Tuesday, May 8, 2012

வழக்கு எண் 18/9



ஆர்த்தியை எப்போது அம்மணமாக காட்டுவார்கள் என்று அலைபாய்ந்த மனசுதான்,கிளைமாக்ஸில் இன்ஸ்பெக்டரின் மீது ஆசிட் அடிக்கும்போது எழுந்து நின்று கைத்தட்ட வைக்கிறது..

தினேஷின் கேரக்டர் திரையில் வரும்போது பின்னால் ஒருவன் இன்னொருவனிடம் மச்சான் ..அப்படியே நீதாண்டா என்றான்.. உண்மைக்கு வெகு அருகாமையில் படம் இருப்பதை  உறுதி செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.. இன்னும் நிறைய பேர்கள் அல்பாசையில் தங்கள் மொபைலின் ஃப்ளூ டூத்தை ஆன் செய்து வைத்திருப்பார்களோ என்றும் எண்ணினேன்..

வடநாட்டு முறுக்கு கம்பெனியில் ஆரம்பிக்கும் வன்முறை ..படம் முழுவதும் மெல்லிய குரூரத்துடன் அலைகிறது.. அடியும்,ரத்தமும் மட்டும்தானா வன்முறை? அந்த வன்முறை இல்லாவிட்டால் மக்கள் தூங்கியிருப்பார்கள்.. நேர்மையாக கதை சொல்கிறோம் என்கிற பாசாங்குதான் படத்தின் ஹைலைட் ..வயதுக்கு வந்த  பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் நிச்சயம் அவர்களின் மொபைலை நோண்டி பார்ப்பார்கள் என்றே நினைக்கிறேன்..அது எத்தனை உள்நாட்டு குழப்பங்களை உண்டாக்கப்போகிறதோ:-)

சம்பவங்களும் ,குறியீடுகளும் கற்பனையே என்று சொல்கிறார்கள்.. பிராத்தல் கேஸில் கைது செய்யப்பட்ட ஒருத்தி பள்ளிக்கூடம் நடத்துக்கிறாள்.. அவளும், மந்திரியும் ,இன்ஸ்சும் ஒரே சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுகிறது..தமிழ் சினிமாவில் அக்ரஹாரம், மேலவளைவு , முதுகுலத்தூர் தாண்டி எந்த சாதியையும் இழுக்க மாட்டார்கள்.. வழக்கு எண்ணில் குறியீடாக வரும் சாதி எந்த சாதியாக இருக்கும்? வேல்,கம்பு வகையாறாகத்தான் இருக்கும் என்பது என் அனுமானம்..

உண்மை குற்றவாளி கைது செய்யப்பட்டான் என்று போகிற போக்கில் சொல்லி விடுகிறார்கள்.. ஆனால் படம் முடிந்து நாம் வீட்டுக்கு போவதற்குள் அவன் வெளியில் வந்திருக்க கூடும்..ஆக  படம் பார்ப்பவரின் உணர்ச்சிகளை உசுப்பி விட்டு கல்லா கட்டுவதை தவிர வேறெந்த நேர்மையான நோக்கமும் வழக்கு என்ணில் இல்லை...கிளைமாக்சில் நம்பியாருக்கும், அசோகனுக்கும் என்ன நடக்குமோ அதுதான் இதிலும் நடக்கிறது..ஆனால் நிஜத்தில் அப்படியா என்ன? ஜோதியின் வாழ்க்கை அவ்வளவுதான்..வேலு சிறையில்தான் இருக்க வேண்டும்..ஆர்த்தி ஐ.ஐடி..ஐஐஎம்மோ சேர்ந்து கான்பூருக்கோ..பிலாய்க்கோ போய்விடுவாள்.. அப்படி முடித்திருந்தால் அதுநேர்மையான திரைப்படமாக இருந்திருக்கும்.. 

வழக்கு எண் 18/9

வழக்கமான படம் இல்லைதான்..ஆனால் வழக்கத்தை ஒன்றும் அப்படி மீறியும் விடவில்லை