Monday, November 30, 2009

மானிட்டர் பக்கங்கள்.....30/11/09


ஆரம்பத்தில் மாறன் சகோதரர்களின் அசுர வளர்ச்சி அனைவரின் கண்ணையும் உறுத்தியபோது தலைவர் சொன்னார்.. அவர்கள் சிறு பிராயம் தொட்டே கடுமையான உழைப்பாளிகள். அதானால் அவர்களை குறை கூறுபவர்கள் பொறாமை பிடித்தவர்கள் என்று..

குடும்பத்தில் குடுமிபிடி சண்டை முற்றி, வீதிக்கு வந்தபோது அவர்களே சொன்னார்கள்.. திமுக மட்டும் இல்லையென்றால், இவர்கள் இப்படி வளர்ந்திருக்க முடியுமா? பின் பனித்து, இனித்து எல்லாம் ஆறிப் போனது..இல்லை நீறு பூத்த நெருப்பாகத்தான் இருகிறது.. சன் ஸ்டாலினை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.. அழகிரியின் மேல் இன்னும் கசப்பு இருக்கவே செய்கிறது. ஆழ்ந்து அவர்கள் செய்திகளை கவனித்தால் தெரியும். அழகிரி பற்றிய செய்திகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது. அவர்களுக்கு நன்றாக தெரியும். எதிர்கால ஆட்சி ஸ்டாலின் கையில்தான் என்று. அதனால்தான் மதுரைகாரர் மாநில அரசியலுக்கு திரும்ப பெரும் முயற்சி எடுத்து கொண்டிருக்கிறார்.

சன் தன் ஏகபோகத்தை நிலை நாட்ட சகல முயற்சிகளீலும் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். புதிதாக நான்கு சேனல்கள் வரவிருக்கிறது. முதலில் சன் மெட்ரோ, பின் சன் பிளஸ். சன் மெட்ரோ சென்னைக்கு மட்டும். சூரியன் எஃப் எம் மாதிரி. பின் படிப்படியாக எல்லா நகரங்களுக்கும். சன் பிளஸ் விஜய் டிவிக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது... இதற்கு முட்டுகட்டை போட செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. அதனால் கலைஞர் தொலைகாட்சி தரப்பிலும் சில சானல்கள் தொடங்கப் போகிறார்கள். முதலில் வண்ணத்திரை என்ற மூவி சேனல். போட்டு தாக்குங்கப்பா.. நம்ம மக்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க.. எவன் அப்பன் வீட்டு காசு..

வந்தவாசி தொகுதிக்கு திமுகவில் போட்டியிட ஆளே இல்லையா என்ன? அங்கும் வாரிசுக்குத்தான் சீட்டு. கேட்டால் அனுதாப அலையில் ஜெயிக்கலாமாம். அப்புறம் எதுக்கு சாதனை, மண்ணாங்கட்டி என்று முழு பக்க விளம்பரங்கள்?

அரசு இயந்திரம் துஷ்பிரயோகம் செய்யபட்டது.. வாக்குபதிவு இயந்திரத்தில் குளறுபடி... மைனாரிட்டி திமுக அரசு பணத்தை இறைத்தார்கள்.. அதிமுகவிற்கு ஓட்டு போட இருந்த வாக்காளர்கள் கடத்தப்பட்டனர்.. இன்னும் நிறைய காரணங்களொடு ஜெயலலிதா அறிக்கை தயார் செய்ய சொல்லிவிட்டார்.. பின்..இரண்டு தொகுதிகளிலும் ஆளுங்கட்சிதானே ஜெயிக்கப் போகிறது...

ஆட்சியில் பங்கு பெற்றால் நாம் பாத்திரம்தான் துலக்க வேண்டும். மப்பு பார்ட்டி இளங்கோவன் அறிக்கை.. வெறும் பாத்திரம் இல்லை தலைவரே. எச்சல் பாத்திரம்தான் மீதியிருக்கு..


மும்பை தாக்குதல் முடிந்து ஒரு வருடம் நிறைவடைந்தது... மாட்டி கொண்ட கசாப்பிற்கு பிரியாணி சகிதம் விருந்து படைத்து மதசார்பின்மையை மார் தட்டி கொள்கிறது அரசு. (இதுவரை அவனுக்கு 31 கோடி ரூ செலவிட்டிருக்கிறது மகாராஷ்டிர அரசு.. ம்ம்ம்..ஒரு புல்லட்டில் முடிய வேண்டைய வேலை..) லாஜிக்கே புரியவில்லை. பக்கா ஆதாரங்கள் இருந்தும், ஏன் அப்பாவி மக்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க இவ்வளவு தாமதம் என்று.. போகட்டும். அப்சல் குருவே இன்னும் சிறையில் சுதந்திரமாகத்தானே இருக்கிறான்.. ஆனால் இந்த செய்திதான் உறுத்துகிறது. வீரமரணம் அடைந்த ஹேமந்த் கார்கரேவிற்கும், விஜய் சாலேஸ்கருக்கும் இன்னும் இன்ஷூரன்ஸ் பணம் வந்து சேரவில்லையாம்..

சென்னை 100 கி.மீ என்று மைல் கல் பார்த்திருப்பீர்கள். சரியாக சென்னையின் நகர எல்லை ஆரம்பம் .. அதாவது 0 கி.மீட்டர் எங்கு தெரியுமா? கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் இருக்கும் பாலத்தின் மையப்பகுதிதான். அங்குதான் சென்னை 0 கி.மீ என்ற மைல்கல் இருக்கிறது..

இந்த வாரம் இரண்டு விபத்துகள். இரண்டுமே ஆட்டோ மீது ரயில் ஏறியது என்பதுதான் செய்தி.. ஏன்யா? ரயில் என்ன ? அண்ணா சாலையில் ஓடும் ஆட்டோ மீதா வந்து மோதியது. ரயில் போகும் பாதையில் ஆட்டோ குறுக்கே வந்தால் அது என்ன செய்யும்? இந்த ஊருக்குள் யானை வந்தது. வீடுகள் நாசம். இதுவும் அப்படித்தான். காட்டை அழித்து வீடு கட்டிக் கொண்டால் அப்புறம் யானை என்ன.. பிள்ளையார் கோயில்லயா போய் தேங்காய் தின்னுட்டு படுத்துறங்கமுடியும்??

