Thursday, March 25, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்........ 7



என் சில அனுபவங்களை கதையாக எழுதுகையில் அதில் உலக்ஸ் என்ற பாத்திரம் வரும். அவனுக்கு ஒரு வருத்தம் . ஏன் மாப்ளை என் போட்டோவையே போட மாட்டேங்கிறன்னு கேட்டான். போட்டேன்டா மாப்ளை . கேபிள் சங்கர் , ரமேஷ் வைத்யா, அகநாழிகை வாசு ஆகியோருக்கு உலக்ஸுடன் பரிச்சயம் உண்டு. மிக எளிமையான, வெகுளியான நண்பன் அவன்.


மெத்த படித்த மேதாவி நண்பர் அவர் . படித்த என்றால் ஆங்கில எழுத்துக்களை அடுக்கி போட்டுக் கொள்வது இல்லை. இலக்கியம் வகையறாக்களை . நாம் படித்திராத ஒரு எழுத்தாளனைப் பற்றியோ அல்லது எதாவது கவிதையைப் பற்றியோ நம்மிடம் சந்தேகம் கேட்பார் . நடுநிசியில் கூட . (நீங்க வெறும் தாஸா , இல்லை லார்டு லபக்தாஸா என்ற ரீதியில் ) . சும்மா ஈகோவை உரசிப்பார்ப்பதில் ஒரு ஆனந்தம். அவருடன் ஒரு சிறிய உரையாடல் .

தலைவரே . என்னை விட அறிவாளி யாரும் இருக்க முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் ஒரு பிரச்சனைக்கு செகண்டு ஒப்பினீயன் உங்க கிட்ட கேக்கணும் - அவர்.

இருங்க. முதலில் நீங்க அறிவாளியாங்கிறதுக்கே செகண்டு ஒப்பினீயன் தேவைப்படும் போல இருக்கே . (பழி !)

அறிவாளி ,புத்திசாலி, படிப்பாளி,படைப்பாளி என்ன வித்தியாசம் சொல்லலாம் ?


மதுரை அண்ணன் உடைத்து சொல்லிவிட்டார் .”கலைஞரைத் தவிர யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது” என்று. சிக்கல் தீர்ந்தது தலைவருக்கு. பட்டாபிஷேகம் நடக்கும்போது அண்ணனை மூலவராக்கி விட்டு, தளபதியை உற்சவராக்கினால் போதும். அவர் பாட்டுக்கு எழுத்துப் பணியை தொடரலாம் . (ஐயோ கொல்றாங்களே..)


மொபைல் அடித்தது . சாமி. வழக்கமாக முடி வெட்டும் நண்பர். சார் ஃப்ரீயா இருக்கு . வந்துடுறீங்களா? (மொபைல் எவ்வளவு செளகரியம் !)

குமாருக்கு போன் செய்தேன்.

குமார் . துணி எடுக்க வா . ஒரு செட் அர்ஜெண்ட் .

மீண்டும் என் மொபைல் அடித்தது.

சார் வீட்டுல இருக்கீங்களா?

நீங்க யாரு ?

நேர்ல வர்றேன் சார். பக்கத்துலதான் இருக்கேன்.

நீங்க யாருங்க ?

சிட்டி பேங்க் . கிரெடிட் கார்டு கலெக்‌ஷன் டிவிஷன் .

சே! இம்சை !!


இன்னொரு போன் வந்தது. (இப்ப இதான் லேட்டஸ்ட் ட்ரெண்டு . போன் இல்லைன்னா மெயில்)

நான் உங்க முதன்மையான வாசகன் சார் !

சமயங்களில் எழுதவும் செய்வீங்களோ ? (அட! அவர் இல்லீங்க)

உங்களுக்கு மாதுன்னா ரொம்ப பிடிக்குமோ ?

ஏன் கால் இல்லைன்னா கூட பிடிக்குமே .

இல்லை உங்கள் கதைகளில் ..

நிறுத்துங்க. முதல்ல கதைன்னு ஒத்துகிட்டதுக்கு உங்க காலை கொடுங்க !

அதில்லை சார். கிட்ட தட்ட எல்லாக் கதைகளிலும் மாதுன்னு ஒரு பேர் வருதே. அதான் .

சப்பை மேட்டர் . ( கவனிக்கவும்... இந்த வார்த்தை வெட்டி ஒட்ட உதவலாம் )


இயக்குனர் கற்றது தமிழ் ராம் சொன்ன ஒரு சம்பவத்தை “கடைசி பெட்டியிலிருந்து சில குறிப்புகள் “ என்று புனைவாக்கியிருந்தேன் . அதைஅவர் படிக்க லிங்க் கொடுத்தேன். படித்து விட்டு அழைத்தார் . நல்லாயிருக்கு தோழர் . நான் அந்த சம்பவத்தை வைத்து ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதை முடிந்தால் நீக்கி விடுங்களேன் என்றார் . நீக்கி விட்டேன். ராம் காட்சி என்ற பெயரில் வலைமனையில் எழுதுகிறார் . எல்லாம் ஏற்புடைய கருத்துக்கள் இல்லை. என்றாலும் அவரின் வலிமையான எழுத்துக்களுக்காக படிக்கலாம். படிங்களேன் . சனிக்கிழமை சந்திப்புக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் .பார்க்கலாம் .


பாஸ்கர் சக்தியின் சிறுகதைகளை துண்டு துண்டாக படித்திருந்தாலும், அவரின் முழு தொகுப்பான கனக துர்கா வை (அவர் அன்பு கையெழுத்துடன்) காசு கொடுத்து வாங்கி படித்தேன் . எளிமையான எழுத்து . இயல்பாக தெறிக்கும் நகைச்சுவை . எனக்கு இரண்டு கதைகள் மிகவும் பிடித்திருந்தது . ”ஏழு நாள் சந்திரன்” என்றொரு சிறுகதை . சித்தப்பா என்ற குணசித்திரம்தான் இந்த கதையில் மையம் . “புடிச்சா பண்ணிப்பாத்துரணும் . புடிக்கலின்னா விட்டுட்டு போறோம்” இதான் அவர் பாத்திரத்தின் தன்மை. அண்ணன் மகனுடன் அவர் காட்டும் சிநேகிதம் , ஊர் குடியானவர்களிடம் அவரின் தோழமையும் ,கரிசனமும் . அண்ணனிடம் மூளும் பகை . அருமையான சித்தரிப்புகள் . பழகின மாடு போல் சீரான நடை .

மற்றொரு சிறுகதை “அழகர் சாமியின் குதிரை “ ஒரு அருமையான மண் மணம் கமழும் கிராமத்து கதை . சாமியின் மரக்குதிரை களவு போகிறது . ஊள்ளூர் கோடாங்கியை புறக்கணித்து விட்டு மலையாள குறி சொல்பவனை அழைத்து வருகிறார்கள் . காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கிறார்கள் . மலையாள குறிகாரன் யதேச்சையாக ஏதோ சொல்ல , ஒரு நிஜ மட்ட குதிரை ஊருக்குள் வருகிறது . பின்னாடியே அந்த குதிரைக்கு சொந்தக்காரனும் வருகிறான் . ஊர் கோடாங்கியின் மகளுக்கும், ஒரு இளவட்டத்துக்கும் காதல் டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் சினிமாவுக்கு ஏற்ற கதை. சமீபத்தில் வம்சி வெளியீட்டு விழாவில் பாஸ்கரை சந்தித்தேன் . இந்த கதையைப் பற்றி பேசும்போது சொன்னார். வெண்ணிலா கபடிக்குழு சுசீந்திரன் அதை திரைப்படமாக்குகிறாராம். ஸ்கிரிப்ட் பாஸ்கர் சக்தி. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நண்பரே . நிச்சயம் ஏமாற்றாத கதை.


நாளை முதல்
நீளத்தொடங்கும்
தனிமை
ஜெட்லாக் பற்றிய
மருமகளின் சந்தேகத்தை
தீர்த்துக் கொண்டிருக்கிறான்
ஒரே மகன்.

Wednesday, March 24, 2010

அழைக்கிறார்கள்..............




சும்மா அங்கிட்டும், இங்கிட்டும் திரிஞ்சிகிட்டேயிருக்கோம். கொஞ்சம் கூடி பேசலாமா? என்ன பேசலாம் ?


1. தமிழ்மணத்தில் எப்படி ஓட்டு வாங்குவது?
2. எப்படி குழு அமைப்பது?
3. ப்ளஸ், மைனஸ் மற்றும் இடைத்தேர்தல் ஓட்டு, அதாங்க கள்ள ஓட்டு எப்படி போடறது?
4. எதிர்பதிவுகள்/எதிர்வினை பற்றிய தெளிவுகள்

அன்பு வலைத்தமிழ் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே ! படைப்பாளி சொந்தங்களே !

நட்சத்திரப் பதிவர் உண்மைத்தமிழனார் அழைக்கிறார்...9840998725
கேபிளார் அழைக்கிறார் ... 9840332666
நரசிம்மார் அழைக்கிறார்.. 9841888663
அகநாழிகையார் அழைக்கிறார்.. 9994541010
லக்கியார் அழைக்கிறார்.... 9500061605
அதிஷார் அழைக்கிறார்...... 9500061607


யார்/ஆர்னு வருவதால் யார் இவர்கள் என்று கேட்கவில்லை. உங்களுக்கே தெரியும். இவர்கள் மோசமானவங்கள்ளேயே முக்கியமானவங்க ! மற்றும் உங்களை நீங்களே அழைத்துக் கொண்டும் வந்து விடுங்கள்.


