Wednesday, December 10, 2014

ஆகாயத்தாமரைகள்..




கெட்டிலில் இருந்து வெந்நீரை ஊற்றி பச்சைத்தேயிலை தேனீரை தயாரித்தேன் ..மீண்டும் அதே சிந்தனை .. எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பத்திரமாக நடமாட முடியுமோ அப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிட்டியதாக கொள்ளலாம்..மகாத்மா இப்படி சொன்னாரா? இல்லை எப்போது ஒரு பெண் உடல் முழுவதும் நகைகளை அணிந்து நள்ளிரவில் நடமாட முடிகிறதோ என்றா.. எனக்கு அது இப்போது அவசியம் தெரிந்தாக வேண்டும்..கூகூளில் சரியாக பிடிபட வில்லை.. சமயங்களில் கூகுளாண்டவர் குழப்பியும் விடுவார்.. யார் நாளை எடிட்டரிடம் வாங்கிக்கட்டிக்கொள்வது.. மொபைல் அடித்தது..அலுவலகத்திலிருந்துதான்..

சார்…சுகுணாதான்…

எஸ் டியர்..நானே உன்னை கூப்பிடனும்னு நினைச்சேன்..காந்தி..
உங்களுக்கு 2 மணி விமானத்தில் டிக்கெட் போட்டாச்சு . 11 மணிக்கு கேப் வரும்.. தில்லி.. அந்த கால்டாக்சி கற்பழிப்பு கேஸ். எடிட்டர் ஒரு புது கோணத்தில் செய்தியை விரும்புகிறார் . டாட்.
சுகுணா கட் பண்ணி விட்டாள்.. விஷயம் க்ளியரா இருக்கு . கால் டாக்சியில் பயணித்திருக்கிறாள்.. அசதியில் தூங்கி விட்டாள் . அந்த பாஸ்டர்ட் மானபங்கப்படுத்தி விட்டான்..க்ளீன் ஸ்டேட்மெண்ட் . மெடிக்கல் ரிப்போர்ட்டிலும் அதேதான் ..இதில் அங்கு போய் நான் என்ன ஜேம்ஸ்பாண்ட் வேலைப்பார்க்க முடியும் என்று நினைக்கிறார் எடிட்டர்.. களைப்பாக இருந்தது எனக்கு ..நாளை சுமி வருகிறாள்.. கூடவே குட்டிம்மாவும் . 45 நாட்களே ஆன ரோஜா .. எத்தனை பிளான் வைத்திருந்தேன்.. மூன்று முத்தங்கள் .இரண்டு சுமிக்கும்,மூன்றாவது சுமிக்கும்..அஃப்கோர்ஸ் ..குட்டிம்மா சுமியின் மடியில் இருக்கும்போதுதான்.

வண்டி எண் ..ஓட்டுநர் பெயருடன் குறுஞ்செய்தி வந்தருந்தது .. டிவியில் அர்ணாப் யாரோ மந்திரியை ஜென்ம விரோதத்துடன் கிழித்துக்கொண்டிருந்தான் . எனக்கும் தொலைக்காட்சி மீடியாதான் பிரதானமாயிருந்தது.. ஆனால் இங்கு பிரிண்ட் மீடியாவுக்கு வரும் வரை.. நான் ரிப்போர்ட் செய்யும் செய்தியை அச்சில் வாசிக்கும்போது, வாசிப்பது என்பதை விட, அந்த செய்தியின் வாசனையை நுகர்வது.. அதில் இருக்கும் ஒரு மயக்கம்… ஒரு வகையான அடிக்‌ஷன் என்றே சொல்வேன்..எனக்கு அந்த தில்லி பெண்ணின் முகம் வந்துப்போயிற்று.. அவள் புகைப்படம் யாருக்கும் தரப்படவில்லை.. முகத்தில் என்ன இருக்கிறது.. வன் கொடுமைக்குள்ளாகும் எல்லாப்பெண்களுக்கும் ஒரே முகம்தான்.. அடிபட்ட முகம். வேதனை உறைந்திருக்கும் முகம்..

சார்… நான் இங்க லேகா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் கிட்ட இருக்கேன்.. எப்படி வரனும்?
ன்னை ஆச்சர்யபடுத்தியது அந்தக்குரல் . அப்படியே நேர வாங்க..நான் கீழ வரேன்.. 8998 லோகன் தானே..