மாயாவி என்ற படத்தின் சில காட்சிகளை தொலைகாட்சியில் பார்க்க நேர்ந்தது. அதில் சூர்யா பேசும் வசனம் “ஐயகோ ..காவல் துறை கலைத்துறையின் ஏவல் துறையாகி விட்டதே. இன்று அது உண்மையானது எவ்வளவு பொருத்தம்.. தலைவர் வேறு சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் பேசுகிறார். சினிமா சம்பந்தபட்ட விழாக்களில் கலந்து கொள்ளும் போது தாய் வீட்டில் இருப்பதை போல் உணருகிறேன்.. அவர் அப்படித்தான். பத்திரிக்கைகாரர்களிடம் பேசினால் “1936 லேயே நானும் பத்திரிக்கையாளனாகி விட்டேன் என்பார்..

காஞ்சிபுரம் கோயில் அர்ச்சகர் செமத்தியாகத்தான் பூஜை செய்திருக்கிறார். தோண்ட, தோண்ட திடுக் செய்திகளாக வருகிறது..அதை பற்றி நாம் என்ன கருத்து சொல்ல முடியும் ? எதுவாக இருந்தாலும் அந்த சிடிக்களை போட்டு பார்த்துதான் சொல்லலாம்..

கேள்வி: நீஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க விரும்புகிறாய்?(கேட்டது கடவுள்)

நான் ஒரு முதலமைச்சருக்கு மகனாக பிறக்க விரும்புகிறேன் (ஒரே மகனாக)

கடவுள்: இப்பதான் இன்னொருவன் முதலமைச்சரா பிறக்கணும்னு கேட்டான். கொடுத்தேன்.

நான் :அதனால் என்ன இப்போ? நான் அவனுக்கு மகனாக பிறந்து விட்டு போகிறேன்..

கடவுள்: ஆனால் அவன் மூணு மனைவிகளும் வேணும்னு கேட்டான். சரின்னுட்டேனே.


Friday, November 27, 2009

அழகே உன்னை ஆராதிக்கிறேன்...அழகு என்பதற்கு சரியான இலக்கணம் எது? அது நம் பார்வையை பொறுத்த விஷயம்.. எனக்கு நிரோஷா மிகவும் பிடிக்கும்.. என் நண்பன்.. மூஞ்சியா அது ? ஓட்டு மாங்காயை குறுக்கே வெட்டினாற் போல் என்பான்.. சற்றே இடது புறம் வகிடெடுத்திருப்பாள் அவள்..(உரிமைதான்) அதுதான் ஒரு வித்தியாசமான அப்பீலை அவளுக்கு (தோ..பார்டா) கொடுத்திருக்கும்) ஏழைஜாதி என்ற படத்தின் விஜய்காந்தை பார்த்தால் கேவலமாக இருப்பார்.. ஆனால் ஷத்திரியனில் ? மேன்லி & மெஜஸ்டிக்...ஏன்? இந்தியனில் சந்துரு பாத்திரம் எனக்கு அகோரமாய் இருந்தது.ஆனால் சேனாபதி.. அது அழகு..சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில்“ சிறந்த இயக்குனர்”விருது பெற்ற பாண்டிராஜின் புகைப்படம் பார்த்தேன். மிக எளிமையான கிராமத்து இளைஞன் முகம். வலிகள் தாண்டி கிடைத்தவெற்றியின் தாக்கம் அவர் முகத்தில் ஜொலித்தது. அப்படியொரு களை ..அந்த தன்னடக்கமான ,பெருமிதம் கலந்த மெல்லிய புன்னகையில் பேரழகாய் தெரிந்தார்.

அழகான விஷயங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தேன்.. உதயம், அஸ்தமனம்,வயல் வரப்பு, நீர் நிலைகள்,பெண்கள்,கொலுசுக்கால்,பால் மழலை இன்னும் இத்யாதிகள்.. ஆனால் திருப்தியே வரவில்லை. நண்பர் ஒருவர் சொன்னார். பக்கத்து ஊரில் ஒரு மூதாட்டி இருக்கிறாள். அவள் வீட்டில் ஒரு நாள் கழித்து விட்டு வா..

மூதாட்டியின் எளிமையான வீடு.. நாலைந்து ஆட்டு குட்டிகள், கோழிகள், ஒரு நாய். வேறு மனிதர்கள் இல்லை.. அவளுக்கு எழுபது வயதிருக்கலாம். தோலெல்லாம் சுருங்கி, காதில் பெரிய ஓட்டை. கறையேறிய பற்கள்.. குழறும் பேச்சு என விகாரமாக இருந்தாள்.. இவளிடம் என்ன அழகியலை காண்பது என்று அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்..


மறுநாள் பொழுது விடிந்தது.. ஊருக்கு கிளம்பினேன்.. அந்த காலையில் கிராமம் அழகாய்த்தான் இருந்தது... மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் கூட அழகாய் ஈர்த்தன.. ஒரு மரத்தடி. அந்த கிழவியை பார்த்தேன்.. அவளா இவள்? என்னால் நம்பமுடியவில்லை.. குவிந்திருந்த களி மண்ணை ஒற்றை ஆளாய் மிதித்து கொண்டிருந்தாள்.. ராகத்துடன் ஏதோ ஒரு நாட்டுப்புற பாடல்.. செவிக்கினிமை... அவள் தலைக்கு பின்னால் கதிரவன்.. என் கோணத்தில் ஒரு நிழல் ஓவியம் போல் இருந்தாள்..

மண்ணை குமித்து, பதமாக பிணைந்து, சுழலும் அச்சின் மீது வைத்து, குழந்தைக்கு முதல் முலைப்பாலை ஊட்டும் தாயை போல் அவள் கைகள் ஆதுரத்துடன் நர்த்தனம் புரிய எனக்குள் விவரிக்க இயலாத பிரமிப்பு தோன்றியது.. உலகில் இதை விட பேரழகியலை காண முடியாது என்றே தோன்றியது.. அவளை ஓவியமாக தீட்ட ஆரம்பித்தேன்.. அப்போது நீங்கள் என்னை பார்த்திருக்க வேண்டும்!! என்னை விட அழகானவன் யாரும் இருக்க முடியாது என்ற முடிவிற்கு நீங்கள் வந்திருப்பீர்கள்..(ஏதோ ஒரு கூட்டத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் சொல்ல கேட்ட ஒரு அயல் தேசத்து கவிதை..நினைவிலிருந்து கொஞ்சம் கற்பனை சேர்த்திருக்கிறேன்...

