Saturday, December 26, 2009

பத்தினி


முன் குறிப்பு : சின்ன கதைதான். ஸ்கிரால் பண்ணாமல் படித்தால் பரிசு வெல்லும் வாய்ப்பு உண்டு.


என்ன சாமீ ! ஆளையே காணும்?

எங்க சுந்தரம். வேலை சரியா இருக்கு. சரி சரக்கடிக்கலாமா?

இதெல்லாம் கேப்பாங்களா என்ன? நீங்க இந்த நேரத்துல வந்தா அதுக்குத்தானே. காசை கொடுங்க. வாங்கியாரேன். பிராந்திதானே.

சுந்தரம் ? என் வீட்டுக்கு அருகில் சலவை கடை வைத்துள்ளான். எப்பவாவது வருவேன். அழுக்கு மூட்டையை திண்டு மாதிரி போட்டு உட்கார்ந்து தீர்த்தவாரி. சரக்கு உள்ள போயிட்டா, சுந்தரம் நிறைய பேசுவான்.

மூன்றாவது ரவுண்டில் சுந்தரத்துக்கு மூடு வந்திருச்சு.

சாமி நாளையேலேர்ந்து ஒரு மாசம் சரக்கு இல்லை. விரதம்.

என்ன விரதம்? சபரிமலைக்கா?

இல்லைங்க. இது சீதாம்மாவுக்கு.

அது என்னய்யா புதுசா இருக்கு. நா இதுவரைக்கும் கேள்விபட்டதில்லயே!

அசோகவனத்திலேர்ந்து சீதையை மீட்டு கிட்டு வந்த வுடனே அந்தம்மா தீக்குளிச்சது இல்ல. அதுக்கு நாங்கதானே காரணம் !

என்னய்யா உளர்றே?

ஆமாங்க. அந்தம்மாவோட வஸ்திரத்தையெல்லாம் வெளுக்க போட்டாங்களா?
அப்ப ஒரு வண்ணாத்தி கேட்டா ! இத்தினி நாள் இந்தம்மா ராவணன் கிட்ட இருந்தாங்களே . சுத்தமா இருந்திருப்பாங்களான்னு.

அடப்பாவிகளா !

முழுக்க கேளு சாமி. அந்தம்மா அங்க இருந்தப்ப ஒரே வஸ்திரத்தைதான் உடுத்தி கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மா தெய்வப் பிறவி இல்லையா? அதனால் அது நிறம் மாறாம இருந்துச்சாம். ஆனா ஒரு கோட்டிக்கார பொம்பளைதான் இதை கொளுத்தி போட்டா. இந்த விஷயம் மகாராசா காதுக்கு போச்சு. அவர் உடனே என் பட்டத்து ராணி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் எப்ப இப்படி ஒரு பேச்சு வந்திடுச்சோ, அது எனக்கும் உறுத்தலாதான் இருக்கும் . அதனால..

அதனால..?

சீதா தேவி தான் சுத்தமாத்தான் இருக்கிறேன் நிரூபிக்க அக்னியில மூழ்குவாங்கன்னு அந்தம்மா கிட்ட கலந்துக்காமயே அறிவிச்சுட்டாரு. ஊர் சனம் மொத்தமும் அந்த வண்ணாத்தி கிட்ட போய் நின்னுச்சாம். அடியேய்.. உன்னாலதான் இம்புட்டும். வாய் கொழுப்புல சொல்லிபிட்டேன்னு சொல்லுடின்னு கெஞ்சினாங்களாம். ஆனா அவ எனக்கு வந்தது நியாயமான சந்தேகம்தான். நான் அப்படி எங்கயாச்சும் போயிட்டு வந்தா நீர் என்ன சொல்வீர்னு அவ புருசன் கிட்ட பதிலுக்கு கேட்டாளாம்.

அப்புறம் என்ன நடந்துச்சு ?

அப்புறம் என்ன ! சீதாம்மா தீக்குளிச்சு தான் பதிவிரதைன்னு நிரூபிச்சிட்டு காட்டுக்கு பிள்ளைகளை தூக்கிட்டு போயிடுச்சு. அந்த பாவத்துக்கு பரிகாரமாத்தான் நாங்க வருசம் ஒருக்கா சுத்த பத்தமா இருந்து தீ மிதிக்கிறோம்
ஆனா காலு பொசுங்கிடும். அது சீதாம்மா எங்களுக்கு கொடுக்கிற தண்டனையா ஏத்துகிடுறோம்.

எனக்கு ஏனோ மனைவியின் ஞாபகம் வந்தது. சுந்தரம் இன்னும் கொஞ்சம் சரக்கு வாங்கிட்டு வா !

சாமி ஏற்கனவே அதிகமாயிடுச்சு. போதும்.

இல்லை சுந்தரம் . எனக்கு மனசு ஒரு மாதிரி ஆயிடுச்சு.

இன்னும் போதை ஏறியவுடன் நான் சுந்தரம் “ என் பொண்டாட்டி பத்தினியா இருப்பாளான்னு கேட்டேன்.

அட ! வேணும்னா அவங்களை தீக்குளிக்க சொல்லிப் பாரேன் .

இந்த கதையை அவளிடம் சொன்னதற்கு சிரித்தாள்.

இல்லை. நீ கூட அடிக்கடி ஆபிஸ் விஷயமா உங்க எம்.டி கூட வெளியூர் போற. ராத்திரியில் கூட அவன் கூட தங்கற. ஒரு சராசரி மனுஷனுக்கு வர்ற சந்தேகம்தான் டியர்.

சரி. நான் காலையில் நிரூபிக்கிறேன். குட் நைட்.

காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி. டியர் காபி என்றேன்.

பக்கத்தில்தான் படுத்திருந்தாள். இரவு அவளிடம் ஏடாகூடமாய் பேசியது மங்கலாக நினவில் இருந்தது. தொட்டு பார்த்தேன். சுட்டது. பதறிப் போய் என்னம்மா ஆச்சு ? என்றேன்.

ஒன்னுமில்ல. ராத்திரி முழுக்க தூங்கலை. அதான். காபி நீங்களே கலந்துக்கங்க. அப்படியே எனக்கும் ப்ளீஸ்!!

சே. என்ன ஜென்மம் நான். சாரி டியர். என்னமோ போதையில் உளறிவிட்டேன். மனசுல வச்சுக்காதே.

காபி ப்ளீஸ்.

முகம் கழுவினவுடன் தான் கொஞ்சம் ரீலீப் இருந்தது. பாலை கட் பண்ணி ஊற்றும் போது கதவை தாளிடும் சத்தம் கேட்டது. அவள்தான்.

என்னம்மா பண்றே? ஏன் கதவை மூடுற?

