Showing posts with label நாட்டுநடப்பு/அரசியல். Show all posts
Showing posts with label நாட்டுநடப்பு/அரசியல். Show all posts

Friday, February 5, 2010

அர்த்தமில்லாத கதைகள்....4


இந்த வருசம் அய்யாவுக்கு 87 முடியுது. சிறப்பா கொண்டாடிடணும்.

செஞ்சிடலாம். ஆனா அதுக்கப்புறம் அவரை வீட்டோட இருக்க சொல்லுங்க. இந்த நிலம், நீச்சு, தோட்டம் , தொறவு எல்லாத்தையும் என் கிட்ட ஒப்படைக்க சொல்லிடுங்க.

அதைத்தானே அவரும் சொல்லி கிட்டிருக்காரு. பாவம். போதும் இத்தனை காலம் ஓடா ஒழைச்சு குடும்பங்களை ஏதோ கரையேத்திட்டாரு. இனிமேலாவது அக்கடான்னு கோயில் குளம்னு இருக்கட்டும்.

சரி. பெரியவர் என்ன சொல்றாரு?

அவர் என்ன சொல்றது! சரின்னுதான் சொல்வாரு.

இல்லம்மா . எனக்கென்னவோ அண்ணன் இதுக்கு ஒத்துக்குவாருன்னு தோணலை. நீங்க வேணா பாருங்க!

எலேய் ! கிடா வெட்டியாச்சா? மாலை எங்க? அண்ணன் ரெடியாயிடுவாரு.

அண்ணே ! எங்களுக்கு எல்லாமே நீங்கதான். உங்களை நம்பித்தான் இருக்கோம்.

என்ன தம்பி? ஊர் பூரா ஒரே பேச்சா இருக்கு.

என்ன பேசிக்கிறாங்க?

என்ன அண்ணே! தெரியாத மாதிரி கேக்கறீங்க? பெரியவர் காசி, ராமேஸ்வரம்னு கிளம்பறாராம். தம்பி கிட்ட எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டு.

எல்லோருக்கும் சொல்றேன் கேட்டுக்கங்க. டேய்! நம்ம தலையாரியை கூப்பிட்டு ஊருக்கு தண்டோரா போட சொல்லு. பெரியவர் எங்கயும் போகலை. அடுத்த வருஷமும் அவர்தான் ஊர் நாட்டாமை.

என்னங்க இது? அண்ணன் இப்படி சொல்லிட்டாரு?

பாவம்! ஐயா பாடுதான் திண்டாட்டம். என்ன செய்யப்போறாரு?

அவருக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? எத்தனை சமாளிச்சிருக்காரு! பாரேன். ஊதி தள்ளிடுவாரு!


ஏம்மா! அப்பா சொத்துல பொம்பளை பிள்ளைகளுக்கும் சம பங்கு உண்டுன்னு ஐயா முன்ன நாட்டாமையா இருக்கிறப்ப சொன்னாருல்ல?

ஆமாம்! அதுக்கு என்ன இப்போ?

எனக்கு என்ன கிடைக்கும்னு தெரியலையே?

மதிய சாப்பாட்டுக்கு இங்கதான் வருவாரு . நீயே கேளு!

-------------------------------------------------------------------------------------------------

அக்கா! சீமைக்கு போனிங்களே? பெரியக்காவை பாத்தீங்களா? உங்களை கண்டுகிட்டாங்களா?

இல்லை தங்கச்சி. திரும்பி கூட பார்க்கலையே!தலையால தண்ணி குடிச்சு பார்த்தேனே. ம்ஹீம்.. அசரலை.

பின்ன ! அசலூராயிருந்தாலும் உப்பு போட்டுத்தானே ரொட்டி சாப்பிடுது. பத்தாததுக்கு பெரியவரோட ஆளுங்க மூட்டி விட்டு கிட்டே இருக்காங்க!!

அன்னிக்கு விழுப்புரம் காது குத்து திருவிழாவில வச்சு நீங்க அவங்களை ஏசாம இருந்தா, இந்நேரம் ராணி மாதிரி இருந்திருக்கலாம். அப்புறமாவது விட்டீங்களா? பட்டப்பேரை வச்சு கிண்டலடிச்சீங்க. மறந்துடுவாங்களா என்ன?

ஆமாம். அப்பல்லாம் நீயும் கூடத்தானே இருந்த. எடுத்து சொல்ல வேண்டியதுதானே.