சென்னைவாழ் பதிவர்களுக்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தும் அவசியம் வந்திருக்கிறது. அமைப்பின் பயன்கள் சில ;


1 . வலைப்பதிவர்களுக்கு பத்திரிக்கையாளர் அட்டை வழங்கப்படலாம். அதை வைத்துக் கொண்டு ஒன்வேயில் போகலாம். மாமூல் கொடுக்காமல் தப்பிக்கலாம்.

2. சினிமாக்களை ஓசியில் பார்க்கும் வாய்ப்பும், கவர் வாங்கி கொண்டு விமர்சனம் எழுதும் வாய்ப்பும் கிடைக்கலாம்.

3. வலைப்பதிவர் நலவாரியம் அமைக்கப்படலாம்.

4. சோழிங்கநல்லூரில் இலவச வீட்டு மனை கிடக்கப்பெறலாம்.

5. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கு கணையாழி விருதும் கிடைக்க வாய்ப்புண்டு.


நிகழ்ச்சி நிரல்
தேதி : 27.03.10/சனிக்கிழமை நேரம் : மாலை 5.30 இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் 6.முனுசாமி சாலை முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ் பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில், மேற்கு கே.கே.நகர் சென்னை –78


அன்புடன் அனைவரையும் வரவேற்கும்


Tuesday, March 23, 2010

பெயர்ச்சொல்...........


என் பெயர் கொஞ்சம் வித்தியாசமான பெயர். அதில் என்ன இருக்கிறது என்று கொஞ்சம் அலட்சியமாகத்தான் இருந்தேன். ஆனால் பெண்பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க ஆரம்பித்தவுடன் தான் அதைப் பற்றிய கவலை அதிகமானது. அவள்கள் எதிரில் வேண்டுமென்றே அந்த பெயரை சொல்லி நண்பர்கள் அழைக்கும்போது அவமானம் பிடுங்கி தள்ளும்.

ஏம்பா எனக்கு இப்படி பெயர் வச்சீங்க?

என்னடா சொல்றே ? அது நம்ம குலதெய்வத்தோட பேராச்சே ராசா . நிறைய படிப்பும், தீர்க்காயுசும் கொடுக்கணும் நேர்ந்து கிட்டு வச்சிருக்கேன். அப்படியெல்லாம் நினைக்காதேப்பா . சாமி குத்தமாயிடும்.

என் நண்பனின் தந்தை கோர்ட்டில் வேலை பார்க்கிறார். அவரிடம் பெயரை எப்படி மாற்ற வேண்டும் என்று ஒரு நாள் கேட்டேன்.

நீ மைனராச்சேப்பா . உங்கப்பா ஒரு மனு கொடுத்தா மாத்திடலாம்.

அப்பாவிற்கு கடுமையான கோபம் வந்தது. புத்தி கெட்டு போச்சா உனக்கு. படிக்கிற வயசுல இந்த மாதிரியெல்லாம் எவன் கத்து கொடுத்தான். பளாரென்று அறை விழுந்ததுதான் மிச்சம். சாப்பிடாமல் முஞ்சியை தூக்கி வைத்து கொள்ளுதல் என்று சகல அஸ்திரங்களுக்கும் அப்பா அசரவில்லை. வெள்ளை பேப்பரில் ஸ்டைலான பெயர்களை எழுதி பார்க்க தொடங்கியிருந்தேன். படிப்பு முடிச்சு வேலைக்கு போயிட்டா, அப்பா என்ன ! ஆண்டவன் கூட எதுவும் கேக்க முடியாதில்லை. அதற்காக பெயரை இப்போதே தேர்ந்தெடுக்க ஆரம்பித்தேன்.

உன் பெயர் என்ன ?

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது அவள் கேட்டாள். முதலாம் ஆண்டு மாணவி அவள். மிக அழகான பெயர் அவளுக்கு. என்னை வெட்கம் பிடுங்கியது. வீட்டில் வைத்த பெயர் இது. ஒரு வேண்டுதலுக்காக வைத்திருக்கிறார்கள். பதினெட்டு வயது வரை எனக்கு கண்டம் இருக்காம். அதற்கு பிறகு மாற்றிக் கொள்ளலாம் என்று பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள் என்று அவளிடம் சொன்னேன்.

அது சரி. நீ இன்னும் பெயரை சொல்லவில்லையே !

உனக்கு.. சாரி உங்களுக்கு எல்லாம் பரிச்சயமான பெயர்தான். இப்ப கூட நீ என் பெயரைதான் மஞ்சள் நிறத்தில் கட்டியிருக்கிறாய் என்று கவிதை போல் உளறினேன் .அவளுக்கு சட்டென்று புரியவில்லை. கொஞ்சம் யோசித்து “பாவாடை” என்றாள்.

இல்லை பாவாடைசாமி. நான் வேறு பெயருக்கு மாறும் வரை நீ என்னை சாமி என்று கூப்பிடேன் .

இல்லை. எனக்கு பாவாடைதான் பிடித்திருக்கிறது.

அப்படியானால் உன்னை எனக்கு பிடிக்காது.

சே..பெயரால் என் முதல் காதலுக்கான வாய்ப்பு போனது. அப்பாவிற்கு வயசாகி விட்டது. நான் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு போக ஆரம்பித்தேன்.

அப்பா .. நான் பெயர் மாற்றிக் கொள்ளலாம் என்று உத்தேசித்திருக்கிறேன்.

என்னவாது பண்ணு. ஆனா நான் பாவாடைன்னுதான் கூப்பிடுவேன். இல்லைன்னா கூப்பிடவே மாட்டேன்.

ஒரு சுப நாளில் பெயரை மாற்றிக்கொண்டேன். பத்திரிக்கையில் விளம்பரமும் கொடுத்தேன். ஷ் ல் முடியும் பெயர் வேண்டும் என்று ஆசை.(அவரிடம் சொன்னதற்கு ”உஷ்” என்று வைத்துக்கொள் என்று சொன்னார்).

தினேஷ் ! வீ ஆர் காலிங் ஃப்ரம்.. என்று ஆரம்பித்து ஏகப்பட்ட அழைப்புகள். கொஞ்சம்,கொஞ்சமாக பாவாடை மறைய ஆரம்பித்தது. ஊரில் எவனாவது பாவாடை என்று சொன்னால் அடிதான். இதுவரை மூணு, நாலு பற்கள் உடைபட்டது. அப்பாவும் மறைந்து போனார்.கூட வேலை பார்க்கும் ரெஜினாவை காதலித்து (பெயருக்காகவே) திருமணமாகி விட்டது. ஒரு குழந்தை. சென்னையில் செட்டிலாகி விட்டேன். குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக ஊருக்கு வந்திருக்கிறேன்.

ஊர் சுத்தமாக ! மாறியிருக்கிறது. ஒரு ரவுண்டு அடிக்க கிளம்பினேன். டாக்டர் சைக்கிள் ஓட்டுங்கள். உடம்புக்கு நல்லது என்று சொன்னது நியாபகம் வந்தது. மாது கடையில் வாடகை சைக்கிள் எடுக்கும்போது ஏற இறங்க பார்த்தான்.

என்ன மாது . தெரியலை என்னை?தினேஷ் .

சட்டுன்னு தெரியலை. இந்த புது வண்டியை எடுத்துக்கங்க .

சென்னையில் இது போல் சைக்கிள் ஓட்டமுடியும் என்று தோணவில்லை. மனைவியையும் கேரியரில் உட்கார வைத்துக் கொண்டேன். கோவிலுக்கு போனோம்.

இந்த சாமி பேர் என்னங்க என்றாள் மனைவி.

பேர்ல என்ன இருக்கு . எல்லாம் சாமிதான். இந்த பதிலுக்கு கொஞ்சம் குழம்பி போய் என்னை பார்த்தாள். வீட்டில் அவளை இறக்கி விட்டு விட்டு சைக்கிளை விடப் போனேன்.

2 மணிநேரம். பத்து ரூவா என்றான் சைக்கிள் கடை மாது.

கொடுத்து விட்டு திரும்பும்போது அந்த எண்ணம் தோன்றியது. நோட்டில் என் பெயரை எப்படி எழுதியிருப்பான் ? தினேஷ் என்றா பாவாடை என்றா? வாங்கி பார்த்தேன்.

“தெரியும்” என்று எழுதியிருந்தான் பாவி .

Saturday, March 20, 2010

இருத்தல்..........சில கோணங்கள்


இது சாதாரண வாழ்க்கை :

ராத்திரி முச்சூடும் அரசு தொலைக்காட்சியில் சினிமாவும், சாமியார் சங்கதிகளும் பார்த்து விட்டு தூங்கப்போனதால் ராக்காயிக்கு கண்ணெல்லாம் எரிந்தது. மெதுவாக எழுந்தாள். பகல் முச்சூடும் டாஸ்மாக்கில் குடித்து விட்டு தூங்கி கொண்டிருந்தான் முனுசாமி. பெரிய குறட்டை வேறு. சமைலறைக்கு போனாள். சமையலறை என்றால் தனியாக இல்லை. பத்துக்கு பத்தில் ஒரு தடுப்பு. அதாவது சின்ன குடிசைதான். அரசு கொடுத்த இலவச கேஸ் அடுப்பை பற்ற வைத்து அலுமினிய சட்டியில் தண்ணீரை ஊற்றினாள். கருப்பட்டியை இடித்து போட்டு வடிகட்டினாள். ஊதி, ஊதி குடித்தாள். வயிற்றை கலக்குவது போல் இருந்தது. விடிவதற்குள் கம்மா கரைக்கு போய் வர வேண்டும். வெளியில் வந்தாள். துணைக்கு ஆள் சேர்ந்தது. வேப்பங்குச்சியை ஒடித்து பல்லை விளக்கி கொண்டே போனார்கள்.

