பணியை தொடரலாம் . (ஐயோ கொல்றாங்களே..)


மொபைல் அடித்தது . சாமி. வழக்கமாக முடி வெட்டும் நண்பர். சார் ஃப்ரீயா இருக்கு . வந்துடுறீங்களா? (மொபைல் எவ்வளவு செளகரியம் !)

குமாருக்கு போன் செய்தேன்.

குமார் . துணி எடுக்க வா . ஒரு செட் அர்ஜெண்ட் .

மீண்டும் என் மொபைல் அடித்தது.

சார் வீட்டுல இருக்கீங்களா?

நீங்க யாரு ?

நேர்ல வர்றேன் சார். பக்கத்துலதான் இருக்கேன்.

நீங்க யாருங்க ?

சிட்டி பேங்க் . கிரெடிட் கார்டு கலெக்‌ஷன் டிவிஷன் .

சே! இம்சை !!


இன்னொரு போன் வந்தது. (இப்ப இதான் லேட்டஸ்ட் ட்ரெண்டு . போன் இல்லைன்னா மெயில்)

நான் உங்க முதன்மையான வாசகன் சார் !

சமயங்களில் எழுதவும் செய்வீங்களோ ? (அட! அவர் இல்லீங்க)

உங்களுக்கு மாதுன்னா ரொம்ப பிடிக்குமோ ?

ஏன் கால் இல்லைன்னா கூட பிடிக்குமே .

இல்லை உங்கள் கதைகளில் ..

நிறுத்துங்க. முதல்ல கதைன்னு ஒத்துகிட்டதுக்கு உங்க காலை கொடுங்க !

அதில்லை சார். கிட்ட தட்ட எல்லாக் கதைகளிலும் மாதுன்னு ஒரு பேர் வருதே. அதான் .

சப்பை மேட்டர் . ( கவனிக்கவும்... இந்த வார்த்தை வெட்டி ஒட்ட உதவலாம் )


இயக்குனர் கற்றது தமிழ் ராம் சொன்ன ஒரு சம்பவத்தை “கடைசி பெட்டியிலிருந்து சில குறிப்புகள் “ என்று புனைவாக்கியிருந்தேன் . அதைஅவர் படிக்க லிங்க் கொடுத்தேன். படித்து விட்டு அழைத்தார் . நல்லாயிருக்கு தோழர் . நான் அந்த சம்பவத்தை வைத்து ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதை முடிந்தால் நீக்கி விடுங்களேன் என்றார் . நீக்கி விட்டேன். ராம் காட்சி என்ற பெயரில் வலைமனையில் எழுதுகிறார் . எல்லாம் ஏற்புடைய கருத்துக்கள் இல்லை. என்றாலும் அவரின் வலிமையான எழுத்துக்களுக்காக படிக்கலாம். படிங்களேன் . சனிக்கிழமை சந்திப்புக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் .பார்க்கலாம் .


பாஸ்கர் சக்தியின் சிறுகதைகளை துண்டு துண்டாக படித்திருந்தாலும், அவரின் முழு தொகுப்பான கனக துர்கா வை (அவர் அன்பு கையெழுத்துடன்) காசு கொடுத்து வாங்கி படித்தேன் . எளிமையான எழுத்து . இயல்பாக தெறிக்கும் நகைச்சுவை . எனக்கு இரண்டு கதைகள் மிகவும் பிடித்திருந்தது . ”ஏழு நாள் சந்திரன்” என்றொரு சிறுகதை . சித்தப்பா என்ற குணசித்திரம்தான் இந்த கதையில் மையம் . “புடிச்சா பண்ணிப்பாத்துரணும் . புடிக்கலின்னா விட்டுட்டு போறோம்” இதான் அவர் பாத்திரத்தின் தன்மை. அண்ணன் மகனுடன் அவர் காட்டும் சிநேகிதம் , ஊர் குடியானவர்களிடம் அவரின் தோழமையும் ,கரிசனமும் . அண்ணனிடம் மூளும் பகை . அருமையான சித்தரிப்புகள் . பழகின மாடு போல் சீரான நடை .

