மாஸ் ஆடியன்சின் ரசனைக்கு இறங்கி வந்து கதை சொல்லுதல் ஒரு விதம் . தன் ரசனைக்கு பார்வையாளனை எடுத்து செல்லுதல் என்பது எல்லோருக்கும் கைவரப்படுவதில்லை . வணிக ரீதியான சமரசங்கள் மற்றும் விமர்சனங்கள் இடையூறாகவே இருக்கும் . மேல் நாட்டு இயக்குநர்களின் நிலை வேறு . தமிழில் ஒரு சில இயக்குநர்களே இருக்கிறார்கள். மிஷ்கின் அதை அநாயாசமாகவே செய்திருக்கிறார் . அதற்கு முதலில் ஒரு “ரெமி மார்ட்டீன்” சல்யூட் மிஷ்கின்.
நாம் கடந்து செல்ல வேண்டிய இடம் அங்கேயே தான் இருக்கிறது . நாம் கடப்பதற்காக அது உருவாக்கப்படுவதில்லை . கடந்து போன பின்னும் அது அங்கேயே தான் இருக்க போகிறது . நந்தலாலாவில் பெரும்பாலான காட்சியமைப்புகள் அப்படிதான் இருப்பதாக எனக்கு தோன்றியது வெற்று ஃப்ரேம் முதலில் எஸ்டாபிளிஷ் செய்யப்படுகிறது . அதற்குள் பாத்திரங்கள் வருகிறார்கள் . நிகழ்வு முடிந்தவுடன் அடுத்த காட்சியின் தளத்துக்கு சென்று விடுகிறார்கள் . நிகழ்வு நடந்த களம் மீண்டும் நமக்கு வெறுமையாய் காட்டப்படுகிறது . காட்சியின் ஆரம்பத்திலும் , முடிவிலும் ஒரு Freeze இருந்து கொண்டேயிருக்கிறது . பார்வையாளனை காட்சியுடன் ஒன்ற வைக்கும் இந்த உத்தி தமிழுக்கு புதிதும் , மிக அவசியமும் கூட….. அஞ்சாதேயில் கூட இந்த யுக்தியை பயன்படுத்தியிருந்தார் மிஷ்கின் . பிரமாண்டம் என்பது கோடிகளை கொட்டுவதால் மட்டுமே வராது . மகேஷ் முத்துசாமியின் கோணங்களும் , அசைவுகளும் முக்கியமாக ஷோல்டர் ஷாட்கள் பிரமிப்பை அல்ல.. பாதிப்பை ஏற்படுத்துகிறது . அகன்ற மற்றும் உயர்நிலை கோணங்கள் மிஷ்கினின் காட்சியமைப்புக்கு பெரிய பலம். குறிப்பாக ஒரு பத்துக்கு பத்தடி அறையில் ஒரு டாப் ஆங்கிள் ஷாட் . வசனம் கிடையாது . பத்து பக்கங்களில் சொல்ல வேண்டியதை நமக்கு சொல்கிறது . சிறுவனின் அம்மாவை மிஷ்கின் சந்திக்கும் காட்சி அது . வேறு விவரணைகள் வேண்டாம் . பார்த்து உணருங்கள். பார்வையாளனை தன் தோளில் தூக்கி கொண்டு காட்சிகளுக்குள் கொண்டு போகிறார் மகேஷ் . ஹேட்ஸ் ஆஃப் டு யூ சார் .
எல்லோரும் நல்லவர்கள்தான் என்கிறார் மிஷ்கின் . உண்மைதான் . ஒரு லாரி டிரைவரின் பாத்திரம் அது உண்மைதான் என்கிறது . சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளும் அந்த இளம்பெண்…(நொடியில் எத்தனை பாவம் காட்டுகிறாள் அவள்) அடுத்த காட்சியில் டிராக்டர் ஓட்டி வருவது பா. ராவின் கவிதை . ஒரு கால் இல்லாதவனின் ஊன்றுகோல் ஜாதிக் கலவரத்தில் வெட்டப்படுதல் , அவன் பேசும் வார்த்தைகளும் , முக பாவனைகளும் ,அறிவாளை தூக்கி கொண்டு வரும் இளநீர்க்காரர் .வெள்ளந்தியான மனிதர்களின் அடையாளத்தை நமக்கு உணர்த்துகிறார் . எங்கே? எதற்கு செல்கிறார்கள் என்பதே தெரியாமல் வரும் மோட்டார் பைக் இரட்டையர்கள் , ஹனிமூன் செல்லும் ஜோடிகள் என்று மனிதர்களின் தரிசனம் . காணப்புண்ணியம்.