............................................................................................................................................................................

மெண்டோஸ் வாழ்க்கை :

ஸ்கார்ப்பியோ மெலிதாக உறுமி கொண்டிருந்தது. சீரான ஏசி குளுமை. டின் சவுண்டு சிஸ்டம் அலறிக்கொண்டிருந்தது. ஜாக்சனின் டேஞ்சரஸ். ஷிவாஸ் ரீகல் சுகத்தில் தூங்கி கொண்டிருந்தவன் லேசாக கண்களை திறந்தான். ஏரிக்கரையோரம் வண்டி நின்றது. இறங்கினான். வயிற்றை கலக்கியது. நல்ல காற்றோட்டமான இடம்தான். யாருமேயில்லை. ஜீன்சை கழற்றி அமர்ந்தான்.

................................................................................................................................................................................

பின்நவீனத்துவ வாழ்க்கை :

பிரம்ம முகூர்த்தம் . உஷத் கால பூஜை வேளை. அமானுஷயமான அதிகாலை இருள். நிலவின் விழித்திரைகள் மெல்ல மூடத் தொடங்குகிறது. தூரத்தில் தெரியும் நிழல். நீண்ட கடும் கோடை போல் நடை. சற்று அருகில் தெரிய ஏனோ நிழல் சுருங்குவது போல் ஒரு மாயத்தோற்றம். நீட்சியின் ஆயாசம் வெளிப்படுகிறது. சீற்றமில்லா அலைகளுடன் சிணுங்கும் ஏரி. கருவில் இருக்கும் சிசுவாய் மடங்கி காட்சியளிக்கிறான் அவன். கால்மடிந்து தவக்கோலம் பூணுகிறான். சற்றே கழிகிறது ஜாமம். நீரில் முன்னும், பின்னும் நீந்தும் அன்னமாய் அவன் நிழல் மாறுகிறது. துடுப்பாய் இயக்குகிறான் கைகளை. மாயசிரிப்பொலி நீரில்.

Friday, March 19, 2010

கடைசி பெட்டியிலிருந்து சில குறிப்புகள் .......









தண்ணீர் , நீல்லூ , வெள்ளம் , பானி, h2o.. உடலிலும், இவ்வுலகிலும் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் திரவம் !!

முரட்டு கித்தான் பை. அழுக்கேறி இன்னும் கனமாயிருந்தது. பை அழுக்கில் என்ன இருக்கிறது? இருக்கும் இரண்டு ஜதை ஆடைகளும், மனமும் கூடத்தான் ..

போறதுன்னு முடிவு பண்ணியாச்சா? அப்படின்னா எங்கே ?

ஆமாம். ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை. வாழ்வதில் அவ்வளவாக விருப்பமில்லை. அதற்காக சாகவும் ஆசையில்லை. கால் போகும் போக்கில் போய் எங்கேயாவது கரைந்திட உத்தேசம்.

எதிரில் யாருமில்லை. என்னுடன் பேச யார் இருக்கிறார் ? நானே என்னுடன் ! தோல்விகள்..

ரயில் நிலையம் . வழக்கத்துக்கு மாறாக இருந்தது. அமைதிதான் அமானுஷ்யமா என்ன? இந்த பெருங்கூட்டமும் அதே உணர்வைத்தான் தருகிறது.

இப்போது வரவிருக்கும் ரயில் எந்த ஊருக்கு செல்கிறது ?

நீங்கள் எங்கே செல்ல வேண்டும் ?

இந்த வண்டி நிற்கும் கடைசி நிறுத்தத்திற்கு !

வினோதமாக பார்க்கப்பட்டேன். எல்லோருமே இப்படித்தான் பார்க்கிறார்கள் . நான் நடந்து கொள்ளும் விதம் காரணமாக இருக்கலாம். ஒரு காக்கி வில்ஸை பற்ற வைத்துக்கொண்டேன். பீடி ! அவளுக்கு இந்த நாற்றம் பிடிக்கும். ஆனால் பற்ற வைக்காத பீடியில் மணம் நன்றாக இருக்கிறது என்று சொல்வாள். நாளை கடிதம் அவள் கையில் கிடைக்கும். என்ன நினைப்பாள் ? கோழையென்றா?

பெரும் சம்சாரியைப்போல் ரயில் பிளாட்பாரத்தில் நுழைந்தது. கோஷம் காதைப்பிளக்கிறது. இரண்டே அன்ரிசர்வ்டு பெட்டிகள்தான். கடைசி பெட்டிக்கு ஓடுகிறேன். கூடவே பெருங்கூட்டமும் . எல்லாப் பெட்டிகளிலும் மனிதர்கள் காய்த்து தொங்குகிறார்கள் . யாரோ சிலர் என்னையும் உள்ளே தள்ளிவிட்டனர். சாமான்களுக்கு மாத்திரம் என்று எழுதப்பட்டிருந்த பலகையில் இருபது நபர்கள் . நானும் ஒருவனாய். ரயில் புறப்படுகிறது. மீண்டும் துதி கோஷங்கள் . காதைப் பொத்திக்கொள்கிறேன். அருகிலிருப்பவன் வினோதமாய் பார்க்கிறான். ஏதோ கேட்கிறான். புரியாத மொழி ! கீழே ஒரு தம்பதியினர். அவள் மடியில் ஒரு குழந்தை. என்னைப்பார்த்து சிரிக்கிறது. நான் முகத்தை திருப்பிக் கொள்கிறேன் . ஏமாற்றம் அதற்கு புரியுமா ?

நான் எதிர்பார்த்தது நடந்தது ஒரேமுறைதான். அவள் ! . ஆனாலும் உபயோகமில்லை. யதார்த்தை புரிந்து எதிர்பார்க்க வேண்டும் என்று நான் புரிந்து கொள்வதற்குள் காலம் கடந்து விட்டது. நீரை அள்ளி தெறித்தாளே ! அந்த படித்துறைக்கு பயணிக்கிறேன்.

கிடைக்கிற வேலைக்கு போங்க . என்னை கூட்டிக்கங்க . அதுக்கப்புறம் உங்களுக்காக பட்டினி என்ன ? சாகக் கூட தயார் . உங்க லட்சியம் நிறைவேறணும். என்ன ?

ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நிற்கிறது. இருட்டு. கடைசி பெட்டி பிளாட்பாரத்தை விட்டு வெளியே நிற்கிறது. பசிக்கிறது. காபி, டீ, சமோசா ஒன்றும் வரவில்லை. கால் துண்டு பிஸ்கெட்டை அந்த குழந்தை சப்பிக் கொண்டிருந்தது. அதன் தாய் என்னமோ சொல்லி கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். குழந்தைக்கு விக்கல் எடுக்கிறது . தண்ணீர் புகட்டுகிறாள் .

மீண்டும் கோஷங்கள் . பஜனைப்பாடல்கள். ரயில் போய்க் கொண்டே இருக்கிறது. 72 நபர்கள் பயணம் செய்ய வேண்டிய பெட்டியில் 200 பேர்கள் . எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீராவது குடித்தால் போதும் . அந்த தாய் பாட்டிலை நீட்டுகிறாள் . வாங்கி குடிக்கிறேன். மீண்டும் குழந்தைக்கு விக்கல். இப்போது லேசாக அழ ஆரம்பிக்கிறது.

அடுத்த ஸ்டேஷனில் தண்ணீர் பிடித்து தருகிறேன் என் று சொல்கிறேன். குழந்தை அழுகை குறைந்து என்னைப் பார்த்து லேசாக சிரிக்கிறது. கூட்டம் தொண்டை வறண்டு தண்ணீரை வெறித்தனமாக குடிக்கிறது. எந்த ஸ்டேஷனிலும் வண்டி நிற்கவில்லை. நின்றாலும் இந்த கூட்டத்திலிருந்து வெளியில் போய் விட்டு வருவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

சுற்றிலும் பார்க்கிறேன். வெறி கொண்ட முகங்கள் . கையில் ஏதோ ஆயுதங்கள் . என்ன செய்யப் போகிறார்கள் ? எங்கே போகிறார்கள் ? அரைகுறை பாஷையில் கேட்கிறேன் . பெருஞ்சிரிப்பு .

ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு... ஜெய்...

குழந்தையிடம் மீண்டும் சிணுங்கல் . விக்கல் எடுக்கிறது. துணியை விலக்கி அதன் முகத்தோடு சேர்த்து பொத்திக் கொள்கிறாள் . நான் இறங்கினேன் . தோள்களில் நடந்து கழிவறைக்கு போகிறேன்.

பானி நைய் பாய்..

தண்ணி வரலைப்பா...

பகிரென்றது. ஒரு நான்கு சொட்டு இருந்தால் போதுமே .

இப்ப ஒரு ஸ்டேஷன் வரும் . அங்க பிடிக்கலாம்பா . எல்லாருமே நாக்கு வறண்டுதான் கிடக்கிறோம்.

என்னிடத்துக்கு திரும்புகிறேன். குழந்தை லேசான உறக்கத்தில் சிரிக்கிறது.

