Saturday, August 14, 2010

சேஷீ


விடாமல் மொபைல் அடித்துக் கொண்டேயிருந்தது. கண்ணை திறக்கமுடியாமல் எரிச்சல். நைட்டு அடிச்சது கொஞ்சம் ஓவர்தான். மீண்டும் ஒலிக்க எடுத்தால் “சேஷு” calling.. என்ன இந்த நேரத்துல.. கரகரப்பாய் ஹலோ என்றேன்.. அண்ணா..பாரதி பேசறேன்.. குரல் உடைந்து இருந்தது.பாரதி சேஷுவின் மனைவி.

என்னம்மா? சேஷு இன்னும் வரலையா?

அண்ணா..அவர் போயிட்டார்.

குப்பென வியர்த்தது..வாட்..என்னம்மா சொல்றே?

ராத்திரியெல்லாம் தூக்கம் வராம அவஸ்தை பட்டு கிட்டிருந்தாரு..டீ வேணும்னு கேட்டாரு.. போட்டு எடுத்துகிட்டு வர்ரதுக்குள்ள..... அழ ஆரம்பித்தாள்.

சேஷு ஒரு விளம்பர காப்பி ரைட்டர். பெரிய ஏஜன்சிகளின் ஆபத்பாந்தவன். கான்செப்ட்டும்,ஒரு மணி நேரமும் கொடுத்தால் போதும்.. பின்னி விடுவான்.. அந்த பெயிண்ட் விளம்பரமும்,மசாலா விளம்பரமும் ஹிட் ஆனதுக்கு முழு காரணம் சேஷூதான். குடி,சிகரெட் எல்லாம் ஓவர்டோஸ்தான். குழந்தை இல்லை. ”பாரதிதான் எனக்கு குழந்தை.என்ன... அவதான் குழந்தை இல்லைன்னு பித்து பிடிச்சு பேசுவா.

பாரதி..நா கிளம்பிட்டேன். நீ தைரியமா இரு..

அண்ணா..அவர் வீட்டுல சொல்லிடுங்க.

இருவரும் காதல் திருமணம். பாரதிக்கு அப்பா,அம்மா யாருண்ணே தெரியாது. ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தவள்.. சேஷூவின் வீட்டில் எதிர்ப்பு.மீறி பதிவு திருமணம். நான் தான் கையெழுத்து போட்டேன்.” இனி அந்த பெண் என்ன செய்யப் போகிறாள்..

ரெண்டாவது ஒலிப்பில் போனை எடுத்து விட்டான் ராஜூ.. சேஷூவின் தம்பி. ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஒரு பாங்கில் வேலை..

என்னன்னா? இந்த நேரத்தில்..

விவரம் சொன்னேன்...

நா வர்ர வரைக்கும்???

பாவி நீதான் கொள்ளி போடணும்.. சீக்கிரம் வா.. ஃப்ரிசர் பாக்ஸ் அரேஞ்ச் பண்ணிடறேன்..

லிண்டாஸ் வைத்தி, ஓ அண்ட் எம் காத்ரீன் சொன்னவுடன் வெடித்து அழ ஆரம்பித்தாள். நைட்டு மப்பு இன்னும் இருக்கும் போல. போன வாரம் அவள் வீட்டில் ஒரு பார்ட்டி.. குறையொன்றும் இல்லை என்று சேஷூ பாட, அவள் ஒன்ஸ் மோர் கேட்டது ஞாபகம் வந்தது. நெருங்கிய அனைவருக்கும் தகவல் சொல்லி நான் சேஷூவின் வீட்டை அடைந்தபோது யாரும் வந்திருக்கவில்லை. வாசலில் பாரதி விலகி வழிவிட ஹாலில் அது ஒருக்களித்து இருந்தது. திடுக்கிட்டு பாரதியை கேள்விக்குறியுடன் பார்த்தேன்..

இப்பதான் அண்ணா..திரும்பி படுத்துகிட்டார் என்றாள்

தலை சுற்றுவது போல் இருந்தது..பாரதி வெறித்த பார்வையுடன் இருக்க உலுக்கினேன்

இல்லண்ணா..ஒரே பக்கமா படுத்து உடம்பு வலிக்குமேன்னு நாந்தான் திருப்பிபடுக்க வச்சேன்..எழுப்பட்டுமா?

சேஷூவை தொட்டு பார்த்தேன்.உடல் சில்லிட்டு சர்வ நிச்சயமாக செத்து போயிருந்தான்.

அண்ணா ..அவருக்கு போட்ட டீ ஆறி போய் அப்படியே இருக்கு.சூடு பண்ணி கொண்டு வரட்டுமா?


கடவுளே.என்ன கொடுமை இது..என்ன ஆச்சு ?இவளுக்கு? மனசிதைவு? நொடியில் மனம் பிறழுமா என்ன?

பாரதி..நீதானே சொன்ன..சேஷூ போயிட்டான்னு..அதுதான் உண்மை...உனக்கு அழுகை வரலையா?வாய் விட்டு கதறுடி..

தெளிஞ்சவுடனே அவரே எழுந்திருப்பார் விடுங்கண்ணா..

தகவல் தெரிந்த நண்பர்கள் வர ஆரம்பித்திருந்தனர்.. காத்ரீன் பாரதியை ஆறுதலாக அணைத்து விசும்ப ஆரம்பித்திருந்தாள்.. அநேகமாக வரும்போது லேசாக குடித்திருக்க வேண்டும். ஃப்ரிசர் பாக்ஸ்காரன் மொபைலில் அழைத்து விலாசம் சரி பார்த்துக் கொண்டான். எனக்கு குடிக்க வேண்டும் போல் இருந்தது. காத்ரீனிடம் இருக்கா என்று கேட்டேன்.. கார் சாவியை கொடுத்தாள்.

சேஷூ....எனக்கு தாமதமாகத்தான் அறிமுகம்.. நமக்கு மிகவும் பிடித்தமானவர்கள் தாமதமாக அறிமுகமாகி,சீக்கிரம் பிரிந்து விடுவது எவ்வளவு வேதனையை தருகிறது. தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அந்த எரிச்சல் எனக்கு தேவையாயிருந்தது. சிகரெட் பற்ற வைத்து கொண்டேன்.. சேஷூவுக்கும்,எனக்குமான நட்பு ஒரு எட்டு வருடம் இருக்கலாம் முதல் சந்திப்பே ஒரு மதுக்கடையில்தான்.. யாருடனோ விவாதித்து கொண்டிருந்தவன் என் கவனத்தை இழுத்தான்.. தீப்பெட்டி இருக்குமா?என்ற சாதாரண கேள்வியுடன் அவர்கள் உரையாடலில் நுழைந்தேன்.. அவன் பேச,பேச என்னை அவனிடம் இழந்தேன். ம்ம் சேஷூவிற்கு இப்படி எதுகை,மோனை பிடிக்காது .அது ஆர்டிபிஷியலாக இருக்கும்.. நேரா சொல்லணும் என்பான்.. மொபைல் அடித்தது.ராஜு..

அண்ணா..திருச்சி தாண்டிட்டேன்.இன்னும் அஞ்சு மணிநேரம் ..வந்துர்றேன்..

மரணத்தை பற்றி சேஷூவிற்கு சிலாகித்து பேச பிடிக்கும். அதுவும் சாராயம் குடித்து விட்டால் சாவை கொண்டாடியே விடுவான். இதற்கென்று திருநீர்மலைக்கு போவோம்...வா அய்யரே..வரவேற்று சொம்பில் கொடுப்பார்கள். சேஷூ முதலில் பியுரிட்டி செக் பண்ணனும்னு சொல்லி பத்து ரூபாய் நோட்டை நனைத்து கொளுத்துவான்.. ஸ்பிரிட் வரைக்கும் எரியும் பாரும்பான்.. பின் பேச ஆரம்பித்தால் அருவிதான். ஆங்கிலமும் தமிழும் அருவியாய் கொட்டும். உலகசினிமா,இலக்கியம் எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள்களுடன்... சிகரெட் கையை சுட இன்னொன்று பற்ற வைத்துக் கொண்டேன்..

செத்தா அழறது எனக்கு பிடிக்கலை.எதுக்கு அழனும்? ஒரு போராட்டத்துக்கு அப்புறம் கிடைக்கிற விடுதலைடா.. அதை அனுபவிக்கனும்டா..படுக்க வச்சு, மெலிதாக பகவத்கீதை, கண்ணதாசன் பாடல்கள், எம்.எஸின் பஜகோவிந்தம் , அப்புறம் குறையொன்றும் இல்லை ஒலிக்கணும்.