வண்டியில் ஏறி முன் சீட்டில் அமர்ந்தேன்.. ஏர்போர்ட் போக எப்படியும் 45 நிமிடம் ஆகும்.. வழக்கமாக இது போன்ற சமயங்களில் அசைன்மெண்ட் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவேன்.. முதலில் கண்களை மூடி ஒரு நிமிடம் சின்ன பிரார்த்தனை.. அது விஷயத்துக்குள் என்னை செலுத்திக்கொள்ள.. ஆனால் இப்போது நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.. கம்பெனி யூனிஃபார் அணிந்திருந்தாள் . கழுத்தை சுற்றி துப்பட்டா . முழுநிலவை பாதி துணியால் மறைத்தது போல்.. எத்தனை சிந்தனை வயமிருந்தாலும் ஒரு துளியை கூட பிரதிபலிக்காத முகம். ஒரு தாமரைப்பூவை போலிருந்தது .
அதெல்லாம் விட ஆச்சர்யம் ..அவள் எனக்கு டிரைவராக அமைந்ததுதான்.. நான் ரிப்போர்ட் செய்யப்போகும் கேஸிலும் இப்படித்தான். ஒரு ஆண் .. ஒரு பெண்.. இங்கு பரஸ்பரம் ஸ்தானம் மாறியிருக்கிறோம்..

நீங்க பத்திரிக்கைகாரரா என்றாள்.. ரேடியோவின் ஒலியை குறைத்தபடி..
அவசரமாக இல்லை என்றேன்.. வழக்கமாக அலுவலக ஐடியில் டாக்சி புக் செய்ய மாட்டார்கள்.. சுகுணாவின் தனிப்பட்ட கணக்கில்தான் செய்திருப்பார்கள்..

இல்லை .உங்கள் முகத்தில் ஒரு கேள்விக்குறி ஓடிக்கொண்டே இருக்கிறது .. உரையாடலை ஆரம்பிக்கிறாள் போலும்.

உன்..சாரி உங்கள் பெயர் என்ன என்றேன்

தாமரை.. என் பெயருக்கு வடமொழியில் தாமரை என்று அர்த்தம்னு எங்கப்பா சொல்வார்.

அவள் குறிப்பிட்ட அதே கேள்விக்குறியுடன் அவளை பார்த்தேன்.

ஆனால் அது அப்போது.. இப்போது என் பெயருக்கு வானம்..ஆமாம்..ஆகாயம்னு அர்த்தம்.. உங்க பேர் தெரிஞ்சுக்கலாமா? நிச்சயம் சுகுணாங்கிற பேர் உங்களுக்கு பொருத்தமா இருக்காது

நான் அவள் நகைச்சுவையை ஊக்குவிக்கும் விதமாக மெலிதாக சிரித்தேன்.. நீங்க எப்படி இந்தப்புரொஷனில்.. ?

ஏன் ..நாங்கதான் இப்ப விமானமே ஓட்டறமே

நீங்க செய்திகள் கேட்பதே இல்லையா? நாட்டு நடப்பு உங்களுக்கு பயமாக இல்லையா?

நீங்க என்னை ஒருமையிலெயே அழைக்கலாம்.. மாறி மாறி பேசினா எனக்கு சங்கடமா இருக்கும்.. இது அப்துல் எனக்கு கொடுத்த இரண்டு பரிசுகளில் ஒன்று.. அப்புறம் உங்களுக்கு பயமா இருந்தா..அந்த பேனிக் பட்டனை அழுத்துங்க.. காவல் கண்ட்ரோல் ரூமில் அலாரம் அடிக்கும் என்றாள்

சரி அப்துல் என்றேன் எனக்கேயான ட்ரேட் மார்க் கேள்விக்குறியுடன்..
அப்துல் ஈஸ் மை எக்ஸ் ஹஸ்பெண்ட்..இல்லை நான் அப்துலின் மாஜி மனைவி

சிணுங்கிய மொபைலை துண்டித்தேன் . இன்னொரு பரிசு என்றேன்

நானும் அப்துலும் காதலித்தோம்.. வீட்டுக்கு தெரிஞ்சுப்போச்சு.. வழக்கமான காதலை காப்பாற்றிக்கொள்ளும் சம்பிரதாயப்படி வீட்டை விட்டு வந்து விட்டேன் . அந்த இரண்டாவது பரிசு . பானு. இரண்டாம் வகுப்பு படிக்கிறாள்.

