Tuesday, March 23, 2010

பெயர்ச்சொல்...........


என் பெயர் கொஞ்சம் வித்தியாசமான பெயர். அதில் என்ன இருக்கிறது என்று கொஞ்சம் அலட்சியமாகத்தான் இருந்தேன். ஆனால் பெண்பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க ஆரம்பித்தவுடன் தான் அதைப் பற்றிய கவலை அதிகமானது. அவள்கள் எதிரில் வேண்டுமென்றே அந்த பெயரை சொல்லி நண்பர்கள் அழைக்கும்போது அவமானம் பிடுங்கி தள்ளும்.

ஏம்பா எனக்கு இப்படி பெயர் வச்சீங்க?

என்னடா சொல்றே ? அது நம்ம குலதெய்வத்தோட பேராச்சே ராசா . நிறைய படிப்பும், தீர்க்காயுசும் கொடுக்கணும் நேர்ந்து கிட்டு வச்சிருக்கேன். அப்படியெல்லாம் நினைக்காதேப்பா . சாமி குத்தமாயிடும்.

என் நண்பனின் தந்தை கோர்ட்டில் வேலை பார்க்கிறார். அவரிடம் பெயரை எப்படி மாற்ற வேண்டும் என்று ஒரு நாள் கேட்டேன்.

நீ மைனராச்சேப்பா . உங்கப்பா ஒரு மனு கொடுத்தா மாத்திடலாம்.

அப்பாவிற்கு கடுமையான கோபம் வந்தது. புத்தி கெட்டு போச்சா உனக்கு. படிக்கிற வயசுல இந்த மாதிரியெல்லாம் எவன் கத்து கொடுத்தான். பளாரென்று அறை விழுந்ததுதான் மிச்சம். சாப்பிடாமல் முஞ்சியை தூக்கி வைத்து கொள்ளுதல் என்று சகல அஸ்திரங்களுக்கும் அப்பா அசரவில்லை. வெள்ளை பேப்பரில் ஸ்டைலான பெயர்களை எழுதி பார்க்க தொடங்கியிருந்தேன். படிப்பு முடிச்சு வேலைக்கு போயிட்டா, அப்பா என்ன ! ஆண்டவன் கூட எதுவும் கேக்க முடியாதில்லை. அதற்காக பெயரை இப்போதே தேர்ந்தெடுக்க ஆரம்பித்தேன்.

உன் பெயர் என்ன ?

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது அவள் கேட்டாள். முதலாம் ஆண்டு மாணவி அவள். மிக அழகான பெயர் அவளுக்கு. என்னை வெட்கம் பிடுங்கியது. வீட்டில் வைத்த பெயர் இது. ஒரு வேண்டுதலுக்காக வைத்திருக்கிறார்கள். பதினெட்டு வயது வரை எனக்கு கண்டம் இருக்காம். அதற்கு பிறகு மாற்றிக் கொள்ளலாம் என்று பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள் என்று அவளிடம் சொன்னேன்.

அது சரி. நீ இன்னும் பெயரை சொல்லவில்லையே !

உனக்கு.. சாரி உங்களுக்கு எல்லாம் பரிச்சயமான பெயர்தான். இப்ப கூட நீ என் பெயரைதான் மஞ்சள் நிறத்தில் கட்டியிருக்கிறாய் என்று கவிதை போல் உளறினேன் .அவளுக்கு சட்டென்று புரியவில்லை. கொஞ்சம் யோசித்து “பாவாடை” என்றாள்.

இல்லை பாவாடைசாமி. நான் வேறு பெயருக்கு மாறும் வரை நீ என்னை சாமி என்று கூப்பிடேன் .

இல்லை. எனக்கு பாவாடைதான் பிடித்திருக்கிறது.

அப்படியானால் உன்னை எனக்கு பிடிக்காது.

சே..பெயரால் என் முதல் காதலுக்கான வாய்ப்பு போனது. அப்பாவிற்கு வயசாகி விட்டது. நான் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு போக ஆரம்பித்தேன்.

அப்பா .. நான் பெயர் மாற்றிக் கொள்ளலாம் என்று உத்தேசித்திருக்கிறேன்.

என்னவாது பண்ணு. ஆனா நான் பாவாடைன்னுதான் கூப்பிடுவேன். இல்லைன்னா கூப்பிடவே மாட்டேன்.

ஒரு சுப நாளில் பெயரை மாற்றிக்கொண்டேன். பத்திரிக்கையில் விளம்பரமும் கொடுத்தேன். ஷ் ல் முடியும் பெயர் வேண்டும் என்று ஆசை.(அவரிடம் சொன்னதற்கு ”உஷ்” என்று வைத்துக்கொள் என்று சொன்னார்).