குழந்தை தூங்கறப்போ சுவாமி விளையாட்டு காட்டுவார்டா. பாட்டி சொன்னது நினைவிற்கு வருகிறது .

பாரதமாதாகீ ஜேய்..ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு ஜெய்..

அவள் அலறுகிறாள் . அந்த தந்தை உலுக்குகிறான். ராமச்சந்திரமூர்த்தி தண்ணீர் கொண்டு வரவில்லை. குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் . விக்கல் இல்லை. விளையாட்டை ரசித்துக் கொண்டே சிரிப்பு உறைந்திருக்க....



Thursday, March 18, 2010

பிறிதொரு சரித்திரம்...........



காலம் கடந்து நிற்கும்

புதினமொன்றை வாசிக்க

ஆரம்பித்திருந்தேன்

கடைசி வரியிலிருந்து


குருதிப்புனலில் தொடங்கும்

சரித்திரம் அது

பின் வாசிப்பில்

இரத்தக்கறைகள் சற்றே

உலரத்தொடங்கியிருந்தன



கையகல சதைத்துண்டும்

சுருண்டிருக்கும் கற்றை முடியும்

அதன் கால் பாவி நிற்கும்

கைப்பிடி மண்ணும்தான்

இக்கோரத்தின் பிரதான பாத்திரங்கள்



அளவிலா ஆசைகளும், ஆணவமும்

இந்த அக்கினியில் நெய்யாக !



விழிப்பில் இருந்து மீண்டும்

உறக்கமும் அதற்குறிய கனவும் என்று

முன்னிரவு நோக்கிய பயணம் போல்

உணர்ந்தேன் அவ்வாசிப்பை


சிரசுகள் ஒட்டிக்கொண்டன

உடைந்த வாள்களும், ஈட்டிகளும்

கரங்களில் சதிராட்டம்


நறுமணத்தை நுகர ஆரம்பித்தேன்

கூடவே வந்த இன்னிசையையும்

என் உடல் பின்னோக்கி

இயங்க முடிந்தது

மெல்ல தலை திரும்ப தொடங்கியிருந்தது

முதல் அத்தியாயத்தின் முதல்

வரிக்கு வந்திருக்கிறேன்

ஆனால் தலைப்புதான் பொருத்தமில்லாமல்

முற்றும் என்று

Monday, March 15, 2010

மானிட்டர் பக்கங்கள் ....... 15/03/10


இந்த வாரம் ஆனந்தவிகடனில் சாமியார்களைப் பற்றி ஒரு கட்டுரை புகைப்படங்களுடன் வந்திருக்கிறது. சாய்பாபா, ரஜனீஷ், பிரேமானந்தா, நித்தியானந்தா இன்னும் பிற ஜென்மங்களும். சாமர்த்தியமாக ஜெயேந்திரையும், சின்ன சாமியையும் தவிர்த்திருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி ஓரிரு வரிகள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் குதிரை ஓட்டி ஜக்கியை விட்டு விட்டார்கள். இத்தனைக்கும் ஜீனியர் விகடன் பழைய இதழில் வெள்ளியங்கிரி மலை மர்மங்கள் பற்றிய ஒரு கட்டுரை படித்த நியாபகம் இருக்கிறது. விகடனில் “அத்தனைக்கும் ஆசைப்படு “ ஜக்கி எழுதுவதால் விட்டுவிட்டார்கள் போலும். கோலங்கள், திருமதி செல்வம் எல்லாம் சன் டிவியில் காட்டப்பட்ட நித்தியின் வீடியோவிற்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை. ஜக்கி பற்றிய சிடி எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் சன் டிவி கையில் சிக்கினால் அவ்வளவுதான். ”அவர்களை” பற்றிய சிடி கிடைத்தாலே ஒளிபரப்புவார்கள் போல ! ஆனால் எங்கோ இருக்கிறது. வரும் என்றுதான் பட்சி சொல்கிறது !


பகுத்தறிவு பகலவனின் பாசறையிலிருந்து வந்த தலைவர் . பாராட்டு விழாவிற்கே பாராட்டு விழா எடுக்கும் பெண்சிங்கத்தின் படைப்பாளி. ஊருக்கெல்லாம் பகுத்தறிவு சோறூட்டும் தானைத்தலைவன். 13 ஆம் எண்ணை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார். கிடக்கறது கிடக்கட்டும் . கிழவனை தூக்கி மணையில் வை என்பது போல் வேலை அறைகுறையாக முடிந்திருக்கும் புதிய சட்டமன்ற கட்டிடத்தை திறந்து விட்டார். ராசி நம்பராம். இதுக்கு டம்மி டூம். அதுக்கு இரண்டு கோடி ரூபாயாம். 90 லட்சம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லையாம்.


காந்திய கிராமங்கள் என்ற ஒரு வலைப்பூ. அதில் ஒப்பாரியை பற்றிய ஒரு பதிவு மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்டிருந்தது. சாந்தி லட்சுமணன் என்பவர் எழுதுகிறார். எல்லாப்பதிவுகளுமே தகவல்பூர்வமாகவும் இருக்கிறது. படித்துப் பாருங்களேன்.

இழவு , சிக்கன் பிரியாணி போன்றவர்கள் இந்த திரைப்படத்தை தலையில் தூக்கி கொண்டாடலாம். ஒடுக்கப்பட்டவர்களின் குறியீடாக ஒற்றைக்கால சட்டையுடன் படம் முழுவதும் அலைவதற்காக. அல்லது ஆதிக்க சாதியினரின் கோயில் தேரை இழுத்து வந்து காலனியில் கட்டி விடுவதற்காக. மாத்தியோசி திரைப்படம் ! ஒரு மண்ணாங்கட்டியையும் மாத்தியோசிக்கவில்லை. இறுதியில் நாயைப் போல் அடிபட்டு செத்து போகிறார்கள் டிரவுசர் பார்ட்டிகள். தயாரிப்பாளருக்கு டிரவுசராவது மிஞ்சினால் சந்தோஷம்தான். இயக்குனர் நந்தா பெரியசாமி . தினமும்தான் வாயால் சாப்பிடுகிறோமே , ஒரு நாள் என்று மாத்தி யோசித்திருக்கிறார் போலும்.

திருவண்ணாமலையில் நண்பர் அய்யனாரின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. வாழ்த்துக்கள் அய்யனார். நானும் , அகநாழிகை வாசுவும் சென்றிருந்தோம். சிறப்பாக உபசரித்தார் அய்யனார். (அப்சலூட் ஓட்காவுடன்). எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னது. அவர் குங்குமத்தில் வேலை செய்தபோது ஒரு முறை டி.ஜி.எஸ். தினகரனை பேட்டி எடுக்கப் போனாராம். காலை சிற்றுண்டியுடன் சிறப்பான வரவேற்பு. ஒரு தட்டில் உணவு வகைகள் வைக்கப்பட்டிருக்க, அதை உண்ண ஆள் யாரும் இல்லை. கேட்டதற்கு தினகரன் சொன்னாராம். அது ஜீசஸுக்காக. அவர் தினமும் என் வீட்டில் உணவு அருந்துவார் என்று. பிரபஞ்சனுக்கு கடுப்பு. நேர்காணல் முடிந்து மதிய உணவு நேரம் வந்துவிட்டது. தினகரன் சாப்பிட சொன்னாராம். பிரபஞ்சன் சொன்னார். மதிய உணவு என் வீட்டில்தான் . வேறெங்கும் சாப்பிட மாட்டேன். ஏனென்றால் மதிய உணவுக்கு ஜீசஸ் வருவார் என்று. தினகரனுக்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலமை. அதெப்படி என்று எப்படி கேட்கமுடியும் ? கேட்டால் உங்கள் வீட்டிற்கு டிபனுக்கு வருகிற ஆள் , ஏன் என் வீட்டிற்கு லஞ்சுக்கு வரக்கூடாது என்று கேட்க பிரபஞ்சன் ரெடியாக இருந்திருக்கிறார்.

டிஸ்கி கவுஜை :

எல்லாவற்றையும்
சரியாகவே
புரிந்து கொள்கிறாய் !
நான் சொல்ல வந்ததை
தவிர....

Friday, March 12, 2010

ஒரு காதலின் காதலனின் கதை..........


அவள் இந்த பக்கமாய்த்தான் வரவேண்டும். சொல்லி விட வேண்டும். அவள் அவள்தான். பெயர் ? உங்களுக்கு மிக பிடித்த பெயரை சொல்லிப்பாருங்கள். அதுதான் அவள் பெயர். மிக அழகான பெயர் என்று எதை நினைக்கிறீர்கள் ? அதுவும் அவள் பெயராக இருக்கலாம். இப்போதைக்கு அவள் !

அவள் அழகை பற்றி கொஞ்சம் ! இதுவரை வந்த அத்தனை வர்ணனைகளையும் தள்ளிவிடுங்கள். ஐஸ் வாட்டரால் முகம் கழுவிய பின் ஒரு ஃப்ரெஷ்னஸ் இருக்குமே. அப்படி இருப்பாள். ஆச்சர்யம் என்னவெனில் எப்போதுமே அப்படித்தான் இருப்பாள். பவளச்செவ்வாய் என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த கத்தி மூக்கு ஒன்று போதும். ஒரு விஷயம் . அவளுக்கு பயங்கரமாக கோபம் வரும்(என்று நினைக்கிறேன்). அது இன்னும் அழகு.