அழகு என்பது என்ன?உங்கள் பார்வையிலிருந்து எழுதுங்கள்..விதிமுறைகள் இல்லை... நான் அழைப்பது..


ஈரோடு கதிர்
ரம்யா
அப்துல்லா
ராமலட்சுமி

டிஸ்கி : முன்பு எழுதிய ஒரு கவிதை :

அழகாய் இருக்கிறாய்!!
பயமாய் இருக்கிறது...

அதே வரிகள்தான்..ஆனால்
இந்த முறை
மகளை பார்த்து!!

டிஸ்கி : 2

இந்த இடுகையை நீங்கள் படிக்கும் போதும், பின்னூட்டம் இடும் போதும், வாக்களிக்கும் போதும்....ஆஹா....எவ்வளவு அழகு!!

Thursday, November 26, 2009

அர்த்தமில்லாத கதை----4


சிதம்பரம் சம்சாரமா ?

ஆமாங்க.

சொன்னதையெல்லாம் நினைப்பிருக்கு இல்ல?

இருக்குங்க..

அந்த விருதாசலத்து ஆளும், நாச்சியாரும் கூட்டு சேரவே கூடாது. நீதான் பொறுப்பு..

தெரியுங்க.. நான் சொல்லித்தானே நாச்சியாரம்மா அந்தாளை குடிகாரன்னு தூத்தினாங்க.. நான் பாத்துக்கறேன்

அந்த முட்டை கண்ணன் ரெண்டு பேரையும் சேர்க்க ரொம்ப மெனக்கெடறான் பாத்து..

நீங்க கவலையை விடுங்க ஐயா.. என் கடையில எவ்வளவு கொள்முதல் பண்றீங்க.. நன்றி மறப்பேனா?

அது மட்டுமில்ல.. பஞ்சாயத்துல உன் மேல எவ்வளவு பிராது இருக்கு. நாங்க கண்டுக்கிறதே இல்லை.

தெரியுங்கய்யா.. உடம்பும், உயிரும்தான் இங்க.. விசுவாசத்தை அங்கதானே வச்சிருக்கேன்

என்ன வரதா? திருவிழா நெருங்கிடுச்சு. என்ன பண்றது?

வரதன் கையிலிருந்த சுத்தியை கீழே வைத்தவாறு அதான் எனக்கும் புரியலை.. நாச்சியாரம்மாவோட இனி கஷ்டம்தான்.. உங்க நிலைமை என்ன?

அறிவாளை சாணம் பிடித்து கொண்டிருந்த பாண்டி.. ஒன்னும் தெரியலை.. அறுவா வேற மழுங்கி போச்சுது.. திருவிழால கலந்துக்கலை. அம்புட்டுதான் ஒரு பய உண்டியல்ல சல்லிக்காசு போட மாட்டான்..

ஒருக்கா ஐயா கிட்ட பேசி பார்த்தா என்ன?

அட போய்யா.. அந்தாளுக்கு நம்ம பவிசு தெரிஞ்சு போச்சு.. சீண்டகூட மாட்டாரு..பேசாம இந்த வாட்டியும் நம்ம தனியா திருவிழாக்கு போனா என்ன?

அட போப்பா.. பொண்சாதி, புள்ளைங்க கூட வரமாட்டாங்க... சரி .. விதி விட்ட வழி.. பார்ப்போம்..

என்னம்மா இது..சோத்துல சுத்தமா உப்பை காணோம்?

தம்பிதான் சேர்க்க வேணாம்னு சொல்லிடுச்சு.. இந்த ரோஷத்தையெல்லாம் கொஞ்ச நாளைக்கு தள்ளி வைங்க.. வீராப்பா தங்கச்சி கிட்ட மொறைச்சுகிட்டீங்க..இப்ப திருவிழா வேற .. உங்க அண்ணன் கால்லயாச்சும் விழுந்து எந்திரிக்க வேணாமா.. அதான்..

தம்பி எங்க?

ம்ம்..நைட்டுக்கு அடுப்பெரிக்க வேணாமா? அதான் காட்டுக்கு சுள்ளி உடைக்க அனுப்பியிருக்கேன்.

Tuesday, November 24, 2009

மானிட்டருக்கு மறுநாள்..... டெஸ்டிங் 1..2...3நேற்று இட்ட இடுகைகள் தமிழ்மணம் முகப்பில் தெரியவில்லை.. ஆகவே இன்று ஒரு சோதனை (உங்களுக்கும்தான்) பதிவு(மீள்)

தலைவர் ஓய்வுக்காக ராமச்சந்திராவில் இருக்கிறார்.உடன் சண்முகநாதன்.

போரடிக்குதப்பா..எதாச்சும் கதை விவாதத்துக்கு ஏற்பாடு செய்..

ஐயா..கவிப்பேரரசுக்கு போன் போடட்டுமா?

வேண்டாம்யா..அந்த பழைய சோறு பார்ட்டிங்கல்லாம்..பொன்னர் சங்கர் படபிடிப்பை பார்க்க போனதுக்கே எவனோ கார் மேல கல்லை விட்டெறியரான்..

இந்த வாட்டி சும்மா நச்சுன்னு இருக்கணும்...துரைமுருகன்,ஆற்காடு கிட்ட எல்லாம் மூச்சு விட்றாதே..

ஐயா,பதிவுலகத்தில பசங்க எல்லாம் கலக்கறாங்கலாம்.அங்கேயிருந்து வரவச்சுடலாம்..

கேபிள் சங்கர்,வால்பையன்,நையாண்டிநைனா மற்றும் தண்டோரா வருகிறார்கள்..

கோரசாக...வணக்கம் ஐயா..

ம்ம்..உங்களை அறிமுகபடுத்திக்கங்க..

ஐயா நா கேபிள்..

கேபிள்ன்ன அரசு கேபிளா?அது எனக்கு ஆகாது.தெரியுமில்ல...

ஐயா நீங்கதான் அரசு..நா வெறும் கேபிள்தான்..

எஸ்சிவி யா இல்ல ஆர்சிவியா...

நா எம்சிவிங்க....

எம்சிவி யா? அது யார்துயா?

வால் பையன்..அது.. மெக்டவல் விஸ்கிய சொல்றாருங்க..

நீ யாருய்யா?

வால்பையன்..

