Wednesday, December 10, 2014

ஆகாயத்தாமரைகள்..
கெட்டிலில் இருந்து வெந்நீரை ஊற்றி பச்சைத்தேயிலை தேனீரை தயாரித்தேன் ..மீண்டும் அதே சிந்தனை .. எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பத்திரமாக நடமாட முடியுமோ அப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிட்டியதாக கொள்ளலாம்..மகாத்மா இப்படி சொன்னாரா? இல்லை எப்போது ஒரு பெண் உடல் முழுவதும் நகைகளை அணிந்து நள்ளிரவில் நடமாட முடிகிறதோ என்றா.. எனக்கு அது இப்போது அவசியம் தெரிந்தாக வேண்டும்..கூகூளில் சரியாக பிடிபட வில்லை.. சமயங்களில் கூகுளாண்டவர் குழப்பியும் விடுவார்.. யார் நாளை எடிட்டரிடம் வாங்கிக்கட்டிக்கொள்வது.. மொபைல் அடித்தது..அலுவலகத்திலிருந்துதான்..

சார்…சுகுணாதான்…

எஸ் டியர்..நானே உன்னை கூப்பிடனும்னு நினைச்சேன்..காந்தி..
உங்களுக்கு 2 மணி விமானத்தில் டிக்கெட் போட்டாச்சு . 11 மணிக்கு கேப் வரும்.. தில்லி.. அந்த கால்டாக்சி கற்பழிப்பு கேஸ். எடிட்டர் ஒரு புது கோணத்தில் செய்தியை விரும்புகிறார் . டாட்.
சுகுணா கட் பண்ணி விட்டாள்.. விஷயம் க்ளியரா இருக்கு . கால் டாக்சியில் பயணித்திருக்கிறாள்.. அசதியில் தூங்கி விட்டாள் . அந்த பாஸ்டர்ட் மானபங்கப்படுத்தி விட்டான்..க்ளீன் ஸ்டேட்மெண்ட் . மெடிக்கல் ரிப்போர்ட்டிலும் அதேதான் ..இதில் அங்கு போய் நான் என்ன ஜேம்ஸ்பாண்ட் வேலைப்பார்க்க முடியும் என்று நினைக்கிறார் எடிட்டர்.. களைப்பாக இருந்தது எனக்கு ..நாளை சுமி வருகிறாள்.. கூடவே குட்டிம்மாவும் . 45 நாட்களே ஆன ரோஜா .. எத்தனை பிளான் வைத்திருந்தேன்.. மூன்று முத்தங்கள் .இரண்டு சுமிக்கும்,மூன்றாவது சுமிக்கும்..அஃப்கோர்ஸ் ..குட்டிம்மா சுமியின் மடியில் இருக்கும்போதுதான்.

வண்டி எண் ..ஓட்டுநர் பெயருடன் குறுஞ்செய்தி வந்தருந்தது .. டிவியில் அர்ணாப் யாரோ மந்திரியை ஜென்ம விரோதத்துடன் கிழித்துக்கொண்டிருந்தான் . எனக்கும் தொலைக்காட்சி மீடியாதான் பிரதானமாயிருந்தது.. ஆனால் இங்கு பிரிண்ட் மீடியாவுக்கு வரும் வரை.. நான் ரிப்போர்ட் செய்யும் செய்தியை அச்சில் வாசிக்கும்போது, வாசிப்பது என்பதை விட, அந்த செய்தியின் வாசனையை நுகர்வது.. அதில் இருக்கும் ஒரு மயக்கம்… ஒரு வகையான அடிக்‌ஷன் என்றே சொல்வேன்..எனக்கு அந்த தில்லி பெண்ணின் முகம் வந்துப்போயிற்று.. அவள் புகைப்படம் யாருக்கும் தரப்படவில்லை.. முகத்தில் என்ன இருக்கிறது.. வன் கொடுமைக்குள்ளாகும் எல்லாப்பெண்களுக்கும் ஒரே முகம்தான்.. அடிபட்ட முகம். வேதனை உறைந்திருக்கும் முகம்..

சார்… நான் இங்க லேகா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் கிட்ட இருக்கேன்.. எப்படி வரனும்?
ன்னை ஆச்சர்யபடுத்தியது அந்தக்குரல் . அப்படியே நேர வாங்க..நான் கீழ வரேன்.. 8998 லோகன் தானே..

வண்டியில் ஏறி முன் சீட்டில் அமர்ந்தேன்.. ஏர்போர்ட் போக எப்படியும் 45 நிமிடம் ஆகும்.. வழக்கமாக இது போன்ற சமயங்களில் அசைன்மெண்ட் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவேன்.. முதலில் கண்களை மூடி ஒரு நிமிடம் சின்ன பிரார்த்தனை.. அது விஷயத்துக்குள் என்னை செலுத்திக்கொள்ள.. ஆனால் இப்போது நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.. கம்பெனி யூனிஃபார் அணிந்திருந்தாள் . கழுத்தை சுற்றி துப்பட்டா . முழுநிலவை பாதி துணியால் மறைத்தது போல்.. எத்தனை சிந்தனை வயமிருந்தாலும் ஒரு துளியை கூட பிரதிபலிக்காத முகம். ஒரு தாமரைப்பூவை போலிருந்தது .
அதெல்லாம் விட ஆச்சர்யம் ..அவள் எனக்கு டிரைவராக அமைந்ததுதான்.. நான் ரிப்போர்ட் செய்யப்போகும் கேஸிலும் இப்படித்தான். ஒரு ஆண் .. ஒரு பெண்.. இங்கு பரஸ்பரம் ஸ்தானம் மாறியிருக்கிறோம்..