தினேஷ் ! வீ ஆர் காலிங் ஃப்ரம்.. என்று ஆரம்பித்து ஏகப்பட்ட அழைப்புகள். கொஞ்சம்,கொஞ்சமாக பாவாடை மறைய ஆரம்பித்தது. ஊரில் எவனாவது பாவாடை என்று சொன்னால் அடிதான். இதுவரை மூணு, நாலு பற்கள் உடைபட்டது. அப்பாவும் மறைந்து போனார்.கூட வேலை பார்க்கும் ரெஜினாவை காதலித்து (பெயருக்காகவே) திருமணமாகி விட்டது. ஒரு குழந்தை. சென்னையில் செட்டிலாகி விட்டேன். குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக ஊருக்கு வந்திருக்கிறேன்.

ஊர் சுத்தமாக ! மாறியிருக்கிறது. ஒரு ரவுண்டு அடிக்க கிளம்பினேன். டாக்டர் சைக்கிள் ஓட்டுங்கள். உடம்புக்கு நல்லது என்று சொன்னது நியாபகம் வந்தது. மாது கடையில் வாடகை சைக்கிள் எடுக்கும்போது ஏற இறங்க பார்த்தான்.

என்ன மாது . தெரியலை என்னை?தினேஷ் .

சட்டுன்னு தெரியலை. இந்த புது வண்டியை எடுத்துக்கங்க .

சென்னையில் இது போல் சைக்கிள் ஓட்டமுடியும் என்று தோணவில்லை. மனைவியையும் கேரியரில் உட்கார வைத்துக் கொண்டேன். கோவிலுக்கு போனோம்.

இந்த சாமி பேர் என்னங்க என்றாள் மனைவி.

பேர்ல என்ன இருக்கு . எல்லாம் சாமிதான். இந்த பதிலுக்கு கொஞ்சம் குழம்பி போய் என்னை பார்த்தாள். வீட்டில் அவளை இறக்கி விட்டு விட்டு சைக்கிளை விடப் போனேன்.

2 மணிநேரம். பத்து ரூவா என்றான் சைக்கிள் கடை மாது.

கொடுத்து விட்டு திரும்பும்போது அந்த எண்ணம் தோன்றியது. நோட்டில் என் பெயரை எப்படி எழுதியிருப்பான் ? தினேஷ் என்றா பாவாடை என்றா? வாங்கி பார்த்தேன்.

“தெரியும்” என்று எழுதியிருந்தான் பாவி .

32 comments:

எறும்பு said...

1st

எறும்பு said...

எங்க ஊர்லயும் இதே பிரச்சனைதாங்க.. ஒண்ணு குலதெய்வம் பேரு வைப்பாங்க இல்ல தாத்தா பாட்டி பேரு... ராஜகோபால் எங்க தாத்தன் பேருதான்..

:)

மணிஜி said...

தமிழ்மணம் தகராறு பண்ணுது..உலை கொதிக்குமான்னு தெரியலையே ! பாவாடைசாமிக்குத்தான் நேர்ந்துக்கணும் போல !

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//“தெரியும்” என்று எழுதியிருந்தான் பாவி .//
:-)))))))

ராமலக்ஷ்மி said...

முடித்த விதத்தை ரசித்தேன்:))!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

.உலை கொதிக்குமான்னு தெரியலையே ! பாவாடைசாமிக்குத்தான் நேர்ந்துக்கணும் //
ஹை! இதுக்கு மட்டும் பாவாடைசாமி க்கு நேர்ந்துக்கணுமா? ஆனா gazette ல பேர் மாத்தலாம்னு கொண்டு வந்தவனுக்கு பொங்க வைச்சு கும்புடணும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))

பிரபாகர் said...

தெரியும்... நல்ல முடிவுண்ணே!

பிரபாகர்.

எறும்பு said...

//அவள்கள் எதிரில் வேண்டுமென்றே அந்த பெயரை சொல்லி நண்பர்கள் அழைக்கும்போது அவமானம் பிடுங்கி தள்ளும்//

பதிவர் நண்பர்கள் உங்க பையன் முன்னாடி தண்டோரன்னு கூப்பிடதால்தான்,மணிஜீன்னு மாத்திகிடீங்கன்னு இப்பதான் ஒரு பிரபல பதிவர் சாட்ல சொன்னாரு.... மெய்யாலுமா?!?!

;))

vasu balaji said...

இப்படி முடிப்பீங்கன்னு ‘தெரியலை’:))

பத்மா said...

பெயரில் என்ன இருக்கு ?
a rose is a rose is a rose

butterfly Surya said...

சூப்பர்.

ஐயா, சொன்னது போல முடிவு தெரியலை.

ஆனா உங்க பாணியில ஏதாவது செய்வீஙகன்னு ”தெரியும்”

butterfly Surya said...

நீங்க நேந்துகிட்டது வீண்போகலை.

உலை கொதிச்சிருச்சு..

8/8

இராகவன் நைஜிரியா said...

”தெரியும்” ரொம்ப நல்லாயிருக்கே...

Raju said...