மதுரையா..நினைச்சேன்

நா நையாண்டி நைனாங்க..

நைனான்னா ஆற்காட்டாருக்கா உறவா?யோவ் சண்முகநாதா..இவங்க என்னைய வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்றாங்களா?

ஐயா நா தண்டோராங்க..

உன்னைய பத்தி உளவுத்துறை சொல்லியிருக்காங்க.

யாருங்கய்யா? விஜயகாந்தா?

சரி என்ன சாப்பிடறீங்க?

கேபிள்.... சாப்பிட எதுவும் வேணாம்..இப்ப ஒரு நர்ஸ் வந்துட்டு போனாங்களே..பேர் என்ன? மல்லுவா?

யோவ் நீ துரை முருகனோட மோசமா இருப்ப போல..வாலு உனக்கு என்னய்யா வேணும்?

சரக்குத்தான்..ஐயா ஒரு விண்ணப்பம்..லேட்டா திறந்து சீக்கிரம் மூடிராங்க..கொஞ்சம் கவனிங்க.

எந்த பள்ளிக்கூடம்யா அது?

டாஸ்மாக் கடைதாங்க..

இதுக்கே தைலாபுரத்துலேர்ந்து தடியை வீசராங்க...நைனா உனக்கு என்னய்யா வேணும்?

ஐயா நீங்க முரசொலில எழுதின கவிதை கொஞ்சம் கொடுத்தீங்கன்னா..எதிர் கவுஜ போட்டு கடையை காப்பாத்திக்குவேன்..

திடீரென்று வாசலில் கேபிள் சங்கரின் பைக்கை பாத்துட்டு உண்மை தமிழன் உள்ளே வருகிறார்..

நீ யாருய்யா?

அப்பனே முருகா..

துரைமுருகனுக்கு சொந்தமா?

ஐயா நா சரவணன்..

அவர் கையை கட்டிகிட்டு இல்ல இருப்பாரு

தண்டோரா குறுக்கிட்டு..ஐயா தயவு செஞ்சு இவரையும் கையை கட்டிகிட்டுத்தான் இருக்கணும்னு உத்தரவு போடுங்க..டைப் அடிக்க ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டேங்குறாரு..

கேபிள்..இந்த படத்தை தயாரிக்கறது யாருங்க?சன் பிக்சர்ஸா இல்ல கிளவுட் நைன்னா?

அவங்க எல்லாம் ஏமாறுவாங்களா..இதுக்குன்னு கழகத்துல சில அடிமைகளை வச்சிருக்கோமில்ல..நீ கதையை சொல்லுயா?

கேபிள் சங்கர் : பூஜையை போட்ட வுடனே சாங்..

மு.க. : நிறுத்து..நிறுத்து..பகுத்தறிவு பாசறைக்குள்ள வந்துட்டு என்ன பேச்சு?

தயாளு அம்மாள் வருகிறார்..என்னங்க..திருவாரூர் புவனேஸ்வரி அம்மன் கோயில்லேர்ந்து மந்திரிச்சு கயிறு அனுப்பியிருக்காங்க..கட்டி விடவா?

தண்டோரா (இதை நோட் பண்ணிக்கடா... வேலிட் பாயிண்ட் ஆச்சே)

கேபிள் : ஓப்பன் பண்ணா?

வால் .....ஓப்பன் பண்ணா நுரை வருமே தலைவா?

கேபிள்..நம்ம என்ன சோப்பு விளம்பரமா எடுக்கப் போறோம்..ஓப்பன் பண்ணா சன்ரைஸ் தலைவரே..

சண்முகநாதன் குறுக்கிட்டு,தலைவர் காபி குடிக்ககூடாது.டாக்டர் சொல்லியிருக்காரு..கஞ்சிதான்..

கேபிள்...அது இல்லீங்க..உதயசூரியனை காட்றோம்..

தலைவர் நிமிர்ந்து உட்காருகிறார்..இப்ப சீனை நா சொல்றேன்(கேபிள் தலையில் கை வைத்துக் கொள்கிறார்)

ஒரு கல்யாண வீடு..மைக் செட் கட்ட நாயகன் போகிறான்..ஜேகே ட்ட சொல்லி

பூம்புகார்ல பெரிய செட்டா போட சொல்லிடுவோம்..செலவெல்லாம் பழனிமாணிக்கம் பாத்துப்பாரு...

கேபிள்..ஐயா நான் தான் டைரக்டருன்னு சொல்லி இட்டாந்தாங்க..

மு,க..டைரக்டர் நீதான்யா..ஆனா டைரக்‌ஷன் நான் தானே..

கேபிள்..(விளங்கிடும்) ஐயா மேல சொல்லுங்க..நா திரைக்கதை ரெடி பண்ணிடறேன்..

மு.க... மணப்பெண் யாருன்னா..அவன் காதலி..அப்படியே ஷாக் அடிக்குது..

வால்...ஏங்க...ஓயரிங் தப்பாயிடுச்சா?

மு.க.. . கனெக்‌ஷனே மாறி போச்சுயா?இங்க டைட்டில் சாங்..

காயின்றி கனியில்லை...

நோயின்றி மருந்தில்லை..

ஆயின்றி வயிறில்லை...

பேயின்றி பிணமில்லை..

ஈயின்றி பீயில்லை...

நீயின்றி நானில்லை..

எப்பு...டி?

சண்முகநாதன்.. இப்படி இம்சையை கொடுக்கிறாரே..வேண்டாம்னு ஓட கூட முடியலை..இன்னும் கொஞ்ச நேரத்துல பசங்க வந்துடுவாங்க..வாங்கத்தான் போறாரு...

உண்மைத்தமிழன்...அருமை..அருமை..இந்த படத்துக்கு விமர்சனம் எழுதற ரைட்ஸ் எனக்குத்தான் தரணும்..

மு.க .. தன் காதலிதான் மணப்பெண்ணுன்னு தெரிஞ்சவுடனே துக்கம் தாங்காம அழ ஆரம்பிக்கிறான்..அப்ப மறுபடியும் ஒரு பேத்தாஸ் சாங்..

கேபிள்..தலைவரே..ஒரு சந்தேகம்..நம்ம வெறும் ஓளி,ஓலியும் மட்டுமா எடுக்கப் போறோம்..இல்லை இசையருவிக்காக எடுக்கிறமா?

மு.க..ரொம்ப பேசினா உன்னையும் காத்திருப்போர் பட்டியல்ல வச்சுடுவேன்..

இப்ப கிளைமாக்ஸ்..

தலைவரே..இடைவேளையே வரலையே..

மு.க..அதுக்குத்தான் நாயகியின் இடையை வர்ணிச்சு 10நிமிஷத்துக்கு ஒரு பாட்டு வச்சிருக்கமே?சரி..சரி..பசங்க வர்ற நேரமாச்சு..பேட்டா வாங்கிட்டு நீங்க கிளம்புங்க..

யாரோ வரும் சத்தம் கேட்டு பசங்கதான் நினைக்கிறேன்..போர்வைக்குள் ஒளிந்து கொள்கிறார்..

தலைவா....தங்கத்தமிழே..

குங்குமசிமிழே..

நீயின்றி நானில்லையே..

ஜெகத்ரட்சகன் ஆளுயுர மாலையுடன் வருகிறார்..

தலைவரே..நீயின்றி நானில்லை படத்தின் வெள்ளி விழாவை நாளை வள்ளுவர் கோட்டத்தில் வைத்திருக்கிறேன்..இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம் கலைஞரா...இல்லை..கருணாநிதியா என்ற தலைப்பில் கவியரங்கமும் உண்டு..

மு.க...யோவ்..அடுக்குமாய்யா..உனக்கு?இப்பத்தான் கதையை பத்தி பேசிகிட்டிருக்கோம்..வெள்ளி விழாவுக்கே போய்ட்டியா நீயி?என்ன எதாச்சும் புதுசா காலேஜ் ஆரம்பிக்கப் போறியா?கையெழுத்து போடணுமா?

எங்கோ ஊளையிடுவ்துபோல் அழுகை சத்தம் கேட்கிறது..பார்த்தால் கட்டிலுக்கு அடியில் துரைமுருகன்...

நியாயமா தலைவரே?பொதுப்பணித்துறையையும் புடுங்கிட்டீங்க..மீனாவுக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சு..நா என்னதான் பண்றது?தெரிஞ்சுக்காம நா நகரமாட்டேன்..

மு.க. நீ ரொம்ப சட்டம் பேசற..அதையும் உன் கிட்டேர்ந்து புடுங்கிட வேண்டியதுதான்..

என்ன இங்க..சத்தம்..என்றபடி ஸ்டாலினும்,அழகிரியும் வருகிறார்கள்...

ஏம்பா..உங்களை ஓய்வு எடுக்க சொன்னா..நீங்க சின்ன பசங்களையெல்லாம் கூப்பிட்டு வச்சு கூத்தடிக்கறிங்களா/

கேபிள் ....ஐயா தளபதி என்னயத்தான் சின்ன பையன்னு சொன்னார்..நா யூத்துப்பா யூத்து..

செக்யூரிட்டி...விரட்டுயா எல்லாரையும்.அப்பா வாசல்ல நல்லகண்ணு,ஜோதிபாசு எல்லாம் காத்துகிட்டு இருக்காங்க..போய் அருகம்புல் ஜீஸ் குடிச்சுட்டு வாக்கிங் போயிட்டு வாங்க..போங்க..

Monday, November 23, 2009

சில பிரபலங்கள்....சில பிராபலங்கள்


நண்பர் பைத்தியக்காரனுக்கு ஒரு மெயில் வருகிறது..படிக்கிறார்.

டியர் மேடி..

நான் சட்னி வெல்டன்.. அதாவது சிட்னி ஷெல்டனின் பேரன்.. என் பாட்டனார் எழுதிய கதைகளுக்கு என்னிடம் காப்புரிமை உள்ளது.. நீங்கள் அவர் கதை ஒன்றை (ஒன்றுதானா? ) களவாடி விட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.. தாங்கள் எழுதியதை மொழி பெயர்த்து சென்னையிலிருந்து ஒரு நண்பர் அனுப்பி வைத்தார்...
அவர் யார் என்ற விவரம் வேண்டாம்.. அதனால் நீங்கள் உடனடியாக எனக்கு சேர வேண்டிய ராயல்டியை அனுப்பவும். வேறு திருட்டுகளும் இருந்தால் மொத்தமாக செட்டில் செய்யவும். கணிசமான தள்ளுபடியும் உண்டு.

இப்படிக்கு

சட்னி வெல்டன்.

சிவராமனுக்கு பயம் வந்து விடுகிறது. கோர்ட், கேஸ் எல்லாம் பார்த்தால் கவிதையை கண்ட கேபிள் சங்கரைப் போல் மெரிசலாகி விடுவார். அவர் உற்ற நண்பரும், எழுத்தாளருமான வளர்மதியை சந்திக்கிறார். (உங்கள் நலம் கருதி அவர் லிங்க்கை கொடுக்கவில்லை)

என்ன மேடின்னு இருக்கு? ஒருவேளை மாதவனுக்கு எழுதியிருப்பாரோ?இது எவனோ வேலை மெனக்கெட்டு செஞ்சிருக்கான் பாரு .. யாராயிருக்கும்?மைலாப்பூர் ராயல்ல டீ வாங்கி கொடுத்தா போதுமான்னு கேக்கனும்

வளர்.. பைத்தியக்காரன் அப்படிங்கிறங்கிறதைதான் மேடின்னு போட்டிருப்பாரு.. இது தண்டோராவின் வேலையாத்தான் இருக்கும். ஏன்னா ! இந்த மாதிரி நயவஞ்சகமான திரிசமம் எல்லாம் அவர்தான் செய்வாரு..

அவர் நயவஞ்சகன்னு எப்படி சொல்றீங்க?

ஆர்.கே. செல்வமணி சொல்லியிருக்காரு..

சே..சே.. அவரு செஞ்சா சொல்லிடுவாரு..

இரு அந்த பதிவுல இருக்கிற பின்னூட்டத்தையெல்லாம் படிப்போம்

வளர்மதி இன்ஸ்டண்ட் ஷெர்லோக் ஹோம்ஸ் ஆகிறார்.

சிவராமா.. இங்க பாரு.. இனிமே நாங்க எல்லாம் புனைவு எழுதலாமானு தயக்கமா இருக்குன்னு நர்சிம் சொல்லியிருக்காரு. அவராயிருக்குமோ?

தம்பி அப்படியெல்லாம் பண்ண மாட்டாரே..