குட் லவ் ஸ்டோரி.. நான் கூட ..

இருங்க..இன்னும் கதை முடியலை.. இப்போ அப்துல் என் கூட இல்லை.. அவர் அவரோட மூணாவது மனைவியுடன் இருக்கிறார் .

நீ திரும்ப உங்க அப்பா வீட்டுக்கு போகலையா?

எந்த முகத்துடன் போறது ? மறுபடியும் பொட்டு வச்சுகிட்டா..எங்க ஊர்ல வெட்டி போட்ருவாங்க.. நான் விரும்பி ஏத்து கிட்ட வாழ்க்கை . நானே வாழ்ந்துட வேண்டியதுதான் . ஆனால் நான் இப்பவும் சந்தோஷமா இருக்கேன் . என் இளமையில் இருந்தா மாதிரியே …
வீ ஆர் நியரிங் சார் .. நீங்க உங்க பத்திரிக்கையில் இத எழுதுவீங்களா?
நான் மௌனமாக இருந்தேன். எனக்குள் இருக்கும் பத்திரிக்கையாளனின் கை அரிப்பெடுக்க ஆரம்பித்திருந்தது.. ஏனோ சுமியின் நியாபகம் வந்தது..அப்போதே அவள் தான் அழைத்திருந்தாள்.. துண்டித்து விட்டேன். ஏர்போர்ட் வந்து விட்டது . பில்லை கொடுக்கும்போது மீண்டும் கேட்டாள் ..சார் உங்க பேரை சொல்ல வேணாம்னா வேண்டாம் என்றாள்..
லவுஞ்சை நோக்கி நடந்தேன்.  மொபைல் அடித்தது . சுமிதான்.
அப்துல்..வேர் ஆர்யூ என்றாள்.. அவளிடம் நடந்ததை சொல்ல ஆரம்பித்தேன் .




Saturday, September 28, 2013

மானிட்டர் பக்கங்கள்.. 28/09/2013





இரண்டு சர்தார்ஜிகள் சதுரங்கம் ஆட ஆரம்பித்தார்கள் . உலகின் மிகச்சிறிய , மிகப்புகழ்ப்பெற்ற சர்தார்ஜி ஜோக் இது . அதாவது பலகையில் காய்கள் அப்படியே இருந்தன . ஆடிக்கொண்டேயிருந்தார்கள் .
நம் எல்லோருக்கும் நிறைய சர்தார்ஜி ஜோக்குகள் தெரியும் . சர்தார்ஜி பெக் என்றால் தெரியுமா ? ஒரு பெக் என்பது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு. இது யூனிவர்சல் அளவு.. சர்தார்ஜி அதாவது பாட்டியா(லா)லா பெக் என்பது பாபா முத்திரையாம் . சிங் ஈஸ் கிங் .(மன்மோகன் இல்லையே சார்) என்ற கட்டுரையில் மணிஜி சொல்கிறார் . மணிஜி ? எஸ்.கே.எஸ் என்கிற பாரதிமணி . வாழ்க்கையில் சுமார் 50 வருடங்களுக்கும் மேல் வட இந்தியாவில் வாழ்வாங்கு வாழ்ந்தவரை மணிஜி என்றுதானே அழைக்க வேண்டும்.. ஆனால் அவர் நமக்கு பாரதி மணி . ஒரு மாடல் மந்திரி . முதல்வர் என்றால் அவரை மாதிரி இருக்க வேண்டும் என்று தமிழ் சினிமா அவதானித்த புருஷன் . 

தலைப்பாக்கட்டி பிரியாணி , ஒரிஜினல் பாஸ்மதி அரிசி என்றெல்லாம் விளம்பரம் தூள் பறக்கிறது . இந்த பாஸ்மதியின் பின்னிருக்கும் ஒரு கதையை சுவையாக சொல்கிறார் பாரதிமணி . எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று கேட்டு கேட்டு புளித்துப்போயிருக்கும் காதுகளுக்கு ,எல்லைத்தாண்டிய பாஸ்மதிவாதம் நாவை நர்த்தனமாட வைக்கிறது . எப்படி பஞ்சாப் பாஸ்மதி சுவையாக இருக்கிறது என்கிற வரலாறு .