ஜன்னலருகில் நின்றிருந்தாள். முகம் அகோரமாய் இருந்தாற் போல் பட்டது. சட்டென்று அந்த நாற்றத்தையும் உணர்ந்தேன். என்னவோ தப்பு? அதற்குள் ஆவேசமாக அவள் குரல் கேட்டது.

நிரூபிக்கிறேன்னு சொன்னேன் இல்ல.

ஒரே உரசலில் பற்றிக் கொண்டது.

“கொலையும் செய்வாள் பத்தினி”



Thursday, December 24, 2009

சேஷூ...சிறுகதையாய் முடிந்த ஒரு நாவல்..........


முன் குறிப்பு : நான் குறுகிய காலத்தில் இழந்த பலரில் சேஷீ முக்கியமானவன். இதே நாளில்தான் சேஷீ என்னை விட்டு பிரிந்தான். அவனை நினைவு கூறும் விதமாக மீண்டும்..


விடாமல் மொபைல் அடித்துக் கொண்டேயிருந்தது. கண்ணை திறக்கமுடியாமல் எரிச்சல். நைட்டு அடிச்சது கொஞ்சம் ஓவர்தான். மீண்டும் ஒலிக்க எடுத்தால் “சேஷு” calling.. என்ன இந்த நேரத்துல.. கரகரப்பாய் ஹலோ என்றேன்.. அண்ணா..பாரதி பேசறேன். குரல் உடைந்து இருந்தது. பாரதி சேஷுவின் மனைவி.

என்னம்மா? சேஷு இன்னும் வரலையா?

அண்ணா.. அவர் போயிட்டார்.

குப்பென வியர்த்தது.. வாட்.. என்னம்மா சொல்றே?

ராத்திரியெல்லாம் தூக்கம் வராம அவஸ்தை பட்டு கிட்டிருந்தாரு.. டீ வேணும்னு கேட்டாரு..போட்டு எடுத்துகிட்டு வர்ரதுக்குள்ள.....அழ ஆரம்பித்தாள்.

சேஷு ஒரு விளம்பர காப்பி ரைட்டர். பெரிய ஏஜன்சிகளின் ஆபத்பாந்தவன். கான்செப்ட்டும்,ஒரு மணி நேரமும் கொடுத்தால் போதும்.. பின்னி விடுவான்.. அந்த பெயிண்ட் விளம்பரமும்,மசலா விளம்பரமும் ஹிட் ஆனதுக்கு முழு காரணம் சேஷூதான். குடி,சிகரெட் எல்லாம் ஓவர்டோஸ்தான். குழந்தை இல்லை. ”பாரதிதான் எனக்கு குழந்தை.என்ன... அவதான் குழந்தை இல்லைன்னு பித்து பிடிச்சு பேசுவா.

பாரதி..நா கிளம்பிட்டேன்.நீ தைரியமா இரு..

அண்ணா..அவர் வீட்டுல சொல்லிடுங்க.

இருவரும் காதல் திருமணம். பாரதிக்கு அப்பா,அம்மா யாருண்ணே தெரியாது. ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தவள்.. சேஷூவின் வீட்டில் எதிர்ப்பு.மீறி பதிவு திருமணம். நான் தான் கையெழுத்து போட்டேன். ” இனி அந்த பெண் என்ன செய்யப் போகிறாள்..

ரெண்டாவது ஒலிப்பில் போனை எடுத்து விட்டான் ராஜூ..சேஷூவின் தம்பி. ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஒரு பாங்கில் வேலை..

என்னன்னா? இந்த நேரத்தில்..

விவரம் சொன்னேன்...

நா வர்ர வரைக்கும்???

பாவி நீதான் கொள்ளி போடணும்.. சீக்கிரம் வா.. ஃப்ரிசர் பாக்ஸ் அரேஞ்ச் பண்ணிடறேன்..

லிண்டாஸ் வைத்தி,ஓ அண்ட் எம் காத்ரீன் சொன்னவுடன் வெடித்து அழ ஆரம்பித்தாள். நைட்டு மப்பு இன்னும் இருக்கும் போல. போன வாரம் அவள் வீட்டில் ஒரு பார்ட்டி..குறையொன்றும் இல்லை என்று சேஷூ பாட,அவள் ஒன்ஸ் மோர் கேட்டது ஞாபகம் வந்தது. நெருங்கிய அனைவருக்கும் தகவல் சொல்லி நான் சேஷூவின் வீட்டை அடைந்தபோது யாரும் வந்திருக்கவில்லை. வாசலில் பாரதி விலகி வழிவிட ஹாலில் அது ஒருக்களித்து இருந்தது. திடுக்கிட்டு பாரதியை கேள்விக்குறியுடன் பார்த்தேன்..

இப்பதான் அண்ணா..திரும்பி படுத்துகிட்டார் என்றாள்

தலை சுற்றுவது போல் இருந்தது..பாரதி வெறித்த பார்வையுடன் இருக்க உலுக்கினேன்

இல்லண்ணா..ஒரே பக்கமா படுத்து உடம்பு வலிக்குமேன்னு நாந்தான் திருப்பிபடுக்க வச்சேன்.. எழுப்பட்டுமா?

சேஷூவை தொட்டு பார்த்தேன். உடல் சில்லிட்டு சர்வ நிச்சயமாக செத்து போயிருந்தான்.

அண்ணா ..அவருக்கு போட்ட டீ ஆறி போய் அப்படியே இருக்கு.சூடு பண்ணி கொண்டு வரட்டுமா?


கடவுளே.என்ன கொடுமை இது..என்ன ஆச்சு இவளுக்கு? மனசிதைவு? நொடியில் மனம் பிறழுமா என்ன?

பாரதி.. நீதானே சொன்ன..சேஷூ போயிட்டான்னு..அதுதான் உண்மை...உனக்கு அழுகை வரலையா? வாய் விட்டு கதறுடி..

தெளிஞ்சவுடனே அவரே எழுந்திருப்பார் விடுங்கண்ணா..

தகவல் தெரிந்த நண்பர்கள் வர ஆரம்பித்திருந்தனர்.. காத்ரீன் பாரதியை ஆறுதலாக அணைத்து விசும்ப ஆரம்பித்திருந்தாள்.. அநேகமாக வரும்போது லேசாக குடித்திருக்க வேண்டும். ஃப்ரிசர் பாக்ஸ்காரன் மொபைலில் அழைத்து விலாசம் சரி பார்த்துக் கொண்டான்.எனக்கு குடிக்க வேண்டும் போல் இருந்தது. காத்ரீனிடம் இருக்கா என்று கேட்டேன்.. கார் சாவியை கொடுத்தாள்.

