உயிர்மை மதுரை கூட்டத்திற்கு வருகிறாயா என்று பிரபல சிற்றிதழ் உரிமையாளர் திரு . அகநாழிகை பொன்.வாசுதேவன் கேட்டபோது , எனக்கு அம்மாவும் , அருளானாந்தாவும் நினைவுக்கு வந்தார்கள் . அவர்களுக்கும் இலக்கியத்திற்கும் ஸ்நானப்ராப்தி கிடையாது . அவை இரண்டும் மதுரையில் உள்ள பிரபல சாப்பாட்டு கடைகள் .(கேபிள் நோட் இட்) . அப்புறம் சோம மற்றும் சுராபானம் .விடு ஜீட் என்று ரயில் ஏறினோம் . ஏங்க நானும் வேலையை விட்டுட்டேன் . நீங்களும் இப்படி உருப்படாம போறீங்களே என்று தங்கமணி விசனப்பட்டது வேண்டாம் .
குளித்து..அட குளித்து முடித்து சுப்ரீம் ஹோட்டலுக்கு போனோம் . அங்குதான் எழுத்தாளர்”கள்” தங்கியிருந்தார் “கள்” . முதலில் தவறுதலாக பிரபஞ்சனின் அறைக்கதவை தட்டி விட்டு பின் சாருவின் அறைக்குள் நுழைந்தோம் . மனிதர் அடித்துக் கொண்டிருந்தார் . அட.தண்ணீயோ இல்லை அதுவோ இல்லை. டைப் அடித்துக் கொண்டிருந்தார் . சாருவுக்கும் தினம் எதுவாவது எழுதா விட்டால் “சாமி கண்ணை குத்தி விடுமோ என்று தோன்றியது . கேட்டேன் . யார் சொன்னது என்று பதிலுக்கு கேட்டார் . எல்லாம் உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார்களில் ஒருவர்தான் என்று அவர் பெயரை சொன்னேன் .சரி இப்ப என்ன பண்ணலாம் என்று கேட்டார் . எது நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ , அது நடக்கட்டுமே சாரு என்றேன் . நடந்தது .
பத்து மணிக்கு கோயில் வாசல் திறந்தது . நாங்கள் மூன்றாவது ஆள்தான் . அங்கு மீ த பர்ஸ்ட் போட முடியவில்லையே என்று சின்னதாக எனக்கு ஒரு வருத்தம் . வாசு ஒரு சோக ஸ்மைலி போட்டார் . சாரு வழக்கம் போல் ஃபைண்ட் த கேஃப் பிட்வீன் த பிளவுஸ் அண்ட்... பிஸியாக இருந்தார் . அறைக்கு திரும்பினோம் . கிட்ட தட்ட ஒரு மாதம் சந்திர மண்டலத்தில் தங்கி வசிக்க தேவையான பொருட்களுடன் . ஜெர்ரியிடமிருந்து கால் . அண்ணே ..ஆன் தி வே.. சரவணகுமாரும் அக்தே (ஆயுதஎழுத்து வரவில்லை)
முதல் சுற்று பேச்சின்றியும் , இரண்டாம் , மூன்றாம் சுற்றுகள் வாயை மூடாமலும் கழிந்தது . மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது . இதோ நான் இருக்கிறேன் எடியூரப்பா என்று ஜெர்ரீ வந்தார் . சென்றார் . வென்றோம் . அஞ்சு வருடமாக காய்ந்து கிடைக்கும் அதிமுக காரன் போல் இருந்தோம் . எவ்வளவு வந்தாலும் தீர்ந்து கொண்டே இருந்தது . பிரபஞ்சன் கையில் ஒரு கிளாஸ் பீருடன் வந்தார். அன்பிற்குறிய மனுஷ்யபுத்திரன் வந்தார் . விமர்சகர் ஷாஜி வந்தார் . பேச ஆரம்பித்தார்கள் . நான் ரசிக்க ஆரம்பித்தேன்
சரவணக்குமார். செ வந்தார் . ஜோதியில் அவரும் ஐக்கியமாக சாப்பாடுக்கான முஸ்தீபுகள் ஆரம்பம் . ஜெர்ரீ நான் தான் சாப்பாடு ஏற்பாடு பண்ணுவேன் என்று அடம் பிடிக்க , நானும் அவரும் ஆட்டோ பிடித்தோம் அருளானந்தா மெஸ்சுக்கு. ஒரு டிஸ்கவரி சேனலை அள்ளிக் கொண்டு , அப்படியே மீண்டும் அரசுக்கு வருமானம். ஒரு முழு... அறைக்கு வந்தோம்.. அதகளம் மீண்டும் ஆரம்பமானது..
டிஸ்கி : அருளானாந்தா மெஸ்காரர் ஜெர்ரிக்கு உறவு என்று சொன்னதாக நியாபகம். ஆனால் அவர் அங்கு இன்னொன்றும் சொன்னார்
சென்னையிலிருந்து எழுத்தாள நண்பர்கள் வந்திருக்கிறார்கள் .
“கூட்டு ,பொறியல் எல்லாம் நிறைய கட்டிக் கொடுங்க “
டிஸ்கி : 2
நர்சிம் சொன்னது போல் இல்லை . அந்த ஓட்டல் அங்குதான் இருக்கிறது .
வெயிலான் , முரளிகுமார் , கா.பா . ஸ்ரீ தருமி ஐயா ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி ..