Friday, March 19, 2010

கடைசி பெட்டியிலிருந்து சில குறிப்புகள் .......









தண்ணீர் , நீல்லூ , வெள்ளம் , பானி, h2o.. உடலிலும், இவ்வுலகிலும் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் திரவம் !!

முரட்டு கித்தான் பை. அழுக்கேறி இன்னும் கனமாயிருந்தது. பை அழுக்கில் என்ன இருக்கிறது? இருக்கும் இரண்டு ஜதை ஆடைகளும், மனமும் கூடத்தான் ..

போறதுன்னு முடிவு பண்ணியாச்சா? அப்படின்னா எங்கே ?

ஆமாம். ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை. வாழ்வதில் அவ்வளவாக விருப்பமில்லை. அதற்காக சாகவும் ஆசையில்லை. கால் போகும் போக்கில் போய் எங்கேயாவது கரைந்திட உத்தேசம்.

எதிரில் யாருமில்லை. என்னுடன் பேச யார் இருக்கிறார் ? நானே என்னுடன் ! தோல்விகள்..

ரயில் நிலையம் . வழக்கத்துக்கு மாறாக இருந்தது. அமைதிதான் அமானுஷ்யமா என்ன? இந்த பெருங்கூட்டமும் அதே உணர்வைத்தான் தருகிறது.

இப்போது வரவிருக்கும் ரயில் எந்த ஊருக்கு செல்கிறது ?

நீங்கள் எங்கே செல்ல வேண்டும் ?

இந்த வண்டி நிற்கும் கடைசி நிறுத்தத்திற்கு !

வினோதமாக பார்க்கப்பட்டேன். எல்லோருமே இப்படித்தான் பார்க்கிறார்கள் . நான் நடந்து கொள்ளும் விதம் காரணமாக இருக்கலாம். ஒரு காக்கி வில்ஸை பற்ற வைத்துக்கொண்டேன். பீடி ! அவளுக்கு இந்த நாற்றம் பிடிக்கும். ஆனால் பற்ற வைக்காத பீடியில் மணம் நன்றாக இருக்கிறது என்று சொல்வாள். நாளை கடிதம் அவள் கையில் கிடைக்கும். என்ன நினைப்பாள் ? கோழையென்றா?

பெரும் சம்சாரியைப்போல் ரயில் பிளாட்பாரத்தில் நுழைந்தது. கோஷம் காதைப்பிளக்கிறது. இரண்டே அன்ரிசர்வ்டு பெட்டிகள்தான். கடைசி பெட்டிக்கு ஓடுகிறேன். கூடவே பெருங்கூட்டமும் . எல்லாப் பெட்டிகளிலும் மனிதர்கள் காய்த்து தொங்குகிறார்கள் . யாரோ சிலர் என்னையும் உள்ளே தள்ளிவிட்டனர். சாமான்களுக்கு மாத்திரம் என்று எழுதப்பட்டிருந்த பலகையில் இருபது நபர்கள் . நானும் ஒருவனாய். ரயில் புறப்படுகிறது. மீண்டும் துதி கோஷங்கள் . காதைப் பொத்திக்கொள்கிறேன். அருகிலிருப்பவன் வினோதமாய் பார்க்கிறான். ஏதோ கேட்கிறான். புரியாத மொழி ! கீழே ஒரு தம்பதியினர். அவள் மடியில் ஒரு குழந்தை. என்னைப்பார்த்து சிரிக்கிறது. நான் முகத்தை திருப்பிக் கொள்கிறேன் . ஏமாற்றம் அதற்கு புரியுமா ?

நான் எதிர்பார்த்தது நடந்தது ஒரேமுறைதான். அவள் ! . ஆனாலும் உபயோகமில்லை. யதார்த்தை புரிந்து எதிர்பார்க்க வேண்டும் என்று நான் புரிந்து கொள்வதற்குள் காலம் கடந்து விட்டது. நீரை அள்ளி தெறித்தாளே ! அந்த படித்துறைக்கு பயணிக்கிறேன்.

கிடைக்கிற வேலைக்கு போங்க . என்னை கூட்டிக்கங்க . அதுக்கப்புறம் உங்களுக்காக பட்டினி என்ன ? சாகக் கூட தயார் . உங்க லட்சியம் நிறைவேறணும். என்ன ?

ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நிற்கிறது. இருட்டு. கடைசி பெட்டி பிளாட்பாரத்தை விட்டு வெளியே நிற்கிறது. பசிக்கிறது. காபி, டீ, சமோசா ஒன்றும் வரவில்லை. கால் துண்டு பிஸ்கெட்டை அந்த குழந்தை சப்பிக் கொண்டிருந்தது. அதன் தாய் என்னமோ சொல்லி கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். குழந்தைக்கு விக்கல் எடுக்கிறது . தண்ணீர் புகட்டுகிறாள் .

மீண்டும் கோஷங்கள் . பஜனைப்பாடல்கள். ரயில் போய்க் கொண்டே இருக்கிறது. 72 நபர்கள் பயணம் செய்ய வேண்டிய பெட்டியில் 200 பேர்கள் . எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீராவது குடித்தால் போதும் . அந்த தாய் பாட்டிலை நீட்டுகிறாள் . வாங்கி குடிக்கிறேன். மீண்டும் குழந்தைக்கு விக்கல். இப்போது லேசாக அழ ஆரம்பிக்கிறது.

அடுத்த ஸ்டேஷனில் தண்ணீர் பிடித்து தருகிறேன் என் று சொல்கிறேன். குழந்தை அழுகை குறைந்து என்னைப் பார்த்து லேசாக சிரிக்கிறது. கூட்டம் தொண்டை வறண்டு தண்ணீரை வெறித்தனமாக குடிக்கிறது. எந்த ஸ்டேஷனிலும் வண்டி நிற்கவில்லை. நின்றாலும் இந்த கூட்டத்திலிருந்து வெளியில் போய் விட்டு வருவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

சுற்றிலும் பார்க்கிறேன். வெறி கொண்ட முகங்கள் . கையில் ஏதோ ஆயுதங்கள் . என்ன செய்யப் போகிறார்கள் ? எங்கே போகிறார்கள் ? அரைகுறை பாஷையில் கேட்கிறேன் . பெருஞ்சிரிப்பு .

ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு... ஜெய்...

குழந்தையிடம் மீண்டும் சிணுங்கல் . விக்கல் எடுக்கிறது. துணியை விலக்கி அதன் முகத்தோடு சேர்த்து பொத்திக் கொள்கிறாள் . நான் இறங்கினேன் . தோள்களில் நடந்து கழிவறைக்கு போகிறேன்.

பானி நைய் பாய்..

தண்ணி வரலைப்பா...

பகிரென்றது. ஒரு நான்கு சொட்டு இருந்தால் போதுமே .

இப்ப ஒரு ஸ்டேஷன் வரும் . அங்க பிடிக்கலாம்பா . எல்லாருமே நாக்கு வறண்டுதான் கிடக்கிறோம்.

என்னிடத்துக்கு திரும்புகிறேன். குழந்தை லேசான உறக்கத்தில் சிரிக்கிறது.

குழந்தை தூங்கறப்போ சுவாமி விளையாட்டு காட்டுவார்டா. பாட்டி சொன்னது நினைவிற்கு வருகிறது .

பாரதமாதாகீ ஜேய்..ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு ஜெய்..

அவள் அலறுகிறாள் . அந்த தந்தை உலுக்குகிறான். ராமச்சந்திரமூர்த்தி தண்ணீர் கொண்டு வரவில்லை. குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் . விக்கல் இல்லை. விளையாட்டை ரசித்துக் கொண்டே சிரிப்பு உறைந்திருக்க....



28 comments:

Vidhoosh said...

பகீரென்ற உணர்வு வந்து சிந்திப்பதை நிறுத்தி விட்டது. :( என்ற இந்த ஸ்மைலி எனக்கு ஏற்பட்ட நடுக்க உணர்வை முழுதாய் பிரதிபலிக்க வில்லை.. காலையிலேயே இதை படித்தது என் தவறோ..

vasu balaji said...

முடிக்காம முடிச்சிட்டீங்களே சார் கதையை:((

Paleo God said...

கொன்னுட்டீங்க(ளே)!!!
:(

VISA said...

கதையை காட்சிபடுத்துதல் என்ற கலை உங்களுக்கு ஜோராக வருகிறது. சிறு சிறு வாசகங்களால் உணர்ச்சிகளை ஒரு கதாபாத்திரத்துக்குள் திணிக்கும் திறன் அலாதி. வியக்கிறேன். இதே கதையை நான் எழுத நினைத்திருந்தால் பத்து பக்கத்துக்கு எழுதி பதறாக்கியிருப்பேன். அருமை தலைவா!!!

எறும்பு said...

வயசு பொண்ணு நாளுக்கு நாள் மெருகேறுவதை போல் உங்க எழுத்தும் நாளுக்கு நாள்......

கண்ணகி said...

சரளமான எழுத்துநடை,,,

எறும்பு said...

//பாரதமாதாகீ ஜேய்..ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு ஜெய்..//

அண்ணே ஒரே ராம் சேவக் கோஷமா இருக்கே... முடிவு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமா?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நீங்களே சொல்லிடுங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அந்த தாயின் கண்களில் கரைபுரளுகிறது நீர்....
(அல்லது)
காய்த்து பிதுங்கிக் கொண்டிருக்கும் கூட்டம்..உள்ளே வர நெருக்குகிறது...வெளியே மழைத் தூற ஆரம்பித்ததால்

பா.ராஜாராம் said...

// Vidhoosh said...
பகீரென்ற உணர்வு வந்து சிந்திப்பதை நிறுத்தி விட்டது. :( என்ற இந்த ஸ்மைலி எனக்கு ஏற்பட்ட நடுக்க உணர்வை முழுதாய் பிரதிபலிக்க வில்லை.. //

// VISA said...
கதையை காட்சிபடுத்துதல் என்ற கலை உங்களுக்கு ஜோராக வருகிறது. சிறு சிறு வாசகங்களால் உணர்ச்சிகளை ஒரு கதாபாத்திரத்துக்குள் திணிக்கும் திறன் அலாதி. வியக்கிறேன்//

// எறும்பு said...

வயசு பொண்ணு நாளுக்கு நாள் மெருகேறுவதை போல் உங்க எழுத்தும் நாளுக்கு நாள்......//



எனக்கும் இந்த உணர்வெல்லாம் வந்தது என்பதும் ஒரு உணர்வுதானே மணிஜி?

அகநாழிகை said...

ராம் சொன்னதைவிட உங்கள் வெளிப்படுத்தல் அழகா வந்திருக்கு மணிஜி. ராம் சொன்னதை நானும் கேட்டதால் இதை சொல்கிறேன். ஒரு கதையை எழுத்தில் விவரிப்பது வேறு, பேச்சில் உணரச் செய்வது வேறு. கதையை பல பேர் சரியாக புரிந்திருக்கிறார்கள். கடைசி வரியின் நுட்பமும், வாசிப்பவனின் கவனமான அவதானிப்புமே இக்கதையில் நீங்கள் செய்திருக்கும் முக்கியமான விஷயமாக கருதுகிறேன்.

டக்கால்டி said...

முடிவு சொல்லுற அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்ல ஜி...
நீங்களே சீக்கிரம் முடிவ சொல்லிடுங்க...
ஆரம்பம் அசத்தல்.. உலகை வெறுத்த சாமானிய மனிதனை கூட குழந்தையின் சிரிப்பு கவர்ந்து விடுகிறது.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எனது புரிதல் சரிதானா என அறிந்து கொள்ள கதையை மறுபடியும் வாசித்தேன். அதிர்ந்தது இதயம்.

மங்குனி அமைச்சர் said...

//கொண்டிருக்கிறார் . விக்கல் இல்லை. விளையாட்டை ரசித்துக் கொண்டே சிரிப்பு உறைந்திருக்க....//

டக் என்று விழித்துக்கொண்டேன் ,வியர்த்து கொட்டியது, ஒரு ஜக்கு நிறைய நீர் குடித்தேன் , சே.... என்ன கனவு , மணி பார்த்தேன் காலை 4 :15 , விடியகாலை கண்ட கனவு பலிக்காதுன்னு கேள்வி பட்டு இருக்கிறேன் , பக்கத்தில் என்னவள் நைட்டி பட்டன் போட மறந்து தூங்கி கொண்டிருந்தாள் .......

மணிஜி said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே !
எறும்பு சரியாக யூகித்திருக்கிறார். கோத்ராவேதான்.. மீண்டும் சந்திப்போம்..நன்றி...

உண்மைத்தமிழன் said...

முடியலை..!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கவிதையான கதை. உண்மையின் நிதர்சனம் சுடுகிறது

Unknown said...

லேட்டா பதிவு படிக்க வந்தா இப்பிடித்தான்.. எனக்கு ஏற்பட்ட எல்லா உணர்வுகளையும் எல்லாரும் சொல்லிட்டாங்க.

ராமச்சந்திர மூர்த்தி கி ஜெய்யும் ரயில் பெட்டியும் கோத்ராவை நினைவு படுத்தின. போதாக்குறைக்கு நீருக்கு எதிர் வினை என்ற உங்கள் குறிப்பு வேறு

Unknown said...

// அமைதிதான் அனுமாஷ்யமா என்ன? //

அமானுஷ்யம்??

சலீகா said...

ரத்தம் கூட தாகம் தணிக்குமா???
சிரிக்கும் குழந்தையின்
பச்சை ரத்தம் பருகியபின்...
தாகம் தணிந்தவர்களும் தந்தைமார்கள்தாம்.
செல்லும்வழியில் தவறாமல் வாங்கிச்சென்றனர்
அவர்தம் குழந்தைகள்
காலையில் கேட்ட
உப்புப்பிஸ்கெட்டும்
சிலேட்டுப் பென்சிலும்.

கலகலப்ரியா said...

விக்கித்....!

மணிஜி said...

முகிலன் நன்றி....ஆனால் நான் வேறு ஒரு முடிவு என்று சொன்னதுதான் கோத்ரா.முதலில் வருவது கரசேவை...

மணிஜி said...

//ஷாசா said...

ரத்தம் கூட தாகம் தணிக்குமா???
சிரிக்கும் குழந்தையின்
பச்சை ரத்தம் பருகியபின்...
தாகம் தணிந்தவர்களும் தந்தைமார்கள்தாம்.
செல்லும்வழியில் தவறாமல் வாங்கிச்சென்றனர்
அவர்தம் குழந்தைகள்
காலையில் கேட்ட
உப்புப்பிஸ்கெட்டும்
சிலேட்டுப் பென்சிலும்.//

ஷாசா..இந்த புனைவில் இன்னொரு கோணமா? உண்மைகள் எப்போதும் ஆச்சர்யமே! நன்றி....

மணிஜி said...

முகில் நன்றி..திருத்திவிட்டேன்..

R.Gopi said...

பிரமாதமான விவரிப்பு...

கதையில் முடிவில் நானும் அந்த குழந்தை போலவே விக்கித்து திகைத்து விட்டேன்...

வாழ்த்துக்கள் மணிஜீ....

காட்சி said...

வணக்கம் தோழரே, ராம். இச்சம்பவ அடிப்படையில் நான் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னிடம் முறையாக ஒரு வார்த்தைக் கேட்டிருக்கலாம். முடிந்தால் உங்கள் பதிவை நீக்கவும். நன்றி,ராம்

meens said...

எங்கே என்று தெரியாமல் வண்டி கடைசியாக நிற்கும் இடத்துக்கு போறது நு முடிவு பண்ணி புறப்பட்டவன் --"ராமச்சந்திர மூர்த்தி தண்ணீர் தராமல் பெற்றவருக்கு கண்ணீர் தந்து கடைசி நிறுத்தத்தில் இறக்கப்பட்ட குழந்தையுடன் விளையாடுவதை பார்த்து திரும்பி விட்டான் புறப்பட்டவன் --தன்னால் முடிந்த அளவு பிறருக்கு தாகம் தீர்க்கும் பணி ஏற்க .

meens said...

hi