சேஷூ....எனக்கு தாமதமாகத்தான் அறிமுகம். நமக்கு மிகவும் பிடித்தமானவர்கள் தாமதமாக அறிமுகமாகி,சீக்கிரம் பிரிந்து விடுவது எவ்வளவு வேதனையை தருகிறது. தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருந்தது.இருந்தாலும் அந்த எரிச்சல் எனக்கு தேவையாயிருந்தது. சிகரெட் பற்ற வைத்து கொண்டேன்..

சேஷூவுக்கும்,எனக்குமான நட்பு ஒரு எட்டு வருடம் இருக்கலாம் முதல் சந்திப்பே ஒரு மதுக்கடையில்தான்.. யாருடனோ விவாதித்து கொண்டிருந்தவன் என் கவனத்தை இழுத்தான்.. தீப்பெட்டி இருக்குமா?என்ற சாதாரண கேள்வியுடன் அவர்கள் உரையாடலில் நுழைந்தேன்..அவன் பேச,பேச என்னை அவனிடம் இழந்தேன். ம்ம்.. சேஷூவிற்கு இப்படி எதுகை,மோனை பிடிக்காது .அது ஆர்டிபிஷியலாக இருக்கும்டா மணி நேரா சொல்லணும் என்பான்..மொபைல் அடித்தது.ராஜு..

அண்ணா..திருச்சி தாண்டிட்டேன்.இன்னும் அஞ்சு மணிநேரம் ..வந்துர்றேன்..

மரணத்தை பற்றி சேஷூவிற்கு சிலாகித்து பேச பிடிக்கும்.அதுவும் சாராயம் குடித்து விட்டால் சாவை கொண்டாடியே விடுவான். இதற்கென்று திருநீர்மலைக்கு போவோம்...வா அய்யரே..வரவேற்று சொம்பில் கொடுப்பார்கள். சேஷூ முதலில் பியுரிட்டி செக் பண்ணனும்னு சொல்லி பத்து ரூபாய் நோட்டை நனைத்து கொளுத்துவான்.. ஸ்பிரிட் வரைக்கும் எரியும் பாரும்பான்.. பின் பேச ஆரம்பித்தால் அருவிதான்.ஆங்கிலமும் தமிழும்அருவியாய்கொட்டும். உலகசினிமா,இலக்கியம் எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள்களுடன்...சிகரெட் கையை சுட இன்னொன்று பற்ற வைத்துக் கொண்டேன்..

செத்தா அழறது எனக்கு பிடிக்கலை. எதுக்கு அழனும்?ஒரு போராட்டத்துக்கு அப்புறம் கிடைக்கிற விடுதலை..அதை அனுபவிக்கனும்டா..படுக்க வச்சு, மெலிதாக பகவத்கீதை, கண்ணதாசன் பாடல்கள், எம்.எஸின் பஜகோவிந்தம் அப்புறம் குறையொன்றும் இல்லை ஒலிக்கணும்.

சே..நினைச்சாலே எவ்வளவு ஆனந்தமா இருக்கு..அதுவும் கண்ணதாசன் மரணத்தை வென்றவன்..அவன் பாட்டு சாவு வீட்டில ஒலிக்கிறது எவ்வளவு பொருத்தம்..ஆனா அவன் தான் “பாவி..அல்பாயுசல போயிட்டியேடா? போதை தலைக்கேற சேஷூ அழ ஆரம்பித்தான்.

மழுங்க வழிக்கப்பட்டு குளிப்பாட்டி திருமண், ஸ்ரீசூர்ணம் இட்டு சேஷூ என்ற சேஷாத்திரி அய்யங்கார் ஹாலில்கிடத்தப்பட்டிருந்தார்..மெல்லியதாக எம்.எஸின் குரல் கேட்டுக் கொண்டிருக்க அருகில் சென்றேன்...

காலையில் பார்த்த சவக்களை இல்லை. ஒரு வித பரவசம்..தேஜஸ்.. சொல்லிக்க முடியலைடா..திடீர்னு அழைப்பு வந்துடுச்சு..என்று அவன் முகத்தில் உறைந்திருந்த மர்மபுன்னகை சொல்வது போல் இருந்தது

என் பிரிய சிநேகிதா..சேஷா...போ..வருகிறேன்.. சந்திப்போம்...குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டேன்...துக்கமும்,போதையும் தலைக்கேறியிருந்தது..

அவனுக்கு மிகவும் பிடித்த,இந்த பாட்டுக்காக சாகலாம்டா என்று அவன் உருகிய.....

"மலர்ந்தும் மலராத பாதி மலர்போல

வளரும் விழி வண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே!

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளந்தென்றலே - வளர்

பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே!'

சத்தமாக வாய் விட்டு பாடி...

“பாவி கண்ணதாசன் மட்டுமா?நீயும்தாண்டா....அடக்க மாட்டாமல் வெடித்து...........

Wednesday, December 23, 2009

போடா... போக்கத்தவனே...போய் பொழப்ப பாருடா..



என்னங்க சொல்றீங்க ? நெசமாவா ?

ஆமாம்யா. இப்பதான் தாக்கல் வந்துச்சு.

யார் சொன்னாங்க ?

நம்ம தலையாரிதான். அவரே கண்ணால பார்த்தாராம்.

நமக்கெல்லாம் நல்ல காலம் பொறந்துடுச்சுன்னு சொல்லு. சரி ஒரு ஆயிரம் ரூபா கைமாத்து கொடேன் !!

அட ! விசயம் கேள்விப்பட்டா , நான், நீன்னு போட்டி போட்டு கிட்டு கொடுக்க ஆள் வருமய்யா .!

பொங்கலுக்கு வெள்ளை அடிக்கணும். புது துணி எடுக்கணும். பேங்க் காசை திருப்பி கேக்கமாட்டாங்க இல்ல ?

முச்சூடும் தள்ளுபடிதான். ஏதோ சாமி இந்த மட்டும் கண்ணை திறக்கலைன்னா ? இன்னும் ரெண்டு வருஷமுல்ல காத்திருக்கணும் ?

அண்ணே ! மோசம் போயிட்டோம். குடி கெட்டு போச்சு.

என்னடா தங்கராசு ? என்ன சொல்றே?

ஆமாண்ணே. இப்பதான் ஆசுபத்திரியிலிருந்து வர்றேன்.

அடப்பாவி. விளங்கறா மாதிரி சொல்றா !

அண்ணே . நம்ம எமெல்லே பொழச்சுகிட்டாருண்ணே.

போச்சு. எல்லாம் போச்சு. ஊமை கண்ட கனவா போச்சு.

( சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரு எம்.எல்.ஏ மயிரிழையில் உயிர் தப்பினாராம் : பத்திரிக்கை செய்தி)

புது டெல்லி சவுத் பிளாக். அனைத்து துறைகளுக்கும் பிரதமர் உத்தரவு பறக்கிறது. இனிமேல் காலண்டரில் தேதி கிழிக்கவே கூடாது.

என்ன ஆச்சு ? பிரதமருக்கு. அது வேறு ஒன்றும் இல்லை ஜெண்டில்மேன். சிங் இன்னும் இரண்டு நாளில் தெலுங்கானா பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று அருள்வாக்கு சொல்லிட்டாருல்ல. அதான். உங்கொய்யால. தமிழ்நாட்டான் தான் இளிச்சவாயன் போல. இதுவரைக்கும் நம்ம பிரச்சனை ஒன்னுக்காவது இந்த மனுஷன் வாயை திறந்திருப்பாரு ? அவங்க கவர்மெண்ட்டு. அதான் சதை ஆடுது . எப்படியோ போங்கப்பா !!

நம் தமிழ்த்தாயின் தலைமகன் நேற்று உதிர்த்த முத்து இது. 1924 ஆம் ஆண்டு நான் பிறந்தேன். அப்போதுதான் காவிரி பிரச்சனை ஆரம்பித்தது. அன்று முதல் அதை தீர்க்க வாதாடியும், போராடிக்கொண்டும் இருக்கிறேன்.

லேட்டஸ்ட் தகவல் . சிங் தன் காலர் ட்யூனை மாற்றி விட்டார். பல்லே..பல்லே..பல பல்லே. இது போச்சு. இப்ப நீங்கள் அழைக்கும் நபரின் தொலைபேசி எண் உபயோகத்தில் இல்லை. இதான் அவர் காலர் ட்யூனாம்.

வீட்டில் ஆள் இல்லாதபோது திருடினால், அது களவாம். ஆள் இருக்கும் போது கத்தியையோ, உளியின் ஓசை டிவிடியையோ காட்டி அடித்தால் அது கொள்ளையாம். அது கூட ஐந்து பேர் கொண்ட கும்பலாக இருக்க வேண்டுமாம். நாலு பேர் என்றால் வழிப்பறியாம்.

மேற்க் கண்ட முத்தை உதிர்த்தது தமிழறிஞர் மா.நன்னன் என்று நினைக்க வேண்டாம்.நம்ம சென்னை சிட்டி போலிஸ் கமிஷனருங்கோ!!

கொஞ்சம் வேட்டைக்காரன். பிளஸ் டூவில் நான்கு முறை பெயிலாகும் விஜய் பாடுகிறார். ஆக்ஸ்போர்டு கல்விதான் எல்லோருக்கும் கிடைக்கணும். பிரச்சனை அதில்லை. சம்பாதிக்கும் காசில் இதுவரை கல்யாணமண்டபங்களாக கட்டும் இ.த. ஒரு பள்ளிக் கூடம் கூட கட்டியதில்லை என்பதுதான் முக்கியமான மேட்டர். அது கூட அரசு நிலத்தை குறைந்த மதிப்பில் வாங்கிய வில்லங்கங்கள் வேறு. விஜய்க்கு முதல்வர் ஆகும் ஆசை வந்ததில் தப்பே இல்லை. மேற்கண்டவைதானே அதற்கு முதல் தகுதி!!

டிஸ்கி : பின்னூட்டம் இட விரும்பும் அன்பர்கள் தலைப்பை ஒத்தியோ, வெட்டியோ போட்டு விடலாம்

Monday, December 21, 2009

மானிட்டர் பக்கங்கள்........21/12/09


ஈரோடு பதிவர் சங்கமம் உண்மையில் அற்புதமான நிகழ்வு. எந்த ஈகோவும் இல்லாமல் செயல்பட்டு சிறப்பாக நடத்தி காட்டிவிட்டனர். வாழ்த்துக்கள் கதிர், கார்த்திக், நந்து,ஆரூரான் , வால்பையன் (கொஞ்சம் சுதிசுத்தம்தான்) மற்றும் அனைத்து நண்பர்களுக்கும். சென்னையிலிருந்து நோகாமல் அழைத்து சென்ற அப்துல்லாவிற்கும், வாகன ஓட்டுனர் கோவிந்தாவுக்கும், உடன் வந்த கேபிள்,வாசு, வண்ணத்துப்பூச்சியாருக்கும் நன்றிகள். முடிந்தவுடன் பரிசலின் காரில் பாட்டை போட்டுவிட்டு குத்தாட்டம் போட்டோம். நல்ல அனுபவம்.


ராமதாசு சொன்ன 49” ஓ என்னவாயிற்று ? 84% வாக்குப்பதிவாம் வந்தவாசியில். வன்னியர் ஓட்டு அன்னியருக்கு போய்விட்டது. அடுத்த தேர்தலில் சவுக்கடியாருக்கு நெருக்கடிதான். இப்பவே எல்லாம் உன்னால்தான் என்று மகன் கரிச்சு கொட்டுகிறார். சந்தோஷமாக இருகிறது.

திருச்செந்தூரில் வாக்குபதிவு வந்தவாசியை விட குறைச்சல்தான் 78 %. ஏன்? தம்பி முந்துகிறார். வாக்கு வித்தியாசமும் அங்கு குறைவாகி விட்டால் தெரியும் சங்கதி. அண்ணன் காத்திருக்கிறார் !

வேட்டைக்காரன் லேட்டஸ்ட் நீயூஸ். காஞ்சிபுரத்தில் ஆறு ஸ்கிரினில் படம் திரையிடப்பட்டிருக்கிறது. போட்ட காசை எடுக்கவே பிரம்மபிரயத்தனம் என்று தியேட்டர் ஓனர் சொன்னார். சன் பிக்சர்ஸ்க்கு எந்த பிரச்சனையும் இல்லை. நோம்பிவிட்டார்கள். வாங்கியவர்கள் பாடுதான் திண்டாட்டமாம். ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட் என்றால் அந்தரத்தில் ஆறு சண்டை போடுவதுதான் என்ற நம் இயக்குனர்களின் பாமரத்தனம்தான் திரைக்கதை மொக்கையாவதற்கு காரணம். ஆக்‌ஷனும், வயலன்சும் ஸ்கிரிப்டில் இருக்க வேண்டும். முடிந்தவரை மோதல் ஏற்படுவதற்கான சூழலை எஸ்டாபிளிஷ செய்து, சண்டையை தள்ளீ போட்டு கொண்டே வர வேண்டும். உதாரணம் அக்னிநட்சத்திரமும்,உதயம் திரைப்படங்கள். அடுத்தது சண்டைதான் என்று ஆடியன்ஸ் நினைக்கும்போது, சண்டை வந்தால் அது சிரிப்புக்காட்சியாகி விடுகிறது. வேட்டைக்காரனிலும் அதுதான் நடக்கிறது.தலை நடிகர் மற்றும் அனைத்து இளைய நடிகர்களுக்கும் கொண்டாட்டமாம் வேட்டை வீழ்ந்ததில்.
முதல் நாள் ரசிகனுக்கு ஒருவித கிக்தான். தன் தலைவன் படத்தை பார்ப்பதில். அது படத்தின் ரிசல்ட்டை தீர்மானிக்காது. அவனை மறுபடியும் பார்க்க சொல்லுங்கள் பார்ப்போம்.அடிக்க வருவானய்யா.