நான் சிறுதாவூர் போனதில்லை என்று ஆரம்பிக்கிறார் . மணிஜி சார் .. நீங்க ஒரு கஞ்சாக்குடிக்கியாகும் வாய்ப்பும் காத்திருக்கிறது  . கபர்தார் !! ஒரு லஸ்ஸி குடித்த அனுபவத்தை எழுதுகிறார் . ஒன்றரை லிட்டர் பிடிக்கும் லோட்டாவில் குடிக்க முடியாமல் குடித்த , வெட்டியெடுத்த பாலாடை மிதக்கும் (மலாய் பாக்கே) லஸ்ஸியின் ருசி இன்னும் நாவில் இருக்கிறது. (சுவைக்கும் , ருசிக்கும் எத்தனை வித்தியாசங்கள்  )
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அன்பு பால் நிலையத்தில் லஸ்ஸி கொடுப்பார்கள் . அப்போது 80 களில் 2 ரூபாய்தான் . கள்ளிச்சொட்டு தயிரில், சர்க்கரையை தாலாட்டி , ஆடைப்போட்டு மானம் காத்து கொடுப்பார்கள் . எப்போது போனாலும் காத்திருந்துதான் குடிக்க வேண்டும். சென்னையில் ஆனந்த் தியேட்டர்(பழைய ) அருகில் வைஷ்ணவி தாபாவில் அப்படி ஒரு லஸ்ஸியை குடித்திருக்கிறேன் .. பீர் மாதிரி ஒரு வித மோரும் கூட . 

ஒரு பஞ்சாப் பஞ்ச் லைன் .

நேரான விரலில் வராத நெய்யை , விரலை வளைத்தெடுப்பதில் தவறில்லை. (சிம்பு, ஹன்சிகா மேட்டர் நியாபகம் வருகிறதா ? ஹன்சிகா ஒரு பஞ்சாபி என்று படித்த நியாபகம் )

ரோஜா என்றால் நேரு மாமா நியாபகம்தான் வரும் . வரணும் . ரோஜாவுக்கு செல்வமணிதானே (இங்கயும் மணியாJ ) என்ற ஏடாகூடம் கூடாது. பாரதிமணிஜி நேருவுக்கு வரையும் எழுத்துச்சித்திரம் ..

”பிரபல புகைப்படக்கலைஞர் ரகுராய் எடுத்த ஒரு படத்தில் வாயில் சிகரெட்டுடன் உதட்டைப் பிதுக்கியபடி சோகமாக தோற்றமளிப்பார் நேருஜி  தமிழ்நாட்டின் வரைப்படத்தை உற்று கவனித்திருக்கிறீர்களா ? அதில் எனக்கு நீண்ட முக்குடன் சிகரெட் பிடிக்கும் நேரு எனக்கு தெரிவார்   சிகரெட்டாக தெரிவதுதான் சில அரசியல்வாதிகளுக்க்கு இனிப்பாகவும் , சிலருக்கு புளிப்பாகவும் இருக்கிற ராமர் பாலம் . 

(எனக்கு மானாட ,மயிலாட கலா மாஸ்டர் தெரிகிறார் 

தில்லியில் வேலைபார்க்க அதாவது கோலோச்ச என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் என்று விளக்கமாகவே ,கொஞ்சம் சுய வாக்குமூலமாகவே சொல்கிறார் . இரண்டு வாரங்களுக்கு முன் சன் டிவி மகாபாரதத்தில் திருதராஷ்டிரனிடம் ஒரு சாணக்கியன் அரசன் என்பவன் எப்படியிருக்க வேண்டும் என்று சொல்வான் அது நினைவுக்கு வருகிறது. எப்படியிருக்க வேண்டும் ?. சிம்ப்பிள் . இதுவரை நம்மை ஆண்டவர்கள் போல்தான் இருக்க வேண்டும் . அரசர்கள் ஆண்டவனை நம்புகிறார்களோ இல்லையோ , இதற்கும் முன் ஆண்டவர்கள் வழி நடக்கிறார்கள் .