மற்றொரு சிறுகதை “அழகர் சாமியின் குதிரை “ ஒரு அருமையான மண் மணம் கமழும் கிராமத்து கதை . சாமியின் மரக்குதிரை களவு போகிறது . ஊள்ளூர் கோடாங்கியை புறக்கணித்து விட்டு மலையாள குறி சொல்பவனை அழைத்து வருகிறார்கள் . காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கிறார்கள் . மலையாள குறிகாரன் யதேச்சையாக ஏதோ சொல்ல , ஒரு நிஜ மட்ட குதிரை ஊருக்குள் வருகிறது . பின்னாடியே அந்த குதிரைக்கு சொந்தக்காரனும் வருகிறான் . ஊர் கோடாங்கியின் மகளுக்கும், ஒரு இளவட்டத்துக்கும் காதல் டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் சினிமாவுக்கு ஏற்ற கதை. சமீபத்தில் வம்சி வெளியீட்டு விழாவில் பாஸ்கரை சந்தித்தேன் . இந்த கதையைப் பற்றி பேசும்போது சொன்னார். வெண்ணிலா கபடிக்குழு சுசீந்திரன் அதை திரைப்படமாக்குகிறாராம். ஸ்கிரிப்ட் பாஸ்கர் சக்தி. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நண்பரே . நிச்சயம் ஏமாற்றாத கதை.


நாளை முதல்
நீளத்தொடங்கும்
தனிமை
ஜெட்லாக் பற்றிய
மருமகளின் சந்தேகத்தை
தீர்த்துக் கொண்டிருக்கிறான்
ஒரே மகன்.

Wednesday, March 10, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன் ......6






சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு கட்டுரையை படித்தேன். கடிதம் பற்றிய அருமையான எழுத்தாக்கம் அது. நாம் எல்லோருமே ஒரு கடிதம் போல் வாழ்க்கையில் பயணித்திருப்போம். அல்லது முகவரி தவறாக எழுதப்பட்ட ஒரு கடிதம் போல் அலைகழிக்கபட்டிருப்போம். இன்று எழுதுவது என்பது கணினி மயமாகிவிட்டது. என்றாலும் கடிதம் பற்றிய நினைவுகள் நிச்சயம் எல்லோரிடமும் மிச்சம் இருக்கும். வேலை நிமித்தம் வெளியூர் சென்ற கணவர்கள் தபாலில் நடத்திய தாம்பத்தியங்கள், பட்டாளம் சென்ற மகன் மனைவிக்கும், பெற்றோருக்கும் எழுதிய தனித்தனி உறையிடப்பட்ட அஞ்சல்கள். சில கடிதங்கள் மரியாதை நிமித்தம் ஒரே கடிதமாக இருக்கும். பெரியவர்கள் வாசித்து விட்டு இணக்கமாக இருந்தால் மருமகளிடம் கொடுப்பார்கள்.அல்லது "உன்னைய கேட்டு எழுதியிருக்கான்" என்று ஒற்றை வரியில் முடித்து விடுவார்கள். இன்னும் வேலைக்கான நேர்முகம், உங்கள் கதை பிரசுரத்திற்கு ஏற்கபடவில்லை. இக்கடிதம் கொண்டு வரும் நபர் வசம் அதை கொடுத்து விடவும். இத்யாதிகள்..

நான் தஞ்சையிலிருந்து மெட்ராஸ் கிளம்பும்போது அம்மா 50 சுய விலாசமிட்ட தபால் கார்டுகளை கொடுத்தாள். “நீ ஒன்றும் எழுதவே வேண்டாம் “ வாரம் ஒன்று அஞ்சல் செய்தால் போதும் என்றும் சொன்னாள். நம்ம சோம்பேறித்தனம் தெரிஞ்சதுதானே !!


முன்பெல்லாம் வீடுகளில் கடிதம் வைக்க ஒரு நீண்ட கம்பி இருந்தது. அதில் தேதி வாரியாக கடிதங்களை சொருகி வைப்பார்கள். "ஆசிர்வாதம்" உபயகுசலோபரி" ஷேமம். ஷேமத்தை தெரிய படுத்தவும். நலம் . நலமறிய ஆவல்" வீடு மாறி விட்டோம். புதிய முகவரி. மஞ்சள் தடவிய காது குத்து, சீமந்தம், புண்யாசனம், அறுபது விழா, "இந்த மாதமாவது பணம் அனுப்ப முடியுமா?" ”நீங்கள் அடகு வைத்த நகை வட்டி அதிகமாகி விட்டதால்” என்று செட்டி கடைகளின் அறிவிப்புகள் என்று கடிதம் சொல்லாத தகவல்களே இருக்காது. காதல் கடிதங்கள் இதில் சேர்த்தி இல்லை. (தயவு செய்து படித்தவுடன் கிழித்து விடவும்) எனக்கு வந்த முதல் காதல் கடிதத்தை நான் முதலில் படிக்கவில்லை என்றால் நம்புவீர்களா? நடந்தது என்னன்னவென்றால் "கடிதத்தை” எதிர்பார்த்து அவள் தெருவில் செல்லும்போது, அவள் கடிதத்தை கீழே போட , நான் எடுப்பதற்குள் அந்த தெரு சண்டியர்கள் கடிதத்தை கைப்பற்றி விட்டனர் (எங்க ஏரியா : உள்ளே வராதே !) முதலில் அவர்கள்தான் அக்கடிதத்தை வாய் விட்டு படித்தனர். அந்த முதல் காதலியின் முதல் கடிதம். எண்ணற்ற எழுத்து பிழைகளுடன் இருந்ததை இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை.