குடும்பத்துடன் திருப்பதிக்கு போயிருந்தேன். ரிட்டர்ன் சப்தகிரி ரயிலில். சென்னையிலிருந்து ரயில் வந்தது. அடித்து ,பிடித்து ஏறி இடம் போட்டு விட்டு பார்த்தால் பிளாட்பாரத்தில் அன்னதானம் செய்துகொண்டிருந்தார்கள். அருகில் போய் பாக்கு மட்டை பிளேட்டை எடுத்துக் கொண்டு முதலில் பொங்கல், சட்னி வாங்கி கொண்டேன். பூரியும் இரண்டு. கிழங்கு வாங்கும் போதுதான் வித்தியாசமாக பார்த்தனர். “தம்பி நீங்க ? என்று இழுத்தனர். ஏதோ தப்பு என்று உணர்ந்து “அன்னதானம் தானே? என்றேன். அட நீங்க வேற. நாங்க எல்லாம் ஒரே பேமலி என்றனர். அய்யோ ! சாரி என்று வழிந்து விட்டு தட்டை திருப்பி நீட்டினேன். கிழங்கை போட்டனர். அங்கிருந்து கம்பார்ட்மெண்டிற்கு எப்படி வந்தேன் என்றே தெரியாது. வீட்டில் எங்களுக்கு இல்லையா என்றதற்கு “போங்கடி பிச்சைகாரிகளா” என்று வாயில் வந்தது.



எந்திரன் படத்திற்காக நான் எழுதிய பாடலின் சில வரிகள்:

ஜில்.. ஜில்.. ஜில்... ஜொள்...ஜொள்... ஜொள்....
ஆர்.டி. எக்ஃஸ்.... உன் விழியில்....
டைனமைட்…. என் மடியில் ....
அண்டார்டிகாவில் செய்வோம்...லவ் ஃபைட்.
பிப்பெட் நீதான்.... பீயுரெட்.நாந்தான்..
டெஸ்ட் டீயூபில்... ரெஸ்ட் இனி ..அதை
யூ ட்யூபில் கண்டு நீ களி ஹனி.....
கூகுளில் தேடி...... குயிக் டைமில் கூடி...
பிளாக்குகளில் பாடி.....பாரடைஸ் போகலாம்...
என் பிளாக் பெர்ரி நீ வாடி

Saturday, December 19, 2009

வே(ஓ)ட்டைக்காரன்



நன்றாக இருக்கும் ஒரு ஆளை தினமும் ஒருமுறை “ஏன் சார் ஒரு மாதிரி ஆயிட்டீங்க? முகமெல்லாம் வெளுத்து போனாப்ல” என்று சொல்லிக் கொண்டே வந்தால் அவருக்கு உண்மையிலேயே நாம் இப்படி ஆகிட்டோமோ! என்று தோன்றி விடும். மகன் தொலைக்காட்சியும் அந்த வேலையைத்தான் செய்கிறார்கள். வெற்றி நடை போடுகிறது என்ற விளம்பரம் நேற்று மாலையே துவங்கிவிட்டது.

படத்தின் துவக்கத்தில் வரும் “நா அடிச்சா” என்ற பாடல் வரியை “நா நடிச்சா” என்று மாற்றிவிடலாம். விஜய் அந்தளவுக்கு நம் பொறுமையை சோதிக்கிறார். ஆனால் அவரால் அவ்வளவுதான் செய்யமுடியும். ஒரு பாடலில் கலர் விக் வைத்து ஆடியதே சாதனைதான். கெட்டப் சேன்சாம். கொடுமை.

கதை. பெரிதாக ஒன்றும் இல்லை. போலிஸ் ஆக வேண்டியவன் பொறுக்கி(நல்ல)ஆன கதைதான்.

அதைஏகப்பட்டபில்டப்,சேஷ்டைகள்,கொணஷ்டைகளோடு மூன்று மணிநேரம் வேட்டையாடியிருக்கிறார்கள்.

அனுஷ்கா? விஜய்யின் பெரியக்கா மாதிரி இருக்கிறார். உயரம் அப்பட்டமாக தெரிகிறது. நடிப்பை காட்ட வாய்ப்பில்லை. வாய்ப்பிருந்தும் மற்றதை காட்டவில்லை என்பது எனக்கும்,கேபிளுக்கும் ஏமாற்றமே. படத்தில் நகைக்கடையில் வரும் ஒரு பிகர் உண்மையில் நன்றாக இருந்தது.

வில்லன் சலீம்கோஷ். இன்னும் வெற்றிவிழாவிலேயே இருக்கிறார். பேஸ் வாய்ஸ் போதும். பயம் காட்ட என்று நினைத்து விட்டார் போலும்.அவரை காட்டி அழும் குழந்தைக்கு கூட சோறுட்ட முடியாது. இன்னொரு வில்லன். சாய்குமார். சோப்ளாங்கியாக வருகிறார். நீளமாக வளர்த்திருப்பதை தவிர ஒரு.... ம் புடுங்கலை.

அநேகமாக பாபு இனி சிவனே என்று உட்காரும் நிலை வரலாம். மொக்கையான திரைக்கதை. வாயால் பில்டப் கொடுத்து புரொடியூச்ரை ஏமாற்றியிருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் (கிடைத்தால்)

காமெடி? விஜய் பண்ணுகிறார். சிரிப்புத்தான் வருகிறது. என்ன? நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டிக் கொள்ள வேண்டும்.

படத்தின் நல்ல விஷயமாக இரண்டை சொல்லலாம்.

ஒன்று : இடைவேளை

இரண்டு:முடிவு


டிஸ்கி : சைதை ராஜ் தியேட்டரில் விஜய் கட் அவுட்டிற்கு பால் ஊற்றினார்கள். அது படத்திற்கும்தான்

Thursday, December 17, 2009

அர்த்தமில்லாத கவிதைகள்



பிரி என்றும்
பிரிக்காதே என்றும்
போராட்டமாம்
சீந்துவாரின்றி கிடக்கிறேன்
உலையில்

இருப்பது ஒன்று
போவதும் ஒருமுறைதான்
பிரவாகமாய் வெடித்தான்
தானைத் தலைவன்
அவன் பவளவிழாவில்
தீக்குளித்த தொண்டன்
மனைவியின் வயிற்றில்
ஆறுமாத வாரிசு

எங்கள் ஆட்சியில்
எட்டும், ஒன்றும் பத்து
உங்களுக்கு ஒன்று அதில்
ஆர்ப்பரித்த கூட்டம்
ஒன்றை வாங்கிகொண்டது
ஒன்பதை சமமாக பிரித்தான்
தலைவன்
ஆளுக்கு மூன்று என்று

இல்லம் தானம்
இந்த உடலும் தானம்
பக்கம் பக்கமாய்
தம்பட்டம்
நாட்டையே தானமாய்
தந்து விட்ட நம்மைத்தான்
கண்டு கொள்வதாய்
இல்லை யாரும்

Wednesday, December 16, 2009

வலைச்சரத்தில் மூன்றாம் நாள்




பிஸ்ஸா, பர்கர், பானிபூரி, பேல்பூரி என்று விரைவு மற்றும் சாட் உணவுக்கலாசாரம் பெருகி போனது தெரிந்த செய்திதான். வீட்டில் குழந்தைகளுக்கு உணவு பழக்கத்தை அறிவுறுத்த வேண்டிய பெற்றொர்களே நாகரீக உண்வு என்ற போர்வையில் ஒபிசிட்டியை வளர்க்கும் உணவுகளை திணிக்கிறார்கள். நண்பரும், சகபதிவருமான சங்கவி சத்துள்ள உணவுகளை பற்றி எழுதிய விரிவான, தெளிவான இடுகை இது. நகல் எடுத்து சமைலறையில் ஓட்டியும் வைக்கலாம்.

உணவே மருந்து. நன்றி சங்கவி. தொடர்ந்து பயன் அளியுங்கள்..


என் பெயர் ராஜகோபால். நண்பர் இப்படி அறிமுக படுத்திக் கொண்டதும் நான் இப்போது என்ன பெயர் சொல்லுஙகள் என்றேன். தண்டோரா, பைத்தியக்காரன், டுபுக்கு, பிளாக் பாண்டி, ஆப்பு இதைப் போல் என்றவுடன் “எறும்பு” என்றார்.

நினைவுக்கு வந்துவிட்டது. அம்பாசமுத்திரத்தை சேர்ந்த எறும்பு சென்னையில் தற்போது சுறுசுறுப்பாகஓடிக்கொண்டிருக்கிறது.

சிற்றெரும்பை போல் கடிக்கவும் செய்கிறார். பிள்ளையார் எறும்பை போல் கிச்சு, கிச்சு மூட்டவும் செய்கிறார். வாழ்த்துக்கள் நண்பரே.



இயற்பெயரை சொன்னார். மறந்து விட்டேன். வலைப் பெயர் நன்றாக நினைவில் உள்ளது. காரணம் அப்புறம். சுருக்கமாக மட்டுமில்லாமல், சுருக்கென்றும் கவிதைகள் எழுதுகிறார். தீண்டாமை பற்றி ஒரு சின்ன கட்டுரை பிரமாதம். சென்சிபிளாய் நகைச்சுவையும் வருகிறது. ஜமாயுங்கள் நண்பரே..

பெயரை சொல்லவில்லையா? கிட்ட தட்ட நானும் அப்படித்தான்.பலாப்பட்டறை

Tuesday, December 15, 2009

முலைப்பால் அடர்த்தி..



உள்ளங்காலில் பட்ட பிரம்படியாயும்
சுவற்றில் இடித்துக்கொண்ட
முழங்கை அதிர்வாயும்
தெறித்துக்கொண்டே
இருக்கிறது காமம்

வரைமுறையே இன்றி
அத்தனை நிழல்களும்
இரையாகின்றன
என் வன்புணர்ச்சிக்கு

சுயமாய் விரும்பி வந்தவளுக்கு
இறக்கைகளும் இருந்தது

முன்னும்,பின்னும்
நீந்தும் பட்சியாய்
இயங்கிவிட்டு போனவளிடமிருந்து
என் குறியை மீட்க முடியவில்லை

கண்கள் பனியில்
வியர்த்திருந்தது
முலைப்பாலில் குளித்த
பெருமிதம்

வெட்கை தணிந்து அடுத்த
உறவுக்காக காத்திருக்கிறேன்
அம்மா என்ற அரற்றலோடு...

Monday, December 14, 2009

அரைவிழி கனவில்...


ஆழ்ந்த உறக்கத்தில்
வந்ததொரு கனவில்
பச்சிளம் பாலகனாய்
ஒரு பாத்திரம் ஏற்கிறேன்
எத்தனை ஒத்திகை பார்த்தும்
நேர்த்தியாய் நடிக்க வரவில்லை
அருகிலிருந்த அம்மா வேடமேற்றவள்
கதை சொல்வது போல் காட்சி
ஒரு ஊரில் என்று அவள்
ராகம் எடுத்தபோது
உண்மையில் தொலைந்து போனது
தூக்கம்




Saturday, December 12, 2009

சும்மா டச் வுட்டு போககூடாதுல்ல....


அத்வானி மன்மோகனை சந்தித்து வாழ்த்து சொகிறார்..நிதிஷ் லாலு சந்தித்து கொள்கிறார்கள்..ராகுல் அத்வானியிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்..அந்த மாதிரி முன்னாள்,இன்னாள் முதல்வர்களை சந்திக்க வைத்தால் என்ன ? என்று ஒரு முயற்சி

அண்ணா சமாதிக்கும்,எம்ஜிஅர் சமாதிக்கும் இடையில் மேடை அமைக்கப் பட்டு இருக்கிறது..கருணநிதி சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார்..அம்மாவை பற்றி சொல்ல வேண்டுமா?வழக்கம் போல் லேட்டாக வர..கருணா விரல்களால் முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கு வழியாக அம்மையாரை பார்க்கிறார்..

”என்ன என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க பயமா?

இல்லை அம்மணி “கிரகணத்தை அப்படித்தான் பார்க்கணும்..கேள்விபட்டதில்லையா?

வார்த்தை விளையாட்டு வேண்டாம்..மக்களுக்காக என்ன செஞ்சிருக்கிங்க..

எல்லாருக்கும் எல்லாம் செஞ்சாச்சு..இனி கனி மட்டும்தாம் மீதம்.அதையும் செஞ்சுட்டா என் தலைவலி ஒழியும்..

