புரட்சித்தலைவர் மறைவுக்கு பின் ஜானகி அம்மையார் கொஞ்ச நாள் கோட்டையில் கொலுவீற்றிருந்தார். எந்த புண்ணியவான் மதியூக மந்திரியோ கொடுத்த ஆலோசனையின் படி அம்மையார் கொண்டு வந்த புரட்சி திட்டம்தான் இலவச பல்பொடி திட்டம் . பல்பொடி கொடுத்தது பெரிய சங்கதியில்லை. கூடவே ஒரு பிட் நோட்டீஸ். அதை நான் படித்திருக்கிறேன். கைவசம் இப்போது இல்லை. அதில் குறிப்பிடப்பட்டிருந்தவை .
1. பல்பொடியை இடது உள்ளங்கையில் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும் .
2.வலது கை ஆள் காட்டி விரலால் தொட்டு பற்களில் வைத்து ,மேலும்,கீழும் தேய்க்கவும்.
3. பின், வாயினுள் விரலை விட்டு மேல் மற்றும் கீழ் பற்களை சுத்தம் செய்யவும்.
4.நீரைக் கொண்டு நன்றாக கொப்பளித்து வாயை சுத்தம் செய்து கொள்ளவும்.
நல்லவேளை ! புண்ணியவதி ஆட்சி பொசுக்குன்னு முடிஞ்சு போச்சு. இல்லைன்னா என்னவெல்லாம் கொடுத்திருப்பாங்களோ ?
பல்பொடின்னவுடனே தோணுது ! கோல்கேட்டின் விளம்பரம். வீட்டுக்கே வந்து பல் தேய்ச்சு விட்ருவாங்க போலிருக்கு. அதுவும் திரிஷா வந்தால் !! ஆட்டோமேட்டிக்கா “ஆ” காமிச்சிடலாம் . நம்ம உடற ஜொல்லுலேயே வாயும் கொப்பளிச்சுக்கலாம். ஆமாம் ! உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா? மானங்கெட்டவனே, சொரணை கெட்டவனே ! உப்பு போட்டுத்தான் பல் தேய்க்கிறயா ?
ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி . ஒரு ஜாதகத்தின் குளோசப் . அதில் இருக்கும் கட்டங்களை காட்டி ஒரு டுபாக்கூர் ஜோசியர் “சனி இங்க இருக்கு. சுக்கிரன் இங்கதான் சுத்தறான்னு” பயம் காட்டிக் கொண்டிருந்தார். கீழே ஸ்கிரோலிங்கில் அதிமுக பெண்ணாகரத்தில் டெபாசிட் இழந்து கொண்டிருந்தது.
போன முறையை விட பாமக அதிக ஓட்டுக்கள் பெற்றது என்பதை சொல்லி இன்னும் மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம் என்று ஜம்பமடித்துக் கொண்டிருந்தார் தமிழ்குடிதாங்கி. கொஞ்சம் “வ” ட்டாரத்தை விட்டு வெளியில் வாங்கய்யா . உங்க பவிஷு தெரியும்.
மீண்டும் அங்காடி தெரு. எழுத்தாளர்களுக்கான திரையிடலில் பதிவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் வசந்தபாலன். அகநாழிகை வாசு, அப்துல்லா, பட்டர்ஃப்ளை சூர்யா,ஷங்கர், உண்மைத்தமிழன், கேபிள் சங்கர் அனைவரும் சென்றிருந்தோம். இரண்டாவது முறை பார்க்கையில் படத்தின் நீளம் பொருட்டாக தெரியவில்லை. அநேகமாக அதிகளவு உலகப்படங்களை நான் பார்க்காததால் இருக்கலாம். கும்பமேளாவில் கோட்டு,சூட்டு போட்டுக் கொண்டால் வித்தியாசமாக இருக்கும்தான். அதைப்போல் முன் தீர்மானத்துடன் படத்தை பார்த்து விமர்சனம் எழுதுவதும் என்று நினைக்கிறேன்.
ஒரு வானொலி விளம்பரம் . என் மகள் இன் ஜீனியரிங் படிக்க ஆசைப்படுகிறாள். பணத்துக்கு என்ன செய்வது என்று கவலை. அப்போதுதான் “பாரத் இன் ஜீனியரிங் காலேஜை பற்றி கேள்விப்பட்டேன். நுழைவுத் தேர்வு எழுதினால் 50 % ஸ்காலர்ஷிப் கொடுக்கிறார்கள். பாரத் இன் ஜீனியரிங் கல்லூரிக்கு நன்றி.
மேற்படி கல்லூரி ஆல் இந்தியா ஐஸ் வைப்போர் சங்கத்தலைவரும், பாராட்டு விழா செம்மலுமான திரு . ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது. நன்கொடை மேட்டரில் போன வருடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா அவர்களை தோலுரித்ததும் நினைவிருக்கலாம். ஆமாம்..அந்த கேஸ் என்னாவாச்சு? வள்ளுவர் கோட்டத்துக்கு அடியில் புதைத்து விட்டார்கள் !
வலது காலை முன்னால் வைக்கவும். இடது உள்ளங்கையை விரித்துக் கொள்ளவும். வலது உள்ளங்கையை குவித்துக் கொள்ளவும். மெல்ல இரண்டு கைகளையும் பின்னோக்கி கொண்டு போய், மீண்டும் முன் பக்கம் கொண்டு வரவும் . வலது கையால் இடது கையில் குத்தவும்.மெதுவாக தொடங்கி, படிப்படியாக வேகத்தை அதிகரிக்கவும். பின் இடது கால். வலது கை.. செய்து பாருங்கள். டென்ஷன் குறைந்து ரிலாக்ஸ்டாக இருக்கும். வாசு ஒரு முறை என்னை காத்திருக்க செயத போது இதைத்தான் செய்தேன். பக்கத்திலிருந்த ஒருவர் கேட்டார். “சூப்பர் . வேறு என்ன வித்தைகள்ளாம் தெரியும்”
“ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக் கொண்டேயும் போவேன்” என்றேன். நாம் பேருந்தை சொன்னேன். ஆனால் அவர் வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். இப்பல்லாம் இப்படித்தான் நடக்குது.
டிஸ்கி கவுஜை :
புரிதலுக்கான அர்த்தம் ஒன்றுதான்
நேற்றும் ,இன்றும் ,நாளையும்
புரிவதும் பின் சேர்வதும்
பின் புரிவதும் பிரிவதும்
சரிதானே...