நான் அவளை முதலில் பச்சை தாவணியில்தான் பார்த்தேன். பள்ளி சீருடை அது. இவள் எந்த நடிகை மாதிரி இருக்கிறாள் என்று கொஞ்சம் ஆராய்ச்சியும் செய்தேன். வீண் வேலை. அவளை மாதிரி எந்த நடிகையும் இல்லை. பட்டாம் பூச்சியெல்லாம் படபடக்கவில்லை. லப் டப் அதிகமாகவில்லை. அவளுக்காக எதையும் செய்யலாம் என்றெல்லாம் எனக்கு தோன்றவில்லை. அதற்கெல்லாம் நேரமில்லை. ஒரு துளி நொடியை கூட நான் வீணாக்க விரும்பவில்லை. ஆமாம் ! அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவளும் என்னைப் பார்த்தாள். ஆனால் நான் அவளைப் பார்த்தது போல் இல்லை . சாதாரணமாக பார்த்தாள். ஒரு சின்ன சிரிப்பும் கூட. சிநேகமாக. சரி அப்படித்தானே ஆரம்பிக்கும். பின் காதலாகி கசிந்துருகும். கற்பனையின் சுகமே சுகம்.

இந்த சனியன் .. அதான் காதல் வந்துவிட்டாலே தியரியே எப்படி மாறிவிடுகிறது ? தினப்படி காரியங்களைக் கூட அவள் அனுமதியுடன் தான் செய்ய வேண்டும் என்று நினக்கத் தொடங்கினேன். அதற்கு அவள் அருகிலேயே இருக்க வேண்டுமே. பொதுவாக காதலுக்கு நட்பு உதவும் என்பார்கள். ஆனால் நான் நண்பர்களையே விலக்க ஆரம்பித்தேன். “டேய் ! பொல்லாத காதல் : ஊர்ல இல்லாத சங்கதியா? ஏண்டா இப்படி திரியறே ? அவன் கேட்ட கேள்விக்கு நான் அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன் . மானசீகமாக லயித்து போய். அவளும் மென்மையான குரலில், எனக்கு மட்டுமே கேட்கும்படியாக பேசிக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு மழையில் நனைய பிடிக்குமாம். அவள் என்னிடம் சொல்லவில்லை. நானே தெரிந்து கொண்டேன் பின் ? காதலிக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று தெரியாதவன் எப்படி காதலனாய் இருக்கமுடியும் ? இதுவரை அவளுக்கு வேறென்னவெல்லாம் பிடிக்கும் என்ற முயற்சியில் இருக்கிறேன். அப்புறம் என்னை பிடித்திருக்கிறதா ? என்று அறிந்து கொள்ள வேண்டும் !

ஒரு மழை நேர மாலை. கொட்டித்தீர்க்கிறது. எனக்கு அவளை பார்க்க வேண்டும் போல் இருந்தது. நீங்கள் வீட்டு வாசல் உத்திரத்தில் மழைநீர் கம்பிகளாய் விழுவதை பார்த்திருக்கிறீர்களா? அவள் வீட்டு வாசலில் அப்படித்தான் விழும். அதை ரசித்துக் கொண்டே சாரல் பாவாடையை நனைக்க ஈரமாய் இருப்பாள்.

தெருவில் யாருமே இல்லை. இறங்கி நடந்தேன். ஒதுங்கியிருப்பவர்கள் என்னை கோட்டிக்காரனாய் பார்ப்பதை பொருட்படுத்தவில்லை. என்னவளுக்கு பிடித்த காரியத்தை செய்யும் பெருமிதம் என்னிடம் இருந்தது. அவள் தெருவில் நுழைந்தேன். நான் நினைத்த இடத்தில் அவள் இருந்தாள். மழைநீர் கம்பிகளாய் விழுந்து கொண்டிருந்தது. அவள் பாவாடை மட்டுமல்ல. தாவணியும் சாரலில் நனைந்திருந்தது. முகத்திலும் நீர் துளிகள். அவள் வீட்டை அடைந்ததும் அப்படியே நின்றேன். ஏனோ அவள் என்னைப் பார்க்கவில்லை. பரவாயில்லை. நானும், அவளும் அவளுக்கு பிடித்த செயலை ஒரே நேரத்தில் செய்வது எனக்கு சந்தோஷமாக இருந்தது. மழை இன்னும் வலுத்தது. நான் நின்று கொண்டே இருந்தேன்.

மழை லேசாக விட்டிருந்தது. குடையை மடக்கினேன். ஏனோ இப்போதெல்லாம் எனக்கு மழையில் நனையவே பிடிப்பதில்லை. சாலையில் தேங்கியிருந்த நீரில் நனைந்து புடவை கால் பகுதியில் ஈரம்.கொஞ்சம் வேகமாக நடந்தேன்.முன்பெல்லாம் யாரோ பின்னால் தொடர்ந்து வருவது போலவே இருக்கும்.இப்போது அப்படி தோன்றவில்லை. கொடிமரத்துமூலை வந்ததும் என்னையுமறியாமல் கால் இடறியது. கொஞ்சம் பாதுகாப்பான இடத்தில் இருந்ததாலோ என்னவோ இன்னும் அந்த சுவரொட்டி கிழியாமல் இருந்தது. அதில் வரையப்பட்டிருந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவனை எங்கோ அடிக்கடி பார்த்தது போல் இருந்தது. சரியாக கவனம் இல்லை. ஏனோ மனசு அவனுக்காக அழுகிறது. யார் அவன் ? ஏன்?

Wednesday, March 10, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன் ......6






சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு கட்டுரையை படித்தேன். கடிதம் பற்றிய அருமையான எழுத்தாக்கம் அது. நாம் எல்லோருமே ஒரு கடிதம் போல் வாழ்க்கையில் பயணித்திருப்போம். அல்லது முகவரி தவறாக எழுதப்பட்ட ஒரு கடிதம் போல் அலைகழிக்கபட்டிருப்போம். இன்று எழுதுவது என்பது கணினி மயமாகிவிட்டது. என்றாலும் கடிதம் பற்றிய நினைவுகள் நிச்சயம் எல்லோரிடமும் மிச்சம் இருக்கும். வேலை நிமித்தம் வெளியூர் சென்ற கணவர்கள் தபாலில் நடத்திய தாம்பத்தியங்கள், பட்டாளம் சென்ற மகன் மனைவிக்கும், பெற்றோருக்கும் எழுதிய தனித்தனி உறையிடப்பட்ட அஞ்சல்கள். சில கடிதங்கள் மரியாதை நிமித்தம் ஒரே கடிதமாக இருக்கும். பெரியவர்கள் வாசித்து விட்டு இணக்கமாக இருந்தால் மருமகளிடம் கொடுப்பார்கள்.அல்லது "உன்னைய கேட்டு எழுதியிருக்கான்" என்று ஒற்றை வரியில் முடித்து விடுவார்கள். இன்னும் வேலைக்கான நேர்முகம், உங்கள் கதை பிரசுரத்திற்கு ஏற்கபடவில்லை. இக்கடிதம் கொண்டு வரும் நபர் வசம் அதை கொடுத்து விடவும். இத்யாதிகள்..

நான் தஞ்சையிலிருந்து மெட்ராஸ் கிளம்பும்போது அம்மா 50 சுய விலாசமிட்ட தபால் கார்டுகளை கொடுத்தாள். “நீ ஒன்றும் எழுதவே வேண்டாம் “ வாரம் ஒன்று அஞ்சல் செய்தால் போதும் என்றும் சொன்னாள். நம்ம சோம்பேறித்தனம் தெரிஞ்சதுதானே !!


முன்பெல்லாம் வீடுகளில் கடிதம் வைக்க ஒரு நீண்ட கம்பி இருந்தது. அதில் தேதி வாரியாக கடிதங்களை சொருகி வைப்பார்கள். "ஆசிர்வாதம்" உபயகுசலோபரி" ஷேமம். ஷேமத்தை தெரிய படுத்தவும். நலம் . நலமறிய ஆவல்" வீடு மாறி விட்டோம். புதிய முகவரி. மஞ்சள் தடவிய காது குத்து, சீமந்தம், புண்யாசனம், அறுபது விழா, "இந்த மாதமாவது பணம் அனுப்ப முடியுமா?" ”நீங்கள் அடகு வைத்த நகை வட்டி அதிகமாகி விட்டதால்” என்று செட்டி கடைகளின் அறிவிப்புகள் என்று கடிதம் சொல்லாத தகவல்களே இருக்காது. காதல் கடிதங்கள் இதில் சேர்த்தி இல்லை. (தயவு செய்து படித்தவுடன் கிழித்து விடவும்) எனக்கு வந்த முதல் காதல் கடிதத்தை நான் முதலில் படிக்கவில்லை என்றால் நம்புவீர்களா? நடந்தது என்னன்னவென்றால் "கடிதத்தை” எதிர்பார்த்து அவள் தெருவில் செல்லும்போது, அவள் கடிதத்தை கீழே போட , நான் எடுப்பதற்குள் அந்த தெரு சண்டியர்கள் கடிதத்தை கைப்பற்றி விட்டனர் (எங்க ஏரியா : உள்ளே வராதே !) முதலில் அவர்கள்தான் அக்கடிதத்தை வாய் விட்டு படித்தனர். அந்த முதல் காதலியின் முதல் கடிதம். எண்ணற்ற எழுத்து பிழைகளுடன் இருந்ததை இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை.