சில வருடங்களுக்கு முன் ஒரு குறும்பட போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. முதல் பரிசு பெற்ற படத்தின் பெயர் எனக்கு சரியாக நினைவில்லை. பெங்களூரு சிருஷ்டி கல்லுரி மீடியா மாணவிகள் இயக்கியிருந்த படம். ஏதோ இந்தி பெயர். பெயரில் என்ன இருக்கிறது. ஆனால் இன்றளவும் அந்த கதை எனக்கு நினைவில் இருக்கிறது. 10 நிமிட படம்தான். ஒரு பெண் தன் சினேகிதிக்கு ஒரு கடிதம் எழுத நினைக்கிறாள். ஒரு தபால் அட்டையிலோ அல்லது அஞ்சல் உறையிலோ அல்ல. அவளுக்கு தோன்றுவதை எல்லாம் நேரம் கிடக்கும் போதெல்லாம் எழுதி கொண்டே இருக்கிறாள். கடிதத்தை முடிக்க அவளுக்கு மனமே வரவில்லை. வீடு, வயல்வெளி, மலை அடிவாரம் எல்லா இடத்திலும் அமர்ந்து அவள் ரசிப்பதை பகிர்ந்து கொள்கிறாள். இறுதியில் ஒரு வழியாக கடிதத்தை நிறைவு செய்து அஞ்சல் செய்து விட்டு பதிலுக்காக காத்திருக்கிறாள். தோழி தனக்கு என்னவெல்லாம் பதில் எழுதுவாள் என்பதை சிறு பாட்டாக பாடி பார்ப்பாள். மிக மெலோடியான ட்யூன். கவிதையாக வரிகள். இறுதியில் கடிதம் ஆள் இல்லையென்று திரும்பி விடுகிறது.

அந்த படத்தின் பெண் இயக்குனரின் பெய்ர் அப்போதே வாயில் நுழையவில்லை. ஏதோ கொங்கணி பெண் பெயர். தன் டீச்சரின் அனுபவம் அது என்று கூறியது நினைவிருக்கிறது. அவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இருந்தது. இப்போது தேட வேண்டும்.







Monday, March 1, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....5


திருச்சி அரிமா சங்கம் நடத்திய குறும்பட போட்டியில் என் “சியர்ஸ்” படத்துக்கு விருது கிடைத்தது. கிழக்குவாசல் ஆசிரியர் திரு. உத்தமசோழனுக்கு என் நன்றிகள். காரில் நோகாமல் அழைத்து சென்ற அகநாழிகை வாசுவிற்கும் என் அன்பும், நன்றிகளும்..

டிஜிட்டல் தொழில்நுட்பம் எளிதாகி விட்டது. நிறைய குறும்படங்கள் தயாரிக்கப்படுகிறது. சின்ன சின்ன விஷயங்களை அழகாக சொல்கிறார்கள். இச்சை என்றொரு படம் பார்த்தேன். அதன் காணொளி கிடைக்கவில்லை. எனவே சுருக்கமாக கதை.

ஒரு கணவன் மனைவி. குழந்தையில்லை. தாம்பத்யமும் திருப்தியில்லை. மருத்துவரை அணுகுகிறார்கள். மருத்துவர் கணவனின் விந்து அணுக்களை பரிசோதிக்க வேண்டும் என்கிறார். கணவன் கழிவறைக்கு செல்கிறான். முயற்சிக்கிறான். பலன் இல்லை.