எங்கக்கா உங்களுக்கு யார் சொல்றது? அதான் நீங்க ஒருக்கா முடிவு பண்ணிட்டா, உங்க பேச்சை நீங்களே கேக்க மாட்டீங்களே!

சரி. பார்ப்போம். எதுக்கும் இந்த விருதாசலத்து பங்காளி மேல ஒரு கண்ணு இருக்கட்டும்.

ஆமாம். அந்தாள் வலிய வந்தப்ப அவரையும்தான் ஏசி விட்டீங்க. கள்ளு குடிக்கிறான், உளறான்னு !

அடியேய் ! இப்ப அந்தாளுக்கும் வேற போக்கிடம் இல்லை. இங்கனத்தான் வரணும். வருவாரு பாரு. வண்டியை பூட்ட சொல்லு. கிளம்புவோம்.

எங்கக்கா?

தோப்புக்குத்தான். போய் ஒரு ஆறு மாசம் தூக்கத்தை போட்டுட்டு வருவோம்.

எது எப்படியோ? எங்க காட்டுல மழை பெய்யதை யாரும் தடுக்க முடியாதுல்ல!!




Thursday, November 26, 2009

அர்த்தமில்லாத கதை----4


சிதம்பரம் சம்சாரமா ?

ஆமாங்க.

சொன்னதையெல்லாம் நினைப்பிருக்கு இல்ல?

இருக்குங்க..

அந்த விருதாசலத்து ஆளும், நாச்சியாரும் கூட்டு சேரவே கூடாது. நீதான் பொறுப்பு..

தெரியுங்க.. நான் சொல்லித்தானே நாச்சியாரம்மா அந்தாளை குடிகாரன்னு தூத்தினாங்க.. நான் பாத்துக்கறேன்

அந்த முட்டை கண்ணன் ரெண்டு பேரையும் சேர்க்க ரொம்ப மெனக்கெடறான் பாத்து..

நீங்க கவலையை விடுங்க ஐயா.. என் கடையில எவ்வளவு கொள்முதல் பண்றீங்க.. நன்றி மறப்பேனா?

அது மட்டுமில்ல.. பஞ்சாயத்துல உன் மேல எவ்வளவு பிராது இருக்கு. நாங்க கண்டுக்கிறதே இல்லை.

தெரியுங்கய்யா.. உடம்பும், உயிரும்தான் இங்க.. விசுவாசத்தை அங்கதானே வச்சிருக்கேன்

என்ன வரதா? திருவிழா நெருங்கிடுச்சு. என்ன பண்றது?

வரதன் கையிலிருந்த சுத்தியை கீழே வைத்தவாறு அதான் எனக்கும் புரியலை.. நாச்சியாரம்மாவோட இனி கஷ்டம்தான்.. உங்க நிலைமை என்ன?

அறிவாளை சாணம் பிடித்து கொண்டிருந்த பாண்டி.. ஒன்னும் தெரியலை.. அறுவா வேற மழுங்கி போச்சுது.. திருவிழால கலந்துக்கலை. அம்புட்டுதான் ஒரு பய உண்டியல்ல சல்லிக்காசு போட மாட்டான்..

ஒருக்கா ஐயா கிட்ட பேசி பார்த்தா என்ன?

அட போய்யா.. அந்தாளுக்கு நம்ம பவிசு தெரிஞ்சு போச்சு.. சீண்டகூட மாட்டாரு..பேசாம இந்த வாட்டியும் நம்ம தனியா திருவிழாக்கு போனா என்ன?

அட போப்பா.. பொண்சாதி, புள்ளைங்க கூட வரமாட்டாங்க... சரி .. விதி விட்ட வழி.. பார்ப்போம்..

என்னம்மா இது..சோத்துல சுத்தமா உப்பை காணோம்?

தம்பிதான் சேர்க்க வேணாம்னு சொல்லிடுச்சு.. இந்த ரோஷத்தையெல்லாம் கொஞ்ச நாளைக்கு தள்ளி வைங்க.. வீராப்பா தங்கச்சி கிட்ட மொறைச்சுகிட்டீங்க..இப்ப திருவிழா வேற .. உங்க அண்ணன் கால்லயாச்சும் விழுந்து எந்திரிக்க வேணாமா.. அதான்..

தம்பி எங்க?

ம்ம்..நைட்டுக்கு அடுப்பெரிக்க வேணாமா? அதான் காட்டுக்கு சுள்ளி உடைக்க அனுப்பியிருக்கேன்.