சே..நினைச்சாலே எவ்வளவு ஆனந்தமா இருக்கு.. அதுவும் கண்ணதாசன் மரணத்தை வென்றவன்.. அவன் பாட்டு சாவு வீட்டில ஒலிக்கிறது எவ்வளவு பொருத்தம்.. ஆனா அவன் தான் “பாவி..அல்பாயுசல போயிட்டியேடா? போதை தலைக்கேற சேஷூ அழ ஆரம்பித்தான்.

மழுங்க வழிக்கப்பட்டு குளிப்பாட்டி திருமண்,ஸ்ரீசூர்ணம் இட்டு சேஷூ என்ற சேஷாத்திரி அய்யங்கார் ஹாலில்கிடத்தப்பட்டிருந்தார்..மெல்லியதாக எம்.எஸின் குரல் கேட்டுக் கொண்டிருக்க அருகில் சென்றேன்...

காலையில் பார்த்த சவக்களை இல்லை. ஒரு வித பரவசம்..தேஜஸ்.. சொல்லிக்க முடியலைடா..திடீர்னு அழைப்பு வந்துடுச்சு.. என்று அவன் முகத்தில் உறைந்திருந்த மர்மபுன்னகை சொல்வது போல் இருந்தது

என் பிரிய சிநேகிதா..சேஷா...போ..வருகிறேன்.. சந்திப்போம்...குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டேன்...துக்கமும்,போதையும் தலைக்கேறியிருந்தது..

அவனுக்கு மிகவும் பிடித்த, இந்த பாட்டுக்காக சாகலாம்டா என்று அவன் உருகிய.....

"மலர்ந்தும் மலராத பாதி மலர்போல

வளரும் விழி வண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே!

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளந்தென்றலே - வளர்

பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே!'

சத்தமாக வாய் விட்டு பாடி...

“பாவி கண்ணதாசன் மட்டுமா?நீயும்தாண்டா....அடக்க மாட்டாமல் வெடித்து..........

8 comments:

மணிஜி said...

மீள் பதிவு

vasu balaji said...

ம்ம்

ரமேஷ் வைத்யா said...

அபாரம். முதலில் போட்டபோதே படித்தேன். இப்போது கொஞ்சம் திருத்திப் போட்டீர்களோ என்று எண்ணவைக்கும் படி இருக்கிறது. நல்ல ஆளுமை. உங்கள் வழக்கமான உளறல் பாணி இல்லை. ஊர் திரும்பியாயிற்றா? போன் பண்ணாததற்குக் காரணம்.... அதேதான்!

ரமேஷ் வைத்யா said...

இந்த வானம்பாடிக்கு ரெம்ப நேரம் கிடைக்கும் போலருக்கே... (நாங்க எல்லாம் ஒங்க வாசகருங்க. ஹிஹி)

பனித்துளி சங்கர் said...

மீள் பதிவு என்றாலும் அதன் ரசனை இன்னும் குறையாமல் இருக்கிறது புதுமைபோலவே . நல்ல இருக்கு நண்பரே பகிர்வுக்கு நன்றி . புதிய பதிவெழுத நேரமில்லை என்று நினைக்கிறேன் .எல்லோருக்கும் இதே நிலைதான் .

'பரிவை' சே.குமார் said...

நல்ல ஆளுமை.

Romba Nalla irukku.

கமலேஷ் said...

மனம் கனத்து ஒன்றுப் போய் படிக்க வைக்க கூடிய எழுத்து.

பா.ராஜாராம் said...

//காலையில் பார்த்த சவக்களை இல்லை. ஒரு வித பரவசம்..தேஜஸ்.. சொல்லிக்க முடியலைடா..திடீர்னு அழைப்பு வந்துடுச்சு.. என்று அவன் முகத்தில் உறைந்திருந்த மர்மபுன்னகை சொல்வது போல் இருந்தது//

அழுதுட்டேன்யா.

கைய தொட்டு கண்ணுல ஒத்திக் கிட்டேன்.

(maniji, stil i've da same prlm. pls consider.)

pls...