கழிவறையின் வெண்டிலேட்டர் வழியாக சாலை தெரிகிறது. அங்கு பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணின் பின் பக்கம் தெரிகிறது. அழகான அனாடமி அவளுக்கு. இடுப்பில் சேலை விலகி பளீரென்று சதை தெரிகிறது. காமிரா மார்பகங்களின் பக்கவாட்டிலிருந்து இடுப்பு வரை அலசுகிறது. கணவன் என்ன செய்கிறான் என்று பார்வையாளனுக்கு தெளிவாக புரியும் காட்சியமைப்பு!

இப்போது அந்த பெண் திரும்புகிறாள்.கறுப்பு கண்ணாடி அணிந்திருக்கிறாள். கையில் ஒரு ஸ்டிக். தட்டியவண்ணம் நடந்து போகிறாள்.

எளிமையான காட்சியமைப்பில் மனித மனத்தின் உணர்வை அடர்த்தியாக சொல்கிறார் இயக்குனர்.



நான் முதலில் எடுத்த குறும்படத்தின் பெயர் “missing letters" .அதன் மேக்கிங்கில் எனக்கு திருப்தி இல்லை. எனவே அதை எங்கும் திரையிட அனுப்பவில்லை. ஆனால் அதன் கான்செப்ட் எல்லோருக்கும் பிடித்தது. குடும்ப கட்டுப்பாட்டை அடிப்படையாக கொண்டது. முதலில் “நாம் இருவர் : நமக்கு இருவர் “ பின்பு அது நாம் இருவர் “ நமக்கு ஒருவர் “ என்றானது. நாளை “நாமே இருவர் : நமக்கு ஏன் இன்னொருவர் “ என்றாகி விடுமோ ? என்பதை அடிப்படையாக ஸ்கிரிப்ட் அமைத்திருந்தேன்.

”மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக” என்ற பாடலுக்கு வருங்காலத்தில் பொழிப்புரை எழுதி புரிய வைக்க வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல. சித்தி, சித்தப்பா, ஒன்று விட்ட சகோதரர்கள் என்று உறவு சங்கிலியே அறுபட்டு விடும் சூழல்தான் இருக்கப்போகிறது. தனித்தனி தீவாய் பிள்ளைகள் வளர்வதால் ஏற்படும் விளைவுகள் ! ஆண், பெண் பற்றிய புரிதலின்மைக்கும் இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.சமூக, பொருளாதார காரணங்கள் இருந்தாலும் இது ஆரோக்கியமானதா என்பது பெரிய கேள்விக்குறிதானே !

முழங்கையிலும், கால் முட்டியிலும் சின்ன சிராய்ப்பு கூட இல்லாமல் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முடிகிற காலம் இது. அதானாலோ என்னவோ வாழ்க்கையின் சின்ன வேதனை, ஏமாற்றத்தை கூட இன்றைய இளம் தலைமுறையினரால் சகித்து கொள்ள முடிவதில்லை. இளம் வயது தற்கொலைகள் அதிகரித்து வருவதே அதற்கு சான்று.

கணினி விளையாட்டு. தொலைக்காட்சியில் ரெஸ்லிங் என்கிற பயங்கர வன்முறை. போதாத குறைக்கு தொலைக்காட்சி சீரியல்களில் ரத்தம் இல்லாத வார்த்தை விஷம். எந்த அப்பாவோ, அம்மாவோ இன்றைய குழந்தைகளுக்கு கதை சொல்கிறார்கள் ? அவர்கள் வெளியில் சென்று விட்டு தாமதமாக வர நேர்ந்தால் பிள்ளைகளிடம் கேட்கிறார்கள் “இன்னிக்கு திருமதி செல்வம் என்னாச்சு ? பாக்கியத்தை அடிச்சு விரட்டியாச்சா? (என் பக்கத்து வீட்டில் பார்த்தது) உறங்க போகும் முன் வன்மத்தைதான் கடைசியாக விழுங்கி விட்டு செல்கிறார்கள்.



ஆனை...ஆனை..
அழகர் ஆனை.
கட்டுக் கரும்பை
முறிக்கும் ஆனை
காவேரிக்கரையை
கலக்கும் ஆனை.
அப்பாக்களுக்கு நேரம் இருப்பதில்லை.
தாத்தாக்கள் உடன் இருப்பதில்லை.
எப்போதாவது ஆசிர்வாதங்கள்
மட்டும் தான் பேரன்களுக்கு
கொடுப்பினை “chat”களில்

Wednesday, February 3, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....2



இணையத்தில் எழுத தீவிர வாசிப்பு தேவையா? நிச்சயம் தேவைதான். அப்போதுதான் எழுத்தை உள்வாங்கி எழுத முடியும் என்பது சிலர் கருத்து. உலகின் முதல் சிறுகதையையோ அல்லது நாவலையோ எழுதியவன் எந்த வாசிப்பின் பின் புலத்தில் அதை எழுதியிருக்கலாம். நிச்சயம் அனுபவம் சார்ந்துதான் இருக்க வேண்டும்.