அம்மாவை தேடி செல்லும் இரண்டு சிறுவர்களின் பயணம்தான் கதைக்களம் . அந்த மொழிப்படம் , இந்த மொழிப்படம் . நகலெடுத்தார் . பிரதியெடுத்தார் என்பதெல்லாம் வீண் வாதங்கள் . கையாடுவதற்கும், கையாள்வதற்கும் உள்ள வித்தியாசம்தான்.
சினிமா ஒரு காட்சி ஊடகம்தான் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் மிஷ்கின் . வார்த்தைகளுக்கிடையே மெளனங்கள். அதுவும் இல்லாதபோது இசை . சில இடங்களில் இரண்டுமே இல்லை . இரண்டே பாடல்கள் . அதுவும் பார்வையாளனின் மனநிலைக்கேற்ப ஒலிக்கிறது . பிண்ணனி இசையில் மீண்டும் தான் ராஜாதான் என்கிறார் இளையராஜா. அம்மா பாடல் கிளிஷேதான். இருந்தாலும் உறுத்த வில்லை.
சிறுவன் அகி . கண்களுக்கிடையே அந்த வளையம் . அழுத்தம் திருத்தமாக பேசுதல் . பாட்டியை கை பிடித்து பராமரிக்கும் விதம் . மாமா என்றும் அம்மா என்றும் அழைக்கும் போது காட்டும் முகபாவம் . இந்த வருடத்திய சிறந்த குழந்தை நட்சத்திர விருது கிடைக்கலாம் . கிடைக்க வேண்டும் .
கதையில் நாயகிக்கு பெயர் இல்லை . பெயர் சொல்லும் அளவுக்கு ஸ்கோர் பண்ணும் வாய்ப்பும் இல்லை.
பெயரில் என்ன இருக்கிறது . நாயகனின் (மிஷ்கினின் ) பெயரே படம் முடியும் போதுதான் நமக்கு தெரிகிறது . தெறித்து பிதுங்கும் விழிகள் , அரை மொட்டை தலை ,நான்கு அல்லது ஐந்து வார்த்தைகளில் கத்துவது..அதுவும் மெண்டல் என்று அவர் உச்சரிக்கும் போது ..கிளாஸ்.. ஒரு எளியவன் , வலியவனிடம் அடிபட்டு அழும்போது , அவனை சார்ந்தவர்கள் வந்து விட்டால் எப்படி ரியாக்ட் செய்வான் . சாமர்த்தியமாக இந்த காட்சியில் மிஷ்கின் முகத்தை காட்டாமல் ஃப்ரேம் வைத்திருக்கிறார் . கை ,காலை உதறி வெளிப்படுத்தும் இயலாமை, ஆக்ரோஷம், இப்ப வாங்கடா..அடித்து பாருங்கடா என்கிற அறைகூவல் மாதிரியான பாவனைகள்.சிம்ப்ளி சூப்பர்ப் மிஷ்கின் .
ரசிகர்கள் விரும்புவதை தருகிறோம் என்று புளித்த மாவில் செட் தோசை சுட்டு திரியும் இயக்குநர்கள் மத்தியில் எனக்கு பிடித்ததை மக்களுக்கு தருகிறேன் என்று கூறும் மிஷ்கின் போன்ற இயக்குநர்கள் தமிழ் சினிமாவின் வரப்பிரசாதம் . விரைவில் யுத்தம் செய்யுங்கள் மிஷ்கின். உங்களிடம் தோற்க காத்திருக்கிறோம் .
ஒற்றை தென்னை மரம் சாட்சியாக நிலா காயும் முற்றம் எங்காவது இருந்தால் சொல்லுங்கள் . அங்கு என் மடியில் பாஸ்கர் மணியின் கால் ரணத்தில் எச்சில் களிம்பு பூசி, தலை கோதி அவன் விழிக்கும் வரை தாலாட்டிட ஆசை....