Friday, July 2, 2010

வாழைப்பூ வாசனை


ஞானானந்த மயந்தேவம்...
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யாநாம்
ஹயக்கீரிவம் உபாஸ்மஹே!


கணீரென்று அம்மாவின் குரல். நான் திரும்ப சொல்கிறேன்.

படிப்பு நன்னா வரும்டா தங்கம். எதுவுமே மறக்காது. எப்பல்லாம் தோணுதோ, சொல்லிண்டேயிரு .

செண்டர் ஃபார்வேர்டு. தேர்ந்த தட்டச்சுக்காரனின் விரல்கள் இயங்குவதை போல் என் கால்கள் விளையாடும். இடதும் வலதுமாய் சகாக்களிடம் அனுப்பி, திரும்ப பெற்று கொண்டு போய் நேர்த்தியாய் இலக்குதான். சமயங்களில் வரிசையாய் மூன்று. எதிரடி மறந்து பிரமிப்பாய் உன்னிடம் கொஞ்சம் கற்றுக்கொண்டோம் என்று மாற்று முகாமின் தலைவன் சிலாகிப்பான் சமயங்களில். கோப்பைக்குள் வெற்றிகள்.

சார் நீங்க தீர்த்தாமாடியாச்சா? இந்த பவித்ரத்தை மோதிர விரல்ல போடுங்கோ. இதை தொடைக்கு அடியில போட்ருங்கோ. சொல்லுங்கோ. ஸ்ரீமான் கோவிந்த கோவிந்த..வேங்கடநாராயண பிரிதத்தம்.. வலது தொடைல கையை வச்சு குவிச்சு மூடி..

உமாவின் ஈரமுத்தம். எட்டாம் கிளாஸ் படிக்கும்போது அவளிடம் பெற்றது. இன்றும் உள்ளே ஒளிந்திருக்கிறது. இரண்டு முத்தங்கள் . இரண்டாவது முத்தம்தான் இப்போதும் நினைவில். கிணற்றடியில் துணி துவைக்கும் கல்லின் மேல் குத்துக்காலிட்டு உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். உமா வந்தாள். சொல்ல மறந்துவிடுவேன். நீங்கள் நியாபகப்படுத்துங்கள். உமா ஒன்பதாவது படிக்கிறாள். எப்போது அவளை முதலில் பார்த்தேன் என்று நினைவில்லை . ஆனால் நான் பார்த்த போது அவள ஈர ஆடையை மாற்றிக் கொண்டிருந்தாள் .

எனக்கு அவளிடம் இருந்த பிரியம் காதலாய் இருக்குமோ என்று தோன்றியது எப்போது என்று சரியாக சொல்லமுடியவில்லை. உமாவோடு என்னால் நடக்க முடியவில்லை..மீண்டும் கிணற்றடிக்கு வருகிறேன். உமா எதை நினைத்து இப்படி அழுது கொண்டிருக்கிறாய் என்று கேட்டாள். நீ அன்று கொடுத்தாயே ஒரு முத்தம். அதைத்தான் என்கிறேன். அவ்வளவுதானா என்றபடி இறுக்கி அந்த இரண்டாவது முத்தத்தை கொடுத்தாள். ஒரு எட்டு நிமிடங்கள் அந்த முத்தத்தில் கால அளவு இருக்கலாம். சற்று முன் காட்பரீஸ் சாப்பிடிருக்க வேண்டும் . ஒரு சின்ன துகள் அவள் மூலம் என் பல்லிடுகில் . இந்த நினைவுகள் போலவே .

என்னத்துக்கு இப்படி பட்டபகல்ல எல்லா விளக்கையும் எரிய விடுறிங்க? மருமகள் கேட்கிறாள் .

நான் கண்களை திறக்காமல் அவள் முகத்தை மனக்கண்களில் கொண்டு வரும் முயற்சியில் இருந்தேன்.பனிக்குடத்தில் நீந்தி கொண்டிருக்கும் சிசுவின் மீது சூடான கரங்கள் ஆதுரத்துடன் தடவி கொடுக்கும் சுகத்தை அனுபவிக்க வேண்டும் போலிருந்தது. அம்மாவின் முகம் தெரிய ஆரம்பித்திருந்தது.

எத்தனை பேரன்?

ஒன்னுதான் மாமா .