எல்லோர் வாழ்க்கையிலும் நிகழ்வுகள் உண்டு. சோகமோ, சந்தோஷமோ! அதை வெளிப்படுத்துகிறவன் எழுத்தில் இருக்கும் வார்த்தைகளின் வலிமை அளவிட முடியாதது. உதாரணம் இந்த வார நட்சத்திரம் சிவராமனின் இந்தபதிவு. வாசித்து முடித்தவுடன் பத்து நிமிடங்கள் செயலற்று போய் உட்கார்ந்து விட்டேன். பின்பு அவரை அலைபேசியில் அழைத்து பேசியதும்தான் சற்று ஆறுதலாயிருந்தது. காலம் மாறும் சிவராமன். கவலை வேண்டாம். காத்திருப்போம்!

உரையாடல் அமைப்பின் சிறுகதை போட்டிக்கு நான் ஒரு சிறுகதைஎழுதியிருந்தேன். அது என் பெரியப்பாவின் வாழ்க்கையை ஒட்டி எழுதப்பட்டது. பெரியப்பா மகா கோபக்காரர். முரடன். மனைவியை மதிக்காதவர். உணவு பறிமாறும்போது கரண்டி சத்தம் பாத்திரத்தில் கேட்டாலே தட்டை முகத்தில் வீசி விட்டு எழுந்து போய் விடுவார். பெரியம்மா பெயர் தங்கம். பெயர் மட்டுமல்ல ! குணமும்தான். சற்றும் முகம் சுளிக்காமல் இருப்பார். பிறந்த வீட்டிற்கு தன் கஷ்டத்தை அவர் சொன்னதேயில்லை.

ஒரு தீபாவளிக்கு முதல் நாள். பெரியப்பா சீக்கிரம் வீடு திரும்பினார். மனைவியை புடவை மாற்று. இன்னிக்கு வெளியில் போகலாம் என்றார். பெரியம்மாவால் நம்பவேமுடியவில்லை. தான் வணங்கிய தெய்வங்கள் தன்னை கைவிடவில்லை என்றே அவர் நினைத்திருக்க கூடும். அவர்களுக்கு குழந்தையில்லை. என் மீது பாசம் அதிகம். ஆனால் அவர்கள் அப்போது பங்களூரிலிருந்தார்கள். நான் தஞ்சாவூரில்.

முதலில் துணிக்கடை. நல்ல பட்டுப்புடவை. அப்புறம் ஒரு தங்கசங்கிலி. இறுதியில் எம்.டி.ஆரில் இரவு உணவு. நேரமாகி விட்டதாலும், விடிந்தால் தீபாவளி என்பதாலும் சினிமாவிற்கு போகவில்லையாம்.

மறுநாள் பொழுது விடிந்தது. பெரியம்மா எழுந்திருக்கவேயில்லை. முகத்தில் சிரிப்பும், திருப்தியும் உறைந்திருக்க, உயிரை விட்டிருந்தாள்.

அதன் பின் கிட்டதட்ட 20 ஆண்டுகள் பெரியப்பா நாய் படாத பாடு பட்டார். யாரையும் நம்பமாட்டார். தனியே வாழ்ந்தார். அவர் பிணத்தை எடுக்க கூட அவர் சேர்த்து வைத்திருந்த பணம் உதவவில்லை. இன்னும் சுந்தரம் பைனான்சில் கிடக்கிறது.

நான் என் சிறுகதையில் பெரியப்பாவை சாகடித்தேன். பெரியம்மா பழியை தீர்த்து கொண்டதாக முடித்தேன். ஆனால் ஒரு நல்ல சிறந்த எழுத்தாளன் (சிவராமன், ரமேஷ்வைத்யா, பா.ராஜாராம், ஜியோவ்ராம்சுந்தர்,நர்சிம், கேபிள்சங்கர், வாசு போன்றவர்கள்) அந்த கருவை இன்னும் செம்மையாக எழுதியிருப்பார்கள். இந்த இடத்தில்தான் தீவிர இலக்கிய பரிச்சயம் கை கொடுக்கும். ரவிஷங்கர் சார் அந்த கதைக்கு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். கொஞ்சம் ட்யூன் பண்ணியிருந்தால் தி.ஜாவின் டச் கிடைத்திருக்கும் என்று. அந்த மட்டில் திருப்தி.