நீங்க பத்திரிக்கைகாரரா என்றாள்.. ரேடியோவின் ஒலியை குறைத்தபடி..
அவசரமாக இல்லை என்றேன்.. வழக்கமாக அலுவலக ஐடியில் டாக்சி புக் செய்ய மாட்டார்கள்.. சுகுணாவின் தனிப்பட்ட கணக்கில்தான் செய்திருப்பார்கள்..

இல்லை .உங்கள் முகத்தில் ஒரு கேள்விக்குறி ஓடிக்கொண்டே இருக்கிறது .. உரையாடலை ஆரம்பிக்கிறாள் போலும்.

உன்..சாரி உங்கள் பெயர் என்ன என்றேன்

தாமரை.. என் பெயருக்கு வடமொழியில் தாமரை என்று அர்த்தம்னு எங்கப்பா சொல்வார்.

அவள் குறிப்பிட்ட அதே கேள்விக்குறியுடன் அவளை பார்த்தேன்.

ஆனால் அது அப்போது.. இப்போது என் பெயருக்கு வானம்..ஆமாம்..ஆகாயம்னு அர்த்தம்.. உங்க பேர் தெரிஞ்சுக்கலாமா? நிச்சயம் சுகுணாங்கிற பேர் உங்களுக்கு பொருத்தமா இருக்காது

நான் அவள் நகைச்சுவையை ஊக்குவிக்கும் விதமாக மெலிதாக சிரித்தேன்.. நீங்க எப்படி இந்தப்புரொஷனில்.. ?

ஏன் ..நாங்கதான் இப்ப விமானமே ஓட்டறமே

நீங்க செய்திகள் கேட்பதே இல்லையா? நாட்டு நடப்பு உங்களுக்கு பயமாக இல்லையா?

நீங்க என்னை ஒருமையிலெயே அழைக்கலாம்.. மாறி மாறி பேசினா எனக்கு சங்கடமா இருக்கும்.. இது அப்துல் எனக்கு கொடுத்த இரண்டு பரிசுகளில் ஒன்று.. அப்புறம் உங்களுக்கு பயமா இருந்தா..அந்த பேனிக் பட்டனை அழுத்துங்க.. காவல் கண்ட்ரோல் ரூமில் அலாரம் அடிக்கும் என்றாள்

சரி அப்துல் என்றேன் எனக்கேயான ட்ரேட் மார்க் கேள்விக்குறியுடன்..
அப்துல் ஈஸ் மை எக்ஸ் ஹஸ்பெண்ட்..இல்லை நான் அப்துலின் மாஜி மனைவி

சிணுங்கிய மொபைலை துண்டித்தேன் . இன்னொரு பரிசு என்றேன்

நானும் அப்துலும் காதலித்தோம்.. வீட்டுக்கு தெரிஞ்சுப்போச்சு.. வழக்கமான காதலை காப்பாற்றிக்கொள்ளும் சம்பிரதாயப்படி வீட்டை விட்டு வந்து விட்டேன் . அந்த இரண்டாவது பரிசு . பானு. இரண்டாம் வகுப்பு படிக்கிறாள்.

குட் லவ் ஸ்டோரி.. நான் கூட ..

இருங்க..இன்னும் கதை முடியலை.. இப்போ அப்துல் என் கூட இல்லை.. அவர் அவரோட மூணாவது மனைவியுடன் இருக்கிறார் .

நீ திரும்ப உங்க அப்பா வீட்டுக்கு போகலையா?

எந்த முகத்துடன் போறது ? மறுபடியும் பொட்டு வச்சுகிட்டா..எங்க ஊர்ல வெட்டி போட்ருவாங்க.. நான் விரும்பி ஏத்து கிட்ட வாழ்க்கை . நானே வாழ்ந்துட வேண்டியதுதான் . ஆனால் நான் இப்பவும் சந்தோஷமா இருக்கேன் . என் இளமையில் இருந்தா மாதிரியே …
வீ ஆர் நியரிங் சார் .. நீங்க உங்க பத்திரிக்கையில் இத எழுதுவீங்களா?
நான் மௌனமாக இருந்தேன். எனக்குள் இருக்கும் பத்திரிக்கையாளனின் கை அரிப்பெடுக்க ஆரம்பித்திருந்தது.. ஏனோ சுமியின் நியாபகம் வந்தது..அப்போதே அவள் தான் அழைத்திருந்தாள்.. துண்டித்து விட்டேன். ஏர்போர்ட் வந்து விட்டது . பில்லை கொடுக்கும்போது மீண்டும் கேட்டாள் ..சார் உங்க பேரை சொல்ல வேணாம்னா வேண்டாம் என்றாள்..
லவுஞ்சை நோக்கி நடந்தேன்.  மொபைல் அடித்தது . சுமிதான்.
அப்துல்..வேர் ஆர்யூ என்றாள்.. அவளிடம் நடந்ததை சொல்ல ஆரம்பித்தேன் .
6 comments:

மணிஜி said...

இன்றைய தி ஹிந்துவில் படித்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்டது.. வேறு எந்த நோக்கமும் இல்லை..

ஸ்ரீராம். said...

சரியாகப் புரியவில்லை. அப்துல் இவர்தான் என்றால் ஏன் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை?

'பரிவை' சே.குமார் said...

கதையின் போக்கு அருமை அண்ணா...
இவர்தான் அப்துல் என்றால் ஏன் அவளுக்குத் தெரியவில்லை... என்பது யோசித்தும் புலப்படவில்லை அண்ணா...

மணிஜி said...

இவர் பெயரும் அப்துல் ..அவ்வளவே..

manjoorraja said...

அவர் இவரல்ல, இவர் அவரல்ல, இருவரும் வேறு வேறு. ஆனால் இவர் அவர் அல்ல அவர் இவர் அல்ல....

Unknown said...

வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
வாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
link is here click now!