தில்லியின் சுடுகாட்டைப் (நிகம்போத் காட்) பற்றிய கட்டுரையை படிக்காதவர்கள் கட்டை வேகாது என்றே தோன்றுகிறது . ஆறடி நிலம் , எண்சாண் உடல் ,நவத்துவாரங்கள் ,பத்து என்று என்னவல்லாமோ எனக்குள் ஓடியது . பாடைக்கு கயிறு கட்டுவதென்பது ஒரு கலையே . செத்தால் கூட எல்லாருக்கும் வராதுJ பாரதிமணி சாருக்கு வாய்த்திருக்கிறது . வாழ்வாங்கு வாழுங்கள் சார் !

சங்கீதம் பற்றிய பதிவுகளை படிக்கும்போது எனக்கு ஆண்டவர் அசோகா ஸ்டால் நினைவுக்கு வந்தது . அது திருவையாறில் இருக்கிறது . சகல வித்வான்களுடனும் ஜுகல் பந்தியே நடத்தியிருக்கிறார் பாரதிமணி . . கேள்விஞானத்திலேயே . 

கொஞ்சம் முன்னாலேயே எழுத்துக்கு வந்திருந்தால் , “ நான் இதை எழுதுவதற்கு முன் சில பல வருடங்கள் ஒருவித தவத்தில் கிடந்தேன் என்று இன்று பேசும் சோ கால்டு எழுத்தாளர்களை மூலக்கொத்தளம் டாஸ்மார்க்கில் புலம்ப வைத்திருப்பாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது

பின்னாள் பங்களாதேஷ் அதிபர் ஷேக் அஸினாவை பற்றிய கட்டுரை. அவருக்குப்பிடித்த “ஹீல்ஸா” மீன் . மாளையப்பட்சம் தாண்டி நாக்கு நீள்கிறது J
50 முதல் 60 வயதுகாரர்களுக்கு நீங்கள் எதாவது புத்தகம் பரிசளிக்க விரும்பினால் இந்தப்புத்தகத்தை தரலாம் என்று ஹீவாஸ் (பிழையில்லை ) ரீகல் மீது உறுதியளிக்கிறேன்..

 பிறந்த மண் பற்றிய பதிவுகள் மகாபலி(ஓணம்) விருந்து . ஒரு வேளை விஸ்க்கிக்கு டைம் ஸ்பேர் பண்ணுங்க சார்.. கொஞ்சம் பாக்கியவானாகிக்கொள்கிறேன் !! எட்டு வருஷாக குடிப்பதில்லை என்பதையும் பதிவு செய்து விட்டார் பாவி மனுஷன் . சியர்ஸ் சார் ..

ஒரு விளம்பரம்....

புத்தகம் கிடைக்கும் இடம் ...





Friday, December 14, 2012

திரைக்கடலோடுதல்...







ஆனை.. ஆனை
அழகர் ஆனை

கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை
காவிரிக்கரையை கலக்கும்
ஆனை

அப்பாக்களுக்கு நேரம் இருப்பதில்லை
தாத்தாக்கள் உடன் இருப்பதில்லை
கதை கேட்கும் பொழுதுகள்
ஸ்கைப்பில் மட்டுமே
வாய்க்கிறது பேரன்களுக்கு..



நாளை முதல்
நீளத்தொடங்கும் என் தனிமை...
ஜெட்லாக் பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறான்
மகன்... .மனைவியிடம்

Wednesday, October 17, 2012

கவியரசர்...ஒரு நினைவஞ்சலி




இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட - அவை
இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன
தாம் விளையாட'


மொழித்திறன், செவித்திறன் அற்ற ஓர் ஆணும் பெண்ணும் மணந்து கொள்கின்றனர். ஒரு குழந்தையையும் பெற்றுக் கொள்கின்றனர். அவர்களின் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இதைவிட சிறப்பாகவும் துல்லியமாகவும் ஒரு திரைப்படப் பாடலில் பதிவு செய்ய இயலுமா?
மற்றொரு திரைப்படத்தில், தான் காதலித்த பெண் மற்றொருவனை மணந்துகொண்டு அந்தக் கணவனுடன் மருத்துவமனைக்கு வருகிறாள். அந்தக் கணவனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மருத்துவனான அந்தக் காதலனுக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்தச் சூழ்நிலைக்கு ஒரு பாடல்
"வருவாய் என நான் தனிமையில் இருந்தேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரை காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க!'