நண்பர் முரளிக்கண்ணனனுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலில் ஒரு தகவல் சொன்னார். அது அவர் வீட்டு பாரம்பரிய நகை ஒன்றை அடமானம் வைக்க போனபோது நடந்த கதை. நல்ல ஜீவனுள்ள மேட்டர். முரளியிடம் சொன்னேன். இதை கதையாக எழுதுங்கள் என்று. ஆனால் அப்போது நிலைமை கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது. முரளி! இப்போது எழுதலாமே! உங்கள் நடையில் அது ஆகச்சிறந்த சிறுகதையாக நிச்சயம் வரும்.

சமீபத்தில் பா.ராஜாராமுடன் அலைபேசி கொண்டிருந்தபோது ஒரு சம்பவத்தை விவரித்தேன்(மப்பில்தான்). மணிஜி! இதை நீங்க எழுதுங்க.இல்லை. நான் எழுதிடுவேன் என்றார். நீங்களே எழுதுங்க மக்கா! உங்கள் எழுத்தில் அதை வாசிக்க எனக்கு ஆசை!!

புத்தக கண்காட்சியில் வாங்கிய “நெற்குஞ்சம்” என்கிற புத்தகத்தை மெதுவாக படித்து முடித்து விட்டேன். சில வரிகளை அல்லது பத்திகளை இரண்டு முறை வாசித்தேன். புனைவா? அனுபவமா? என்று திகைக்க வைக்கும் வகையில் எழுதியிருந்தார் கவிஞர் தேன்மொழி. அவரின் முதல் சிறுகதை தொகுப்பு நெற்குஞ்சம். உரையாடல் கூட கவிதை நடையில்தான். தானே சொல்வதை போல் எழுதப்பட்டிருந்த விஷயங்களின் கனம் இன்னும் அழுத்திக் கொண்டிருக்கிறது. தஞ்சையில் அரசுப் பணியில் இருப்பதாக அகநாழிகை வாசு சொன்னார். ஊருக்கு போகும்போது நிச்சயம் ஒரு சல்யூட்டை போட்டு விட்டு வரவேண்டும். தலித் இலக்கிய வகையில் எழுதப்பட்டிருந்தாலும் மண்ணின் மணம் இன்னும் கமழ்ந்து கொண்டிருக்கிறது. எளிமையும், கடுமையும் சரிவிகிதத்தில் கலந்த வார்த்தைகள்.

அதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்(சில)

“என் மீதான் உன் பிரியங்கள் பொய் என்பதை எந்த நிலையிலும் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. மீண்டும், மீண்டும் அக்காக் குருவி போல, உன் பிரியம் நிஜம் எனும் குரல் எனக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. என்னை ஏன் பிரிந்தாய் என என்னால் கேட்க முடியாது. நாம் பிரிந்ததாக நான் உணர்ந்ததேயில்லை. ஏன் நீ திரும்ப வரவில்லை என்று மட்டுமே எனக்குள் கேட்டுக் கொண்டேன். “

டிஸ்கி : லத்தீன், தென் அமெரிக்கா, பிரேசில் மற்றும் பொலிவிய எழுத்தாளர்களை வாசிக்கலாம் என்று முடிவெடுத்தாகி விட்டது. ஆனால் முதலில் அந்த எழுத்தாளர்களின் பெயரை மட்டும் வாசிக்க கற்றுக் கொள்ள முயற்சி!! ஒரு எழவும் வாயில் நுழையவில்லை. சாரு இந்த விஷயத்தில் கில்லாடி. மனுஷனுக்கு எல்லோர் பெயரும் அத்துப்படி.

டிஸ்கி:2- மார்க்கெட்டிங்கில் 3 c formula என்று ஒன்று உண்டு. அதாவது convince or confuse or confess . எழுத்துக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னும் ஒரு”c" யும் சேர்ந்து. "creativity"

Friday, January 8, 2010

கொஞ்சம் நானும் பேசுகிறேன்.....