நெய் பந்தம் ரெடி பண்ணனும். சார் இந்த மாலையை எல்லாம் எடுத்துடுங்க .

அப்போது எங்கள் தோட்டத்தில் நிறைய வாழைமரங்கள். மொந்தை வாழைப்பூக்கள். அடிக்கடி அம்மா வாழைப்பூ மசியல் செய்வாள். இப்போதும் எங்கோ அந்த வாசனை கமழ்ந்து கொண்டே இருக்கிறது.

திஸ் ஈஸ் நாட் டோட்டல் மெமரி லாஸ். மே பி சிம்டம்ஸ் ஆஃப் அல்சீமர். நீங்க அவர் பிள்ளை இல்லியா? உங்க முகம், பேர் எல்லாம் கூட சட்டுன்னு மறந்து போகும். இல்லை சட்டுன்னு நியாபகம் வராது. அட் ஒன் ஸ்டேஜ் அவர் பெயர், முகம் கூட மறக்கலாம். கண்ணாடியில் பார்க்கும்போது இவர் யாருண்ணு அவருக்கே குழப்பம் வரலாம். அப்புறம் நீங்க எப்ப ஸ்டேட்ஸ் கிளம்பறீங்க? அப்பாவை யார்...?

நாவிதன் அப்பல்லாம் எங்கள் இடத்திற்கே வந்து விடுவான். அப்பாவின் மேற்பார்வையில் சுத்தமாய் சிரைக்கப்படும். இது ஆச்சாரம் இல்லை. ஹைஜீனிக் - அப்பா .

உனக்கு யார் மாதிரி ஹேர்கட் பண்ணனும்? இரண்டு போட்டோக்களை பார்பர் அவனிடம் காட்டுகிறார். ம்ம்ம்.. எனக்கு அப்பா மாதிரி தான் வேணும் ! கண்ணை நல்லா இறுக்கமா மூடிக்கோப்பா .

எனக்கு நியாபகம் வந்து விட்டது. அந்த இரண்டாவது முத்தம். உமா, கிணற்றடி, தோய்க்கிற கல். அந்த முத்தம் முடிகிற வரை நான் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன். இறுக்கமாக. திறந்த போது உமா போய் விட்டிருந்தாள். அன்று இரவு முழுசும் உப்பு கரித்துக் கொண்டேயிருந்தது.

அப்பா நான் சொல்றது உங்களுக்கு புரியுதான்னு பாருங்களேன். ஜஸ்ட் டிரை டூ அண்டர்ஸ்டேண்டு . இந்த வாய்ப்பை நான் மிஸ் பண்ண முடியாது .

உன் கண்ணுல மயிரு போயிடுச்சா ? அப்பா ஊதட்டுமா?

அவன் சொன்னது எனக்கு புரிந்தது. ஆனால் இப்போது அது நினைவில் இல்லை. அதனால் நியாபகம் வரும்போது நிச்சயம் சொல்கிறேன். இப்போது எனக்குள் எட்டு அலைவரிசைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. என்று நினைக்கிறேன். அவற்றை வரிசை படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது ஒழுங்கு படுத்த. அந்த முதல் முத்தம். அவள் பெயர் என்ன? கொஞ்ச நேரம் முன்னால் கூட சொல்லிப்பார்த்துக் கொண்டேனே! இப்போதெல்லாம் இப்படித்தான் நடக்கிறது. நீங்கள் வாழைப்பூ மடலில் தயிர் சாதம் சாப்பிட்டிருக்கிறீர்களா? உங்களால் அதை மறக்க முடியுமா? அந்த முதல் முத்தம் அப்படித்தான். ஆனால் அதை பெற்றுக் கொண்ட தருணம் மறந்து விட்டது. அதை கொடுத்தவள். நினைவுக்கு வந்து விட்டது. உமா. முழு பெயர் உமாராணி ! ஆனால் அவள் எங்கள் வீட்டிற்குள் வருவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். பின் பக்கமாகத்தான் வருவாள்.

அவுன்ஸ் விஸ்கி. இரண்டு ஐஸ் துண்டுகள் . ஆன் தி ராக்ஸ். சியர்ஸ் ..டியர் ஃப்ரெண்ட்ஸ் . தி ஈஸ் டூ செலிப்ரேட் ஹிஸ் பிரமோஷன். ஜி. எம். மார்க்கெட்டிங் . மால்ட் அதிகம் எடுத்துக்க கூடாது .