காப்பி அடிச்சதுதான் அடிச்சே..அதை ஏன்யா வெளிப்படையா சொன்னே?நாங்க எல்லாம் அப்படியா இருக்கோம்? 400 கதை எழுதியிருகேன்னு வேற சொல்லியிருக்கே.. இன்னும் எத்தனை பேரோட பேரனுங்க கிளம்ப போறானுங்களோ? பேரனுங்களை சாதாரணமா எடை போட கூடாது தெரியுமில்ல? தலைவரே ததுங்கிணத்தோம் போட்டாரு..சரி 400 ம் சுட்டதா?

இல்லை. ஒன்னு, ரெண்டு சொந்தமா எழுதினதுதான்..

.........................................................................................................................................................................

என்றும் இளமை மாறா மார்க்கண்டேய கவி அனுஜன்யா வீடு.

தலைவர் ஷார்ட்ஸ், டீ ஷர்ட்டில் சிக்கென்று இருக்கிறார்.

சார் ஆபிஸ் லீவா?

அதையேன் பாஸ் கேக்கறீங்க..ஸ்கூல் யூனிபார்மில் ஆபிசுக்கு வரக்கூடாதுன்னுட்டாங்க.. அதான் போங்கடான்னுட்டேன்..

அப்ப வீட்டுல என்ன பண்றீங்க? போரடிக்குமே !

வீட்டம்மா வருகிறார்கள்..

இவர் கூட முடியலைங்க. இங்க பாருங்க.. பேன் பிளேடையெல்லாம் கழட்டிட்டு ஏதோ எழுதி கிட்டேயிருக்காரு..

அனுஜன்யா.. அது ஒன்னுமில்ல தலைவா.. சும்மா ஒரு கவிதை ..ஹி..ஹி..

முதலில் ஒரு இறக்கையோட பேனை சுத்தி பார்த்தேன். என் பால்யம் நினைவுக்கு வந்தது.

அப்புறம் ரெண்டு இறக்கையோட.. இப்ப என் இளமை நினைவுக்கு வந்தது..

அப்புறம் மூன்று இறக்கைகள். இப்ப..

இப்ப?

அதையேன் கேக்கறீங்க? சம்சார சாகரத்தில் விழுந்தது ஞாபகம் வந்து தொலைச்சுடுச்சு..

அடுத்து செமி ஆட்டோமெட்டிக் வாஷிங்மெஷினை வச்சு ஒரு...

ஐயோ..தலை சுத்துதேன்னு பெரிய குரல் கேட்கிறது..


.........................................................................................................................................................................

9/11 எடுத்த மைக்கேல்மூரை விட பெரிய டாக்குமெண்டரி இயக்குநராக வர வேண்டும் என்று ஆதி சபதம் போட்டிருப்பதாக கேள்விபட்டு அவரை வாழ்த்தப் போனோம்...

ஆதியின் வீடு. வார்னர் பிரதர்ஸீன் அடுத்த பட செட் போலிருந்தது.. பெரிய பலூன்கள் கட்டி தொங்க விட்டிருந்தார்.. கையில் அவரின் கண்ணான கேமரா..

ரெடி.. ஸ்டார்ட் .. ஆதியின் குரல்

கிச்சனிலிருந்து பறக்கும் தட்டுக்கள் வரத்தொடங்கின. அல்போன்ஸ்ராய் பார்த்திருந்தால் அவர் கொள்ளி கண் நிச்சயம் ஆதி மேல் பட்டிருக்கும். சும்மா பறந்து, பறந்து ஷுட் பண்ணி கொண்டிருந்தார்.

ஷாட் இடைவேளை..

இது என்னோட ஆயுதம் ஆவணபடத்தோட அடுத்த கட்ட முயற்சி.. எப்பூடி?

சூப்பர் ஆதி.. யார் ஆர்ட் டைரக்டர்?

வேற யாரு.. ரமாதான்..

என்ன பட்ஜெட்?

3 கிலோ கோதுமை மாவுதான்..2 கிலோ உருளைகிழங்கு

பெரிய பட்ஜெட்தான் போல..

மீண்டும் படபிடிப்பு தொடங்கியது. ஆதி.. இருங்க தண்டோரா.. அடுத்ததா எரிமலை குழம்பு வெடிச்சு பொங்கறா மாதிரி எடுக்கப் போறேன்


ஜீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்....

மானிட்டர் பக்கங்கள்........23/11/09சென்ற வாரம் அரசியல் அரங்கில் பரபரப்பை கிளப்பியது தலைவரின் “மெளனவலி” அறிக்கைதான்.. பல தரப்பாலும் கடுமையாக விமர்சிக்கப் பட்டது எனலாம்.. சரி மேட்டருக்கு வருவோம்.. தலைவர் அந்த அறிக்கையை வெளியிட்டு விட்டு வீட்டுக்குள் முடங்கி, உண்ணாமல், உறங்காமல் வேதனையை அனுபவித்திருப்பார் என்று நினைத்தால் உங்களுக்கு பூஜ்யம் மார்க்.. அவர் அன்று சென்ற இடம்..கெஸ் பண்ணுங்கள்.. பார்க்கலாம். அதே இடம். போர்பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரேதான்.. மீண்டும் பெண்சிங்கம்.. திருத்தங்கள்..புலி, சிங்கம் என்று தலைவர் ஜங்கிள் ராஜாதான்..

அதற்கு முன் திரு. மு.கவின் “யாரிடம் சொல்லி அழுவது என்ற முல்லைப் பெரியார் தொடர்பான அறிக்கை சரியாக வொர்க் அவுட் ஆகவில்லை. பின் வாலி, வைரமுத்து, ஜெகத் இவர்களுடன் ஆற்றாமையை கொட்டினாராம்.

வெயில், எம்டன் மகன், காதல் என்று சில படங்களில் நடிக்க முயற்சித்த “சின்ன தளபதி” பரத்தை பழனி, ஆறுமுகம், திருத்தணி என்று அழைத்து சென்று மொட்டை அடித்து கோவணம் கட்டி விட்டார்கள் நம் இயக்குநர்கள்.. ஜெயா டிவியில் ரசிகன் என்ற நிகழ்ச்சி.. அதில் ஒரு ரசிகர் பரத்திடம் தனக்கு பிடித்தது அனல் பறக்க அவர் போடும் சண்டைகள் என்றார்.. அடப்பாவிகளா?