மீண்டு புத்தகக் காட்சி. நிறைய வாங்க வேண்டும் என்று நினைவில் இருந்தது எதையும் வாங்கவில்லை. புத்தகங்களின் தலைப்புகளை அழகாக எழுதி , கொஞ்சம் செப்பனிட்டு, அங்கும், இங்குமாக சில எண்டர்களை தட்டினால் , அருமையான ஒரு பின்னவீனத்துவ கதையோ, கவிதையோ, இன்ன பிற அபாயகரமான எழுத்துக்களோ அமைந்துவிடும் வாய்ப்பிருகிறதை கண்டு கொண்டேன்.

இருந்தாலும் தமிழினி மற்றும் வம்சி பதிப்பகங்களில் சில புத்தகங்களை வாங்க வேண்டும். அரங்குகளை பார்க்கும்போது மலைப்புதான் ஏற்படுகிறது. நான் அடுத்த தளத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம். சென்று விட்டோம். வேறெங்கே? அங்குதான். அங்கு நடந்த சூடான் விவாதங்களீல் அத்தனை எழுத்து சிகாமணிகளூம் கிழித்தெறியப்பட்டனர் எனலாம்.


பிலிம் சேம்பர் அரங்கில் சந்திராவின் கவிதை தொகுப்பு வெளியீடு. இலக்கியத்தை வளர்ப்பதற்காக அங்கும் சிறிது நேரம். அரங்கில் அஜயன்பாலா பேசுகையில் உயிர்மை கட்டுரையில் அமீரின் அட்டைப் படத்தை போட்டதை காரசாரமாக குறை கூற, நான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அரங்கில் கொஞ்சம் சலம்பல். அருமை நண்பர் சுகுணா திவாகரும் வந்திருந்தார். ஷோபா சக்தியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். உலகின் அழகிய முதல் பெண் ? லீனாவிடம் கை குலுக்கி அவரின் கவிதைக்கான என் பாராட்டுக் “குறிகளை” தெரிவித்தேன். சுகுணாவை பாருக்கு அழைத்தபோது அநேகமாக அவருக்கு ரோசா ஞாபகம் வந்ததா என்று தெரியவில்லை. ஷோபாவுடன் புத்தக காட்சிக்கு போவதாகவும் ,பின் சந்திக்கலாம். நானே உங்களுடன் நிறைய பேச வேண்டும் என்றும் கூறினார். எனக்கும் நான் மப்பில் ஏதோ அவரிடம் உளறியதைப் போல் இருந்தது. சரியாக நினைவில் இல்லை.

பலமுறை சந்திருந்த சசிகுமாரிடம் “நாம் சந்தித்திருக்கிறோம்” என புன்னகையுடன் தலையாட்டி விட்டு அகன்று விட்டார்.

அடுத்து ஒரு பர்சனல் பிரச்சனை. அது ஏற்கனவே கேபிளுக்கும், அப்துல்லாவிற்கும் தெரிந்திருந்தபடியால் அவர்களூடன் அங்கு போக வேண்டியதாயிற்று. நன்றி இருவருக்கும் !!


வழக்கம் போல்
அலைக்கழித்த இரவு.
அர்த்தமில்லாத கனவுகளின்
ஆங்கார அழுகைகள்

அன்றைய துரோகங்களின்
எஞ்சிய துகள்கள்
தூக்கத்தை சிராய்த்து கொண்டிருந்தன.

முழுக்க திரட்டி
பந்தாய் அடக்கினேன் வாய்க்குள்.

வன்மம் குலையாமல் கண்விழித்து
முகம் தேடி அலைந்தேன்

என்னவோ தோன்ற
காரி துப்பிக்கொண்டேன்
மல்லாந்து படுத்து..

Wednesday, December 9, 2009

கண்மணி அன்போடு...நலமறிய ஆவல்...



சமீபத்தில் உறவினர் ஒருவர் அழைத்து தஞ்சாவூர் வீட்டு விலாசம் வேண்டும்,பத்திரிக்கை அனுப்பனும் என்றார். எவ்வளவு யோசித்தும் நினைவுக்கே வரவில்லை..காரணம் கடிதம் எழுதும் பழக்கமே முற்றிலும் ஒழிந்து போனதுதான். பிறகு தம்பிக்கு போன் பண்ணி விலாசம் வாங்கி கொடுத்தேன்.