நான் தமிழக மக்களுக்கு என்ன செஞ்சிங்கன்னு கேட்டேன்..உங்க ஆட்சியில எத்தனை அதிகார மையங்கள்..குடும்பத்துல எல்லாரும் ஆடறாங்க..

அதிகாரம் பரவலாக்கபட வேண்டும் என்பதுதானே அண்ணனின் ஆசையும் கூட..

விலைவாசிய பாத்திங்களா?விலைன்னு எழுதி வாசிக்கத்தான் முடியுது...

அம்மையாரே..மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டது..அதை விட மக்களை வாங்கும் சக்தியும் அதிகமாகி விட்டது...இந்த தேர்தலில் தெரிந்து கொண்டோம். இடைத்தேர்தல் செலவுக்காகவே மந்தி(ரி)களை ஓவர்டைம் பார்க்க சொல்லியிருக்கேன்.

ரொம்ப பீத்திக்காதீங்க. அடுத்த ஆட்சி என்னுடையதே..அப்ப வச்சுக்கறேன்...


அம்மணி. இனி வெற்றி என்பது வாங்கபடவேண்டிய ஒன்று.. 2011 தேர்தலுக்கு நாங்க இப்பவே பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டோம். முன்ன மாதிரி எல்லாம் சுவத்துல இடம் பிடிச்சு ,சின்னத்தை எழுதினா மட்டும் போதாது. பெரியவனை கேளுங்க. அவர்தான் எல்லாம் பாத்துக்கிறாரு.

வாக்கு சீட்டு முறை வந்துட்டா நீங்க ஜெயிக்கவே முடியாது. 234 ம் எனக்குத்தான்.

அறியாமையில் அரற்றுகிறீர்கள். அது இன்னும் சொர்க்கம். உங்களுக்கு சுத்தம். ஒன்னு காந்தி,இல்லன்னா கத்தி. எவனாச்சும் எதிர்ப்பான்?

நீங்க புள்ளை பிடிக்கிறா மாதிரி என் கட்சி காரனையெல்லாம் தூக்கிட்டு போயிடறீங்க? நான் பொழுது போகலைன்னா எஸ்வி சேகரை பேச சொல்வேன். அவரை வச்சு நீங்க என்ன பண்ணுவீங்க?

இங்கதான் ஆற்காடு, துரைன்னு ஏகப்பட்ட பேர் இருக்காங்களே. அப்படியும் பொழுது போகலைன்னா, ஏழை மக்கள் சில பேரை அழைத்து நான் வசனம் எழுதிய படங்களை போட்டு காமிப்பேன். அவங்க குலுங்க,குலுங்க சிரிக்கும்போது, நான் இறைவனை காண்பேன்.

ஆமாம். கூவம் மணக்க போகுதாமே. இது உங்களுக்கே ஓவரா தெரியலை?

அதை பத்தி நமக்கென்ன? சிங்கப்பூர் போயிட்டு வரும்போது டூட்டி ஃபரீ ஷாப்ல ஏகப்பட்ட செண்ட் வாங்கிட்டு வந்தோமில்ல. அதை ஊத்திதான் மணக்க வைப்போம். எப்பூடி?

சகிக்கலை. என் ஆட்சிகாலத்தில்....

இடையில் தண்டோரா குறுக்கிட்டு..நீங்க மக்கள் பிரச்சனையை பத்தி ஒன்னுமே பேசலையே..

அம்மையாரே,நம்ம லாவணியை அப்புறம் கூட வச்சுக்கலாம்..முதல்ல இந்த மாதிரி புல்லுருவிகளை என்ன பண்ணனும் தெரியுமில்ல...

ஆமாமாம்..இந்த விஷயத்துல நீங்களும் நானும் ஒரே கட்சிதானே..

அப்புறம் என்ன? ஸ்டார்ட் மூஜிக்....




கடற்கரையில் பதிவர் சந்திப்பு முடிகிறது...

அக்னிப்பார்வை : அதோ, அங்க முனகல் கேக்குது. தண்டோராவா இருக்குமோ?
அடப்பாவி அவனேதான். அப்பவே சொன்னேன் . ஆட்டோ வரும்னு பார்த்தா புல் டோசர் ஏறின மாதிரி இருக்கு..


ரமேஷ் வைத்யா : ஏ அப்பா.. யாராச்சும் அவனுக்கு சரக்கு வாங்கி கொடுங்கப்பா. எந்திரிச்சுருவான்.

லக்கிலுக் : உடலெங்கும் இருக்கும் நகக்குறிகளை பார்த்தால் புத்திக்கு புதிதாக ஏதோ படுகிறது...ஆனால் மனசு ஏற்க மறுக்கிறது...

அதிஷா “ஐயா லாலி..லாலி..ஜாலி..ஜாலி...தண்டோர காலி..காலி....

முரளிகண்ணன் : இப்படித்தான் 80களில் வந்த ஒரு திரைப்படத்தில் மோகன் ஹீரோ என்று நினைக்கிறேன். மாறுகால், மாறுகை வெட்டபட்ட நண்டு மாதிரியே இருக்காரே.

கேபிள் : பரங்கிமலை ஜோதி தியேட்டர் போஸ்டர் மாதிரியே இருக்கானே. ஒரு சேஞ்சுக்கு ஹாட் ஸ்பாட்ல போட்றுவமா?

பைத்தியக்காரன் : அதிகார வர்க்கத்தின் உரையாடலில் அற்பர்கள் மூக்கை நுழைத்தால் இப்படித்தான் கட்டுடைந்து போகும்.அடுத்த வாரம் உலகபடத்துக்கு ஒரு டிக்கெட் போச்சு. (ஏற்கனவே நாலு பேர்தான் வர்றாங்க)

ஜ்யோவ்ராம்...:

இனியும்
ஒவ்வொரு
சனியும்
எண்ணெய் தேய்த்து
குளியும்..
எழுதும் வாழ்நாள்
முழுதும்,
அவர்தமை
தொழுதும்
இந்த பத்தாவது வரியில் அவருக்கு 10 போடலாம்

நர்சிம் : எதாவது செய்யணும் பாஸ். உயிர் தங்குமான்னு பாருங்க. அய்யனார் கம்மாவை படிச்சாரான்னு தெரியலையே.

கார்க்கி : வேட்டைகாரன் வர்றதுக்குள்ள ஏன் அவசரம்?

டோண்டு : என்ன செய்யறது..தொட்டாலே போயிடும்..சமீபத்துல இந்த வார்த்தைக்கு காங்கோ மொழில ஒரு கவிதை படிச்சேன். டிரைவர் வந்துட்டான்னா, நாம கிளம்பிடலாம். போற வழியில விஜிடபிள்ஸ் வாங்கணும்.