சில வருடங்களுக்கு முன் ஒரு குறும்பட போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. முதல் பரிசு பெற்ற படத்தின் பெயர் எனக்கு சரியாக நினைவில்லை. பெங்களூரு சிருஷ்டி கல்லுரி மீடியா மாணவிகள் இயக்கியிருந்த படம். ஏதோ இந்தி பெயர். பெயரில் என்ன இருக்கிறது. ஆனால் இன்றளவும் அந்த கதை எனக்கு நினைவில் இருக்கிறது. 10 நிமிட படம்தான். ஒரு பெண் தன் சினேகிதிக்கு ஒரு கடிதம் எழுத நினைக்கிறாள். ஒரு தபால் அட்டையிலோ அல்லது அஞ்சல் உறையிலோ அல்ல. அவளுக்கு தோன்றுவதை எல்லாம் நேரம் கிடக்கும் போதெல்லாம் எழுதி கொண்டே இருக்கிறாள். கடிதத்தை முடிக்க அவளுக்கு மனமே வரவில்லை. வீடு, வயல்வெளி, மலை அடிவாரம் எல்லா இடத்திலும் அமர்ந்து அவள் ரசிப்பதை பகிர்ந்து கொள்கிறாள். இறுதியில் ஒரு வழியாக கடிதத்தை நிறைவு செய்து அஞ்சல் செய்து விட்டு பதிலுக்காக காத்திருக்கிறாள். தோழி தனக்கு என்னவெல்லாம் பதில் எழுதுவாள் என்பதை சிறு பாட்டாக பாடி பார்ப்பாள். மிக மெலோடியான ட்யூன். கவிதையாக வரிகள். இறுதியில் கடிதம் ஆள் இல்லையென்று திரும்பி விடுகிறது.

அந்த படத்தின் பெண் இயக்குனரின் பெய்ர் அப்போதே வாயில் நுழையவில்லை. ஏதோ கொங்கணி பெண் பெயர். தன் டீச்சரின் அனுபவம் அது என்று கூறியது நினைவிருக்கிறது. அவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இருந்தது. இப்போது தேட வேண்டும்.







Tuesday, March 9, 2010

பொருள் விளங்கா உருண்டைகள்.....


சாயந்திரம் சீக்கிரம் வாங்க. எங்கப்பாவை பார்த்துட்டு வரலாம்.

நானுமா?

ஆமாம். கார்ல போகணும்!

வரச்சொன்னாரா?

கூப்பிட்டாத்தான் போகணுமா? எனக்கு உரிமையில்லையா?

அதில்லை. அழையாம போயிட்டு அவமானம்தான் மிஞ்சும். அப்புறம் ஒரு வாரத்துக்கு மூஞ்சியை தூக்கி வச்சு கிட்டிருப்ப. ஏற்கனவே லட்சணம் !!

இந்த மூஞ்சிக்குத்தானே அந்த அலை அலைஞ்சீங்க. சீக்கிரம் வர வழியை பாருங்க.

அவள் சொன்னது உண்மைதான். ஆனா அது அப்போடின்னு சொல்ல முடியுமா? திருமணமாகி இத்தனை வருடத்தில் மாமனார் வீட்டுக்கு ஒரே ஒரு முறைதான் போயிருக்கிறேன். அதுவும் அழையா விருந்தாளியாகத்தான். செளக்கியமா என்று ஒற்றை வார்த்தையுடன் முடித்து கொண்டு விட்டார். திமிர் என்று சொல்ல ஆரம்பித்து பிடிவாதக்காரர் என்ற பட்டம் சூட்டி இப்போதெல்லாம் வைராக்கியம் அதிகம் என்பதாக அனுமானம் செய்து கொள்கிறேன். எனக்கு ஒன்றுமில்லை. அலம்பி கவிழ்த்து ரொம்ப நாளாச்சு. மனைவிதான் பாவம். இத்தனைக்கும் இவள் என்றால் அவருக்கு உயிர்.

மாமனார் வீடு சிட்லபாக்கத்தில் இருக்கிறது. மாடியில் மச்சினி குடும்பமும், கீழ் போர்ஷனில் மாமியார், மாமனார் இருவர் மட்டும். வெளியில் எங்கும் போவதில்லை. அதிகபட்சம் மருத்துவர் வீடு இல்லையென்றால் கோவில். மச்சினி என்னுடன் நன்றாக பேசுவாள். சகலையும் பேசுவார். எனக்குத்தான் புரியாது. உலக பொருளாதாரம் புண்ணாக்கு இத்யாதிகள். சினிமா, கதையெல்லாம் அவருக்கு காத தூரம்.

அப்பாவுக்கு பாசந்தின்னா உயிர் என்றாள் மனைவி. வாங்கி கொண்டோம். கொஞ்சம் பழங்கள் மற்றும் பூ..

வீட்டு வாசலை கார் நெருங்கும்போதே கீழ் போர்ஷனில் விளக்கு அணைக்கப்பட்டது. எதிர்பார்த்ததுதான். ஒரு கேள்விக்குறியுடன் மனைவியை நோக்கினேன்.

பின்ன நான் செஞ்ச காரியத்துக்கு ஆரத்தியா எடுப்பாங்க என்றாள்.

அப்புறம் எதுக்குடி வரணும்?

நான் அவரை பார்க்க வரலை. எங்க அக்காவை பார்க்கத்தான் வந்தேன்.

அப்ப பாசந்தி?

அதை கொடுத்துட்டு போயிடலாம். சாப்பிடலைன்னா தூக்கி வீசட்டும்.

மாமியார் மெல்ல மாடியேறி வந்தார். என்னையும் போக கூடாதுன்னு சொன்னார். எனக்குத்தான் மனசு கேக்கலை.

அப்பாவுக்கு இன்னும் கோபம் போகலையாம்மா?-மனைவி

கட்டை வேகற வரைக்கும் தீராது. நானும் எவ்ளவோ சொல்லிட்டேன். நீயும் உன் பொண்ணு கூடவே போயிடுன்னுட்டார்.

அலுவலகம் போன தகப்பன் வீடு திரும்பும்போது மகள் வீட்டில் இல்லையென்றால் எப்படியிருக்கும்? திட்டமிட்டு செய்யவில்லை. தவிர்க்க முடியாமல் நடந்துவிட்டது. அதற்கும் உங்கள் அணுகுமுறையும் காரணம் என்று ஆயிரம் சொல்லியும் பலனில்லை. மகள் பிறந்த பிறகு கொஞ்சம் சரியாவது போல் இருந்தது. என்ன நினைத்தாரோ ! மீண்டும் வேதாளம் மரத்தில் ஏறிக்கொண்டது.

காஃபி குடித்தவுடன் புகைக்க வேண்டும் போலிருந்தது. சகலையை வருகிறீர்கள் என்றேன். நோ...நோ.. நான் விரதத்தில் இருக்கிறேன் என்றார்.

அருகிலேயே இருந்த கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்தேன். மெல்ல மாமனார் வந்து கொண்டிருந்தார். அவரமாக அணைத்துவிட்டு பவ்யமாக நின்றேன்.

நீங்க கொஞ்சம் காரெடுத்து கிட்டு வர்றீங்களா? வெளியில் போயிட்டு வரலாம்.

காரை எடுத்துக்கொண்டு வந்தேன். பின்னாடி செளகர்யமாக உட்காருங்களேன் என்றேன்.

இல்லை . பரவாயில்லை. முன்னாடி உக்காரத்தான் எனக்கு பிடிக்கும். டிரைவிங் கிளாஸ் போனீங்களா?

இல்லை மாமா. கார் வாங்கி நானேதான் கத்துக்கிட்டேன்.

நீங்க வர்றச்சே பாத்தேன். அவளுக்கும் கார் ஓட்ட கத்துக்கொடுக்கிறதுதானே ! ஆனா அவளுக்கு சைக்கிளே ஓட்ட வராது. அவ்வளவு பயம் ! உன் கூட ஓடி வரதுக்கு மட்டும் எங்கேயிருந்து தைரியம் வந்ததுனுதான் தெரியலை !

அது தான் கண்மூடித்தனம் மாமா !

எப்படி அவளுக்கு இந்த சீட் பத்துது. சின்னதுலேர்ந்து அவ கொஞ்சம் பப்ளிமாஸ்தான். அவளை ஸ்கூலுக்கு கார்லய கொண்டு விடறீங்க?

இல்லை மாமா. ஸ்கூட்டர் இல்லைன்னா நடந்து போயிடுவா .

நடக்கறதுதான் நல்லது. பாசந்தி வாங்கிட்டு வந்தாளா?

நான் என்ன சொல்வதுன்னு மெளனமாக இருந்தேன்.

ம்ம்...ஆனா நீங்க சாபிடுவீங்களா?

என் பொசிஷனில் நீங்க இருந்தா என்ன பண்ணுவீங்க?

தெரியலை !

கவலைப்படாதே ! உன் பொண்ணு அப்படி பண்ண மாட்டா?

எப்படி சொல்றீங்க?

அவ அம்மா அவஸ்தையை பாக்கிறா இல்லை!

இல்லை மாமா! காதலை பத்தி நாம ஒன்னும் சொல்ல முடியாது. என்ன வேணுமின்னா நடக்கலாம்.

சரி. நான் நடந்து போயிக்கிறேன். அவ கிட்ட ஒன்னும் சொல்ல வேண்டாம்.

ஏன் மாமா ?