தமது எழுதுகோலால் திரைவானில் நவரசங்களையும் அனாயாசமாக அள்ளித் தெளித்த அற்புத மேதை கவியரசர் கண்ணதாசனின் திரைப்படப் பாடல் வரிகளே இவை. எந்தவொரு உணர்ச்சியையும் பேசாது அவரது பேனா விட்டு வைக்கவில்லை. மனித வாழ்வில் நிகழும் எந்தவொரு சம்பவத்திற்கும் அவரது ஏதாவது ஒரு பாடல் பொருந்திப் போவதை நாம் காணலாம்.


"மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே!
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே!'

இப்படிப்பட்ட இலக்கிய நயம் கமழும் நல்ல தமிழ் வரிகளை ஒரு திரைப்படப் பாடலின் பல்லவியாக அமைப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.
இப்பாடல் ஈட்டிய பெருவெற்றி, திரைப்படப் பாடல்களை எளிமை என்கிற பெயரில் மலினப்படுத்திக் கொண்டிருந்த பல மாய்மாலக்காரர்களின் வாயை அடைத்தது.
அதுபோலவே தனது பாடலின் முதல் வரியிலேயே ரசிகனின் மனதைச் சுண்டியிழுப்பதில் வல்லவர் கண்ணதாசன்.
"பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே'

"சொன்னது நீதானா?'
"நலந்தானா? நலந்தானா?
உடலும் உள்ளமும்
நலந்தானா?'
"இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால்
என்னாவது?'
"ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்?'
"ஒருநாள் போதுமா?'
"ஆண்டொன்று போனால்
வயதொன்று போகும்'
"ஏன் பிறந்தாய் மகனே
ஏன் பிறந்தாய்?
"எங்கிருந்தாலும் வாழ்க!'

என்று கூறிக்கொண்டே போகலாம்.
மேலும் ஒரு பாடலில் முதல் மூன்று வரிகளை ஒரே மாதிரி அமைத்துவிட்டு நான்காவது வரியில் எதிர்பாராத ஒரு திருப்பத்தைத் தருவதும் இவர் வழக்கம்.


"கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு?
கையழகு பார்த்தால் பூ எதற்கு?
காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதற்கு?'

அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள்?'

"ஆடச் சொல்வது தேன்மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

"கூடிவந்த மேகமென்று கூந்தலைத் தொட்டார் - வண்
குவளைபோல மலர்ந்ததென்று கண்களைத் தொட்டார்
ஓடிவந்த கனிகளென்று இதழ்களைத் தொட்டார் - தொட்டால்
ஒடியுமென்று இடையை மட்டும் தொடாமல் விட்டார்!

பல்வேறு புராண, இதிகாச இலக்கியங்களை கவிஞர் ஆழ்ந்து அறிந்திருந்ததனால் இவரது ஒருசில பாடல்களில் அதிலும் ஓரிரு வரிகளில் மட்டும் அந்தப் பாதிப்பு துவக்கமாகத் தெரியும்.

"காலங்களில் அவள் வசந்தம்' (பகவத்கீதை)
"தோள் கண்டேன் தோளே கண்டேன்' (கம்பர்)
"நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றம் இல்லை' (கம்பர்)

"அன்றொரு நாள் இதே நிலவில்' (பாரி மகளிர்)


"வீடு வரை உறவு


வீதி வரை மனைவி' (சித்தர்கள்)


"உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே' (குறள்)


"கண்வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்' (கம்பர்)


மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே(கம்பர்)


"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே' (வள்ளலார்)


கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா (அருணகிரிநாதர்)


சொல்லடி அபிராமி (பாரதி)
உன் கண்ணில் நீர் வழிந்தால் (பாரதி)


வாயின் சிவப்பை விழி வாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய் வாங்க (கலிங்கத்துப் பரணி)
இப்படி ஏராளம்.