கோவிந்தா எல்லாம் ரெடியா? எல்லாரும் பூணுலை மாலையா போட்டுக்கோங்கோ . நீங்க இந்த மந்திரத்தை ....

நான் லேசாக கண்களை திறக்க முயற்சிக்கிறேன். கொஞ்சம் வெளிச்சம் வந்தால் இடது பக்கம் அவள் போட்டோவை தரிசிக்கலாம். திருவஹீந்திபுரம் ஹயக்கீறீவர் சந்நிதியில் ஞானானந்த மயந்தேவம் நிர்மலம்... இப்போது தலைகீழாக நீந்த ஆரம்பிக்கிறேன். பனிக்குடத்தினுள் . மேடிட்டிருக்கும் வயிற்றை உமா தடவிக் கொண்டிருக்கிறாள். நான் கிணற்றடியில் உட்கார்ந்திருக்கிறேன். வீட்டினுள் இருந்து வாழைப்பூ மசியல் வாசனை. இரண்டு வாழைப்பூக்கள் இலைதூக்கி சிரிக்கின்றன. உமா உள்ளே நுழையும் மணம் வருகிறது. ஜெட்லாக் பற்றி மருமகளிடம் மகன் விளக்கி கொண்டிருக்கிறான். இப்போது அந்த முதல் முத்தம் பெற்ற இடம் நினைவுக்கு வந்து விட்டது. அதை கொடுத்தவள் பெயர் மெல்ல மறக்க ஆரம்பிக்கிறது. மீண்டும் கண்களை திறக்க முயற்சிக்கிறேன். ஜன்னல் கம்பிகளில் உட்கார்ந்திருக்கும் சிட்டுகுருவிகள் பறக்க ஆரம்பிக்கின்றன. மெல்ல எழ முயற்சிக்கிறேன். ஆச்சர்யம்.. என்னால் முடிகிறது. கண்களை திறக்காமலே !



12 comments:

மணிஜி said...

தொடர்ந்து பணிகள் இருப்பதால் புதிதாக எதுவும் எழுத நேரம் கிடைப்பதில்லை. எனக்கு பிடித்த ஒரு கதை . மீள் பதிவாக........

Cable சங்கர் said...

மீள்ஸா..??

vasu balaji said...

எத்தனை முறை படித்தாலும் அதே உணர்வுதான்.:(

பெசொவி said...
This comment has been removed by the author.
பெசொவி said...

//Cable Sankar said...
மீள்ஸா..??
//

மீள்ஸ் தான். இதே மீல்ஸா இருந்தா அது கேபிளார் (சாப்பாட்டுக் கடையைச் சொன்னேன்)

btw முதல்லயே படிச்சிருக்கேன். திரும்பவும் படிச்சாலும் கதை நல்லாத்தான் இருக்கு.

உண்மைத்தமிழன் said...

தலைவரே..

படிக்கிறேன்.. படிக்கிறேன்.. படிக்கிறேன்..

படிச்சுக்கிட்டே இருக்கேன்.. இருக்கிறேன்..!

இன்னும் முடிய.......................!

Paleo God said...

:))

நேசமித்ரன் said...

Ever green story with a thorn inside

ஹயக்ரீவ மந்திரம் மட்டும் சரி பாருங்க அண்ணே

பெசொவி said...

//நேசமித்ரன் said...

ஹயக்ரீவ மந்திரம் மட்டும் சரி பாருங்க அண்ணே//


ஞானானந்த மயந்தேவம்...
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யாநாம்
ஹயக்கீரிவம் உபாஸ்மஹே!

ஏதோ என்னாலான உதவி!

செ.சரவணக்குமார் said...

ஏற்கனவே படித்திருந்தாலும் மீள் வாசிப்பில் இன்னும் சுவையாக இருக்கிறது. உங்களின் மாஸ்டர் பீஸ் இந்த சிறுகதை மணிஜீ.

எப்போ ஃப்ரீ ஆவீங்கன்னு சொல்லுங்க பேசலாம் அண்ணா.

கலகலப்ரியா said...

ம்ம்... :)

butterfly Surya said...

மீள்...??????