வால்பையன் “ “சே..வடை போச்சே. கடைக்கு தனியாத்தான் போகனுமா?

ஜாக்கி சேகர் போட்டோ எடுத்துக் கொண்டு அவசரமாக கிளம்புகிறார்.

ஜாக்கி எங்க? பின்ன மீ த பர்ஸ்ட்.போய் சூடா பதிவு போடனுமில்லே.

Thursday, December 10, 2009

எதிர்...புதிர்...


இடது, வலது
ஏறி, இறங்கி
மேலும்,கீழும்
சரியும்,தவறும்
நடத்தலும்,நிற்றலும்
முன்னும்,பின்னும்
அந்தப்புறம், இந்தப்புறம்
ஆணும்,பெண்ணும்
இதுவரை சரிதான்
ஆனால்
உனக்கும்,எனக்கும்
எனக்கும்,உனக்கும்
என்பதில் உடன்பாடில்லை
அது நான்,நீ என்று
திருத்தப்படுகிறது....
........................................................

அர்த்த ஜாம கனவொன்றில்
தனியனாய் அழுது கொண்டிருந்தேன்
பிணக்குவியல் மத்தியில்
விடிந்த பின் யோசித்தேன்
கனவுக்கான காரணியை
மெல்ல புலப்பட்டது
நான் சுயநலமில்லாதவன்
என்ற லேசான கர்வம்தான்
................................................................

Wednesday, December 9, 2009

கண்மணி அன்போடு...நலமறிய ஆவல்...



சமீபத்தில் உறவினர் ஒருவர் அழைத்து தஞ்சாவூர் வீட்டு விலாசம் வேண்டும்,பத்திரிக்கை அனுப்பனும் என்றார். எவ்வளவு யோசித்தும் நினைவுக்கே வரவில்லை..காரணம் கடிதம் எழுதும் பழக்கமே முற்றிலும் ஒழிந்து போனதுதான். பிறகு தம்பிக்கு போன் பண்ணி விலாசம் வாங்கி கொடுத்தேன்.

தஞ்சையில் கல்லுரியில் படித்து கொண்டிருக்கும் போது(???)சினிமா மோகம் தலைக்கேறி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சென்னைக்கு வர நினைத்த போது அப்பா..என்னவாவது பண்ணி த் தொலை...என்று சொல்லி விட்டார்..அம்மா என்ன ஆசையோ செய்..ஆனால் வாரத்துக்கு ஒரு கடிதம் கண்டிப்பா போடனும் என்று சொல்லி விட்டாள்.ஒரு சுப தினத்தில் படிப்பை (வராத)மூட்டை கட்டி விட்டு விடை கொடுத்தேன் தஞ்சைக்கு..கிளம்பும்போது அம்மா செலவுக்கு பணமும் ஒரு 50 போஸ்ட் கார்டுகளும் கொடுத்தாள். அத்தனையும் சுய விலாசமிட்டவை. .நீ ஒண்ணும் பண்ண வேண்டாம் .. எதாவது எழுதி வாரம் ஓண்ணு அனுப்பு போதும் என்றாள்.அதன் பின் சென்னை வந்து சந்தி சிரிச்சு.கால் வயிறு,அரை வயிறு காஞ்சு அதெல்லாம் தனி கதை..

இப்பவும் ஊருக்கு போவதென்றால் மனம் இறக்கை கட்டித்தான் பறக்கிறது..காரணம் பல..ராமனாதன் பார்(செல்லமா சபா) நான் சென்னையில் இருந்தாலும் நண்பர்கள் கூடி குடிக்கும்போது ஒரு இருக்கை காலியாகவே இருக்கும்(எனக்காம்)அதன் முன் ஒரு கிளாஸ்..அதில் சரக்கு..எல்லாம் முடிந்தவுடன் அதை கடைசியில் பங்கிட்டு குடிப்பார்களாம்..(அதாவது நான் இங்கு த(ண்) னி "குடி"த்தனம்..அவர்கள் கூட்டு "குடி" த்தனம்". பின் காபி பேலஸ் ரவா தோசை,நைட்டு ரோட்டு கடை இட்லி பூண்டு சட்னி,தேவர் பிரியாணி, காமாட்சி மெஸ் விரால் மீன் மண்டை,வறுவல்,சினிமா(நைட் ஷோ)....எல்லாவற்றுகும் மேல் அவள் குடியிருந்த வீடு,கோயில் பிரகாரங்கள்..அங்கு நடந்த கொடுக்கல்/வாங்கல்கள்(கடிதம் மட்டுமல்ல)(அவளோடு சேர்ந்து பார்த்த முதல் படம்..அதாவது அவள் அவள் குடும்பத்தோடு/ நான் நண்பர்களுடன்..படம் "திசை மாறிய பறவைகள்"

ம்ம்ம்..நிணைவுகள் தான் எத்தனை சுகமானவை...

பதிவர் மாதவராஜ் அழைத்தார். அவர் வெளிக்கொணரும் “பூக்களிலிருந்து நான்கு புத்தகங்கள்” தொகுப்பில் என் கவிதையும் இடம் பெறுகிறது என்று காதில் தேன் பாய்ச்சினார். எனக்கும் மிகவும் பிடித்த கவிதை அது. தமிழ்மண போட்டியில் கூட அந்த கவிதையைதான் பரிந்துரை செய்திருக்கிறேன்.




அந்தரங்க சாட்சியாய்...

இந்த இரும்பு பாதை
முடியும் இடத்தில்
ஒரு நகரம்
இருந்தது..

இன்று
அது இல்லை
காற்றில் கலந்திருக்கும்
ரத்த வாசம்
மட்டுமே
மிச்சமாயிருக்கிறது

தினம் விடியலில்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
அழகான
இயற்கை
மட்டுமே
அந்தரங்க
சாட்சியாயிருக்கிறது..

மெலிதாய்
கேட்டுக்கொண்டிருந்த
முனகல்களும்
ஓய்ந்து விட்டன..

இடமும் வலமுமாய்
நெளியும் இந்த
வழியேதான்
கடைசியாக கடந்து
போனது ஆர்மி ரயில்

இவைகளுக்குள்
பறிமாறிக்
கொள்ளப்படும்
தடக்..தடக்
மொழியும்
அதிர்வும்
இனி இல்லை..

அந்த நகரம்
முற்றிலுமாய்
அழிக்கப்பட்டு
விட்டது...

நீங்கள்
இந்த பாதையின்
வழியே சென்று
இடதுபுறம்
திரும்பி
பாருங்கள்

அங்கே
இரண்டும்
ஒன்றோடு
ஒன்று
பிண்ணி
பிணைந்திருக்கலாம்
சாரைகளாய்..