\\எறும்பு said...
பதிவர் நண்பர்கள் உங்க பையன் முன்னாடி தண்டோரன்னு கூப்பிடதால்தான்,மணிஜீன்னு மாத்திகிடீங்கன்னு இப்பதான் ஒரு பிரபல பதிவர் சாட்ல சொன்னாரு.... மெய்யாலுமா?!?!\\

அவருக்கு பையனா..?
குதூகலமா இருக்குற குடும்பத்துல கும்மியடிச்சுட்டு போயிருவீங்க போலயேண்ணே..!

சைவகொத்துப்பரோட்டா said...

தெரியும், எனக்கு முதலில் தெரியாம போச்சே!!

அகநாழிகை said...

நல்லாயிருக்கு.

என் நண்பரோட மனைவி பெயர் வெயிலுகாந்தாள்.
இப்போ மாத்திட்டாங்க.

Kumky said...

தலைவரே..,
ப்ளோ அருமையா இருக்கு...

மக்கள்ஸ் நேரடி அர்த்தங்களை தாண்டி யோசிக்க மாட்டேனென்கிறார்கள்..அல்லது அப்படி இல்லையோ...

பேரில் ஆரம்பித்த சங்கடங்களையும் சண்டைகளையும் அனேகம் வாழ்வில் பார்த்தும் கடந்தும் வந்திருக்கிறோம்..

பேரில் என்ன இருக்கிறது...
பேரில் என்னதான் இல்லை...
பேரேவா எல்லாம்..
பேரே இல்லையென்றால் என்ன..
பேரா அந்த மொத்தமும்...
பேர்தான் என்ன...

சரி விடுங்க..

நானும் பேரை மாத்த யோசித்தவன்தான்..
மேலே உள்ள கேள்விகள் தோன்றியதால் விட்டுவிட்டேன்...

Kumky said...

அவருக்கு பையனா..?

வீட்ல ப்ளாக் யாராச்சும் படிக்கறாங்களா தல...?

Vidhoosh said...

:))

//உலை கொதிக்குமான்னு தெரியலையே ! //

ஏன்? நல்லா வெந்துதானே இருக்கு. அருமைங்க.. சுவை.

Jerry Eshananda said...

மணி ஜீக்கு,வாழ்த்துகளை தண்டோரா போட்டு சொல்லிக்குறேன்

உண்மைத்தமிழன் said...

நச்சுன்னு முடிச்சிருக்கீங்க மணிஜி..!

Ashok D said...

நல்லாயிருந்தது தல... உங்க நடைக்குள்ள நுழையறதுக்குதான் கஷ்டம்.. நுழைந்சிட்டா.. ரோலர் கொஸ்டர் ரைடுதான்... செம்ம ஸ்பீட்டு...ம்ச்சின்னு சொல்லமுடியாது... மாமான்னு சொல்லிகிறேன்... :)))

Unknown said...

முடிவு சூப்பரு.. :))

அன்பரசன் said...

"தெரியும்" அருமையான பெயர்.

கலகலப்ரியா said...

பெயர்ச்சொல் - 'தெரியும்'.. க்ளாஸ் மணிஜி..!

Cable சங்கர் said...

:)

பா.ராஜாராம் said...

ஒரு கவிதையை எப்படி முடிக்கலாம்ன்னு மன்றாடுவேன்.அசால்ட்டா,ஒரு சிறு கதையை கவிதையா முடிச்சிட்டீங்களே மணிஜி.உங்களை திட்டனும் போல் இருக்கு. :-)

Hai said...

உண்மையில் பிரச்சினை உங்களது பெயரைப் பற்றியது அல்ல அது உங்களுக்கான பிரகுச்சினை. ஆனால் மற்றவர்களுக்கு நீங்கள் தங்களுடன் இருக்கிறீர்களா இலை எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள் என்பதுவே முக்கியம். அஸ்ஸாமிய மொழியில் ஒரு பழமொழி இருக்கிறது. கண்ணில் இருந்து தூரமாக்ச் செல்லக் செல்ல நெஞ்சில் இருந்தும் தூரச் செல்கிறாய். இன்னும் கொஞ்சம் ஆண்டுகளுக்குப் பிறகு செல்வீர்கலேயானால் நீங்க வெளியூரா என்றே கேட்பார்கள். இவை பொருள்தேட வெளியூர் செல்பவர்களின் சம்பாத்தியம்...

மரா said...

அருமையான நடை..சீக்கிரம் ‘கிழக்கே’ உதிக்க வாழ்த்துக்கள்.

மணிஜி said...

நண்பர்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்... எறும்பு ஒன்லி டாட்டர் !(குருவி கூட்டில் குண்டு வைக்காதேப்பா)

R.Gopi said...

//உலை கொதிக்குமான்னு தெரியலையே !//

*******

அட இன்னா தலீவா.... அதான் நல்லா கொதிச்சுருக்கே... சூப்பர் பக்குவம் தண்டோரா...மணிஜீ.... இல்ல.... “தெரியும்”......