ஆனால் அந்த ஓரிரு வரிகளைத் தொடர்ந்து அப்பாடலை கவிஞர் கட்டமைக்கும் விதம் அபாரம்.
உதாரணமாக "உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடலின் சரணத்தில் வரும்


"பேருக்கு பிள்ளையுண்டு - பேசும்
பேச்சுக்கு சொந்தம் உண்டு - என்
தேவையை யாரறிவார்? உன்னைப்போல்
தெய்வம் ஒன்றே அறியும்!'

என்கிற வரிகள் கல் மனதையும் கரையச் செய்யுமே.
அதுபோலவே "நலந்தானா' பாடலின் சரணத்தில் வரும்


"கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
புண்பட்ட சேதியை கேட்டவுடன் - இந்த
பெண்பட்ட பாட்டை யாரறிவார்?
என்ற வரிகளும் மிகவும் வியந்து ரசிக்கத் தக்கவை.

ஒரு திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் நேரில் பார்க்காமலே காதல் கொள்கின்றனர். நாயகியைத் தேடி வரும் நாயகன் நாயகியின் தோழியை நாயகி என நினைத்துப் பழக, தோழியும் அவனை விரும்புகிறாள். அப்போது நாயகி தோழியைப் பார்த்து பாடும் ஒரு பாடலில்,


"கடலும் வானும் உள்ளவரை - தென்றல்
காற்று நடந்து செல்லும்வரை
வளர்க உந்தன் பள்ளியறை - நீ
வாழ வைப்பாய் அந்த நல்லவரை!'
என்று எழுதியிருப்பார். இதனை எப்படி வெறும் திரைப்படப் பாடல் என்று ஒதுக்க முடியும்?


"இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்!'
என்றும்


"எறும்பு தோலை உரித்துப் பார்க்க யானை வந்தது
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்தது'
என்றும் பெரிய தத்துவங்களை எளிமையாக கூறி ரசிக்க வைப்பார் கண்ணதாசன், கல்லூரி வாழ்வின் பிரிவு நிலை பாடலான


"பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே'
பாடல் ஒலிக்காத கல்லூரிகள் இன்றுவரை இல்லை. அதிலும் அப்பாடலின் 

சரணத்தில் வரும்
"எந்த ஊரில் எந்த நாட்டில்
என்று காண்போமோ?
எந்த அழகை எந்த விழியில்
கொண்டு செல்வோமோ?'
போன்ற வரிகளே கண்ணதாசனை தனித்துவம்மிக்க கவிஞராக அடையாளப்படுத்துகின்றன.


ஒரு படத்தில்,
"நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை!'
என்று எழுதியவர் வேறொரு படத்தில்


"மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று!'

எல்லாவித உணர்ச்சிகளையும் சித்திரிப்பதில் கண்ணதாசன் வல்லவர். ஆயினும் அவரது காதல் தோல்வி பாடல்களே அவரைப் புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது என்று கூறுவது மிகையன்று.

"நினைக்கத் தெரிந்த மனமே - உனக்கு
மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே - உனக்கு
விலகத் தெரியாதா?'

"எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது.'
"உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை'
எங்கிருந்தாலும் வாழ்க - உன்
இதயம் அமைதியில் வாழ்க'
"கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் -அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்'
இப்படிப் பலப்பல.
காதலில் தோல்வியுற்று கையறு நிலையில் கலங்கி நிற்கும் நம் இளைஞனின் மனக்குமுறலை கவிஞர் ஒரு படத்தில் பாடலாக வடித்திருப்பதை காண்போம்.

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா?
என்று தொடங்கும் அந்தப் பாடல் பல ஊர்களின் பெயரை தன் நிலையோடு ஒப்பிட்டுக் கூறிவிட்டு இறுதியில்,
பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டுவிட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!
கீழூரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா!
மேலூரு போவதற்கும்
வேளைவர வில்லையடா!
என்று முடியும்.
மானுட வாழ்வின் சாரத்தை மையாக்கி திரைப்படப் பாடல்களை உருவாக்கிய அந்த மகத்தான கவிஞனை வெறும் திரைப்படப் பாடலாசிரியர் என்று கூறி தமிழுலகம் ஒருபோதும் ஒதுக்காது; ஒதுக்கவும் இயலாது. ஏனெனில் "கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது!'

 இன்று கவியரசரின் நினைவு நாள் . நான் படித்து ரசித்தது நண்பர்களுக்காக...