இன்னும் எனக்கு கோபம் தீரலைன்னு மட்டும் சொல்லிடு. பாத்து காரை ஓட்டுங்க. அவளுக்கு சைனஸ் பிரச்சனை எப்படியிருக்கு ? மைலாப்பூர்ல ஒரு நேச்சுரோபதி டாக்டர் இருக்கார். அவர் கிட்ட காமிங்க..

மீண்டும் நான் மனைவியை அழைத்துக்கொண்டு கீழிறங்கும்போது விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே இரண்டு கண்கள் பளபளப்பது போல் பிரமை.

கையில் ஏதோ பிளாஸ்டிக் கவர் வைத்திருந்தாள்.

என்ன அது ? பொறந்த வீட்டு சீதனம் என்றேன்..

வீட்டுக்கு வந்தவுடன் பிரித்து காட்டினாள்.

“பொருள் விளங்கா உருண்டைகள்”







Monday, March 8, 2010

மோகன் தாஸ் என்கிற கவிஜீவன்...


கருக்கல் இருட்டில்
கசியும் விளக்கில்
தெரியும் உடல் மொழியில்
அத்தனை வேதனை..

இதுக்கப்புறம் எப்படி சொல்றதுன்னு யோசிக்கிறேன் டா ! என்றான் மோகன் தாஸ். இல்லையில்லை. கவிஜீவன்.

எதுக்குடா எழுதற?

நம்ப ராமசாமியை பாத்தேன். தொகுப்பு போட்ருலாமே ன்னாரு. ஏற்கனவே எழுதினது நிறைய இருக்கு. இன்னும் கொஞ்சம் எழுதிட்டு பெரிய தொகுப்பா போடலாம்னு ஐடியா.

நான் மோகன் தாஸை உற்றுப்பார்த்தேன். இருவரும் +2 வரை ஒன்றாக படித்தோம். அதற்கு மேல் அவன் படிப்பை நிறுத்தி விட்டான். திடீரென்று வருவான். ஒரு டிராமா மணி. ராமனாதன் செட்டியார் ஹாலில். ஸ்கிரிப்ட் நான் தான். நீயும் கொஞ்சம் நல்லா எழுதுவே இல்ல. பாரேன் என்பான். நான் காதல் கதைகளாக எழுதி குவிக்க ஆரம்பித்திருந்தேன். எல்லாம் சினிமாவுக்காக. மோகன் கொடுத்த கதையை பார்த்தேன். மனோகரா திரைப்படம் போல் இருந்தது.

மனோகராதான் ! சரித்திரம்ங்கிறதை சமூகம்னு மாத்தியிருக்கேன். வசனம் எல்லாம் என்னுதுதான். நானும் ஒரு ரோல் பண்றேன்.

அதன் பின் தஞ்சையில் நாடகத்தின் வளர்ச்சிக்காக மோகன் நிறைய நாடகங்கள் போட்டான். தான் நாடகம் போடுவதை நிறுத்தினாலே அது வளர்ந்துவிடும் என்று மோகனுக்கு புரிவதற்குள் கைகாசு கரைந்ததுதான் மிச்சம். அவன் அப்பா இருந்த சொத்தை பாகம் பிரித்ததில் இவனுக்கு ஒரு கடையும், வீடும் கிடைத்தது போல. பரம்பரைத்தொழிலான ஆசாரி பட்டறை போட்டான். அப்போது எனக்கு இலக்கிய பரிச்சயம் என்பது சுத்தமாக கிடையாது.( இப்ப மட்டும் என்று புருவத்தை உயர்த்தாதீர்கள் ப்ளீஸ்). தஞ்சை பிரகாஷ் என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறேன். மோகன் நிறைய சிறு பத்திரிக்கைகள் படிப்பான். என்னையும் படிக்க சொல்வான். இதெல்லாம் நவீன இலக்கியம் என்பான். நான் வசந்தம், சுகந்தம், மகரந்தம் என்பதை விட்டு வெளியில் வரமுடியவில்லை என்று சொன்னேன். தஞ்சை பிரகாஷ் சந்திக்க ஒரு முறை பெசண்ட் லாட்ஜ்க்கு அழைத்துக்கொண்டு போனான் மோகன். தாடியும், தீட்சண்யமான பார்வையும் வசீகரமாக இருந்தார் பிரகாஷ். மோகன் அவரிடம் உரிமையுடன் நிறைய கேள்விகள் கேட்டான். அவரும் பொறுமையாக சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். எனக்கு ஒரு நல்ல அனுபவமாக பட்டது. அதன் பின் மோகன் போக்கில் நிறைய மாறுதல்கள். தினம் ஒரு ஊர். ஒரு எழுத்தாளர். இலக்கிய கூட்டங்கள் என்று சுற்ற ஆரம்பித்தான்.

மோகன் கடையில் இருந்தான். வீடும் கடையும் ஒன்றாக இருந்தது.

எங்கடா ஆளையே காணும் ?

மெட்ராஸ் போகப்போறேன்டா! சினிமாவில முயற்சி பண்ணலாம்னு இருக்கேன்.

சூப்பர்டா மாப்ளை. உனக்கு நிச்சயம் ஒர்க் அவுட் ஆயிடும். மாப்ளை ! பாட்டெழுத எனக்கு வாய்ப்பு கொடுடா என்றான் மோகன்.

உனக்கில்லாததா? ஆறு பாட்டு. அத்தனையும் நீதான்.

மீண்டும் சில வெட்டி நாட்கள் போனது. மெட்ராசிலிருந்து ஊருக்கு போனபோது மோகனை பார்க்க போனேன். அவன் மனைவிதான் இருந்தாள். வாயில் வரக்கூடாத வார்த்தைகளில் வசவு. பாலீஷ் போடவும் ,பற்ற வைக்கவும் கொடுக்கப்பட்டிருந்த 6 ஜோடி கொலுசுகள் காணும். கூடவே மோகனும். உள்ளூர் எழுத்தாளர்கள் வீடுகளில் தேடி ஆள் கிடைக்க வில்லை. எத்தனை தலைமுறையா சோறு போட்ட தொழிலை, இவர் தலைமுறையில அழிச்சுட்டாரு அண்ணே . வீடு முழுக்க குப்பையும், கூளமும்தான். அதையும் கடைக்கு போடக்கூடதுன்னு அழிச்சாட்டியம். அவளுக்கு கோபம் தலைக்கேறியது. உள்ளே சென்று எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு வந்தாள். தெருவில் குவித்து கொளுத்தினாள். கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. தூரத்தில் மோகன் தாஸ் வந்து கொண்டிருந்தான்.

பின் குறிப்பு : திருவாரூரில் ஒரு எழுத்தாள நண்பர் காலமாகி விட்டாராம். பெயர் மணிப்புறா . சவம் மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்திருக்கிறது. தகவல் அறிந்து இவன் தான் சென்று இறுதி காரியங்களுக்கு உதவி விட்டு திரும்பியிருக்கிறான்.

பின் குறிப்பு : 2 : ஞாபக சக்தி குறைந்து விட்டதால் எரிந்து போன இலக்கியங்கள் நிறையவற்றை திரும்ப எழுத முடியவில்லை என்று வருத்தப்பட்டான். பாதி எழுதிய கவிதை ஒன்று எரியாமல் கிடைத்தது என்றும் சந்தோஷமாக சொன்னான்.

கருக்கல் இருட்டில்
கசியும் சிறு வெளிச்சம்
படரும் நிழலில்
தெரியும் உடல்மொழியில்தான்
எத்தனை வலிகள் !




Saturday, March 6, 2010

அவள் பெயர் தமிழரசி.... ஒரு நேட்டிவிட்டி விமர்சனம்


ஏம்லே ! நம்ம ஊரை சுத்தி, சுத்தி புடிச்சாங்களே..அந்த சினிமா படம் தெங்காசியில ஆடுதாம். பொயித்து வருமாலே !

போலாம்தான். மருமவ வெய்வாலே. காட்டுக்கு காவல் போவச்சொன்னா, சுணங்கிபோய் சுருண்டுக்குவீங்க.. கிழவனுக்கு கொட்டாய் கேக்கா? ம்பளே..

காட்டுக்கு போறொம்ன்னு சொல்லித்து போயிடலாம்வே!

அவள் பெயர் தமிழரசி ! கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த திரைப்படம். பூர்த்தி செய்திருக்கிறதா என்றால் ஏமாற்றமே ! ஓவியர் வீர சந்தானமும், தியேட்டர் விமர்சகர் தியோடர் பாஸ்கரனும் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

பொக்கை வாயை மென்னுகிட்டு ரோதணையா இருக்குலே. முந்தா நா தோப்புல தேங்கா வெடி போட்டு திங்குதானுங்க. எச்சிதான் வடியுது. என்ன செய்ய. திருநெல்வேலி போய் பல்லு கட்டுனா என்ன? சொன்னதுக்கு பாவி மவன் பாஞ்சு வரான்.

வெளியே சொல்லாதீரு. என் பொழைப்பும் நாறித்தான்ம்ல கிடக்கு. இந்த மட்டும் கையும் ,காலும் கல்லுக்கணக்கா இருக்கப்போய்தான் கால் வயித்துக்கு கஞ்சியாவது மிஞ்சுது.