சமீபத்தில் “உலக கழிப்பறை” தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ் நாட்டில் தொண்ணுறு லட்சம் வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. (ரயில் வரும் போது எந்திரிச்சு நிப்பாங்களே) ஆனால் கலர் டி.வி இல்லாத வீடே இருக்க கூடாது என்று தலைவர் உத்தரவிட்டுள்ளார்..

விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி. சோதிடம்.. தனியார் நிகழ்ச்சி.. அதில் பேசியவரை எங்கோ பார்த்திருக்கிறேன்.. அவர் சொன்னது.. ஜாதகம், கைரேகை எதுவும் இல்லாமல் முனீஸ்வரர் அருளால் முகத்தை பார்த்தே முக்காலமும் தன்னால் சொல்ல முடியும் என்று அள்ளி விட்டு கொண்டிருந்தார்.. எல்லா ஊருக்கும் பிரதி மாதம் விஜயம் உண்டு. முன் அனுமதி பெற வேண்டும். அவர் “ஒயிட்& ஒயிட் .நீல்கண்ட சிவா” ஒக்கா.. மக்கா.. நினைவுக்கு வந்து விட்டது..சில ஆண்டுகளுக்கு முன் விளம்பரம் தொடர்பாக அவரை சந்தித்தேன்.. எனக்கும் ஜோசியம் சொன்னார். பின் கிளம்பும்போது அவர் சொன்னது..

“ஆட்டோ பின்னாடி விளம்பரம் பண்ணித் தரேன்னு சொல்லி ஒருத்தன் பத்தாயிரம் ரூபாயை ஆட்டையை போட்டான்.. அவனை கண்டுபிடிக்க முடியுமா?

வழக்கம் போல் சரக்கு மேட்டர் கொஞ்சம்..நம்ம ஊருக்கு பொருந்துமான்னு தெரியலை..ஸ்பெயினில் கண்டு பிடித்திருக்கிறார்கள். தினம் சரக்கு அடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு வர வாய்ப்பு கம்மியாம்..

போன இடைத்தேர்தலில் ஐயோ, ஐயோன்னு கூப்பாடு போட்டவங்க.. இந்த வாட்டி ஐயா.. ஜாலின்னு கூவப் போறாங்க... பின்ன, அம்மா அறிவிச்சுட்டாங்க..நாங்களும் ஆட்டத்துக்கு வர்றோம்னு.. அப்புறம் என்ன? கம்மல்,கறிசோறு, காசு,பணம் எல்லாம் உண்டு மக்களே..பா.ம.க ஐயாதான் முச்சந்தியில் நிக்கிறாரு. விட்டாரு பாருங்க ஒரு அறிக்கை. அதாவது இந்த எலெக்‌ஷன்ல பணம் கொடுத்து ஓட்டு வாங்க மாட்டோம்னு எல்லா கட்சியும் உறுதிமொழி கொடுத்தா, அவரும் ஆட்டத்துக்கு வருவாராம். தோட்டத்திலேயே (தைலாபுரம்) வெட்டியா இருக்க வேண்டியதுதான்..

மூட நம்பிக்கையை வேரறுக்க விடிவெள்ளியாய் வந்த கழக ஆட்சியில் நடக்கும் கோமாளித்தனங்களில் இது லேட்டஸ்ட். சிவகாசி ஊர் பேர்ல ஆங்கிலத்துல ஒரு “a ” சேர்க்க போறாங்களாம்.. எண் கணிதப்படி இதை செஞ்சா, ஊருக்கு விமோசனம் வந்துடுமாம்..அரசுக்கு பரிந்துரை செஞ்சிருக்காங்க..ஆற்காட்டார் கூட சாமிங்கிறதை, சுவாமின்னு மாத்திகிட்டார். அப்புறம்தான் அவர் பியூஸை புடுங்கினாங்க.

சிறுகதை பட்டறையில் கொடுத்த ஒரு நூலில் படித்தது. “சிறுகதை பட்டறைகள் நடத்துவதன் மூலம் கதை எழுதும் திறனை வளர்க்க முடியாது. எழுதவே தெரியாதவன் பட்டறையில் கலந்து கொண்டால் ” ஏ.. அப்பா.. இது இவ்வளவு கஷ்டமா? என்று அவனாகவே ஓடி விடுவான். வேண்டுமென்றால் ஓரளவுக்கு எழுதறவன் கொஞ்சம் தேறுவான்” நம்ம எந்த ரகம்னு நமக்கே தெரியும்.. ரம்மியாட்டத்தில் சொல்வார்கள். ஒன்னும் தெரியலையா? ரெண்டை போடுன்னு.. போட்டாச்சு..

அண்ணன் உண்மைத்தமிழன் போன் செய்தார். அண்ணே(என்னயத்தான்) ஏழரை சனியன் வாட்டுது. திருநள்ளாரு போயிட்டு வந்தேன். அந்த வரலாறை ஒரு ஐஞ்சு பாகமா எழுதலான்னு இருக்கேன்னாரு. (சொல்லிட்டேன். பாத்து சூதானமா இருந்துக்கங்கப்பா..)
அப்புறம் சொன்னார்.. என்ன.. ரெண்டாயிரம் ரூபா செலவாயிடுச்சு..

நான் சொன்னது.. “சனியன்” தொலையட்டும். விடுங்க.

டிஸ்கி கவுஜை :

செய்தவன்
செய்ததை
சொன்னதிலும்
செய்யப்பட்டது
செய்யபட்டதை
சொல்வதிலும்
நிச்சயம் மிகைப்படுத்தல்
இருக்கிறது..
எனவே please
சொன்னதை செய்யுங்கள்
செய்வதை சொல்லுங்கள்!!


Saturday, November 21, 2009

தண்டோரா.....