தஞ்சையில் கல்லுரியில் படித்து கொண்டிருக்கும் போது(???)சினிமா மோகம் தலைக்கேறி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சென்னைக்கு வர நினைத்த போது அப்பா..என்னவாவது பண்ணி த் தொலை...என்று சொல்லி விட்டார்..அம்மா என்ன ஆசையோ செய்..ஆனால் வாரத்துக்கு ஒரு கடிதம் கண்டிப்பா போடனும் என்று சொல்லி விட்டாள்.ஒரு சுப தினத்தில் படிப்பை (வராத)மூட்டை கட்டி விட்டு விடை கொடுத்தேன் தஞ்சைக்கு..கிளம்பும்போது அம்மா செலவுக்கு பணமும் ஒரு 50 போஸ்ட் கார்டுகளும் கொடுத்தாள். அத்தனையும் சுய விலாசமிட்டவை. .நீ ஒண்ணும் பண்ண வேண்டாம் .. எதாவது எழுதி வாரம் ஓண்ணு அனுப்பு போதும் என்றாள்.அதன் பின் சென்னை வந்து சந்தி சிரிச்சு.கால் வயிறு,அரை வயிறு காஞ்சு அதெல்லாம் தனி கதை..

இப்பவும் ஊருக்கு போவதென்றால் மனம் இறக்கை கட்டித்தான் பறக்கிறது..காரணம் பல..ராமனாதன் பார்(செல்லமா சபா) நான் சென்னையில் இருந்தாலும் நண்பர்கள் கூடி குடிக்கும்போது ஒரு இருக்கை காலியாகவே இருக்கும்(எனக்காம்)அதன் முன் ஒரு கிளாஸ்..அதில் சரக்கு..எல்லாம் முடிந்தவுடன் அதை கடைசியில் பங்கிட்டு குடிப்பார்களாம்..(அதாவது நான் இங்கு த(ண்) னி "குடி"த்தனம்..அவர்கள் கூட்டு "குடி" த்தனம்". பின் காபி பேலஸ் ரவா தோசை,நைட்டு ரோட்டு கடை இட்லி பூண்டு சட்னி,தேவர் பிரியாணி, காமாட்சி மெஸ் விரால் மீன் மண்டை,வறுவல்,சினிமா(நைட் ஷோ)....எல்லாவற்றுகும் மேல் அவள் குடியிருந்த வீடு,கோயில் பிரகாரங்கள்..அங்கு நடந்த கொடுக்கல்/வாங்கல்கள்(கடிதம் மட்டுமல்ல)(அவளோடு சேர்ந்து பார்த்த முதல் படம்..அதாவது அவள் அவள் குடும்பத்தோடு/ நான் நண்பர்களுடன்..படம் "திசை மாறிய பறவைகள்"

ம்ம்ம்..நிணைவுகள் தான் எத்தனை சுகமானவை...

பதிவர் மாதவராஜ் அழைத்தார். அவர் வெளிக்கொணரும் “பூக்களிலிருந்து நான்கு புத்தகங்கள்” தொகுப்பில் என் கவிதையும் இடம் பெறுகிறது என்று காதில் தேன் பாய்ச்சினார். எனக்கும் மிகவும் பிடித்த கவிதை அது. தமிழ்மண போட்டியில் கூட அந்த கவிதையைதான் பரிந்துரை செய்திருக்கிறேன்.




அந்தரங்க சாட்சியாய்...

இந்த இரும்பு பாதை
முடியும் இடத்தில்
ஒரு நகரம்
இருந்தது..

இன்று
அது இல்லை
காற்றில் கலந்திருக்கும்
ரத்த வாசம்
மட்டுமே
மிச்சமாயிருக்கிறது

தினம் விடியலில்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
அழகான
இயற்கை
மட்டுமே
அந்தரங்க
சாட்சியாயிருக்கிறது..

மெலிதாய்
கேட்டுக்கொண்டிருந்த
முனகல்களும்
ஓய்ந்து விட்டன..

இடமும் வலமுமாய்
நெளியும் இந்த
வழியேதான்
கடைசியாக கடந்து
போனது ஆர்மி ரயில்

இவைகளுக்குள்
பறிமாறிக்
கொள்ளப்படும்
தடக்..தடக்
மொழியும்
அதிர்வும்
இனி இல்லை..

அந்த நகரம்
முற்றிலுமாய்
அழிக்கப்பட்டு
விட்டது...

நீங்கள்
இந்த பாதையின்
வழியே சென்று
இடதுபுறம்
திரும்பி
பாருங்கள்

அங்கே
இரண்டும்
ஒன்றோடு
ஒன்று
பிண்ணி
பிணைந்திருக்கலாம்
சாரைகளாய்..