அவள் பெயர் தமிழரசி. சிறு பிராயம் முதல் தன்னுடன் உயிராய் பழகிய தமிழை காதலிக்கிறார் ஜெய். அவளோ நன்றாக படித்து வெளி மாநிலத்துக்கு
இன் ஜீனிரியங் படிக்க முயற்சிக்கிறாள். தன்னை விட்டு அவள் போக கூடாது என்பதற்காக அவளை பலவந்தமாக அடைந்து விடுகிறார் ஜெய். அவள் என்ன ஆகிறாள்? எப்படி அவளை மீண்டும் கண்டுபிடிக்கிறார் என்பதை மிகுந்த நாடக தன்மையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

தோல் பாவை கூத்துதான் கதைக்களம். அதற்காக இயக்குனருக்கு ஒரு சல்யூட். ஆனால் திரைக்கதை? தமிழரசியைப் போலவே அதுவும் திக்கு தெரியாமல் திண்டாடுகிறது.காமிரா பெச வேண்டிய இடங்களில் எல்லாம் வாய் ஓயாமல் பாத்திரங்கள் பேசிக்கொண்டேயிருக்கின்றனர். பிண்ணனி இசையில் சொல்ல வேண்டியதையும் வசனங்கள். நெல்லை ஸ்லாங்கை அலுக்க, அலுக்க திணித்திருக்கிறார்கள்.கு..கு..கூட்ஸ் வண்டி பாடலும், காட்சியமைப்பும் சுஅகம்

பள்ளி மாணவனாக ஜெய் கொஞ்சம் தேறுகிறார். மற்றபடி முகத்திலும், குரலிலும் ஜீவன் மிஸ்ஸிங். நாயகியும் அப்படித்தான். இயல்பான முகத்தோற்றம் இல்லாததால் கவர மறுக்கிறார். கிளைமாக்ஸில் மகாராஷ்டிராவில் அவர் தமிழில் தோல்பாவை கூத்து நடத்துவதாக சொல்லப்பட்டிருப்பது பால்தாக்கரேவிற்கு தெரியாதவரை நமக்கு நல்லது.

போலாம்லே.. கடசி வண்டியை புடிச்சு போயித்தா, படம் முடிஞ்சு விடிஞ்சு பொடி நடையாக்கூட வந்துர்லாமலே..

என்ன பெரிசுங்களா? எங்க ஆட்டிகிட்டு பொறப்டிங்க?

தெங்காசிக்கு சேக்காளி..பயாஸ்கோப் பாக்கத்தான்.

அட ...முட்ட பெரிசுங்களா? உங்களுக்கு சோலியே தெரியாதா? என் கூட வாங்கவோய் !

சேக்காளி பெருசுகளை தன் கூட அவன் அறைக்கு அழைத்துச் சென்றான். வீட்டில் இருந்த டிவி பொட்டியை போட்டான். பெருசுங்களுக்கு எச்சில் ஒழுகத் தொடங்கியது.

ஒரு பெண் ஒருத்தனுக்கு கால் அமுக்கி விடுவதிலிருந்து காட்சி தொடங்குகிறது.

“அவள் பெயர் ரஞ்சிதா”

Thursday, March 4, 2010

முடிச்சவிழும் தருணங்கள்......3


நகர்தலுக்கும்
மையங்கொள்ளுதலுக்கும்
உள்ள வித்தியாசம் புரிகிறது

இரண்டுக்கும் ஆசைதான்
எனினும் சாத்தியம்
அறிவதால் நிராசையாகிறது

கடவுள் என்று
தன்னை சொல்லிக்கொண்ட
ஒருவனுடன் உரையாட
நேரிட்டது.

நல்லவனாய் இருப்பதைப்பற்றி
பேச்சு வந்தது.
அப்படி இருக்கப்போய்
என் தொடைக்கறியை
வேடனும் புறாவும்
பகிர்ந்து கொண்டார்கள்
என்று சொன்னேன்.

இல்லையென்றால்
புறா உணவாகியிருக்கும்
வேடன் சபித்திருப்பான்
என்பதையும் சேர்த்து


Monday, March 1, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....5


திருச்சி அரிமா சங்கம் நடத்திய குறும்பட போட்டியில் என் “சியர்ஸ்” படத்துக்கு விருது கிடைத்தது. கிழக்குவாசல் ஆசிரியர் திரு. உத்தமசோழனுக்கு என் நன்றிகள். காரில் நோகாமல் அழைத்து சென்ற அகநாழிகை வாசுவிற்கும் என் அன்பும், நன்றிகளும்..

டிஜிட்டல் தொழில்நுட்பம் எளிதாகி விட்டது. நிறைய குறும்படங்கள் தயாரிக்கப்படுகிறது. சின்ன சின்ன விஷயங்களை அழகாக சொல்கிறார்கள். இச்சை என்றொரு படம் பார்த்தேன். அதன் காணொளி கிடைக்கவில்லை. எனவே சுருக்கமாக கதை.

ஒரு கணவன் மனைவி. குழந்தையில்லை. தாம்பத்யமும் திருப்தியில்லை. மருத்துவரை அணுகுகிறார்கள். மருத்துவர் கணவனின் விந்து அணுக்களை பரிசோதிக்க வேண்டும் என்கிறார். கணவன் கழிவறைக்கு செல்கிறான். முயற்சிக்கிறான். பலன் இல்லை.

கழிவறையின் வெண்டிலேட்டர் வழியாக சாலை தெரிகிறது. அங்கு பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணின் பின் பக்கம் தெரிகிறது. அழகான அனாடமி அவளுக்கு. இடுப்பில் சேலை விலகி பளீரென்று சதை தெரிகிறது. காமிரா மார்பகங்களின் பக்கவாட்டிலிருந்து இடுப்பு வரை அலசுகிறது. கணவன் என்ன செய்கிறான் என்று பார்வையாளனுக்கு தெளிவாக புரியும் காட்சியமைப்பு!

இப்போது அந்த பெண் திரும்புகிறாள்.கறுப்பு கண்ணாடி அணிந்திருக்கிறாள். கையில் ஒரு ஸ்டிக். தட்டியவண்ணம் நடந்து போகிறாள்.

எளிமையான காட்சியமைப்பில் மனித மனத்தின் உணர்வை அடர்த்தியாக சொல்கிறார் இயக்குனர்.



நான் முதலில் எடுத்த குறும்படத்தின் பெயர் “missing letters" .அதன் மேக்கிங்கில் எனக்கு திருப்தி இல்லை. எனவே அதை எங்கும் திரையிட அனுப்பவில்லை. ஆனால் அதன் கான்செப்ட் எல்லோருக்கும் பிடித்தது. குடும்ப கட்டுப்பாட்டை அடிப்படையாக கொண்டது. முதலில் “நாம் இருவர் : நமக்கு இருவர் “ பின்பு அது நாம் இருவர் “ நமக்கு ஒருவர் “ என்றானது. நாளை “நாமே இருவர் : நமக்கு ஏன் இன்னொருவர் “ என்றாகி விடுமோ ? என்பதை அடிப்படையாக ஸ்கிரிப்ட் அமைத்திருந்தேன்.

”மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக” என்ற பாடலுக்கு வருங்காலத்தில் பொழிப்புரை எழுதி புரிய வைக்க வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல. சித்தி, சித்தப்பா, ஒன்று விட்ட சகோதரர்கள் என்று உறவு சங்கிலியே அறுபட்டு விடும் சூழல்தான் இருக்கப்போகிறது. தனித்தனி தீவாய் பிள்ளைகள் வளர்வதால் ஏற்படும் விளைவுகள் ! ஆண், பெண் பற்றிய புரிதலின்மைக்கும் இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.சமூக, பொருளாதார காரணங்கள் இருந்தாலும் இது ஆரோக்கியமானதா என்பது பெரிய கேள்விக்குறிதானே !

முழங்கையிலும், கால் முட்டியிலும் சின்ன சிராய்ப்பு கூட இல்லாமல் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முடிகிற காலம் இது. அதானாலோ என்னவோ வாழ்க்கையின் சின்ன வேதனை, ஏமாற்றத்தை கூட இன்றைய இளம் தலைமுறையினரால் சகித்து கொள்ள முடிவதில்லை. இளம் வயது தற்கொலைகள் அதிகரித்து வருவதே அதற்கு சான்று.

கணினி விளையாட்டு. தொலைக்காட்சியில் ரெஸ்லிங் என்கிற பயங்கர வன்முறை. போதாத குறைக்கு தொலைக்காட்சி சீரியல்களில் ரத்தம் இல்லாத வார்த்தை விஷம். எந்த அப்பாவோ, அம்மாவோ இன்றைய குழந்தைகளுக்கு கதை சொல்கிறார்கள் ? அவர்கள் வெளியில் சென்று விட்டு தாமதமாக வர நேர்ந்தால் பிள்ளைகளிடம் கேட்கிறார்கள் “இன்னிக்கு திருமதி செல்வம் என்னாச்சு ? பாக்கியத்தை அடிச்சு விரட்டியாச்சா? (என் பக்கத்து வீட்டில் பார்த்தது) உறங்க போகும் முன் வன்மத்தைதான் கடைசியாக விழுங்கி விட்டு செல்கிறார்கள்.



ஆனை...ஆனை..
அழகர் ஆனை.
கட்டுக் கரும்பை
முறிக்கும் ஆனை
காவேரிக்கரையை
கலக்கும் ஆனை.
அப்பாக்களுக்கு நேரம் இருப்பதில்லை.
தாத்தாக்கள் உடன் இருப்பதில்லை.
எப்போதாவது ஆசிர்வாதங்கள்
மட்டும் தான் பேரன்களுக்கு
கொடுப்பினை “chat”களில்