ஆஸ்துமாவிற்கு தீர்வு
வீட்டில் இருந்தபடியே வேலை
தொப்பை குறைய காந்தம்
அடகு நகை மீட்க
குடிப்பவருக்கு தெரியாமலும்
பதினாராம் நாள் காரியம்
வாழ்த்த வயதில்லை
பர்சனல் லோன்
கண்ணீர் அஞ்சலி
மொபைல் பஞ்சர்
ஹலால் பிரியாணி
சகல பிளம்பிங் வேலைக்கும்
கீ மேக்கர்
ஜேம்ஸ் மேஜிக் ஷோ
கடவுள் முரளி வாழ்க
மாதவிடாய் பிரச்சனையா?
வெள்ளைப் படுதல்
எழுச்சியின்மையா?
திருப்தி இல்லையேல் பணம் வாபஸ்
குடமுழுக்கு.. கும்பாபிஷேகம்
குழந்தை பாக்கியம்
அம்மா வருகை
இயேசு அழைக்கிறார்
கறுப்பு தினம்..டிசம்பர் 6
மாநிலம் தழுவிய..
பச்சிலை வைத்தியம்
விரை வீக்கம்
குருதேவ் கிளீனிக்
டிரைவிங் ஸ்கூல்
சார்லி ப்ரீஸர் பாக்ஸ்
ஒன் டைம் ப்ளீஸ்

அப்புறம் அந்த
உடைந்து ஆடிக் கொண்டிருந்த

“இவ்விடம் புத்தூர் கட்டு போடப்படும்”

00000000000000000000000000


Thursday, November 19, 2009

சக்தி கொடு...


இரவு 11 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கும்.. சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் பாடியை பேக் பண்ணி கொடுத்து விடுவோம்.. இப்படித்தான் தகவல் வந்தது...இந்த விஞ்ஞான மருத்துவ யுகத்தில் இது சாத்தியமாகத்தான் இருக்கிறது.. நான் மருத்துவமனைக்கு போய் சேர்ந்தபோது மணி ஏழு.

தலையில் ஒரு வெள்ளைக்கட்டு. அதன் மேல் “NO BONE" என்று எழுதப்பட்டிருந்தது.. முகத்தில் நான்கு நாள் தாடி..ஒரு உறைந்திருந்த புன்னகை அல்லது ஒரு வித இகழ்ச்சி.. மற்றபடி உடம்பில் ஒரு கீறல் கூட இல்லை.. நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் சுவாசம் சீராக வந்து கொண்டிருந்தது... சாலை விபத்து.. மழை நீ ர் தேங்கியிருந்த பள்ளத்தில் பைக்கை விட்டு, தூக்கி வீசப்பட்டு செண்டர் மீடியனில் தலை மோதி, கடுமையான பாதிப்பு.. முளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை... மருத்துவர்கள் கை விரித்து விட்டார்கள்..நவீன மெஷின்கள், வண்ண ஒயர்கள்..இனம் புரியாத பீப் ஒலிகள்.. செயற்கை சுவசாம் ஓடி கொண்டிருந்தது...

கல்யாண வீட்டுக்கு முன் கூட்டியே வருவது போல், சாவிற்கும் வரமுடியுமா? வந்து காத்திருந்தது உறவினர் கூட்டம்.. அடிக்கடி உள்ளே சென்று காட்சிப் பொருளை போல் பார்த்து, விசும்பி விட்டு....

அவர் கோபி... என் தம்பியின் சகலை..38 வயது..ரயில்வேயில் எக்ஸ்பிரஸ் டிரைவர்..விபத்து நடந்த இடம் சோளீங்கநல்லூர் குளோபல் மருத்துவமனை அருகில்...ஹெல்மெட் அணியவில்லை. அணிந்திருந்தால் 70 % பிழைத்திருக்க வாய்ப்புண்டு என்று மருத்துவர் சொன்னார்.. அணிந்தவன் விபத்தில் சாவது இல்லையா? என்ற வரட்டு வாதத்தை கைவிட்டு நிச்சயம் ஹெல்மெட் அணியுங்கள் நண்பர்களே...

முந்தின நாள் 10 மணி நேரம் கெடு கொடுத்திருந்தார்கள்.. ஒவ்வொரு ஐந்து மணிக்கும் சிறப்பு மருத்துவர் குழு பரிசோதிப்பார்கள்.. 10 மணி நேர முடிவில் மூளைச் சாவு என்று டிக்ளேர் செய்வார்கள். அதன் பின் உடலில் இயங்கும் உறுப்புகளை தானம் செய்யலாம்..தானம் செய்ய சம்மதித்தால், பிளாஷ் செய்தி பரப்பப்படும்... பிரியாரிட்டியில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும்.. வர்த்தகம் கிடையாது.. மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை கட்டணம் கிடையாது.. முழுக்க மனிதாபிமான அடிப்படியில்தான்.. பெறுபவரை தவிர... பின் பிறவி அல்லவா?

கோபியின் தாய் 70 வயது.. புத்திரசோகம்... என்ன சொல்லி தேற்றுவது? 8 வயதில் ஒரு பையன்...5 வயது பெண்....இந்த மட்டிலும் பொட்டுன்னு போகாம நாலு பேருக்கு உயிர் கொடுத்துட்டு போறாரேன்னு ஒரு சின்ன ஆறுதல் அண்ணா...என்றாள் என்னிடம்... அவர் இறந்ததாக நான் நினைக்கவில்லை..அதனால் வீட்டில் யாரும் அழ வேண்டாமென்று அவள் சொன்னது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.. பெண்ணின் சக்தி அதுதான்

முதலில் லிவர்.. பின் கிட்னி.. அதன் பின் கண்...இறுதியில் இருதயம் என்று எடுத்துவிட்டு பாடியை பேக் செய்து மார்ச்சுவரிக்கு அனுப்பி விட்டார்கள்..
எப் ஐ ஆர் போட்டிருப்பதால் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டுமென்பது சட்டம்... ஏற்கனவே வெறும் பைதான் இருந்தது.. பின் ஆள், அம்பு, பணம் என்று போய் வேலை முடிந்தது..

அதிகாலை சுமார் ஐந்து மணி அளவில் இதயத்துடிப்பு நிறுத்தப்பட்டதாம்.. அந்த கடைசி துடிப்பு என்ன சொல்லியிருக்கும்?

இன்னொருவருக்கு பொருத்திய பின் அந்த இதயம் முதல் துடிப்பில் என்ன சொல்லும்?

எதாவது டிரான்ஸ்கிரிப்ட் முறையில் அந்த துடிப்பை பதிவிட்டு கோட் டிரான்ஸ்லேட் செய்யும் காலம் வந்தாலும் வரலாம்

இப்போதைக்கு அந்த குடும்பத்திற்கு இழப்பை தாங்குவதற்கு சக்தியையும், வாழ்வை எதிர்கொள்ள சக்தியையும் கொடு என்று இறைவனையோ,, இயற்கையையோ வேண்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும்?